அத்தியாயம் – 50
“உனக்கு என்ன டி பிரச்சனை? ஹா சொல்லு என்ன பிரச்சனை??? நான் தான் அத்தனை முறை சொல்லுறேன், உன் கூட வாழ விரும்புறேன், உன்னை காதலிக்கிறேன்னு. ஆனா நீ என்னையோ, என் வார்த்தையோ ஒரு சதவிகிதம் கூட நம்பவே இல்ல. ஆனா அவள் சொன்னதை நம்பி கல்லு மாதிரி நிக்கிற. அவள் ஒரு வார்த்தை பேசும் போது காது கிழியுறா மாதிரி அறைந்து இருந்தா இவ்வளவு வக்கிரமாக பேசி இருப்பாளா சொல்லு?
எனக்காக பேசுறவள், அன்னைக்கு எனக்காக அத்தனை பேர் கூட தனியா சண்டை போட்டு கொன்னியே அந்த கொடி எங்க, எதுக்கு உன்னுடைய விஷயத்தில் இப்படி மரம் மாதிரி நிக்கிற?”
“சின்ன வயசில் இருந்து கேட்டு பழகிட்டேன் மாமா.” தலை குனிந்த படி வலியோடு கூறினாள்.
“நீ சின்ன வயசில் இருந்து கேட்டு பழகுனது வேற கொடி இன்னைக்கு கார்த்திகா பேசுனது வேற. நீ அவளை எதிர்த்து பேசாமல் நின்னது பெரிய தப்பு. நான் ஒரு முறை பொய் சொன்னதும் உடனே நம்பிட்ட ஆனா உனக்காக ஒவ்வொண்ணும் பார்த்து பார்த்து செய்யுறேன் அதை நம்ப மறுக்குற.
நீ உன்னுடைய காதை நல்லா திறந்து வச்சி கேட்டுக்கோ, நான் இந்த ஊருல இருக்க காரணமே நீ மட்டும் தான்,என்னுடைய கொடி மட்டும் தான் டி. இந்த தண்டையோ, நாற்காலியோ, ஊர் தலைவன்னு பட்டமோ கிடையாது. உனக்காக மட்டும் தான் இங்க இருக்கேன், உன் கூட வாழனும்னு ஆசையோடு காத்திருக்க. என்னை நம்பி இருக்க ஊரையும் விட்டுட கூடாதுன்னு உன் கிட்டேந்து தான் கத்துக்கிட்டேன்.
இல்லைன்னா என்னைக்கோ இந்த ஊரை விட்டு போய் இருப்பேன் கொடி.”
முல்லை தன் விழி உயர்த்தி தன் மாமனை பார்த்தாள் அதில் சந்தோஷம், பயம் இரண்டும் இருந்ததும்,
“உன்னை ஆஸ்திரேலியா நிறைய ஆசையோடு அழைச்சிட்டு போனேன் ஆனா அங்க சில்வியா எல்லாத்தையும் கெடுத்து நமக்குள்ள பெரிய திரையை உருவாக்கிட்டா ஆனா இனி நான் இப்படியே இருக்க போறது கிடையாது டி.
ஒன்னுமே தெரியாமல் இருக்க நீ ஒன்னும் குழந்தை கிடையாது. உனக்குள்ளே எதோ குழப்பமும், பயமும் இருக்குன்னு எனக்கு தெரியும் ஆனா அதுக்கு காரணம் கார்த்திகான்னு தெரியாமல் இருந்தேன்.”
சட்டென்று அலமாரி அருகில் சென்றவன் அங்கிருந்து ஒரு பையை கொண்டு வந்து முல்லை கையில் திணித்தான்.
“உன் தங்கச்சி சொன்னது உண்மை இல்லன்னு நிருபிக்க எனக்கு இதை தவிர வேற வழி கிடையாது. இதுல புடவை இருக்கு இன்னைக்கு நமக்கு சாந்தி முகூர்த்தம். உனக்கு என் மேல விருப்பம் இருந்தால், நம்பிக்கை இருந்தால் இதை கட்டி தயாரா இரு இல்லைன்னா கட்டாத.” என்றவன் கதவு வரை சென்று மீண்டும் முல்லையை நோக்கி திரும்பினான்.
நீ இந்த புடவை கட்டினாலும், கட்டலனாலும் உன் வாழ்க்கை என் கூட தான். என்னுடைய வாழ்க்கையும் உன் கூட மட்டும் தான். சேர்ந்து வாழ்ந்தா சந்தோஷமா இருப்போம், சேரமா இருந்தாலும் சாகுற வரைக்கும் நம்ப ஒன்னா வாழ்ந்து தான் சாகனும். உனக்கு வேற வழி கிடையாது. வழி இருந்தாலும் நான் அடைச்சிடுவேன். என் மனசுல நீ மட்டும் தான் இருக்க, அது உன் மேல சத்தியம். என்னை நம்புறதும், நம்பாததும் உன் விருப்பம். இனி உன்னை யாராவது இழிவா பேசி நீ அமைதியா இருந்த, அவுங்க உயிர் என்னோட கையால போய்டும். என் வாழ்க்கைல கருணையே கிடையாது யாருக்கும்.” என்றவன் வெளியேறினான்.
முல்லை அப்படியே பையை பிடித்த படி சிலை போல் நின்று இருந்தாள். இவர்கள் இருவரும் பேசிக் கொண்டதை சித்தப்பு மறைந்து நின்று கேட்டு விட்டார்.
கார்த்திகாவை மருத்துவமனையில் அனுமதித்து காத்திருந்தான் ராஜேந்திரன். கதவை திறந்து கொண்டு வெளியே வந்த மருத்துவர் தன் கண்ணாடியை சரி செய்தபடி தன் முன்பு பதட்டமாக நிற்கும் ராஜேந்திரனை கண்டவர் பெருமூச்சு விட்டார்.
“ராஜேந்திரன் சொல்லவே கஷ்டமாக தான் இருக்கு ஆனா நான் சொல்லி தான் ஆகனும், வேற வழி இல்லை. உங்க மனைவி வயிறு முழுக்க மண்ணு தான் இருக்கு. அதிகமா சாப்பிட்டு இருக்காங்க. தொண்டை முழுக்க புண்ணாகி இருக்கு, இனி அவுங்களால பேச முடியுயாது. கழுத்தை யாரோ பலமா நெரிச்சி இருக்காங்க. அதுல குரல்வளை பகுதி பாதிக்கப்பட்டு இருக்கு.
நிறைய மண்ணு சாப்பிட்டதுல செப்டிக் ஆகி இருக்கு. முடிந்த வரை சீக்கிரம் வயித்தை சுத்தம் செய்ய பாக்குறோம் ஆனா உடனே முடியாது, அதுவரை அவுங்களுக்கு காயங்கள் ஆற ட்ரீட் மெண்ட் பண்ணுறோம். நீங்க போய் பாருங்க, உங்க மனைவி மயக்கத்தில் இருக்காங்க தொந்தரவு பண்ணாம பாருங்க. நாங்க எங்களால முடிந்ததை செய்கிறோம்.” என்றவர் உதட்டை சுழித்த படி சென்றார்.
ராஜேந்திரன் கார்த்திகாவை பார்க்க உள்ளே சென்றவன் அவளின் வீங்கி போன முகத்தை கண்டு அவனின் இரத்தம் கொதித்தது.
வயிறு புள்ளைதாச்சி போல் வீங்கி ஆளே அடையாளம் தெரியாமல் ஆக்சிஜன் மாஸ்க் மாட்டியபடி கிடந்தவளை நெருங்கி சென்றவன் தன் கண்ணீரை துடைத்துக் கொண்டான்.
அவளின் தலையை வருடியபடி, "உன்னுடைய இந்த நிலமைக்கு காரணம் ஆன அந்த ஈஸ்வரனை சம்மா விட மாட்டேன் கார்த்தி. அவனை துடிக்க வைப்பேன். எப்படி இனி உன்னால பேசவே முடியாதோ, அதே மாதிரி அவன் அவனுடைய பொண்டாட்டியை பாக்கவே முடியாத படி பண்ணுறேன். உன் மேல சத்தியம் கார்த்தி.” என அவள் தலையில் அடித்து சத்தியம் செய்தான்.
ஈஸ்வரன் சென்று பல மணி நேரங்கள் அங்கேயே அப்படியே நின்று இருந்தாள் முல்லை. மெல்ல மெல்ல நகர்ந்தாள் பையை அணைத்தபடி. பொத்தென கட்டிலில் அமர்ந்தவள் உதடுகள் மெல்ல விரிந்தன. நேற்று இதே கட்டிலில் மாமன் தன்னை அணைத்துக் கொண்டு தூங்கியதை நினைத்து இப்போது வெக்கபட்டு கொண்டாள்.
“மாமா.” என மென்மையாக அழைத்து பார்த்துக் கொண்டவள் அவன் குடுத்து சென்ற பையை திறந்து அதற்குள் இருந்த புடவையை வெளியே எடுத்தாள். அழகிய மஞ்சள் வண்ணத்தில் சிகப்பு நிற பார்டர் வைத்த பட்டு புடவை. அதை மென்மையாக வருடி பார்த்தவள் உள்ளத்தில் நிறைவான சந்தோஷம். தனக்கும், தன் மாமனுக்குமான வாழ்க்கை எப்படி இருக்கும் என கனவு காண துவங்கினாள்.
தோட்டத்தில் தென்னை தோப்பில் நடந்து கொண்டிருந்தான் ஈஸ்வரன்.
‘அவள் தன் காதலை நம்ப வில்லை என்பது கூட கோவத்தை தரவில்லை, கார்த்திகா வார்த்தைகளை நம்பி அவளையும் வேதனை படுத்திக் கொண்டு என்னையும் பிரிகிறேன் என்கிறாள் இவளை எல்லாம் என்ன செய்ய. புருஷனுக்கு எதாவது பிரச்சனை வந்தா
புயலா மாறிடுறா அவளுக்கு ஒன்னுன்னா கல்லு மாதிரி இருக்கா. இப்போ நான் பேசிட்டு வந்ததுக்கு என்ன செய்ய போகிறாள் தெரியலை. இதுவும் இரக்கம், தயக்கம் கடுப்பேத்துற மாதிரி ராத்திரி முழுக்க பேசி வெறுப்பேத்துவா, அப்படி மட்டும் பேசட்டும் பேசுற வாயை கடிச்சி வச்சிடுறேன்.
எதோ ஒரு கோவத்தில் சொல்லிட்டு வந்துட்டேன் அவள் அதுக்கும் சேர்த்து கருங்கல்லு மாதிரி இருப்பா. இவளோ அழுத்தமான பொண்ணை இப்போ தான் பாக்குறேன். எல்லாத்துலயும் வித்தியாசமானவள் என் கொடி. இந்த வித்தியாசமும் அழுத்தமும் தான் டி என்னை கட்டி போடுது!’ என நினைத்தவன் எதையோ நினைத்து தன் மீசையை முறுக்கி கொண்டான்.
“போய் என் அழகியை சமாதானம் பண்ணுவோம், தாம்பத்தியம் இயல்பா நடக்கணும் எதோ கோவத்தில் சொன்னதுக்கு அவள் எதாவது எடக்கு,முடக்கா பண்ணிட போறாள்.”
ஈஸ்வரன் தண்டையை முறுக்கிய படி தன் வண்டியை நோக்கி வந்தவன் எதிரே அனலாக வந்து நின்றான் ராஜேந்திரன்.
ராஜேந்திரன் கோவத்தை மதிக்காமல் விலகி நடக்க துவங்கிவனை, "என் கார்த்திகா நிலமைக்கு நீ மட்டும் தான் காரணம்னு எனக்கு நல்லாவே தெரியும் ஈஸ்வரா. உன்னை சும்மா விட மாட்டேன். இதுக்காக பழி வாங்காமல் விட மாட்டேன் டா. என் கார்த்திகா பேசாமல் கிடந்தாலும் உயிரோடு இருக்காள் ஆனா அந்த முல்லையை நீ பார்க்க கூட மாட்ட. உன் கண்ணு முன்னாடி அவளை துடிக்க துடிக்க கொல்லுறேன் டா. இந்த தண்டை இருக்க தைரியத்தில் நீ அளவுக்கு மீறி ஆடுற. உன்னை துடிக்க வச்சு, நீயே சாகுற மாதிரி பண்ணுறேன் பாரு
உன் அப்பனை என் அப்பன் விரட்டி அடிச்சான், அவன் காதலை பிரிச்சான்.
உன் அப்பன் ஒரு கோழை.அதே மாதிரி உன்னையும் நான் விரட்டி விரட்டி துடிக்க துடிக்க கொல்லுவேன் டா."
ஈஸ்வரன் நக்கலாக சிரித்தவன், "என் கொடியை நெருங்க நீ முதல்ல உயிரோடு இருக்கணும் டா, உன்னையும் உன் அப்பனையும் விட்டு வச்சிருக்க காரணம் இருக்கு. என் அப்பன் கோழை தான். தம்பிக்காக காதலியை விட்டு வந்ததை விட, கூட இருந்த தம்பியோட உண்மையான குணத்தை பத்தி தெரிஞ்சிக்காதது தான் மிக பெரிய தப்பு.
உன் அப்பன் ஒரு கேடு கெட்டவன் அண்ணன் காதலியை தனக்கு பொண்டாட்டியா ஆக்கி கிட்டவனுக்கு பிறந்த உன் கிட்ட நல்லதை எதிர் பார்க்க முடியாது. நீயும் நல்லவனும் கிடையாது. என்னுடைய கொடியை நெருங்குறதுக்கு முதல்ல நீ உயிரோடு இருக்கணும் டா. இத்தனை நாள் உங்களை விட்டு வச்சிருக்க காரணமே வேற.”
ராஜேந்திரன் அரக்கன் போல சிரித்தவன், “பூமிக்கு அடியில் இருக்க லிங்கத்தை உன்னால காப்பத்தவே முடியாது டா, கட்டாயம் அது எங்களுக்கு சொந்தம். உன்னுடைய கண்ணு முன்னாடி நாங்க அதை எடுத்து காட்டுறோம் பாரு.”
“போய் உன் பொண்டாட்டியை பாரு, செத்துட போகிறாள், இனி அவள் வாழ்ந்தும் பயன் இல்ல எனக்கு நிறைய வேலை இருக்கு டா.” என்ற ஈஸ்வரன் தன் வண்டியில் ஏறி அமர்ந்தான்.
வண்டியை முறுக்கியபடி, “உன் அப்பனுக்கு கொடுக்க போற தண்டனை இந்த ஊருக்கும், அடுத்தவன் வாழ்க்கையை அழிக்கிறவனுக்கும் மிகப் பெரிய பாடம் டா. சீக்கிரமே தயாரா இருக்க சொல்லு உன் அப்பனை.” என்றவாறே புல்லட்டில் செல்லும் ஈஸ்வரனை வெறியோடு பார்த்துக் கொண்டு நின்று இருந்தான் ராஜேந்திரன்.
“உன்னுடைய ஆணவத்தை அழிச்சி அந்த தண்டையை எனக்கு சொந்தம் ஆக்கிப்பேன் ஈஸ்வர். அந்த லிங்கத்தை வித்து உன்னை கொண்டாடுன ஊரை என் காலடியில் போட்டு மிதிக்க போறேன்.”
லிங்கம் யாருக்கு சொந்தமோ, மண்ணுக்கு அடியில் இருக்கும் லிங்கம் நல்லது செய்ய காத்திருக்கா, தீயது செய்ய காத்திருக்கா அவனே அறிவான்.
ஈஸ்வரன் வரும் வழியில் சில ஊர் தலைவர்களிடம் பேசி விட்டு வீட்டிற்கு வர இரவு ஆனது. கொடியை பார்க்க வேகமாக வீட்டிற்குள் நுழைந்தவன் கண்கள் சமையல் அறை நோக்கி சென்றது.
இந்த நேரத்தில் சமையல் அறையில் இருக்க கூடிய தன் மனைவியை காணாதவன் புருவங்கள் நெரிய, ‘கொடி நான் சொன்னதை நம்பி பயந்து ரூம்ல இருக்கா போல. இந்த அப்பாவிய என்ன பண்ணுறது தெரியல. எதோ கோவத்தில் சொன்னதை நம்பி என்ன என்ன யோசிக்கிறாளோ தெரியலை.’
ஈஸ்வரன் தன் மனைவியை பற்றி யோசித்துக் கொண்டு மாடியேற சித்தப்பு பூனை போல் குறுக்கும், நெடுக்கும் நடந்து கொண்டிருந்தார்.
அவரை கண்டவன் விழிகளில் கோவம் கணலாக எரிந்தது, அவரை கடந்து சென்றவனை முறைத்து பார்த்தார் சித்தப்பு. அவர் பூனை போல் நடக்க காரணம் உண்டு. அதிலும் ஈஸ்வரன் அறை கதவில் கை வைக்க சித்தப்புக்கு மனம் பதைத்தது.
அவனை தடுக்க ஆசை இருந்தும் அதை செய்ய முடியாமல் அடுத்து என்ன செய்வது என்று யோசித்துக் கொண்டு நின்று இருந்தவர் ஈஸ்வரன் கதவு திறக்கும் முன்பே, “ஈஸ்வரா நீ பண்ணினது மிகப் பெரிய பாவம்.” என்றார்.
ஈஸ்வரன் புருவம் உயர்த்தி சித்தபனை பார்த்தான் கதவில் இருந்து கை எடுத்தபடி. “கார்த்திகா இந்த வீட்டு மருமகள், உன் தம்பி பொண்டாட்டி மறந்துட்டியா? மனசாட்சி இல்லாம தம்பி பொண்டாட்டியை இப்படிப் பண்ணி வச்சி இருக்க, உன்னை கேட்க ஆள் இல்லன்னு நினைச்சியா?” சத்தமாக கத்தினார்.
“அண்ணன் காதலியை கல்யாணம் பண்ணி புள்ளை பெத்த நீ மனசாட்சி பத்தி பேசுறியா?” என ஒரே கேள்வியில் சித்தப்பு மூக்கை அறுத்தான் ஈஸ்வரன்.
சித்தப்பு அடுத்து பேச முடியாமல் தடுமாறி நிற்க. ஈஸ்வரன் தன் அறை கதவை திறந்து கொண்டு உள்ளே நுழைந்தவன் இன்று மறக்காமல் கதவை மூடி விட்டு திரும்பியவன் சிலையாக ஸ்தம்பித்து நின்றான். அவன் கண்களை அவனாலையே நம்ப முடியவில்லை.
தொடரும்...