• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

முத்த மழை - 08

Vathani

Administrator
Staff member
Jul 23, 2021
1,343
557
113
Tirupur
முத்த மழை - 08

“லிங்கா.. எல்லாம் சரி பண்ணிடலாம். நான் தலைவர்கிட்ட பேசிட்டேன். நம்மகிட்ட இருக்குற டீடைல்ஸ் வச்சு அந்த பார்டிக்கிட்டயும் பேசலாம். அவங்களும் நமக்கு டைம் கொடுப்பாங்க. எல்லாத்துக்கும் இன்சூரண்ஸ் க்ளைம் பண்ணிக்கலாம். அந்த ஆபிஸ்க்கும் எல்லாம் டாகுமென்ட்சும் அனுப்பியாச்சு. ரெண்டு நாள்ல அவங்க வந்து செக் பண்ணிட்டு அமவுன்ட் இஸ்ஸூ பண்ணிடுவாங்க.. எதுக்கும் கவலைப்பட வேண்டாம்..” என்றார் சிவகுரு.

“அது.. அதெல்லாம் இனி தம்பிக்கிட்ட சொல்லு சிவா. அவன்தான் பார்க்கனும். நான்.. என்னால இனி என்ன செய்ய முடியும்.?” என்றார் வருத்தமாக.

“ப்பா.. இந்த கம்பெனி உங்களுக்கு எவ்ளோ முக்கியம்னு எனக்குத் தெரியும். அதை அப்படியே விட்டுட மாட்டேன். அப்புறம் அதை நீங்கதான் பார்க்கனும். எனக்கு கார்மென்ட்ஸ் பத்தி என்ன தெரியும். உங்க ஹெல்த் சரியானதும், நீங்கதான் கம்பெனிக்கு போகனும்..” என்றான் தந்தையின் வருத்தம் பிடிக்காமல்.

“ஹான்.. ஆமா அண்ணா. தம்பி சொல்றதுதான் சரி. நீங்க ஆசையா ஆரம்பிச்ச தொழில். அதை நீங்கதான் பார்க்கனும்.. அப்போதான் உங்களுக்கும் ஒரு ஆத்ம திருப்தி கிடைக்கும்..” என சீதாவும் கூற, சொக்கலிங்கத்தின் பார்வை ராமசாமியிடம் சென்றது.

வந்ததிலிருந்து ஒரு வார்த்தைக்கூட அவர் பேசவில்லை. அதோடு முகம் களைப்பாகவும், சோகமாகவும் இருந்தது. அதை கவனித்த சொக்கலிங்கம் “என்ன ராமு.?” என்றதும்,

“என்னை மன்னிச்சிடு லிங்கா.. நீ கேட்டு நான் இல்லன்னு சொல்ற இடத்துல இப்போ இருக்கேன். வல்லிக்கு இந்த கல்யாணத்துல விருப்பமில்லன்னு சொல்லிட்டா..” என்றார் குரல் அடைக்க..

அதில் கர்னன் நிமிர்ந்து ராமசாமியை கூர்மையாக பார்க்க, லிங்காவிற்கு மனமே வரண்டு போனது.

மகன் முதன் முதலில் கேட்டு, அவரால் கொடுக்க முடியாமல் போனதை நினைத்து அவர் உடல் சோர்ந்து போனது.

இனி என்ன? இந்த உயிர் இருந்தால் என்ன? போனால் என்ன? என்ற எண்ணம்தான்.

வல்லபியின் மறுப்பை ஏற்க முடியாமல் லிங்காவின் இதயத்துடிப்பு அதிகமானது. அங்கிருந்த மெஷினில் வெளிப்பட்ட இதயத்துடிப்பின் சத்தம் மற்றவர்களை பயம் கொள்ள வைத்தது.

“நர்ஸ்… நர்ஸை கூப்பிடலாம்..” என்ற சீதாவை தடுத்த கர்னன், “ப்பா.. வல்லிக்கிட்ட நான் பேசுறேன். நான் பேசி சம்மதம் வாங்கிக்கிறேன். நீங்க இப்படி எல்லாத்துக்கும் ப்ரெஷர் ஏத்தாதீங்க.. நான் பார்த்துக்கிறேன்னு சொல்லிட்டேன்ல.” என சற்று அதட்டலான குரலில் கூற, அப்படியே அவரின் இதயத்துடிப்பு சீரானது.

இதை கவனித்த மற்ற மூவரும் அதிர்ந்து போயினர். இன்று காலையில்தான் வல்லபியிடம் அத்தனை தூரம் எடுத்து சொல்லி பார்த்தனர். ஆனால் அவளோ வேண்டாம் என்பதில் உறுதியாக மறுத்து விட்டாள்.

இப்போது கர்னன் பேசுகிறேன்.. பேசி சம்மதிக்க வைக்கிறேன் என்று சொன்னது அவர்களுக்கு ‘வல்லியை கட்டாயப்படுத்துவது போல்’ இருந்தது.

ஆனால் வல்லியின் வாயாலயே மறுப்பைக் கேட்டால் கர்னன் புரிந்து கொள்வான் என்று நினைத்து அதற்கு சரியென்று விட்டனர்.

‘வல்லிக்கு உங்களை வேண்டாம்னு இல்ல தம்பி. கல்யாணம்தான் இப்போ வேண்டாம்னு சொல்லுது. படிச்சதுக்கு கொஞ்ச நாளாவது வேலைக்கு போறேன்னு சொல்லுது. ஏன் உடனே கல்யாணம் அது இதுன்னு பேசுறீங்கன்னு கேட்குது…” என சீதா தடுமாற்றமாக நிறுத்த,

“இட்ஸ் ஓக்கே ஆன்டி.. எனக்கு புரியுது.. பட் அப்பா சிச்சுவேஷன் பார்க்கும் போது என்னால வெயிட் பண்ண முடியாது. அவருக்கு என்னைப்பத்தின கவலைதான் அதிகம். அதையே யோசிச்சிட்டு இருக்காரேன்னுதான் பொண்ணு பார்க்க சொன்னேன். அப்புறம் வல்லின்னா அவருக்கும் பிடிக்கும். அவருக்கு பிடிச்ச பொண்ணே மருமகளா வந்தா ரொம்பவும் சந்தோசப்படுவார். என்னைப்பத்தின கவலையும் குறையும்னு நினைச்சுதான் வல்லியை கேட்க சொன்னேன்..” என்றான் விளக்கமாக.

மகனின் பேச்சில் சொக்கலிங்கத்தின் விழிகள் நிறைந்து போனது.

அவன் தனக்காக பார்க்க, தன்னால் அதை கொடுக்க முடியவில்லையே என்ற வருத்தமும், விரக்தியும் அவர் முகத்தில் வந்து வந்து போனது.

அதை கவனித்த ராமு “லிங்கா நீ கேட்டு நான் இல்லைன்னு சொல்லிடுவேனா? எனக்குமே வல்லியை தவிர வேற யார் இருக்கா சொல்லு? இது அவ வாழ்க்கை. அவளுக்குப் பிடிச்ச மாதிரி இருக்கனும்னு நான் நினைக்கிறது தப்பா?” என்றார் கவலையாக.

உடனே சொக்கலிங்கம் இல்லையென்று தலையசைக்க “அண்ணா அதுதான் வல்லிக்கிட்ட தம்பி பேசுறேன்னு சொல்றாரே பேசட்டும். அவங்க பேசி ஒரு முடிவுக்கு வரட்டும்..” என்ற சீதாவின் கூற்றை சரியென்று ஆமோதித்தனர் மற்ற அனைவரும்.

கேண்டினில் அமர்ந்திருந்த யாழினியின் முகம் மேலும் சோர்ந்து போனது.

தன் அண்ணனின் ஆசை அது நடக்காமலே போய் விடுமோ என்ற வருத்தம் அவளை மேற்கொண்டு எதையும் பேசவிடவில்லை.

அமைதியாக அமர்ந்திருந்தவளின் கைகளைப் பிடித்த வெற்றி “நான் ஒன்னு சொல்லனும் யாழி..” என்று நிறுத்தி அவளை நேராகப் பார்த்தான்.

“என்ன.?” என்பது போல் அவள் பார்க்க,

“வல்லியோட விருப்பம் இருந்தாலும், இல்லைன்னாலும் இந்த கல்யாணம் நடக்கும். உன் அண்ணா நடத்திப்பார். எங்க யாராலையும் தடுக்க முடியும்னு தோணல. மாமாவுக்காக எல்லாரும் சரின்னுதான் சொல்வாங்க.. ஆனா..?” என நிறுத்த, யாழினி பார்வையை மாற்றாமல் அவனையே பார்த்துக் கொண்டிருந்தாள்.

“உன் அண்ணாவைப் பத்தி எங்க யாருக்கும் எதுவும் தெரியாது. மாமாவும் நீயும் சொல்றதை வச்சு நாங்க ஒரு முடிவுக்கும் வர முடியாது..” என்று நிறுத்தி “அவருக்கு அங்க ஒரு பொண்ணோட அஃபர் இருந்தது எனக்குத் தெரியும். உனக்கும் தெரியும்.. அப்படி இருக்கும் போது வல்லியை எப்படி அவருக்கு..?” என அவளைப் பார்க்காமல், தங்கள் இருவருக்கும் தனிமை கொடுத்து வந்தனாவோடு அமர்ந்திருக்கும் வல்லபியைப் பார்த்தபடியே கேட்டான்.

யாழினிக்கு அவன் சொல்ல வருவது புரிய, அவளால் இல்லையென்று வாதாட முடியவில்லை.

‘இப்போ.. இப்போ அந்த பொண்ணோட இல்ல அண்ணா.. வேற யார்கூடவும் ரிலேஷன்சிப்ல இல்ல.. ஆனா அதுக்காக அவர் செஞ்சதை சரின்னு சொல்லமாட்டேன்..” என்றாள் யாழினியும்.

“இது வல்லபிக்கு தெரியக்கூடாது யாழி. எப்படியும் உன் அண்ணா வல்லியை விடமாட்டார். அவளுக்கு மேரேஜ் தான் பிடிக்கல. உன் அண்ணாவை பிடிக்காமல் இல்ல. அவர் பேசினா ஒருவேளை சரின்னு சொல்லலாம். எல்லாமே அங்கிளுக்காகத்தான். இவங்க மேரேஜ்தான் அவரை சரியாக்கும்னு ரெண்டு அப்பாவும் நினைக்கிறாங்க. கர்னனும் அப்படித்தான் நினைகிறார்…” என்றவன் யாழினியை கூர்மையாக பார்க்க,

“நான்.. இல்ல நான் வல்லியை கட்டாயப்படுத்தமாட்டேன். இதைப்பத்தி பேசவே மாட்டேன்..” என்றாள் அவசரமாக.

“ம்ம்..” என்று பெருமூச்சு விட்ட வெற்றி “இன்னும் டூ டேய்ஸ்ல நான் கேம்ப் கிளம்பிடுவேன். நீ கவனமா இரு. மாமாவை பார்த்துக்கோ… கால் பண்ணு. நான் எடுக்கலன்னா மெசேஜ் போடு. ஃப்ரீ டைம் பார்த்து நான் கால் பண்றேன்.” என்றான் யாழினியின் கையைப் பிடித்தபடி..

“ம்ம் சரி..” என்ற யாழினியின் விழிகள் விரிய, அவளின் விரிந்த விழிகளிலேயே தெரிந்தது. கர்னன் அவர்களை நோக்கி வந்து கொண்டிருக்கிறான் என்று.

“ம்ச்.. உன் அண்ணாவுக்கு எல்லாம் தெரியும்.. அமைதியா உட்கார்..” என வெற்றி அதட்டியதை கூட கண்டுகொள்ளாமல் வேகமாக எழுந்து நின்றாள் யாழினி.

“என்ன யாழி..?” என்றபடியே யாழினியின் அருகில் அமர்ந்து வெற்றியை புருவம் சுருக்கி பார்த்தான் கர்னன்.

“அது அதுண்ணா..” என இழுக்க,

“உங்களுக்கு எங்களைப்பத்தி தெரியும்னு சொல்லிட்டு இருந்தேன்..” என்றான் வெற்றி கடுப்பாக..

“ம்ம்.. உங்க தங்கச்சிக்கு மாப்பிள்ளை பார்க்கிறதையே கண்டுபிடிச்ச எனக்கு, என் தங்கச்சி என்ன செய்றான்னு கண்டுபிடிக்க முடியாதா?” என்றான் கர்னன் கிண்டலாக.

“ண்ணா..” என யாழினி அதிர்வாக பார்க்க,

“ம்ச் உட்கார்..” என்றவன் “எனக்கு வெற்றியை பிடிச்சதுனாலத்தான் இப்போ நீ அவன்கூட உக்காந்து பேசிட்டு இருக்க.” என்றான் தங்கையைப் பார்த்து..

அதில் இருவரும் அதிர்ந்து பார்க்க, “அப்போ உங்களுக்கு பிடிக்கலன்னா என்ன பண்ணிருப்பீங்க..” என அவனுக்கு எதிரில் வந்து நின்றாள் வல்லபி.

“வெரி சிம்பிள் கொஸ்டின்.. கண்டிப்பா பிரிச்சிருப்பேன். காரணம் வேணுமா என்ன? என் அம்மா போதும்..” என்றான் வல்லியைப் பார்த்து நக்கலாக சிரித்தபடி.

“ம்ச் என்ன பேசுறீங்க.. அவங்க ரெண்டு பேரும் விரும்புறாங்க. அவங்களை எப்படி பிரிக்கிறேன்னு சொல்றீங்க. அது ரொம்ப தப்பு. பாவமும் கூட..” என வல்லி பேச பேசவே வெற்றிக்கு கர்னனின் திட்டம் பிடிபட்டு போனது.

அப்படியே வல்லியிடமிருந்து கர்னனிடம் பார்வையைத் திருப்ப, “ஓ கண்டுபிடிச்சிட்டியா? போலிஸ் மூளை வேலை செஞ்சிடுச்சு போல.. நீ இவங்களை கூப்பிட்டு கிளம்பு. நான் வல்லிக்கிட்ட பேசிட்டு கூப்பிட்டு வரேன்..” என நிதானமாக கூற, வல்லிக்கு முகம் யோசனையில் சுருங்கியது.

“இல்ல.. இன்னைக்கு வேண்டாம்.. இன்னொருநாள் பேசுங்க..” என வெற்றி தடுக்க பார்க்க,

“உன் அண்ணன் லவ் சக்ஸஸ் ஆகனுமா? வேண்டாமா?” என வல்லியைப் பார்த்து கர்னன் கேட்க,

“வேணும்.. ஆனா அதுக்கும் எங்கிட்ட பேசுறதுக்கும் என்ன சம்மந்தம்..” என வல்லபி யோசனையாக கேட்க,

“ஹ்ம்ம் ஆமாமில்ல அதை யோசிக்காம விட்டுட்டேன்..” என்றவன் “யாழி நீ போய் அப்பாக்கூட இரு..” என்ற வார்த்தையில், யாரையும் நிமிர்ந்து பார்க்காமல் சென்றுவிட, வெற்றி வந்தனாவைப் பார்த்து ‘அவளோடு போ’ என்று கண்ணசைத்தான்.

வந்தனா யாழினியின் பின் செல்வதைப் பார்த்த கர்னன் “இங்க நடக்கிறதை யாருக்கிட்டயும் மூச்சு விடக்கூடாது ரைட்..” என இறுக்கமாக கூற, அந்த குரலில் வந்தனாவின் தலை தானாக சரியென்று ஆடியது.

அமர்ந்திருந்த நாற்காலியில் தலையை நன்றாக பின் சாய்த்து, சர்ட்டை நன்றாக இழுத்து விட்டவன், கால்மேல் கால் போட்டு, ஒரு கையால் தன் அடர்ந்த மீசையை வருடிக் கொண்டும், மற்றொரு கையால் மொபைலை சுழற்றிக் கொண்டும் “ம்ம்.. இப்போ சொல்லு.. நீ என்ன கேட்ட.?” என வல்லபியைப் பார்த்து நிதானமாக கேட்டான்.

கர்னனின் இந்த செயலில் வெற்றிக்கு ஆத்திரம் பொங்கியது. அதோடு தன்னை நிமிர்ந்தும் பார்க்காமல் கர்னன் கூறியதும், மறுப்பேச்சில்லாமல் அங்கிருந்து சென்ற யாழினியை நினைத்து கோபம் தாறுமாறாக ஏறியது.

மேலும் அவன் அமர்ந்து, அவர்கள் இருவரும் நின்றிருப்பது ‘ஏதோ தப்பு செய்துவிட்டு நிற்பது போல்’ தோன்ற, அதற்கும் பல்லைக் கடித்தான்.


“வல்லி.. நான் அங்க இருக்கேன்.. நீ பேசிட்டு வா..?” என இருவருக்கும் தனிமை கொடுத்து நான்கு டேபிள் தள்ளி அமர்ந்து கொண்டான் வெற்றி.

“எவ்ளோ நேரம் நின்னுட்டே இருப்ப.. உட்கார்..” என கர்னன் பெருந்தன்மையாக கூற,

“ம்ச்.. என்ன பிரச்சினை? எதுக்காக அண்ணாவை இவ்ளோ டென்சன் பண்றீங்க..” என்று சலிப்பைக் காட்டியபடியே அமர்ந்தாள்.

“எனக்கு என்ன வேண்டுதலா? அவன்கூட வம்பிழுக்க.. ம்ம் நீ ஓக்கே சொன்னா எல்லா பிரச்சினையும் சால்வ் ஆகிடும்..” என்றான் படு கூலாக..

“நான் என்ன ஓக்கே சொல்லனும்.. எதுக்கு..?” என புரியாமல் கேட்க,

“என்னோட உன் கல்யாணத்துக்கு ஓக்கே சொன்னா.. உன் வெற்றி அண்ணா காதல் கல்யாணத்துல முடியும்.. இல்லன்னா..?” என இழுக்க,

“வாட்..?” என அதிர்ந்தவள், அது கொடுத்த அதிர்ச்சியில் எழுந்து நின்றே விட்டாள் வல்லபி..
 
  • Like
Reactions: saru and Thadsayani