• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

முதலும் முடிவுமாய்-15

Pandiselvi

Vaigai - Avid Readers (Novel Explorer)
Oct 30, 2021
122
96
28
Chennai
அத்தியாயம் 15

இரண்டு பேருக்கும் இரண்டு வாரங்கள் இரண்டு யுகங்களாகத் தோன்றியது. ஏதோ பிறக்கும் போதே ஒட்டிப் பிறந்தவர்கள் போல் ஒரு வாரம் பார்க்காததற்கே பசலை நோய் தாக்கியது இருவரையும்.

மாலை கல்லூரி விட்டு வெளியே வரும் போதே, 'ஒருவேள என்கிட்ட சொல்லாமலே என்னை சர்பிரைஸ் பண்ண பார்க்க வந்திருப்பானோ?' என்ற ஆசையில் வேக வேகமாய் வெளியே ஓடி வந்தவளை வரவேற்றது என்னவோ வெறும் கேட் தான். வெறும் இடத்தைக் கண்டதுமே முகம் சோகத்தைத் தத்தெடுத்துக் கொண்டது.

'சே.. நான் என்ன நினைக்கிறேனு எனக்கேப் புரியல. எனக்கு என்ன வேனும்னு எனக்கேத் தெரியல. அவனை பாக்கனும் போல இருக்கு. ஒரு வார்த்தை சொல்லிருந்தா ஓடி வந்துருப்பான். நான் ஏன் இவ்வளவு தவிக்கனும்?. இதுக்கு மேலேயும் அவன் மேல எனக்கு ஒன்னுமே இல்லனு சொல்ல முடியுமா?. அப்போ அவன் இல்லாம அவன் கூட பேசாம என்னால இருக்க முடியாதா?' என்று நினைத்தவளுக்கு அவனின் நினைவு அதிகமாய் தாக்கியது.

சோகமாய் வீட்டில் நுழைய, "என்னடா குட்டிமா சோகமா வர்ற?" என்று மனோகர் கேட்க.

"ஒன்னுமில்ல ப்பா. கொஞ்சம் டயர்டா இருக்கு" என்றவள் என்னவோ போல் இருந்தாள்.

வீட்டில் தந்தை இருந்தால் எங்கேயும் நகராமல் அவருடன் ஏதாவது கதைத்துக் கொண்டிருப்பாள். இன்று மாலையில் அவர் சீக்கிரம் வந்தும் கூட அவருடன் அமராமல் அறையில் அடைந்து கிடந்தாள். இரவு சாப்பிடும் போதும் சரியாக உண்ணாமல் எழுந்து கொள்ள மகளின் நடவடிக்கையில் சந்தேகம் கொண்ட மனோகர் மற்றும் புவனா ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டனர். தன் கைக்குள்ளே அடங்கி இருக்க அவள் குழந்தை இல்லை குமரி. எப்போதோ அந்தக் குமரி இன்னொருவனின் காதல் சிறையில் அகப்பட்டு விட்டாள் என்பதை அந்தப் பெற்றவர்கள் அறியவில்லை.

மல்லாக்கப் படுத்தபடி விட்டத்தை வெறித்துக் கொண்டிருந்தவள் மாறனைப் பார்த்ததில் இருந்து கடைசி நாள் சந்தித்தது வரை ஒவ்வொன்றையும் அசைபோட்டாள். அவனின் கழுத்தின் கீழே இறங்காத பார்வை, காமம் தொடாத பேச்சு, அவளின் சிறுசிறு அசைவுகளையும் கவிதைகளாய் ரசிக்கும் அவனது விழிகள் என அனைத்தும் எந்த இடத்திலும் அவனை குறைவாக காட்டவில்லை. மனதில் முழுவதும் நிறைந்திருந்தான். 'அப்போ மாறனை நான் லவ் பண்றேனா?' என்று தன்னையே கேட்டுக் கொண்டவளுக்கு தானாய் சிரிப்பு வந்து ஒட்டிக் கொண்டது. காதல் வந்து விட்டால் ஒரு வாரம் இரண்டு வாரங்கள் எல்லாம் தேவையில்லை. சில நொடிகளே போதும் ஊர்ஜிதப்படுத்த என்று தெளிவாக புரிந்து கொண்டாள்.

சில நிமிடங்கள் முன் அவனைக் காணாத ஏக்கம் தாக்கியது. இப்போது காதலைப் புரிந்து கொண்ட பின் அவனைக் காண வேண்டும் என்று உள்ளமெங்கும் ஆர்ப்பரிக்க விழிகள் தூங்குவேனா என்றது. மணியைப் பார்க்க பன்னிரெண்டைத் தாண்டி சென்று கொண்டிருந்தது. உருண்டு புரண்டு படுத்தும் அவள் மனம் கவர்ந்தவன் உள்ளே புகுந்து அவளை குறுகுறுக்க வைக்க அவளால் தூக்கத்தைத் தழுவ முடியவில்லை.

'சே.. ஏன்டா இப்படி என்னை தூங்க விடாம பண்ற?. என் நினைப்பே உனக்கு இல்லையா?. காதலை சொல்லிட்டு என் பதிலைக் கூட கேட்காம எவ்ளோ நாள் வேனா இருப்பியா?. இரு இன்னும் ரெண்டு வாரம் உன்கூட பேசாம இருக்கேன். உன்கூட பேசாம இருந்து நான் தான்டா அவஸ்தைப்படுறேன்' என்று அந்தப்பக்கமும் பேசி இந்தப்பக்கமும் புலம்பி, 'இது வேலைக்காகாது பேசாம பால்கனில கொஞ்சநேரம் காத்து வாங்கலாம்' என்று பெட்டில் இருந்து எழுந்தவள் பால்கனி கதவைத் திறந்து வெளியே வந்து நிற்க.. யாருமில்லா தனி இரவில் குளிர்காற்றில் நனைந்து காவல் கொண்டிருந்த நிலவின் அழகை ரசித்தாள்.

பின்பு ஏதோ தோன்ற கிழே குனிந்தவள் அவள் வீட்டைக் கடக்கப் போகும் காரைக் கண்டு, 'இதே கார் தான அவனோடதும். இதுல இருந்து அவன் இறங்குனா எப்டி இருக்கும்?..' என்று அவள் கனவுக் கோட்டைக் கட்டி முடிக்கையிலே, அந்தக் கார் அவள் வீட்டைக் கடக்காமல் அங்கேயே நிற்கவும் புருவம் சுருக்கினாள். அவள் கனவுக் கோட்டையை நிஜமாக்க அவள் மனதை கொள்ளை கொண்டவனே காரிலிருந்து இறங்க விழிகள் தெறித்து விடும் அளவுக்கு அதிர்ந்து விழித்தாள்.

காரில் சாய்ந்தபடி கையைக் கட்டிக் கொண்டு தேவதையின் தரிசனம் கிடைக்காதா என்ற ஏக்கத்துடன் நினைத்துக் கொண்டு வந்தவனுக்கு காரில் இருந்து இறங்கியதும் அவன் தேவதையே அவனுக்காக காத்திருக்க ஆனந்த அதிர்ச்சியுடன் அவளைக் கண்டான்.

விழிகள் பேசும் மொழியினை உதட்டோர புன்னகையில் சிந்திக் கொண்டே, 'கீழே இறங்கி வா' என்று விழிகளால் கெஞ்ச, அதற்கு மேல் பொறுக்காமல் இறங்கி கீழே ஓடி வந்தாள். பூட்டிய வீட்டை சத்தம் வராமல் மெதுவாய் திறந்து திரும்பவும் மூடி விட்டு வெளியே ஓடினாள். காதலின் கள்ளத்தனம் அனுபவித்தவர்களுக்கு அதன் இனிமையை விளக்கிச் சொல்ல இயலாது. அதை அனுபவிக்க மட்டுமே முடியும்.

மூச்சு வாங்கியபடி அவன் முன் சென்று சிரித்தபடி நின்றவளை பார்வையால் களவாடிக் கொண்டிருந்தான். இரண்டு வார பிரிவையும் மௌனங்களில் பேசிக் கொண்டிருந்தனர் இருவரும்.

'உன் அனுமதியின்றி காதல் செய்து
உன்னை காணுவதற்காக என் கால்களை வேலை வாங்கி
உன்னுடன் இருக்கும் நிமிடங்களை
பொக்கிஷமாக நெஞ்சில் சுமப்பேன்
உன்னை காணாத நிமிடங்களை நகர்த்த முயற்சி செய்து தோற்று
நித்திரை தொலைத்து உன் வருகையை எதிர்பார்த்து வந்திருக்கிறேன்' என்று மௌனமாய் அவன் அவஸ்தையை அவளிடம் புரிய வைத்துக் கொண்டிருந்தான்.

"இந்த நேரத்துல இங்க என்ன பண்றேங்க?". இத்தனை நேரம் இருந்த தவிப்பு மறைந்து அத்தனை மகிழ்ச்சி. வறண்டு விரிசல் பட்டு கிடந்த நிலத்தில் வெகுநாட்களுக்குப் பின் பெருமழை பெய்த உணர்வு. தவிப்பும் அவனே தவிப்பைப் போக்குபவனும் அவனே. அவள் விழிகளின் பேராந்தனம் அவனுக்கும் தொற்றிக் கொண்டது.

"ஒரு டிரிப் இருந்துச்சு. அதான் வந்தேன்" என்று நக்கலாய் சொல்ல.

"ஓ.. நடுஜாமத்துல கூட எங்க காலேஜ் ஓப்பன் பண்ணிருக்குறது எனக்குத் தெரியாம போச்சே" என்று அவனை கேலி செய்து சிரிக்க.

"தெரியிதுல அப்புறம் ஏன் கேட்குற?. நான் வர்றது இருக்கட்டும். பேய்ங்க உலாத்துற நேரத்துல நீ என்ன பண்ணிட்டு இருந்த வெளில?" என்று புருவம் உயர்த்த.

"பால்கனில என்ன பண்ணுவாங்க?. காத்து வாங்கிட்டு இருந்தேன்"

"காத்து வாங்குற நேரமா இது?. அந்த நிலாக்கு துணையா இந்த நிலாவும் சேர்ந்து காயுறியா?‌ இந்த டைம்ல எதுக்கு வெளில வந்து நிக்குற?" என்று அக்கறையுடன் வினவ.

"நான் அங்க நின்னதால தான் உங்களை பார்க்க முடிஞ்து. நீங்க வருவேங்கனு மனசு சொல்லுச்சு அதான் வெயிட் பண்ணேன்" என்று கண்சிமிட்டினாள்.

"அப்டியா? நான் உனக்காக வரல. நிஜமாவே டிரிப்காக தான் வந்தேன். உன்னை இங்க பார்த்ததால காரை ஸ்டாப் பண்ணேன்". அநியாயத்திற்கு பொய் சொன்னான். இங்கு வந்து சேரும் வரை மனசு கெடந்து தவித்தது அவனுக்கு தான் தெரியும்.

"அப்டியா? டிரிப் முடிஞ்சதுல. பேசாம கிளம்புங்க" என்று முகத்தைத் திருப்பிக் கொண்டு திரும்பி நடந்தாள்.

திரும்பியவளின் இடையில் அவன் வலிய கரத்தை இறுக்கிப் பிடித்துத் தூக்கியவன், மறு கையால் காரின் கதவைத் திறந்து அவளை உள்ளே அமர வைத்து கதவை மூடி அவள் அதிர்ந்த முகத்தை குனிந்து பார்த்தவன், "இந்த நேரத்துல ரொம்ப நேரம் இதே இடத்துலே நின்னு பேசுனா யாராவது பார்த்தா தப்பாயிடும். ஒரு ரவுண்ட்ஸ் போயிட்டு வரலாம். சீக்கிரம் கூப்டு வந்து விட்டுறேன்" என்று சொல்லியவன் கையில் கார் சாவியை சுழற்றியபடி சிரித்துக் கொண்டே வந்து மறுபுறம் ஏறினான்.

கண்மூடித் திறக்கும் நொடியில் என்ன நடந்தது என்று பேயறைந்தது போல் இருந்தாள் நிலா. இன்னும் அவன் கரம் வயிற்றைத் தடவிக் கொண்டிருப்பது போல் அவன் தொட்ட இடம் குறுகுறுத்தது. இன்னும் அதிர்ச்சியில் இருந்து மீளாமல் அப்படியே இருந்தவளை, "நிலா.. உனக்கு கோவப்பட தெரியுமா?". அதைக் கோவம் என்றே சொல்ல முடியாது. செல்லச் சினுங்கல் அவ்வளவே. இருந்தாலும் அவள் கோவப்பட்டாளாம். இவன் சமாதானப் படுத்துகிறானாம்.

"ஏன்? எனக்கு கோவம் நிறைய வருமே. எனக்காக வரலனு சொன்னேங்களே. அப்புறம் எதுக்கு என்கூட ரவுண்ட்ஸ் போனும்" என்று இதழை வளைக்க.

"அதுவா?.. உனக்காக இந்தப் பொண்ணு வெயிட் பண்ணிட்டு இருக்கா அவளை ரவுண்ட்ஸ் கூட்டுப் போடானு சொல்லி என் மனசு சொல்லுச்சு. அதான்"

"அதுக்காக.. அப்படியே தூக்குவேங்களா?" என்ற கேள்விக்கு அவன் பதில் சொல்லும் முன்னே, "ஆமா எப்டி ஒரு கையிலே தூக்குனேங்க?" என்ற சந்தேகத்தை கேட்க.

"நீ அவ்ளோ வெயிட்லாம் இல்ல. பஞ்சு மூட்டையைத் தூக்குன மாதிரி தான் இருந்துச்சு" என்று அவள் இடை பட்ட கையைப் பார்த்துக் கொள்ள.. அவளுக்கு நாணம் வந்து ஒட்டிக் கொண்டது.

நைட் பேன்ட் சட்டை தான் அணிந்திருந்தாள். அவனைக் கண்டவுடன் அப்படியே வந்தவள் இப்போது தான் அதைக் கவனித்தாள். இந்த நேரத்தில் யார் பார்க்கப் போகிறார்கள் என்று நினைத்தாலும் அவனுடன் இப்படி அமர்ந்திருக்க கூச்சத்தில் நெளிந்து கொண்டிருந்தாள்.

ஆளில்லாத சாலையில் காரை நிறுத்தியவன் அவளையும் இறங்கச் சொன்னான். நடைமேடையில் அவள் அமர்ந்திருக்க அவளுக்கு கீழே அவளைப் பார்த்தபடி அவன் அமர்ந்து கொண்டான். தெரு விளக்கின் மஞ்சள் நிலவொளியும் நிலவொளியும் மட்டுமே துணைக்கு.

"நிலா நான் வருவேனு நினைச்சியா?". ஆம் என்று சொல்ல வேண்டும் என்ற எதிர்பார்ப்பு அதிகமாய் இருந்தது. அவளின் அன்பைப் பெற்றுவிடத் துடிக்கும் அவனின் அத்தனை தவிப்பும் அதற்குத்தான்.. அந்த காதலுக்கு தான்.!

அவள் இல்லை என்று தலையாட்ட முகம் கூம்பிப் போனது. காற்றி வெளியிட்ட பலூன் போல் புஷ்ஷென்றாகி விட்டது.

"வர வேண்டாம்னு சொன்னா வராம இருந்துருவானா வந்து நிக்க மாட்டானானு திட்டிட்டு இருந்தேன். பார்த்தா நீங்களே வந்து நின்னுட்டேங்க" என்று படபடவென சொல்லி விட்டு‌ தலைகுனிந்து கொண்டாள்.

அவன் இதழில் குறுநகை. இதயம் நிறைந்த உணர்வு. அவள் வாய் திறந்து சொல்லாவிடிலும் அவள் மனதை புரிந்து கொள்ளாத அளவுக்கு முட்டாள் இல்லை அவன்.

இரண்டு வாரம் விட்டதை பேசிக் கொண்டிருந்தனர். கன்னத்தில் கை வைத்து ஆசையாய் அவள் பேசும் அழகினை ரசித்தான். தலை கோதும் இளங்காற்று, செவி தொடும் அவளின் வார்த்தைகள், இதயம் நிரம்பும் நினைவுகள் என்று அவன் உலகம் அவளுக்காக மொத்தமாய் மாறிக் கொண்டிருந்தது.


தொடரும்.