அத்தியாயம் – 53
நனிக்கு மகனாக கொல்லி வைத்தவன், மனைவியை தேடி வீட்டிற்கு வந்தான். நனி உடலை எடுக்கும் போது அழுது அழுது மயங்கி விட்டாள். அவளின் கண்ணீர் ஈஸ்வரன் நெஞ்சை பிசைந்தது.
ஈஸ்வரன் வீட்டிற்குள் நுழையும் போது மனம் கனத்தது. எப்போதும் படி அருகில் நின்று தன்னையே ஏக்கமாக பார்க்கும் நனி முகம் நினைவில் வந்தது.
ஈஸ்வரன் அவரிடம் உறவு கொண்டாட ஆரம்பத்தில் தயங்கி நின்றான். அதன் பிறகு அவரை நெருங்க நினைக்க ஒரு நாள் நனி சாமி முன்பு நின்று பேசிக் கொண்டு இருந்ததை எதார்த்தமாக கேட்டவன் அவரின் ஆசையை நிறைவேற்றி விட்டு அவரை ஏற்றுக் கொள்ளலாம் என்று நினைத்தான்.
தூக்கம் வராமல் கீழே வந்தவன் நனி பூஜை அறையில் நிற்பதை கண்டான். "ஈஸ்வரன் அப்பா இந்த மக்களால எவ்வளவு அவமான பட்டாரோ அதை விட அதிகமா ஈஸ்வரனுடைய சித்தப்பன் அவமானபடனும், கூனி, குறுகி நிக்கனும், இப்படி ஒரு நிலையை எண்ணி அவனை அவனே வெறுக்கனும். எல்லாருக்கும் உண்மை தெரியணும்.
நான் தினமும் இதை தான் உன் கிட்ட கேக்குறேன் ஆனா நீ இதுவரைக்கும் நிறைவேத்தல. நல்லவங்களை உடனே சோதிக்கிற தெய்வம் கெட்டவங்களை ரொம்ப அமோகமா வாழ வைக்கிறியே!" என்று கண்ணீர் மல்க நின்று இருந்தார்.
ஈஸ்வரன் அன்று முடிவு செய்தான் சித்தப்பனை பற்றிய உண்மையை அனைவருக்கும் தெரியப்படுத்தி இந்த ஊர்மக்களாலே தண்டனை தர வேண்டும்என்ற முடிவோடு சத்தம் செய்யாமல் சென்று விட்டான்.
"ஈஸ்வரா உறவுகளோடு சந்தோஷமா வாழ நேரம் குறிக்க கூடாது, கிடைக்கும் நேரத்தில் நாம் விரும்பும் உறவுகளுடன் சந்தோஷமாக, நிறைவாக வாழ வேண்டும். நீ உனக்கு கிடைத்த வாய்ப்பை தவற விட்டுவிட்டாய். காலமும், நேரமும் யாருக்கும் நிற்காமல் சுழலும், அந்த சுழற்சி நாம் நினைத்தது போல் இருக்காது, மாறி கொண்டே இருக்கும்.
மீண்டும் இதே தவறை செய்து வருந்தாதே ஈஸ்வரா." என கம்பனின் குரல் அழுத்தமாக ஒலித்தது.
கம்பனிடம் பேசும் மனநிலையில் இல்லை ஈஸ்வரன். மனைவியை தேடி மாடி ஏற, "ஈஸ்வர் உன் சித்தப்பாவை காணோம்." என்றான் கம்பன்.
சட்டென திரும்பிய ஈஸ்வரன், “எப்படி கம்பா?”
“எல்லாரும் நனிம்மா உடலை எடுக்குற இடத்தில் இருக்கும் போது குத்துயிறா இருந்த உன் சித்தப்பனை யாரோ காப்பாத்திட்டு போய்ட்டாங்க.”
"அவர் அவ்வளவு நேரம் உயிரோடவா இருந்தாரு கம்பா?"
“லிங்கத்தை எடுக்க வேண்டும் என்று வெறி பிடித்தவன் உன் சித்தப்பன் அவ்வளவு எளிதில் சாகமாட்டான். ஜாக்கிரதை ஈஸ்வர்.”
“சரி கம்பா நீ கிளம்பு.” என்றவன் எண்ணம் முழுவதும் அவனின் கொடி மட்டும் தான் இருந்தாள்.
ஈஸ்வரன் அறைக்குள் நுழைய வெறும் தரையில், உடலை குறுக்கி சுருண்டு கிடந்தாள் அவனின் கொடி. அவளின் நிலை கண்டு மனம் துடித்தது ஈஸ்வரனுக்கு. தன் மீது கிடந்த துண்டை விளக்கியவன் கீழே சுருண்டு கிடந்த மனைவியை கைகளில் அள்ளினான்.
அவள் தூங்க வில்லை என்பது அவள் முதுகு அழுகையில் குலுங்கியதில் இருந்தே தெரிந்தது.ஈஸ்வரன் தூக்கிய போதும் எதிர்க்கவோ, வேண்டாம் என்றோ மறுக்கவில்லை. அவன் நெஞ்சில் சாய்ந்து கண்ணீர் விட்டாள்.
கட்டிலில் அமர்ந்தவன் சாய்ந்து அமர்ந்த படி கொடியை நெஞ்சில் சாய்த்துக் கொண்டான்.
"உனக்கு அம்மாவை இவ்வளவு பிடிக்குமா டி?"
"எனக்கு சாப்பாடு போட்டதே அத்தை தான் மாமா, எல்லாரும் என்னை ஒதுக்கி வச்சப்போ அவுங்க தான் நான் சாப்பிடாம பட்டினி கிடப்பன்னு அண்ணா கிட்ட சாப்பாடு குடுத்து விடுவாங்க. போர்த்திக்க போர்வை குடுத்து விடுவாங்க."
"நீங்க ரெண்டு பேரும் பேசி நான் பார்த்ததே இல்லையே கொடி."
"அத்தை யார் கிட்டேயும் பேச மாட்டாங்க மாமா, எதாவது கேட்டா அதுக்கு மட்டும் தான் பதில் சொல்லுவாங்க. அவுங்க யார் கிட்டேயும் பேசி நீங்க பார்த்து இருக்க முடியாது."
ஈஸ்வரன் ஏற்றுக் கொண்டான் கொடி கூறியதை. விருப்பம் இல்லாமல், பிடிப்பு இல்லாமல் வாழ்ந்தவர் தன்னை தானே தனிமை படுத்திக் கொண்டார்.
அவரின் இறுதி ஆசையை கூட அவரின் கண்ணால் பார்க்க முடியாமல் போய் விட்டது. இப்படி பட்ட வெறுமையான வாழ்க்கையை ஏன் வாழ்கிறாய் என்று கடவுள் அழைத்துக் கொண்டார் போல என நினைத்துக் கொண்டவன் அமைதியாக மனைவி முதுகை வருடிக் கொடுத்தான்.
ஆறுதல் என்று என்ன கூறுவது, அவனும் பேசும் நிலையில் இல்லை என்பதால் அமைதியாக இருந்தவனுக்கு சித்தப்புவை யார் காப்பாற்றி இருப்பார் என்ற சந்தேகம். ராஜேந்திரனை கம்பன் வெளியே எடுத்த போது அவன் மயக்கத்தில் இருந்ததாக தானே கூறினான். கட்டாயம் சித்தப்புவை அவன் காப்பாற்றி இருக்க முடியாது. பிறகு யார் என யோசித்தவன் காலையில் விசாரிக்க வேண்டும் என முடிவு செய்து கொண்டான்.
வார்த்தைகள் இல்லை என்றாலும் இருவரின் நெருக்கமே இருவருக்கும் மிகப் பெரிய ஆறுதலாக இருந்தது. அழுது கொண்டே ஈஸ்வரன் நெஞ்சில் தூங்கி போனாள் முல்லை. அவளின் கலைந்து கிடந்த கூந்தலை ஒதுக்கி விட்டவன் மென்மையாக அவள் கன்னத்தில் முத்தமிட்டான். மீசை குறுகுறுப்பில் நெளிந்தவளை தட்டி கொடுத்து தலையணையில் படுக்க வைத்து அவள் அருகில் படுத்துக் கொண்டவன் கண் மூட, "நேரமும், காலமும் யாருக்கும் நிற்காது, உறவுகளுடன் சதோஷமாக கழிக்க வாய்ப்பு கிடைக்கும் போதே பயன்படுத்திக் கொள்." என கம்பன் கூறியது இப்போதும் ஈஸ்வரன் காதில் கேட்டது.
சொல்ல போனால் அவனே காதருகில் அமர்ந்து கூறுவது போல் தோன்ற சட்டென்று கண் திறந்தான் ஈஸ்வரன்.
நேற்று இருவரும் தாங்கள் இருந்த நிலைக்கும் இன்று இருக்கும் நிலைக்கும் யோசித்து பார்த்தவன் மனம் கனத்தது. அம்மா விஷயத்தில் செய்த தவறை மனைவி விஷயத்தில் செய்ய கூடாது என்று முடிவு செய்தான்.
நேற்று தான் தொட்டதால் உண்டான மயக்கத்தில், வெக்கத்தில் இருந்தவள் இன்று அழுததால் உண்டான மயங்கி கிடக்கிறாள். தூக்கம் தொலைதூரம் சென்று விட்டது ஈஸ்வரனுக்கு.
யோசித்து யோசித்து தலை வலிக்க துவங்க. மனைவி முந்தானையை இழுத்து போர்த்திக் கொண்டு அவளை அணைத்துக் கொண்டு படுத்ததும் தூங்கி போனான்.
கோவிலில் தியானத்தில் இருந்த கம்பன் விழிகளை திறந்தவன், “நான் சொன்னது உனக்கு புரிந்து இருந்தால் நல்லது ஈஸ்வரா. இல்லை என்றால் இதற்கும் உன்னால் வருத்தம் கொள்ள மட்டும் தான் முடியும்.
அடிபட்டு போனவன் அவமானத்தில் குறுகி போய் இருக்கான். வீரியம் கொண்டு திரும்பி வரும் போது எப்படி இருக்குமோ? என்ன நிகழுமோ? அதற்குள் உன் வாழ்க்கையை துவங்கி விடு.” என்றான்.
காலை முதலில் ஈஸ்வரன் தான் எழுந்தான். முல்லை முதல் முதலில் நேரம் ஆனது கூட தெரியாமல் தூங்கிக் கொண்டு இருந்தாள். அவளை தொந்தரவு செய்யாமல் இறங்கி வந்தவனுக்கு யாரும் இல்லாத வீட்டை விட அம்மா இல்லாத வீடு வெறுமையாக தோன்றியது. தன் கவலைகளை ஓரம் தள்ளி வைத்தவன் குளித்து முடித்து வர முல்லை இறங்கி வந்தாள்.
“கொடி நீ குளிச்சிட்டு எதாவது சாப்பிடு நான் போய் ராஜேந்திரன் அப்பன் என்ன ஆனான்னு பாக்குறேன்.”
"மாமா அவர் உயிரோடு தான் இருப்பாரா?"
முல்லை கண்களில் பயம் அப்பட்டமாக தெரிந்தது. மனைவியை கொன்றவன், குடும்பத்தையே அழித்தவன் தண்டனை கொடுத்த தன் மாமனை தேடி வந்து எதாவது செய்து விடுவானோ என்ற பயம் முல்லைக்கு.
அவளின் பயத்தை கண்டு மெலிதாக சிரித்தவன், "என்னை யாராலும் எதுவும் பண்ண முடியாது கொடி நீ தைரியமா இரு. நான் போய் பார்த்துட்டு வரேன்.”
ஈஸ்வரன் ஆட்களை வைத்து சுத்துபட்டு ஊர் முழுக்க தேடி பார்த்தான் சித்தப்பு எங்கே என்று யாருக்கும் தெரியவில்லை. ராஜேந்திரன், முல்லை அப்பா இருவரும் காணவில்லை.
ஈஸ்வரன் யோசித்தபடி கண் மூடி தென்னந்தோப்பு கட்டிலில் அமர்ந்து இருந்தவனை, “மாமா!” என அழைத்தான் முல்லை தம்பி.
ஈஸ்வரன் கண்களை திறக்க உத்தமன் குனிந்த படி நின்று இருந்தான். ஈஸ்வரன் ஏன்? என்ன? என்ற எந்த கேள்வியும் கேட்கவில்லை. அவனை கூர்மையாக பார்த்தபடி இருந்தான்.
“மாமா உங்க சித்தப்பாவை என் மாமனாரை காப்பாத்துனது என் அப்பா தான். என் அப்பாவும், என் மாமனாரும் நண்பர்கள். இது யாருக்கும் தெரியாது. பொது இடத்தில் கூட பேசிக்க மாட்டாங்க. ஆனா எல்லா திருட்டு வேலையிலும் ஒன்னா இருப்பாங்க யாருக்கும் தெரியாமல். ஆரம்பத்தில் கண்டுக்காம விட்டுட்டேன். அது தான் நான் பண்ணுன மிகப் பெரிய தப்பு.
ஆனா என் மாமனார் இவ்வளவு மோசமான ஆளா இருப்பாருன்னு நான் எதிர்பார்க்கல. அத்தை உடலை எடுக்கும் போது நான் என் மாமனாரை பார்க்க போனேன் அப்போ தான் அப்பா அவரை தோள்ல தூக்கி போட்டுகிட்டு போனாரு. நான் அப்பா அப்பான்னு கத்திகிட்டு அவரை நெருங்குறதுகுள்ள கார்ல கிளம்பிட்டாரு.
எங்க போனாருன்னு எனக்கு சத்தியமா தெரியாது மாமா. நான் ஊர் முழுக்க தேடி பார்த்துட்டேன். உங்க கிட்ட இதை எதுக்கு நான் சொல்லுறேனு நீங்க யோசிப்பீங்க. காரணம் இருக்கு. அப்பா என் மாமியார் இறந்த அன்னைக்கு ராத்திரி தூக்கத்துல ஒளரிட்டு இருந்தாரு.
இன்னைக்கு அந்த முல்லைக்கும், ஈஸ்வரனுக்கும் முதல் இரவாம். அதுங்களுக்கு அது ஒன்னு தான் கேடு. பலி கொடுக்க போற நாய் கன்னியா இருந்தா தான் சக்தி அதிகமா இருக்கும். எப்படியும் அவுங்களுக்கு முதல் ராத்திரி நடக்காமல் என் நண்பன் தடுத்துடுவான். சொல்லிட்டு தான் போய் இருக்கான்னு உளறிட்டு இருந்தாரு.
நானு என் பொண்டாட்டி ரெண்டு பேரும் கேட்டோம் மாமா அப்போவே உங்க கிட்ட
சொல்லலாம் தான் ஆனா எங்களுக்கு கட்டுப்பாடு இருக்கே அதை மீறி நாங்க வர முடியாது அதான் காலையில் நீங்க வந்ததும் சொல்லலாம்னு இருந்தோம். ஆனா அதுகுள்ள அத்தை இறந்துட்டாங்க.
உங்க வாழ்க்கையை கெடுக்க தான் என் மாமனார் அத்தையை கொன்னது மாமா.” என குனிந்த படி கூறியவன் சில நொடிகள் அமைதியாக நின்று இருந்தான்
ஈஸ்வரன் பார்வையை மாற்றாமல் உத்தமனை பார்த்துக் கொண்டே இருக்க. சட்டென்று உத்தமன் ஈஸ்வரன் காலில் விழுந்து அவன் காலை பிடித்தான்.
ஈஸ்வரன் அவனை விலக்கி செல்ல மீண்டும் மாமன் காலை பிடித்தவன், "அக்காவை எப்படியாவது காப்பாத்திடங்க மாமா, நான் பிறந்ததில் இருந்து அக்கா சிரிச்சு சந்தோஷமா இருந்து பார்த்ததே கிடையாது. ஆனா உங்களை கல்யாணம் பண்ணுன பிறகு அக்கா ரொம்பவே சந்தோஷமா இருக்கா. எப்பவும் அப்படியே இருக்கனும் நீங்க தான் அக்காவை காப்பாத்தனும்." நரம்புகள் புடைத்து கொண்டு நின்றது ஈஸ்வரனுக்கு.
“அவள் என்னுடைய கொடி, என்னுடைய பொண்டாட்டி. உனக்கு அக்கா கிடையாது. அப்படி கூப்பிடவும் தகுதி கிடையாது. என் கொடி தான் என்னுடைய வாழ்க்கை அவளை காப்பாத்த எனக்கு தெரியும் கிளம்பு.” என்றான் பல்லை கடித்தபடி.
உத்தமன் தன் கண்ணீரை துடைத்துக் கொண்டவன், “ரொம்ப சந்தோஷம் மாமா எனக்கு நம்பிக்கை இருக்கு நீங்க அக்காவை காப்பாத்திடுவீங்க. அது போதும் எனக்கு. என் அப்பனுக்கும், என் மாமனாரையும் உங்க கையால கொல்லுங்க அது தான் சரியா இருக்கும்.” என்றவன் திரும்பி நடக்க துவங்கினான்.
"நீ உன்னுடைய மனைவி, குழந்தையை அழச்சிட்டு உன் வீட்டுக்கு போ. உங்களுடைய தண்டனையை ரத்து பண்ணுறேன். ஆனா திரும்பவும் தப்புக்கு துணை போனால் கொன்னுடுவேன். இப்போ உங்களை விடுவிக்க காரணம் உன் குழந்தை மட்டும் தான். குழந்தையை நல்ல ஹாஸ்பிட்டல் அழச்சிட்டு போ.” என்றவன் தன் கொடியை தேடி சென்றான்.
தொடரும்...