• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

முதலும் முடிவுமாய்-22

Pandiselvi

Vaigai - Avid Readers (Novel Explorer)
Oct 30, 2021
122
59
43
Chennai
அத்தியாயம் 22

வெளியே கயிற்றுக் கட்டிலில் படுத்து வானத்தில் தெரிந்த நிலவை வெறித்துக் கொண்டிருந்தான் மாறன்.

அவன் வாழ்வில் இரவு இவ்வளவு நரகமாக இருக்கும் என்று கனவிலும் நினைத்ததில்லை. அன்று நிலா அவள் தந்தையுடன் சென்ற போது பார்த்தது. இரண்டு வாரங்கள் ஓடிவிட்டது. அதன் பின் அவளுடன் பேசவுமில்லை. பார்க்கவுமில்லை. 'அவள் நிலைமை அங்கே என்ன?' என்பது கூட தெரியாமல் அவனுக்குப் பைத்தியம் பிடித்தது.

'என்னடி பண்ற?. நல்லா இருக்கியா இல்லையா?. வீட்ல என்ன சொன்னாங்க?. உங்கப்பா ப்ரண்ட் மாதிரினு சொல்லிருக்க. அப்டிலாம் உன்னை டார்ச்சர் பண்ண மாட்டாங்க. இருந்தாலும் மனசு கெடந்து தவிக்குதே. நல்லா இருக்கேனு ஒரு வார்த்தை உன் வாயிலிருந்து கேட்டாப் போதும்' என்றவனுக்கு அவளை எப்படித் தொடர்பு கொள்வது என்று தெரியவில்லை. அழைத்தும் பார்த்து விட்டான். ரிங் போகவில்லை என்றால் கூட மொபலைப் பிடிங்கி வைத்திருப்பார்கள் என்று நினைத்து விடுவான். முழு ரிங் போயும் எடுக்காமல் இருப்பது தான் அவனுக்கு உள்ளுக்குள் கலவரத்தை ஏற்படுத்தியது.

பகல் முழுவதும் வேலையில் தன்னைப் புகுத்திக் கொண்டவனுக்கு இரவானால் அவள் நினைவு மனம் முழுவதும் பரவி மூச்சு முட்ட வைத்தது‌. 'இதுக்கு மேல இருந்தா செத்தாலும் செத்துடுவேன்' என்று வார நாளிலே கிளம்பி விட்டான் சென்னைக்கு கல்லூரியில் வைத்தாவது அவளைப் பார்த்து விடலாம் என்று.

அவள் வரும் நேரம் கல்லுரி வாசலில் நிற்க, ஆனால் அவள் நண்பர்கள் அனைவரும் வெளியில் வர, அதில் அவளைக் காணவில்லை. விழிகள் ஏமாந்து தவித்துப் போனது. 'என்ன ஆனாலும் பரவாயில்லை. என்னைக்கு இருந்தாலும் நான் தான பேசியாகனும்' என்று கிளம்பி விட்டான் அவள் வீட்டுக்கு.

அவள் வீட்டு முன் காரை நிறுத்தி விட்டு காலிங் பெல் அடித்து விட்டு காத்திருக்க மனோகர் தான் வந்து கதவைத் திறந்தவர் வெளியே நின்றிருந்தவனைக் கண்டு அதிர்ந்தார்.

"என்ன வேனும்?"

"உள்ள போயி பேசலாமா சார்?" என்றான் நேரடியாக. அவனுக்கு தயக்கம் என்பது சிறிதும் இல்லை. அவனுக்கு அவன் நிலா வேண்டும். அதற்கு என்ன வேண்டுமானாலும் செய்வான்.

வெளியே நின்று கத்துவது அநாகரீகம். அது தன் மகளின் வாழ்க்கையும் பாதிக்கும் என்றுணர்ந்தவர் வழிவிட்டு நிற்க, அவன் உள்ளே நுழைந்தான்.

அவன் உள்ளே நுழையும் நேரம், "ஏன்டி இப்டி எங்க உயிரை வாங்குற?. ஒத்தப் பொண்ணுனு செல்லங்கொடுத்து வளர்த்தது இதுக்குத் தானா?. இதுவரைக்கும் நீ சொல்லி எதுக்காது உங்கப்பா மறுப்பு சொல்லிருப்பாரா?. அவரு வேண்டாம்னு சொல்றாருனா அதுல காரணம் இருக்கும்னு புரியலனா உன்னை வளர்த்து என்ன பிரயோஜனம்?. இத்தனை நாள் வளர்த்த எங்களை விட ஆறு மாசம் பழகுனவன் பெரிசா போயிட்டானா?. அவனுக்காக சாப்டாம செய்யாம இப்படி கிறங்கிப் போய் கிடக்க?. உனக்கு ஒன்னுனா அப்புறம் நாங்களும் உயிரோட இருக்க மாட்டோம் தெரிஞ்சுக்கோ" என்ற புவனாவின் கத்தல் எதுவும் காதில் விழாமல் விட்டத்தை வெறித்தபடி படுத்திருந்தாள் நிலானி.

அன்று மனோகர் அவளை இழுத்து வந்த பின் அவளை ஒரு வார்த்தை சொல்லவில்லை. புவனா கூட அழுது புலம்பினார். ஆனால் மனோகரோ அன்று ஒரு அடி அடித்ததோடு சரி. திட்டவில்லை அடிக்கவில்லை. வீட்டில் அடைத்து வைக்கவும் இல்லை. மொபைலைப் பறித்து வைத்து அவனிடம் பேசக்கூடாது என்று கட்டளையும் பிறப்பிக்கவில்லை. "எனக்குப் பிடிக்கல நிலா. அவன் தான் முக்கியம்னா இந்த அப்பா உயிரோட இருக்க மாட்டேன்" என்ற ஒற்றை வார்த்தையில் அவள் உலகத்தை மொத்தமாய் முடக்கி வைத்து விட்டார்.

அழுது கொண்டே உணவுத் தட்டுடன் புவனா வெளியே வந்து, "பாருங்க இப்படி சாப்டாம கெடக்குறா. நீங்க பேசுங்க அவகிட்ட. நீங்க பேசுனா கேட்பாங்க" என்று அழுது கொண்டே திரும்பியவர் மாறனைக் கண்டு அதிர்ந்து, "இவன்.." என்று ஏதோ பேச வாயெடுப்பதற்கு முன், "குடுங்க நான் சாப்பிட வைக்கிறேன்" என்று தட்டைக் கேட்க.. மனோகர் கண்ணசைக்கவும் அவனிடம் தட்டைக் குடுத்தார்.

அவள் அறைக்குள் சென்று, "நிலா.." என்றதும் தான் தாமதம் ஓய்வெடுத்த அலைகள் உயிர்பெற்றது போல் ஆர்ப்பரித்துக் கொண்டு, "மாறா.." என்று வந்து அணைத்துக் கொண்டாள்.

"ஏன் சாப்டாம அடம்பண்ற?. சாப்பிடு மொத" என்றவன் வேறெதுவும் பேசாமல் அவளை உண்ண வைப்பதே முதல் வேலை என்பது போல் அதைச் செய்தான்.

அவளின் வதங்கிய வதனமும் ஒளியிழந்த கண்களும் அவன் மனதை ஊசியாய் குத்தி அவனைக் கிறுக்குப் பிடிக்க வைத்தது. 'நான் தான் எல்லாத்துக்கும் காரணம்' என்று உள்மனம் அடித்துச் சொன்னாலும், அவளை விட்டுக் கொடுக்கும் எண்ணமெல்லாம் அவனுக்குத் துளியுமில்லை.

இருவரும் பேச்சற்று, 'எப்படி ஆரம்பிப்பது?' என்று மௌனமாய் மனோகர் முன் நின்றிருந்தனர். மனோகருக்கும் இந்த விஷயத்தை எப்படி கையாள்வகு என்று சுத்தமாய் புரியவில்லை. வேலையில் பல பிரச்சனைகளை சமாளித்தவருக்கு மகள் பற்றிய விஷயம், அதுவும் அவள் வாழ்க்கை விஷயத்தில் என்ன முடிவெடுப்பது என்று தெரியவில்லை.

தொண்டையை செருமிக் கொண்டு மனோகரே ஆரம்பித்தார். "இது வரைக்கும் நிலா என்கிட்ட எதுவும் மறைச்சதில்லை. எங்களைத் தவிர பெரிசா எதுவும் நினைச்சதில்லை. முதல் முறை எங்க கைய மீறிப் போன விஷயம் நீங்க மட்டும் தான்" என்று நிறுத்தி மாறனைக் காண.. அவன் காதலை நினைத்து அவனுக்கு ஒருபக்கம் பெருமையாக இருந்தாலும் தந்தையாக அவரின் நிலையை நினைத்து வருத்தமாகவும் இருந்தது.

"அவ எங்களுக்கு ஒரு பொண்ணு. இதுவரைக்கும் கஷ்டம்னா என்னனே தெரியாம வளர்ந்துட்டா. நீங்க ஒரு டிரைவர். கொஞ்சம் நினைச்சுப் பாருங்க. எங்க ஒரே பொண்ணை படிக்க வச்சு ஒரு டிரைவர்க்கு கல்யாணம் பண்ணிக் குடுக்கனும்னா எங்க மனநிலை எப்படி இருக்கும்?. உங்க வீட்டுப் பொண்ணா இருந்தா அப்டிக் கல்யாணம் பண்ணி வைப்பேங்களா?" என்று ஆத்திரமாகவும் அதேநேரம் அழுத்தமாகவும் கேட்க..

"நிச்சயமா குடுக்க மாட்டோம்" என்ற மாறனின் பதிலில் அங்கிருந்த அனைவரும் அதிர்ந்தனர்.

"கண்டிப்பா எங்கப்பா உங்க இடத்துல இருந்து என்னை மாதிரி ஒருத்தனை எங்கக்கா விரும்பிருந்தா நிச்சயமா நானே அதுக்கு சம்மதம் சொல்ல மாட்டேன். நீங்க என்ன நினைக்கிறேங்கனு புரியிது‌. ஆனா என்னால நிலாவை சந்தோஷமா வச்சுக்க முடியும் சார். ப்ளீஸ் நம்புங்க"

"எப்டி சந்தோஷமா வச்சுக்க முடியும்னு நினைக்கிறேங்க மாறன். உங்களோட பேமிலி பேக்கிரவுண்ட் எல்லாம் நான் விசாரிச்சுட்டேன். பெத்தவங்களும் இல்லாம நீ ஒருத்தன் மட்டும் உங்கக்காவுக்கு எல்லாமே பண்றத நினைச்சா பெருமையாத் தான் இருக்கு. ஆனா ப்ராக்டிகல் லைஃப்னு வந்துட்டா அதெல்லாம் பார்த்து என் பொண்ணைக் குடுக்க முடியுமா?. அவ கஷ்டப்படுறதுக்கா இவ்வளவு தூரம் அவளுக்காக பார்த்து பார்த்து பண்றோம். நீங்க தப்பா எடுத்துக்கிட்டாலும் பரவாயில்லை. என் மனசுல இதான் ஓடிட்டு இருக்கு" என்றவருக்கு அவனுக்கு நிலாவை திருமணம் முடித்து வைக்கும் எண்ணமே கசந்தது.

"எனக்குப் புரியிது சார் நீங்க என்ன நினைக்கிறேங்கனு. நான் இப்போ தான் எம்பிஏ கம்ப்ளீட் பண்ணிருக்கிறேன். இந்த டிரைவர் வேலை, கல்யாண கான்ட்ராக்ட் வேலைலாம் தற்காலிகமான வேலை. என் படிப்புக்கு ஏத்த வேலை கிடைச்சா இதெல்லாம் விட்டுட்டு அதை பார்க்கப் போறேன். அப்போ என் மருமகன் எம்பிஏ முடிச்சுட்டு வேலைல இருக்காருனு சொல்றதுல எந்தப் பிரச்சினையும் இருக்காதே சார். என்னால நிலா இல்லாம இருக்க முடியாது. அவளுக்கும் அப்டித்தான். இந்த அந்தஸ்து கௌரவம் பார்த்து எங்களை பிரிக்க நினைக்காதீங்க. உங்களை பிரிச்சு நிலாவைக் கூப்டுப் போனாலும் அவ சந்தோஷமா இருக்க மாட்டா. ப்ளீஸ்" என்று கையெடுத்து கும்பிட, அவன் முகமும் வார்த்தையும் பொய் சொல்லவில்லை என்பது அவருக்குப் புரிந்தது.

நிதானமாய் யோசித்தவர், "சரி அப்போ ஒன்னு செய்யலாம். என் பொண்ணு ஆசைப்பட்டு அதை வேண்டாம்னு சொல்ல எனக்கும் விருப்பமில்லை தான். அதுனால நான் ஒரு முடிவு பண்ணிருக்கிறேன். அதுக்கு உங்க ரெண்டு பேருக்கும் சம்மதம்னா மேற்கொண்டு பேசலாம்" என்று நிறுத்த, "நீங்க எது சொன்னாலும் எங்களுக்கு சம்மதம் தான்"

"நிலாக்கு இப்போ இருபத்தோரு வயசு தான் ஆகுது. உங்களுக்கும் ஒரு இருபத்தி ஆறு வயசு இருக்குமா?. எப்டியும் அவளுக்கு இந்த வயசுல கல்யாணம் பண்ணிக் குடுக்குற ஐடியால நான் இல்லை. அவ வேலைக்குப் போயி சொந்தக்கால்ல நின்று அவளுக்கே அவ மேல நம்பிக்கை வந்தபிறகு இருபத்தி ஐந்து வயசுல தான் கல்யாணம் பண்ணனும்னு நினைச்சேன். நீங்க உங்க படிப்புக்கேத்த வேலை பார்த்து உங்க கடமையெல்லாம் முடிச்சுட்டு வாங்க. நாலு வருஷத்துக்குள்ள நீங்க நல்ல நிலைமைல திரும்பி வந்தா என் பொண்ணை உங்களுக்கு குடுக்க சம்மதம். இல்லனா.. நாலு வருஷம் கழிச்சு வாங்க. அது வரைக்கும் ரெண்டு பேரும் சந்திக்கவோ பேசவோ கூடாது. அவரவர் தனித்தனி பாதையை நோக்கிப் போகனும்" என்று இறுதியில் பெரிய குண்டைத் தூக்கிப் போட இருவரும் ஒருவரையொருவர் அதிர்வுடன் பார்த்துக் கொண்டனர்.

"எங்களுக்கு சம்மதம் சார். நாலு வருஷம் கழிச்சு உங்களுக்கு பிடிச்ச மாதிரி உங்க பொண்ணை நல்லா வச்சுப் பாத்துக்குற நிலைமைக்கு வந்துட்டு உங்க கண்ணு முன்னாடி வருவேன். அப்போ நிலாவை எனக்கு கல்யாணம் பண்ணி வைங்க" என்றவனின் உறுதியில் அவன் காதலில் மேல் அத்தனை நம்பிக்கை.

மனோகரோ, 'எப்படியும் நாலு வருடத்தில் இவனால் ஒன்றும் செய்ய முடியாது. இவர்களின் ஆறுமாத பழக்கம் நான்கு வருட பிரிவில் காணாமல் மறைந்து போகும். அதுக்கப்புறம் நிலாவை நாம சமாளிச்சு வேற கல்யாணம் பண்ணி வச்சுடலாம்' என்ற நம்பிக்கையில் இப்படியொரு தப்புக்கணக்கைப் போட்டார் மனோகர். ஆனால் அவருக்கு ஒன்று புரியவில்லை. பத்து வருட காதல் பாதியிலே அத்துக்கொண்டு போகவும் செய்யலாம். மூன்று நிமிட காதல் மூன்று முடிச்சில் முடியவும் செய்யலாம். எல்லாம் கடவுள் எழுதிய விதிப்படிதானே நடக்கும். நாம் ஒரு‌ கணக்குப் போட்டு செயல்படுத்தினால் இறைவன் கணக்கு எதற்கு?. ஆனால் அவரின் இந்த சோதனையில் அவரே எதிர்பாராமல் காலம் பல நிகழ்வுகளை நடத்தி அவர் செய்தது எவ்வளவு பிழை என்று புரிய வைக்கக் காத்திருப்பது அவருக்குத் தெரியாது.

அவன் காதலில் மேலுள்ள நம்பிக்கையில் பட்டென்று சம்மதம் சொல்லிவிட்டான். ஆனால் பெண்ணவள் தான் துடித்துப் போனாள். மொட்டை மாடியில் நின்று நான்கு வருட சோதனை காலத்தை நினைத்து இப்போதே கண்ணீர் வடித்துக் கொண்டிருந்தாள். அவளை சமாதானம் செய்யும் வழி தெரியாமல் திணறினான் மாறன்.

"ஏன் மாறா சம்மதம் சொன்ன?. உன்னால என்னை பார்க்காம இருக்க முடியுமா?. எப்படி உன்னால சரின்னு சொல்ல முடிஞ்சது. அப்பா சொன்ன நாலு வருஷம் ஓகே. ஆனா பேச்ககூடாது பார்க்கக் கூடாதுனு சொல்றது சரியா?"

"எனக்குப் புரியிது நிலா நீ சொல்றது. மீட் பண்ணா தான் தப்பு. போன்ல கூட பேசக்கூடாதானு கேட்குற. ஆனா இது உணர்வு சம்மந்தப்பட்டது இல்ல. நம்பிக்கை சம்மந்தப்பட்டது. என்மேல உள்ள நம்பிக்கையை என் காதல் மேல இருக்குற நம்பிக்கையை உங்கப்பா சோதிச்சுப் பாக்க நினைக்காரு. எனக்காக நாலு வருஷம் காத்திருக்க முடியுமா?" என்றவனின் விழிகள் கலங்கி கன்னங்கள் தாண்டி ஓடியது கண்ணீர்.

"மாறா" என்று ஓடி வந்து கட்டிக் கொண்டவள், "நாலு வருஷமா!எனக்கு நாலு யுகம் மாறா. உன்னை பாக்காம உன்கூட பேசாம எப்டி இருப்பேன்?" என்று நெஞ்சில் சாய்ந்து கதறியவளுக்கு ஆறுதல் சொல்ல வழியில்லாமல் அவன் உயிர் கருகிக் கொண்டிருந்தது. வழியும் கண்ணீர் இருவருக்கும் ஆறுதல் தரவில்லை. நெஞ்சைத் தீயாக வாட்டி வதைத்துக் கொண்டிருந்தது.

"உனக்காக காத்திருப்பேன் மாறா. சீக்கிரம் வந்திரு" என்று அந்த மீரா போல் தனது கண்ணனுக்காகக் காத்திருக்கத் தயாரானாள்.

ஆடம்பரத்திற்கும் சொகுசு வாழ்க்கைக்கும் இருவரும் ஆசைப்படவில்லை. இருவரும் சேர்ந்து வாழ்ந்தால் போதும். இந்த பிரிவு அவசியமற்றது என்று இருவருக்கும் தெரியும். ஆனால் பெற்றவர் சோதித்துப் பார்க்க நினைக்கிறாரே. எக்கேடோ கெட்டுப் போ என்று உதறித் தள்ளும் பெற்றவராய் இருந்திருந்தால் அவரது வார்த்தையை உதாசீனப்படுத்தி இருக்கலாம். ஆனால் தன்னை விட பல மடங்கு பாசம் வைத்து இருபத்தி ஒன்று வருடம் வளர்த்தவரை உதாசினப்படுத்த முடியவில்லை அவனால். அவர் வைப்பதும் நியாயமான கோரிக்கை. அதை மறுப்பதற்கோ, முடியாது என்று சொல்வதற்கோ அவனிடம் எந்த பதிலும் இல்லை.

அசிங்கப்படுத்தி அனுப்பி இருந்தால் கூட அவளைக் கட்டித் தூக்கிக்கொண்டு திருமணம் செய்து முடிப்பதற்கு மனதிலும் உடம்பிலும் தெம்பிருக்கிறது. ஆனால் அவரும் மரியாதையாய் உட்கார வைத்து பொறுமையாய் ஒவ்வொரு வார்த்தையையும் நியாயமாய் வைக்க.. அவனிடம் பதிலும் இல்லை‌ எதிர்க்க நினைக்கவும் இல்லை.

இருவரும் நான்கு வருட காத்திருப்பின் பயிற்சிக்குத் தயாராகி விட்டனர். பிரிவு என்ற பாதையில் பயணிக்கப் போகும் இருவரும் இணைவார்களா?.

தொடரும்.