• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

முரடன் 10

NiviAmmu

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jul 26, 2024
45
26
18
Tamilnadu
நேற்று முழுக்க தண்ணீர் பாய்ச்சியதில் கார்த்திகா கை, கால்கள் வீங்கி போய் படுத்திருந்தாள் ஒரு நாளைக்கே இப்படி இத்தனை வருடங்களாக செய்த முல்லைக்கு எப்படி வலித்து இருக்கும்.

உலகு மூன்று மணிக்கு எழுந்து குளித்து முடித்து வந்தார் குளிக்காமல் காலையில்

பெரிய வீட்டுக்கு வரவும் கூடாது தண்டைக்கு உரிமையானவர்களை பார்க்கவும் கூடாது என்பது எழுதப்பட்ட விதி. ஊரே தூங்கிக் கொண்டிருக்க வழிந்த கண்ணீரை துடைத்த படி வந்தவள், தனக்கு முன்பு எழுந்து மாட்டு கொட்டகையை சுத்தம் பண்ணும் தன் மாப்பிள்ளையை கண்டாள்.



“என்ன என்னத்தை பார்த்துட்டே நிக்கிற, எஜமானி நாலு மணிக்கு எழுந்து வந்துடுவா, சீக்கிரம் வேலையை முடி.” என்று கடுப்படித்தவன் தன் வேலையை துவங்கினான்.

நேற்று கணவனிடம் வாங்கிய அடியில் கன்னம் ஒரு பக்கம் வீங்கி இருந்தது இதில் மகன் வேறு எவ்வளவு முடியுமோ அவ்வளவு கேவல படுத்தி இருந்தான். அழுது கொண்டே வாசலை சுத்தம் செய்து வராத கோலத்தை போட்டவள் அவ்வளவு பெரிய இடம் முழுவதையும் சுத்தம் செய்தாள்.


கம்பன் பூக்கள் பறித்துக் கொண்டே உலகை நக்கலாக கண்டான் தினமும் இதே நேரத்தில் முல்லை அவள் வீட்டில் இப்படி தான் வேலை செய்வாள் இன்று அதே வலியை அவள் தாய்க்கு தந்து இருக்கிறான் ஈஸ்வரன். அடித்து இருந்தால் கூட சில நொடி வலிகளுடன் மறைந்து போய் இருக்கும் ஈஸ்வரனின் வழி தான் சரி என்று தோன்றியது கம்பனுக்கு.


முல்லை எழுந்தவள் முதலில் தன் தலைமாட்டில் இருந்த நோட்டை எடுத்து ஆசையாக பார்த்தாள். நேற்று முதல் முதலில் கல்வி கற்க துவங்கிய நோட்டு அவள் எழுதி பழகிய நோட்டு அதை எடுத்து பத்திர படுத்தி வைத்தவள் குளிக்க தேவையான துணிகளை எடுத்துக் கொண்டு கீழே இறங்கினாள்.


தன் தாய் வேலை செய்வதை கண்டவள் வேண்டாம் என்றும் சொல்லவில்லை, தடுக்கவும் இல்லை அமைதியாக கடந்து சென்றாள். அவள் அவ்வாறு செய்வதை கண்ட உலகு முல்லையை முறைத்து பார்த்துக் கொண்டிருந்தார்.


முல்லை குளித்து முடித்து இன்று மஞ்சள் வண்ண அழகிய பூக்கள் போட்ட சேலையில் வெளியே வந்தாள். தங்கள் அறைக்கு சென்று அதற்கு பொருத்தமான கண்ணாடி வளையல் போட்டு கூந்தலை சீர் செய்து கொண்டை போட்டவள் இன்று மற்றொறு கொண்டை ஊசியை சொருகிக் கொண்டு கீழே இறங்கினாள்.

மயான அமைதியான வீட்டில் முல்லையின் சலங்கை சத்தமும், வளையல் சத்தமும் சங்கீதம் பாடி, நடனம் ஆடியது. முல்லை சலங்கை சத்தம் கேட்டதும் பால் குடத்தை வேகமாக தூக்கி வந்து திண்ணையில் வைத்தான் ராஜேந்திரன்.


முல்லை கோவிலுக்கு தனியாக பிரித்து முதலில் எடுத்து வைத்தவள் அதன் பிறகே வீட்டுக்கு எடுத்தாள்.

இன்று அவளுக்கு எந்த வேலையும் இல்லையே அனைத்தையும் உலகு முடித்து வைத்திருந்தார்.

“முல்லை இந்தாம்மா பூ.”


“அண்ணா டீ வேணுமா?”


“வேண்டாம் முல்லை மோர் குடிச்சிக்கிறேன்.” என்றவன் வழமையான இடத்தில் தியானத்தில் அமர்ந்தான்.


ஐந்து மணிக்கு உலகு கோவிலுக்கு சென்று வேலை செய்ய, அந்நேரம் ஊரே எழுந்து விடும் உலகை கண்டு, “இவளுக்கு இது வேணும் இன்னும் கூடுதல் தண்டனை குடுத்து இருக்கணும் ஐயா விட்டுட்டாரு.” என்று பேசிக் கொண்டனர். மிகவும் அவமானமாக உணர்ந்தாள் உலகு.


இன்று ஈஸ்வரன் காலையே தோட்டத்துக்கு செல்லாமல் கொடியை பார்த்த படி அமர்ந்து இருந்தவன், “கொடி கிளம்பு வயலுக்கு போகலாம்.” என்றான்.

சரி என தலை அசைத்தவள் புடவையை சரி செய்து கூந்தலை மீண்டும் ஒதுக்கி கொண்டு வெளியே வந்தவளை, “நில்லு கொடி உன்னுடைய செருப்பு எங்க?

கால்ல போட்டுட்டு படி தாண்டி இறங்கு.”

முல்லை முதல் முதலில் காலில் செருப்பு அணிந்தாள். அவள் காலுக்கு கச்சிதமாக பொருந்தியது அழகாகவும் இருந்தது. மனதில் திருப்தி பட்டுக் கொண்டவன், “இங்கேயே நில்லு வரேன்.” என்று அங்கிருந்த கொட்டகைக்குள் சென்றவன் வெளியே வரும் போது அவன் தாத்தாவின் புல்லட்டை தள்ளிக் கொண்டு வந்தான். முல்லை கண்கள் விரிய ஆச்சர்யமாக கண்டவள், “மாமா சரி பண்ணிடீங்களா?”

“பண்ணிட்டேன் கொடி என்றவன் புல்லட்டில் அமர்ந்து அதை ஸ்டார்ட் செய்ததும் வா வந்து பின்னாடி உக்காரு.” கொடி அதில் அமர தெரியாமல் தடுமாறினாள். அவள் முகம் சட்டென்று வாடி விட, “என்ன ஆச்சி?”

“மாமா நான் இதுவரைக்கும் வண்டில உக்காந்தது இல்ல, நீங்க போறீங்களா?

நான் நடந்து வரேன்.”


“முடியாது உக்காரு.” என்றான் விடாப்பிடியாக.

“முதல்ல என் கையை பிடிச்சி கிட்டு அங்க கால் வைக்கிறதுக்கு ஒரு கம்பி இருக்கு பாரு அதுல கால் வை அடுத்து தோள்லை பிடிச்சுகிட்டு உக்காரு. உக்காந்ததும் என்ன இறுக்கமாக பிடிச்சிக்கோ இல்லைன்னா கீழ விழுந்துடுவ, பழகுனதும் பிடிக்காமல் உக்காந்துக்கலாம் புரியுதா?”

கொடி தலை அசைத்தவள் அவன் கூறியது போலவே அமர்ந்தாள். ஆனால் கொஞ்சம் இல்ல ரொம்பவே பயமாக இருக்க இரு கைகளால் ஈஸ்வரன் இடுப்பை இறுக்கமாக பிடித்துக் கொண்டாள் அவனை நெருங்கி அமர்ந்து.


ஈஸ்வரன் முதுகு சட்டென்று நேரானது அவளின் மேனி பட்டு புல்லட் கண்ணாடியில் அவள் முகம் பார்த்து உதடு வளைத்தவன் புல்லட்டை கிளப்பிக் கொண்டு சாலையில் இறங்கினான்.


கம்பன் கூறியது உண்மை தான் அந்த புல்லட்டில் செல்லும் போது தனி கம்பீரமாக இருந்தது மரியாதையாகவும் இருந்தது. புல்லட் சத்தம் கேட்டதும் அனைவரும் வியந்து பார்த்து வணங்கி ஒதுங்கி சென்றனர். அதிலும் பின்னால் அமர்ந்து இருக்கும் முல்லை மீது தான் பலரின் கண்கள் ஆச்சர்யமாக பட்டது. ஈஸ்வரின் மீது மரியாதை கூடியது.


தோப்பு சாலையில் புல்லட் இறங்க வழி முழுவதும் வேலை செய்த அனைவரும் இருவரும் ஆச்சரியமாக பார்த்தனர். கொடிக்கு ஒரு மாதிரி ஆனது ஈஸ்வரன் முதுகில் லேசாக சாய்ந்தது போல் அமர்ந்து கொண்டாள். அவனை தொடவோ, நெருங்கவோ அவள் தயங்க வில்லை. அதற்காக ஆசையில் அவனை நெருங்க வில்லை.


தென்னந்தோப்பில் புல்லட்டை நிறுத்தி விட்டு, “கொடி என்னை பிடிச்சுகிட்டு மெதுவாக இறங்கு.” என்றான். கொடி நிதானமாக இறங்கியவள் நிமிர்ந்து பார்க்க கம்பன் கண்களில் மகிழ்வுடன் இருவரையும் பார்த்துக் கொண்டிருந்தான், அவன் அருகில் நின்று இருந்த முல்லை குடும்பம் இருவரையும் கோவமாக பார்த்துக் கொண்டு நின்று இருந்தனர்.


“வணக்கம்மா, வணக்கம் ஐயா.” என்று தோப்பில் இருக்கும் அனைவரும் வணங்கி நிற்க முல்லை அப்பா நாற்காலியில் கால் மேல் கால் போட்டு அமர்ந்து இருந்தார் ஈஸ்வரனை முறைத்தபடி.


ஈஸ்வரன் பார்வை முழுவதும் திமிராக அமர்ந்து இருக்கும் முகில்வாணன் மீது தான் நிலைத்து இருந்தது.


“முகில்வாணன் எழுந்துரு ஐயா வராங்க.” என்று ஒருவன் கூற, “வரட்டும் டா அவன் என் வீட்டு மாப்பிள்ளை அது மட்டும் இல்லாமல் நான் அவன் குடும்பத்தில் தான் பொண்ணு எடுத்து இருக்கேன் அவன் தான் எனக்கு மரியாதை தரணும்.”

அவரின் திமிரான பேச்சு ஈஸ்வரன் காதில் தெளிவாக விழுந்தது.

“கம்பா எதுக்கு இவுங்க எல்லாரும் வேலை செய்யாமல் இங்க இருக்காங்க, அதுவும் சேர் போட்டு உக்காந்திருக்காங்க?”

“நான் சொல்லிட்டேன் ஈஸ்வர் இவுங்க யாரும் போக மாட்டேன்னு சொல்லுறாங்க.”

“ஈஸ்வர் என் கிட்ட பேசு. எதுக்கு அவன் கிட்ட பேசுற? இப்போ என் பொண்டாட்டி என்ன தப்பு பண்ணிட்டா அந்த புள்ளை தானே இத்தனை வருஷம் வேலை செஞ்சது அதான் வந்து கூப்பிட்டா, வந்து வேலை செஞ்சுட்டு உன் வீட்டுக்கு வர போகுது இதுல என்ன தப்பு?”



“இப்போ நீங்க குடும்பமா உங்க பொண்ணு வீட்டுக்கு தானே வேலை செய்ய போறீங்க அதுல என்ன தப்பு போய் செய்யுங்க.” என்றான் ஈஸ்வர்.

“கம்பா இவரு எந்த வேலையும் செய்ய கூடாது ஆனா வெயிலை விட்டு நிழலுக்கு வர கூடாது நாள் முழுக்க செருப்பு இல்லாமல் நிக்கணும் தண்டனையை ஏத்துகலனா ஊரை காலி பண்ண சொல்லு.” முகில்வாணன் அதிர்ந்து எழுந்தார்.

“என்னுடைய பேச்சை மதிக்காமல், கேட்காமல் இருந்தா தண்டனை கூடிக்கிட்டே போகும் குறையாது முகில்வாணன்.” ஈஸ்வரனின் திமிரான பேச்சில் முகில்வாணன் அவமானபட்டு போனார்.


“மாமா அம்மா பண்ணுன தப்புக்கு எங்களுக்கு எதுக்கு தண்டனை தரீங்க?” குரல் கம்ம கேட்டபடி நின்று இருந்தான் உத்தமன்.


“உன் வீட்டுல ஆம்பளயே இல்லன்னு தானே உன் அம்மா வந்து என் பொண்டாட்டியை கூப்பிட்டா, இப்போ ரெண்டு பேர் நிக்கிறீங்க. என் பொண்டாட்டி நாள் முழுக்க வேலை செய்யும் போது சொகுசா வாழ்ந்தீங்கள்ள

போங்க போய் வேலை செய்யுங்க. நிக்க நிக்க தண்டனை கூடும், குறையாது.”

கடுமையாக எச்சரித்தான்.

“கொடி எல்லோரும் எப்படி வேலை செய்றாங்கன்னு பாரு இன்னைக்கு வர வருமானத்தை வாங்கி வச்சிரு நான் ஒரு முக்கியமான வேலையா போயிட்டு வரேன்

அதுவரைக்கும் இங்கேயே இரு புரியுதா?”

“சரி மாமா.”

“கம்பா உக்காரு.” புல்லட்டை திருப்பியவன், “கொடி!” என்று அழுத்தமாக அழைத்தான்.

“சொல்லுங்க மாமா…”

“நீ கம்பீரமாக இருந்தா தான் நான் தைரியமா உன்னை விட்டுட்டு போக முடியும், நீ சாதாரண ஆள் இல்லை.”

தலை மட்டும் அசைத்தாள்.


கணவன் புல்லட் கண்ணில் இருந்து மறையும் வரை நின்று பார்த்துக் கொண்டிருந்தவள் சேலை முந்தானையை எடுத்து இடுப்பில் சொருகினாள். அவள் நடைக்கு இடையாக கொசுவமும், முந்தியும் ஆடிக் கொண்டிருந்தது அழகாக.

தோட்டம் சுத்தம் செய்யாமல் இருப்பதை கண்டவள், “அண்ணா பொம்பளை ஆளுங்க கொஞ்ச பேரை அழைச்சிட்டு வாங்க.” என்று ஒருவரை அனுப்பி வைத்தார்.

நான்கு பெண்கள் வந்தனர், “தோட்டத்துல இருக்க மட்டை, ஓலை, குப்பை எல்லாத்தையும் அப்புறபடுத்துங்க தோட்டத்தை சுத்தம் பண்ணுங்க.” என்றவளை சிலர் பெருமையாக பார்த்தனர்.


முல்லை வேலை வாங்கிய நால்வரில் ஒருவள் யவனிகா தம்பி பொண்டாட்டி. ஈஸ்வரன் இல்லை என்றதும் முகில்வாணன் நிழலுக்கு வந்தவர் அங்கு இளநீர் இறக்கி கொண்டிருந்தவரிடம், “ஒரு இளநீர் வெட்டுடா.” என்று அதிகாரம் செய்தார்.

“என் புருஷன் இங்க இல்லனாலும் அவர் விட்ட வார்த்தையும், கட்டளையும் இதே இடத்தில் தான் நிக்கிது. அதை கட்டி காப்பாத்த தான் நான் இருக்கேன். போய் தண்டனை குடுத்த இடத்தில் நில்லுங்க.” என முல்லை குரல் உயர்த்தி கூறினாள்.

அவருக்காக இளநீர் வெட்டிக் கொண்டிருந்த கத்தி அப்படியே நின்றது.

அனைவரும் முல்லையை நம்ப முடியாமல் பார்த்தனர். முகில்வாணன் முல்லையை அக்னி பிழம்பாக பார்த்தவர் மீண்டும் அதே இடத்தில் சென்று நின்று கொண்டார்.

அங்கு வெட்ட பட்ட இளநீரை கொண்டு வந்து முல்லை முன்பு நீட்டியவன், “அம்மா இளநீர்.” என்று பவ்வியமாக கூறினான்.

“நன்றி அண்ணா!” என்று வாங்கி குடித்தவள், “நீங்களும் ஆளுக்கொன்னு வெட்டி குடிங்க.” அதே நேரம் பணத்துடன் வந்தார் கணக்கு பிள்ளை கையில் வாங்கியவள் முழுவதையும் எண்ணி சரி பார்த்து விட்டு, “இன்னைக்கு வருமானம் இவ்வளவு தானா?”

“இல்லம்மா இது பூ வித்த பணம் மத்தது எல்லாம் இனி தான் வரும்.”

“சரி நீங்களும் ஒரு இளநீர் குடிச்சிட்டு போங்க. நான் போய் மத்த இடத்தில் பாக்குறேன்.” என்றவள் மிளகாய் தோட்டத்துக்கு சென்றாள். அங்கும் பத்து பெண்கள் களை எடுத்துக் கொண்டிருந்தனர். ஒரு பாகம் மட்டும் ஒழுங்காக களை எடுக்காமல் மொட்டை மொட்டையாக வெட்ட பட்டிருப்பதை கண்டவள், “அக்கா இந்த பாகத்தை யார் களை எடுத்தது?”

அவள் எழுந்து, “உங்க அம்மா தான் எங்களுக்கு முன்னாடி போறாங்க பாரு.”

“அவுங்களை கூப்டுங்க.”

உலகரசியை அழைத்து விட உலகு வியர்வையை துடைத்த படி முல்லை முன்பு வந்து நின்றாள், “சொல்லுங்க.” என்றபடி.

“நீங்க என்ன களை எடுக்குறீங்க கடமைக்கு வேலை செஞ்சா எப்படி விளையும் ஒழுங்கா முதல்ல இருந்து களை எடுங்க செடியை ஆட்டாதீங்க. நிதானமாகவும், வேகமாகவும் எடுக்கணும். இல்லனா இன்னைக்கு கூலி கிடையாது உங்களுக்கு.” என்று கூறியதும்​

உலகுக்கு அழுகை வந்து விட்டது. காலையில் இருந்து தண்ணீர் கூட குடிக்காமல் மாடு போல் உழைக்கிறேன், பசிக்குது, இதை திரும்ப வேற களை எடுக்கணும்மா யோசித்துக் கொண்டே தன் பாகத்தின் முகப்பில் அமர்ந்தார்.


“சொன்னதை செஞ்சா தான் வீட்டுக்கு போக முடியும் இல்லைன்னா இங்கே தான்.” என்று மிரட்டலாக கூறிய கொடி மற்றவர்களை பார்த்து, “அக்கா சுத்தமா எடுங்க. நிறைய செடி வெட்டுபட்டு கிடக்கு பாருங்க ஒழுங்கான வேலை செய்யுங்க.” என்று விரட்டினாள்.

முல்லை விலகி சென்றதும், “என்ன உலகு நீ உன் மகளை பட்டினி போட்டு வேலை வாங்கிச் கொடுமை பண்ணுன இன்னைக்கு அப்படியே திரும்பிடுச்சி போல. முல்லை எஜமானியா வருவான்னுநினைச்சு பார்க்கல தானே நீ?” உலகு மூக்கை உறிஞ்சி விட்டு மீண்டும் வேலையை தொடர்ந்தார்.

முல்லை கடலை தோட்டத்துக்கு செல்ல செடி மூழ்கி போகும் படி தண்ணீர் பாய்ச்சி கிடந்தது. “யார் தண்ணீர் பாய்ச்சுறது, இப்படியா பண்ணுவாங்க, முக்கால் பாத்தி வரும் போதே மடையை மூடனுமா வேண்டாமா வேலை தெரியுமா, தெரியாதா?” என்று சத்தமாக கேட்ட அவளின் தம்பி உத்தமன் தான் நிமிர்ந்தான்.

ஒரு நாள் வேலைக்கே கருத்து போய் இருந்தான் அதை கண்டுகொள்ளாதவள், “தண்ணி வீணாக்காமல் சரியான அளவுல கட்டு செய்ற வேலையை ஒழுங்கா செய் இப்படி யாருக்கும் உபயோகம் இல்லாமல் செய்யாத.” என்று அவனையும் திட்டிவிட்டு அடுத்த இடத்தை நோக்கி நகர்ந்தாள்.

முல்லை முழு ஈஸ்வரனின் பொண்டாட்டியாக மாறி அனைவரையும் வேலை வாங்கிக் கொண்டிருந்தாள்.

தொடரும்....