அத்தியாயம் – 2
அறிமுகம் அவளுக்கு அவசியமில்லை...
சின்ன புன்னகையில் உங்கள் இதயம்
நுழைபவளை யாரென்று கேட்டு
தடுப்பீர்களா என்ன......?
ஓர் நாளில் ஓராயிரம்
பெயர்சொல்லி மிரட்டுவாள்
அவள் உதடுகள் உங்கள்
பெயர் சொல்ல உங்கள்
இதயம் ஏங்க தொடங்கும்...!
ஏதேனும் பேசிக்கொண்டே
உங்கள் நேரம் முழுவதும் தின்று தீர்ப்பாள்...!
கேள்விகளால் துளைத்தெடுப்பாள்
விடைதேடி சொல்லும் முன்னே
அடுத்த கேள்வி வீசிப்போவாள்....!
பதில்கள் யாவும் தேவைப்படாத
கேள்விகளால் நிரம்பி போகும்
உங்கள் உலகம்..!
லண்டன் கேம்ப்ரிட்ஜ் பல்கலைக்கழக வளாகம்......
தோழிகள் இருவரும் தங்கள் வகுப்பை முடித்து வெளியே வந்தனர். அதில் ஒருத்தி “மச்சி இன்னும் ஒன் அவர் தான் இருக்கு... ஹாஸ்பிடல் போக, க்விக்கா நட, லேட்டா போனா அந்த டீன் நம்மளை நேத்துமாதிரி காச்சிடப் போகுது...” என“என்னது... உடனே வா..... சாப்பிட வேண்டாமா..? பர்ஸ்ட் ஈட்டிங் மச்சி... அப்புறம் தான் ஹாஸ்பிடல்...”
“அச்சோ இன்னைக்கும் லேட்டா..... ஏண்டீ ஒருநாள் கொட்டிக்கலைன்னா என்ன ஆகிடப்போகுது... இன்னைக்கு மட்டும் சீக்கிரம் வரல, என் பேரை நானே மாத்தி வச்சிக்கிறேனு வேற சொல்லிட்டு வந்துருக்கேன். தயவு செய்து என் பேரைக் காப்பாத்து ராசாத்தி.... கிளம்புடி... கிளம்பு....”
“ஹாஹா மச்சி... நீ தலைகீழா நின்னாலும் என்னால உனக்கு உதவ முடியாது.... நான் சாப்பிடாம எங்கேயும் கிளம்ப மாட்டேன்.... சோறுதாண்டி முக்கியம்.... இத்தனை வருஷம் என்னோட ப்ரண்டா இருந்துட்டு என் கேரக்டரையே இன்னும் நீ புரிஞ்சுக்கலையே மச்சி புரிஞ்சுக்கலையே....”
“அடியே விளங்காதவளே..... அங்க ஒருத்தன் என்னைப் போட்டுக் காச்சி எடுத்துட்டு இருப்பான்... உனக்கு சோறு முக்கியமா போச்சா... ஏண்டி எருமை அவன் என்னை மட்டுமா திட்டுவான்... உன்னையும் சேர்த்துதானே.... அதெல்லாம் உன் மரமண்டையில ஏறாதா..? கடைசியா கேட்குறேன், உனக்கு நான் முக்கியமா....? இல்லை அந்த காஞ்சிபோன இட்லி முக்கியமா...?
“என்ன மச்சி இப்படி ஒரு நிர்பந்தத்துல கொண்டு வந்து நிறுத்திட்ட... நான் என்ன சொல்லுவேன், சொல்லு.... நாம இருக்கிற இடத்துல ஒரு இந்தியன் புட்டாவது கிடைக்குமா....? ஏதோ இந்த கேம்பஸ் ஒட்டி இருக்குற இந்த குளோபல் ரெஸ்டாரன்ட்ல அந்த காஞ்சிப் போன இட்லியாச்சும் கிடைக்குதே என்று ஹாப்பியாகிட்டு அதை மிஸ் பண்ணாம, என் வயிற்றை வாடாம காப்பாத்திட்டு இருக்கேன், அது பொறுக்கலையா...?”
“உனக்கேத் தெரியும் என்னால பசிதாங்க முடியாது என்று.... அந்தக் கிழவன் கிடக்குறான் விடு... அவன்கிட்ட வாங்குறது எல்லாம் ஒரு மேட்டரா...? அது இன்னைக்கு நேத்தா நடக்குது... லீவ் இட் மச்சி.... வா பர்ஸ்ட் சாப்பிடுவோம்.... பசியோட யோசிச்சா ஒன்னும் தோணாது.... இன்னைக்கு அந்த Mr.டீன்கிட்ட திட்டு வாங்க மாட்டோம்...... வா....” என்றதும், மற்றவள் சந்தேகமாய் நோக்க.. “நம்பு மச்சி.... நம்பிக்கை தானே வாழ்க்கை...” என பிரபுவின் டையலாக்கை விட....
“அய்யோ..... தாயே.. நான் அந்த டீன் கிட்ட செமத்தியா வாங்கிக் கட்டிகிட்டாலும் பரவாயில்லை ...நீ தத்துவம் சொல்றேன் என்ற பேர்ல என்னைக் கொல்லாதே...” என்று மற்றவள் பொரிந்து முடிக்கவும் அவர்கள் பேசிக்கொண்ட ரெஸ்டாரண்டும் வந்துவிட ‘இனி எதுவும் பேசமுடியாது இவளிடம்’ என்பதை உணர்ந்து அமைதியாக அவளுடன் சேர்ந்து உள்ளே சென்றாள்.
எப்போதும் அவர்கள் அமரும் டேபிளில் சென்று அமர்ந்ததும் வழக்கம் போலவே இரண்டு சாம்பார் இட்லி பிளேட்டுகளை கொண்டு வந்து வைத்த அந்த உணவகத்தின பணியாளன் இருவரையும் பார்த்து ஒரு புன்னைகையை சிந்திவிட்டு சென்றான்.
அவனின் புன்னகையை சிறிதும் மதிக்காமல் சாப்பிடுவது ஒன்றே குறிக்கோளாய் இட்லியை உள்ளேத் தள்ளிக் கொண்டிருந்தாள் அவள். அதைப் பார்த்ததும் குறைந்த கோபம் மீண்டும் ஏற, இவளை என்ன செய்வது போல் முறைத்துக் கொண்டிருந்தாள் மற்றவள். ஆனால் இது எதையும் கவனிக்காமல் பத்தே நிமிடத்தில் அனைத்தையும் காலி செய்துவிட்டு நிமிர்ந்தவள், தன்னை முறைத்த தோழியைப் பார்த்து என்ன என்பதுபோல் புருவத்தை உயர்த்த, அவளின் செய்கையில் தன் கையில் இருந்த ஷ்பூனைத் தூக்கி எரிந்தாள் மற்றவள்.
“ஏண்டி பிசாசே... உன்னையும் மதிச்சு ஒருத்தன் ஸ்மைல் பண்ணா, அவனைக் கண்டுக்காம முழுங்கிட்டு, இப்போ என்னனு கேட்குற... நீயெல்லாம் என்ன பீசுடி...”
“மச்சி நீ என்னோட பிரண்ட், ஆனா நீ இன்னும் என்னை புரிஞ்சிக்கவே இல்லை….. பட் ஜோன்ஸ் என்னை நல்லா புரிஞ்சுக்குவான் (அந்த ரெஸ்டாரண்டில் வேலை பார்க்கும் நபர்) பாரு பில்லோட வர்றான்” என்றவள் அங்கு வந்த ஜோன்ஸிடம் சாதரணமாக பேச ஆரம்பித்தாள். மற்றவள் அவளைப் பார்த்து முறைத்துக் கொண்டே தன் உணவை அவசரமாக முழுங்கிவிட்டு, அந்த இடத்தில் இருந்து அவளை இழுத்துக் கொண்டு சென்றாள்.
காரில் ஏறியதும் தன் பொறுமை இவ்வளவுதான் என்பதுபோல் “ஏண்டீ என் உயிரை வாங்குற, நான் உண்டு... என் வேலை உண்டு... என் டார்லி உண்டுனு இருந்தேன்.... இப்படி எங்க ரெண்டு பேரையும் பிரிச்சு கூட்டிட்டு வந்ததும் இல்லாம, இப்படி அந்த டீன்கிட்டையும் திட்டு வாங்கி கொடுக்குறியே... இது உனக்கே நல்லா இருக்கா... இப்படி என்னை ஸ்கைப்லையும், போன்லயும் குடும்பம் நடத்த விட்டுட்டீயே... நீயெல்லாம் நல்லா வருவடீ....” என்று பொங்கிவிட்டாள் வித்யா....
“கூல்... கூல்.... மச்சி பர்ஸ்ட் இந்த ஜூஸ் குடி, இன்னைக்கு சாம்பார் என்ற பேர்ல அவன் ஊத்துன குழம்புல காரம் கொஞ்சம் அதிகம்தான். நாளைக்கு மறக்காம நம்ம ஜோன்ஸ்கிட்ட சொல்லிடலாம்... உனக்கு இப்போ எதுக்கு இவ்வளவு டென்சன், அந்த கிழவன்கிட்ட வாங்கப் போறதுக்கா... அதுக்கெல்லாம் டென்சன் ஆகாத, டுடே நோ மோர் ப்ராக்டீஸ்.... இப்போ ஜாலியா வீட்டுக்கு போறோம்.... இந்த ஈவ்னிங் நீ ஹேப்பியா உன் டாலிக்கிட்ட ஸ்கைப்ல கொஞ்சலாம்....” எனவும், தன் தோழி பேசுவதை நம்பமாட்டாமல் மற்றவள் பார்க்க....
“எஸ் மச்சி.... நேத்தே நீ புலம்பின, நைட் பேசிட்டு தூங்க லேட்டாகிடுச்சு இனி கிளாஸ் போயிட்டு, எப்படி ப்ராக்டீஸ் போறதுன்னு..... எனக்கு எவ்வளவு பெரிய ஹெல்ப் பண்ணிருக்க... அப்படி இருக்கும் போது உனக்கு நான் சின்ன ஹெல்ப் பண்ண மாட்டேனா...? என்ன....! கிளாஸ் கட் பண்ண முடியாது.... அதான் இன்னைக்கு ப்ராக்டிஸ் கட் அடிச்சாச்சு..... ஓகே...! சியர்புள் மை டியர் தியாக்குட்டி....!!!!!!” என்றவள் “டோன்ட் வொரி டோன்ட் வொரி பீ ஹேப்பி....” என்று பாடி தோழியைக் கட்டிக் கொண்டது சாட்சாத் நம் கதையின் நாயகி ஷானவியே தான்......
தோழியின் செய்கையில் முதலில் நெகிழ்ந்த வித்யா, இத்தனை நேரம் தான் பட்ட கஷ்டமும் படபடப்பும் நியாபகத்தில் வர, “எருமை.... எருமை... புருஷன் பொண்டாட்டி ரெண்டு பேருக்கும் எங்களைப் பார்த்தா எப்படி தெரியுது.... மார்னிங்ல இருந்து எவ்வளவு டென்சன் ஆனேன்.... அப்போவே சொல்ல வேண்டியது தான... எதுக்குடி இப்படி எரிச்சல் பண்ற..... முன்னாடியே சொல்லியிருந்தா என் டார்லிக்கு இன்பார்ம் பண்ணிருப்பேன்...” என்று ஷானுவை போட்டு மொத்தி எடுத்தாள்.
“ஹேய்.... விடுடி.... அதான் உனக்கு எவ்வளவு பெரிய ஹெல்ப் பண்ணிருக்கேன்... அதை நினைச்சுக்கோ.... அதோட அந்த அனுமாருக்கு இன்பார்ம் பண்ணியாச்சு... உன் டார்லி டியுட்டியும் சேர்த்து அந்த பனைமரம் செய்வான்...”
“நன்பிடா மச்சி... என் ப்ரண்டைப் போல யாரு மச்சினு பாட்டு பாடத் தோணுது... பட் இவ்ளோ நேரம் நீ அடிச்சா கூத்துல எனக்கு ஹெட்டேக்கே வந்திடுச்சு... இப்போ கொஞ்சம் தூங்குறேன்... அப்போதான் என் டார்லிக்கிட்டே பேசும் போது ப்ரெஷா இருப்பேன்..” என்ற வித்யா, ஷானவியின் முறைப்பைக் கண்டு கொள்ளாமல் காரின் ஆடியோ பிளேயரை ஆன் செய்துவிட்டு, சீட்டில் தலையை சாய்த்துக் கொண்டாள்.
அதுவரை வித்யாவை முறைப்பது போல் பார்த்துக்கொண்டிருந்த ஷானுவிற்கு அவள் பேசியதைக் கேட்டதும் லேசாக சிரிப்பு வந்தது. இன்று இவளை மிகவும் படுத்திவிட்டோம் என்று அவளுக்கே புரிந்தது. தன் சோகங்களை மறக்க தனக்கு கிடைத்த ஒரே துணை இந்த தோழி வித்யாதான்.
தன் வாழ்வில் நடந்த சில தவறுகள், அதைத் தவறு என்று சொல்ல முடியாது... தன் வாழ்வின் அடுத்த கட்ட நிகழ்வுகள் என்று வேண்டுமானால் சொல்லலாம்... சராசரி பெற்றோரைப் போலவே ஷானுவின் பெற்றோரும் அவளது திருமணத்திற்காக ஆசைப்பட்டனர். ஆசைப்பட்டது அனைத்தும் நடந்திடுமா... என்ன....?
காதல்.... அது இருந்ததா...? இல்லையா..? என்றுத் தெரியாது. அதைத் தெரிந்து கொள்ளும் சந்தர்ப்பம் அமைந்தும், விடாப்படியாக வேண்டாம் என்று ஒதுக்கியவளும் அவளேதான்.
திருமணம்........... அவளது விருப்பம் இம்மியும் இல்லாமல் நடந்தேறியது. அதிலும் அவள் தவறு ஒன்றுமில்லை... இந்த லண்டனில் அவளுடைய மேற்படிப்பு. இதுவும் அவளுக்கு சற்றும் விருப்பமில்லாதது தான். ஆனால் இத்தனைக்கும் ஒரே ஆறுதல் அவளது ஆருயிர் தோழி அவளுடைய ஒவ்வொரு கஷ்டத்திலும் உடனிருந்ததுதான்.
தான் செய்தது சரியா...? தவறா....? தன்னால் அவனைப் பிரிந்து இருக்க முடியுமா...? அவன் தன் கழுத்தில் கட்டிய இந்த கட்டாயத் தாலிக்கு நான் என்ன மதிப்பு கொடுக்க வேண்டும்.... அவன் கூறியது போலோ, அல்லது வீட்டில் இருப்பவர்கள் நினைத்தது போலோ நான் அவனை விரும்பினேனா....? இப்படி பல குழப்பங்கள் வழக்கம்போல் அவளுக்குள் படையெடுக்க...... அதிலிருந்து மீழ மனதை திசை திருப்பும் பொருட்டு தனது வலைதளத்தில் சென்று இன்று என்ன என்ன புதுவிதமான கேள்விகள் வந்திருக்கின்றன என்று பார்க்க ஆரம்பித்தாள் ஷானவி.