• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

மென்பனி இரவுகள் - 13

Vathani

Administrator
Staff member
Jul 23, 2021
1,136
643
113
Tirupur
அத்தியாயம் – 13


செல்ல சண்டைகள், சின்ன குறும்புகள்

பேச்சின் தூரங்களில், மௌனத்தின் நெருக்கங்களில்,

மழலைக் குழந்தையாய், உன்மடி உறங்கி,

மழையில் ஒரு குடைக்குள் இருவரும் நடப்பது போல்

உன்னோடு நான் உயிர்பரவை பிரியும் வரை

ஒவ்வொரு நிமிடமும் உன்னை மட்டும் காதலித்து

பயணிக்க வேண்டும் அன்பின் சுவாசங்களோடு...!
----------------------------------


ஆகாஷின் வீடு மிகவும் பரபரப்பாக காணப்பட்டது. மூத்தப் பெண்மணிகள் நலுங்குக்கான வேலைகளில் ஈடுபட, இளையவர்கள் வீட்டை அலங்கரிக்கும் பணியை சிலபல கலாட்டக்களுடன் செய்து கொண்டிருந்தனர். ஆனால் இவ்விழாவிற்கு சம்மந்தப்பட்ட ஆகாஷும் மான்யாவும் கனத்த மௌனத்துடன் காட்சியளித்தனர்.


ஆகாஷ் தன் மடியில் அமர்ந்திருந்த மகள் நேகாவை இறுக்கிப் பிடித்திருந்தான். இன்னும் சற்று நேரத்தில் தன் மனைவியான மான்யாவிற்கு வளைப்பூட்டுதல் நடைபெற இருக்க, அவனின் சகோதரிகள் ஆளுக்கொரு பக்கமாய் உம்மென்ற முகத்துடன் அமர்ந்திருந்தனர். இருவருக்குள்ளும் மான்யாவின் மீதான கோபம் எரிமலையாய் வெடித்துக் கொண்டிருந்தது.


தங்கள் செல்ல அண்ணனை அவர்களிடமிருந்து பிரித்து விட்டாள் என்ற கோபம், அவர்கள் இருவரின் வீட்டிலும் பெண் இருக்க, அவர்களை எல்லாம் மறுத்துவிட்டு, இரு குழந்தைகளுடன் இருப்பவளை மணந்து கொண்டானே என்ற கோபம், இதனால் அவர்களின் புகுந்த வீட்டில் தங்களை தரக்குறைவாக நினைப்பார்களே என்ற எண்ணம் எல்லாம் சேர்ந்து அவர்களுக்கு மான்யாவின் மேல் கொலை வெறியே வந்தது...


பெற்றோரிடம் முறையிட்டால் அவர்கள் எதற்கும் செவி சாய்க்கவில்லை. ஆகாஷின் தந்தை இது எதையும் கண்டுகொள்ளவில்லை. தன் மனைவியையும் அப்படியே இருக்க செய்தார். இவள் வந்ததும் பிறந்த வீட்டில் தங்கள் மரியாதை குறைந்து போய்விட்டதாகவே எண்ணினார்கள். தாய் தந்தையின் சமாதானம் எதையும் ஏற்க மனமில்லை அவர்களுக்கு. மகனின் மனம், அவனின் விருப்பம் தான் முக்கியம் என்று எண்ணிய அவனின் தந்தை தானும் சமாதானமாகி, மனைவியையும் தேற்றினார்.


ஆகாஷின் இந்த முடிவை முதலில் வரவேற்றவரே அவர்தான். ஒரு முடிவுடன் கிளம்பி வந்துவிட்டாலும், மிகுந்த தயக்கத்துடனே தந்தையிடம் மான்யாவைப் பற்றி கூறினான் ஆகாஷ். அவரும் எந்த வாக்குவாதங்களும் அவன் முன் வைக்காமல் ஒருநாள் அவகாசம் மட்டுமே கேட்டார்.


அவருக்கு தன் மகன் மேல் இருந்த நம்பிக்கையே அதற்கு காரணம். தவறான ஒரு செயலை எப்போதும் ஆகாஷ் செய்ததில்லை என்ற எண்ணமும் அவருக்கு உண்டு.. அன்றிரவு மனைவியிடம் என்ன பேசினாரோ..? காலையில் மகனிடம் சற்று வருத்தப்பட்டாலும், அவன் ஆசையை அவர் ஒதுக்க வில்லை. அந்த வருத்தம் கூட தன் இரு மகள்களை முன்னிறுத்தியே என்பதும் புரிந்தது.


இதில் ஆகாஷ் எந்த சமாதானத்திலும் இறங்கவில்லை, அப்படி ஒரு வேலை செய்தால், பிறகு அவனது மூளையையே சலவை செய்து விடுவார்கள் அவனது அருமை சகோதரிகள். அதைப்பற்றி தெரிந்தவன் அதனால் அவர்களிடம் பிடிக் கொடுக்காமல் நழுவிக் கொண்டான்.


தன் தந்தையிடம் “மேரேஜ் சிம்ப்ளா இருந்தா போதும் ப்பா, மறுபடியும் இப்படின்னா மான்யா கண்டிப்பா பயந்துக்குவா.... எதையும் ஏத்துக்க தினறுவாப்பா.... நான் என்ன சொல்ல வரேன்னா...” என திணறியவனைப் பார்த்து,


“எனக்குப் புரியுது ஆகாஷ்... நாளைக்கு நாம அங்க போய் பேசிக்கலாம்.. மருமகளை எப்படி சமாளிக்கிறதுன்னு மட்டும் நீ யோசி.... உன் தங்கைக மத்த நம்ம சொந்தக்காரங்களை நான் பார்த்துக்குறேன்..” என்ற தந்தையின் பேச்சில் மனம் ஆசுவாசம் கொண்டது அவனுக்கு.


“பொண்ணுக்கு நாத்திங்க எங்க.... அவங்களை போய் அழைச்சிட்டு வர சொல்லுங்க பொண்ணை” என ஒரு வயதானவர் சொல்ல, அதில் பழைய நினைவில் இருந்து விடுபட்டவன் தங்கைகளை நோக்க, அவர்களோ யாரையோ சொல்கிறார்கள் என்ற ரீதியில் அங்கிருந்த நாற்காலியை விட்டு எழவே இல்லை.


அவர்களின் கணவன்மார்கள் எதுவோ சொல்வதும், இவர்கள் வீம்பு செய்வதும் அவனின் பார்வை வட்டத்தில் விழ, அதற்குள் அங்கே சொந்தங்களுக்குள் சிறு சலசலப்பு ஏற்பட்டது.. ஆகாஷின் தாயும் தந்தையும் கூறும் எந்த சமாதானமும் ஏற்கப்படாமல் போனது.


அப்போது “ஏன் பாட்டி இப்படி டெரரான ஒரு நாத்தி, சாந்த சொருபியா ஒரு நாத்தி இருக்கப்போ எதுக்கு இவ்ளோ சத்தம் இங்க.... நாங்களே அழைச்சிட்டு வந்துட்டோம்... அடுத்து என்ன செய்யணும் சொல்லுங்க... அண்ணியால ரொம்ப நேரம் நிற்க முடியாது” என சுலபாக அந்த சூழ்நிலையைக் கையாண்டது ஷானவி தான்.


எல்லாரும் அவளை ஆச்சரியமாக பார்த்தார்கள் என்றால், ஆகாஷ் அவள் தலையைப் பிடித்து செல்லமாக ஆட்டி தன் மகிழ்ச்சியை காண்பித்தான்.


அதன்பிறகு அங்கு எந்தப் பிரச்சினையும் இல்லாமல் விழா தொடர, காவேரியும் ஷானவியும் மான்யாவை விட்டு விலகவில்லை. சிபியும், தீபக்கும் ஆகாஷுடனே நின்றிருக்க, ஆகாஷின் கையில் நேகா... சிறிது நேரத்தில் அந்த இடமே அழகான தருணங்களாய் மாறிப்போனது.


வித்யாவிற்கு அவளது வீட்டில் தடா போட்டு விட, அவளால் இங்கு வரமுடியவில்லை. அதனால் நொந்து போனது தீபக் மட்டுமே... “ஏண்டா என் தியாக்க்குட்டி வருவான்னு சொல்லி என்னை இழுத்துட்டு வந்த... நீ மட்டும் உன் மங்கி கூட ஜாலி யா சுத்தணும்... நான் மட்டும் ஏங்கி போய் அலையனுமா..” என்று சிபியிடம் புலம்பிக் கொண்டிருந்தான் தீபக்.


சிபியோ நீ என்ன வேணும்னாலும் சொல்லிக்கோ என்ற ரீதியில் தன் முக்கியமான வேலையில் ஈட்பட்டிருந்தான். அதுதான் அவனது மங்கியை சைட் அடிப்பதை. அவள் கிளம்பும் போதே அவனிடம் கேட்டிருந்தாள் பங்சனில் என்ன டிரஸ் போடுவது என்று.. ‘புடவை’ என்ற வார்த்தையில் அவன் முடித்துவிட, இவளுக்குத்தான் கண்ணுமுழி பிதுங்கியது...


‘புடவையா’ அதைக் கட்டிட்டு எப்படி ஓடுறது, ஆடுறது, அப்புறம் சாப்பிடுறது (இதுதான் முக்கியமான கவலையே, சாப்பிடும் போது எப்படி அட்ஜஸ்ட் செய்றது.) என்ற யோசனையில் இவள் ஆழ்ந்து விட, எதையோ எடுக்க மீண்டும் உள்ளே வந்த சிபியின் பார்வையில் இவளது தோற்றம் விழ, அதோடு அவளது எண்ணவோட்டமும் அவனுக்கு பிடிபட, வயிற்றைப்பிடித்துக் கொண்டு சிரிக்க ஆரம்பித்தான்.


அவனது சிரிப்பில் சுயத்திற்கு வந்தவள் கையில் கிடைத்த சென்ட்பாட்டிலைத் தூக்கிக்கொண்டு அவனைத் துரத்த ஆரம்பித்தாள். “டேய் என்னை வச்சு காமெடி பன்றியா... நான் சாரீ கட்ட மாட்டேன்னு தெரிஞ்சுதானே சொன்ன ... சொல்லுடா... நான் சாப்பிடுறதைப் பார்த்து கண்ணு வைக்காத என்று எத்தனை தடவை சொல்லிருக்கேன் எரும... எரும..” என்று அவனை வீடு முழுதும் துரத்தியவள், ஒரு கட்டத்தில் முடியாமல் ஹால் தரையிலேயே அமர்ந்து மேல்மூச்சு கீழ்மூச்சு வாங்கினாள்.


ப்ரிட்ஜில் இருந்த ஜூசை எடுத்து அவள் கையில் கொடுத்தவன், தானும் அவன் அருகில் அமர்ந்து “மங்கி உன்னைக் கிண்டல் பண்றதுக்காக சொல்லலடி... ஆகாஷ் மேரேஜ் அப்போ அங்க நடந்த பிரச்சினை எல்லாம் உனக்கு தெரியும் தான, இந்த ஒருவாரத்தில் அதெல்லாம் சரியா போயிருக்குமா என்று கேட்டால், நிச்சயம் சரியாயிருக்காது. அவனோட சிஸ்டர்ஸ் எப்போ சண்டை போடலாம்னு இருப்பாங்க.... அதுக்கு நாமளே ஒரு ரீசன் கிரியேட் பண்ணிக் கொடுத்துடக்கூடது, நம்மளோட பங்கு அங்க முக்கியமா இருக்கும்..”


“யாரும் மான்யாவை ஒரு குறை சொல்லிடக்கூடாது.. அது ஆகாஷ் மேல மான்யாவிற்கு தவறான அபிப்ராயத்தை உருவாக்கிரும். அதனால தான் சொன்னேன்... உன்னை கிண்டல் பண்ண சொல்லல” என்றான் நீண்ட விளக்காய்.


“ஹ்ம்ம் ஆமாம் நந்து நீ சொல்றதும் சரிதான், வித்தியும் வரலையாம்... காவேரிக்கா கிட்ட பேசிட்டு செலக்ட் பண்றேன்... அப்புறம் நீ சொன்னதை அவாய்ட் பண்ணாம பொறுமையா கேட்டதுக்கு, இன்னைக்கு எனக்கு பிரியாணி பார்சல் அதுவும் பெப்பர் சிக்கன் சேர்த்து..” என்றதும் தலையில் அடித்துக் கொண்டான் இதெல்லாம் திருந்தாது என்ற எரிச்சலில்.



“டேய்... டேய்” என்ற தீபக்கின் சத்தத்தில் திரும்பி அவனை என்னவென்று பார்க்க, அவனோ “என்ன பிரியாணி வாங்கி கொடுத்ததை நினைச்சுப் பார்க்குறியா.... இதுக்கெல்லாம் ஒரு கொசுவர்த்தி சுருள்... த்து...” என அவனை கடுப்படித்தவன், தொடர்ந்து “கடைசி வரைக்கும் நீ சோத்து பொட்டலத்தை தூக்கிக்கிட்டு அவ பின்னாடி தான் சுத்தப்போற, அதுல எந்த மாற்றமும் இல்ல.... இப்போ வா பங்க்சன் முடிஞ்சது... ஆகாஷ் உள்ள கூப்பிடுறான்...” என்று உள்ளே சென்றுவிட்டான்.


“ச்சே அவ்ளோ கேவலமாவா போயிடுச்சு நம்ம பிளாஷ்பேக்.... இப்படி புலம்பிட்டு போறான்... சரி விடுடா தம்பி எவ்வளவோ பார்த்துட்டோம் இதை பார்க்க மாட்டோமா....” என்று தனக்குத்தானே புலம்பியவனை மீண்டும் தீபக் வந்து இழுத்து சென்றான்.


மான்யாவின் சீமந்தம் சிறப்பாக நடந்தது... விழா முடிந்த கையேடு மான்யாவை அவள் பெற்றோர் அழைத்துச் செல்ல நேரம் பார்க்க, நான்கு மணிக்கு மேல்தான் நல்ல நேரம் என்று சொல்ல.. மான்யாவை ஓய்வெடுக்க அறைக்குள் அழைத்து சென்றனர். பின்னாடியே ஆகாஷும் நேகாவுடன் உள்ளே வந்தான்.


மகளைப் பார்த்ததும் கையை நீட்டி அருகே அழைத்தவள் நேகாவின் முகத்தை வருடியபடியே இருந்தவள் சற்று நேரத்தில் முகத்தை மூடிக்கொண்டு அழ ஆரம்பித்தாள்.


அறைக்குள் நுழைந்ததில் இருந்தே மனைவியின் முகத்தையே பார்த்தவனுக்கு அவளது உள்ளத்தில் இருக்கும் வலியும் வேதனையும் புரியாமல் இல்லை.. ஆனால் இதை செய்யாமல் இருக்க முடியாதே, திருமணம் தான் யாரையும் அழைக்காமல் அமைதியாக நடந்தது... ஆனால் சீமந்தத்தையும் அப்படி விட முடியாதே. அவளை ஆகஷின் மனைவியாக இந்த உலகம் ஏற்க வேண்டுமே... ஆகாஷின் மனைவியானவளை யாரும் ஒரு சொல் சொல்லி விட கூடாதே’ என்ற முடிவில் இருந்தவன், அவளுக்கு வலிக்கும் என்று தெரிந்தே இதற்கு ஏற்பாடு செய்தான்.


தாயின் அழுகையில் குழந்தை மிரள, மகளைத் தூக்கி தோளில் போட்டு சமாதானம் செய்தவாறே மனைவியிடம் வந்தவன், அவளது தலையை ஆதரவாக வருடினான். அந்த வருடல் அவளுக்கு சுஷாந்தையே ஞாபகப்படுத்த, யார் என்ன என்று கூட தெரியாமல் ஆகாஷின் இடுப்பைக் கட்டிக்கொண்டு மீண்டும் அழுதாள்.


“நான் தப்பு பண்ணிட்டேனா... என் சுஷாந்தை ஏமாத்திட்டேனா... நான் என் குழந்தையை தவிக்க விட்டுட்டேனா... அய்யோ முடியலையே.... என்னால எதையும் ஏத்துக்க முடியலையே.... நான் என்ன செய்ய... இப்போ உங்களை மேரேஜ் செஞ்சு உங்க வாழ்க்கையையும் கெடுத்துட்டேனே.... ஏன் எல்லாரும் என்னை கார்னர் பண்ணாங்க... நான் என்ன பண்ணேன்... புருஷன் இல்லாம இந்த உலகத்துல பொண்ணுங்க வாழவே இல்லையா... ஏன் இப்படி பண்ணாங்க...”


“நீங்க யாரு... என் வாழ்க்கையில நீங்க எப்படி வந்தீங்க... சொல்லுங்க எனக்கு பைத்தியமே பிடிச்சிடும் போல இருக்கு... கல்யாணம் ஆன இந்த எட்டு நாளா இந்த கேள்விகள் தான் என் மனடையைக் குடையுது.... சொல்லுங்க ப்ளீஸ்...” என்று தன் இடுப்பைக் கட்டிக்கொண்டு கதறியவளைப் பார்க்க பொறுக்கவில்லைஅவனுக்கு. அவனது கண்களும் கலங்கி இருந்தன....


“மானு” என்று அதட்டியவன்... “பர்ஸ்ட் அழறதை நிறுத்து, குட்டி பயந்துக்கரா பாரு...” என, அவனது அதட்டலில் சட்டென்று அதிர்ந்து நிமிர்ந்தவள், அவனையே மலங்க மலங்க விழிக்க, அவளது கண்களை அழுத்தி துடைத்தவன் “என்னைப்பத்தி தெரிஞ்சுக்க இன்னும் காலமிருக்கு... நம்ம லைப் முழுதும் நம்மளைப் பத்தி பேசி தெரிஞ்சுக்கலாம், குழந்தை பிறக்க வரை எதைப்பத்தியும் யோசிக்காத, மனசை ரிலாக்ஸ் பண்ணு.... அதுதான் உன் ஹெல்த்துக்கு நல்லது... இன்னும் டூ டேஸ்ல நான் கிளம்பிடுவேன். பாப்பா பிறக்கும்போது லீவ் வேணுமே அதுக்குத்தான். இப்போதைக்கு உன்னை எந்த வகையிலும் டிஸ்டர்ப் பண்ற ஐடியா எனக்கு இல்லை. .”


“இப்போ கொஞ்ச நேரம் அமைதியா தூங்கு... பேபி என்னோட இருக்கட்டும் நான் அத்தையை வர சொல்றேன்...” என்றவன் நேகாவோடு கிளம்ப, கதவு வரை வந்தவன் மீண்டும் அவளருகே வந்து “என்னடா இவன் இப்படி சொல்றானேனு நீ நினைக்க கூடாது.. சுஷாந்தை மறக்குறது உன்னால முடியாதுனு எனக்கு தெரியும்... ஆனா மறந்து தான் ஆகணும்... உன்னை சுத்தி நாங்க மூணு பேர் இருக்கோம்.. நீ ஹேப்பியா இருந்தாதான் நாங்களும் ஹேப்பியா இருப்போம்... உன்னைப் பார்த்து பரிதாபப்பட்டு, உன்னோட சூழ்நிலையை எனக்கு சாதகமாக்கிட்டு உன்னை மேரேஜ் பன்னல..”


“உன்னோட ஒவ்வொரு செயலையும், அசைவையும் அணுஅணுவா காதலிச்சேன். கல்யாணம் செஞ்சுக்கிட்டேன். பர்ஸ்ட் நாம ரெண்டு பேரும் ப்ரன்ட்ஸா இருப்போம், அப்புறம் லைப் பத்தி யோசிக்கலாம் அப்படின்ற எந்த தாட்டும் என்கிட்டே கிடையாது. நீ என்னோட வைப்... இவங்க என் குழந்தைங்க... நீங்கதான் என் குடும்பம், இப்படி தான் என் மனசுல நான் பிக்ஸ் பண்ணிருக்கேன்...”


“நீயும் இப்போ அப்படி இருக்கணும் சொல்ல வரல. பட் மாறிக்கோ... எனக்காகவும் நம்ம பேபிஸ்க்காகவும் மாறிக்கோ.. குட்டிப்பொண்ணு பிறக்க வரைக்கும் தான் உனக்கு டைம். இப்போ தூங்கு...” என்று அவள் அதிர்ந்து பார்ப்பதைக் கூட கவனிக்காமால் வெளியேறினான்.


மான்யாவிற்கு இப்போது என்ன செய்யவேண்டும் என்று கூட தோன்றவில்லை... தன் திருமணம் எப்படி நடந்தது என்று யோசித்துப் பார்த்தாள். கல்யாணமே வேண்டாம் என்றவளை யாராலும் சம்மதிக்க வைக்கவே முடியவில்லை. அவளது வீம்பும் பிடிவாதமும் பெற்றோரை சோர்வுற செய்ய, அந்த சோர்வே அவளது தந்தையை இதயநோயாளியாய் ஆக்கியது. பெண் ஒருபக்கம் இப்படி இருக்கிறாள் என்றால் கணவர் ஒருபக்கம் உடல்நிலையை கவனிக்க மறுக்கிறார் என்ற கவலையில் ஆழ்ந்திருந்தவரை காப்பாற்றியது போல் அமைந்தது ஆகாஷின் வரவு.


அதன் பிறகு அவர் எதையும் யோசிக்கவில்லை. ஆகாஷுடனான மான்யாவின் திருமணம் நடந்தே ஆகவேண்டும் என்பதில் உறுதியாய் இருந்தார். மகளிடம் கணவரின் உடல்நிலையைக் காட்டி.. கெஞ்சி மிஞ்சி, மிரட்டி என்று சம்மதமும் பெற்றார்.


மான்யாவும் முதலில் மறுத்தாலும், தந்தையின் உடல்நிலை தாயின் கவலை....
எல்லாம் சேர்ந்து அந்த முடிவை எடுக்க வைத்தது.. மாப்பிள்ளை யார்..? என்ன..? என்ற கேள்விகளும் கேட்காமல் ஒத்துக்கொண்டாள். அவளின் சம்மதம் கிடைத்த உடனே காவேரி தன் மகிழ்ச்சியை அவளை அனைத்து வெளியிட.... அவள் பெற்றோரோ கடவுளுக்கு நன்றி கூறியபடி பூஜையறையிலே கிடந்தனர்.


மான்யாவின் முடிவை நிமிடம் தாமதிக்காமல் ஆகாஷிற்கு, ஷானவி மூலம் காவேரி தெரியப்படுத்த, அடுத்த மூன்றாம் நாள் மிகவும் எளிமையாக அவ்வூர் கோவிலில் திருமணம் முடிந்திருந்தது. இதில் மான்யாவிற்கு தான் மிகுந்த மன உளைச்சல், இப்போது சரியென்றால் எப்படியும் மாப்பிள்ளை பார்க்க, அது இதென்று காலம் போய்விடும்...பிறகு ஏதேனும் காரணம் சொல்லி பெற்றோரை சமாதானப்படுத்தி விடலாம் என்ற அவளது ஆசையில் தண்ணீரை ஊற்றினான் ஆகாஷ்.


அவளை எந்த வகையிலும் யோசிக்க வைக்ககூடாது திருமணம் முடியும் வரை என்பதில் உறுதியாய் இருந்தவன், அவள் சரியென்றதும் நண்பர்களின் துணையோடு மூன்றே நாளில் திருமணத்தை நடத்தி முடித்தான். திருமணத்திற்கு முன் அவளிடம் பேசினால் தன் மனதையும் மாற்றி விடுவாளோ என்ற பயத்தில் அவளிடம் பேசுவதை தவிர்த்து வந்தவன், திருமணம் முடிந்தபிறகு அவளிடம் மட்டுமே பேசிக்கொண்டிருந்தான்.


அவளது இயல்பை மீட்க இன்னும் சிறிது காலம் போராட வேண்டியிருக்கும், அதற்கு இவளிடம் கண்டிப்பாக நடக்க வேண்டும் என்று முடிவெடுத்து தான் இன்று மனைவியிடம் பேசிவிட்டு அப்படி வந்தான்.




அவன் என்ன பேசி சென்றான் என்பதை புரிந்து கொள்ளவே அவளுக்கு சில நிமிடங்கள் ஆனது. அவன் பேசிவிட்டு போனது, ஒரு பக்கம் கோபத்தை கொடுத்தாலும், மறுபக்கம் குழப்பத்தையும் கொடுத்தது. சுஷாந்தை மறக்க சொல்ல இவன் யார்..? என்ற கோபம்...! “உன்னோட ஒவ்வொரு செயலையும், அசைவையும் அணுஅணுவா காதலிச்சேன். கல்யாணம் செஞ்சுக்கிட்டேன் என்ற ஆகாஷின் கூற்றின் குழப்பம் எல்லாம் சேர்ந்து அவளை சோர்வாக்க.... எதையும் யோசிக்க பயந்து கட்டிலில் சாய்ந்து கண்மூடிக் கொண்டாள்.


நண்பர்கள் இருவரையும் தேடி வெளியில் வந்தவன், சிபியும், தீபக்கும் யாரையோ தேடுவது தெரிந்து அவர்களிடம் சென்று விசாரிக்க, ஷானுவைக் காணோம் என்று நண்பர்கள் கூறிய பதிலில் திகைத்துத் தான் போனான் ஆகாஷ்.
 
  • Love
Reactions: Joss uby