அத்தியாயம் – 38
“கொடி நம்ப வெளிய போகனும்.” என ஈஸ்வரன் கூறியதும் தன் மாமன் கூறிய ஒரு வார்த்தைக்காக வேகமாக கிளம்பினாள் கொடி.
வழமை போல் எவ்வித ஆர்ப்பாட்டமும், ஆடம்பரமும் இல்லாமல் கண்டாங்கி புடவை, கொண்டை அதில் அழகுக்கு சங்கிலி தொங்கியபடி ஒரு ஊசி, புடவைக்கு தகுந்தாற் போல் வளையல், கழுத்தில் தங்க நகை அவ்வளவு தான்.
ஈஸ்வரன் வேட்டி, சட்டையில் தான் இருந்தான். பொறுப்புகள் அனைத்தும் கம்பன் தலையில் கட்டி இருந்தான். இளைஞர்களை தான் வரும் வரை ஊருக்கு ஒத்தாசையாக, பாதுகாப்பாக விட்டு விட்டு மனைவியை அழைத்துக் கொண்டு கிளம்பினான்.
ஈஸ்வரன் பின்னால் புல்லட்டில் அமர்ந்து இருந்தவள் திரும்பி பார்த்தாள் தீபாஞ்ச்சதை. ஊரை முதல் முறை தாண்டி செல்கிறோம் என்ற உணர்வு.
மனைவியை அழைத்துக் கொண்டு ஏர்போர்ட் வந்தான். முல்லை புதிதாக பிறந்த குழந்தை பார்ப்பது போல் அனைத்தையும் பார்த்துக் கொண்டே உள்ளே நுழைந்தாள்.
“கொடி நீ இங்கேயே நில்லு ஒரு அஞ்சி நிமிஷத்துல வந்துடுறேன், வேற எங்கேயும் போக கூடாது நான் இல்லாம.” என குழந்தைக்கு கூறுவது போல் கூறியவன் சிறு அறைக்குள் நுழைந்தான். கூறியது போலவே ஐந்து நிமிடத்தில் வெளியே வந்தவன் சாதாரண பேண்ட் சட்டையில் இருந்தான்.
“போகலாம் வா.” என கூறியவன் வேகமாக நடக்க துவங்கினான்.
கொடி ஈஸ்வரன் நடைக்கு ஈடு கொடுத்து நடந்தாள். செக்கிங் அனைத்தையும் முடித்து விட்டு தன் மனைவியை அழைத்துக் கொண்டு விமானத்தின் உள்ளே ஏறினான்.
கொடிக்கு நடப்பது எதுவும் புரியவில்லை, தான் எதில் செல்கிறோம் என்றும் தெரியவில்லை, டீவி பார்த்து பழக்கம் இல்லாதவலுக்கு இது தான் விமானம், தான் விமானத்தில் செல்கிறோம் என்றும் தெரியவில்லை. ஜன்னல் ஓரம் அமரவைத்தவன் தானே மனைவிக்கு சீட் பெல்ட் போட்டு விட்டான்.
தன் கொடியின் ஒவ்வொரு அசைவையும் கண்கானித்து கொண்டே இருப்பவனுக்கு அவளின் நிலை புரியாமல் இல்லை அவள் அனைத்தையும் பார்க்கட்டும் பிறகு சொல்லிக் கொள்ளலாம் என அமைதியாக அவளை வேடிக்கை பார்க்க விட்டவன் விமானம் ரன் ஆக துவங்கியதும்
"கொடி இந்த ஜன்னல் வழியா பாரு அழகா இருக்கும்." என்றான்.
அவன் கூறியது போலவே ஜன்னல் வழியாக எட்டி பார்த்தாள் விமானம் கிளம்பும் போது நன்றாக இருட்டி இருந்தது. மேலிருந்து கீழே பார்த்தவள் விழிகள் அதிர்ச்சியில், ஆச்சர்யத்தில் குடை போல் விரிந்தது.
சிறு பயம் உண்டாக “மாமா!” என்று அழைத்த படி ஈஸ்வரன் நெஞ்சில் சாய்ந்து கொள்ள ஈஸ்வரன் இன்பமாக அதிர்ந்து போனான்.
அவன் எதிர்பார்க்காத நிகழ்வு அல்லவா, நெஞ்சில் புதைந்து கிடந்தவள் தலையை வருடி விட்டவன், "கொடி இது தான் விமானம், நம்ப விமானத்தில் பறந்துட்டு இருக்கோம், இன்னும் மேல போய்ட்டா எதுவும் தெரியாது, பயப்டாம பாரு.”
“இல்ல வேண்டாம்.” என முனகலாக கூறி விட அதற்க்கு மேல் அவளை வற்புறுத்த வில்லை ஈஸ்வரன்.
கொடி கொஞ்சம், கொஞ்சமாக பயம் தெளிந்தாலும் அப்படியே தூங்கி போனாள். நெஞ்சில் கிடப்பவளை அசைக்க கூட இல்லை ஈஸ்வர் குழந்தையை தாங்குவது போல் தாங்கிக் கொண்டிருந்தான். ஒரு விதத்தில் அவள் தூங்கியது அவனுக்கு வசதியாக இருந்தது. கொடி கண் விழித்து பார்க்கும் போது ஈஸ்வரன் கையில் இருந்தாள்.
ஆனால் ஈஸ்வரன் தான் மொத்தமாக மாறி போய் இருந்தான். கருப்பு நிற கோட், சூட் அணிந்து ஷூ கால் சத்தம் அழுத்தமாக கேட்கும் படி இறுகிய முகத்தோடு ஸ்டைலாக கூலிங் கிளாஸ் போட்டுக் கொண்டு கொடியை இரு கைகளில் தூக்கிக் கொண்டு ஏர்போர்ட் விட்டு வெளியே வந்தான்.
கொடி சந்தேகமாக, “மாமா!” என அழைத்து பார்க்க,
“எழுந்துட்டியா கொடி?” என சாதாரணமாக தான் கேட்டான்,
ஆனால் கிராமத்தில் இருந்தபோது இருந்த பேச்சுக்கும் இப்போது இருக்கும் பேச்சுக்கும் நிறைய வித்தியாசங்கள் இருந்தது.
"மாமா என்னை இறக்கி விடுங்க." அவள் கூறியதும் மறுக்காமல் மெதுவாக இறக்கி விட்டவன்,
“வா போகலாம்.” என அவளை அழைத்துக் கொண்டு நடந்தான்.
அங்கிருந்த பலரின் பார்வை கொடி மீது தான் இருந்தது. அதே போல் கொடியும் மற்றவர்களையும், அவர்களின் உடையையும் தான் விசித்திரமாக பார்த்துக் கொண்டே நடந்தாள்.
அப்போது திடீர் என, "வெல்கம் பேக் ஷிவ்." என ஒரு குரல்.
முல்லை யார் என பார்க்க சுண்டி விட்டால் ரத்தம் வரும் நிறத்தில் ஒருவன் தன் மாமனை கட்டி அணைப்பதை கண்டாள். அவனோ குழந்தை போல் விழித்துக் கொண்டு இருக்கும் முல்லையை ஆச்சர்யமாக கண்டவன்,
“ஏய் முல்லை தானே நீ? நீ வரன்னு யாருமே எங்க கிட்ட சொல்லவே இல்லை, வெல்கம், வெல்கம் முல்லை. என அவளை வரவேற்றவன் இரு கையை விரித்தபடி அவளை கட்டி பிடிக்க செல்ல விரித்த கையை முறுக்கி பிடித்தான் ஈஸ்வரன்.
“கொடியை நெருங்காத.” என ஆக்ரோஷமாக கூறியவன், “கார் எங்க துருவா?”
“ஓ சாரி ஷிவ், கம்!” என முல்லையை பார்த்த படி முன்னால் நடந்தான்.
கருப்பு நிற கார்கள் அணிவகுத்து நின்றது. நடுவில் நின்ற காரை நோக்கி சென்றனர்.
“முல்லை நீ போய் முதல்ல கார்ல ஒக்காரு.” என கார் கதவை அவளுக்குத் திறந்து விட்டு நின்று இருந்தான் துருவா.
முல்லை காரையும், துருவாவையும் மாறி மாறி பார்த்தாள்.
“எதுக்கு இப்படி பாக்குற ஒக்காரு. என துரு மீண்டும் கூற,
“துரு அவளுக்கு கார்ல ஒக்கார தெரியல நீ அமைதியா இரு.” என்றவன், “கொடி குனிந்து உள்ள போ.” என்றான்.
அவள் குனிந்து கார்க்குள் போகும் போது அவள் தலையில் இடித்துக் கொள்ள கூடாது என கையை அவளின் தலைக்கு மேல் வைத்து அவள் உள்ளே அமர உதவி செய்த ஈஸ்வரனை நெஞ்சில் கை வைத்தபடி பார்த்துக் கொண்டு இருந்தான் துரு. கொடி அமர்ந்ததும் ஈஸ்வரனும் அவள் அருகிலேயே அமர்ந்து கொள்ள இது அடுத்த அதிர்ச்சியாக இருந்தது எப்போதும் ஈஸ்வரன் காரில் மற்றவர்கள் யாரும் அமர கூடாது அது அவனுக்கு பிடிக்காது.
கம்பன் சொல்லிய எதையும் நம்பாமல் போனதை நினைத்து தன்னையே திட்டிக் கொண்டவன் "துருவா!" என ஈஸ்வரன் அதட்டலில் தான் சுய நினைவுக்கு வந்தான்.
அவசரமாக காருக்குள் அமர்ந்து ஸ்டார்ட் செய்ய கார்கள் அணிவகுத்து கிளம்பியது.
கொடி வெறும் பார்வையாளராக மட்டுமே இருந்தாள். என்ன கேட்பது என்று கூட தெரியவில்லை அவளுக்கு. கார் சாலையில் சீறி பாய்ந்தது. முதல் முறை காரில் பயணம் செய்வதால் காரை எதோ மாளிகை போல் சுற்றி சுற்றி பார்த்தாள். அவள் காரை சுற்றி சுற்றி பார்த்துக் கொண்டு இருக்கும் போதே கார் ஓர் மாளிகை முன்பு சென்று குலுங்காமல் நின்றது.
“கொடி வா வீடு வந்துடுச்சு.” என இதமாக ஈஸ்வரன் கூற துரு வெடுக்கென்று திரும்பி பார்த்தான்.
"உனக்கு இப்படி கூட இதமா பேச தெரியமா டா?" என.
கொடியோ இது வீடா என வாயை பிளந்து பார்த்தபடி இறங்கினாள். அது வீடா அரண்மனையா? கிராமத்தில் இருந்த வீட்டை விட ஆறு மடங்கு பெரியதாக இருந்தது.
பளிங்கு போன்ற தரையில் கால் வைக்கவே கொடி பயந்தாள். அதுவும் முழுவதும் வெள்ளை நிற தரையாக இருக்க அழுக்காகிடுமோ என யோசித்துக் கொண்டே தயங்கி நின்றவளை என்ன? என்பது போல் பார்த்தான் ஈஸ்வர்.
அவள் செருப்பை கழட்டுவதை கண்டவன் கொடி இங்களாம் செருப்பு போட்டுகிட்டு தான் வீட்டுக்குள்ள இருக்கணும் கழட்ட வேண்டாம் என்றான் ஈஸ்வரன்.
“அழுக்காகிடும் மாமா.”
அப்பாவியாக கூறியவளை கண்டு கிளுக்கென்று சிரித்தான் துரு. அவன் சிரித்ததை விழிகள் சிவக்க கண்டவன் அடுத்த முறை சிரிச்ச சிரிக்க வாய் இருக்காது என சைகையில் எச்சரிக்கை செய்தவன் ஈஸ்வரன்.
“அழுக்கான துடைக்க ஆள் இருக்காங்க நீ வா.” என்றான் அழுத்தமாக.
அவன் குரல் மாற்றத்தை உணர்ந்தவள் அதற்க்கு மேல் எதுவும் பேசாமல் பயந்து பயந்து அடி எடுத்து வைத்தாள் வழுக்கி கொள்ளாமல் இருக்க. வாயை இறுக்கமாக மூடி நின்ற துரு முல்லை நடந்து போவதை கண்டவன்
"லிட்டில் பேபி!" என மிதமான புன்னகையுடன் முணு முணுத்துக் கொண்டான்.
எப்படியோ வாசல் வரை அடி மேல் அடி வைத்து நடந்து சென்றவளை, "நில்லுங்க." என ஒரு அழகான குரல் தடுத்து நிறுத்தியது.
அதுவரை பூமியை பார்த்து நடந்து வந்தவள் சட்டென்று நின்று விட ஈஸ்வரன் கை முட்டியை மடக்கிய படி உக்கிரமாக நின்று இருந்தான்.
“என் அண்ணி முதல் முறை வீட்டுக்கு வராங்க, நான் வெல்கம் பண்ணாமல் இருந்தா நல்லாவா இருக்கும்.” என்றபடி மினி ஸ்கர்ட், டீஷர்ட் அணிந்து வெள்ளை கார பெண் ஒருவள் கையில் ஆரத்தி தட்டுடன் வந்தாள்.
அவள் உருவம் தான் வெள்ளையாக இருந்தது அவளின் தமிழ் ஊர் கார பெண் போலவே இருந்தது. ஈஸ்வரன், துருவை விட அழகாக தமிழில் பேசினாள். அதுவும் அவள் அண்ணி என்று கூற முல்லை குழப்பமாக தன் மாமனை ஏறிட்டு பார்த்தாள்.
“அங்க என்ன பார்வை அண்ணி, எப்படியும் எங்களை பத்தி அண்ணா எதுவும் சொல்லி இருக்க மாட்டாங்க, எங்களுக்கு தெரியும். நாங்களே சொல்லுறோம் அதுக்கு முன்னாடி அண்ணன் பக்கத்துல நில்லுங்க நான் ஆரத்தி எடுக்குறேன்.” என்றாள் அந்த வெள்ளை நிற அழகு மங்கை.
முல்லை தயக்கமாக பார்க்க ஈஸ்வரனே கொடி அருகில் நெருங்கி நின்றான். பழைய ஈஸ்வரனாக இருந்து இருந்தால் தட்டு பறந்து இருக்கும், கிராமத்தில் இருக்கும் போது கணவன், மனைவிக்கு கிடைக்கும் முதல் அங்கீகாரம் ஆரத்தி என்பதை புரிந்து கொண்டவன் எவ்வித சத்தமும் போடாமல் முல்லை அருகில் நின்று கொண்டான்.
புதியவளோ துரு கொடுத்த அதே ரியாக்சனை கொடுத்தாள். இருவருக்கும் ஆரத்தி சுற்றி முடித்தவள்,
“அண்ணி வலது கால் எடுத்து வச்சி வீட்டுக்குள்ள போங்க இது உங்க வீடு.” என அன்பாக கூறினாள்.
அவள் கூறியது போலவே வலது கால் எடுத்து வைத்து உள்ளே சென்றவள் வீட்டின் ஆடம்பரத்தை கண்டு பிரமித்து போனாள். திரும்பும் இடம் எல்லாம் செல்வ செழிப்பும், ஆடம்பரமும் தான். வீட்டின் உள்ளே பல சிலைகள் அழகுக்கு வைக்க பட்டிருந்தது. அனைத்தும் சாமி சிலைகள். விலை உயர்ந்த அழகு பொருட்கள் வீட்டை அலங்கரித்து இருந்தது.
“என்ன கொடி வீடு பிடிச்சு இருக்கா உனக்கு?”
முல்லை என்ன பதில் சொல்வதென்று தெரியாமல் எச்சில் விழுங்கிய படி நின்று இருந்தாள். அவ்வீட்டின் ஆடம்பரமும், அழகும் அவளை பயமுறுத்தியது.
“சோயா இப்போ நம்புறீயா? உன் அண்ணன் உன் அண்ணி கிட்ட எவ்வளோ இதமா, பண்பா பேசுறான் பாரு. அந்த இடத்தில நம்ப இருந்து இருந்தோம் இந்நேரம் நாயை துரத்துறா மாதிரி நம்பளை துரத்தி விட்டு இருப்பான்.”
“உண்மை தான் துரு, ஆனா இதுவும் பாக்க நல்லா இருக்கே, ஷிவ் இப்படி மாறணும்னு தானே நம்ப எல்லாரும் ஆசை பட்டோம் அந்த மாற்றம் அண்ணி மூலமா நடந்து இருக்கு. சரி வா நம்ப போய் அண்ணி கிட்ட அறிமுகம் ஆகிப்போம்.”
“அண்ணி!” என்ற கூவலுடன் துள்ளி குதித்து ஓடி வந்தவள், “நீங்க இப்படி ஒக்காருங்க. என்று முல்லையை அமர வைத்தாள்.
“என்னுடைய பேர் சோயா உங்க புருஷனுடைய ஒரே ஒரு தங்கச்சி, அதுவும் கூட பிறந்த தங்கச்சி, அப்பறம் இவர் துருவா அண்ணனுடைய நண்பன்.”
முல்லை இமைகளை சிமிட்டி சோயாவை பார்த்தாள். அவள் கூறியதை கேட்டு ஆனந்த அதிர்ச்சி முல்லைக்கு. இருக்காதா பின்ன அவர்களின் உறவு, தன் மாமாவின் தங்கை தன்னுடைய ஒரே ஒரு செல்ல நாத்தனார்.
சோயாவை பார்த்து அழகாக சிரித்தவள், “மாமா நீங்க உங்களுக்கு தங்கச்சி இருக்கறத பத்தி சொல்லவே இல்லையே என் கிட்ட போங்க.” என கோவித்து கொண்டவள்,
சோயா புறம் திரும்பி, “நீ எதுக்கு ஊருக்கு வரல? மாமா கூட வந்துருக்க வேண்டியது தானே?” என உரிமையாக கேட்டாள்.
சோயா என்ன பதில் சொல்வதென்று தெரியாமல் முழிக்க, "ஷிவ் வந்துட்டியா!” என்ற சந்தோஷ கூச்சலுடன் ஒருவள் அப்போது வீட்டிக்குள் ஓடிவந்தாள்.
“ஓய் சில்லு யார் வந்து இருக்கா பாரு என் அண்ணியும் அண்ணன் கூட வந்து இருக்காங்க.” என சோயா சந்தோஷமாக கூற, சந்தோஷமாக ஓடி வந்தவளின் கால்கள் அப்படியே நின்று விட்டது முல்லையை பார்த்து.
“அண்ணி இவ தான்…”
"தெரியும் சோயா உங்க அண்ணனும், அவுங்களும் லவ் பண்ணுறாங்க சீக்கிரமே கல்யாணம் பண்ணிக்க போறாங்க. இவுங்க பேர் சில்வியா, நான் பார்த்து இருக்கேன்.”
முல்லை கூறியதை கேட்டு துரு, சோயா இருவருக்கும் உச்சகட்ட அதிர்ச்சி, அதே அதிர்ச்சியோடு ஷிவ் முகத்தை பார்த்தனர் இது என்ன புது கதையா இருக்கு?
ஈஸ்வரனோ உடல் முறுக்கி, விழிகள் இரத்தமாக சிவக்க சில்வியாவை முறைத்துக் கொண்டு நின்று இருந்தவன்,
"கொடி உனக்கு எப்படி அவளை தெரியும்?" அவனின் அனலாக வந்த வார்த்தைகளில் முல்லை உடல் சிலிர்த்து கொண்டது,
"நம்ப ஊருக்கு, நம்ப வீட்டுக்குச் வந்தாங்க மாமா."
இப்போது முல்லை புறம் திரும்பியவன், “எதுக்கு என் கிட்ட சொல்லவே இல்ல நீ?”
முடிந்த வரை தன் கோவத்தை அடக்கி கொண்டு கேட்டான். ஆனாலும் அவன் குரலில் கோவம் கொப்பளிக்க தான் செய்தது.
“சில்வியா உங்களுக்கு தெரியும்னு சொன்னா.” இதயம் படபடக்க கூறியவள்,
“நான் எதாவது தப்பு பண்ணிட்டேனா மாமா?” முகம் கலங்க கேட்டாள்.
அவளின் கலக்கத்தை கண்டவன் சட்டென்று மாடி படி ஏற துவங்கி விட்டான், அங்கேயே நின்று இன்னும் கோவத்தை வளர்த்துக் கொள்ள விரும்பாமல்.
“சோயா கொடிக்கு என்னுடைய ரூமை காட்டு.” என போகும் போது கூறிக் கொண்டே போக, அவனை தடுத்து நிறுத்தியது கொடியின் வார்த்தைகள்.
"நான் தனியா தங்கிக்கிறேன் மாமா இங்க யாருக்காகவும் நம்ப நடிக்க தேவை இல்லையே."
"இனி ஒரே அறையில் தங்க வேண்டிய அவசியம் கிடையாதே, சில்வியாவுக்கு கஷ்டமா இருக்கும்." என மிக நேர்மையாக கூறியவளை திரும்பி பார்க்கவே இல்லை ஈஸ்வரன்.
படியின் பிடியை அழுத்தமாக பிடித்தபடி நின்று இருந்தவன் கோவத்தை கொடி அறியாமல் இருக்கலாம், மற்ற மூவரும் அறியாமல் இருக்க முடியாதே, என்ன நடக்க போகுதோ, துப்பாக்கியில் இருந்து குண்டு வர போகுதா என பயந்த படி நின்று இருக்க,
“சோயா உன் அண்ணி என்ன சொல்லுறாளோ அதையே பண்ணிடு, எல்லாமே அவள் விருப்பம் தான்.” என்றவன் "உன் அண்ணி!" என்ற வார்த்தையை அழுத்தமாக கூறினான்.
தொடரும்...