• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

முரடன் 4

NiviAmmu

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jul 26, 2024
23
17
3
Tamilnadu
முரடனோ தன் திட்டப்படி அனைத்தும் நடந்த கம்பீரத்தில் சட்டை கையை மடக்கி விட்டுக் கொண்டான். முதலில் பட்டு புடவையில் வெளியே தென்பட்ட முல்லையை கண்டு அனைவருக்கும் ஆச்சர்யமாகவும், சந்தோஷமாகவும் இருந்தது.

தன் காலில் கிடந்த காப்பை தட்டியபடி கோவில் வாசலை தாண்டி வெளியே அடி எடுத்து வைத்தவள் கம்பனை தான் பார்த்தாள்.

அவனோ அசாத்திய சிரிப்போடு முல்லையைப் பார்த்து கொண்டிருந்தான். ஊரே அலட்சியமாக தேடியது அந்த சோப்பு டப்பாவை. முல்லையைப் பின் தொடர்ந்து அழுத்தமாக அடி எடுத்து வைத்தான் ஒரு கை சட்டையை மடக்கி விட்டவன் அனைவரையும் கூர்மையாக பார்த்து விட்டு மீசையை முறுக்கி விட்டுக் கொண்டான் கம்பீரமாக.

அதிர்ச்சியில் அனைவரும் இமைகளை இமைக்க மறந்து உறைந்து நின்று இருந்தனர். திண்ணிய புஜங்களை அப்பட்டமாக காட்டியது அவன் உடலில் இருந்த சட்டை. அடர்ந்த மீசையும் கம்பீர உடலமைப்பும் அவன் கண்களில் தென்பட்ட திமிரும் இவன் தானடா தண்டைக்கு உரியவன் என அனைவரும் யோசிக்க வைத்தது.

பெரியவர் சத்தமாக கூறினார், “யோவ் பூசாரி பரிவட்டம் கட்ட தேவையான எல்லாத்தையும் எடுத்துட்டு வா. அந்த நாற்காலியை கிழக்கு பார்த்து போடு.” அதே போல் வாயை பிளந்து பார்த்துக் கொண்டிருந்த பூசாரி அவசரமாக கோவில் உள்ளே ஓடியவர் நாற்காலி கொண்டு வந்து கோவில் மண்டபத்தில் சிவன் சன்னதியை பார்த்தபடி போட்டவர் அனைத்தையும் தயார் செய்து விட்டு, “வாங்க எல்லோரும்!” என குரல் கொடுத்தார்.

கணவனோ மனைவிக்கு கை காட்டி முன்னால் போக கூறினான். முல்லை இன்னமும் நம்ப முடியாமல் கணவனை பார்த்தபடி முன்னால் நடக்க அவளை தொடர்ந்து கணவன் நடந்தான். அவனை தொடர்ந்து ஊரே பின்னால் செல்ல கம்பன் ரகசியமாக சிரித்துக் கொண்டான். எவளை ஒதுக்கி வைத்தனரோ இன்று அவளை பின் தொடர வேண்டிய நிலை, கந்தன் குடும்பம் நொந்து கொண்டது தங்களின் நிலையை நினைத்து. தன்னை பின் தொடர்ந்து வரும் ஊரை கண்டு முல்லை அலட்டிக் கொள்ளாமல் சென்றவள் நாற்காலி அருகில் நின்றாள். அனைவரும் நாற்காலியை விட்டு ஐந்தடி தள்ளி நிற்க முல்லை மட்டுமே அருகில் நின்று இருந்தாள்.

‘அழுக்கிக்கு வந்த வாழ்வை பாரு!’ என ராஜேந்திரன் வெடித்துக் கொண்டு இருந்தான் மனதுக்குள். “மாமா வாங்க!” என்று மென்மையான குரல் கொடுத்தவள், அவள் கணவனை கிழக்கு பார்த்து நிற்க வைத்தாள். பூசாரி நீட்டிய தட்டில் இருந்த துண்டை எடுத்து கணவன் தலையில் பரிவட்டம் கட்டியவள் அவன் நெற்றியில் சிவனின் திலகத்தை வைத்து பல ஆண்டுகளாக காத்திருந்த தண்டயை பார்த்தாள்.

கண்ணாடி பேழையை திறந்து தண்டையை கையில் எடுத்தவள் கண் மூடி சிவனையும், தனக்கு விருப்பமான அம்மனையும், இந்த தண்டையை வழி வழியாக ஏந்திய முன்னோர்களையும் மனம் உருகி வேண்டிக் கொண்டவள், “மாமா கை நீட்டுங்க.” என்று குரல் கொடுத்தாள்.

அவளால் லாக்கை எப்படி திறக்க முடியும் என கந்தன் குடும்பம் நக்கலாக பார்த்து கொண்டு இருக்க, கணவனின் பார்வை அவளை விட்டு அணுவும் அசையாமல் நிலைத்து நின்றது. ஆணவனின் நீட்டிய இரும்பு கரத்தில் தங்க தண்டையை பதறாமல் போட்டு விட்டாள் பூட்டை அழகாக நீக்கி. அவளை கேலியாக பார்த்த அனைவருக்கும் முகத்தில் ஈ ஆடவில்லை.


தண்டை கைக்கு ஏறிய நொடியே அவனின் உடல் முறுக்கிக் கொண்டு நின்றது. கண்கள் சிவக்க முறுக்கிய உடலோடு தண்டையை தனது மற்றொரு கரத்தால் மேலே இழுத்து விட்டவன், மனைவி நகர்ந்து வழி விட்டதும் அங்கு தனக்காக காத்திருந்த நாற்காலியில் முழு அதிகாரத்தோடு, முழு பலத்தோடும், உரிமையோடும் அமர்ந்தவன்

பாவனையே கூறியது இந்த இடம் எனக்கு மட்டும் தான் எனக்கே எனக்கு மட்டும் தான்.

தள்ளி நின்று பார்த்துக் கொண்டு இருந்த கந்தனை சட்டென்று திரும்பி பார்த்தான். அவரோ அசராது நின்று இருக்க, “முல்லை நீ உன் புருஷன் பக்கத்துல நில்லு.” என்று கட்டளையாக கூறினான் கம்பன். கணவன் அருகில் நாற்காலியை ஒட்டிய படி நின்ற முல்லையை கண்டு கார்த்திகாக்கு பற்றிக் கொண்டு எறிந்தது. இப்போ விழவா, பிறகு விழவா என கண்ணீர் வெளியே வர தயாராக இருந்தது அவளுக்கு. தனக்கு கிடைக்க வேண்டிய உரிமையை முல்லை தட்டி பறித்ததாக தோன்றியது அவளுக்கு.

முக்கியஸ்தர்கள் அனைவரும் ஒன்றாக முன்னால் வந்தனர் அதில் கந்தன், முல்லை அப்பாவும் அடக்கம். “ஐயா உங்க பேர் என்னன்னு சொல்லுங்க.” மிக பவ்வியமாக கேட்டபடி நிற்க ஒற்றை கால்லை மடக்கி மற்றொரு கால் முட்டி மீது தூக்கி வைத்தவன் நன்றாக சாய்ந்து அமர்ந்து கொண்டு தண்டை இருந்த கையை தூக்கி நாற்காலி பிடி மீது வைத்து சிங்க முகத்தை தடவி கொடுத்தவன், “ஈஸ்வரன், பரமேஸ்வரன் நாகமூர்த்தி!” என்றான் எட்டு திக்கும் ஒலிக்கும் படி கம்பீரமாக.


“என் அப்பா எனக்கு வச்ச பேரு பரமேஸ்வரன் நாகமூர்த்தி. மத்தவங்க எனக்கு கொடுத்த அடையாளம் ஈஸ்வரன்.” இரும்பென கேட்டது ஈஸ்வரனின் குரல். அனைவருக்கும் உடல் சிர்த்து போனது. அந்த ஈஸ்வரனே நேரில் வந்தது போல் நின்று இருந்தனர். இந்த பேர் முதல் முதலில் தண்டையை கையில் ஏந்தி நியாயம் காத்தவர் பெயர். அவரை வைத்தே ஈஸ்வர் குடும்பம் என்று அழைக்க பட்டது மீண்டும் அதே பெயரை கொண்டவன். முல்லை கணவனை கண்டவள் அங்கே மூடப்பட்டிருக்கும் சிவன் கோவிலை கண்டாள். இறுதியாக கம்பனை பார்க்க அவனோ நிலையான புன்னகையுடன் நின்று இருந்தான் இருவரையும் பார்த்து. முல்லைக்கு ஒன்று மட்டும் புரிந்தது கம்பனுக்கு தன் கணவனை முன்பே தெரிந்து இருக்க வேண்டும் என்று.

ஊர் ஒன்று கூடி ஈஸ்வரனை தலைவனாக ஏற்றுக் கொண்டு அவனை மீறி அணுவும் அசையாது என்று வாக்குறுதியும் கொடுத்தது. இங்கு வரும் வரை இந்த நாற்காலியில் அமரும் வரை இதை பற்றி அலட்சியமாக நினைத்தவன் இப்போதும் உணர்ந்து ஒரு நொடி கண் மூடினான்.

“மாமா நீங்க தான் கோவிலை திறக்கணும் வாங்க.” என்று மெதுவாக அழைத்தாள். பெரியவர் தொடர்ந்தார். “உன் தாத்தா செத்த பிறகு மூடிய கதவு ஐயா இப்போ நீங்க தான் திறக்கணும், திறந்து பூஜை பண்ணனும்.” பெரியவரை அழுத்தமாக பார்த்தவன், “ஐயா நான் உங்களை விட சின்னவன் நீங்க என்ன ஈஸ்வரன்னு கூப்பிடுங்க இல்ல தம்பின்னு கூப்பிடுங்க ஐயா வேண்டாம்.” திட்டவட்டமாக மறுத்து பேசியவன் முல்லையை பார்த்தான் இப்போதும் அவள் முன்னால் நடக்க அவளை தொடர்ந்து சென்றான்.

பாவம் முல்லை கடவுள் நம்பிக்கை இல்லாதவனை அழைத்து செல்கிறாள். ஈஸ்வரன் என பெயர் வைத்ததால் பக்தி அதிகம் என நினைத்து விட்டாள் போல முல்லை. ஈஸ்வரனுக்கு கடவுள் நம்பிக்கையும் கிடையாது, கோவிலுக்கு செல்லும் வழக்கமும் கிடையாது. அப்படிப்பட்டவன் இன்று கோவிலை திறந்து பூஜை செய்ய போகிறான். மிகவும் விந்தையான செயல்.

திறந்த கோவிலையும் ஈஸ்வரனையும் பார்த்தபடி நின்று இருந்தான் கம்பன். “மாமா சிவனுக்கு ஆரத்தி காமிங்க.” என்றவள் தட்டை ஈஸ்வரன் முன்பு நீட்டினாள். இந்நேரம் இந்த இடத்தில் வேற யாராவது இருந்து இருந்தாள் முகத்தில அடித்தாற்போல் திட்டி இருப்பான் முல்லையை திட்டவும் இல்லை, மறுக்கவும் இல்லை பிறந்ததில் இருந்து பூஜை புனஸ்காரம் செய்யும் திசை பக்கம் கூட எட்டி பார்க்காதவன் இன்று நேர்த்தியாக ஆரத்தி காமித்து மனைவிக்கு நீட்ட கம்பன் சத்தமாக சிரித்தான்.

அனைவரும் கம்பனை விசித்திரமாக பார்க்க ஈஸ்வரன் கம்பனை முறைத்து பார்த்தான். “எவ்வளவு பெரிய கொம்பனா இருந்தாலும் அடி பணிய வேண்டிய இடத்தில் அடி பணிந்து தானே ஆகனும்.” என்று முல்லையைப் பார்த்து கூறிவிட்டு செல்ல முல்லை கணவனை பார்த்தாள்.

அவனோ அவள் முகம் காணாமல், “வேற ஏதாவது செய்யணுமா கொடி?”

“இல்ல மாமா முடிஞ்சுது. நீங்க போய் வேலை இருந்தா பாருங்க நான் போய் அம்மனுக்கு விளக்கு போட்டுட்டு வரேன்.” என்றவள் அவ்வளவு சூட்டில் வெறும் காலில் நடந்து செல்வதை இமை சிமிட்டாமல் பார்த்தான். என்னதான் அவன் கம்பீரமாக இருந்தாலும் அவனால் அந்த சூட்டை தாங்க முடியவில்லை.

ஊரில் உள்ளவர்களை முக்கியஸ்தர்களை பார்த்து பேசியவன் முல்லைக்காக காத்திருந்தான். அவள் நிதானமாக தெய்வங்களை வணங்கி விட்டு, நெற்றியில் பொட்டு வைத்துக் கொண்டே வெளியே வந்தவள் தன் கணவனை கண்டு, “மாமா நீங்க இன்னுமா இங்க இருக்கீங்க?”


“ஆமா எல்லார் கிட்டேயும் பேசிட்டு இருந்த உன் பூஜை முடிந்ததுன்னா வீட்டுக்கு போகலாமா?”

“முடிஞ்சுது மாமா.” என்றவள் கணவன் முன்பு குங்குமத்தை நீட்டினாள்.

ஈஸ்வர் குங்குமத்தையும், மனைவியையும் பார்த்தவன் தலை குனிந்து நெற்றியை காமிக்க அவளும் எந்த ஒதுக்கமும் காட்டாமல் அவனுக்கு வைத்து விட்டு இருவரும் சேர்ந்து நடந்தனர் வீட்டை நோக்கி.

வீட்டில் மொத்த குடும்பமும் நடு கூடத்தில் ஈஸ்வரனுக்காக காத்திருந்தது. ஈஸ்வரன் முல்லை இருவரும் ஒன்றாக வீட்டிற்குள் நுழைய கந்தன், “வா ஈஸ்வரன்! நீ தான் என் அண்ணன் மகன்னு தெரியாமல் போய்டுச்சி. இத்தனை வருஷம் எங்க இருந்த? எப்படி இருந்த. எப்படி இங்க வந்த?”

“பூமில தான் வாழ்ந்த, நடந்து தான் வந்தேன்.” என கூறியவனை அனைவரும் வெட்டும் பார்வை பார்த்தனர். ஈஸ்வரன் அசராமல் நின்றவன் அறை என்று ஏதோ கூற வர,

“ராஜேந்திரன் உன் அண்ணனுக்கு அந்த நெல் மூட்டை அடுக்கி இருக்க அறையை சுத்தம் பண்ணி குடுடா. ஈஸ்வரன் நம்ம வீட்டுல வேற ரூம் இல்ல அதனால கொஞ்ச நாளைக்கு அங்க தங்கிக்கோங்க. ஒவ்வொரு அறையும் ஒவ்வொருத்தவங்க எடுத்துகிட்டாங்க கொஞ்ச நாள் போகட்டும் நான் வீட்டுக்கு பின் பக்கம் இன்னும் விரிவுபடுத்தி கட்டுறேன் டா.”

“உங்களுக்கு எதுக்கு அந்த சிரமம் சித்தப்பா இனி எல்லாத்தையும் நானே பார்த்துக்கிறேன். இந்த வீட்டுல அறை இல்லன்னு எப்படி சொல்லுறீங்க என் தாத்தா நாகமூர்த்தி அறை பூட்டி கிடக்கு தானே, ஆண்டாண்டு காலமாக தண்டைக்கு உரியவங்க தங்குற அறை தானே?” என்றவன் அங்கு நின்று இருந்த வேலைக்காரர்களை பார்த்து, “அந்த அறையை சுத்தம் பண்ணுங்க இனி அது தான் எங்க அறை.” என்றான் கட்டளையாக.

“ஈஸ்வரன் அண்ணனை எதிர்த்து பேசுவியா? அவர் என்ன சொல்கிறாரோ அது தான் இங்க சட்டம் எல்லோரும் கேட்டு

தான் ஆகனும்.” என்று பெருங்குரலெடுத்து கத்திய உலகரசியை அசட்டையாக பார்த்தவன் அங்கு தயங்கி நின்று இருந்த வேலை காரர்களை அழுத்தமாக பார்த்தான். உடனே அவர்கள் அறையை திறந்து சுத்தம் செய்ய துவங்கினர்.

“அந்த ரூம் எங்களுக்கு நீங்க எங்க ரூம்ல தங்கிக்கோங்க.” என்றபடி வந்து நின்றாள் கார்த்திகா. ஈஸ்வரன் நாற்காலியில் கம்பீரமாக அமர்ந்தவன், “என் வார்த்தையை கேக்காதவங்க இந்த வீட்டை விட்டு போகலாம்.” என்றான் கட்டளையாக.

அறையை சுத்தம் செய்து முடித்தவர்கள், “ஐயா அறை தயார்.” என்று கூற, வா என்று மனைவியை அழைத்தபடி எழ. “நீங்க அந்த அறையில் தங்கிக்கோங்க, ஆனா இந்த அழுக்கி தங்க கூடாது.” என்றாள் கோவமாக கார்த்திகா.

ஈஸ்வரன் பார்த்த பார்வையில் சர்வமும் நடுங்கி போனது கார்த்திகாக்கு.

முல்லையைப் யாரும் எதிர்பாரா வண்ணம் கைகளில் தூக்கியவன் படிகளில் ஏறி நின்று வேகமாக திரும்பினான். அங்கு நின்று இருந்த வேலைகாரர்களை பார்த்து, “இந்த வீட்டுல இருக்கவங்களை தவிர்த்து வேற யாருக்காவது அறை ஒதுக்க பட்டு இருந்தா, எல்லா அறையும் காலி பண்ணி சுத்தம் பண்ணுங்க இந்த வீட்டுல இல்லாதவங்களுக்கு எதுக்கு தனி அறை.” என்றான் சத்தமாக.

அவன் குரலை எதிர்த்து யாராலையும் பேச முடியவில்லை. கார்த்திகா தனக்குள் கருகும் மனதோடு ஈஸ்வரன் கையில் இருக்கும் முல்லையை தான் பார்த்துக் கொண்டு இருந்தாள். அறைக்குள் சென்றதும் முல்லையை இறக்கி விட்டவன் அறையை நிதானமாக பார்த்தான்.

மிக பெரிய விசாலமான அறை. அந்த காலத்தில் செய்யப்பட்ட மர கட்டில் ஏழு பேர் வரை தாராளமாக படுக்க கூடிய அளவில் கிடந்தது. ஒரு அலமாரி மத்த படி இந்த அறையில் இருந்த பொருட்கள் அனைத்தையும் மற்றவர்கள் எடுத்து இருக்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டான். அவனுடைய லேசர் கண்களில் எதுவும் தப்பவில்லை.

கட்டிலில் மெத்தை கூட இல்லை, அமர நாற்காலி இல்லை அனைத்தையும் வாங்க வேண்டும் என்று முடிவு செய்தவன் திரும்பி மனைவியை பார்த்தான். முல்லையோ அமைதியாக வெறும் தரையில் அமர்ந்து இருக்க, “கொடி எதுக்கு நீ தரையில் உக்காந்து இருக்க?”

“எனக்கு பழகி போச்சு மாமா, அது மட்டும் இல்லாம எனக்கு தரையில் உக்காருறது தான் பிடிக்கும்.” முல்லையை தன்னுடைய லேசர் விழியால் கூர்ந்து பார்த்தவன், "உன்னை எதுக்கு இந்த வீட்டுக்குள்ள வர கூடாதுன்னு சொன்னாங்க கொடி?”


"நான் கருப்பா இருக்கேன்னு." கொஞ்சமும் தயங்காமல் பட்டென்று சாதாரணமாக வெளியே வந்தது பதில். “இது ஒரு காரணமா?”

“ஆமா மாமா இந்த ஊருக்கும், இந்த வீட்டுக்கும் இது மிகப்பெரிய காரணம். கருப்பா இருந்தா ஒதுக்கி வைப்பாங்க.”
 

Vimala

Vaigai - Avid Readers (Novel Explorer)
Feb 10, 2023
102
45
28
Trichy
ரொம்ப ரொம்ப அருமையா விருவிருப்பா போகுது sis