• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

முதலும் முடிவுமாய்-27

Pandiselvi

Vaigai - Avid Readers (Novel Explorer)
Oct 30, 2021
122
59
43
Chennai
அத்தியாயம் 27

"நிலா.. நிலா.. நான் தான்டி காரணம். உனக்கு இப்படி ஆனதுக்கு நான் தான்டி காரணம். நான் தான்.. என்னால தான் நீ இப்படி ஆகிட்ட". பைத்தியம் பிடித்தவன் போல் அழுகையில் அரற்றிக் கொண்டிருந்தவனைக் காண்கையில் மனோகரே பயந்து விட்டார்.

"மாறன் ஏன் அழுறேங்க?. என்னாச்சுனு சொல்லுங்க. எனக்கு நீங்க சொல்றது ஒன்னுமே புரியல. நீங்க எப்டி நிலா ஆக்ஸிடென்ட்க்கு காரணம்?" என்று அவர் புரியாமல் விழித்தார்.

மாறனின் நினைவுகள் இரண்டு வருடங்களுக்கு முன் அவள் பிறந்தநாளில் சென்று நின்றது. நாளுக்கு நாள் நிலாவின் நினைப்பு அதிகமாய் தாக்க அவளைக் காண வேண்டும் என்ற எண்ணம் வலுப்பெற்றது மனதில். அவளின் காதலைப் பெற்ற தினம் அவள் பிறந்தநாளன்று அவளுக்குத் தெரியாமல் அவளை சந்தித்து விட்டு வரலாம் என்று கிளம்பி விட்டான் புனேவிலிருந்து.

கல்லூரி வாயிலில் ஒரு ஓரத்தில் அவள் வருகைக்காக காத்திருக்கையில்,
எப்பவும் போல் புத்தாடை அணிந்து அழகாய் வந்தவளின் முகத்தில் துளியும் சிரிப்பில்லை. 'அதற்குக் காரணம் தான்' என்று நினைத்தவன் அப்போதே சென்று அவள் சோகத்தைக் கலைய நினைத்த மனதை கடினப்பட்டு அடக்கிக் கொண்டான். அவள் முன் சென்று நின்றால் சிலமணி நேரம் மகிழ்ச்சியாக இருப்பாள். ஆனால் தான் சென்ற பின் மிட்டாயைக் கையில் கொடுத்து விட்டு பிடுங்கிக் கொண்டால் வாடும் குழந்தை போலாகி விடுவாள் என்றுணர்ந்தவன் அந்த எண்ணத்தை அப்படியே விட்டு விட்டான். ஆசை தீர அவளை விழிகளால் பருகியவன், கல்லுரிக்குள் நுழையப் போனவள் என்ன நினைத்தாளோ ஓடி வந்து சுற்றும் முற்றும் தேட.. உடனே மறைவில் ஒளிந்து கொண்டான்.

விழிகளை அலைய விட்டு நாலாபுறமும் தேடினாள். அத்தனை பேர் கல்லுரிக்குள் சென்று கொண்டிருக்க, 'யார் என்ன நினைத்தாலும் பரவாயில்லை' என்று, "மாறன்.. மாறா.." என்று அங்குமிங்கும் ஓடிக் கத்தினாள். அவளுக்கு அவள் உயிர் அருகே நின்று துடித்துக் கொண்டிருப்பது போன்ற உணர்வு. இதயம் படபடவென அடித்துக் கொள்ள சுற்றி முற்றித் தேடினாள்.

அவள் விழிகளின் ஏக்கமும் கால்களின் அலைப்புறுலும் கண்டவனுக்கு உள்ளமெல்லாம் வலித்தது. 'எந்த கஷ்டமும் இல்லாமல் சந்தோஷமாக கல்லுரி வாழ்க்கையை அனுபவித்துக் கொண்டிருந்தவளின் மனதில் காதலை விதைத்து அவளை இந்த நிலைமைக்கு ஆளாக்கி விட்டோமே' என்று குற்றவுணர்வாக இருந்தது அவனுக்கு. 'தான் இப்போது சென்று அவள் முன் நின்றால் அதன்பின் திரும்பிச் செல்வது கடினம். அவளும் கஷ்டப்படுவா. வேண்டாம் அவ பாக்குறதுக்குள்ள நாம போயிடலாம்' என்று கிளம்பி விட்டான் அவள் கண்ணில் படாமல்.

அவன் கிளம்பிய சிறிது நேரத்தில் சித்தம் கலங்க அங்குமிங்கும் ஓடி ஓடி திரிந்தவளை பைத்தியக்காரி போல் பார்த்து விட்டுச் சென்றனர் சிலர். 'மாறா.. சத்தியமா முடியலடா.‌ உன்னால இருக்க முடியுதா என்னை விட்டு?. நீ இங்க தான் பக்கத்துல இருக்குற மாதிரியே பீல் ஆகுது. ஆனா என் கண்ணுக்கு தெரியலையே. வேண்டாம் மாறா இந்த விஷப் பரிட்சை. நான் அப்பா கிட்ட பேசப் போறேன். உன் கூட பேசுறதுக்காவது பெர்மிஷன் கேட்குறேன். இதுக்கு மேல போனா சத்தியமா நான் பைத்தியமாகிடுவேன்டா. உன்கிட்ட பேசனும். உன்னைப் பாக்கனும். பக்கத்துல இல்லனாலும் போன்லயாது பாக்கனும் மாறா..' என்று உள்ளுக்குள் கதறித் துடித்தவளை ஒரு கார் வேகமாக வந்து அடித்துத் தூக்கியது. அவனின் நினைவுகளுடனே சுற்றிக் கொண்டிருந்தவளின் மூளை கடைசி வேளையாக அவன் நினைவுகளை மட்டுமே சுமந்து வேலை நிறுத்தம் செய்தது. அதன் பின் அவளை மருத்துவமனையில் சேர்த்து அவள் உயிரைக் காப்பாற்றிக் கொடுத்தவர்களுக்கு அவளின் ஆழ்மன ஏக்கங்களை கண்டறிந்து பூர்த்தி செய்து குணமாக்க முடியவில்லை மருத்துவரால்.

அதை மனோகரிடம் அப்படியே சொன்னவன், "நான் தான் நிலாவோட நிலைமைக்கு காரணம். நான் தான்.. நான் தான்.. என்னால தான் அவளுக்கு அன்னைக்கு ஆக்ஸிடென்ட் ஆகிருக்கு. அய்யோ நிலாமா நீ கஷ்டப்படக் கூடாதுனு தான் அன்னைக்கு நான் உன் கண்ணுல படாம கிளம்புனேன்டி. ஆனா இப்படி ஆகும்னு நினைக்கலயே" என்று தலையிலடித்துக் கொண்டு அழுதான்.

மனோகர் அதிர்ச்சியில் உறைந்திருந்தார். 'இருவரின் வாழ்வில் விதி இப்படி சுழட்டி சுழட்டி விளையாடியிருக்கும்' என்று அவரும் எதிர்பார்க்கவில்லை. முதலில் மனோகர் குற்றவுணர்வில் தவித்தார். இப்போது மாறன். அவனால் தான் என்று சொல்ல முடியாது. ஆனால் அவனும் ஒரு காரணமாகிப் போனதில் அவனே அவனை வெறுத்தான். அவள் அனுபவித்த அனுபவிக்கும் அத்தனை வேதனைகளுக்கும் அவன் மட்டுமே காரணம் என்று மொத்த பலியையும் தன்மேலே போட்டுக் கொண்டான்.

அவன் அழுது அரற்றிக் கொண்டிருக்க, அத்தனையும் வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்த நிலா, "ஏ.. ஏன் இளா அழுறேங்க?" என்றாள். அவன் பெயரை இளமாறன் என்று சொல்லி வைக்க.. அதிலிருந்து அவனை இளா என்று அழைக்க ஆரம்பித்து விட்டாள். இத்தனை நாள் தன்னைக் கண்ணும் கருத்துமாக கவனித்துக் கொண்டவன் அழுவது அவளுக்கும் அழுகையைக் கொடுத்தது.

அவள் முகம் காணவே கூனிக்குறுகிப் போனான் மாறன். அவள் நிலைமைக்கு தான்தானே காரணம் என்பது அவனை உயிரோடு கூறுபோட்டது. அவன் தலைகுனிந்து குலுங்கிக் கொண்டிருக்க.. அவன் முகத்தை மெல்லமாய் நிமிர்த்தியவள், "நீ ஏன் அழுற இளா?. நான் மாறனை மிஸ் பண்றது மாதிரி நீயும் யாரையாவது மிஸ் பண்றியா?. அழாத சீக்கிரம் கிடைச்சிடுவாங்க. உனக்கு நான் இருக்கிறேன்" என்று விழிகளில் உணர்வைக் கொட்டி அவன் வலிகளை உணர்ந்தவளுக்கு அவள் மனம் சொல்லும் பதிலை மூளைக்குக் கொண்டு செல்ல முடியவில்லை. ஆனால் அவன் அழுதால் வலிக்கிறது. அவன் கண்ணீரைத் துடைக்க கைகள் பரபரக்கிறது. காரணத்தை அறிய தான் மூளை முற்படவில்லை.

"நிலா.." என்று அவளை இறுக்க அணைத்துக் கொண்டான். அவன் மனதின் வலிகளுக்கு அந்த அணைப்பு தேவைப்பட்டது. 'அவளை எந்த நிலையிலும் விட்டு விடக் கூடாது' என்று மனதில் சத்தியம் செய்து கொண்டான்.

அவனை சமாதானப்படுத்தி மருத்துவமனை அழைத்துச் சென்றார் மனோகர்.

மருத்துவரிடம் அனைத்தையும் அவன் ஒப்புவித்து, "அவளுக்கு சீக்கிரம் குணமாகிருமா டாக்டர்?. நான் தான் மாறன். என்னை தினமும் பாக்குறா. என் பக்கத்துல தான் இருக்குறா. அப்புறமும் ஏன் டாக்டர் அவளுக்கு சரியாகல?. மாறன் எங்க மாறன் எங்கனு என் கிட்டயே கேட்கும் போது ரொம்ப கஷ்டமா இருக்கு டாக்டர்"

"உங்களை அன்னைக்கு தேடி நீங்க இல்லைங்குற ஏக்கம் மனசுல ஆழமா பதிஞ்சு போயிருக்கு. அதுலே ஆக்ஸிடென்ட் ஆகி தலைல அடிபடவும் ப்ரைன் அந்த ஏக்கத்தை அப்படியே ஸ்டோர் பண்ணிருக்கலாம். நீங்களும் அவங்களும் பேசிக்கிட்ட பழைய நினைவுகளைப் பத்தி அடிக்கடி பேசுங்க. நீங்க போன இடங்களுக்கு மறுபடியும் வெளில கூட்டிட்டு போங்க. மனசு ஈசியா புரிஞ்சுக்கும். ஆனா மூளை அதையெல்லாம் புரிஞ்சுக்கிட்டு ஏத்துக்க டைம் ஆகும். நான் ஏற்கனவே ப்ரெஸ்கிரைப் பண்ண டேப்ளட் கன்டினியூ பண்ணுங்க. பீல் பண்ணாதேங்க. கண்டிப்பா சீக்கிரம் சரியாகும்" என்று சொல்லி அனுப்பி வைத்தார் மருத்துவர்.

அதிலிருந்து அவனும் அவளும் சென்ற இடங்களுக்குக் கூட்டிச் சென்றான். அவ்வளவு ஒன்றும் நிறைய இடங்களுக்கு இருவரும் சென்றதில்லை. ஒன்று காஃபி ஷாப் இன்னொன்று பீச். அதை விட்டால் நட்டு நடு ரோட்டில் தெருவிளக்கின் வெளிச்சத்தில் குளிர்காய்வார்கள். அடிக்கடி பீச்சுக்கு அழைத்துச் சென்றான். அங்கு சென்றாலே அவள் குழந்தையாகி விளையாடும் அழகினை ரசிக்கவே கூட்டிச் செல்வான். அன்றும் பீச்சில் ஆடிக் களைத்து முடித்து விட்டு, "ஏஞ்சல் போதும் வாடி.. இதுக்கு மேல ஆட்டம் போட்டா உடம்புக்கு ஏதாவது ஆகிடும் டி. அம்மா அப்பா வீட்டுக்கு வர்றேன்னு சொன்னாங்க. சீக்கிரம் போகனும். அப்புறம் அவங்க வந்து வெளில வெயிட் பண்ணிட்டு இருக்குற மாதிரி ஆகிடப்போது"

"ஏன் அம்மா அப்பா வர்றாங்க?. நாளைக்கு ஆபிஸ் பேறியா?. அப்டினா என்னை அம்மா வீட்ல தான விடுவ?"

"இந்தக் கேள்விலாம் நல்லாத் தெளிவா கேளு. திடீர்னு மாறன் எங்க மாறன் எங்கனு ஆரம்பிச்சுர்ற. உன்னை எப்போ என் பழைய ஏஞ்சலா பார்ப்போனோனு ஏக்கமா இருக்குடி" என்று பெருமூச்சு விட்டவன், "நாளைக்கு சன்டே தான. நானும் இருப்பேன்‌. அதான் அவங்களை வீட்டுக்கு வர சொல்லிருந்தேன். இப்போ போலாமா?" என்றவன் அவள் உடையில் ஒட்டியிருந்த மணலையெல்லாம் தட்டி விட்டு காரில் கிளம்பினான். இருவரும் எப்போதும் சந்திக்கும் அதே கார் தான். நண்பனிடம் விற்றதால் அதை திருப்பி வாங்கும் போது ஈசியாக இருந்தது அவனுக்கு. அந்தக் காரின் உள்ளே ஏறும் பொழுதெல்லாம் அவனுக்கு பழைய நினைவுகள் வந்து மூச்சு முட்டுகிறது. 'உனக்கு எதுவுமே ஞாபகம் வரலையாடி?' என்று மானசீகமாக அவன் புலம்புவதெல்லாம் அவள் எங்கே கண்டாள்?.

அவன் கார் பீச்சிலிருந்து கிளம்பும் அதே நேரம், அதுவரை அவர்களையே நோட்டமிட்டுக் கொண்டிருந்த ஒருஜோடி விழிகளின் சொந்தக்காரன் அவனது காரில் அவர்களை பின் தொடர்ந்தான்.

வீட்டில் நுழைந்து கதவைத் திறந்து அவளை உடை மாற்ற வைத்து ஹாலில் அமர்ந்தனர். "இளா.. நீ ஏன் என்கூடயே இருக்குற?" என்று தலைசாய்த்துக் கேட்டாள்.

"ஏன்னா.. நீ தான் என் ஏஞ்சல்.. காதலி.. மனைவி எல்லாமே. உன்னை விட்டு எங்க போறது?" என்று ஆசையாய் அவளது கன்னம் ஏந்தி விழிகளின் காதலை அவளுக்குள் கடத்த முயற்சித்தான். என்ன தான் உணர்வுகளுக்கு கடிவாளமிட்டு வைத்திருந்தாலும் சிலநேரம் தானாய் அணை உடைக்க வைத்து விடுகிறாள் அவனது ஏஞ்சல்.

அவனையே குறுகுறுவென பார்த்துக் கொண்டிருந்தாள். தலை வலிப்பது போல் இருந்தது. தலையைப் பிடித்துக் கொண்டு, "ஸ்ஸ்ஆ வலிக்குது மாறா" என்று தன்னையறியாமல் மாறா என்பது அவள் வாயில் வந்தது.

"என்ன சொன்ன?. என்ன சொன்ன நிலா?" என்று அவள் முகத்தை திருப்பி அவளை உலுக்கினான்.

"ப்ச் இளா.. எதுக்கு இப்படி உலுக்குற?. எனக்கு பசிக்குது" என்று முகத்தை சுறுக்கினாள்.

"அத்தை டிபன் செஞ்சு எடுத்துட்டு வர்றேனாங்க. அதான் நான் எதுவும் பண்ணல. இருடி உனக்கு சாப்பிட ஏதாவது செய்றேன்" என்று கிச்சனில் நுழைய.. அதே நேரம் வீட்டின் அழைப்பு மணி ஒலிக்க, "அத்தை மாமா வந்துட்டாங்கனு நினைக்கிறேன்" என்று கதவைத் திறந்தவன் வெளியே நின்றிருந்தவனைக் கண்டு அதிர்ந்தான்.

தொடரும்.
 

பாரதிசிவக்குமார்

Vaigai - Avid Readers (Novel Explorer)
Oct 18, 2021
2,726
617
113
45
Ariyalur
ரோஹித் தான் வந்திருப்பான் அவன் தான் கார் ல வந்து அன்னைக்கு நிலாவை ஆக்சிடேன்ட் பன்னிருப்பானோ 🤔🤔🤔