• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

முரடன் - 44

NiviAmmu

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jul 26, 2024
67
28
18
Tamilnadu
அத்தியாயம் – 44


ஈஸ்வரன் முகத்தில் கோவம் போய் ஆச்சரியம் தோன்றியது. சிரிக்கவே யோசிக்க கூடியவள், எப்போதும் இறுக்கமாக இருப்பவள், சில காலமாக தான் உதடு விரியாமல் சிரித்துக் கொண்டு இருக்கிறாள் அதுவும் அத்தி பூத்தார் போல. அப்படி பட்டவள் இன்று சில்லறையை சிதறி விட்டது போல சத்தமாக சிரித்தாள் அவனால் ஆச்சரிய படாமல் எப்படி இருக்க முடியும்.


“மாமா நான் வெளிய போறேன்.” என குழந்தை போல் கூறியவள் புள்ளி மான் போல் துள்ளி குதித்து ஓட, ஈஸ்வரன் வேக எட்டுகளில் மூன்று, மூன்று படியாக தாவி இறங்கி கொடி பின்னால் ஓடினான்.


“சோயா, துரு நம்ப இன்னைக்கு தப்பிச்சோம். ஷிவ் நம்பல மறந்துட்டு பொண்டாட்டியை தேடி ஓடிட்டான்.” சோயா, துரு இருவரும் ஆமாம் என ஒரே நேரத்தில் தலை அசைத்தனர்.


முல்லை கார்டனில் நின்று வானத்தை அண்ணாந்து பார்த்தாள். “கொடி உள்ள வா, குளிரும் இங்க.”


“மாமா எனக்கு குளுரவே இல்ல, நீங்க பொய் சொல்லுறீங்க.” என இரு கை விரித்து, உதட்டை பிதுக்கி கூறியவளை கண்டு மயங்கி நின்றான் முரடன்.


“மாமா வாங்க விளையாடுவோம்.” என அழைக்க,


"என்ன?" என அதிர்ச்சியாக கேட்டான் ஈஸ்வரன்.


“போங்க நீங்க நான் கூப்பிட்டு வரவே இல்ல.” என வீட்டுக்குள் ஓடியவள் மூவரையும் அழைத்து வந்து வெளியே நிற்க வைத்தாள்.

மூவரும் பள்ளிக்கூடத்தில் நிற்பது போல் வரிசையில் நின்று இருந்தனர்.


“சோயா, துரு நம்ப ஓடி பிடிச்சு விளையாடுவோம், நான் ஓடுவேன் நீங்க மூணு பேரும் என்னை பிடிக்கணும் சரியா?”


மூவரும் திரும்பி ஷிவ்வை பார்த்தனர். ஷிவ் கண்களாலேயே மூவரையும் எரித்துக் கொண்டு இருந்தான்.


துரு உள்ளுக்குள் சிரித்தவன், “சரி கொடி நீ ஓடு நாங்க பிடிக்கிறோம்.” என கூற, கொடி ஓட துவங்கினாள்.


மூவரும் அவளை பிடிக்க அவள் பின்னாடியே ஓடினர் அவளோ மூவருக்கும் ஆட்டம் காட்ட மூவராலும் பிடிக்க முடியவில்லை. குழந்தை போல் சிரித்துக் கொண்டு மறைந்து, மறைந்து மூவருக்கும் போக்கு காட்டி ஓடிக் கொண்டிருக்கும் முல்லையை இமைக்காமல் பார்த்துக் கொண்டு இருந்தான் ஈஸ்வரன்.


அவளின் சிரிப்பு சத்தம் ஈஸ்வரனின் ஒவ்வொரு அணுவிலும் பதிந்து, புது உயிரை தீட்டியது. மூவருடனும் குழந்தை போல் விளையாடினாள். மூவருமே ஈஸ்வரனை மறந்து கொடியுடன் சிறு பிள்ளைகள் போல் விளையாடினார்.


ஒரு வழியாக கிங்ஸ்லி கொடியை வளைத்து பிடிக்க அவனை தள்ளி விட்டு அவன் முதுகில் ஏறி ஓடினாள் முல்லை. கணவன் நிலையை கண்டு சோயா சத்தமாக சிரிக்க கிங்ஸ்லி சோயாவை முறைத்து பார்த்தான்.


“முல்லை போதும் மூச்சு வாங்குது வேற ஏதாவது விளையாடுவோம்.” என நின்று மூச்சிரைக்க கூறினான் துரு.


சரி என சமத்தாக தலை ஆட்டிய முல்லை ஒளிந்து விளையாடுவது, தண்ணீர் இறைத்து விளையாடுவது, சில்லி என அந்த காலத்தில் விளையாடும் அனைத்தையும் மூவருடன் விளையாடினாள்.


அவளின் குழந்தை பருவத்தில் அவள் இழந்த அனைத்தும் ஏக்கமாக அவளுக்குள் படிந்ததை அவளின் செயலும், அவள் முகத்தில் இப்போது இருந்த உற்சாகமும் கூறியது.


இரவு, பனி என்பதையும் மறந்து மூவரும் முல்லையுடன் விளையாட்டை ரசித்து விளையாடினர். மூவருக்கும் இது புது அனுபவம். ஈஸ்வரன் அமைதியாக நின்று வேடிக்கை மட்டுமே பார்த்துக் கொண்டு இருந்தான்.


முல்லை சோர்ந்து மூச்சிரைக்க துருவன் அருகில் அமர்ந்தவள் அவன் தோளில் சாய்ந்து கொள்ள அதுவரை இருந்த அமைதி பறந்து போனது ஈஸ்வரனிடம்.


"மூணு பேரும் உள்ள போங்க." அழுத்தமாக, போயே ஆக வேண்டும் என கட்டளையாக ஒலித்தது ஈஸ்வரனின் குரல்.


மூவரும் சட்டென்று உள்ளே ஓடினர் ஆனால் மறைந்து நின்று இருவரையும் பார்க்க துவங்கினர்.


“துரு அண்ணி அவுங்க மனசுல என்ன இருக்குன்னு இன்னைக்கு சொல்லுவாங்க.”


துரு தலை அசைக்க, “எதை பத்தி சோயா?” என புரியாமல் கேட்டான் கிங்ஸ்லி.


“அதான் அண்ணன் மேல அண்ணிக்கு என்ன உணர்வு இருக்குன்னு சொல்லுவாங்க. அவுங்க மனசுல என்ன இருக்குன்னு சுத்தமா கண்டு பிடிக்கவே முடியல கிங்ஸ்லி.”


“உண்மை தான் முல்லை ரொம்ப அழுத்தமா இருக்கா.” என கிங்ஸ்லி கூறிவிட்டு இருவரையும் பார்த்தபடி நின்று இருந்தான்.


ஈஸ்வரன் கொடி அருகில் அமர்ந்தவன் ஆடிக் கொண்டு இருந்த அவளின் தலையை ஒரு கையால் தாங்கி பிடித்தபடி, "கொடி வா உள்ள போகலாம்."


முல்லை லேசாக தலையை சாய்த்து தன் மாமனை பார்த்தவள், இமைக்காமல் பார்த்துக் கொண்டே இருந்தாள். அவளின் பார்வையில் வித்தியாசத்தை உணர்ந்தவன், “கொடி!” என மென்மையாக அழைத்தான்.

அவளோ, "நன்றி மாமா!" என்ற வார்த்தையை உதிர்த்தாள் சிரிப்போடு.


ஈஸ்வரன் புரியாமல் கேட்டான், "எதுக்கு கொடி?" அவளின் நன்றியில் ஓர் அந்நியம் தெரிந்தது ஈஸ்வரனுக்கு, மூவருக்கும் தான்.


“எதுக்கு நன்றி கொடி?”


“எல்லாத்துக்கும் தான் மாமா, என் வாழ்க்கையில நீங்க பண்ணுன எல்லாமே என் கனவு மாதிரி இருக்கு. எனக்கு கல்யாணமே ஆகாதுன்னு எல்லாரும் சொன்னாங்க, ஆனா நீங்க என்னை கல்யாணம் பண்ணிக்கிட்டீங்க, ஒரு வேலை சாப்பாடு நல்லதா சாப்பிட்டது கிடையாது, உங்களால நான் மூணு வேலை நல்லா சாப்பிடுறேன்.


எனக்கு தூங்க வீட்டுல ஒரு ஓரமா கூட யாரும் இடம் தர மாட்டாங்க, ஆனா நீங்க எனக்கு தனியா அறையே தந்தீங்க, படிக்க வச்சீங்க, வீட்டுல மகாராணி மாதிரி இருக்க வச்சீங்க, எல்லாத்துக்கும் மேல அந்த ஊரை விட்டு தாண்டாத என்னை வேற நாட்டுக்கு அழைச்சிட்டு வந்து இருக்கீங்க மாமா, நீங்க ரொம்ப நல்லவர்.


என் வாழ்க்கைல நீங்க எனக்கு சாமி மாதிரி. கார்த்திகா என்னை கிண்டல் பண்ணுன எதுவும் எனக்கு தேவை இல்ல, எனக்கு இந்த வாழ்க்கையே போதும், காலம் முழுக்க நான் இப்படியே இருந்துடுவேன். நீங்க ஆசைப்பட்ட பொண்ணை கல்யாணம் பண்ணி குடும்பம், குழந்தைனு சந்தோஷமா இருக்குறது நான் பாக்கனும். என்னால உங்க வாழ்க்கையும் வீணா போகுது.


நான் மட்டும் ஊருக்கு போறேன் மாமா, உங்களை கேட்டா நான் ஏதாவது சொல்லிக்கிறேன். இல்ல, இல்ல நீங்க ஊருக்கு போங்க, நான் எங்கேயாவது போய்டுறேன். யாரும் உங்களை எந்த கேள்வியும் கேட்க மாட்டாங்க நீங்களும் சந்தோஷமா இருக்கலாம்.


என் வாழ்க்கைல என்னைக்கும் எனக்கு ஆண் துணை கிடையாது. நான் ஒருத்தவங்க கூட வாழுற தகுதி இல்லை, என்னை யாரும் தொட மாட்டாங்கன்னு கார்த்திகா சொன்னா எனக்கு அதை பத்தி கவலை இல்லை, நான் சந்தோஷமா இருக்கேன். அதுக்கு நீங்க தான் காரணம், இந்த சாமி தான் காரணம். என குழறி குழறி பேசியவள் மயங்கி அப்போதும் ஈஸ்வரனை விட்டு தள்ளி சரிந்தாள்.


கீழே விழும் முன்பு தன் கொடியை தாங்கி பிடித்தவன் நெஞ்சோடு அணைத்துக் கொண்டவனின் நெஞ்சாங்கூடு ஏறி இறங்கியது கோவத்தில்.


இவ்வளவு கூறியும் தன்னை புரிந்து கொள்ள மறுக்கிறாள். இந்த சாமி பட்டம் யாருக்கு வேண்டும், நான் கேட்க வில்லையே இவளிடம். இவளின் கணவன் என்ற அந்தஸ்த்தை கேட்டாள் இவள் தெய்வம் என்கிறாள். இவளுக்கு எப்படி தன் நிலையை புரிய வைப்பேன் என உள்ளுக்குள் கொதித்துக் கொண்டு இருந்தான் ஈஸ்வரன்.


கார்த்திகா மீது கொலை வெறி உண்டானது, கொடி வார்த்தையை விழுங்கி பேசுவதே வேறு உன்னை யாரும் தொட மாட்டார்கள். என கார்த்திகா கூறி இருக்க வேண்டும் என ஈஸ்வரன் சரியாக கணித்தான்.


ஒளிந்து நின்று கேட்டுக் கொண்டு இருந்த மூவருக்கும் கண் கலங்கியது. யாரால் என்ன செய்ய முடியும் என தெரியவில்லை. ஈஸ்வரன் கூறிய பொய் அவன் வாழ்வில் பலமாக விளையாடுகிறது. தன்னை நிலை படுத்திக் கொண்டவன், மயங்கிய கொடியை தூக்கிக் கொண்டு தன் அறை நோக்கி சென்றான்.


“கிங்ஸ்லி சோயாவை அழச்சிட்டு போய் தூங்கு நான் ஷிவ் கிட்ட பேசிட்டு வரேன்.”


துரு வேகமாக ஷிவ் அறை நோக்கி சென்றான். ஈஸ்வர் தன் கொடியை கட்டிலில் படுக்க வைத்தவன் அறை கதவை மூடி விட்டு வெளியே வந்தான்.


“ஷிவ் முல்லை மனசு மாறாது போல, கொஞ்ச நாளைக்கு நீ முல்லையை விட்டு பிரிந்து இரு. துருவால் அடுத்த வார்த்தை பேச முடியவில்லை.” அவனின் கழுத்து ஈஸ்வரன் கைகளில் சிக்கிக் கொண்டது.


“துரு ஒரு விஷயம் நல்லா நியாபகம் வச்சிக்கோ. என் கொடிக்கு நான் ரெண்டு ஆப்ஷன் தான் வச்சி இருக்கேன் அவள் சாகனும்னா கூட என் கூட இருந்து சாகனும், இல்ல என் கூட வாழனும் பிரியனும்னு கற்பனையில் கூட தோன கூடாது.


அவளை பிரிஞ்சி நான் வர கூடாதுன்னு தான் என்னோட அழைச்சிட்டு வந்த இனி ஒரு முறை இந்த வார்த்தையை என் முன்னாடி சொல்லிடாத நண்பன்னு கூட பாக்காமல் கொன்னுவேன்.” என முழு கொந்தளிப்பில் கர்ஜித்தான்.


துரு ஈஸ்வரன் கையை விலக்க போராடினான். துருவனின் நிலை கண்ட ஈஸ்வரன் அவன் கழுத்தை விட, துரு இருமி கொண்டே எதுவும் பேசாமல் அவன் அறை நோக்கி நடந்தான்.


ஈஸ்வரன் தன் அறைக்குள் நுழைந்தவன் கொடியை பார்த்து பெருமூச்சு விட்டபடி அவள் அருகில் அமர்ந்து தன் கணினியில் அவசரம் அவசரமாக வேலை செய்ய துவங்கினான்.


முல்லை குடித்து விட்டு குழந்தை போல் செய்த ரகளைகள் அனைத்தையும் ரசித்து பார்த்தவனுக்கு கொஞ்சம் பொறாமையும் சேர்ந்து கொண்டது. அவள் தன்னை கண்டு கொள்ளவில்லை. தன்னையும் அதில் சேர்த்துக் கொள்ளவில்லை. இல்லை இல்லை அவள் தன்னுடன் மட்டுமே இது போல் விளையாட வேண்டும் என்ற கோவம் கூட முளைத்தது.


விளையாடி களைத்து முடித்தவள் ஈஸ்வரனை சாமி போல் பூஜிப்பதை பற்றி கூறி அவனை காண்டாக்கினாள். முல்லையை அறைக்குள் தூக்கி வந்தவன் அவளை கட்டிலில் படுக்க வைத்து விட்டு நிமிர வெடுக்கென எழுந்து அமர்ந்தாள் முல்லை. அவள் எழுந்து அமர்ந்த வேகத்தில் ஈஸ்வரன் பயந்து போனான்.


“கொடி என்ன ஆச்சு?” என பதட்டமாக கேட்டான். ஒரு இடத்தில் நிற்காமல் உருண்டு கொண்டிருந்த அவளின் முழியை கண்டு பயந்தபடி.


“மாமா!” என அவனின் சட்டை காலரை பிடித்து இழுத்து குழந்தை போல் சிரித்தவள்.


அவன் சட்டை பட்டனை திருகியபடி, "நான் ஒன்னு கேப்பேன் நீங்க திட்ட கூடாது." என்றாள்.


ஈஸ்வரன் மனமோ பலவாறு யோசித்தது. அதிலும் அவள் திருகிய விதம், கேட்ட விதம், அவளின் சிரிப்பு அனைத்தும் ஈஸ்வரனின் மனதிற்குள் ஒரு குறு குறுப்பை கொடுத்தது.


ஏதேதோ யோசித்தபடி, "என்ன கேட்க போற கொடி? நான் எதுக்கு உன்னை திட்ட போறேன்? உனக்கு என்ன கேக்கணுமோ கேளு." என ஆசையும், ஆவலுமாக கேட்டான்.


“உண்மையா திட்ட மாட்டீங்க தானே?”


“மாட்டேன்.” என ஈஸ்வரன் தலை அசைக்க.


அவனின் சட்டை பட்டனை விடாமல் திருகி கொண்டே இருந்தவள் நெளிந்து கொண்டே அவனின் மனகுதிரையை தறிக் கெட்டு ஓட விட்டு கேட்டாள்


"மாமா எனக்கு சப்போட்டா பழம் வேணும், வாங்கி தரீங்களா?"


ராட்சத பலூனுக்கு மூச்சு முட்ட காற்றடித்து அதை பிடுங்கி விட்டது போல் இருந்தது
ஈஸ்வரன் நிலைமை. ஏமாற்றம் முகத்தில் மருதாணி மாதிரி தெரிய,


"என்ன வேணும் உனக்கு?" தன் காதில் சரியாக விழுந்ததா என அறிந்து கொள்ள மீண்டும் கேட்டான்.

பட்டனை விடாமல் திருகியபடி, "எனக்கு சப்போட்டா பழம் வேணும், வாங்கி தரீங்களா?"


பாவமாக முகத்தை வைத்துக் கொண்டு பழம் கேட்டவளை கண்டு சற்று நகர, அவள் திருகி கொண்டிருந்த பட்டன் அறுந்து கீழே விழுந்து உருண்டு ஓடியது. ஓடிய பட்டனை கண்டவள் கட்டிலில் இருந்து துள்ளி குதித்து எழுந்தாள். அந்த பட்டனை தேடிக் கொண்டு இருந்தவள் அருகில் வந்தவன்,


"என்ன தேடுற கொடி?"


“மாமா! சட்டையில் இருந்த பட்டன் கீழே விழுந்துடுச்சி அதை தான் தேடுறேன். என்னை மன்னிச்சிடுங்க மாமா. நான் தேடி எடுத்து தரேன்.” என நகத்தை கடித்துக் கொண்டு கூறியவளை ரசிக்காமல் இருக்க முடியவில்லை ஈஸ்வரனால்.


இதுவே சாதாரணமாக இருந்து இருந்ததால் கண்களை பார்த்து இறுக்கத்தோடு பேசி இருப்பாள். இன்று குடித்ததால் அவளின் இறுக்கத்தை தொலைத்து குழந்தை போல் நடந்து கொள்வதை ரசிக்காமல் எப்படி இருப்பான். தேவையை தவிர்த்து அதிகம் பேசாதவள் இன்று தேவை இல்லாததை எல்லாம் பேசிக் கொண்டு இருக்கிறாளே அவனின் கொடி.


அவளின் கையை பிடித்து இழுத்து நேராக நிற்க வைத்தவன், “பட்டனை அப்புறம் தேடலாம் கொடி. நீ சப்போட்டா பழம் தானே கேட்ட, நான் போய் வாங்கிட்டு வரேன். நீ நல்ல பொண்ணா கட்டில்ல உக்காந்து இரு.” என்றவன் திரும்ப, அவனின் கைகளை பற்றினாள்.


ஈஸ்வரன் ஆச்சரியமாக தன் மனைவியை திரும்பி பார்க்க, “மாட்டேன் மாமா, நான் ஒன்னும் நல்ல பொண்ணு கிடையாது. என்னையும் உங்க கூட அழைச்சிட்டு போங்க. நானும் வாரேன் சப்போட்டா பழம் வாங்க.”


அவள் சாதாரணமாக கேட்டு இருந்தாலே அழைத்துக் கொண்டு சென்று இருப்பான். இப்பொழுது தலை அசைத்து குழந்தை போல் கேட்கும் போது எப்படி விட்டு செல்வான்.


“வா போகலாம்.” என தன் கரத்தை அவளை நோக்கி நீட்டினான்.


அவன் நீட்டிய கரத்தில் தயக்கம் இல்லாமல் தன் கையை வைத்தவளை தன்னை நோக்கி இழுத்துக் கொண்டான் ஈஸ்வரன். அவன் இழுத்த இழுப்புக்கு அவன் நெஞ்சு வரை சென்றவள் பாதத்தை தரையில் அழுத்தமாக ஊன்றி அவனை தொடாமல் நின்று கொண்டாள்.


அவளின் செயலை கண்டவன், ‘இதுக்கு ஒன்னும் குறைச்சல் இல்லை.’ என நினைத்துக் கொள்ள, "அவ இன்னைக்கு உன் கூட பேசுனதே ஆச்சரியம், இதுல சப்போட்டா பழம் கேட்டது இன்னும் மிகப் பெரிய ஆச்சரியம், அதுக்கு மேல எதிர் பார்க்காத." என மனசாட்சி மண்டையில் கொட்டியது. தன் கொடி தன் கையை விடாமல் இருப்பதே போதும் என தன்னவளை அழைத்துக் கொண்டு கிளம்பினான்.



தொடரும்...