அத்தியாயம் – 45
காருக்குள் அமர்ந்து இருந்தவள் இரவு வெளிச்சத்தில் அந்த நாடு ஜொலிப்பதை விழிகள் விரிய பார்த்துக் கொண்டே வந்தாள். ஆண்கள், பெண்கள் அனைவரும் சாதாரணமாக கட்டி பிடித்து நிற்பதை கண்டு வெக்கத்துடன் சிரித்துக் கொண்டாள். அவள் முகத்தில் பூத்த வெக்க சிரிப்பை கண்டவன் வெளியே கவனித்தான். அவளின் சிரிப்புக்கு அர்த்தம் புரிந்தது.
“இங்க இது எல்லாம் சர்வ சாதாரணம் கொடி. உனக்கு புதுசா இருக்கு.”
“இல்ல மாமா நான் முன்னாடியே பாத்து இருக்கேன்.” என்றவளை ஆச்சர்யமாக பார்த்தான்.
"எப்போ பார்த்த கொடி? நீ கிராமத்தை விட்டு வெளியே வந்ததே இல்ல. கிராமத்தில் யாரும் இப்படி பண்ண மாட்டாங்க, நீ எங்க பார்த்த?"
முழியை உருட்டி உருட்டி ஈஸ்வரனை பார்த்தவள் உதட்டை சுழித்து சிரித்துக் கொண்டே, "துரு கூட வெளியே போனேனே அப்போ பார்த்தேன் மாமா.” என குழறிய படி கூறினாள்.
“இடியட் உன்னை எதுக்கு தான் அவன் வெளியே அழைச்சிட்டு போனான்னே தெரியல!” என சீட்டை குத்தியவன், “நீ இதை எதுவும் பாக்க கூடாது கொடி, அமைதியா ரோட்டை பாரு.” என்றான்.
“சரி மாமா!” என அதன்பிறகு சாலையை மட்டுமே பார்த்துக் கொண்டு இருந்தாள் கொடி.
ஒரு கடை வாசலில் காரை நிறுத்தியவன் மறுபுறம் வந்து கதவை திறந்து கொடியை கை தாங்களாக கீழே இறக்கி விட்டான். அவள் ஆடும் தள்ளாட்டத்தை கண்டு சிரித்தவனுக்கு அவள் மேல் கோவம் வரவில்லை.
“கொடி என் கையை விடவே கூடாது, என் பக்கத்துல தான் இருக்கணும், என்னை விட்டு தூரமாக போக கூடாது இல்லனா கூட்டத்துல தொலைந்து போய்டுவ.” என மூடிய கடையை பார்த்து மனசாட்சியே இல்லாமல் கூறினான்.
ஷாப் ஓனர் கடையை மூடி விட்டு நிம்மதியாக தூங்கிக் கொண்டு இருந்தார், ஈஸ்வரன் கொடியை அழைத்துக் கொண்டு ஷாப் ஓனர் வீட்டுக்கே சென்று கதவை தட்டினான்.
கடுப்பாக கதவை திறந்த ஓனர் ஈஸ்வரனை கண்டதும் பல் தெரிய சிரித்தவர், "ஹாய் ஷிவ், ஹவ் ஆர் யூ?" என்றார்.
“எஸ் ஃபைன் டேம்.” என்றவன் அவரை இழுத்து வந்து கடை திறக்க வைத்தான்.
கொடியை அழைத்துக் கொண்டு கடைக்குள் சென்றவன் அவள் கேட்ட சப்போட்டா பழத்தை தேட துவங்கினான். அவனின் கொடியின் தள்ளாட்டமும் அதிகமானது. ‘சாதாரண சரக்கை குடிச்சதுக்கே இவள் இப்படி ஆடுறா என் கொடி!’ என மனதில் கொஞ்சிக் கொண்டவன் காதில் கத்தினாள்,
"மாமா சப்போட்டா பழம்." என.
ஈஸ்வரன் கையை விட கூடாது என கூறியதால். அவனை இழுத்துக் கொண்டு ஓடினாள் பழம் இருக்கும் இடத்துக்கு. தன்னை அவள் விருப்பத்துக்கு ஆட்டி படைக்கும் கொடியை பார்வையால் விழுங்கியவன்.
“இதுவும் சந்தோஷமா இருக்கு.” என தனக்கு தானே கூறிக் கொண்டான்.
பழத்தை கையில் எடுத்து இரண்டாக பிரித்தவள் ஒரு பாதியை தன் மாமனுக்கு கொடுத்து விட்டு மறுபாதியை சப்புக் கொட்டி சுவைத்தாள்.
கொடி சாப்பிடுவதை கண்டு கண்களை சுருக்கி பார்த்தான். அவளோ ஒன்று இரண்டு, மூன்று என பத்து பழங்களுக்கு மேல் சாப்பிட்டு விட்டாள். ஈஸ்வரன் அவள் கொடுத்த பாதியை கையில் பிடித்த படி நின்று இருந்தான் அவனுக்கு அந்த பழத்தின் சுவை, வாசனை பிடிக்காது. அதே நேரம் அவன் சாப்பிடும் நேரத்தை தவிர்த்து மற்ற நேரங்களில் எதுவும் சாப்பிட மாட்டான் அதனால்.
அவளின் ஆசைகள் ஒவ்வொன்றையும் நிறைவேற்ற வேண்டும் என தன் பிறந்தநாளில் முடிவு எடுத்துக் கொண்டவன், "கொடி உனக்கு வேற எதாவது வேணுமா?" என மென்மையாக கேட்டான்.
இருவரையும் ஷாப் ஓனர் வேடிக்கை பார்த்துக் கொண்டு இருந்தவர் உதட்டில் மெல்லிய புன்னகை.
கொடி தாடையில் விரல் பதித்து யோசித்தவள், “மாமா இருக்கு இன்னும் ஒன்னு இருக்கு."
இம்முறை பலமாக எதிர்பார்த்து பல்ப் வாங்க விரும்பாதவன், "வேற என்ன பழம் வேணும் கொடி?"
"பழம் வேண்டாம் மாமா." என சிணுங்களாக கூறினாள்.
"வேற என்ன?"
“நம்ப பிரியுறதுக்கு முன்னாடி என்னை இதே மாதிரி வேற ஏதாவது ஊருக்கு அழச்சிட்டு போறீங்களா? சுத்தி காட்டுறீங்களா? மாமா.”
அவளை கூர்மையாக பார்த்தவன், அவளின் தாடையை தன் ஒற்றை விரல் கொண்டு நிமிர்த்தினான்,
“நல்லா காதை திறந்து வச்சி கேட்டுக்கோ எக்காரணம் கொண்டும் நம்ப பிரிய மாட்டோம், உன்னை நான் விட்டு தரவும் மாட்டேன். நீ எனக்கு மட்டும் தான் சொந்தம், அதே மாதிரி இந்த ஈஸ்வரன் உனக்கு மட்டும் தான் சொந்தம். இது இனி எத்தனை ஜென்மம் எடுத்தாலும் மாறாது.” கொடி என்றான் அவள் தெளிவாக இல்லாத நேரத்தில்.
அவள் தெளிவாக இருக்கும் நேரத்தில் கேட்டு இருந்தால் கூட இந்த வார்த்தைகள் அவனுக்கு சாதகமாக அமைந்தது இருக்கும். அவனோ தவறான நேரத்தில் தன் உணர்வுகளை வெளிப்படுத்திக் கொண்டு இருக்கிறான்.
அவன் பேசியதை ஒழுங்காக காதில் வாங்காதவள், "அப்போ என்னை வெளிய அழைச்சிட்டு போக மாட்டீங்களா மாமா?”
அவளின் கேள்வியை தவிர்த்தவன் மறக்காமல் சப்போட்டா பழங்களை ஒரு கவரில் அள்ளி போட்டுக் கொண்டு வந்தவன் ஓனர் கரத்தில் ஒரு கட்டு பணத்தை திணித்தான்.
அதை சந்தோஷமாக வாங்கிக் கொண்டவர், "யார் ஷிவ் இந்த பொண்ணு?"
"என் மனைவி."
"சூப்பர் ஷிவ் பாக்கவே ரொம்ப சந்தோஷமா இருக்கு. வாழ்த்துக்கள்."
அவருக்கு சிறு தலை அசைப்பை மட்டும் கொடுத்தவன் கொடியை கை தாங்களாக அழைத்துக் கொண்டு வந்து காரில் அமரவைத்தான். கார் சிறிது தூரம் கூட நகர்ந்து இருக்காது சரிந்து வந்து ஈஸ்வரன் தோளில் சாய்ந்து கொண்டாள்.
"மாமா ஆட்டாம ஒழுங்கா ஓட்டுங்க, என்னால ஒழுங்கா உக்கார முடியலை." நிமிர்ந்து அமர்ந்தவளை கண்கள் சிரிக்க பார்த்தவன்.
“இனி ஒழுங்கா ஓட்டுறேன் கொடி.” என்றான் உதட்டை வளைத்து கடித்தபடி.
நேராக அமர்ந்தவள் மீண்டும் சரிந்து வந்து அவன் மீதே சாய, "கொடி ரோட் சரி இல்ல ரொம்ப மோசமா இருக்கு, அதான் கார் இப்படி ஆடுது. நீ இப்படியே சாய்ந்து அமர்ந்துக்கோ." என்றான் முந்திக் கொண்டு.
சாலை சின்ன கீறல் கூட இல்லாமல் வழ வழவென வழுக்கி கொண்டு சென்றது அப்படி பட்ட சாலையை தன் மனைவிக்காக குறை கூறுகிறான்.
“சரி மாமா.” என்றவள் அப்படியே சாய்ந்து அமர்ந்து இருந்தாள்.
எப்படியும் அவள் சாதாரணமாக இருக்கும் போது இப்படி பட்ட வாய்ப்புகள் கிடைக்காது என்பதால் இந்த நொடியை சந்தோஷமாக அனுபவித்தான்.
காரிலிருந்து கைத்தாங்கலாக கொடியை அழைத்து வந்தவன் அறையில் அவளை படுக்க வைத்துவிட்டு, அருகே அமர்ந்தவன் பிறகு லேப்டாப்பை அணைத்து விட்டு தானும் படுத்துக்கொண்டான். தன்னை சுற்றி நடப்பது தெரியாமல், தான் என்ன பேசினோம் என உணராமல் நிம்மதியாக தூங்கிக் கொண்டு இருந்தாள் முல்லை.
விடிந்தும் விடியாத பொழுதில் ஈஸ்வரன் தயாராகி கீழே இறங்கினான். சோயா, துரு, கிங்ஸ்லி மூவரும் ஈஸ்வரனுக்காக காத்திருந்தனர்.
தன் கையில் இருந்த பைலை மூவர் கையிலும் ஒவ்வொன்று கொடுத்தவன், “என்னுடைய சொத்துக்கள் எல்லாத்தையும் உங்க மூணு பேர் பேர்ல எழுதிட்டேன். இனி நான் இங்க வர மாட்டேன். இந்த வேலையை முடிக்க தான் நான் ஆஸ்திரேலியா வந்ததே.
எனக்கான வாழ்க்கை இனி என் ஊர்ல என் கொடி கூட தான். அவள் என்னை ஏத்துகிட்டா சந்தோஷமா வாழ்வோம், அவள் என்னை ஏத்துகலனா இதே மாதிரி வாழ்ந்துட்டு சாவோம் என் முடிவுல எந்த மாற்றமும் இல்ல.
இங்க வந்ததில் இருந்து அவளுக்கும் எனக்கும் இடையில் பெரிய திரை இருக்கா மாதிரி இருக்கு, கட்டாயம் நீங்க ஊருக்கு வரனும்.” என்றான் பொதுவாக.
“ஷிவ் நீ உண்மையாவே அந்த கிராமத்தை ஏத்துகிட்டியா, அங்கேயே வாழ போறியா?
உனக்கு ஒத்து வருமா?” அதிர்ச்சி குறையாமல் கேட்டான் துரு.
“அது என் ஊரு துரு, அந்த மக்கள் என் மக்கள் எனக்கு கொடி கிடைத்ததும் அங்க தான், என் கைல இருக்க தண்டை கிடைத்ததும் அங்க தான், இங்க பொய்யான மரியாதை கிடைக்குது. அங்க என்னை கடவுளா பாக்குறாங்க, என்னால அவுங்களை விட்டு வர முடியாது. இனி என்னுடைய கடமையை ஒழுங்கா பாக்க போறேன், என் கொடியோட என்னுடைய வாழ்க்கையை சந்தோஷமா வாழ போறேன்.”
துரு, சோயா, கிங்ஸ்லி மூவருக்கும் ஈஸ்வரனின் முடிவை கண்டு அதிர்ச்சியாக இருந்தது.
அவன் வாழ வேண்டும் என ஆசை பட்டு உருவாக்கிய இந்த பிரமாண்ட வாழ்க்கையை விட்டு செல்கிறான் அவன் காதலுக்காக, அவனுக்காக. அவனின் காதலின் ஆழத்தை கண்டு மூவரும் வியந்து நின்றனர். கொடி மீது ஆழ்கடலை விட அதிகமாக காதலை கொண்ட ஈஸ்வரனை நினைத்து பெருமிதம் கொண்டனர். சீக்கிரம் முல்லை ஈஸ்வரனை ஏற்றுக் கொள்ள வேண்டும் என நினைத்துக் கொண்டனர்.
முல்லை தயாராகி கீழே வந்தாள். “கொடி கிளம்பலாமா?”
"எங்க மாமா?"
"நம்ப ஊருக்கு, நம்ப வீட்டுக்கு கொடி."
"சரி மாமா, சில்வியாவை அழச்சிட்டு போவோம்."
“அவ எதுக்கு?” என சோயா, துரு இருவரும் கோரசாக கத்தினர்.
“அவுங்க எங்க கூட ஊருக்கு வரேன்னு சொல்லி இருந்தாங்க. வரது நல்லது தான், நான் எல்லா வேலையும் அவுங்களுக்கு பழக்கி விட்டுடுவேன்.”
சில்வியா கையில் பையுடன் இறங்கி வர ஈஸ்வரன் தன் கொடியை நினைத்து உள்ளுக்குள் சிரித்துக் கொண்டான்.
“ஓகே துரு நாங்க கிளம்புறோம்.” என்றவன், ஷிவ் என்னும் அடையாளத்தை விட்டு ஈஸ்வரனாக தன் கொடியுடன் தன் ஊர் நோக்கி கிளம்பினான்.
"வா ஈஸ்வரா உனக்கான பொறுப்பும், சிம்மாசனமும் காத்திருக்கு." என கம்பன் கூறியபடி கோவிலை பார்த்து நின்று இருந்தான்.
ஈஸ்வரன் மீண்டும் கிராமத்துக்குள் நுழைந்தது தெரியாமல் சித்தப்பு லிங்கத்தை எடுக்க திட்டம் தீட்டினார். ஈஸ்வரன் இனி வரவே மாட்டான் என நினைத்து கொண்டார்கள் போல.
ஈஸ்வரனோ சத்தம் இல்லாமல் வீட்டிற்குள் நுழைந்து தூங்கிக் கொண்டு இருந்தான். அவன் இல்லாத காலத்தில் அம்மன் நகைகளை எடுக்க ரகசிய அறையை கண்டு பிடிக்க பல வழிகளில் முயற்சி செய்து தோற்று போனார். ரகசிய அறை ரகசியமாக மட்டும் தான் இருக்கும், ஈஸ்வரனை தவிர்த்து அந்த அறைக்குள் செல்ல யாருக்கும் அனுமதி கிடையாது.
பாதி இரவில் வந்து தூங்கி இருந்தாலும், கொடி வழமை போல் சீக்கிரம் எழுந்து விட்டாள். எழுந்ததும் குளித்து முடித்து துணி மாற்றி விட்டு சில்லு அறையை நோக்கி சென்றாள்.
“சில்வியா கதவை திறங்க.” என கொடி பல முறை தட்டியும் அவளோ யானை போல் தூங்கிக் கொண்டு இருந்தாள். எட்டு மணிக்கு முன்பு கண்களை திறக்க கூட மாட்டாள் அவள்.
தன் கொடி குரலில் ஈஸ்வரன் விழித்து வெளியே வந்தவன் "சில்வியா!" என ஈஸ்வரன் சத்தமாக ஒரு முறை தான் அழைத்தான். பதறிக் கொண்டு எழுந்து ஓடி வந்தாள் சில்லு.
முல்லை தன் மாமனை பார்க்க, "என் பொண்டாட்டி எவ்வளோ நேரம் கதவை தட்டுறா!" என கடுப்பாக கூறியவன், “கொடி துண்டு எடுத்துட்டு வா.” என கூறி விட்டு குளிக்க சென்றான்.
“சில்வியா நீ வா நம்ப வீட்டு பழக்க வழக்கம் எல்லாம் நான் கத்து தரேன். நீங்க வேலை எல்லாமே பழக்கிக்க தான் உங்களை அழைச்சிட்டு வந்தேன். வீட்டு நிர்வாகத்தை தெரிஞ்சிக்க வேண்டியது ரொம்ப ரொம்ப அவசியம் சில்வியா.
முதல்ல நீங்க போய் குளிச்சிட்டு வாங்க, குளிக்காமல் எந்த பொருளையும் தொட கூடாது. பச்சை தண்ணில தான் குளிக்கணும்.”
சில்வியா உறைந்து நின்றாள். மணியை பார்க்க, நான்கு மணி தான் ஆகி இருந்தது, இந்த நேரத்தில் குளிக்கணும், வேலை செய்யணும் என்ன கொடுமை இது இந்த ஊர் இன்னமும் 80 காலத்தில் இருக்கு போல என நினைத்தவள் ஈஸ்வரன் மனதில் இடம் பிடிக்க குளிக்கும் இடம் நோக்கி ஓடினாள்.
தொடரும்...