• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

முனைவர். கி. இலட்சுமி - ஒரு கல்.. ஒரு தாமரை..

Admin 01

Administrator
Vaigai - Tamizh Novelist (Admin Crew)
Jul 30, 2021
583
376
63
Tamil Nadu, India
ஒரு கல் ...ஒரு தாமரை...

இந்தியா ஆன்மிக பூமி...இங்கு அறிவியலும் ஆன்மிகமும் இணைந்தே வளர்ந்தன... மறைபொருளாக சித்தர்கள் பாடிய பாடல்களுக்குள் ஏகப்பட்ட அறிவியல் உண்மைகள் ஒளிந்துள்ளன. பிடிபடாத ரகசியங்களைத் தேடி அலைபவர் பலர். ஆனால் சித்தர்கள் குறிப்பிட்ட மூலிகைகள் சரியான நோக்கத்தில் பயன்படுத்தப்படவில்லை எனில் கெடுபலன்களே அதிகரிக்கும்.

நரேன் அலுவலகத்துக்குள் உற்சாகமாக நுழைந்தான். கிட்டத்தட்ட ஐம்பதுக்கு மேற்பட்ட நேர்முகத் தேர்வுகளில் தோல்வியுற்றபின் அவனுக்கு கிடைத்திருக்கும் வேலை இது. எப்படியாவதுஉழைத்து நல்ல பெயரை எடுக்க வேண்டும் .

தாம்பரத்தை அடுத்த ஆளரவமற்ற பகுதியில் பிரம்மாண்டமாய் தலைநிமிர்ந்து நின்றிருந்தது அந்த நிறுவனம். காலை நேரத்திலேயே ஊழியர்கள் பம்பரமாய் சுழன்று பணிபுரிந்து கொண்டிருந்தனர். வித்தியாசமான கலவையில் மாத்திரைகள் பச்சை நீலம் சிவப்பு வெள்ளை ...என உற்பத்தி ஆகிக்கொண்டிருந்தன. கீழ்ப்பகுதி நிலவறையில் ஆய்வுக்கூடம் இருந்தது. அங்கு செல்ல சிலருக்கு மட்டுமே அனுமதி உண்டு.

அலுவலகத்தின் மையப்பகுதியில் அமைந்த அறையில் பேராசிரியர் நிலநாகன் சக தோழர் கதிர்வேலுவுடன் உரையாடிக் கொண்டிருந்தார். இருவரும் ஓய்வுபெற்ற அறிவியல் துறை பேராசிரியர்கள்.தங்களது அறிவை மூலதனமாக வைத்து காருண்யா மருந்தக உற்பத்தி நிலையத்தை வெற்றிகரமாக நடத்தி வருகின்றனர்.

"எனக்கென்னமோ நம்ம திட்டம் சீக்கிரம் நிறைவேறும்ன்ற நம்பிக்கை வந்துருக்கு...அதுக்கேத்த ஆட்களைத்தான் தேடிப்பிடிச்சு வேலையில் அமர்த்தியிருக்கோம்... " இது நிலநாகன்.

"அதுசரி....அவங்களுக்கு இங்க எந்த சந்தேகமும் வந்துடக் கூடாது...அப்புறம் எல்லாமே சிக்கலாயிடும்... " கவலையுடன் சொன்னார் கதிர்வேலு.

"அப்படியெல்லாம் ஒண்ணும் நடக்காது...கைநிறைய சம்பளம்...அப்பப்போ எதிர்பாராத பரிசுன்னு கொடுத்துட்டே இருப்போம்...வேலைக்கு வந்தவுங்க அத்தனை பேரும் வாழ்க்கையில கஷ்டப்பட்டு முன்னுக்கு வந்தவுங்க..வேற எதைப்பத்தியும் யோசிக்க மாட்டாங்க...என்ன ரகசிய அறைக்குள்ள மட்டும் அவங்க நுழையாம பார்த்துக்கணும்...அங்கதானே ஒருகல்...ஒரு தாமரை திட்டம் செயல்படுது…"

"அதுக்குத்தான் மலைச்சாமியை காவலுக்கு போட்டிருக்கோமே...அவன் கண்கொத்தி பாம்பா எல்லாத்தையும் பார்த்துப்பான்…"

கதவு தட்டப்படும் சப்தம் கேட்டது...கணினித்திரையில் வெளியே நின்றிருந்த காவ்யாவின் உருவம் தென்பட்டது...வரலாம் என்பதாய் பக்கத்திலிருந்த பொத்தானை அழுத்த பச்சை நிறத்தில் ஒளிர்ந்த குறிகை விளக்கைப் பார்த்ததும் அறையினுள் நுழைந்தாள் காவ்யா.

"சார்...இன்றைய நிகழ்ச்சி நிரல் இதோ...காவ்யாவிடம் இருந்த கையடக்க கருவி உயிர்பெற்று நேரத்தோடு பணிகளை விவரித்தது…"புன்னகை ததும்ப தலையாட்டிய நிலநாகன் கதிர்வேலுவை திரும்பி பார்த்தார்.

"வாங்க...எப்படி வேலை நடக்குதுன்னு சுத்திப்பார்த்துட்டு நிலவறைக்கு போவோம்...காவ்யா நாங்க கீழே போனதும் யாரும் அந்தப்பக்கம் வரவிடாம பார்த்துக்க...சரியா பன்னிரண்டு மணிக்கு ஒருத்தர் வருவாரு...அவர் வந்ததும் ஒரு கல் ஒரு தாமரைன்னு சொல்வாரு...அவரை நிலவறைக்கு மலைச்சாமியோட அனுப்பிட்டு ஒளித்திரையில செய்தி அனுப்பு…"
காவ்யா தலையாட்டினாள். தனக்குள் சொல்லிப்பார்த்துக் கொண்டாள்..ஒரு கல்...ஒரு தாமரை...

நரேன் இருக்கையில் அமர்ந்து தனக்கு கொடுக்கப்பட்ட கணினியை உயிர்ப்பித்து பணிகளை செய்து கொண்டிருந்தான். நிலநாகன் மிக அருகில் வந்து உற்றுப்பார்த்து அவனை தட்டிக் கொடுத்தார்.

"அருமை...நரேன் வேலைகளை விரைவாக கத்துக்கிட்ட...இன்னும் வேகமா செயல்படு...அடுத்த நிலைக்கு உயர்த்திடறோம்... " நரேன் ஏதோ சொல்வதற்குள் அவனைத் தாண்டி இருவரும் வெகுதூரம் போயிருந்தனர். நரேன் மனதிற்குள் முதலாளிக்கு நன்றி சொல்லி பணியைத் தொடர்ந்தான்.

நிவறையின் சோதனைக் கூடத்தில் இருந்த கூண்டுக்குள் எலிகள் சுதந்திரமாய் உலவிக் கொண்டிருந்தன. தூக்கிப்போட்ட ரொட்டித்துண்டுகளை எலிகள் சீந்தவில்லை.
நிலநாகன் மகிழ்ச்சியோடு கதிர்வேலுவைப் பார்த்தார்.

"எதிர்பார்த்தபடி எல்லாம் நடக்குது...இப்ப போடற திட்டம் கைகூடுச்சுன்னா பல கோடிகளுக்கு மருந்தோட காப்புரிமையை வித்துட்டு எங்கேயாச்சும் கிளம்பிடலாம்..".

"இன்னைக்கு பன்னிரண்டு மணிக்கு வர்ற பன்னாட்டு முகவர்கிட்ட முதற்கட்ட பரிசோதனை வெற்றின்னு சொல்லி இந்த காட்சியை காண்பிக்கணும்...அப்பதான் நம்மமேல நம்பிக்கை வரும் " என்றார் கதிர்வேலு.

ஏறத்தாழ இரண்டு மாதங்களுக்குப் பிறகு...
சென்னையின் மையப் பகுதியில் அமைந்துள்ள பொது மருத்துவமனை. வழக்கத்துக்கு மாறாக மிகுந்த பரபரப்புடன் இருந்தது. ஐம்பதுக்கும் மேற்பட்ட குழந்தைகள் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்தனர். மருத்துவர் நிறைகொண்டான் தலைமையிலான மருத்துவக்குழு குழந்தைகளின் உயிரை மீட்க போராடிக்கொண்டிருந்தது.

காவல்துறை உயர் அதிகாரி சுயம்பு கவலையுடனும் அழுகையுடனும் அமர்ந்திருந்த காப்பகத் தலைவி வெண்ணிலாவை நெருங்கினார்.
"தொந்தரவுக்கு மன்னிக்கணும்...கொஞ்சம் தனியா வந்தீங்கன்னா நல்லாயிருக்கும்...உடனடியா வழக்கு பதிவு செய்து விசாரணை ஆரம்பிக்கணும்னு மேலிட உத்தரவு…"

வெண்ணிலா வழக்கமான கேள்விகளுக்குப்பின் பேச ஆரம்பித்தார்.

"என்ன நடந்துச்சுன்னு எனக்கு இதுவரையிலும் புரியல...மூணுநாளாவே சாப்பாட்டுலயும் விளையாட்டுலயும் அவங்க ஆர்வம் காட்டல...பசியில்லன்னு சாப்பிட மறுத்தவங்களை வற்புறுத்தி சாப்பிட வைச்சதும் வாந்தி எடுத்திருக்காங்க... அப்புறம் கொஞ்சநேரம் கழிச்சு வயிறு வலிக்குதுன்னு சொல்லி அழ ஆரம்பிச்சதும் மருத்துவமனைக்கு கூட்டிட்டு வந்துட்டோம்...பாதுகாப்பா சமைக்கப்பட்ட உணவைத்தான் குழந்தைகளுக்கு கொடுக்கிறோம்...ஏன் இப்படி ஆச்சுன்னு தெரியலை…"

அதே பதில் ...கிட்டத்தட்ட நகர் முழுதும் நூற்றுக்கணக்கான குழந்தைகள் இதே போன்ற அறிகுறிகளுடன் அனுமதிக்கப்பட்டுள்ளனர். காப்பக குழந்தைகள் மட்டுமின்றி வீடுகளில் உள்ள குழந்தைகளும் பாதிக்கப்பட்டுள்ளனர். மருத்துவக்குழு திணறிப்போய் நோய் என்னவென்றே தெரியாமல் போராடியபடி இருக்கிறது. பத்துக்கும் மேற்பட்ட குழந்தைகள் ஆபத்தான நிலையில் உள்ளனர். இரண்டு குழந்தைகளின் உயிரிழப்பை தடுக்க முடியவில்லை… அங்கெல்லாம் ஆய்வு செய்து விசாரித்தபோது என்ன பதில் கிடைத்ததோ அதையேதான் வெண்ணிலாவும் சொல்கிறார். விபரம் மேலிடத்துக்கு தெரிந்து அழுத்தம் கொடுக்க ஆரம்பித்து விட்டனர்.சமூக ஊடகங்கள் விதவிதமான கோணங்களில் பிரச்சினையை அலசத் தொடங்கியிருந்தன...

மருத்துவர் நிறைகொண்டான் மிகச்சோர்வாக வெளியில் வந்தார். சுயம்புவை தனியாக அழைத்துப் போனார்.

"இதோ பாருங்க சுயம்பு...இப்ப நடந்திட்டிருக்கிறது பெரிய விபரீதத்திற்கான அறிகுறியா எனக்குத் தெரியுது...பசங்க வயித்துல உணவு எதுவுமே இல்ல...ஆனா வலியில துடிக்கறாங்க...ஜீரண உறுப்புகள் பலமா பாதிக்கப்பட்டிருக்கு ...ஏதோ ஒண்ணு அவங்க உடம்புல இந்த பாதிப்பை ஏற்டுத்தி இருக்கு...அது என்னன்னு புரியலை...தெரிஞ்சாதானே அடுத்தகட்ட சிகிச்சையைத் தொடர முடியும்…"

"முயற்சி பண்ணுங்க ...வேணும்னா சிறப்பு மருத்துவக்குழுவை வெளியிடத்துலருந்து வரவழைக்கலாமா…"

"தாராளமா...நாங்க முடிஞ்ச அளவு முயற்சி பண்ணிட்டோம்...பலன்தான் இல்ல...கொஞ்சம் இருங்க ரெண்டு நாளைக்கு முன்ன இறந்த பையனோட வயித்துல வித்தியாசமா இருந்த அமில படலத்தை சுரண்டி ஆய்வக பரிசோதனைக்கு அனுப்பியிருக்கோம்...இன்னைக்கு முடிவு தெரிஞ்சுடும்...அதை வெச்சு மேற்கொண்டு என்ன செய்யறதுன்னு யோசிப்போம்…"

சற்று நேரத்தில் ஆய்வக அறிக்கை மருத்துவர் கையில்...பதினைந்து நிமிடங்கள் கூர்ந்து படித்தவர் நெற்றியில் வியர்த்தார்...

"குழந்தைகள் சாப்பிட்ட ஏதோ ஒண்ணு மூலமா யூரிக் அமிலம் அதிகமா சுரந்திருக்கு..சில குழந்தைங்க தண்ணீர் கூட குடிக்காம இருந்துருக்காங்க...பசியே இல்லைன்னும் சொல்லியிருக்காங்க... சுயம்பு இந்த அறிக்கையில இருக்கறது உண்மைனா...சிறுவர்களை குறிவெச்சு சத்தமில்லாம பெரிய பரிசோதனை நடக்குது...உடனடியா அதை தடுத்து நிறுத்தணும்... விசயம் வெளியே தெரிஞ்சா மக்கள் மத்தியில பெரிய அளவுல அச்ச உணர்வு வந்துடும்...அதனால உடனடியா களத்துல இறங்கி விசாரணையை தீவிரப்படுத்துங்க.."

சுயம்புவை அருகில் அழைத்து விவரத்தை சொல்ல... கேட்ட சுயம்புவுக்குள் பதற்றம் தொற்றிக் கொண்டது.
"உண்மையாவா ...பசியை தடுத்து நிறுத்தி உணவில்லாம சாதாரண மனிதனால வாழ முடியுமா…"

"இன்னைக்கு இருக்கற விஞ்ஞான வளர்ச்சியில எதுவும் சாத்தியம்தான் சுயம்பு...அந்த காலத்துல சித்தர்கள் சில வழிமுறைகளை பின்பற்றி வருசக் கணக்குல சாப்பிடாம இருந்ததா சொல்றாங்க...நீங்க நான் சொன்ன கோணத்துல விசாரிங்க..அப்பதான் நடக்கப்போற பேராபத்தை தடுத்து நிறுத்த முடியும்.."

சரியான பிடி கிடைத்திருக்கிறது...கொஞ்சம் புத்திசாலித்தனமாகச் செயல்பட்டால் குற்றவாளி யாரெனத் தெரிந்து விடும்.

சுயம்பு உடனடியாக தனது குழுவுடன் ஆலோசனையில் ஈடுட்டார்..
"சிவநேசன் தீவிரமா விசாரிங்க... .இந்த மாதிரி பாதிக்கப்பட்டவங்க வீட்ல வெளியில இருந்து வாங்கப்பட்ட உணவுகள் நொறுக்குத் தீனிகள் பத்தின விவரங்களை கேளுங்க...அதோட மாதிரிகளை எடுத்துட்டு போயி பரிசோதனை பண்ணுங்க ..
எங்கயாவது சின்ன தடயம் கிடைக்கும்...அதிலும் குறிப்பா குழந்தைகள் காப்பகத்துல மொத்தமா குழந்தைகளுக்கு கொடுக்கப்பட்ட உணவுப்பொருட்களை சோதிச்சு பாருங்க...அருள்நிதி நீங்க சிவநேசனோட போங்க...இருபத்திநாலு மணி நேரத்துக்குள்ள எனக்கு உபயோகமான தகவல் கிடைச்சாகணும்... " சுயம்புவின் கட்டளையை ஏற்று அனைவரும் களத்தில் இறங்கினர்.

சுயம்புவுக்கு மேலும் சில விவரங்கள் தேவைப்பட்டன...இணையத்தை நோண்டியபோது தகவல்கள் குவிந்தன... அதில் கல்தாமரை என்னும் பெயரைப் பார்த்ததும் வித்தியாசமாக இருந்தது...சிறிது நேரத்தில் நீண்டகால சித்த மருத்துவ நண்பர் நம்பியை அலைபேசியில் அழைத்தார். நேரடியாக கல்தாமரையைப் பத்தி சொல்லுங்களேன் என்றதும் முழுவதுமாய்க் கொட்டித் தீர்த்தார் நம்பி…

"நான் சொன்னதெல்லாம் உண்மைதான்...ஆனாலும் மருத்துவர் ஆலோசனை இல்லாம இந்த மூலிகையை இதுக்காக பயன்படுத்தறது தப்பு...ஆபத்தும் கூட…"
சுயம்புவின் முகம் இறுகியது...

"சார் நீங்க சொன்னபடி தீவிரமா விசாரிச்சோம்...குறிப்பிட்ட வகை
சாக்லேட்டை பாதிக்கப்பட்ட எல்லா குழந்தைகளும் சாப்பிட்டிருக்காங்க... அதை உறுதிப்படுத்திட்டோம்...அந்த நிறுவனத்துலயும் ஆய்வு பண்ணிட்டோம்...அவங்களோட சாக்லேட் தரமானதுதான்...அதுல எதுவும் கலக்கப்படலைன்னு அடிச்சு சொல்றாங்க ... ஆய்வு முடிவுகளும் அதையேதான் சொல்லுது...இருந்தாலும் அந்த சாக்லேட் விற்பனையை நிறுத்தி வைக்க சொல்லியிருக்கோம்…"

அருள்நிதி முன்னே வந்தார்…
"ஒரு இடத்துல குழந்தைங்க சாப்பிடாம இருந்த அதே நிறுவனத்தின் சாக்லேட்டை பரிசோதனை பண்ணதுல வேற மாதிரி முடிவு வந்துருக்கு...அதை நீங்களே பாருங்க...இன்னொரு முக்கியமான விசயம் நான்கைந்து காப்பகங்களை சேர்ந்த குழந்தைகள் பாதிக்கப்பட்டாங்க இல்லையா...அங்க விசாரிச்சதுல சாக்லெட்களை மொத்தமா கொண்டுவந்து கொடுத்த நபரைப் பத்தி தகவல் கிடைச்சிருக்கு... குழப்பமான செய்தியும் இருக்கு... இதெல்லாம் கொடுத்த நபர் ஒருத்தரே கிடையாது...வேற வேற நபர்கள்..ஆனாலும் ஒரே வகை சாக்லேட்டைத்தான் கொடுத்திருக்காங்க... சந்தேக வரிசையில நாலுபேர் சிக்கியிருக்காங்க... கூட்டிட்டு வந்து நம்ம பாணியில விசாரிப்போமா…"

"அருள்நிதி அவசரப்படாதீங்க... குற்றவாளிகளை வளைச்சுப் பிடிக்கணும்... தப்பிக்க விடக்கூடாது...எனக்கு அரைமணி நேரத்துல சந்தேக வரிசையில சிக்கின நபர்களைப் பத்தின தகவல்கள் வேணும்…"

நரேன்...காவ்யா...ஓவியா...வண்ணநிலவன் அத்தனை பேரைப்பற்றியும் ஆதி முதல் அந்தம் வரை தகவல்கள் குவிக்கப்பட்டன...கணினியில் அவர்களைப் பற்றிய தகவல்களைப் பார்த்துக் கொண்டே வந்தவர் முகத்தில் ஓரிடத்தில் ஆச்சரியக்குறி தோன்றியது.

"அருள்நிதி...சிவநேசன் ...நாம உடனடியா ஒரு இடத்துக்கு போயாகணும்...அதுக்கு முன்னாடி வழக்கமான அனுமதியை வாங்கிடுங்க...பலமான ஐயம் இருக்கு ....பரிசோதனை பண்ண முன்உத்தரவு வேண்டும்...சீக்கிரம் நாம போறது இரகசியமா இருக்கட்டும்…"
அதே நேரத்தில் மருத்துவமனையிலிருந்து சுயம்புவுக்கு தகவல் வந்தது.
"சார் நீங்க சொன்னது போல குழந்தைகளைப் பார்க்க ஒருத்தர் வந்துருக்கார்...வெண்ணிலா அம்மாகிட்ட பேசிகிட்டிருக்கார்…" குழுவை தயார் நிலையில் இருக்க சொல்லிவிட்டு மருத்துவமனைக்கு புறப்பட்டார் சுயம்பு.

காருண்யா மருந்தக தயாரிப்பு நிறுவனம்...நரேன் கைகால்கள் கட்டப்பட்ட நிலையில் அரை மயக்கத்துக்கு உட்படுத்தப்பட்டிருந்தான்...காவ்யாவும் அதே நிலையில் சற்றுத்தள்ளி...

"மன்னிச்சுடு நரேன் ...நீ எங்களை மோப்பம் பிடிச்சுட்ட... நிலவறைக்குள்ள அனுமதியில்லாம நுழைஞ்சு நடக்கற விசயங்களை தெரிஞ்சுகிட்ட..உனக்கு காவ்யாவும் உதவி பண்ணியிருக்கா...உணவு இல்லாம மனிதனால வாழ முடியுமா...பசின்ற உணர்வை தடுக்க முடியுமா..இந்த கேள்விகளுக்கு விடைதேடி அறிவியல்ரீதியா சோதனைகள்ல இறங்கினோம்...அப்பதான் கல்தாமரை மூலிகை பத்தி தெரிஞ்சது...இந்த மூலிகைய தண்ணியில ஊறவெச்சு குடிச்சா எவ்வளவு மணிநேரம் தண்ணியில ஊறுதோ அவ்வளவு மணிநேரம் பசிக்காதாம்...அதுகூட பசி உணர்வுகளை மறக்கடிக்க சில செயற்கை இரசாயனங்களைச் சேர்த்து மாத்திரை தயாரிச்சோம்...எத்தனை மாத்திரை சாப்பிடறோமோ அத்தனை மாசம் பசிக்காது...தொடர்ந்து மாத்திரைகளை எடுத்துகிட்டா பசி உணர்வே இருக்காது...அதுக்கப்புறம் வாழ்நாள் முழுதும் உணவு சாப்பிட வேண்டிய தேவையில்லை...முதல்ல எலிகளுக்கு அந்த மாத்திரைகளை கொடுத்தப்போ நல்லாவே வேலை செஞ்சது...அடுத்த கட்டமா சின்ன வயசு பசங்களுக்கு அதை கொடுத்து பரிசோதிக்க முடிவு செஞ்சோம்...மருந்தை விலைகொடுத்து வாங்க பன்னாட்டு நிறுவனங்கள் தயாரா இருந்தாங்க... ஆனாலும் மெய்ப்பிச்சு காண்பிக்க சொன்னாங்க...உறவுகள் இல்லாம அனாதை இல்லங்கள்ல வளர்ந்த உங்களை வேலைக்கு தேர்ந்தெடுத்தோம்... மருந்தகத்துல ஆண்டுவிழான்னு காரணம் சொல்லி குழந்தைகளுக்கு உணவுப்பொட்டலத்தோட சாக்லேட்களை கொடுத்துவிட்டோம்... இதுக்காக குறிப்பிட்ட வகை சாக்லேட் உறைகளை போலியா உருவாக்கி அதுக்குள்ள மருந்து கலந்த சாக்லேட்களை இங்கேயே தயாரிச்சோம்...சந்தேகம் வரக்கூடாதுன்னு சில விற்பனையகங்கள்லயும் கடையில வேலை செய்ற நபர்களை பயன்படுத்தி சாக்லேட்களை மாத்தி வெச்சோம்...கொடுத்த இடங்கள்ல எங்க ஆட்கள் மூலமா கண்காணிப்பு தொடர்ந்துகிட்டே இருந்தது..சாக்லேட் சாப்பிட்ட மூணுநாட்கள்ல பசங்க பசியை மறந்துட்டாங்க...ஆனா கொடுத்த மருந்து எதிர்மறையா செயல்பட்டு குழந்தைகளோட சிறுநீரகம்... கல்லீரல் ...வயித்துல இருக்கற ஜீரண உறுப்புகளை தாக்கி செயலிழக்க வெச்சுடுச்சு...உங்களோட சந்தேகப்பார்வை எங்கமேல விழுந்துடுச்சு… இன்னும் கொஞ்சநேரத்துல அதே மருந்தை ஊசி மூலமா உங்களுக்கு செலுத்திட்டு நாங்க தப்பிச்சு போகப்போறோம்…"

பயந்துபோய் நரேனும் காவ்யாவும் ஒருவரையொருவர் பார்த்துக்கொண்டனர்.
நிலநாகனும் கதிர்வேலுவும் அவர்களை நெருங்கிய வினாடியில் கதவு திறந்து உள்ளே நுழைந்தனர் சுயம்புவும் அவரது குழுவினரும்...

"நன்றி பேராசியரே...அற்புதமான சுயவிளக்கம்...நீங்க பேசினதை காணொளியா எல்லோரும் பார்த்துட்டிருக்காங்க...முதல்ல நரேன்.. காவ்யா ...ஓவியா...வண்ணநிலவன் மேலதான் எங்க சந்தேகம் இருந்துச்சு....எதிர்பாராதவிதமா அவங்கள பத்தின தகவல்களைத் திரட்டினப்போ அவங்க எல்லோரும் இந்த காருண்யா மருந்தகத்துல வேலை பார்க்கறாங்கங்கற தகவல் நெருடலா இருந்துச்சு...அதுவும் பெற்றோர் இல்லாம காப்பகத்துல வளர்ந்து ஆளானவங்கன்ற கூடுதல் தகவலும் கிடைச்சது...அப்பதான் நரேன் காப்பக குழந்தைகளைப் பார்க்க மருத்துவமனைக்கு வந்தாரு...அவர்கிட்ட பேசினபோது எந்த தப்பும் தெரியல...விசாரிச்சப்போ சாக்லேட் பிரியாணி புதுத்துணி கொடுத்து கொடுக்கச் சொன்னது நீங்கதான்னு சொன்னாரு... நாங்க சொல்லிக் கொடுத்த திட்டப்படி நடந்துகிட்டாரு...நீங்க வசமா மாட்டிக்கிட்டீங்க... ஓவியாவும் வண்ணநிலவனும் உங்க திட்டம் தெரிஞ்சும் பணஆசையில கூட்டு சேர்ந்துகிட்டு குழந்தைகளுக்கு சாக்லேட்களை கொடுத்திருக்காங்க...இப்ப மலைச்சாமியும் எங்க பாதுகாப்புல பத்திரமா இருக்காரு… மனிதகுலத்துக்கு எதிரா அறிவியலை தப்பா பயன்படுத்தியிருக்கீங்க... பசி ..வலி... கண்ணீர் இதெல்லாம் இல்லைன்னா மனிதன் மனிதனே இல்லை...ஒண்ணும் தெரியாத குழந்தைகளை உங்க பணஆசைக்கு பலிகடா ஆக்கியிருக்கீங்க... இறந்த குழந்தைகளோட உயிருக்கு நீங்க பதில் சொல்லியே ஆகணும்... நல்லவேளையா மருத்துவர்கள் மாற்று மருந்து கொடுத்து குழந்தைகளை சாவோட விளிம்பில இருந்து மீட்டெடடுக்க ஆரம்பிச்சுட்டாங்க...கிளம்புங்க முதல்ல ...இனி வாழ்க்கை முழுசும் உங்களுக்கு சிறைவாசம்தான்…" சுயம்பு சொல்ல சொல்ல தலையைத் தொங்க போட்டபடி நடக்க ஆரம்பித்தனர் இருவரும்...

***

நன்றி.