• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

மௌனக் குரலோசை..1

Oct 31, 2021
323
15
63
29
Sri Lanka Jaffna
காலையில் உதித்த கதிரவன் மெல்ல மெல்ல நண்பகல் எனும் பொழுதைத் தோற்றுவித்திருக்க, காற்று மெல்ல சூடாக வீசிக் கொண்டிருந்தது.

சூட்டுக் காற்றில் ஆடி அசைந்து மெல்ல வாடிப் போயிருந்த தோட்டத்து மலர்களையே வெறித்துப் பார்த்துக் கொண்டு அந்த மாமரத்துக்கு கீழே அமர்ந்திருந்தாள் சித்திரகலா.

வாழ்வே சூன்யமாகிப் போனது போல ஒரு உணர்வு உள்ளுக்குள் பரவி வியாபித்துக் கொண்டிருப்பதை என்ன முயன்றும் அவளால் தடுக்கவே முடியவில்லை.

மாமரத்துக்கு கீழே சில நிமிடங்கள் ஓய்வாக இருந்து, அவளால் தன்னுள் பரவும் அந்த வெறுமையைக் கூட அனுபவிக்க முடியாமல், அதை இடையூறு செய்வது போல சமையலறையில் இருந்து தமக்கையின் குரல் ஓங்கி ஒலித்து காது வழி புகுந்து மனதை ஏதோ செய்தது.

ஆயாசமாக உணர்ந்த சித்திரா மெல்ல எழுந்து சமையலறை நோக்கி வேண்டாவெறுப்பாக நடக்கத் தொடங்கினாள்.

"என்ன சித்திரா அங்க இருந்து பராக்கு பாத்துக் கொண்டு இருக்கிறாய்.. இங்க பார் இந்த டிபன் பாக்ஸை ஒருக்கா கழுவி வை.. அவருக்கு சாப்பாடு கொண்டு போக வேணும்.."
என்று கொண்டே அவளைக் கடந்து போன தமக்கை சந்திரகலாவை பார்த்ததும்
"உன்ரை புருஷன் சாப்பிட்ட டிபன் பாக்ஸை கூட உன்னால கழுவ முடியாதாக்கா.."
என வாய் வரை வந்த வார்த்தைகளை வழமை போல அப்படியே விழுங்கினாள் சித்திரா.

"வேலையளைச் செய்யச் சொன்னால் நிண்டபடியே என்ன கனவு காணுறாய்.. கொஞ்சம் தள்ளி நிண்டு காணு.."
என்று கொண்டே அவளை இடிக்காத குறையாக தள்ளி விட்டுப் போன தாயின் செய்கையில் வழமை போல அவளது கண்கள் கலங்க, மெல்ல அதைத் துடைத்துக் கொண்டு தன் வேலையைப் பார்க்கப் போன சித்திராவை நோக்கி ஓடி வந்தாள் அவளது தங்கை வசந்தகலா.

"சின்னக்கா.. இந்தச் சட்டை சரியான பெரிசாக் கிடக்குது.. எனக்கு வேறை நேரம் போட்டுது.. ஒருக்கா டக்கெண்டு இதை உள்ளால அடிச்சு வை.. நல்ல நீற்றா அடிக்கோணும் என்ன.. இந்தா இந்தா பிடி.."
என்று கொண்டே அவளின் கையில் அந்த ஆடையைத் திணித்து விட்டு உள்ளே ஓடிப் போன தங்கையையே பார்த்துக் கொண்டு மீண்டும் அப்படியே நின்று விட்டாள் அவள்.

தனியே நின்றிருந்த தன் இரண்டாவது மகளிடம் வந்தார் கோபாலகிருஷ்ணன்.

"என்னம்மா யோசிச்சுக் கொண்டு நிக்கிறாய்.. போ நீ உந்த சட்டையைத் தை.. நான் டிபன் பாக்ஸை கழுவுறன்.."
என்று அவர் சொல்ல
"ஒரு டிபன் பாக்ஸை கழுவுறது அப்புடி களைச்சுப் போற வேலையோ.. ஏன் உங்களுக்கு வேறை வேலை இல்லையோ.. போங்கோ போய் வேறை வேலை இருந்தா பாருங்கோ.."
என்று கொண்டே வந்தார் அவரது தர்மபத்தினி நந்தகலா.

"அதைத் தான்டி நானும் கேக்கிறன்.. டிபன் பாக்ஸ் கழுவுறது அப்புடி பெரிய வேலையோ.. அதை ஏன் உன்ரை மருமகன் கழுவாமல் கொண்டு வந்து கவுத்து வைச்சிருக்கிறார்.. அப்புடியே அவர் கழுவாமல் பஞ்சிப்பட்டுக் கொண்டு வந்தாலும்.. அதை அவரிந்தை மனுஷி சந்திரா கழுவலாம் தானே.. அதை விட்டிட்டு அதென்ன சித்திராவைக் கழுவச் சொல்லுறது.."

"ஐயோ சத்தமாக் கதைக்காதேங்கோப்பா.. மருமகன்ரை காதில விழப் போகுது.."

"விழ வேணும் எண்டு தான்டி கதைக்கிறன்.. சாப்பிட்ட பெட்டியைக் கழுவக் கூட நேரமில்லாமல் அப்புடி என்ன வேலை அவரிந்தை ஆபீஸ்ல.."

"இப்ப உங்களுக்கு பெட்டி கழுவாதது பிரச்சினையோ இல்லாட்டிக்கு இவள் கழுவுறது பிரச்சினையோ.."

"எனக்கு ரெண்டுமே பிரச்சினை தான்டி.."
என கோபலகிருஷ்ணர் முடிக்கும் முதலே, வேகமாக வந்த சந்திரகலா டிபன் பாக்ஸை எடுத்துக் கொண்டு போய் சிங்கில் டொம்மென்று போட்டு விட்டு, சித்திராவை முறைக்க, ரெண்டாவது மகளை அழைத்துக் கொண்டு கோபாலகிருஷ்ணன் வெளியே வந்து விட்டார்.

"என்ன சித்திரா நீ.. கொஞ்சமாவது வாயைத் திறந்து கதைச்சுப் பழகன்.. இந்த வீட்டுல நீ என்ன சம்பளம் இல்லாத வேலைக்காரியோ எண்டு கேக்கிறன்.."

"தெரியலையேப்பா.. கதைச்சா மட்டும் என்னப்பா ஆகப் போகுது.."

"நீ கதைக்காமலே இருக்கிறதால என்ன ஆகுதோ.. அதை விட கேவலமா ஒண்டும் ஆகாது.."

"அப்பா.. மெல்லமாக் கதையுங்கோ.."

"ஐயோ கடவுளே.. நான் பெத்த மூண்டுல இவளை மட்டும் ஏன் இப்புடி வாய் இருந்தும் ஊமையாப் படைச்சிட்டாய்.."
என்று தலையில் அடித்துக் கொண்ட கோபலகிருஷ்ணன், வேகமாக தன்னறைக்குள் புகுந்து கொண்டு கதவைச் சாத்திக் கொண்டார்.

அவர் உள்ளே போன அடுத்த நிமிடமே, அவளுக்குப் பக்கத்தில் வந்து நின்று கொண்டாள் சந்திரகலா.

"ஒரு டிபன் பாக்ஸை கூட கழுவித் தராத நீயெல்லாம் எப்புடி நாளைக்கு என்ரை பிள்ளையை நல்லாப் பாப்பாய்.. இப்பவே போய் வேணீட்டை சொல்லோணும் உன்ரை சித்திக்கு உன்னில பாசமே இல்லை எண்டு சொல்லி.."

"அக்கா.. ஏனக்கா இப்புடி எல்லாம் கதைக்கிறாய்.."

"வேறை எப்புடிக் கதைக்க.. நான் வேலை ஒண்டும் இல்லாமல் இந்த வீட்டுல இருக்கிறன் எண்டுறதால தான உனக்கு என்னில இளக்காரம்.."

"அச்சோ அப்புடி எல்லாம் இல்லையக்கா.."

"அப்ப போய் சாப்பாட்டை போட்டு வை.. இல்லை வேண்டாம் வேண்டாம் பிறகு அப்பா வந்து நான் தான் உன்னட்டை ஏதவோ வேலை வாங்குறன் எண்டு நினைப்பார்.. எவ்வளவு கஷ்டம் எண்டாலும் என்ரை வேலையை நான் தானே இழுத்துப் போட்டுப் பாக்கோணும்.."

"அப்பா ஏதவோ வேறை டென்ஷனில இருக்கிறார் எண்டு நினைக்கிறன்.. நீ போக்கா நான் சாப்பாடு போட்டு வைக்கிறன்.."
என்று கொண்டே சமையலறையினுள் போகத் திரும்பிய சித்திராவைப் பிடித்து இழுத்தாள் தங்கை வசந்தகலா.

"உங்கடை கொல்லுப்பாட்டுக்கை என்ரை வேலையை மறந்திட்டியள் என்ன.. முதல்ல என்ரை சட்டையைத் தைச்சுக் குடுத்திட்டு எங்க எண்டாலும் போக்கா.."

"ஏன் வசந்தி நீயும் தானே தையல் படிச்சனீ.. நீ போய் உன்ரை சட்டையைத் தைக்க வேண்டியது தானே.."

"ஏன் அப்புடி.. அப்ப நீயும் போய் அந்தச் சாப்பாட்டைப் போடலாம் தானே பெரியக்கா.. சாப்பாடு போட ஒண்டும் படிக்கத் தேவையில்லை கை இருந்தாலே போதும்.."

"நான் தான் முதல் அவளை வேலை கேட்டனான் வசந்தி.. நீ வந்து இடையில புகுந்திட்டாய்.."

"பெரியக்கா.. எனக்கு நேரம் போட்டுது உன்னோட வியாக்கியானம் கதைச்சுக் கொண்டு இருக்க எனக்கு நேரம் இல்லை சொல்லீட்டன்.."

"எனக்கு மட்டும் உன்னோட கதையளந்து கொண்டு நிக்க நேரம் கிடக்குதாக்கும்.."
என சந்திரகலா சொல்லிக் கொண்டு இருக்கும் போதே
"மாமரத்துக்குக் கீழ இருந்து வாய்பாத்துக் கொண்டிருந்த நேரம் உந்த வேலையளைச் செய்து இருக்கலாம் தானே சித்திரா.. இப்ப பார் உன்னால அவளுகள் ரெண்டு பேருக்கும் நடுவுல கொல்லுப்பாடு.. வேகமாப் போய் சாப்பாட்டை போட்டு வைச்சிட்டு.. ஓடிப் போய்ச் சட்டையைத் தை போ.."
என்று இடையிட்டு கதைத்தார் சித்திராவின் அருமைத் தாயார் நந்தகலா.

எப்போதும் போல தாயை ஒரு இயலாத பார்வை பார்த்து விட்டு, தன் வேலைகளோடு பம்பரமாகச் சுழலத் தொடங்கினாள் சித்திரகலா.

கோபாலகிருஷ்ணன் மற்றும் நந்தகலாவுக்கு மூன்று புத்திரிகள். மூத்தவள் சந்திரகலா இளையவள் வசந்தகலா நடுப் பெண் சித்திரகலா.

சந்திரகலாவுக்கு தங்கள் சொந்தத்துக்குள்ளேயே வங்கி மேனேஜர் ஒருவரை திருமணம் முடித்து வைத்திருக்க, அவர்களுக்கு சந்திரவேணி எனும் மூன்று வயது நிரம்பிய மகள் ஒருத்தியும் இருக்கிறாள்.

இளையவள் வசந்தகலாவோ தன் தோழியின் அண்ணனை நேசித்ததால், இவளுக்கு இவன் தானென்று இரு குடும்பமும் இணைந்து சம்மந்தக் கலப்பு கூட செய்து விட்டார்கள்.

நடுப் பெண் சித்திரகலாவுக்கு தான் எந்த வரனும் சரியாகக் கை கூடி வரவில்லை, காரணமாக அவளுக்கு செவ்வாய் குற்றமாம் என்றார்கள்.

சித்திராவுக்கு திருமணம் தள்ளிப் போக போக, வசந்தகலாவின் திருமணமும் தள்ளிப் போய்க் கொண்டே இருந்தது, வசந்தகலாவுக்கு இருபத்தைந்து வயது சித்திரகலாவுக்கு முப்பது வயது.

ஏனோ தெரியவில்லை தாய் நந்தகலாவுக்கு மூத்த பெண்ணிலும் இளைய பெண்ணிலும் தான் வாரப்பாடு கூட, நடுப் பெண்ணை நடுரோட்டில் விட்டு விட்டார் அவர், மூத்த பெண்ணின் கணவன் வங்கி மேனேஜர், சின்னவளும் பிரைவேட் கம்பெனி ஒன்றில் வேலை செய்கிறாள் என்பதால் இருவர் மேலுமே நந்தகலாவுக்கு பெருமிதம்.

தனக்கு படிப்பு வரவில்லை என்பதால் சோர்ந்து போகாமல், தையலும் ஐசிங்கும் பழகி அதை வீட்டில் இருந்தே ஒரு வேலையாகச் செய்யும் சித்திரா மீது ஏனோ அந்தத் தாய்க்கு பெருமிதம் பெருமை எல்லாம் வரவே இல்லை என்பது தான் காலக் கொடுமை.

மூத்தவளையும் இளையவளையும் பொதுவாக ஊரில் இருப்பவர்களும் உறவுக்காரர்களும், இருவருமே தாயைப் போல சிவந்த அழகான தோற்றம் என்று சொல்லுவார்கள், அதே போல சித்திராவைப் பார்த்தாலே
"ஏன் நந்தா.. உவளை மட்டும் கொஞ்சம் கருக விட்டிட்டாய் போல.."
என்று சொல்லவும் அவர்கள் மறக்கவில்லை.

சித்திரகலா இயல்பிலேயே அமைதியான சுபாவம், அதிர்ந்து கூடப் பேச மாட்டாள், என்ன நடந்தாலும் தன்னுள்ளேயே வைத்து தனக்குள்ளேயே உழல்வாளே தவிர, மறந்தும் கூட அதை வெளியே வாய் விட்டுச் சொல்ல மாட்டாள், அதோடு அவளது நிறத்தை வைத்து மற்றவர்கள் மட்டம் தட்டும் போது, இயல்பிலேயே அமைதியான பெண் தன்னை இன்னும் சுருக்கிக் கொண்டு விட்டாள்.

அதன் வெளிப்பாடாக இப்போது முப்பது வயது நிரம்பிய சித்திரகலா ஒரு விதமான தாழ்வுமனப்பான்மையால் யாரோடும் பழகாமல் தன்னை ஒடுக்கிக் கொண்ட பெண்ணாக்கிக் கொண்டு விட்டாள்.

கோபாலகிருஷ்ணன் மட்டும் மூன்று பெண்களுக்கும் கொடுக்கும் பாசத்தில் பாராபட்சம் காட்டவேயில்லை, ஆனாலும் சமீப காலமாக நடுப் பெண்ணுக்கு நடக்கும் விஷயங்கள் அவரை அதிருப்தி அடையச் செய்து கொண்டிருந்தது.

தன் நடுப் பெண்ணின் மௌனத்திற்கு தானேனும் குரல் கொடுக்க வேண்டாமோ என்பது போல, அவர் அவளுக்காக பேச ஆரம்பிக்க அதுவே சித்திராவை அந்த வீட்டில் உள்ளவர்கள் வெறுக்க இன்னுமொரு காரணமாக அமைந்து போனது.

சித்திரா தான் அந்த வீட்டின் கடிகாரம், அது ஓய்வே இல்லாமல் ஓடிக் கொண்டே இருந்தால் தானே நேரம் சரியாக இருக்கும். அது போல் தான் அவளும், ஒரு ஊசி தேவை என்றால் கூட சித்திராவின் பெயர் தான் அந்த வீடு எங்கும் கேட்கும், ஊசியைக் கொண்டு வந்து அந்த ஊசியால் என்ன வேலை செய்ய வேண்டுமோ அந்த வேலையை சித்திரா முடித்துக் கொடுக்கும் வரை அவளது பெயர் எதிரொலித்துக் கொண்டே தான் இருக்கும்.

ஆரம்பத்தில் எல்லாவற்றையும் சளைக்காமல் செய்து கொடுத்த சித்திராவுக்கு, இப்போது கொஞ்ச நாட்களாகவே நான் இந்த வீட்டில் யார் என்கிற கேள்வி மட்டும் தான் அவளுக்குள் மௌனக் குரலாகக் கேட்டுக் கொண்டே இருக்கிறது.

அதற்கான பதிலும் கேள்வி முளைத்த அவளது மனதில் இருந்து தான் முளைக்க வேண்டும் இல்லையா? முளைக்கும் நாள் வெகு தூரத்தில் இல்லை என்பது தான் உண்மை.
 
  • Love
Reactions: Vathani