• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

முதலும் முடிவுமாய்-20

Pandiselvi

Vaigai - Avid Readers (Novel Explorer)
Oct 30, 2021
122
59
43
Chennai
அத்தியாயம் 20

ஹாலில் மனோகரும் புவனாவும் யோசனையுடன் அமர்ந்திருந்தனர். மாறனை நினைத்து பாதி மயக்கத்திலும் பாதி சோகத்திலும் இருந்தவள் உள்ளே நுழைந்ததும் பெற்றவர்கள் இருவரும் அமர்ந்திருந்த கோலம் கண்டு திடுக்கிட்டாள்.

சாதாரண நாளென்னறால் இருவரும் அரட்டை அடித்து சிரிக்கும் சத்தம் வெளியில் வரை கேட்கும். அதுவும் நிலாவும் சேர்ந்து கொண்டால் சிரிப்பலைகளுக்கு அங்கு பஞ்சமே இருக்காது. இல்லையேல் டிவி பார்த்தாவது கமெண்ட் அடித்து சிரித்து பேசிக் கொண்டிருப்பார்கள். இன்று இருவரும் முகத்தை யோசனையுடன் வைத்துக் கொண்டு அவள் வரவிற்காகவே காத்திருந்தவர்கள் போல் அவள் வரவும் அவசரமாய் எழுந்தவர்கள், "நிலா.‌. வா வா இவ்ளோ நேரமாச்சா?. உன் ப்ரன்ட்ஸ்லாம் அப்பவே கிளம்பிட்டதா சொன்னாங்களே?" என்று புவனா ஓடிவந்து பரிதவிப்புடன் கேட்க.. நிலாவிற்கு ஒன்றுமே புரியவில்லை. பார்டிக்கு செல்கிறேன் என்று சொல்லி விட்டுச் சென்றபின் எதற்கு இந்த பதட்டமும் பரிதவிப்பும் என்று.

"புவனா அமைதியா இரு" என்று கண்களாலே ஏதோ சொல்லி அமைதிப்படுத்திய மனோகர், "பார்ட்டிலாம் எப்டி போச்சு குட்டிமா?. ப்ர்தடே பார்டியோட சேர்ந்து ஃபேர்வெல் பார்ட்டி வேற. நல்லா என்ஜாய் பண்ணேங்களா?" என்று மகளை அருகில் அமர வைத்துக் கொண்டு கேட்டார்.

"ம் செமயா என்ஜாய் பண்ணோம்பா. ஃபேர்வெல் பார்ட்டியா இருந்திருந்தா ஒரே சோககீதமா இருந்திருக்கும். ப்ரத்டே பார்ட்டி அப்புறம் இந்த செமஸ்டரே ஃபேர்வெல் வச்சதால அந்த பீலே இல்ல. ஜாலியா இருந்தோம்" என்று மகளின் முகத்தில் இருந்த சந்தோஷத்தைப் படித்தவருக்கு எதுவும் வித்தியாசமாக தோன்றவில்லை.

"ரோகித் தான் வந்து ட்ராப் பண்ணானா?" என்கவும் நிலானி முகம் மாறி சுருங்கியது. "ஆ.. ஆமா டாடி. அவன் தான் ட்ராப் பண்ணான்" என்று திக்கித் திணறி சொல்லி முடித்தாள்.

அதைக் குறித்துக் கொண்டவர், "வீட்டுக்குள்ள கூப்டு வந்துருக்கலாமே. வாசல்லே அனுப்பிட்டியா?. இவ்வளவு தூரம் உன் ப்ர்த்டேக்கு பார்ட்டி அரேஞ்ச் பண்ணி சேஃப்பா கொண்டு வந்து வீட்ல விட்டுருக்கான். ஒரு தேங்க்ஸ் சொல்ல வேண்டாமா அவனுக்கு?"

"அது.. அவன் லேட்டானதால அப்டியே கிளம்பிட்டான் டாடி. எனக்கும் டயர்டா இருக்கு" என்று சமாளித்து தூக்கம் வருவது போல் கொட்டாவி விட.

"நிலா.." என்று புவனா ஏதோ கேட்க வருவதற்குள், "நீ போய் தூங்கு டா" என்று அவளை அனுப்பி வைத்தார் மனோகர்.

அவள் சென்றதும், "என்னங்க அவகிட்ட எதுவும் கேட்காம அனுப்பிட்டேங்க?. அந்த ரோகித் என்னடானா அவ அந்த டிரைவர் பையன் கூட போனதா சொன்னான். நிலா என்னடானா ரோகித் கூட தான் வந்தேன்னு சொல்றா. எதை நம்புறது?. அவன் சொன்னதை வச்சுப் பார்த்தா எனக்கு பயமா இருக்குங்க. யாரோ ஊருப் பேரு தெரியாதவனை நம்பி நம்ம பொண்ணு ஏமாந்துறக் கூடாதுங்க. அவ வெகுளி. எல்லாரையும் அப்படியே நம்புறவ. நம்மகிட்டயே பொய் சொல்ற அளவுக்கு போய்ட்டானா அவன் எந்த அளவுக்கு இவளை மயக்கி வச்சுருப்பான். எனக்கு பயமா இருக்குங்க நிலாவை நினைச்சு" என்று கண்ணைக் கசக்கினார்.

"புவனா நீ பயப்படுற அளவுக்கு எதுவும் பெரிசா இருக்காது. இதை எடுத்தோம் கவுத்தோம்னு பேசி முடிக்கிற விஷயம் இல்லை. நீயா ஏன் ஏதாவது கற்பனை பண்ணிக்கிற?. போன்ல பேசுறது வெளில சுத்துறது இதெல்லாம் பண்ணா லவ்வராத் தான் இருக்கனும்னு இல்ல. ப்ரண்டா கூட பழகலாம்ல. நிலா அப்படிலாம் நம்மளை மீறி எதுவும் பண்ணமாட்டா. நான் அதைப் பத்தி விசாரிக்கிறேன். அதுவரைக்கும் நிலா கிட்ட நீ எதுவும் கேட்டு சண்டை போடாத. நீ இப்போ போய் தூங்கு‌" என்று அவருக்கு ஆறுதல் சொல்லி அனுப்பி வைத்தார். புவனாவுக்கு ஆறுதல் சொல்லி விட்டாலும் அவருக்கு ஏனோ மனம் முரண்டியது. எப்போதும் மனதில் எதையும் ஒளித்து வைக்காமல் அப்படியே பெற்றவர்களிடம் ஒப்பிப்பவள் இன்று திக்கி திக்கி பேசவும் அவளின் கள்ளம் புரிந்து கொண்டார். ஆனால் எல்லா விஷயத்தையும் நேரடியாக பெற்றவர்களிடம் சொல்ல முடியாதல்லவா. அவளே இப்போது தான் காதலை உணர்ந்து அவனிடம் பகிர்ந்திருக்கிறாள். இதில் அவளை குற்றம் சொல்லவும் முடியாது. மனதெல்லாம் நெருடலாக இருந்தது. அவர் ஒன்றும் காதலுக்கு எதிரி இல்லை. ஆனால் மகள் நல்ல துணையை தேர்ந்தெடுக்க வேண்டும் என்ற பயம் பெற்றவராய் அவருக்கு இருந்தது.

அறைக்குள் நுழைந்த நிலாவிற்கு தந்தையிடம் முதன்முறையாக பொய் சொல்லியது குற்றவுணர்வாக இருந்தது. இருந்தாலும் பெண் மனம் இப்போதே அனைத்தையும் அவரிடம் ஒப்புவிக்க சங்கடமாக உணர்ந்தாள். 'ஒருநாள் அப்பாக்கிட்ட எல்லாத்தையும் பொறுமையா பேசனும். இல்ல அவங்க கிட்ட மறைக்குறதே எனக்கு பைத்தியம் பிடிக்கிற மாதிரியாகிடும்' என்று நினைத்தவளின் பார்வை காலில் இருந்த கொலுசுக்குச் சென்றது. கல்லூரிக்கு எல்லாம் கொலுசு அணிந்து சென்றதில்லை. அதுவும் சென்னையில் சொல்லவே வேண்டாம். கொலுசு அணிந்து சென்று கேலி கிண்டலுக்கு ஏன் ஆளாகுவானேன் என்று அப்படியொரு அணிகலன் இருப்பதையே நினைத்துப் பார்த்ததில்லை. இன்று அவள் காலை அலங்கரித்த அக்கொலுசில் அவள் மனங்கவர்ந்தனின் பல்தடமும் காலில் மீசை அரும்புகளின் உரசலும் இன்னமும் ஒட்டிக் கொண்டிருப்பது போல் மெதுவாய் தடவிப் பார்த்தாள்.

'மாறன் வருவானே நினைச்சுக் கூட பார்க்கல. அவன் வந்ததே எனக்கு சர்பிரைஸ் தான். இந்த கிஃப்ட் அதை விட சர்பிரைஸ். ரசிச்சு வாங்கிருக்கான்' என்று மனதிலே அவனை மெச்சிக் கொண்டு அவன் நினைவிலே கனவோடு அவனை கட்டிக் கொண்டு துயில் கொண்டாள்.

காலமும் நேரமும் நிற்காமல் நகர அவர்கள் காதலும் மென்மேலும் வளர்ந்தது. தூரத்தில் இருந்தாலும் மனங்கள் ஒட்டியே இருந்தது. தை மாசி இரண்டு மாதங்கள் தொடர்ந்து முகூர்த்த மாதங்கள் என்பதால் மாறனுக்கு ஒன்று மாற்றி ஒன்று கல்யாண கான்ட்ராக்ட் இருந்து கொண்டே இருந்தது. அதனால் கடந்த ஒரு மாதமாக நிலாவை சந்திக்க சென்னை செல்லவில்லை. போனிலே பேசி காதலை வளர்த்துக் கொண்டிருந்தனர். அவன் வரும் நாளுக்காக பார்த்து பார்த்து கண்கள் பூத்து விட்டது நிலாவுக்கு. அவன் நிலைமையும் சூழ்நிலையும் அவளுக்கு நன்றாகவேத் தெரியும். இருந்தும் காதல் கொண்ட மனம் மன்னவனின் வருகைக்காக ஏங்கி பசலை நோய்த் தாக்கித் தவித்துக் கொண்டிருக்கிறது.

அன்று இரவு பேசிக் கொண்டிருக்கும் போது, "நிலா நாளைக்கு நான் சென்னைக்கு வர்றேன்" என்று சொல்ல முடிக்கவில்லை, "ஐ.. நாளைக்கு வர்றேங்களா? எப்போ? எவ்ளோ நாளாச்சு உங்களை பார்த்து. நான் உங்களை ரொம்ப மிஸ் பண்றேன். நாளைக்கு எங்க மீட் பண்ணலாம்?. காலேஜ்ல வேண்டாம். எனக்கு அந்த ரோகித் பண்றது சுத்தமா பிடிக்கல. என்கூட பேசுறது இல்லை. ஆனா எப்பவும் என்னை நோட் பண்ணிக்கிட்டே இருக்கிறான். இதுல அந்த ப்ரியா வேற அவனுக்கு சப்போர்ட் பண்றா. கடுப்பா இருக்கு. நாம வெளில மீட் பண்ணலாம். அன்னைக்கு மாதிரி பீச் போலாமா?" என்று படபடவென மகிழ்ச்சியில் துள்ளிக் குதித்தவளை, "நிலா.. நிலா.. வெயிட்" என்றான்.

"என்ன?"

"நான் சென்னைக்கு வர்றதா தான் சொன்னேன். ஆனா உன்னை மீட் பண்ண முடியுமானு தெரியலமா"

"என்ன என்னை மீட் பண்ண வரலயா?. என் ஞாபகமே உங்களுக்கு இல்லையா?. என்னை மிஸ் பண்ணலயா நீங்க?. போங்க" என்று அவள் அழுவதற்குத் தயாராக இருக்கவும்,

"நிலாமா.. நான் ஒரு டிரிப்காக வர்றேன்மா. நான் சென்னை ரீச் ஆகவே மதியம் ஆகிடும். அதுக்கப்புறம் என் ப்ரண்ட் சொன்னேன்ல. அவனுக்கு ஏதோ பார்சல் அவங்க அப்பாகிட்ட குடுக்கனுமாம். அவன் ஊர்ல வேற இல்லையாம். வெளியூர் போயிருக்காங்களாம். அவனால் கொரியர் போட முடியல. அதான் அந்த பார்சல் எடுத்துட்டு திரும்பவும் கஸ்டமரை கூப்டுட்டு கிளம்பனும் டா. எனக்கே ரெஸ்ட் இருக்காது. புல்லா டிராவல் பண்ணிட்டு தான் இருப்பேன். நான் இன்னொரு நாள் உன்னை மீட் பண்றதுக்குனே வர்றேனே. ப்ளீஸ்டா புரிஞ்சுக்கோ" என்றான். அவனுக்குமே அவளைக் காண வேண்டும் என்ற ஏக்கம் தான். அவளைப் போல் அழுது கண்ணைக் கசக்க முடியவில்லை அவனால்.

அவனின் கெஞ்சலில் அழுகையை கட்டுப்படுத்திக் கொண்டு, "ஓகே மாறா. வேலையைப் பாரு. ப்ரியா இருக்கும் போது நாம மீட் பண்ணலாம். பட் ஐ ஆம் பேட்லி மிஸ் யூ" என்றவள் அதற்கு மேல் பேச முடியாமல் காலை அணைத்து விட்டாள். அவன் வேண்டும் என்பது ஆசையோ தேவையோ இல்லை. அது ஒரு ஏக்கம். அவன் முகம் காணும் வரை இந்த நிலவுக்கு அமாவாசை தான்.

மறுநாள் சென்னைக்குக் கிளம்பியவன் மதியம் போல் கஷ்டமரை அவர் சொன்ன இடத்தில் இறக்கி விட்டவனிடம், "ரெண்டு மணி நேரம் வேலை இருக்குப்பா. நான் சென்ட்ரல் பக்கத்துல ஒரு ப்ளேஸ்ல இருப்பேன். என்னே அங்க வந்து பிக்கப் பண்ணிக்கோ. மூனு மணிக்குள்ள வந்துரு. சீக்கிரம் கிளம்புனா தான் ஊருக்கு மிட்நைட்லே போய் சேர முடியும். காலையில அவசர வேலை இருக்குப்பா" என்று அவனை அனுப்பி வைத்தார்.

அவன் உடனே அவன் நண்பன் வீட்டிற்குச் சென்றான். அவர்கள் குடும்பத்துடன் வெளியூர் சென்றதால் வீட்டில் யாரும் இல்லை. அதனால் வரும் போதே உணவுப் பார்சலை வாங்கி வந்து விட்டான். காலை உணவு வேறு உண்ணாதது வயிறு பசியில் பிராண்டியது. அவசரமாக குளித்து முடித்து விட்டு வாங்கி வந்த உணவுப் பார்சலை எடுத்துப் பிரித்து அமரும் நேரம் வீட்டின் காலிங் பெல் சத்தம் கேட்க, "இன்னைக்கு சாப்ட மாதிரி தான். ஏற்கனவே லேட்டாகிடுச்சு.." என்று நொந்தபடி வந்து கதவைத் திறக்க, வெளியே நின்றிருந்தவளைக் கண்டு, "நிலா.. நீ எப்டி இங்க?" என்று அதிர்ச்சியில் விழிகளை அகல விரித்தான்.

தொடரும்.
 

Sailajaa sundhar

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jun 13, 2024
168
111
43
Dindigul
எல்லாம் காதல் படுத்தும் பாடு