• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

முரடன் - 47

NiviAmmu

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jul 26, 2024
67
28
18
Tamilnadu
அத்தியாயம் – 47



“சில்வியா வெளிய வாங்க.” என முல்லை கதவை தட்டிக் கொண்டு இருக்க கதவு தானாக திறந்து கொண்டது.

‘என்ன கதவை மூடாமல் இருக்காங்க.’ என யோசித்தபடி உள்ளே நுழைந்தவள் வெறும் அறையை கண்டு அதிர்ந்தாள்.

“எங்க போனா சில்வியா?”

அங்கிருந்த மேஜையில் ஓர் காகிதம் பறந்து கொண்டு இருந்தது. காகிதத்தை கண்டவள் அது ஆங்கிலத்தில் இருக்கும் என அதை பிரித்து கூட பார்க்காமல் எடுத்துக் கொண்டு மாமனை தேடி சென்றாள்.

ஈஸ்வரன் தன் சித்தப்பனை தேடியபடி வீட்டுக்குள் நுழைந்தவன் தன் கொடி பதட்டமாக வருவதை கண்டான்.

“என்ன கொடி எதுக்கு இவ்வளவு அவசரம் படியில் இறங்கும் போது நிதானமா இறங்கி வா.”

“மாமா சில்வியாவ காணும், அவுங்க அறைல இந்த பேப்பர் மட்டும் தான் இருந்துச்சி. எங்க போனாங்கன்னு தெரியலை? எனக்கு தான் ஆங்கிலம் முழுசா தெரியாதே நீங்க படிங்க.” என பேப்பரை ஈஸ்வரன் முன்பு நீட்டினாள்.

ஈஸ்வரன் மனதுக்குள் சிரித்துக் கொண்டான், "இவளோ சீக்கிரம் போய்ட்டாளா!” பேப்பரை திறந்தவன் அது தமிழில் இருப்பதை கண்டு பெருமூச்சு விட்டான்.
அந்த பேப்பரை கொடி முன்பு நீட்டி தமிழ்ல தான் இருக்கு நீயே படி கொடி.

"நீங்களே படிங்க மாமா!"

தன் நிலையை எண்ணி நொந்தவன், "கொடி எனக்கு தமிழ் படிக்க, எழுத தெரியாது. கொஞ்சம் கொஞ்சம் பேசுவேன், அதுவும் சோயா தான் சொல்லி குடுத்தா. நான் பேசுறது வச்சி உனக்கே தெரிஞ்சு இருக்கும்." என தயங்காமல் மனைவியிடம் உண்மையை கூறினான் இன்று.

முல்லை அதிர்ச்சியாக தன் மாமனை பார்த்தாள், "உண்மையா உங்களுக்கு தமிழ் தெரியாதா? நான் கூட வெளிநாட்டுல இருந்ததால கொழ, கொழன்னு பேசுறீங்கன்னு நினைத்தேன் மாமா.”

"எனக்கு தெரியாது கொடி, ஆனா சோயா, சில்வியா நல்லா பேசுவாங்க. சில்வியா அப்பா தமிழ் தான். அவுங்க ரெண்டு பேர் கிட்டேந்தும் துரு கத்துகிட்டான். நான் அதிகமா அவுங்க ரெண்டு பேர் கூட பேச மாட்டேன் அதனால நான் கத்துக்கல, இந்த பாதி தமிழ் கூட இந்த ஊருக்கு வரணும்னு கம்பன் கத்துக்க சொன்னான். உன் கிட்டேந்து தான் இப்போ நிறைய கத்துகிட்டு இருக்கேன். பேசுவேன் ஆனா முழுசா படிக்க தெரியாது.”

தமிழ் தெரியாமலேயே தடுமாறாமல் பேசும் மாமனை கண்டு வியந்தவள் கடிதத்தை படிக்க துவங்கினாள்.

"வணக்கம் முல்லை. இந்த கடிதம் உங்களுக்கு தான். நான் உங்க முகத்துக்கு நேரா சொல்லியும் நீங்க அதை புரிஞ்சிக்கல. எனக்கு வேலை செய்ய பிடிக்கல அது உண்மை தான்.

என் அப்பாவும் சரி, ஷிவ்வும் சரி எங்களை சின்ன வேலை கூட செய்ய விட்டது கிடையாது. இந்த ஊர், இந்த பழக்க வழக்கம் எல்லாம் பழங்காலத்து முறை நீங்க இன்னும் மாறாமல் இருக்கீங்க. எனக்கு ஒத்து வராத வாழ்க்கை முறை. ஷிவ் நினைச்சு ரொம்ப ஆச்சரிய படுகிறேன். எல்லாத்தையும் உங்க முகத்துக்கு நேரா சொல்லிட்டேன் ஒரு முக்கியமான விஷயத்தை தவிர.

" ஷிவ் விரும்புறது உங்களை தான், ஷிவ் மறைமுகமாக புரிய வைக்க முயற்சி பண்ணுறாரு உங்களுக்கு புரியல. ஷிவ் இந்த ஊருல இருக்க காரணமே நீங்க தான், நீங்க மட்டும் தான் காரணம்.

உண்மையை சொல்லனும்னா எங்க ஷிவ் காணாமல் போய்ட்டான். இப்போ இருக்குறது ஈஸ்வரன். கொடியோட மாமன். உங்க மாமா மனசுல நீங்க மட்டும் தான் இருக்கீங்க. உங்களை தான் ஷிவ் காதலிக்கிறான். நீங்க சீக்கிரமே புரிஞ்சிக்க முயற்சி பண்ணுங்க.

அடுத்த முறை நாங்க கிராமத்துக்கு வரும் போது ஒரு குட்டி ஷிவ் உங்க கைல இருக்கணும். பொய் சொல்லுறது மனித இயல்பு. உங்களுக்கு அது பெரிய குத்தமா தெரியுது. ஷிவ் உங்க கிட்ட பொய் சொன்னான். இதுவரை ஷிவ் யாரையும் காதலிக்கல."

இத்தோடு முடிந்து இருந்தது கடிதம். கடிதத்தை படித்து முடித்த முல்லை சிலையாக நின்று இருந்தாள். தன் காதலை பற்றி ஈஸ்வரன் நேரடியாக கூற சந்தர்ப்பம் எதிர் பார்த்து காத்திருந்தான். ஆனால் அதற்கு முன்பே சில்லு கூறி விட்டாள்.

முல்லை ஈஸ்வரனை நிமிர்ந்து பார்க்காமல் அவனை கடந்து சென்றாள்.

“கொடி!” என அழைத்தவன் அவள் கை பிடிக்க போகும் போது,

"அண்ணா வந்துட்டீங்களா? எப்போ வந்தீங்க? வரீங்கன்னு சொல்லவே இல்ல."

நீ எதற்கு வந்தாய், நீ திரும்பி வர மாட்டாய் என்று நினைத்தேன் என்பது போல் கேட்டான் ராஜேந்திரன்.

தன்னை கொலை செய்ய நினைத்தவன் சாதாரணமாக நிற்பதை கண்டவன், “எனக்கு இங்க முடிக்க வேண்டிய வேலை நிறைய இருக்கு. எல்லாருக்கும் தகுந்த தண்டனை குடுக்கணும்.” என்றான் பல்லை கடித்து படி ஈஸ்வரன்.

ராஜேந்திரன் எச்சிலை கூட்டி விழுங்கினாலும் உன்னால் எங்கள எதுவும் பண்ண முடியாது என்ற திமிர் தெரிந்தது. ‘சீக்கிரம் எல்லாத்துக்கும் ஒரு முடிவு கட்டுறேன்.’ என நினைத்துக் கொண்ட ஈஸ்வரன் திரும்பி தன் கொடியை தேட, அவளோ அங்கு இல்லை.

இவனிடம் பேசிய நேரத்தில் கொடி எந்த திசை சென்றாள் என தெரியவில்லை. கடிதத்தை படித்தவள் எந்த பதிலும் கூறாமல் போனதை விட தன் முகத்தை கூட பார்க்காமல் போனது ஈஸ்வரன் இதயத்தை ஊசி போல் குத்தியது.

அவள் கோவிலுக்கு சென்று இருப்பாள் என அவளை தேடி அவசரமாக கோவிலுக்கு சென்றான். ஈஸ்வரன் நினைத்தது போலவே கொடியின் செருப்பு வெளியே கிடந்தது.

நேராக அம்மன் சன்னதி சென்றவன் அங்கு அமர்ந்து மூக்குத்தி அம்மனையே வெறிக்க பார்த்துக் கொண்டு இருக்கும் மனைவியை கண்டு சத்தம் செய்யாமல் அவள் அருகில் சென்று அமர்ந்தான். தன் மாமன் தன் அருகில் அமர்வதை கூட உணராமல் அந்த தாய் முகத்தையே வெறிக்க பார்த்துக் கொண்டு இருந்தாள்.

அவளையே பார்த்துக் கொண்டு இருந்த ஈஸ்வரன், “கொடி!” என மென்மையாக அழைத்தான். அவளோ காது கேட்காதது போல் அமர்ந்து இருந்தாள்.

“கொடி!” என அழுத்தமாக அவளை நெருங்கி அழைத்தான்.

இம்முறை காதில் வாங்கியவள் திரும்ப அவள் மூக்கோடு, ஈஸ்வரன் மூக்கு உரசுவது போல் நெருக்கமாக இருந்தான். சட்டென்று தலையை பின்னுக்கு இழுத்துக் கொண்டவள்,

“நீங்க இங்க என்ன பண்ணுறீங்க மாமா?” பார்வையை தாழ்த்தியபடி கேட்டாள்.

“என்னை பாரு, எதுவா இருந்தாலும் என்னுடைய கண்ணை பார்த்து கேளு கொடி. மண்ணுல என் முகம் இருக்கா, இல்லை பொருள் எதாவது தொலைச்சுட்டியா?”

பதில் கூறாமல், அப்போதும் தன் மாமனை நிமிர்ந்து பார்க்காமல் அழுத்தமாக அமர்ந்து இருந்தாள். இவர்கள் இருவரின் ஊடலான விளையாட்டை அம்மன் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தாள். அவள் முன்பு நடக்கும் விளையாட்டு அல்லவா இது.

“கொடி ஐ லவ் யூ!!!"

சாதாரணமாக பட்டென கூறி விட்டான், ஆடம்பரம் பண்ணாமல். அவளோ புரியாமல் பார்த்தாள் தன் மாமனை. அவள் பார்வையை கண்டவனுக்கு கம்பன் கூறியது நினைவில் வந்தது.

கொடி, "நான் உன்னை மட்டும் தான் காதலிக்கிற, இதுக்கு முன்னாடி நான் யாரையும் காதலிக்கல, இனியும் உன்னை தவிர வேற யாரையும் நான் காதலிக்க போறது இல்ல." மிக மிக மென்மையாக, உறுதியாக கூறினான் ஈஸ்வரன் அவள் கண்களை பார்த்தபடி.

முல்லை மூச்சை நன்றாக இழுத்து விட்டுக் கொண்டவள், "நீங்க திரும்பவும் என் கிட்ட பொய் சொல்லுறீங்களா மாமா." ஏமாற்றமாக கேட்டாள்.

"இல்ல கொடி. இப்போ உன் கிட்ட பொய் சொல்லல, இனி எக்காரணம் கொண்டும் உன் கிட்ட பொய் சொல்லவே மாட்டேன் கொடி, சில சந்தர்ப்பங்களில் என்னால் உன் கிட்ட உண்மையை சொல்ல முடியாமல் போனாலும், பொய் சொல்ல மாட்டேன்.

என்னால் உண்மையை சொல்ல முடியாத சூழ்நிலையில் நீ துருவி கேட்க கூடாது. இன்னைக்கு நான் சொல்லுறது சத்தியம் கொடி. உன் தாயை அம்மனை கை காட்டி சாட்சியா வச்சு தான் சொல்லுறேன் நான் உன்னை மட்டும் தான் காதலிக்கிறேன். என் வாழ்க்கையின் தனி அத்தியாயம் நீயடி. புது அத்தியாயம் நீ.

நான் பேசுறது வெறும் வசனமா தெரியலாம், உன் மனசுக்கு ஏற்க முடியாமல் போகலாம்.
பொய் சொன்னது என் தப்பு தான். இனி என் உயிர் இருக்க வரைக்கும் உன் கிட்ட பொய் சொல்லவே மாட்டேன் கொடி. இது உன் மேல் சத்தியம்." என அவள் தலையில் அடித்து சத்தியம் செய்தான்.

வெடுக்கென்று தன் மாமன் கையை தன் தலையில் இருந்து தட்டி விட்டவள், "நான் சாக விரும்பல மாமா, இன்னும் கொஞ்ச நாள் வாழனும். நீங்க என் தலையில் அடித்து பொய் சத்தியம் பண்ணுனா நான் செத்துடுவேன்.”

அவள் வாயை இறுக்கமாக மூடினான். “அப்படி சொல்லாத டி நான் இன்னும் எந்த சந்தோஷத்தையும் பார்க்கல. கோவிலா இருக்கு இல்ல வேற எதாவது சொல்லி இருப்பேன்.”

தன் வாயில் இருந்த தன் மாமன் கையை மீண்டும் தட்டி விட்டாள். “நானும் தான் இன்னும் எந்த சந்தோஷத்தையும் பாக்கல மாமா, நீங்க பொய் சத்தியம் பண்ணுனா தான் சாவேன். சத்தியத்தை திரும்ப வாங்கிக்கோங்க.”

உலகம் அறியா பச்சை குழந்தை போல் பேசினாள் கோவமாக. அதை விட மோசமாக அவளை புரியாமல் பார்த்துக் கொண்டு இருந்தான் ஈஸ்வரன்.

“சத்தியம் பண்ணுனா சாவாங்களா? சத்தியத்தை எப்படி டி திரும்ப வாங்குறது?”

இன்னும் நம்ப ஊரின் மகிமை புரியாமல் முழிக்கிறான் நாயகன். நாயகியோ காதலை பற்றி அறியாமல், காய்ந்த மண்ணாக அவனையும் சேர்த்து குழப்பிக் கொண்டு இருக்கிறாள்.

“எப்படி டி சத்தியத்தை திரும்ப வாங்குறது? நான் தான் பொய் சொல்ல மாட்டேன்னு சொல்லிட்டேன் அப்பறம் என்ன டி?”

“மாமா நீங்க என் மேல இரக்கபட்டு இப்படி எல்லாம் பேசுறீங்கன்னு எனக்கு புரியுது. எனக்கு இரக்கம்லாம் வேண்டாம் மாமா. நீங்க எனக்காக உங்க வாழ்க்கையை விட்டு தர வேண்டாம். என்னைக்கா இருந்தாலும் இந்த வாழ்க்கை என்னை விட்டு போய்டும்னு எனக்கு தெரியும். நான் தயாரா தான் இருக்கேன்.

இனி இப்படி மாத்தி, மாத்தி பேசாதீங்க எனக்கு பிடிக்காது. உங்க மேல நான் நிறையா மதிப்பு வச்சி இருக்கேன், நீங்க எனக்கு சாமி மாதிரி மாமா. இனி இப்படி என் மேல இரக்கம் காட்டாதீங்க.” என்றவள் எழுந்து ஓடி விட்டாள்.

இனி எப்படி கூறுவது அவளிடம் ஒரு பொய்யை ஒரு முறை தான் கூறினேன் உடனே நம்பி விட்டாள். உண்மையை பல முறை கூறுகிறேன் நம்ப மறுக்கிறாள். இவளின் அறியாமை நிறைய நன்மையாக இருந்தாலும், எனக்கு இப்படி தீமையாக முடிகிறது என மனம் கலங்க முழிந்தான் ஈஸ்வரன்.

“ஈஸ்வரா, ஈஸ்வரா!” என சத்தமாக சிரித்தபடி ஈஸ்வரன் அருகில் வந்து அமர்ந்தான் கம்பன்.

கம்பனை ஈஸ்வரன் முறைக்க, “உன்னை கூப்பிடல அந்த ஈஸ்வரனை கூப்பிட்டேன்.” என பயந்தபடி கூறியவன், “உன் நிலைமை கூட இப்படி குழப்பமா மாறுன்னு நினைக்கல ஈஸ்வர்.”

“கம்பா எனக்கு பைத்தியம் பிடிக்குது. இதுக்கு மேல எப்படி பொறுமையா அவளுக்கு புரிய வைக்கிறது.”

“ஈஸ்வர் நீ முல்லை இடத்தில் இருந்து யோசி. அவள் முழுக்க முழுக்க ஒடுக்கப்பட்ட வாழ்கையை வாழ்ந்தா. நீ கல்யாணம் ஆனதும் அவள் கிட்ட பொய் சொல்லி இருக்க. அன்னைக்கே சொன்னேன் இந்த பொய் உன்னை ரொம்ப கஷ்ட படுத்தும்னு.

நீ திடீர்னு அவளை காதலிக்கிறன்னு சொல்லும் போது அவள் மனசு அப்படி தான் யோசிக்கும்.இதுக்காக தான் நேத்து உன்னை எச்சரிக்கை பண்ணினேன்.

வார்த்தையால் காதலை உணர்த்த அவள் சினிமா நடிகை போல் வாழல. அவளை பொறுத்த வரைக்கும் கணவன், மனைவி உறவை பற்றி தெரியும். அவ்வளவு தான்.
உன்னுடைய வசனங்களை நிறுத்திட்டு செயல்ல காட்டு.

தள்ளி நின்னு காதலை பற்றி பாடம் எடுக்காத, அவளுடன் நெருங்கி கணவன் உரிமையை எடு. இதுக்கு மேல் விளக்கம் கொடுக்க நீ முல்லை இல்ல ஈஸ்வர்.” கம்பன் சொன்னதை நினைத்து ஒரு நொடி கண் மூடி திறந்தான் ஈஸ்வர், கம்பனை காணவில்லை.

“சரி தான் வரேன் டி என் கொடி.” என அவளுக்காக வளர்த்த மீசையை முறுக்கி விட்டபடி வீட்டை நோக்கி கிளம்பினான்.

சில்வியா ஏர்போர்டில் காத்திருந்தாள் துருவனுக்காக.

“என்ன சில்லு வந்த வேகத்தில் கிளம்பிட்ட?”

துருவனை பார்த்த பிறகு தான் சில்லுக்கு மூச்சு வந்தது.

“என்னால இங்க இருக்க முடியாது துரு. என்னை நம்ப நாட்டுக்கு அழச்சிட்டு போ பிளீஸ்.”

“போகலாம் வா. ஷிவ் கிட்ட சொல்லிட்டு வந்தியா சில்லு?"

"இல்ல துரு ஷிவ் முகத்தை பாக்கவே கூச்சமா இருந்துச்சு எனக்கு. லெட்டர் மட்டும் எழுதி வச்சிட்டு வந்துட்டேன்."

"ஷிவ் பார்த்து இருப்பான் சில்லு விடு."

"சாரி துரு. நீ சொன்னதை கேட்காம அதிக பிரசங்கி தனம் பண்ணிட்டேன். ஆனா ஷிவ் இவ்வளவு பொறுமையா இருந்ததே இல்ல. எதுக்காக என்னை எதுவும் செய்யாம விட்டான்னு தெரியல. கண்டிப்பா காரணம் இருக்கும். அது என்ன காரணம்?"

“வேற ஒன்னும் இல்ல சில்லு. நான் உன்னை காதலிக்கிற. சின்ன வயதில் இருந்தே.” போற போக்கில் நடந்து கொண்டே கூறினான் துரு.

சில்லு நடை தடைபட்டது அதிர்ச்சியில். தன்னுடன் வந்தவளை காணாமல் திரும்பியவன் சில்லுவின் அதிர்ந்த முகத்தை கண்டு, "ரொம்ப அதிர்ச்சி ஆகாத, நான் உன்னை காதலிக்கிறது உன்னை தவிர எல்லாருக்கும் தெரியும். ஷிவ் தான் முதல்ல கண்டு பிடிச்சான். எனக்காக தான் உன் விஷயத்தில் அமைதியா இருந்தான். இல்லன்னா எப்போவே உன்னுடைய கண்ணை நோண்டி இருப்பான்."

“துரு உண்மையா நீ என்னை காதலிக்குறியா?”

“ஆமா சில்லு. வா போகலாம். உனக்கு விருப்பம் இல்லன்னா நான் கட்டாய படுத்த மாட்டேன்.”

துரு வேகமாக நடக்க அவனுடன் சேர்ந்து நடந்தவள் விமானத்தில் அமர்ந்ததும் துரு தோளில் சாய்ந்து கொண்டாள்.

“சாரி துரு.”

“விடு சில்லு, நீ அறியாமையில் பண்ணுன. உனக்கு உண்மை புரிந்ததும் அமைதியா ஒதுங்கி வந்துட்டியே.” அவள் தலையில் தாடை பதித்தபடி கூறியவன் உதட்டில் சந்தோஷ புன்னகை.

விமானம் கிளம்பாமல் இருக்க தன்னுடைய போனை எடுத்து ஷிவ் எண்ணுக்கு நன்றியை தட்டி விட்டு சில்லுவை மெலிதாக அணைத்துக் கொண்டான்.


தொடரும்...