அத்தியாயம் – 37
ஈஸ்வரன் மட்டுமே தனித்து நின்று இருந்தான். கண்கள் இருட்ட துவங்கியது, தேர் கிளம்பும் வரை தன் பலவீனத்தை கொடி முன்பு காட்டிக் கொள்ள விரும்பாதவன் தன் நிலையை பொறுத்துக் கொண்டு நின்று இருந்தான்.
அதனாலே அவளை தடுக்கவும் இல்லை, கால்கள் தள்ளாட கோவிலுக்குள் நுழைந்தவன் அமைதியாக ஓரிடத்தில் கண் மூடி அமர்ந்து கொண்டான். அவன் உடலே அவனுக்கு தாங்க முடியாத பாரமாக இருந்தது, கண்களை திறக்க கூட முடியாத அளவுக்கு எரிச்சல் வேறு
எப்படியோ திருவிழா நல்ல முறையில் முடிந்து விட்டது, தன் மனைவி பார்க்க வேண்டும் என ஆசைப்பட்டதை நிறைவேற்றிய விட்டோம் என அவன் நினைத்துக் கொண்டு இருக்கும் போதே ஈஸ்வரன் அருகில்,
“அண்ணா!” என அழுத்தமான குரல் கேட்டது.
கண்களை சிரமப்பட்டு திறந்தவனை பாவமாக பார்த்தபடி ராஜேந்திரன் நின்றுக் கொண்டு இருந்தான்.
“என்ன?”
“அண்ணா உங்களை அப்பா பாக்கனும்னு சொல்லுறாங்க, நம்ப நிலத்துல தான் இருக்காங்க.” என ராஜேந்திரன் கூறியதும் அவனை நம்பாமல் புருவம் உயர்த்தி பார்த்தவன் என்ன நடக்கிறது என தெரிந்து கொள்ள நினைத்தவன்,
“போ வரேன்.” என்றான்.
ராஜேந்திரன் நகராமல் நிற்க அவனை எள்ளலாக பார்த்தவன் தன்னுடைய தடுமாற்றத்தை, இயலாமையை காட்டிக் கொள்ளாமல் நடக்க துவங்கினான். காலியாக கிடந்த இடத்துக்கு அழைத்து வந்தவன்,
“அண்ணா நீங்க இங்கேயே இருங்க நான் போய் அப்பாவை அழைச்சிட்டு வரேன். உங்க முன்னாடி வர கூச்ச பட்டுகிட்டு இருக்காங்க அண்ணா.” என்றவன் கள்ள தனமான சிரிப்புடன் அங்கிருந்து நகர்ந்து இருளில் மறைந்தான்.
ஈஸ்வரன் நிற்க முடியாமல் தள்ளாடியபடி தரையில் பொத்தென்று விழுந்தான். கண்கள் இரண்டும் இருட்டிக் கொண்டு வந்தது. இப்போது கண் மூடவா என்ற நிலை. ஈஸ்வரன் கீழே சரிந்த நேரம் அவனை சிலர் சுற்றி வளைத்தனர். மண்ணில் சரிந்த ஈஸ்வரனை கண்டு நக்கலாக சிரித்தனர் அவனை சுற்றிக் கூடிய கூட்டம்.
“இவனா பெரிய ஆளு, இவனால ஒரு அடி கூட தாங்க முடியாது, இவன் நம்ப எல்லாரையும் அடிக்க போறானா?” தங்களுக்குள் நக்கலடித்து சிரித்துக் கொண்டனர்.
ஈஸ்வரன் காதில் அனைத்தும் விழுந்தது. ஒற்றை கண்ணை திறந்து திமிராக தன் எதிரில் நிற்ப்பவர்களை பார்த்தான் ஈஸ்வரன். அந்த நிலையிலும் அவன் முகத்திலும் பயம் இல்லை, அவன் உறுதியிலும் தளர்வில்லை.
ஒருவன் கத்தியை உயர்த்தியபடி, “டேய் இவனை கொல்ல ரொம்ப நேரம் தேவை இல்லை, பொட்டுன்னு போட்டுட்டு சட்டுன்னு போய்ட்டே இருப்போம்.” என்று ஒருவன் குரல் கொடுக்க
“உண்மை தான் அண்ணா, இந்த சொங்கி பயலுக்கு ஒருத்தனே அதிகம், நீயே முடிச்சி விட்டுடு கிளம்புவோம்.” என்றான்.
கத்தியை உயர்த்தியவன் வீழ்ந்து கிடந்த ஈஸ்வரனை நெருங்கினான். ராஜேந்திரன் மறைந்து நின்று ஈஸ்வரன் சாக போவதை ரசித்து பார்த்துக் கொண்டு இருந்தான். ஈஸ்வரனை வெட்ட ஓங்கிய கத்தியை ஒரு சூலம் தடுத்து நிறுத்தியது. ராஜேந்திரன் அதிர்ச்சியாக பார்க்க, கொடி சூலத்துடன் முழு காளியாக கணவனை காக்க ஈஸ்வரனுக்கு முன்னால் நின்று இருந்தாள்.
ஈஸ்வரனின் உதடுகள் மெலிதாக வளைந்தது, கொடி என முணு முணுத்தது.
கத்தியை ஒருவன் உயர்த்தியபடி வசனம் பேசி நெருங்கும் போதே கொடி வருவதை ஈஸ்வரன் பார்த்து விட்டான். ஆனால் அவள் சண்டை போடுவாள் என அவனும் எதிர் பார்க்கவில்லை.
“யார் மேல கை வைக்கிரீங்க டா என் மாமன் மேல கை வைக்கிற அளவுக்கு உங்களுக்கு தைரியம் இருக்கா?” என ஆக்ரோஷமாக கேட்டவளை கண்டு அனைவரும் சத்தமாக சிரித்தனர்.
“டேய் இவள் நம்பல எதிர்த்து சண்டை போட போறாளாம் சூலம் எடுத்துட்டு வந்தா நீ அம்மன் ஆகிடுவியா? இரு உங்க ரெண்டு பேரையும் சேர்த்தே கொண்ணுடுறோம் எங்களுக்கும் டபுள் பேமெண்ட் கிடைக்கும்.” என்றவன் முதலில் முல்லையை நோக்கி நெருங்கினான்.
தன்னவளை ஒருவன் நெருங்கவும் தன்னை நிலைப்படுத்தி ஈஸ்வரன் எழுந்து நிற்க அவன் காதுகளில் இன்னிசையாக ஒலித்தது பேசியவனின் அலறல் சத்தம். முல்லை சூலத்தை அவன் வாய்க்குள் சொருகி இருந்தாள். சிவந்த விழிகளும், மூச்சை இழுத்து விட்டு சூலத்தை ஒரு கையால் பிடித்தபடி அவள் நின்று இருந்த கோலத்தை கண்டு ஈஸ்வரன் கூட அதிர்ந்து போனான்.
அவ்வளவு ஆக்ரோஷமாக காட்சி அளித்தாள் முல்லை.
ஈஸ்வரன் மனைவியை ரசித்து பார்த்தான் அவளின் புது அவதாரத்தில் பிரமித்து போனான். தன் முதுக்கு பின்னால் இருந்து எடுத்த துப்பாக்கியை மீண்டும் அங்கேயே வைத்தவன் அங்கு கிடந்த பாறை கல்லில் சாய்ந்து தரையில் அமர்ந்தான்.
அவன் அமர்ந்ததும் தன் மாமனுக்கு சுத்தமாக முடியவில்லை என நினைத்து கொண்டவள் தன் எதிரில் நின்று இருந்தவர்களை ஆக்ரோஷமாக முறைத்தாள்.
“வாங்க டா!” என சத்தமாக அரைக்கூவல் விட, ஆண் வர்க்கத்துக்கு அசிங்கமாக போனது.
“டேய் இந்த புள்ளை பூச்சியை நசுக்கி போடுங்க டா.” என்று குரல் கொடுத்தவன் கழுத்தில் சூலத்தை இறக்கி வதம் செய்தாள் முல்லை.
அவன் கழுத்தில் இருந்து முல்லை முகத்தில் தெறித்தது இரத்தம். யாரையும் கண்டு, எதையும் கண்டு அஞ்சி நடுங்காமல் பெண் சிங்கமாக வெறி கொண்ட சிங்கம் வேட்டைக்கு நிற்பது போல் வேட்டையாடினாள் முல்லை.
உண்மையில் கணவனை காக்க பெண்கள் எந்த எல்லைக்கும் செல்வார்கள், எந்த அவதாரத்தையும் ஏற்பார்கள் என கூறியது உண்மை தான் என யோசிக்க வைத்தது முல்லையின் கோவம்.
முல்லை கோவத்தை கண்டு ஈஸ்வரனை கொல்ல வந்த கூலி படை தலை தெறிக்க ஓட பார்க்க முல்லை ஒரே எட்டில் ஒருவன் முதுகில் மீண்டும் சூலத்தை இறக்கி அவனை மண்ணில் சரித்தாள்.
வந்த கூலி கூட்டம் போன இடம் தெரியவில்லை. நால்வரை கொன்றதற்கே புள்ள பூச்சியை கண்டு தெறித்து ஓடி விட்டனர் தங்கள் உயிரை காப்பாற்றிக் கொண்டால் போதும் என.
ராஜேந்திரன் கோவத்தில் தரையில் உதைத்தான். இன்றோடு ஈஸ்வரன் கதை முடிந்து விடும் என்ற பேராசை கொண்டு காத்திருந்தான். அவனின் ஆசையில் முல்லை கூர்மையான சக்தி வாய்ந்த சூலத்தை சொருகி விட்டாள்.
அனைவரும் ஓடியதும் சூலத்தை கீழே போட்ட முல்லை வேகமாக தன் மாமன் அருகில் ஓடி வந்தவள், “மாமா உங்களுக்கு இந்த அளவுக்கு முடியலனா நம்ப வீட்டுக்கு போய் இருக்கலாமே?” சிறு அழுகையுடன் கேட்டவள் தன் மாமனை தாங்கி பிடித்து தூக்கினாள்.
ஈஸ்வரனால் பேச கூட முடியவில்லை. அவள் தூக்கி விட்டும் மீண்டும் சரிந்தான். சரிந்தவனை நெஞ்சோடு தாங்கி பிடித்தவள் கொஞ்சமும் யோசிக்காமல் தன் மாமனை தூக்கி தோளில் போட்டுக் கொண்டு நடக்க துவங்கினாள். அரை மயக்கத்தில் இருந்தவனுக்கு விழிகள் கலங்கியது முல்லை அன்பை கண்டு.
சிறு வயதில் இருந்து விவசாயம் செய்தவள் தனியாக. அறுவடை செய்யும் நெல் மூட்டைகளை தனி ஆளாக தூக்கி சென்று வீட்டில் போட்டு விடுவாள். அப்படி பட்டவளுக்கு இது சிரமமாக தெரியவில்லை.
முல்லை தன் மாமனை சுமந்த படி கோவிலை விட்டு வெளியே செல்ல கம்பன் அந்த இடத்துக்கு வந்து சேர்ந்தான்.
இரத்தமாக கிடந்த சூலத்தை எடுத்து பார்த்தவன், "பெண்ணை குறைத்து மதிப்பிடுவது பாவம், அவர்கள் பூவாகவும் உண்டு, புயலாகவும் உண்டு." என கூறியபடி சத்தமாக சிரித்தான்.
ஈஸ்வரனை சுமந்து வந்து அறையில் படுக்க வைத்தவள் தன் முந்தானையை போர்த்தி இன்றும் இமை போல் பார்த்துக் கொண்டாள் தூங்காமல். ஊரை சுற்றி வந்த அம்மன் எவ்வித குறையும் இல்லாமல் கோவிலுக்குள் நுழைந்தாள்.
ஊரே காத்திருந்து ஆசைப்பட்ட திருவிழா நல்ல முறையில் எந்த குறையும் இல்லாமல் சிறப்பாக நடந்து முடிந்தது. அனைவரும் தங்களின் சந்தோஷத்தை ஒருவர் மேல் ஒருவர் மஞ்சள் தண்ணீர் ஊற்றி வெளிப்படுத்திக் கொண்டனர்.
ஊர் திருவிழா முடிந்ததும் அனைத்து கட்டுப்பாடுகளும் நிறைவு பெற்றது. ஈஸ்வரன், கொடி கையில் இருந்த காப்பு தானாக கழண்டு கீழே விழ விடிந்ததும் அமர்ந்த படி தன்னை அறியாமல் கண் மூடியவள் ஈஸ்வரன் நெஞ்சில் சாய்ந்தாள் தூக்கத்தில். மஞ்சள் காப்பு விலகி கிடக்க கொடி தலை ஈஸ்வரன் நெஞ்சில் இருந்தது அவள் தலை சரியும் நேரம் ஈஸ்வரன் அப்படியே தூக்கத்தில் நெஞ்சோடு பிடித்துக் கொண்டு தூங்கினான்.
இருவருக்கும் நிம்மதியான தூக்கம், முதல் நெருக்கம் ஆனால் இருவருமே உணரும் நிலையில் இல்லை.
ராஜேந்திரன் தன்னுடைய பயத்தை காட்டிக் கொள்ளாமல் வீட்டிற்குள் நுழைந்தான். வீடே அமைதியாக காட்சி அளித்தது. முல்லையின் புதிய அவதாரத்தில் மிரண்டு இருந்தவன் இது தான் வாய்ப்பு என்று சத்தம் போடாமல் தோட்டத்து பக்கம் நகர்ந்தான்.
ஈஸ்வரன் ஏதாவது கேட்டால் எப்படி சமாளிக்க வேண்டும் என தனக்குள் யோசித்துக் கொண்டு இருந்தான்.
நல்ல காலம் அவனுங்களை நம்பி நாமும் அவனுங்க கூட போகல, அதை வச்சி எப்படியாவது சமாளிக்க வேண்டியது தான் என யோசித்துக் கொண்டு இருந்தான்.
சித்தப்பு எந்த பக்கம் போனார் என தெரியவில்லை.
“அப்பா எங்க போனாரு, என்ன ஆனாரு எதுவும் தெரியல. இந்த மனுஷன் எதையும் சொல்லிட்டு கூட செய்ய மாட்டாரு. அவர் விருப்பத்துக்கு செய்ய வேண்டியது. திருவிழா முடியும் போது ஈஸ்வரன் செத்துடுவான்னு சந்தோஷமா இருந்தேன் எல்லாத்தையும் இந்த முல்லை கெடுத்துட்டாள். முதல்ல அவளை தான் கொல்லனும்.”
ஈஸ்வரனின் பலம் அறியாமல் அவனை ஈசியாக சாய்த்து விடலாம் என நினைக்கும் இவனை திருத்தவே முடியாது. ஈஸ்வரன் கையால் சாக வேண்டும் என முடிவோடு இருக்கிறான்.
விடிந்து நீண்ட நேரம் கழித்து தான் முல்லை விழிகளை திறந்தாள். விழிகளை திறந்தவள் கருவிழிக்குள் சிக்கியது தன் மாமனின் முகம் அதுவும் நெருக்கமாக. சில நொடிகள் இமை சிமிட்டாமல் கனவில் பார்ப்பது போல் ஈஸ்வரன் முகத்தையே பார்த்தவள் சட்டென்று எழுந்து அமர்ந்தாள்.
எழுந்து அமர்ந்த பிறகு தான் உணர்ந்தாள் தான் தன் மாமன் அருகில் அவரை கட்டிக் கொண்டு நெஞ்சில் தலை வைத்து தூங்கியது. நேற்று சாமி கும்மிடும் போது நெற்றியில் பூசிய குங்குமம், திருநீறு அனைத்தும் அவன் நெஞ்சில் ஒட்டி இருப்பதை வெறுமையாக கண்டவள் அதை தன் புடவையால் துடைத்தாள்.
ஒரு முறை துடைக்கும் போதே ஈஸ்வரன் அசைய வெடுக்கென்று கையை எடுத்து விட்டு வேகமாக வெளியேறியவள் அறை வாசலில் மூச்சை இழுத்து விட்டு நிற்க அவளை முறைத்த படி நின்று இருந்தாள் கார்த்திகா.
முல்லையின் கோலம் அவளை எண்ணெய் இல்லாமல் எரிய செய்தது. கசங்கிய புடவை, நெற்றியில் கலைந்த குங்குமம், அவளின் நீண்ட மூச்சு, கலைந்த முடி அனைத்தையும் கண்டு கார்த்திகா மனம் வேறு கணக்கு போட்டது. அதிலும் ஊருக்கு முன்பு எழுந்து பேய் கூட போட்டி போட கூடியவள் இன்று சூரியன் சுட்டெரிக்கும் நேரத்தில் எழுந்து வந்து இருக்க யோசிக்காமல் பொறாமையில் வார்த்தைகளை அனலாக வீசினாள்.
“எப்போ எப்போனு அலைய வேண்டியது, காப்பு கழட்டி ஒரு நாள் கூட ஆகல ச்சி... ச்சி, என்ன ஜென்மங்களோ இதுக்காகவே வாழுதுங்க போல, இப்படி பட்ட ஒழுக்கம் இல்லாதவங்க கிட்ட தான் தண்டை, கொத்து சாவி இருக்கு.” என முகம் சுழித்து கூறியவள். முல்லையை நெருங்கி இன்னும் சில வார்த்தைகள் கூறி அவள் முகம் வேதனையில் கசங்குவதை கண்டு தனக்குள் திருப்தி பட்டுக் கொண்டே அங்கிருந்து கிளம்பினாள்.
முல்லை எதுவும் பேசாமல், பேச முடியாமல் புடவை முந்தானையை இடுப்பில் சொருகிய படி குளியல் அறை நோக்கிச் சென்றாள். முல்லை எழுந்து சென்றதும் ஈஸ்வரனின் உதட்டோரம் மெல்லிய முறுவல் எட்டி பார்த்தது. கண்களை மெலிதாக திறந்தவன் தன் நெஞ்சை பார்த்தான் அவள் விட்டு சென்ற தடயம் அவனை பார்த்து மங்களகரமாக சிரித்தது.
"கொடி." என மயக்கமாக முணு முணுத்தவன் எழுந்து ஜன்னல் ஓரம் நின்றான்
அவனின் கொடி குளியல் அறைக்குள் நுழைவதை கண்டவன், “இனி நம்ப வாழ்க்கையை நான் சரி பண்ணனும் டி, சீக்கிரமே பண்ணுறேன்.” என்றான்.
கொடிக்கு முன்பே எழுந்தவன் தன் மீது தன்னவள் தூங்கும் அழகை ரசித்துக் கொண்டு இந்த நொடியை அனுபவித்துக் கொண்டு இருந்தான் அசையாமல். அவள் அசையவும் மீண்டும் தூங்குவது போல விழிகளை மூடிக் கொண்டான்.
ஈஸ்வரனுக்கு சட்டென்று நினைவு வந்தது இரவு கொடி செய்தது. வேகமாக தன்னை சரி செய்து கொண்டவன் சம்பவம் நடந்த இடத்தை நோக்கி வேகமாக சென்றான். கோவில் வாசலில் வண்டியை நிறுத்தி இறங்கியவன் ஆச்சர்யமாக கண்டான் ஒருவாரம் இருந்த ஆர்பாட்டம், அமர்க்களம் எதுவும் இல்லை. ஒரு காக்கா, குருவி கூட கிடையாது.
ஜே, ஜேவென மக்கள் கூடிய இடம் என்று சொன்னால் யாரும் நம்ப மாட்டார்கள். பாதிக்கு மேல் கடைகளை கூட காலி செய்து விட்டனர். இன்னும் சிலர் பொருட்களை பேக் பண்ணிக் கொண்டு இருந்தனர். குளிக்காததால் கோவில் உள்ளே செல்லாமல் சுற்றி சென்றான். சம்பவம் நடந்த இடத்திற்கு வந்தவன் சுற்றி சுற்றி தேடினான் பிணங்களை.
அங்கே ஒரு துளி ரத்தம் கூட கிடையாது. அப்படி ஒரு சம்பவம் நடந்ததற்கு அடையாளமே இல்லை இடம் மாறி நிற்கிறோமா? என யோசித்துக் கொண்டு இருக்கும் போது தான்,
"எதையும் தேடாத ஈஸ்வரா மண்ணுகுள்ள நிம்மதியா தூங்கிக் கிட்டு இருக்காங்க." என கம்பனின் குரல் கேட்டது.
“யாரும் பாக்கல தானே கம்பா?”
"உன் தம்பி பார்த்துட்டான்."
“வேற யாராவது?”
“இல்ல ஈஸ்வரா?”
“ராஜேந்திரனுக்கு தனியா இருக்கு கம்பா அவுங்க அப்பனை விட இவன் அதிகமா ஆடுறான் சீக்கிரமே அவனுக்கு ஒரு முடிவு கட்டணும், இனி எதையும் லேட் பண்ண கூடாது.” என்றான் நிற்கும் இடத்தை வெறிக்க பார்த்தபடி.
“அவனுக்கு நீ அப்பறம் முடிவு கட்டலாம் ஈஸ்வர் போன் வந்துச்சி, எதுக்கு நீ போன் எடுக்கல?”
“நான் கவனிக்கல கம்பா இப்போ தான் எழுந்தேன்.”
“பிரச்சனை பெருசு ஈஸ்வர், நீ போயே ஆக வேண்டிய கட்டாயம், பிராப்பர்ட்டி எல்லாம் உன் பேர்ல இருக்கு, யாராலையும் எதுவும் பண்ண முடியல.”
ஈஸ்வர் அமைதியாக இருந்தான் கொடியை விட்டு செல்வதா? யோசிக்காமல் கூறினான்.
"நான் போகல கம்பா, எது போனாலும் கவலை இல்லை.”
கம்பன் கூர்மையாக பார்த்தான் ஈஸ்வரனை. “வேணாம்னு சொல்லுறது உன்னுடைய அடையாளம் ஈஸ்வர். உன்னுடைய போராட்டம், உன்னுடைய உழைப்பு.”
ஈஸ்வர், "இட்ஸ் ஓகே!" என்றான் தோள்களை குலுக்கிய படி சாதாரணமாக.
“நீ போய் தான் ஆகனும், வேற வழி கிடையாது, அது உனக்கே தெரியும்.”
ஈஸ்வரன் முகத்தை சிறு புன்னகையோடு பார்த்த கம்பன், “நீ போய்ட்டு வா அதுவரைக்கும் முல்லையை நானும், நனியும் பத்திரமா பாத்துக்குறோம்.” ஈஸ்வரன் தன்னுடைய நெற்றிக் கண் திறந்து விழித்தான் கம்பனை பார்த்து.
“அதுக்கு எந்த அவசியமும் இல்ல கம்பா, என் கொடி என் கூட தான் இருப்பா, ஒரு நிமிஷம் கூட அவளை விட்டு கொடுக்க மாட்டேன். கொடியை என் கூட அழைச்சிட்டு போறேன். அதுக்கான எல்லா ஏற்பாட்டையும் பாரு, யாரை நம்பியும் அவளை விட மாட்டேன்.” என்றான் பல்லை கடித்த படி.
கம்பன் சத்தமாக சிரித்தவன், “நீ நிக்கிற இடத்துக்கு எப்போ பதில் சொல்ல போற?” லிங்கம் மறைந்து இருக்கும் இடம் அது.
“மறந்துடு கம்பா.” என்றவன் தான் நிற்கும் இடத்தை அழுத்தமாக பார்த்தபடி கிளம்பினான்.
தன் மாமனின் உண்மையான குணமும், முழுமையான அடையாளமும் அறிந்து கொள்ள போகிறாள் முல்லை. முதல் முறை தீபாஞ்சாத்தை தாண்டி அடி வைக்க போகிறாள். தான் வாழ்ந்த, வளர்ந்த உலகத்தை விட்டு வேறு உலகத்தில் பயணம் செய்ய போகிறாள்.
எங்கே செல்கிறோம் என்று ஈஸ்வரனும் கூறவில்லை, நாம் எங்கே செல்கிறோம் என்று முல்லையும் கேட்க வில்லை.
தொடரும்...