• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

முன்னோட்டம்

Ezhilmathi GS

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jul 24, 2025
48
0
6
Tamilnadu
அவள் சோறுண்டு முழுதாக எட்டு நாளாகிறது. மானங்கெட்ட வயிறு தண்ணீரையும் எச்சிலையும் மாறி மாறி விழுங்கிக் கொள்கிறது. அதனாலேயே அவளின் கண்கள் இன்னும் ஈரத்தில் மிதக்கின்றன. அத்தைமார்களும் தாய்மார்களும் பாட்டிமார்களும் அவளின் வாயில் சோற்றை வைத்து அழுத்த, அது வாந்தியாக மீண்டும் மீண்டும் வெளிவந்தது. சமயங்களில் குடிக்கும் ஒரு மடக்கு நீரும் விதி விலக்கில்லாமல் குமட்டிக் கொண்டு வெளியேறியது. உண்ணாமல் உறங்காமல் விழிகளைச் சுற்றி கருப்படித்திருந்தது. உடலில் வலுவே இல்லாமல் துவண்டு ஓர் அறையின் முடுக்கில் சரிந்திருந்தாள்‌‌. நேற்றிரவு வைக்கப்பட்ட சோறு உண்ணப்படாததால் அழுகி நாற்றம் வீசியது. அதில் சில வகைப் பூச்சிகள் வந்தமர, அவற்றை உணர்ச்சியற்று கூர்ந்திருந்தாள் அவள். அவளுக்கு அருவெறுப்பு கூட எழவில்லை. அவற்றில் இரு பூச்சிகள் கூடி இணைய அது அவளிற்கு அவனை ஞாபகப்படுத்தியது. இந்தச் சின்னஞ்சிறு பூச்சிகளுக்கு இருக்கும் சுதந்திரம் அவளிற்கு வாய்க்கவில்லை. அந்நேரம் தடார் எனக் கதவைத் திறந்து கொண்டு வந்தார்கள் நான்கு பெண்கள். அவர்களின் வேகத்திற்கு பூச்சிகள் பயந்து பறந்தோடிப் போயின. இதே போல் தான் அவர்கள் அவளின் கதலையும் திணறடிக்கிறார்கள்; சிறகை உடைக்கப் பார்க்கிறார்கள். அங்கு வந்த நால்வரும் பிணத்தைச் சூழ்ந்தழும் மாந்தர்களைப் போல ஒப்பாரி வைத்தனர்; தொடர்ந்து அவளைத் திட்டித் தீர்த்தனர். அவள் அத்துணை பெரிதாய் என்ன காரிய செய்திருக்கக் கூடும்! ஓ… அவள் காதல் எனும் பாவத்தைப் புரிந்தவள். அவர்களின் கணக்கில் காதல் ஒரு பாவக் கணக்கு. அதுவும் இல்லாமல் அவள் காதலிக்கும் ஆண் அவர்களால் ஆண்டாண்டு காலமாகக் கட்டிக் காக்கும் சமூகக் கட்டமைப்பில் அவன் பொருந்தவில்லை. எனவே, அவள் புரிந்தது பாவத்திலேயே பெரும்பாவம்.

***​

அவர்களின் முதலிரவு முடிந்து நான்கு நாட்கள் ஆகிறது. அவன் அவளைப் பேருக்கும் சீண்டுவதில்லை‌‌. அவள் அவனை நிமிர்ந்து கூட பார்ப்பதில்லை. இருவரும் ஒரு வீட்டில் வசித்தனர்; ஒரே அறையில் வாசம் செய்தனர். இருந்தபோதும் ஒருவரின் நிழல் மற்றவரைத் தீண்டவில்லை. ஒருவர் சுவாசித்து வெளியிட்ட காற்றை மற்றவர் சுவாசிப்பதில்லை. ஆனால், அவ்விருவரும் ஊரார் முன்னிலையில் மணமுடித்த கணவன் - மனைவி.

“இப்படியே போனா நம்ம குடும்ப மானம் கப்பலேறிடும். நான் அப்பவே சொன்னேன். இந்தப் பொண்ணு நம்ம அண்ணனுக்கு வேண்டாம்னு தலைப்பாடா அடிச்சுக்கிட்டேன். யார் கேட்டீங்க? எங்கயோ கிடந்த தரித்திரத்தைப் புடிச்சு நம்ம தலையில கட்டி வச்சுட்டாங்க‌. இது இணங்கி வாழவும் மாட்டேங்குது. எங்கயும் போய் ஒழியவும் மாட்டேங்குது. நம்ம அண்ணன் வாழ்க்கைல்ல இப்ப நாசமா போச்சு. இன்னும் எத்தனை நாளைக்குத் தான் விட்டுப் பிடிப்பீங்க? அந்தக் களவாணிப் பய மகன் வந்து அவளைக் கூட்டிட்டு ஓடுற வரைக்குமா?” என்று அங்கலாய்த்தாள் புது மாப்பிள்ளையின் அக்காள்காரி.

“ஏன்டி நீ வேற வெந்த புண்ணுல வேலைப் பாய்ச்சுற? கல்யாணம் முடிச்சா எல்லாம் சரியாய்டும். நாலு நாள் போனா பழசலாம் மறந்துடுவாளுங்கன்னு ஒரு கேனைக் கிறுக்கி சொன்னா. இவ எதையும் மறக்குற மாதிரியே தெரியலயே. மூஞ்சு வெளுப்பைப் பாத்து மயங்கிட்டேன். மனசு கல்லால்ல இருக்கு”

“உன் புள்ள ஏதோ பொட்டிப் பாம்பாட்டாம் அடங்கில்ல கிடக்கு. அது குரலுசத்துனா தான இவ புத்தி தெளியும்”

“அவளோட காதல் கன்றாவியப் பத்தி சொல்லலைனு அவனே கோவமா இருக்கான்டி. எப்போ, எதைக் கொண்டி அடிப்பானோன்னு நானே கலவரத்துல இருக்கேன். அவன்ட்ட ஒரு வார்த்தை பேசறதுக்கே தொண்டை வரளுது”

“ம்க்கும்” என்று இவள் அலுத்துக் கொண்ட நேரம் கழிவறைக் கதவைத் திறந்து கொண்டு அவள் வந்தாள்; மகாலட்சுமி. அழுது சிவந்த விழிகளை மறைத்துக் கொண்டு அவள் தங்களது எல்லைக்குள் நுழைய முனைய, நாத்தனாரான இவள் அடாவடியாக இடைப்புகுந்தாள் “ஹேய்! நில்லு”

அவள் தரை நோக்கி இரு கைகளாலும் இரவாடையைக் கசங்கடித்தவாறு ஒடுங்கி நிற்க, இவளின் அழிச்சாட்டியம் துர் அவதாரமெடுத்தது.

“இங்க நாங்க ரெண்டு பேர் குத்துக் கல்லாட்டம் நின்னுட்டு இருக்கோம். நீ பாட்டு வர, போற.‌ இனிமே இதான் நீ வாழப் போற வீடு. தெரியும்ல? இங்க உனக்கு முன்னாடி இருந்தே நாங்க குப்பை கொட்டிட்டு இருக்கோம். எங்களுக்கான மரியாதையைத் தர மாட்டியா? நாங்க கேட்டு வாங்கணுமா? உங்க வீட்டுல இதெல்லாம் சொல்லிக் கொடுத்தாங்களா, இல்லையா?”

அவள் கைவிரல்களைத் திருகிக் கொண்டு பரிதாபமாக நிற்க, மாப்பிள்ளை வீட்டினருக்கு சிறிதும் மனம் இளகவில்லை.

“இந்தாம்மா, வாயைத் திறந்து ஏதாவது பேசேன். ஏதோ ஊமை மாதிரி நின்னுட்டுருக்க” என்று எகிறினார் மாமியார்.

“இந்தத் தரங்கெட்டவள வீட்டுக்குக் கூப்டு வந்ததே தப்புமா. ஏற்கனவே ஒரு காதோல் பண்ணி கலங்கமானவம்மா இவ. விஷயம் தெரிஞ்சவுடனயே இவளை வெட்டிப் போட்ருக்கணும். நல்லவேள நீ என் தங்கச்சியா பொறக்கல. பொறந்திருந்தீனா, மவளே…” இவள் நாவைத் துருத்தி மிரட்டினாள்.

அதையும் அவள் கண்கொண்டு பாரவில்லை.

“செவுடி, உன்கிட்ட தான்டி பேசிட்டு இருக்கேன். அம்மா, நான் பேசுறதைக் காதுலயே வாங்க மாட்றாம்மா. இவளுக்கு எவ்ளோ நெஞ்சழுத்தம் இருக்கும்!” இவளின் ஆவேசம் வெள்ளப் பிரவாகம் போல நொடிக்கு நொடி அதிகரித்தது.

“என் புள்ள வாழ்க்கைய அழிச்சிட்டாளே, பாவி! நீயெல்லாம் நல்லா இருப்பியா? ஆயிரம் ஆயிரம் கனவோட கல்யாணம் பண்ணானே. அவன் வாழ்க்கைல மண்ணள்ளிப் போட்டுட்டாளே” அவர் எரிகிற தீயில் தாராளமாக நெய் வார்த்தார்.

“அம்மா, அழாதம்மா.‌ தப்பு செஞ்சவ அவ. அவளே சிலையாட்டம் நிக்கிற. உனக்கென்ன விதியா? இவளை வழிக்குக் கொண்டு வரவும் அண்ணன் வாழ்க்கைல விளக்கேத்தவும் ஒரே உத்தி தான். இதுக்கு மேல விட்டா நிலைமை மோசமாயிடும்” என்று இவள் பேச, தானாகவே லட்சுமியைக் கிலி பிடித்தது.

அடுத்த நிமிடம் அவள் அறைக்குள் தள்ளப்பட்டு கதவடைக்கப்பட்டாள் நிர்வாணமாக. அவளின் வீறிடலில் அலைபேசியில் உரையாடியபடி இருந்த குமார் திரும்பிப் பார்க்க, அவள் தீயில் விழுந்தவள் போல துடித்துக் கொண்டிருந்தாள்.

***​