EPISODE -12
இதயத்தின்
ஆழத்தில்
இறுகிக்கிடக்கும்
உணர்வுகளையுடைத்துச்
சொற்களாக்கி,
பின்னிக்
கொண்டிருக்கிறேன்.
கவிதையாய்
வடித்துன்
படைக்கும்முன்
நீயில்லாது போகலாம்,
இருந்து படித்து இளகி
கரையும் உன்
உணர்வு காண,
நானில்லாது
போகலாம்.
பிறவிகளாய்
உயிர்த்திருக்கும்
நமது அன்பு
உறைந்திருக்கும்
இன்னொரு
காதலுக்காய்.
மெல்லியலாளே!
ஆழத்தில்
இறுகிக்கிடக்கும்
உணர்வுகளையுடைத்துச்
சொற்களாக்கி,
பின்னிக்
கொண்டிருக்கிறேன்.
கவிதையாய்
வடித்துன்
படைக்கும்முன்
நீயில்லாது போகலாம்,
இருந்து படித்து இளகி
கரையும் உன்
உணர்வு காண,
நானில்லாது
போகலாம்.
பிறவிகளாய்
உயிர்த்திருக்கும்
நமது அன்பு
உறைந்திருக்கும்
இன்னொரு
காதலுக்காய்.
மெல்லியலாளே!
ஆகாஷின் தங்கை ஆனந்தியின் திருமணத்திற்குப் பிறகு அவளைச் சென்று பார்க்கவில்லை என்ற பெற்றோரின் நச்சரிப்பு ஒரு பக்கம் இருந்தாலும், அவனுக்குமே திருமணத்தின் போது பார்த்த தங்கையை பார்க்க வேண்டும் என்ற ஆவல் அவனை கிளம்ப வைத்திருந்தது.
போனில் அடிக்கடிப் பேசிக் கொண்டாலும் நேரில் பார்ப்பதுபோல் அமையாதே. அதனால் விடுமுறைக்கு வரும்போது, தங்கையைப் பார்த்துவிட்டு வருவதாக வீட்டில் கூறியிருந்ததால், ஆனந்தியைப் பார்க்க ஓசூர் சென்று கொண்டிருந்தான்.
அப்படி அவன் பயணம் செய்த பேருந்தில் நடந்தது தான் இவையெல்லாம். பேருந்தில் ஏறியதுமே சோர்வில் உறங்கிவிட்டவனின் காதில் ஒரு ஆணின் அலறல் சத்தம் கேட்க, விபத்து எதுவும் நடந்துவிட்டதோ என்று அடித்துப் பிடித்து எழுந்தான்.
எழுந்த வேகத்தில் பார்த்தவனுக்கு, ருத்ரதேவியாய் கோபம் கொண்டு நின்ற ஒரு பெண்ணை சத்தியமாய் அவன் எதிர்பார்த்திருக்கவில்லை. அந்த ஆணைப் போட்டு அவள் அடித்து நொறுக்கிக் கொண்டிருந்தாள்.
என்னதான் தவறு செய்திருந்தாலும் இத்தனைபேர் மத்தியில் ஒரு ஆணைப் போட்டு அடிப்பது தவறு என்று பட்டது... பின் நாளை அவனாலையே அந்தப் பெண்ணிற்கும் ஏதேனும் பிரச்சினைகளும் வரலாம், என்ற எண்ணமும் தோன்ற, அவளைத் தடுக்கப் போனான்.
அவன் அருகில் இருப்பவர் அவனைத் தடுத்து விபரத்தைக் கூறி அமர செய்துவிட்டார். அவர் கூறியதும் ஒரு ஆண்மகனாய் வெட்கித் தலைகுனிந்தவன், அந்தப் பொறுக்கியை அடித்து நொறுக்கும் அளவுக்கு கோபம் பொங்கியது அவனுக்குமே.
ஒரு ஆண்மகனாக அவன் மேல் வானளவு கோபமும் ஆத்திரமும் வந்தாலும், ஒரு மருத்துவனாக அதைக் காண சகிக்காது, அவளைத் தடுக்கப் போனான். அப்போது அவனிடம் மான்யா பேசிய வார்த்தைகள் அவனை சிலையென நிற்க வைத்தது.
தானும் இரு பெண்களுடன் பிறந்தவன் என்பதை மனதில் கொண்டு நின்ற இடத்திலையே அமைதியாகி, அங்கு நடப்பதை வேடிக்கைப் பார்க்க ஆரம்பித்தான்.
அதன் பிறகு நடந்த ஒவ்வொரு செய்கையிலும் அவளின் மேல் அவனுக்கு மரியாதை தோன்றியது. பெண் என்றால் இப்படித்தான் தைரியமாக இருக்க வேண்டும் என்ற எண்ணம் விதையாக அவனுக்குள் விழுந்தது.
அடக்கி , ஒடுக்கி பெண்களை ஒதுக்கும் சமூகத்தில் மான்யாவின் மீதும், அவளை இப்படி வளர்த்த மான்யாவின் பெற்றோர் மீதும் அவனுக்கு நன்மதிப்பு உண்டானது. தொடர்ந்து பேருந்தில் நடந்த அனைத்தையும் பார்த்தவனுக்கு அவளது குறும்புத்தனம் கண்டு ‘மேடம் செம வாழு போல..’ என்று நினைத்து புன்னகைத்துக் கொண்டான்.
அவளது பேச்சிலும், செய்கையிலும் அவன் மனம் அவளிடம் சரணடையத் துடிக்க, இப்படி ஒரு பெண்ணை மணந்து வாழும் வாழ்க்கை எத்தனை இனிமையாய் இருக்கும் என்று அவன் மனம் அவனுக்குள் ஆசையை விதைத்தது. அவன் எண்ணம் போன போக்கைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தான் ஆகாஷ்.
என்ன செய்கிறேன் நான்..? அவளுக்குத் திருமண ஏற்பாடுகள் நடந்து கொண்டிருக்கும் இந்த வேளையில், நான் இப்படி யோசிப்பது எவ்வளவு தவறு என்று உணர்ந்தான்.
மகிழ்ச்சியும், குறும்பும், தன்னமபிக்கையும், தைரியமும் அதையும் தாண்டி பெற்றோர்கள் அவள் மீது வைத்திருக்கும் நம்பிக்கை இப்படி எதையும் அவள் தன்னால் இழந்து விடக்கூடாது என்று உறுதியாய் நினைத்தான்.
அதோடு நிமிடத்தில் தோன்றிய இந்த ஆசை ஒருவேளை வெறும் ஈர்ப்பாக கூட இருக்கலாம், அதை வைத்து எந்த முடிவும் எடுக்கக் கூடாது. முதலில் நான் ஒரு முடிவுக்கு வரவேண்டும்.. அப்போதும் அது ஈர்ப்பையும் மீறிய அன்பாக இருந்தாலும் கூட, அது என்னளவிலையே முடிந்து விட வேண்டும்.
இப்படி ஒருவன் தன்னைப் பார்த்தான், நினைத்தான், உருகி மருகிப்போனான் என்ற எதுவுமே அவளுக்குத் தெரியாமல் போகட்டும் என்று தீர்க்க யோசித்து ஒரு முடிவுக்கு வந்தான்.
இதுதான் ஆகாஷ்... தன்னை மட்டுமல்ல, தன்னைச் சார்ந்தவர்களையும் வைத்தே பிரச்சினையை யோசிப்பான். எந்த விதத்திலும் தன்னால் மற்றவர்களுக்கு பிரச்சினை வந்து, அதனால் அவர்கள் துளியும் வருந்தி விடக்கூடாது என்பதில் உறுதியாய் இருப்பான்.
அதையேதான் மான்யாவின் விசயத்திலும் செய்ய நினைத்தான். ஏதோ ஒரு பயணத்தில் கிடைத்த ஒரு நட்பு போல எண்ணி, இந்தப் பயணத்தோடு சேர்த்து அவளையும் மறந்து விட துடித்தான்.
ஆனால் காலமோ பயணங்கள் முடிவதில்லை என்று பச்சை விளக்கை ஜெக ஜோதியாய் எரிய வைத்தது அவன் வாழ்வில்.
தங்கையைப் பார்த்துவிட்டு வந்தவன், அதன்பிறகு அந்த ஊருக்குச் செல்வதையேத் தவிர்த்தான். என்னதான் அவள் வேண்டாம் என்ற முடிவில் அவன் திண்ணமாய் இருந்தாலும், ஒரு சில நேரங்களில் அவனையும் மீறி வெளியேறும் அவளது நினைவுகளைத் தடுக்க இயலாமல் தவித்துக் கொண்டிருந்தான்.
காலநேரங்கள் அதன் வேலையைச் செவ்வனே செய்ய, சிபி, ஆகாஷ் மற்றும் தீபக் மூவரும் ராணுவத்தில் சேர்ந்து அதற்கான முதற்கட்டப் பயிற்சியில் இருந்தனர்.
ஒரு சில நிமிடங்கள் மட்டுமே அவளைப் பார்த்திருந்தாலும், பேசவோ பழகவோ இல்லை.. ஆனால் பல ஜென்மங்கள் அவளுடன் வாழ்ந்த உணர்வுகளை கொடுத்தது அவளது நினைவுகள். அவள் அடுத்தவரின் மனைவி, அவளை இப்படி நினைக்கக்கூடாது என்றெல்லாம் யோசித்தாலும், தன்னுடைய காதலியைப் பற்றி நினைப்பதற்கு நான் ஏன் பயப்பட வேண்டும் என்ற எண்ணம் மரமாய் வளர்ந்தது.
தனக்குள் உண்டாகும் இந்த உணர்வுகளை நண்பர்களிடம் கூட பகிர்ந்து கொள்ளவில்லை ஆகாஷ். ஷானு, வித்யா மற்றும் நண்பர்கள் இருக்கும்போது மான்யாவைப் பற்றிக் கூறியிருந்தான் அவ்வளவே. மற்றபடி எதையும் அவர்களிடம் பகிர அவனுக்கு விருப்பம் இல்லை... விருப்பம் இல்லை என்பதை விட, பயம் இருந்தது எங்கே தன்னைத் தவறாக நினைத்து விடுவார்களோ என்று...
ஆனால் ஆகாஷின் முகத்தில் தோன்றிய கவலைகளைப் பார்த்து, தோண்டித் துருவி உண்மையை வாங்கியதுமில்லாமல், மான்யாவின் போட்டோவையும் வாங்கியிருந்தாள் ஷானவி. அந்தப் போட்டோதான் அவன் வாழ்க்கையில் மாற்றம் தரப்போவது தெரியாமல்....!
கண்கள் எங்கோ நிலைத்திருக்க, மனம் முழவதும் ரணமாய் வலிக்க, தனக்குள் இத்தனை நாட்களாய் புதைத்து, புகைந்து கொண்டிருந்த காதலை கூறிவிட்டு அமைதியாய் அமர்ந்திருந்தான் ஆகாஷ்.
ஆகாஷின் வருத்தம் நண்பர்களுக்கும் புரிந்தாலும், இதில் அவர்களாலும் என்ன செய்திட முடியும்.... ஆனால் நண்பனின் இந்த நிலையை மாற்றியே ஆகவேண்டுமே... இல்லையென்றால் கடைசிவரை இப்படியே இருந்து விடுவானே...? என்ன செய்ய..? என யோசிக்க ஆரம்பித்தனர்.
தீபக் தான்... “போதுண்டா உன்னோட மஷ்கிடோ காயில் சுத்துரதை நிறுத்து.... உன்னை தப்பு சொல்லல... உன் அளவுக்கு இது ஓகே தான். பட் அவங்க நிலையில் இருந்து யோசிச்சுப்பாரு எல்லாம் புரியும்..” என்று பேசிக்கொண்டிருக்கும் போதே ஷான்வியிடம் இருந்து போன் வந்தது சிபிக்கு...
அவளின் எண்ணைப் பார்த்ததும் கடுப்பானவன் “இவ கேம்ப் னு போனாலும் போனா... டிபன் சரியில்ல, டின்னர் சரியில்ல, குழம்பு தண்ணியா இருக்கு... ஒரு சிக்கன் பீஸ்தான் தராங்கனு புலம்பித் தள்ளுறா.. இனி யாரச்சும் இவளுக்கு சப்போர்ட் பண்ணி வந்தீங்க, அவளோதான் சொல்லிட்டேன்...” என்று திட்டிக்கொண்டே போனை எடுத்துக் காதுக்கு கொடுத்தான்.
சிபியின் புலம்பலில் நண்பர்கள் இருவரும் சிரிக்க, பேசிக் கொண்டிருந்தவனின் முகமோ ஏதோ ஒரு சிந்தனையில் ஆழ்ந்திருந்தது. ஆகாஷ் அதைக் கவனிக்கவில்லை, ஆனால் தீபக் சரியாக கவனித்து விட்டான்.
சிபியிடம் என்னவென்று கேட்க, அவன் கூறிய செய்தியில் ‘கடவுளே இது எதற்காக...? இப்படியும் நடக்குமா..? என அதிர்ச்சியானான் தீபக்.
அந்தமுறை கேம்பிற்கு செல்லும் ஹவுஸ் சர்ஜன் லிஸ்டில் ஷானவி பெயர் மட்டும் இடம் பெற்றிருக்க... வித்யாவிற்கு அடுத்தமுறை என்றானது. தோழிகள் இருவரும் பிரிவது இதுவே முதல்முறை... அதனால் இருவரும் ஆளுக்கொரு பக்கம் பிடில் வாசிக்க, அவர்களை சமாதானப்படுத்தி, ஷானவியை பேக் செய்து அனுப்புவதற்குள் சிபிக்கு போதும் போதும் என்றானது.
கேம்பில் முதல் இரண்டு நாட்கள் வேலை அதிகம் இருக்க, மூன்றாம் நாள் அந்த ஊரைச் சுற்றிப் பார்க்கலாம் என்ற பெர்மிசன் கிடைத்தது. தோழிகள் அனைவரும் அந்த நந்தனபுரம் என்ற ஊரையே சுற்றி வந்தனர்.
நீலகிரியில் இருந்து பெங்களூர் செல்லும் வழியில் அமைந்துள்ள அழகான ஊர் தான் நந்தனபுரம்... இங்கு காப்பி முதன்மை விவசாயமாக இருக்க... இதை அடுத்து மிளகு, ஏலம் கிராம்பு போன்ற பொருட்கள் விளைவிக்கப் படுகின்றன.
கிராமம் என்றுமில்லாமல், நகரம் என்றுமில்லாமல் மிகவும் அழகாய் காட்சியளித்தது நந்தனபுரம். அங்குள்ள இடங்களைச் சுற்றிப் பார்க்கும் போதுதான் எதிர்பாராத விதமாக ஷானவி மான்யாவைச் சந்தித்தது.
ஆகாஷ் காட்டிய புகைப்படத்திற்கும், நேரில் பார்ப்பதற்கும் சம்மந்தமே இல்லாமல் இருந்தாள். உடல் மெலிந்து, கருத்து, கண்கள் இரண்டும் ஜீவனற்று ஒரு உயிர்ப்பில்லாத ஓவியம் போல் காட்சியளித்தாள் மான்யா.
ஏன் இப்படி இருக்கிறார்கள்..? கணவருடன் பிரச்சினையா... இல்லை மாமியார் வீட்டில் பிரச்சினையா..? இல்லை உடல்நலம் ஏதும் சரியில்லையா என்று யோசித்தவள் மான்யாவின் அருகில் வரும் பெண்ணைப் பார்த்தாள். இது யார்..? இவர்கள் இங்கே என்ன செய்கிறார்கள்... ஒருவேளை மான்யாவின் கணவர் ஊர் இதுதானோ..? என்று தன் கற்பனைக் குதிரையை அவிழ்த்துவிட்டவள் இருவரையும் மேலிருந்து கீழாக நோட்டம் விட்டாள்.
அப்போதுதான் மான்யாவின் வயிறு சற்றே உப்பியிருப்பதைப் பார்த்து ‘ச்சே ப்ரேக்னண்டா இருக்காங்க... அதான் இப்படி இருக்காங்க என மானசீகமாகத் தன் தலையில் தட்டிக் கொண்டாலும், இல்லையே அப்படி பார்த்தா இப்போ அவங்க ஹேப்பியா தானே இருக்கணும், அப்படி ஒரு சுவடே இல்லையே... அவங்க ஐஸ் ப்ரைட்டா இல்லையே...? ஏதோ பெருசா இழந்த மாதிரி இருக்காங்களே..? என்று நினைத்தவளுக்கு அவளின் மாற்றங்கள் முழுவதும் பட, புதிதாய் யோசிக்க ஆரம்பித்தாள்.
தன் ஆராய்ந்தது அனைத்தும் உண்மையா..? நான் யூகிக்கிறது சரியா...? இருக்காது... இருக்கக்கூடாது... ஓ மை காட்.. என்று தனக்குள்ளே பயத்துடன் முனுமுனுத்தவள், எதுவாக இருந்தாலும் அவர்களிடமே கேட்டு தெரிந்து கொள்வோம் என்று முடிவெடுத்தாள்.
அவர்களிடம் மெதுவாகப் பேச்சுக் கொடுத்துக் கண்டுபிடிக்கலாம் என்று அவர்களை நெருங்கினாள். மான்யாவின் அருகில் வரும் பெண் ஏதோ கோபமாகவேப் பேசுவது புரிந்தது. ஷானவி அவர்களை நெருங்கியதும் இருவரும் புரியாமல் பார்க்க, அவளோ ஒரு அசட்டுப் புன்னகையுடன் தன்னைப் பற்றிக் கூறி, தான் வழி மாறி வந்துவிட்டதாகவும், கேம்ப் நடக்கும் இடத்திற்கு வழி கூறுமாறும் தன் பேச்சை ஆரம்பித்தாள்.
மான்யா தோழியை ‘நீ சொல்லு’ எனும் விதமாகப் பார்க்க, அவளோ ஷானவியிடம் கேம்பை பற்றிப் ஏற்கனவே பேச ஆரம்பித்திருந்தாள். சுயவிவரம் பகிர்தல், நலம் விசாரிப்புகள் என்று தொடங்கிய அவர்களது பேச்சு இப்போது மான்யாவைப் பற்றியதாக இருக்க, மான்யாவோ அதை சுத்தமாக விரும்பவில்லை என்று தன் கோபத்துடன் ‘காவேரி’ என அழுத்தத்துடன் கூறி நிறுத்தினாள் மான்யா.
அதேக் கோபத்துடன் ஷானவிக்கும் வழியைக் கூறிவிட்டு, தோழி வருகிறாளா..? இல்லையா..? என்று கூட பார்க்காமல் விறுவிறுவென்று கிளம்பி போய்விட்டாள்.
காவேரியும் தோழியைத் தொடரப் போக ஷான்வியின் கை அழுத்தம் அவளைத் தடுத்து நிறுத்தியது. காவேரியின் முகத்தில் தோன்றிய கேள்வியில் ஷானு தன்னை மட்டுமல்லாது ஆகாஷையும் சேர்த்தே அறிமுகப்படுத்தி கொண்டாள்.
கூடவே ஆகாஷின் காதலையும், இன்று வரைக்கும் அவன் மான்யாவை மறக்க முடியாமல் தவிப்பதையும், அதைத் தன் உயிர் நண்பர்களிடம் கூட சொல்ல முடியாமல் குற்ற உணர்வில் இருப்பதையும் எடுத்து சொன்னாள்.
ஷானு கூறுவதில் பொய் எதுவுமில்லை என்பதை உணர்ந்த காவேரி தன் தோழி மாயாவின் வாழ்க்கையில் நடந்த துயரத்தை எடுத்துரைத்தாள்.
மான்யா என்னதான் அடாவடிப் பெண், புரட்சி செய்வாள், பெண்ணியம் பேசுவாள் என்றாலும் பெற்றோரின் பேச்சை அவள் மீரியதேக் கிடையாது. பெற்றோரின் விருப்பப்படியே வீட்டில் பார்த்த மாப்பிள்ளையான சுஷாந்துடன் இனிதே திருமணம் நடந்தது.
சுஷாந்த் மிலிட்டரியில் இருப்பதைத் தவிர வேறெந்தக் குறையும் கிடையாது மான்யாவின் பெற்றோருக்கு, சுஷாந்தின் பெற்றோர் தவறிவிட, ஒரே அண்ணன் மட்டும் நாக்பூரில் குடும்பத்துடன் இருந்தார். புகுந்த வீட்டில் எந்தப்பிக்கலும் பிடுங்கலும் இல்லை என்ற எண்ணமே அவள் பெற்றோரைத் திருமணத்திற்கு சம்மதிக்க வைத்தது.
மான்யாவிற்கு அதெல்லாம் ஒரு குறையும் தெரியவில்லை. முழு சம்மதத்துடன் சுஷாந்தை திருமணம் செய்து உத்திரகாண்டில் வசித்து வந்தாள். நாளொரு மேனியும், பொழுதொரு வண்ணமுமாய், திகட்ட திகட்ட காதல் செய்தவர்களுக்கு முதலில் நேகா என்ற பெண் குழந்தைப் பிறந்தது.
குழந்தைப் பிறப்பிற்கு கூட தாய்வீட்டிற்கு அனுப்பாமல், மான்யாவின் பெற்றோரை இங்கு வரவைத்து அவளைக் கண்ணின் மணியாகத் தாங்கினான் சுஷாந்த். மான்யாவும் தன் குரும்புத்தனத்தை எல்லாம் மூட்டைக்கட்டி வைத்துவிட்டு, பொறுப்புள்ள மனைவியாய் அவனின் மனதில் இடம் பிடித்தாள்.
தெளிந்த நீரோடையாய் சென்று கொண்டிருந்த அவர்களது வாழ்வில், யார் கண் பட்டதோ விதி மிகவும் கோரமாய் தன் விளையாட்டை விளையாடி முடித்துச் சென்றது.
உத்தர்காண்டில் ஏற்பட்ட வெள்ளச்சரிவில் மீட்புபணிக்கு என்று சென்றிருந்த சுஷாந்த் மீண்டும் உயிரோடு வீடு வந்து சேரவில்லை. அவனது உடலும், அவன் பேசியதாகக் கூறிய ஒரு வீடியோவும் வந்து சேர்ந்தது.
அடுத்து என்ன செய்ய வேண்டும் என்று கூட தெரியாமல் கேள்விப்பட்ட செய்தியிலேயே மயங்கி விழுந்தாள் மான்யா. அடுத்து அவள் கண்விழிக்கும் போது சுஷாந்தின் இறுதிக் காரியங்கள் நடந்து கொண்டிருந்தன. இரு வீட்டுச் சொந்தங்கள் இருந்தும், பயணப் போக்குவரத்து ரத்தானதால், அக்கம் பக்கம் உள்ளவர்களின் துணையோடு அனைத்துக் காரியங்களும் முடிந்தது. தன் அம்மா ஏன் இப்படி இருக்கிறாள்..? இவர்கள் ஏன் இப்படி அழுகிறார்கள்..? என்று எதுவுமே தெரியாத பிஞ்சு தன் தந்தையைக் கேட்டு அலுத்து அழுதே உறங்கிப் போனது.
மான்யாவின் வீட்டில் செய்திக் கேட்டு வந்தவர்கள், அவளைப் பார்த்து துடித்துப் பானார்கள். ‘என் பொண்ணுக்கு இப்படி ஒரு நிலைமையை கொடுத்துட்டியே... அவ எல்லாருக்கும் நல்லதுதானே பண்ணா..? அவ வாழ்க்கையை இப்படி அலங்கோலம் பண்ணிட்டியே...? என்று கதறி அழுதே ஓய்ந்து போனார்கள்.
இருபது நாட்களுக்குப் பிறகு குழந்தையையும் மான்யாவையும் அழைத்துக்கொண்டு சொந்த ஊரான ஓசூருக்கே அழைத்து வந்தனர். தோழியின் நிலையறிந்து பதறி ஓடி வந்த காவேரி அவளின் நிலைப்பார்த்து அனைத்துக் கொண்டு கதறினாள்.
சுஷாந்த் தன் வாழ்க்கையில் இனி இல்லை என்ற நிதர்சனம் மெது மெதுவாக உரைக்க ஆரம்பித்தது. அபப்டி உறைத்ததும் தோழியிடமிருந்து கையை உருவித் தன் வயிற்றில் வைத்தவள் அதுவரை அழுகாத அழுகையை அடக்க முடியாமல் வெடித்து அழ ஆரம்பித்தாள்.
அவள் மனதில் ‘அன்று சோர்வாக இருந்த மான்யாவை சுஷாந்த் எழுப்பியதும், அவள் சிணுங்கியதும் அவளைத் தூக்கிக்கொண்டு கொஞ்சிக் கெஞ்சியதும், அவள் மெதுவாக தான் யூகித்த விஷயத்தைக் கூறி அவன் மார்பில் புதைந்ததும், அதைக்கேட்டு கையில் இருந்தவளை அப்படியே தட்டாமாலை சுற்றியதும், அவள் கத்தியதும், உறங்கிய குழந்தை சிணுங்க ஆரம்பிக்க, அவள் கோபப்பட, அவன் சமாதனப்படுத்த’ என்று ஓவியமாய் வாழ்ந்த நிமிடங்கள்உலாவர, அது இப்போது கலைந்து கருகிப் போனதை எண்ணித் துடித்துப் போனாள்.
“என் சுஷாந்த்.... என் சாந்துப்பொட்டு...’ அவனைத் தவிர அவனது வாரிசுகள் கூட அவளது நினைவில் இல்லை. திருமணத்திற்கு முன்பு இதே சுஷாந்தைக் கண்டபடி கலாய்த்தவள், இன்று அவன் இல்லாமல் உயிர் நோகும் வலியை அனுபவிக்கிறாள்.
தோழியின் நிலையைப் பார்த்து வருந்திய காவேரி, அவளிடம் பேசி பேசியே சகஜ நிலைக்கு இல்லையென்றாலும், சாதாரன பேச்சுக்கள் பேசுவது என்ற நிலைக்கு கொண்டு வந்தாள்.
அதுவரையும் சுஷாந்த் பேசிய வீடியோவை அவள் பார்க்கவில்லை. எங்கே வற்புறுத்தினால் அதைப்பார்த்து மீண்டும் பழைய நிலைக்கு சென்றுவிடுவாளோ என்ற பயத்தில அதைத் தவிர்த்தார்கள்.
ஆனால் மான்யாவிற்குள் ஒரு யூகம் இருந்தது. அதனால் அவள் அதைப் பார்க்க முயலவில்லை. ஆனால் காலம் அவளை அப்படியே இருக்க விட வில்லை. பெற்றோரின் புலம்பல்கள் ஒரு பக்கம், தனக்குள்ளே எழுந்த விரக்தி ஒரு பக்கம், குழந்தைகளின் எதிர்காலம் ஒரு பக்கம் என்று அவளை நெருக்க, வேறுவழியின்றி ஒரு இக்கட்டான சூழலில் அந்த வீடியோவைப் பார்க்க ஆரம்பித்தாள் மான்யா.
தலையில் அடிபட்டு ரத்தம் தோய்ந்த முகத்துடன், மிகவும் சிரமத்துடன் அவன் பேசுவது தெரிந்தது. ‘மானு.. மானும்மா.... என் மேல இப்போ கோபமா இருப்ப இல்லையா... நான் உன்னை ஏமாத்திட்டேன்னு நினைக்கிறியா...’
‘என்னை மன்னிச்சிடுடா குட்டி.... உன்னை ஏமாத்தி.... உன்கிட்ட செஞ்சு கொடுத்த சத்தியத்தையும் மீறி உன்னைப் பாதியிலேயே விட்டுட்டுப் போறேன். நீயும் நம்ம குழந்தைகளும் இல்லாம அந்த உலகத்துல தனியா நான் எப்படி இருக்கப்போறேன்’ என்றுப் பேச பேச அவனுக்கு மூச்சுத்திணறல் வர, மருத்துவர் ஒருவர் அவனை அமைதிப்படுத்த முயற்சிக்க, அவனோ அவரிடம் ஒரு பிடிவாதத்துடன் இப்போது நான் பேசியே ஆகவேண்டும் என்ற பார்வையை செலுத்திவிட்டு மீண்டும் பேச ஆரம்பித்தான்.
என் மானுவோட வாழமுடியாது, என் குட்டி செல்லத்தை இனி பார்க்க முடியாது.... இந்த உலகத்தையே பார்க்காத என் கண்மணியை நானும் பார்க்க முடியாது.... இப்படி என் மனசு முழுக்க பயம்தான் ஆக்கிரமிச்சிருக்குடி குட்டி.. பயமா இருக்குடி தங்கம்.... எந்த நிமிஷம் வேணும்னாலும் என் உயிர் போயிடலாம் கண்ணம்மா... ஆனா இப்போதான் இன்னும் உன்னோட நூறு வருஷம் வாழனும் போல ஆசையா இருக்குடி....’
‘மானும்மா எனக்கு எப்போ வேணும்னாலும் உயிர் போகலாம்... நீ என்னை மாதிரி கோழை கிடையாது... உன்னோட தன்னம்பிக்கையும் தைரியத்தையும் பார்த்து பிரமிச்சுத்தான் உன்னை மேரேஜ் பண்ணேன். ஆனால் இப்போ அதை நினைச்சுப் பயப்படுறேன்..’
‘இந்தத் தன்னம்பிக்கையும், தைரியமும் உன்னைக் கடைசிவரை தனியா வாழ வச்சிடுச்சினா..? அதுதான் என் பயமே...! என் மானு என்னைத் தவிர வேற யாரையும் மனசுல ஏத்துக்க மாட்டா... அது எனக்குத் தெரியும்.. ஆனா நம்ம குழந்தங்க... அப்பாவோட பாசத்துக்கு ஏங்கித் தவிப்பாங்களே... அதுக்கு என்ன செய்ய... அப்படி ஒரு நிலைமையை வர வச்சிடாதே மானும்மா.. ப்ளீஸ்....’
‘அடுத்து வரப்போற என்னோட தேவதை இந்த உலகத்தைப் பார்க்கும் போது அவளுக்கு அப்பா என்ற ஒருவர் கண்டிப்பா இருக்கணும். யாருக்காக இல்லைன்னாலும் உன்னோட இந்த சாந்துப் பொட்டுக்காக இதை நீ செஞ்சுத்தான் ஆகணும் கண்ணம்மா... உன்னைக் கஷ்டப் படுத்துறேனோ..? உன் உணர்வுகளைக் கொல்றேனோ என்றெல்லாம் தயவுசெய்து நினைச்சிடாதே..’
எந்த அப்பாவும் தன்னோட குழந்தைகள் விசயத்துல சுயநலவாதிகள்தான்.. அப்படித்தான் நானும்... நானும் ஒரு சுயநலவாதிதான். என் குழந்தைகளுக்காக, அவங்க எதிர்காலத்துக்காக நான் உன்னை கஷ்டப்படுத்துறேன்... ஆனா உன் வாழ்க்கையும் இப்படியே போயிடக்கூடாதே.... என்னால உன் வாழ்க்கை வீனாகிடக்கூடாது இல்லையா... நான் என்ன சொல்ல வரேன்னு புரியுதா குட்டிம்மா... என்னை முழுசா புரிஞ்சிக்கிட்ட ஒரே ஆளு நீதான்.... இது நீ மற்றும் நம் குழந்தைகள் மேல நான் வச்சிருக்க பயம் தான் என்னை இப்படி பேசவைக்குது... என்னை மறந்து நீ இன்னொரு வாழ்க்கைக்குத் தயாராகணும் கண்ணம்மா...’
‘அப்போதான் எனக்கு நிம்மதிக் கிடைக்கும்..’ என்று பேச பேச, அவனது கண்கள் செருக ஆரம்பிக்க, அந்த நிலையிலும் “ஐ மிஸ் யு மானு... மிஸ் யு சோ மச் கண்ணம்மா.. பாய்.. டேக் கேர்...” என்றதோடு அந்த வீடியோ முடிந்திருந்தது. அவன் உயிர் பிரியும் தருணங்களை எடுக்க சுஷாந்த் அனுமதிக்க வில்லை என்பது புரிந்தது.
வீடியோவைப் பார்த்து சிறிது நேரம் கதறியவள் முகத்தில் தானாக ஒரு விரக்திப்புன்னகை வந்தமர்ந்தது... இத்தனைக் காதலையும் என்கிட்ட காட்டிட்டு, அவன் இடத்துல வேற ஒருத்தனை வைக்க சொல்லிட்டான்... என்னைப்பத்தி என்ன நினைச்சிட்டு இருந்தான். அவன் தானே எனக்கு எல்லாம்... அப்படி இருக்கும் போது.... என்ன வார்த்தை சொல்லிட்டான்...’
‘நான் மான்யா... யாரையும் சார்ந்து வாழவேண்டிய அவசியம் எனக்கு இல்லை... இந்த இரண்டு குழந்தைகள் மட்டுமல்ல, இன்னும் இரண்டு இருந்திருந்தாலும் கூட தனியாக சமாளிக்க என்னால் முடியும்... நான் யாருக்கும் சளைத்தவள் அல்ல.... தன்னம்பிக்கையும், தைரியமும் நிறைந்தவள்..’ என்று நீண்ட நாட்களுக்குப் பிறகு வெளியே வந்த மான்யாவின் பெண்ணியம் அவளை அப்படி நினைக்க வைத்தது.
அதன் பிறகு அவள் எந்த உணர்வுகளையும் வெளிக்காட்டிக்கொள்ள வில்லை. ஆனால் அவளின் பெற்றோர் தான் ;இப்படி ஒரு அருமையான மாப்பிள்ளைக் கிடைத்தும் கடைசி வரை ஒன்றாக வாழக் குடுப்பினை இல்லையே தன் மகளுக்கு என்று வருந்தினர்.
மான்யாவின் ஆறாம் மாதத்தில் இருந்து அவள் வீட்டில் மீண்டும் திருமணப்பேச்சை எடுக்க ஆரம்பித்தனர். அதில் வந்த கோபத்தில் யாரிடமும் சொல்லாமல் குழந்தையைத் தூக்கிக்கொண்டு இந்த நந்தனபுரத்திற்கு வந்துவிட்டாள்.