• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

முதலும் முடிவுமாய்-9

Pandiselvi

Vaigai - Avid Readers (Novel Explorer)
Oct 30, 2021
122
96
28
Chennai
அத்தியாயம் 9

அன்றைய நாள் முழுவதும் கொஞ்சம் சிடுசிடுப்பு நிறைய வேலை என்று எவ்வளவு முடியுமோ அந்த அளவுக்கு மனதில் எந்த நினைப்பும் ஏறாத அளவுக்கு உழைத்துக் கொண்டிருந்தான் மாறன். என்னமோ தெரியவில்லை. வேண்டாம் என்று ஒதுக்க ஒதுக்கத் தான் நிலானியின் நினைவுகள் விரட்டி அடித்தது. ஒருபக்கம் நிலானியை நினைக்கச் சொல்லும் மனது, மறுபக்கம் கிடைக்காத ஒன்றுக்கு ஆசைப்பட்டு மனதால் பாதிக்கப்படாமல் உனக்கிருக்கும் கடமையில் கவனம் செலுத்து என்ற மூளையின் எச்சரிக்கை என்று இருதலைக் கொள்ளி எறும்பாக தவித்துக் கொண்டிருந்தான்.

எல்லா நாளும் அவனுக்கு வேலை இருக்காது. கல்யாணம் பங்ஷன் கான்ட்ராக்ட் கிடைக்கும் போது தான் வேலை. அதேபோல் கார் வாடகைக்கு செல்வதும் அதே போல் தான். சும்மா இருக்கும் நேரத்தில் தனிமை வாட்டி வதைக்கும். டிகிரி முடித்து விட்டு வேலைக்குச் செல்லும் போது போதிய சம்பளம் கிடைக்காத போது தான் புரிந்தது எந்த டிகிரி முடித்தால் எந்த வேலைக்குப் போகலாம் எவ்வளவு சம்பளம் கிடைக்கும் என்று. இந்தக் காலத்தில் படிப்பை வைத்து நல்ல வேலையில் அமர இந்த மூன்று வருட டிகிரி போதாது என்று உணர்ந்தவன் எம்பிஏ கோர்ஸ் கரஸில் சேர்ந்தான். எம்பிஏ இரண்டாம் வருடத்தில் இருக்கிறான். அவ்வப்போது கவர்மென்ட் ஜாப் தேர்வுகளும் எழுதுவான். ஆனால் அவன் நேரம் இதுவரை எதிலும் தேர்வாகவில்லை. இருந்தாலும் விடாமல் எல்லாத் தேர்வுகளையும் எழுதுவான்.

அன்று இரவு வேலை முடித்து விட்டு அந்த செம்ஸ்டர்க்குத் தேவையான எம்பிஏ கோர்ஸ் புத்தகங்களைத் தேடி வாங்கிக் கொண்டு வீட்டுக்குச் சென்றான். புத்தகத்தைத் திறந்து அமர்ந்திருந்தானே ஒழிய எண்ணமெல்லாம் நிலானியுடன் பயணித்த நினைவுகளுக்குத் தான் சென்றது. என்ன தான் கடமைகளை காரணம் காட்டி அதை ஓரங்கட்டினாலும் தானாய் மேலெழும்பும் அவள் நினைவுகளை என்ன செய்வதென்றே அவனுக்குப் புரியவில்லை. ஒரு பெண்ணின் பின்னால் சுற்றி காதலை வளர்க்கும் நிலையில் அவன் இல்லை என்று மூளைக்குப் புரிந்தாலும் மனதிற்குப் புரிய வேண்டுமே. அப்போது தான் அவனுக்குப் புரிந்தது, 'சே.. அவளை மண்டபத்துல பாத்ததோட விட்டுருந்தா மறந்துருப்போனோ என்னவோ?. இப்படி அவ கூட சென்னை வரைக்கும் போய்ட்டு வந்து மனசை அவகிட்ட பறிகுடுத்துட்டு வந்தது தான் மிச்சம்' என்று பின்னந்தலையை அழுந்த தேய்த்து புத்தகத்தை ஓரம் வைத்தவன், 'உன்னை நினைச்சு இங்க நான் தவிச்சுக்கிட்டு இருக்கேன். உனக்கு என் நினைப்பாது இருக்குமா நிலா?. திரும்ப பார்த்தா அட்லீஸ்ட் என் பெயராவது ஞாபகம் இருக்குமா?' என்று வானில் உள்ள நிலவில் அவன் நிலவுப் பெண் இருப்பது போல் பேசிக் கொண்டிருந்தான்.

எப்போதும் சுறுசுறுப்பாய் விடியும் காலை கடந்த இரண்டு நாட்களாக ஆமைபோல் விடிகிறது மாறனுக்கு. கசங்கிய மனதோடே கிளம்பி அக்காவை நகை எடுக்க இராஜபாளையம் வரச் சொல்லி விட்டு இவனும் அங்கு சென்றான். அக்கா வீட்டுக்குச் செல்லவில்லை. ஏனோ அவனுக்கு அங்கு செல்வதற்கு பிடிப்பதில்லை. அவன் வருவதற்கு முன் பைரவியும் அவள் கணவன் சுகுமாரனும் அங்கு காத்திருந்தனர்‌.

"வாங்க மாமா" என்றவன், "சீக்கிரமே வந்துட்டேக்களா க்கா?. வாங்க போவோம். கடைக்குள்ள போய் உனக்குப் புடிச்சதை பாக்க வேண்டியது தான?" என்று கடைக்குள் சென்றனர் மூவரும்.

"க்கா.. உனக்கும் மாமாவுக்கும் பிடிச்சதா பாத்து எடுத்துக்கோ.." என்றவன், "மூனு பவுனுக்கு வர்ற மாதிரி எதுனாலும் எடுத்துக்கோக்கா. அவ்ளோ தான் காசு இருக்கு" என்று மெதுவாய் சொல்ல..

"சரிடா நான் பாத்து எடுத்துக்குறேன். வா நீயும் வந்து பாரு" என்றழைக்க, "இருக்கட்டும் கா. மாமா கூட போய் பாரு" என்று தனியாய் நின்று கொண்டான்.

சாதாரணமாகவே பெண்களுக்கு என்னதான் வீட்டிலிருந்து செல்லும் போதே இத்தனை பவுனுக்கு தான் பணம் இருக்கிறது என்று தெரிந்தாலும் நகைக் கடைக்குச் சென்றால் அங்கிருக்கும் அத்தனை நகைகளின் மேல் கண்கள் அலைபாயும். கல்யாணத்தின் போது ஆசை ஆசையாய் பார்த்து பார்த்து பிடித்ததை தேர்வு செய்யும் வாய்ப்புக் கிடைக்கும் பெண்களுக்கே அப்படி என்றால் பொண் வைக்கும் இடத்தில் வெறும் பெண்ணை மட்டும் வைத்துக் கல்யாணம் செய்யும் பெண்களுக்கு எவ்வளவு ஆசைகள் இருக்கும்?. அது போல் தான் பைரவிக்கும். "மூனு பவுனு நெக்லஸ் எடுத்துக் காண்பிங்க" என்று சொன்னாலும் கண்கள் கடையையே சுற்றி வந்தது. உடன்பிறந்தவனும் அதைக் கண்டு கொண்டான். அவனுக்கும் அதிகமாய் செய்ய வேண்டும் என்று ஆசை தான். ஆனால் அவன் நிலைமையும் அவ்வளவுக்குள் தானே இருக்கிறது. மொத்தமாய் பணம் சேர்த்து அதிக எடையுள்ள நகையை வாங்கிக் குடுக்கும் வரை அவள் புகுந்த வீட்டில் அவலாய் மென்று அவளை அறைத்து விடுவார்களே.. அதுவும் நகை விற்கும் விலைக்கு மொத்தமாய் வாங்கிக் குடுக்க முடியுமா அவனால்?. அதற்குத் தான் அவ்வப்போது கொஞ்சம் கை சேரும் பணத்தை வைத்து குட்டி குட்டியாய் நகையை வாங்கிக் குடுத்து விடுகிறான்.

தம்பி கொண்டு வந்த பணத்திற்குள் எடுக்க வேண்டும் என்பதற்காக பார்த்து பார்த்து மூன்று பவுனுக்குள்ளையே எடுத்துக் கொண்டாள் பைரவி. "சரிக்கா நான் கெளம்புறேன். நீங்க ரெண்டு பேரும் சாப்டு கிளம்புங்க. இந்தாக்கா பாப்பாக்கு ஏதாவது வாங்கிட்டுப் போ" என்று ஆயிரம் ரூபாயையும் கையில் திணித்தான். பைரவியின் நான்கு வயது மகளுக்கு ஏதாவது ஸ்நாக்ஸ் வாங்கிக் கொள் என்று.

"வேணான்டா எதுக்கு?. நீ வச்சுக்கோ. நீயும் வா. சாப்பிட்டு கெளம்பலாம். வீட்டுக்கு வந்துட்டு போடா" என்று வற்புறுத்த.. அவள் கணவன் எனக்கென என்று வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தான்.

"இல்லக்கா வேலை இருக்கு. இன்னொரு நாள் வாரேன். சரிங்க மாமா கெளம்புறேன். நீங்க பாத்து கெளம்புங்க" என்று கிளம்பி விட்டான் மாறன்.

அவன் சென்றதும், "ஏங்க ஒரு பேச்சுக்காது வீட்டுக்கு வானு கூப்டுறேங்களா என் தம்பிய?. ஏன் அவன் வந்தா சாப்டு உங்க வீட்டு சொத்துக் கரைஞ்சுருமா?" என்று சண்டை பிடிக்க.

"நான் வர வேண்டாம்னு சொல்லலியே?. அவன் வேலை இருக்குனு போயிட்டா என்னை என்ன செய்ய சொல்லுத?. சரி சரி வா. எனக்கு சோலி இருக்கு. உந்தொம்பி பாசத்தைலாம் வீட்ல போய் வச்சுக்கோ. அப்படி இல்லனா நாலு நாள் உங்க வீட்ல போய் தங்கிருந்து பாசத்தை புழிஞ்சுட்டு வரனும்னா வா" என்று கடுகடுக்க..

"ஆமா அப்படியே நீங்களும் உங்கம்மாவும் நாலு நாள் போய் இருந்துட்டு வாமானு அனுப்பிருவேங்களாக்கும். போனா விருந்து வைக்க வீட்ல உங்காத்தா இருக்காளா? கறி எடுத்துட்டு பண்டம் பலகாரம் வாங்கிட்டு வந்து குடுக்க உங்கப்பன் இருக்கானானு ஏதோ அநாதை ரேஞ்சுக்குல உங்கம்மா பேசுவாங்க. ஏதோ சும்மா அவனை கூப்டுற மாதிரில பேசுறேங்க. அதான் ஆறு மாசத்துக்கு ஒருக்க நகையை வாங்கி குடுத்துட்டு தான இருக்காய்ன்?" என்றவளுக்கு கண்ணு கலங்கியது. அப்பா அம்மா இருந்து கண்ணீர் வடித்தாலே கேட்பதற்கு நாதி இருக்காது. அவர்களும் இல்லை‌. ஒற்றை உடன்பிறந்தவனுடனும் ஒட்டாமல் இருக்க விடும் மாமியார் வீட்டை மனதில் வறுத்தடுக்க மட்டுமே முடிந்தது அவளால்‌.

"ஆமா உந்தம்பி சும்மா உனக்கு நகையை வாங்கி வாங்கி போடுதான் பாரு. போட்ட நகையை குடுக்கத் துப்பில்ல. நகை இல்லாம எதுக்கு உங்க வீட்ல கல்யாணம் பண்றாங்களாம்?. எம்புட்டு போட முடியுமோ அதைச் சொல்லி உன்னை கட்டி வைக்க வேண்டியது தான?". நட்ட நடு ரோடு என்றும் பாராமல் வார்த்தைகளை அள்ளி வீச..

"பொண்ணு கிடைக்காம நகை அப்புறம் போடுங்கனு கட்டிட்டு வந்தது நீங்க தான.. புதுசா இருக்கும் போது இனிச்சது. பழசா போகவும் எல்லாம் குறையா தெரியுதோ?. எல்லாம் எங்க நேரம். என்ன செய்ய.." என்று அழுது கொண்டே வண்டியில் ஏறிக் கொண்டாள். அதற்கு மேல் ரோட்டில் நின்று பேசினால் ரோடு என்றும் பாராமல் தன் குடும்பம் வரை இழுத்து அசிங்கப்படுத்துவான் என்று அமைதியாகி விட்டாள். பெற்றவர்கள் இறந்த பின் தானே சமைத்து, சிலநேரம் ஹோட்டலில் என்று நல்ல சாப்பாடே கண்ணில் காணாத தன் தம்பிக்கு வீட்டுக்கு அழைத்து ஆசைப்பட்ட படி சாப்பாடு போட முடியவில்லையே என்று ஆதங்கம் அவளுக்கு. அவளின் மாமியாரின் நக்கல் பார்வைக்கும் குத்தல் பேச்சுக்காகவுமே மாறன் அங்கு செல்வதை தவிர்ப்பான்.

ஏன்டா விடிகிறது ஏன்டா அடைகிறது என்று என்னவோ போல் இருந்தது மாறனுக்கு. 'என்ன இந்த வாழ்க்கை? சொகுசாக வாழா விட்டாலும் நிம்மதியாக சாப்பிட்டுக் கொண்டிருந்த வாழ்க்கையைப் பறித்து பாரங்களைத் தலையில் தூக்கி வைத்தது. இதுதான் தன் நிலை என்று ஓடிக் கொண்டிருக்க எவளோ ஒருத்தியை சந்திக்க வைத்து எந்நேரமும் அவளை நினைக்க வைக்கிறது. அவ உயரம் என்ன என் அடையாளம் என்ன?. காதல் அதெல்லாமா பார்த்து வரும்?. இது பேச்சுக்கு வேனா நல்லா இருக்கு. ஆனா நிஜத்தில்?. அந்தஸ்து, சொத்து, கௌரவம், பணம், பதவி இதெல்லாம் பார்க்காமல் ஒரு திருமணத்தைக் கண்ணில் பார்க்க முடியுதா?. அப்போ காதலிக்கிறது தப்பா? அதுக்கு எனக்கு தகுதி இல்லையா?' என்றவனின் கேள்விக்கு மனம் சொல்லும் பதில், 'காதலுக்கு தகுதி தேவையில்லை. மனதிருந்தால் போதும். ஒருவரைப் பற்றி எதுவும் தெரியாமல் அவர் மேல் ஒரு இனம்புரியா உணர்வுப் பிணைப்பு ஏற்பட்டு விட்டால் அது தான் காதல்' என்று அடித்துச் சொல்லி அலைபாயும் அவன் மனதிற்கு காதல் என்ற பெயர் சொல்லியது.

புத்தி பேதலித்து விடும் நிலை வருவதற்குள் சென்று விடலாம் என்று கிளம்பி விட்டான் சென்னைக்கு தன் நிலவுப் பெண்ணைக் காண்பதற்கு..


தொடரும்.