• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

முதலும் முடிவுமாய்-11

Pandiselvi

Vaigai - Avid Readers (Novel Explorer)
Oct 30, 2021
122
59
43
Chennai
அத்தியாயம் 11

ஊருக்கு வந்து சேர்ந்து விட்டான். பகல் முழுவதும் ஓய்வு கொடுப்பவள் இரவானால் அந்தக் கதிரவனையே முழுங்கி இழுத்துக் கொள்ளும் நிலவு போல அவனை முழுதாய் ஆட்கொண்டு விடுகிறாள். புல்லாங்குழலின் அத்தனை துவாரங்களுக்குள்ளும் நுழைந்து நுழைந்து புறப்படும் பொண்வண்டு போல் இதயத்தில் மூலை முடுக்கெல்லாம் தேடி சோதித்துப் பார்த்து விட்டான். எந்தப் பக்கமிருந்து அவனை ஆகர்ஷித்தாள் என்று துளியும் புலப்படவில்லை. ஆனால் அவன் இதயத்தின் அத்தனை பக்கங்களில் மட்டுமல்ல உடலில் உள்ள அனுக்கள் மொத்தத்திலும் கலந்தது போல் இருந்தது. மொத்தமாய் அவளை நினைத்தால் ஒரு உணர்வைக் கொடுக்கும் மனது, கண்ணு, மூக்கு, வாய், இதழ், அவள் முகம் என்று தனித்தனியாய் வலம் வரும் போது உடல் சிலிர்த்து அடங்கும் உணர்வை அவனாலே கட்டுப்படுத்த முடியவில்லை.

வரும்போது அவளாகவே, "அதான் இப்போ ப்ர்ண்டஸ் ஆகிட்டோமே. உங்க நம்பர் குடுங்க.." என்று வாங்கி சேமித்துக் கொண்டாள். அவனும் அவள் நம்பரை மொபைலில் சேமித்து வைத்துக் கொண்டான். கூடவே செல்லத் துடிக்கும் மனதை அதட்டி அடக்கி ஊருக்கு கூட்டி வருவதற்குள் அவனுக்கு போதும் போதும் என்றாகி விட்டது.

மொபைலில் அவன் சேமித்து வைத்த அவள் நம்பரை பார்த்தான். 'ஏஞ்சல்' என்று அழகாய் பதிந்திருந்தான். அவனுக்கே அவனை நினைத்து விந்தையாக இருந்தது. ஏஞ்சல் காதல் என்ற வார்த்தை எல்லாம் அவன் வாழ்வில் நினைத்துப் பார்க்காத ஒன்று.

வாட்ஸ்அப்க்குள் நுழைந்தவன் அவள் ப்ரோஃபைல் சென்று பார்க்க அன்று திருமணத்தில் எடுத்த பிங்க் கலர் சோலியில் கூந்தல் காற்றிலாட சிரித்தபடி போஸ் கொடுத்தபடியிருந்தாள். சுற்றி இருந்த எல்இடி லைட் வெளிச்சத்தையும் மிஞ்சிய அவள் முகத்தின் ஒளி அவன் மனதிலிருந்த இருளை மொத்தமாய் போக்க போதுமானதாய் இருந்தது. அந்தப் போட்டோவை மெதுவாய் விரலால் வருடிக் கொடுத்தவன், "செம அழகுடி நீ. தேவதை மாதிரி இருக்க. என்னை என்னென்னமோ செய்யிற. பக்கத்துல இல்லாமலே உன் நினைவால இம்சை பண்ற. உன்னை அப்டியே என் கூடவே கடத்திட்டு வந்துரனும்னு தோனுது. உன் மேல ஆசைப்படுறது பேராசைனு மூளைக்குப் புரியிது. ஆனா மனசுக்கு புரிய மாட்டேங்குதே. நீ மட்டும் என் வாழ்க்கைல வந்தா என் வாழ்க்கையே ஜெயிச்ச மாதிரி" என்று அவளின் முகத்தில் விரல்களும் விழிகளும் நிலைகொண்டு நிற்க. சம்மந்தப்பட்டவளிடம் இருந்தே கால் வரவும் திடுக்கிட்டு ஜெர்க்கானான்.

அழைப்பை ஏற்று, "ஏஞ்.." ஏஞ்சல் என்று சொல்ல வந்தவன் நிறுத்தி, "ஹாய் நிலா" என்றான்.

"ஹாலோ சார். உங்க கிட்ட என்ன சொன்னேன்?" என்று அந்தப்பக்கம் அவள் முறைத்துக் கொண்டிருக்க.

"எ.. என்ன சொன்ன?". மனதில் கள்ளமில்லை என்றால் வார்த்தைகள் பட்டு பட்டென்று தெரிக்கும். நெஞ்சமெல்லாம் அவளின் மீது ஆசையை வைத்துக் கொண்டு அவளிடம் சாதாரணமாக பேச முடியவில்லை. நா தந்தியடிக்கிறது. காதலித்த பெண்ணிடம் தயங்கி படபடக்க இருப்பது கூட ஒரு வித அழகு தான் ஆணுக்கு. தொண்ணூற்றாறு படத்தில் வரும் விஜய் சேதுபதி போல. உறவாகும் முன் உரிமையை எடுத்துக் கொள்ள முடியவில்லை. காதல் கொண்ட மனதிற்கு உரிமை எடுத்துக் கொள்ளாமல் பேசவும் முடியவில்லை.

"என்ன சொன்னேனா?. ஊருக்குப் போயிட்டு போன் பண்ணி சொல்ல சொன்னேன்ல?"

"ஓ அதுவா?" என்று சிரித்தவன், "என்ன சொல்லனும்" என்றான்.

"என்ன சொல்லனுமா?. சரியாகப் போச்சு போங்க. எப்போ ஊருக்குப் போனேங்க? சேஃப்பா போயிட்டேங்களா இல்லையா?. ஜேர்னி எப்டி இருந்துச்சு.. இப்படி எல்லாமே சொல்லனும்"

"ஓ அப்டியா?. நானென்ன தெரியாத ஊருக்கு டிரிப்பா போனேன். என் வேலையே டிரைவர் வேலை தான்"

"ப்ச் இப்படிலாம் சொல்லக் கூடாது. நீங்க சேஃப்பா போயிட்டேங்களா இல்லையானு எனக்கு எப்டித் தெரியும்?. நான் இப்போ வரைக்கும் கால் பண்ணுவேங்கனு வெயிட் பண்ணேன் தெரியுமா?. நீங்க கால் பண்ணலனு நானே கால் பண்ணிட்டேன்"

'என் சேஃப்டிக்காக நான் போன் பண்ணுவேனு வெயிட் பண்ணாளா?. எனக்காகவா?'. அவன் மனம் அதை அவனுக்குச் சாதகமாகவே எடுத்துக் கொண்டது.

"ஹலோ மாறா இருக்கேங்களா?"

"ம் இருக்கேன். சாரி ஞாபகம் இல்ல"

"என்னை ஞாபகம் இல்லையா? இல்ல கால் பண்றதுக்கு ஞாபகம் இல்லையா?"

"உன்னை‌ மறக்குற இடத்துலயா வச்சுருக்கேன்" என்று முனுமுனுக்க..

"என்ன சொன்னேங்க?"

"கால் பண்ண தான் மறந்துட்டேன்"

"என்னமோ நீங்க வந்துட்டு போனதுல இருந்து உங்க நெனப்பாவே இருந்துச்சு. அதான் சேஃப்பா போயிட்டேங்களானு கேட்குறதுக்கு கால் பண்ணேன். சாரி நைட் நேரத்துல டிஸ்டர்ப் பண்ணிட்டேனா?"

"இல்ல இல்ல அப்டிலாம் இல்ல" என்று அவசரமாய் மறுக்க.

"ம். அப்புறம்?"

"அப்புறம்?" என்றான் இதழில் புன்னகையை உறைய வைத்து. அவனின் இறுகிய இதழ்களும் சிரிக்கும் என்பது இப்போது தான் தெரிகிறது அவனுக்கே.

அப்புறம் அப்புறம் என்று இருவரும் என்ன பேசினார்களோ. கடந்த முப்பது நிமிடங்களாக பேசிக் கொண்டிருக்கிறார்கள். அவள் சொல்லும் சில விஷயங்களுக்கு வாய் விட்டே சிரித்தான். கடைசியாக, "ஓகே பை மாறா. நாளைக்கு காலேஜ் இருக்கு. இப்போ தூங்குனா தான் காலையில எழுந்து காலேஜ்க்கு போக முடியும்"

'வைக்கனுமா?. பேசிக்கிட்டே இரேன்' என்று சொல்லத்தான் ஆசை. ஆனால் முடியாதே. "ம் ஓகே பை" என்று மனமே இல்லாமல் வைத்தான். என்றும் இல்லாமல் மனது லேசானது போல் இருந்தது. இரு கையையும் தலைக்கு மேல் தூக்கி உஃப் என்று ஊதி சிரித்தான். கட்டிலில் தொம்மென்று விழுந்தவன் அவளுடன் பேசிய சுகமான நினைவுகளுடனே தூக்கத்தைத் தழுவினான்.

மறுநாளில் இருந்து குட் மார்னிங், குட் நைட், பார்வேர்டு மெஸேஜ்கள் என்று ஆரம்பித்து என்ன பண்ற, சாப்டியா, தூங்குனியா என்று கேட்பது வரை வாடிக்கையாகி விட்டது. அவளுடன் பேச பேச அவளை சந்திக்க வேண்டும் ஆசையும் கூடவே எழ, புறப்பட்டு விட்டான் சென்னைக்கு. 'கூடுமா என்று தெரியாத காதலுக்காக இப்படி அடிக்கடி சென்னை சென்று வருவது வீண் செலவு தானே?' என்று மனசாட்சி எடுத்துரைக்க.. 'எனக்குன்னு என் வாழ்க்கைல எதுவுமே செஞ்சுக்கிட்டதில்ல. இந்த சென்னை போய்ட்டு வர்ற செலவு எனக்காக பண்ணதா இருக்கட்டுமே‌. இறுகிப் போயிருந்த மனசுக்கு இந்த அளவுக்கு கூட தீணி போட்டு இளக்கவில்லை என்றால் எப்டி?' என்று அவனே ஆறுதல் சொல்லிக் கொண்டான்.

அதே நேரம்.. அதே கல்லூரி வாசலில் நிலானிக்காக காத்திருக்க.. அவள் வரவும் அன்று சொன்ன அதே பொய்யை சொல்லி சமாளிக்க.. ரோகித் தான் அவன் சொல்வதை நம்பாமல் பார்த்தான். இந்த முறை அவனை ஒதுக்கி விட்டு நிலானி மற்றும் மாறன் மட்டுமே காஃபி ஷாப் சென்றனர்.

அவளிடம் ஏதேதோ பேச வேண்டும், மனதிலிருப்பதைக் கொட்ட வேண்டும் என்று முடிவெடுத்து வந்திருந்தான். கூடுமோ கூடாதோ பட்டென்று அவளிடம் காதலை சொல்லி விட வேண்டும் என்று தான் நினைத்தான். ஆனால் அவள் முகம் பார்த்த பின், 'எங்கே நிராகரித்து விட்டால் இப்போது நட்பாய் பழுகுவதும் போய் விடுமோ?' என்ற பயம் சூழ்ந்து கொண்டது.

ஏதோதோ பேசிக் கொண்டே காஃபியில் கவனம் வைத்திருந்தவள், "மாறா. நான் கேட்டதுக்கு நீங்க பதிலே சொல்லல?" என்று நிமிர.. அவன் விழிகளால் அவளை பருகிக் கொண்டு இமைக்காமல் ரசித்தவனைப் பார்த்து பெண்ணவளுக்கு உயிர் நாடி வரை சிலிர்த்தது. அவன் விழிகளைத் தாண்டி அவன் மேனியில் ஊர்வலம் வந்தது விழிகள். முரட்டு காஃபி நிற தேகம், கூர் நாசி, தடித்த இதழ்கள் துடிக்கும் மீசை அவனை ஆணழகனாய் காட்டியது‌. அவன் கலருக்கு பளிச்சென்று தெரிவது போல் சிவப்பு கயிற்றில் கட்டிய தொண்டைக் குழிக்கு கீழ் தொங்கிய தாயத்து, அதற்கு கீழ் அவன் நெஞ்சில் படர்ந்திருக்கும் சுருள் முடிகள் என்று ஒவ்வொன்றாய் விழிகள் மேய்ந்தது. அந்த வயதிற்கே உரிய சின்ன சின்ன சேட்டைகளோடு, அழகாய் இருக்கும் பையனை சைட் அடிப்பது வரை சென்றிருக்கிறாள் தான். ஆனால் மாறனை ரசிக்கும் அளவுக்கு சென்றதில்லை. 'சே நான் ஏன் இப்டி பாக்குறேன் இவரை?' என்று தன்னைத் தானே தலையில் தட்டிக் கொண்டாள். அவள் மனதில் சிறு பொறி விழுந்தது தெரியாமல்.

அவளின் விழிகள் அவன்மேல் அலைபாய, "பார்த்து முடிச்சுட்டியா? தேறுமா?" என்று புருவம் உயர்த்த.

'பாத்துட்டானா?' என்று நாக்கைக் கடித்தவள், "நீங்க மட்டும் என்னவாம்?" என்று முனுமுனுத்து விட்டு, "பார்டர்ல தான் பாஸ்" என்று இதழை வளைக்க.

"உன்னை மாதிரி நான் கஞ்சன்லாம் இல்ல. நான்லாம் புல் மார்க் குடுப்பேன்" என்று அவளை அளந்து கொண்டே கண்சிமிட்ட..
அவன் விழிகள் தந்த போதையில் பெண்ணவள் கிறங்கிப் போனாள்.

தொடரும்.
 

பாரதிசிவக்குமார்

Vaigai - Avid Readers (Novel Explorer)
Oct 18, 2021
2,769
538
113
45
Ariyalur
வந்துடுச்சு வந்துடுச்சு பக்கத்துல வந்துடுச்சு 😄😄😄😄😄😄😄😄காதல் செய்யும் மாயம் 😍😍😍😍