• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

முதலும் முடிவுமாய்-7

Pandiselvi

Vaigai - Avid Readers (Novel Explorer)
Oct 30, 2021
83
18
8
Chennai
அத்தியாயம் 7

"நான் ஒரு ஐடியா சொல்லட்டுமா?" என்றவள், "பேசாம நீங்களே என்கூட சென்னை வரைக்கும் வர்றேங்களா?" என்றாள் தயங்கிக் கொண்டே.

"என்னாது! சென்னை வரைக்குமா?" என்றவன் அதிர்ந்து நிற்க..

"நீங்க ஏன் ஷாக்காகுறேங்கனு புரியுது. மொத ரயில்வே ஸ்டேஷன்ல இருந்து ஸ்ரீவில்லிபுத்தூர். அப்புறம் அங்க இருந்து மதுரை. இப்போ இங்கிருந்து சென்னையானு நினைக்கிறேங்க. ஏற்கனவே எனக்கு நிறைய உதவி பண்ணிட்டேங்க. ரொம்ப தொந்தரவு பண்ணிட்டேனு புரியிது. எனக்கு அந்த ஆளு அப்படி பிகேவ் பண்ணதுல இருந்து பயமா இருக்குங்க‌. ப்ளீஸ்ங்க.. இந்த உதவி மட்டும் பண்ணுங்க ப்ளீஸ்" என்றவளின் விழிகளில் சிறிது நேரத்திற்கு முன் நடந்த நிகழ்வின் பயம் தெரிய.

"நாளைக்கு வேலை இருக்கே" என்று தாடையை விரலால் தேய்த்து யோசித்தவன், "சரி வாங்க போலாம்" என்க..

"ரொம்ப தேங்க்ஸ் ங்க" என்றவள் அதன் பின்னே இயல்பு நிலைக்குத் திரும்பினாள். அவன் இடத்தில் வேறுயாரும் இருந்தால் இது போல் நம்பிக்கை வைத்திருப்பாளா என்று தெரியாது. ஏனென்று தெரியாமல் அவனை நம்பும் மனதை இன்னும் அவள் உணரவில்லை. உணரும் நேரம் இதயங்கள் இணையுமோ.

அவன் கேட்டுவிட்டு வந்தப் பேருந்தில் இருவரும் ஏறிக் கொண்டனர். இவ்வளவு நேரம் அலைந்த அலைச்சலில் வந்த அலுப்பின் காரணமாக படுத்தவுடன் தூங்கி விட்டாள் அருகில் அந்நிய ஆணவன் இருக்கிறான் என்பதையும் மறந்து. ஜன்னல் ஓர சீட்டை எடுத்துக் கொண்டு சேலையை இழுத்து மூடிக் கொண்டு கண்ணயர்ந்து விட்டாள். நாளை மீதமிருக்கும் வேலைகளைப் பற்றி குமரேசனிடம் பேசியவன், "சரிடா நாளைக்கு அந்த வேலையை மட்டும் முடிச்சுரு. ஒரு அவசர வேலை. சென்னை வரைக்கும் போய்ட்டு வந்துறேன்.." என்று போனை வைத்து விட்டு, கை இரண்டையும் மேலே தூக்கி முறித்து விட்டு, பக்கவாட்டில் திரும்ப கைகள் இரண்டையும் கன்னத்துக்கு அடியில் குடுத்து அழகாய் தூங்கிக் கொண்டிருந்தவளை இமைக்காமல் பார்த்தான்.

'எந்த அர்த்தத்துல இவ இழுத்த இழுப்புக்கெல்லாம் போய்ட்டு இருக்க மாறா?. சென்னை போய் இவளை விட்டுட்டு அப்படியே வந்துருவியா?. அப்புறம்? இவ நெனப்பு உன்னை விட்டுப் போய்டுமா?' என்ற மனசாட்சியின் கேள்விக்கு சத்தியமா அவனிடம் பதிலில்லை. ஆனால் ஏதோ ஒன்று அவன் மனதை அவளிடம் கட்டிப்போடுவதை அவனால் தடுக்க முடியவில்லை.

'எப்டி இவ படுத்ததும் உறங்கிட்டா?. ரெண்டு நாள் பார்த்த ஒரு ஆம்பள பக்கத்துல இருக்கோம்ங்குற நெனப்பே இல்லையா?' என்றவனுக்குத் தெரியாது அவனே அறியாமல் அவள் மனதில் அந்த அளவுக்கு ஒரு நம்பிக்கையை விதைத்திருக்கிறான் என்று. அந்த நம்பிக்கையில் தான் இப்போது நிம்மதியாக அருகில் தூங்கிக் கொண்டிருக்கிறாள்.

அருகில் ஓரமாய் அவளை பார்த்தபடியே படுத்தவன், 'நமக்கு தான் கூச்சமா இருக்கு பக்கத்துல தூங்க. அது சரி.. அவ மனசுல எந்த சஞ்சலமும் இல்ல சலனமும் இல்ல. அதான் படுத்ததும் தூங்கிட்டா. உன் மனசுல அப்படி சுத்தமா இருக்கா?' என்றவனுக்கு அவள் முகத்தில் இருந்து விழியை எடுக்க முடியவில்லை. சலனமற்ற நீரில் ஒரு பட்டாம்பூச்சி அமர்ந்து சென்றதும் ஒன்றோடொன்று முட்டிக் கொள்ளும் நீரலைகள் போல அவன் மனம் முழுதும் அவளின் ஒவ்வொரு அசைவுகளும் நினைவுகளாய் முட்டி மோதியது. நிலவை வளைத்து அருகில் வைத்துக் கொண்டது போல் இருந்தது அவள் தூங்கும் அழகு. ரசித்தது போதும் என்று அவன் மனம் சிறிதும் சலிக்காமல் ரசனையாய் பார்த்துக் கொண்டிருந்தது.

'மாறா..' என்று ஓடி வந்து இறுக்கி அணைக்கும் போது அவன் உடல் நிலையின் உக்கிரம் அறிந்தவனுக்கு புரிந்து போனது அவன் இருள் வானை ஒளிர வைக்கப்போகும் பிறை நிலா அவள் என்று. 'விரல் தொடாமல் விலகி இருந்து ரசிப்பது தான் எத்தனை சுகம். ஷப்பா இவளை பார்த்தா இன்னைக்குத் தூங்குன மாதிரி தான். தேவதைகள்ல ராட்சசியா இருப்பா போல. என் உசுரை உருவி எடுக்காம விட மாட்டா போல. இது வேலைக்கு ஆகாது. நாம அந்தப் பக்கம் திரும்பிப் படுத்துப்போம்' என்று திரும்பி படுத்துக் கொண்டான்.

அடுத்த இரண்டு நிமிடத்தில் தொப்பென்று ஒரு பூங்கரமொன்று அவன் இடையில் விழுந்ததில் பக்கென்றானது இதயம். சூடான உடல் சட்டென்று ப்ரீஷரில் வைத்தது போல் உறைந்து நின்றது. அவளின் மூச்சுக்காற்று சட்டையைத் துளைத்து முதுகில் படர முகுதுத்தண்டு விரைத்து உடலில் உள்ள மயிர்க்கால்கள் எல்லாம் குத்திட்டு நிற்க, உணர்வுகள் மொத்தமும் தொண்டைக் குழிக்குள் சிக்கிக்கொண்டது. இடையில் படர்ந்து வயிற்றில் பதிந்த கரங்கள் உள்ளுக்குள் பல பட்டாம்பூச்சிக்களை பறக்க விட்டது.

அவன் இடையில் இருந்த அவள் கரத்தை எடுக்காமலே அவள் புறம் திரும்பினான். இமை திறந்த அவன் விழிகள் இமைகளுக்குள் கிடந்த அவள் விழிகளில் விழுந்தது. முகமும் முகமும் அருகருகே.. அனுகாமலே இந்த நேசத்தை யார் நெய்தது என்று புரியாமலே அவன் மனம் இன்னமும் விடை தேடிக் கொண்டிருக்கிறது. கத்தாழை பழம் போல அவள் சிவப்பு நிறம், தூங்கும் மோதும் முகத்தில் உறைந்திருக்கும் இளஞ்சிரிப்பு, சேலையில் அளவாய் செஞ்செடுத்த அவளிடை என்று விழிகள் அளந்து சொல்லி அவனைக் கிறுக்காக்கியது.

'உன்னை வெயிலுக்கு காட்டாம வளத்துருப்பாய்ங்களோ?. பால்கோவா பாப்பா மாதிரி இருக்குற‌. இப்பத்தான் ஞாபகம் வருது. உன் பேரு என்னனு கூட இன்னமும் கேட்கல. ஐடி கார்டுலயும் சரியா பாத்தது நெனவுல இல்ல. ஆனா என்னை மொத்தமாக் கவுத்துட்ட டி. உன்னை விட்டுட்டு எப்டி ஊரு வந்து சேரப் போறேன்னு எனக்கேத் தெரியல. உன்னை மொத்தமா நானே வச்சுக்கனும்னு தான் தோனுது. என்னை பைத்தியக்காரனாக்காம இருந்தா சரி' என்றவனின் விழிகள் தூங்கும் அவளை எவ்வளவு நேரம் ரசித்ததோ வெகுநேரம் கழித்தே தூக்கத்தைத் தழுவியது.

காலையில், "சென்னை வந்துருச்சு எழுந்திரிங்க" என்று கூக்குரலில் முதலில் கண் விழித்த மாறன் திடுக்கிட்டுவிட்டான். அவன் நெஞ்சில் தலை சாய்த்து சேலை முந்தானையை அவன்மேல் பரப்பி சுகமாய் அவனை அணைத்தபடி படுத்திருக்க.. அவன் கைகள் அவளை ஆதரவாய் அணைத்திருந்தது. 'ஒரு ஓரமா தான படுத்துருந்தோம். இது எப்போ நடந்துச்சுனு தெரியலையே..' என்று அடித்துப் பிடித்து எழுந்தவன், 'இவ என்ன இப்டித் தூங்குறா..' என்று நினைத்தவன், "ஏமா.. சென்னை வந்துருச்சு எழுந்திரி.." என்க. அவன் குரலுக்கும் அசைந்த பாடில்லை. அவள் பெயரும் தெரியாது என்பதால், "ஏமா பொண்ணு எந்திரிமா" என்று தோளைத் தொட்டு மெதுவாய் உலுக்க.. "ம்மா இன்னும் ஃபைவ் மினிட்ஸ் மா" என்று உருண்டு குப்புறப் படுக்க..

"கிழிஞ்சது போ. ஏ ஆத்தா.. இது உன் வீடு இல்ல. பஸ்ஸூ மா. எந்திரி" என்று நன்றாக உலுக்க..

"நீங்களா!" என்றவள் அரைக் கண்ணைத் திறந்து முழித்தவள், அதன் பின்னே இரவு நடந்த ஒவ்வொன்றும் வரிசையாய் கண்முன் நிழலாடியது. "சாரிங்க ரொம்ப நேரம் தூங்கிட்டேன்" என்று வேகமாய் எழுந்து சேலையை சரி செய்ய..

வேறு புறம் திரும்பி கொண்டவன், 'ம்க்கும்.. இவ்ளோ நேரம் அது கேட்க ஆளில்லாம கெடந்துச்சு' என்று மனதிலே நொந்தவன், "பேக்கை எடுத்துட்டு வா. இறங்கனும்" என்று அவள் பெட்டியைத் தூக்கிக் கொண்டு முன்னால் சென்று நிற்க.. இவள் கைப்பையை எடுத்துக் கொண்டு பின்னால் சென்றாள்.

நிறுத்தம் வரவும் இருவரும் இறங்கிக் கொண்டு, "சரிமா. உங்க வீட்ல இருந்து கூப்ட வருவாங்களா? இல்ல இதுக்கு மேல நீயே போய்ப்பியா?"

"இவ்ளோ தூரம் எனக்கு உதவி பண்ணிருக்கேங்க. வீட்டுக்கு வராம போனா எப்டி?. நீங்க கண்டிப்பா என் வீட்டுக்கு வரனும்"

'இவ என்ன அதிர்ச்சிக்கு மேல அதிர்ச்சி தர்றா' என்று நினைத்தவன், "இல்லமா பரவால்ல. நீங்க கெளம்புங்க. நான் கெளம்புறேன் அப்டியே"

"அதெல்லாம் முடியாது. நீங்க வந்தே ஆகனும். எப்டி உங்களை அப்டியே விட முடியும்" என்று அவன் கையைப் பிடித்து நிறுத்தி வைத்தவள் உடனே ஓலா ஆட்டோவை புக் செய்தாள்.

இன்னும் அவன் கையை விடவில்லை. சலனப்பட்ட மனதிற்குத் தான் ஒவ்வொரு முறையும் அவளின் மெல்லிய தொடுதல் ஆயிரம் இம்சைகளைக் கூட்டுகிறது. ஆட்டோ வரவும் அவன் கையை விட்டவள், ஓடிபி எண்ணை சொல்லி விட்டு, "வாங்க போகலாம்" என்று ஏறிக் கொண்டாள். அவன் தயக்கத்துடனே ஏறினான்.

இவள் வருவதற்குள் வீட்டில் ஒரு பூகம்பமே வெடித்துக் கொண்டிருந்தது. 'காலையில என்னைக் கூப்ட வர வேண்டாம் ப்பா. நானே வந்துருவேன்' என்ற மகளின் குறுஞ்செய்தியைக் கண்டதிலிருந்து மனோகரின் மனம் தவித்துக் கொண்டிருந்தது. அதுவும் ட்ரெயின் ஐந்து மணிக்கு சென்னை ரீச் ஆகியிருக்கும். ஆனால் இன்னும் நிலானி வீடு வந்து சேரவில்லை என்கவும் பயம் தொற்றிக் கொண்டது. வீட்டின் முன் ஆட்டோ வந்து நிற்கவும் மனோகரும் புவனாவும் வெளியே ஓடி வந்தனர்.

முதலில் மாறன் இறங்க, பின்னால் நிலானி இறங்கவும் புதியவனோடு மகளைக் கண்டவர்கள் அதிர்ந்து நின்றார்கள்.

"குட்டிமா என்னடா ஆச்சு?. ஏன் இவ்வளோ நேரம்?. ட்ரெயின் அஞ்சு மணிக்கே வந்துருக்குமே. ஆமா யாரு இந்த தம்பி?" என்று அடுக்கடுக்காய் கேள்விகளை அடுக்க..

"ப்பா எல்லாமே இங்கிருந்தே சொல்லனுமா? வீட்டுக்குள்ள போலாமே.." என்றவள், "மாறன் வாங்க உள்ளே" என்று அவனை அழைத்துக் கொண்டே உள்ளே சென்றவள்..

"ப்பா எனக்கு ஒன்னுமே தெரியாம வளர்த்து வச்சுருக்கேங்க. ம்மா எனக்கு பொறுப்புனா என்னனே சொல்லிக் குடுக்கலமா நீயி" என்க.. மகளின் பேச்சில் இருவரும் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டனர்.

"அடியே என்னாச்சோ ஏதாச்சோனு நாங்க பயந்துக்கிட்டு இருந்தா.‌. நீ வந்ததும் வராததுமா எங்க வளர்ப்பைப் பத்தி பேசிக்கிட்டு இருக்கியா?. ஒழுங்கா என்னாச்சுனு சொல்லுடி" என்று புவனா படபடக்க..

"அதை ஏம்மா கேட்குற. நேத்து எனக்கு பேட் டே" என்றவள் நடந்த மொத்தத்தையும் இருவரிடமும் ஒப்புவிக்க.. மாறன் அதிசயமாய் பார்த்துக் கொண்டிருந்தான் அவர்களை. இதே போல் நடந்திருந்தால் சில வீட்டில் எல்லாம் இந்நேரம் பெரிய பூகம்பமே கிளம்பியிருக்கும். இங்கோ அவளை அமர வைத்து கதை கேட்டுக் கொண்டிருக்கின்றனர். புரிந்து கொள்ளும் பெற்றவர்கள் கிடைப்பது கூட வரம் தான் என்று தோன்றியது அவனுக்கு. அவர்களின் பேச்சும் பதட்டமும், வந்ததிலிருந்து அவள் நலனை அறிய அவள் மேல் படியும் விழிகளும் சொல்லியது அவள் வீட்டின் செல்லப் பொண்ணு என்று.

"எனக்கு அப்பவே போன் பண்ணி சொல்லிடுக்கலாமே டா. நான் ஏதாவது பண்ண முடியாமானு பாத்துருப்பேன்ல. எவ்ளோ கஷ்டப்பட்டுட்ட. இதுக்குத்தான் உன்னைத் தனியா விடுறதே இல்ல" என்று வருந்திய மனோகர், "ரொம்ப நன்றி தம்பி. நீங்க மட்டும் இல்லனா எம்பொண்ணு என்ன பண்ணிருப்பாளோ. இவ்ளோ தூரம் கொண்டு வந்து விட்டுருக்கேங்க. எத்தனை நன்றி சொன்னாலும் பத்தாது." என்று அவனுக்கு நன்றி கூறினர் புவனாவும் மனோகரும்.

"பரவால சார். நான் கெளம்புறேன்" என்று அவன் கிளம்ப எத்தனிக்க..

"இருங்க தம்பி சாப்பிட்டு போங்க" என்றவர், "நிலா.. தம்பிக்கு ரெப்பிரஷ் பண்ண ரூம் காட்டு" என்க.. முதல் முறை அவள் பெயரைக் கேட்கிறான். 'நிலா..' என்று மெதுவாய் உச்சரித்துப் பார்த்தான் மனதில்.


தொடரும்.