• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

பிரியபாரதீ

New member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Dec 28, 2022
Messages
23
"என்ன வன தேவதையே.... இன்னுமா தூக்கம்? எழும்பி ஜன்னல திறந்து பச்சக் காட்டுக்குள்ள கொஞ்சம் சூரியன வரவிடலாம்தானே? தாவரங்களுக்கு சூரிய ஒளி அவசியமில்லையாக்கும்? நீ தூங்குறன்றதுக்காக பாவம் அதுகளையும் அந்த ரூம்குள்ள வச்சி சாகடிக்கிறியே சிற்பியக்கா.... ???"


ம்ம்.... இவள் எப்படி அந்த படுக்கையை விட்டு எழும்புவாள். தூக்கம் நீங்கி ஒரு மணித்தியாலயத்திற்கும் மேல் ஆகினாலும் கட்டிலைவிட்டு எழும்பாது இழுத்து போர்த்திக்கொண்டு நித்திரையில் இருப்பது போல் நடித்துக்கொண்டிருக்கிறவளை ....
ச்சாருவால் மட்டும் எழுப்பிட முடியுமா என்ன?


ச்சாரு.... இவள் முழுப்பெயர் சாரூபினி. இந்தப் பெயரை சூட்டிய மகாராசன்தான் சிற்பிக்காவின் அப்பா. தாய்மாமனால் பெயர் சூட்டப்பட்ட இவள்தான், கூடப்பிறந்தவளோ சகதோழிகளோ இல்லாத சிற்பிகாவிற்கு அவ்வப்போது உரையாடக் கிடைத்த ஒரு தோழி.

ச்சாரு சிற்பிக்காவைப் போல தனிப்பெண் கிடையாது. சகோதரிகள் நால்வரோடு அவளது வீடு எப்போதும் போட்டி, சண்டை கூச்சல் என ஒரே அமர்க்களமாகத்தான் இருக்கும். சிற்பிகா தன் தாய் மாமா வீட்டிற்குப் போகும் போதெல்லாம் எப்போதும் ஆட்டமும் பாட்டமுமாக இருக்கும் அக்கா தங்கைகளைப் பார்த்துப் ஒருவித பொறாமையோடு உள்ளூர இரசிப்பாள்.

இன்று ச்சாரு சிற்பிக்காவின் வீட்டிற்கு ஓரிரு வாரங்கள் தங்கிச்செல்வதற்காக வந்திருக்கிறாள். பிரிந்திருந்த காதலர்கள் ஒவ்வொரு நாளையும் சேமித்து சந்திக்கும் நாளில் மொத்தமாய் கொட்டுவது போல கிட்டத்தட்ட இரண்டு வருட கதைகளையெல்லாம் கொட்டி பரிமாறிக்கொள்வர். அதற்கு சிற்பிக்கா நித்திரையிலிருந்து எழுந்திருக்கவேண்டுமே.


தனிமையிலேயே பல ஆண்டு காலங்களை கழித்த சிற்பிக்காவை தனக்கென எப்போதும் ஓருயிர் இருக்கிறது என்பதை உணரச்செய்வதே இந்தக் காலைப்பொழுதுதான்.


ஒரு வாழ்த்துச் சொல்லி, கொஞ்சம் செல்லம் கொஞ்சி, தன் அன்பை அந்த ஆங்கில மொழியில் அவள் உள்ளம் குளிரச் சொல்லி, அவளை எழுப்பிவிட வேண்டும் என்றே இன்னமும் நித்திரையை விடாது பிடித்துக்கொண்டு நடித்துக்கொண்டிருக்கிறாள் சிற்பிகா. வழமைக்கு மாறாக மகௌரனின் காலை அழைப்பு இன்று நேரத்தைக் கடந்து மதியத்தையும் அடையப் போகிறது.


பொறுமை நீங்கிய ச்சாரு ,

"நீ வேணும்னால் காஞ்சி போ. பாவம் இந்த செடி கொடிகள். கொலகாரி கொலகாரி.... இந்த செடிகொடிகள் சாபம் உன்ன சும்மா விடாது. உன்னோட சேர்த்து எனக்கும் பாவம் வந்து சேர போகுது..." என "தடபுட" என ஜன்னல்களை திறந்து பச்சை திரையை விளக்கிவிட்டாள்.

ஆதவன் கதிர்கள் கரங்களாக அந்த அறை முழுவதையும் அரவணைத்துக்கொண்டன.

உண்மையில் தூங்கிக்கொண்டிருந்த மரஞ்செடி கொடிகள் செழிப்புடன் எழ தொடங்கின. ஆனால் பொய் தூக்கத்தில் இருந்த சிற்பிக்கா மிக தீவிரமாக தூங்கிக்கொண்டேயிருந்தாள்.

அதிரடியாய் களத்தில் இறங்கிய ச்சாரு போர்வையை இழுத்தெடுத்தாள். அவள் கையோடு அணைந்திருந்த தலையணையை பிடுங்கி எடுத்து தலையணைச் சண்டைக்குத் தயாரானாள்.


"ஹேய்! பேசாமல் இரு. தேவையில்லாமல் பண்ணிகிட்டு. இந்த கூத்தெல்லாம் என்கிட்ட அதுவும் இந்த ரூம்ல வேணாம். " சத்தமின்றி கொஞ்சம் கடிந்தே அதட்டிவிட்டாள்.

ச்சாரு சிற்பிக்காவை விட ஒரு ஏழெட்டு வயது சிறியவள். மச்சாள் முறை என்பதால் வயது வித்தியாசம் இன்றியே இருவரும் பழகிக்கொள்வர். அந்த உரிமையில்தான் நெருங்கி வந்து வாலுத்தனம் செய்தாள் சிறியவள்.

ஆனால் நீண்ட கால இடைவெளியில் சிற்பிக்கா மரியாதை எதிர்பார்க்கும் பெரியவளாக மாறியிருப்பாள் என ச்சாரு எதிர்பார்த்திருக்கவில்லை.


சிறியவளின் முகம் சுருங்கியே போய்விட்டது. பாவம். ஒரு மாதிரி உதட்டைப் பிதுக்கிகொண்டு வெளியேறிவிட்டாள்.



சில நிமிடங்களில் இரண்டு கப் தேனீரோடு வந்து நின்ற சிற்பிகாவிற்கு முகம் கொடுக்க விரும்பாதவளாக திரும்பிக்கொண்ட ச்சாருவை சமாதானப்படுத்த அதிக முயற்சிகள் எடுக்கவேண்டிய தேவையிருக்கவில்லை.


"ஒருத்தவங்க..... கிரேட் செவன் படிக்கும் போது.... இந்த... சம்பவம் சம்பவம்னு சொல்லுவாங்களே....ஹா... அந்த சம்பவம் நடந்ததாம். அது என்ன சம்பவம் தெரியுமோ....?" நிறுத்தி நீட்டி இழுத்து சொன்ன விதம் ச்சாருவை கொஞ்சம் திக்குமுக்காட வைத்தது.

ஆனாலும் அவள் வீராப்பை விட்டுக்கொடுக்காமல் முகத்தை உர்ரென்றே வைத்துக்கொண்டிருந்தாள்.

மறுபடியும் தொடர்ந்தாள்.


"அந்த சம்பவம் என்னன்னா....ஒரு நாள்.... யாரோ ஒருத்தவங்க.... ஸ்கூல் போகும் போது......... ஸ்கூல் யூனிபம்லயே யூ....யூ..." அவள் பேச்சை இழுத்து இழுத்துக்கொண்டிருக்கையில்...,

சட்டென அவள் வாய்பொத்தி பேச்சை தடுத்தாள் சிறியவள். அதையும் மீறி சொல்லியே தீருவேன் என்பது போல பாசாங்கு செய்தவளை, மல்லுகட்டி கட்டியணைத்து கெஞ்சி கூத்தாடி பெரியவளை நெருங்கிவிட்டாள் சிறியவள்.

"ம்..... சரி சொல்ல இல்ல. அப்போ இந்த தேனீர பிடி" அவள் சட்டென பிடித்தாள்.

எல்லோரும் "டீ , பிளேன் டீ " எனச் சொல்லும் காலத்தில் சிற்பிக்காவிற்கு என்னவோ "தேனீர் "என சொல்வதுதான் பிடிக்கும். தமிழ் பற்று என்றெல்லாம் சொல்லிவிட முடியாது. "தேனீர்" என்ற அந்த சொலில் அவளுக்கு ஏதோ ஓர் ஈர்ப்பு.

"இன்னமும் "தேனீர் " னு தான் சொல்வியா சிற்பியக்கா...?" வெளிப்படையாய் கேட்க தயங்கியவள் மனதுக்குள் கேட்டுக்கொண்டு நின்றாள்.

"என்ன முழிச்சிட்டுருக்க? குடி... வச்சி அழகு பார்க்கவா கொடுத்தென்?"

மறுபடியும் மிரட்டுகிறாளே. முறைத்தப்படி அழ தயாரானாள்.

"அய்யய்யோ....அழுதுடாதடி.... என் ச்செல்லமே....அக்கா சும்மா விளையாடினன்டி... "

"மறுபடியும் மிரட்டமாட்ட இல்ல...?

"இல்ல..."

"ப்ரொமிஸ்....? "

"ஆமா.... சத்தியமா மிரட்ட இல்ல.... ஆனால்.... ஸ்கூல் யூனிபம்லயே ச்சுச்சா போன கதைய சொல்லலாம்ல? " ஹா...ஹா..... சின்னதாய் சிரித்துவிட்டு மேசை மீது வைத்த தேனீர்கோப்பையை எடுத்துகொண்டு மெதுவாய் நகர்ந்தாள் சிற்பிக்கா.

"ஹேய்...என்ன சிற்ப்பியக்கா நீ....? போ...போ...நா பேசமாட்டென்....உன்னோட போ"

குணட்டிக்கொண்டு அவளைக்கடந்துப் போய் முற்றத்தில் நின்ற மாமரத்தில் தரைக்குச் சமாந்தரமாக நீண்டு கிடந்த கிளையில் அமர்ந்து தேனீர் கோப்பையில் வாய் வைத்துச் சுவைத்துள்.

"சரி சரி..... நமக்கு மட்டும் தெரிஞ்ச இந்த இரகசியத்த வேற யாருக்கும் சொல்லிருக்கேன்னா? இல்லதானே...?

ச்சாருவின் முகத்தை உற்று நோக்கிவிட்டு எந்த மாற்றமும் தெரியாதிருக்க,

"என் ச்சாரு குட்டி இப்படி மூஞ்ச தூக்கிட்டுருந்தாலும் அழகுதான் "
என அவள் கன்னத்தை கிள்ளியெடுத்துவிட்டு அருகில் அமர்ந்தாள். இருவரையும் தாங்கி நிற்கும் மரக்கிளை உறுதியாகவே இருந்தது.


"இவ்ளோ பாசமா இருக்க நீ....ஏன் கட்டில்ல அப்படி திட்டிட்ட ? நா இங்க வந்துருக்கது உனக்கு பிடிக்கலயா? உண்மையச் சொல்லு அக்கா. என்னில ஏதும் கோவம்னால்... நா இப்பவே போய்ட்றன்."


"ஏன்டி இப்படிலாம் பேசுற? உன்மேலலாம் கோவம் இல்ல. அந்த கோவம் வேற...."

அந்த கோவத்தையெல்லாம் விசாரித்துவிடுவாளோ என்ற பயத்தில் முந்திக்கொண்டு கதையை திசை திருப்பினாள் சிற்பிக்கா.


"அப்புறம்... , என் அத்த மாமாலாம் எப்படி இருக்காங்க?" உரிமையாய் 'எனது ' என அழுத்தமாகவே கேட்டாள் பெரியவள்.

"ம்.... உன் அத்த மாமாக்கு என்னக்கா..., நல்லாவே இருக்காங்க. அவங்க ரெண்டு பேரும் இப்பவும் லவ்வர்ஸ் போலத்தான் . "
சின்னவளும் அதே தோரணையில் பதிலளித்தாள்.

அவர்கள் அப்படித்தான். இதுவரை காலங்களில் அவர்களுக்கிடையில் சண்டைச் சச்சரவு என்று வந்ததில்லை. என்றும் இளமை என்பதுபோல் அவர்கள் என்றும் காதலர்கள்.

ச்சாருவின் அம்மா அப்பாவை விசாரித்துக்கொண்டவள் பேச்சுக்காக தன் அம்மா அப்பா பற்றியும் கேட்டுப்பார்ப்பமே என நினைத்துவிட்டு,

"உன் அத்தையும் மாமாவும் எப்படி இருக்காங்க?" எனக் கேட்டாள்.

சிற்பிக்கா "என் அம்மா அப்பா" என்று சொந்தம் கொண்டாட விரும்பவில்லை என்பதை "உன் மாமா மாமி" என சொல்வதிலிருந்து புரிந்துக்கொண்டாள் ச்சாரு.


"அவங்க இன்னமும் அப்படியே தான் இருக்காங்க சிற்பியக்கா. "


"......." அமைதியாய் தேனீரைச் சுவைத்துக்கொண்டேயிருந்தாள்.



"போன கிழமையும் சண்டைதானாம் அக்கா. மாமா அத்தைய அடிச்சி நெருப்பு கட்டைய எடுத்துகிட்டு வீட்டச் சுத்தி விரட்டிருக்காரு. அத்தை கட சந்தி வரைக்கும் ஓடிருக்காங்க. மாமா அப்பவும் விட இல்லையாம். அந்த இடத்துலயும் கீழ போட்டு தலை முடிய இழுத்து 'வீட்டுக்கு போடி வீட்டுக்கு போடி....' னு அடிச்சி அடிச்சே வீட்டுக்கு கூட்டிட்டு போனாராம். சொல்லி வேல இல்ல. எப்பதான் திருந்த போறாங்களோ?"

அவர்கள் திருத்தவும் மாட்டார்கள். விலகியிருக்கவும் மாட்டார்கள். சண்டையோடே வாழப்பழகிவிட்டார்கள்.

திருந்தபோவதில்லை என்ற உண்மை தெளிவான பிறகுதானே சிற்பிக்கா வீட்டைவிட்டு இப்படி தனியே வந்து வாழ்கிறாள்.

சிற்பிக்காவின் அம்மா தலையிலிருந்து இரத்தம் வந்த அந்த நாள்..... சட்டென சிற்பிக்காவின் கண் முன் வந்து போனது.

அம்மாவை வைத்தியசாலைக்கு அழைத்துச் சென்று ஒரு நாள் தங்கியிருந்து கட்டு போட்டு வீட்டில் விட்டுவிட்டு அன்றோடு வந்தவள் தான், தொலைபேசியில் கூட தொடர்பிருக்கக் கூடாதென்று தான் வாழ்ந்துக்கொண்டிருக்கிறாள்.


" முந்தநாள் நைட் கூட விக்கி அண்ணாக்கும் மாமாக்கும் சண்டையாம். ரெண்டு பேரும் குடிச்சிட்டு ஒருத்துருக்கு ஒருத்தர் சரிசமமா மல்லுகட்டிகிட்டு.... பெரிய நாடகமா போச்சாம். ஊரே சண்டவிலக்க வந்துடாங்களாம். "

சிற்ப்பிக்கா நெஞ்சுக்குள் ஏதோ ஒரு சலனம்.

"அம்மா அப்பாதான் அப்படினால்....கூட பிறந்த அண்ணன்கூட இப்படி அப்பாவிற்க்கு தப்பாமல் பிறந்திருக்கானே. அப்பாவால் எவ்ளோ அவஸ்த்தைபட்டம்? அப்பாவை பார்த்து குடிய வெறுக்குற ஒரு பையனா வருவான்னு பார்த்தால்.... அப்பாவ விட இரண்டு மடங்கால்ல இருக்கான்.

அண்ணன் தங்கை என்றால் எவ்வளவு குதூகலமாக வாலுதனத்தோடு ஜோலியாக வாழலாம். ச்ச.... எனக்கு கிடைச்ச அப்பாவும் அப்படித்தான்... கூட பிறப்பும் அப்படித்தான்..." லேசாக கண் கலங்குவதை கண்ட ச்சாரு ,


"அதைவிடு அக்கா, அவங்க எப்பவுமே அப்படிதானே. நாம யோசிச்சி கண்ணீர் வடிச்சி மட்டும் என்ன நடக்கப்போகுது? நம்ம கண்ணீருக்காகலாம் அவங்க மாறபோறதில்ல. அத யோசிச்சி நம்ம சந்தோசத்த ஏன் கெடுத்துக்க? (F)பிரியா விடுக்கா...."

கண்ணீரை தடுத்துவிட்டு...,
" சரிடி பெரிய மனுஷி. " என்று சிரித்தவள், ச்சாருவை மேலிருந்து கீழாக ஒரு நோட்டம் விட்டாள்.

"மேடம் ரொம்ப மொடர்னாகிடிங்க போல. ம்....எத்தின பசங்கள உன் பின்னாடி அலையவிட்ற..ஹா?"


"அய்யோ அப்படிலாம் இல்ல " என வலிந்தபடி மறுக்க முற்பட்டவள்,

"ஏன்....? ஏன்..... ? நா அழகா இருக்க கூடாதா?" என சட்டென தைரியம் புகுந்திட நகைச்சுவையையும் கலந்த தோரணையில் கேட்டாள்.

"அழகா இருக்கலாம் தப்பில்ல.... ஆனா பசங்க பாவம். அத நினைச்சாதான் கவலயா இருக்கு. "

"ஆஹா... பசங்கள பாவம் பார்த்தெல்லாம் போதும். ஆமா.... இப்போ இந்த சிற்பத்தையே யாரோ செதுக்குறாங்க போலயே. "

"எந்த சிற்பத்த? என்ன செதுக்குறாங்க? சும்மா உலறாமல் பேசாமல் இரு"

"ஓ....புரியலயோ... ? சரி அப்போ அந்த வேற கோவம் என்னன்னு சொல்லுறிங்களா? "

அடி ஆத்தி.... மறந்துட்டாள்னு நினைச்சா. நியாபகமா கேட்குறாளே.

"என்ன கேட்குற நீ?"

"நீ சமாளிச்சி என்னைய திசை திரும்பினாலும் நா கேட்பேனே. இப்போ நீ சொல்ல போறியா இல்லையா?"

"நேரம் வரும்போது சொல்லுறனே. கண்டிப்பா சொல்லுவன். முதல் முதல் உன்கிட்ட தான் சொல்லுவேன் சிரியா"

விடுவாளா சிறியவள்?


"நேரம்லாம் வந்தாச்சி. இது தான் அந்த நேரம். சும்மா சொல்லு சிற்பியக்கா. "

சொல்லவில்லையென்றால் விடமாட்டாள் போலவே. எதையாவது சொல்லி சமாளிப்போம் என்று எதையோச் சொல்ல வாய் திறந்தவள்...,

"யாரந்த மகௌரன்....யாரந்த மகௌரன்.....". சினிமா படால் இசையில் பாட்டாகப் பாடினவளை ஆச்சரியத்தோடு பார்த்துவிட்டு சொல்ல வந்த பொய்க்கதையை நிறுத்திவிட்டு திக்குமுக்காடி நின்றாள்.


"எப்படி உனக்கு....? "

"என்ன இந்த பெயர் எனக்கு எப்படி தெரியும்னு பாக்கிறியா? "

"ம்... ஆமாம்" என்பது போல இமை அசைத்தாள்.

என்னதான் வீட்டை விட்டு தனியே வந்து குடும்பம் வேறு அவள் வேறு என வாழ்ந்தாலும் இந்த காதல் கத்தரிக்காய் என்றால் அவள் அண்ணன் விக்கி கொந்தளித்துவிடுவானே. உடனே சிற்பிக்காவை வீட்டிற்கே கூட்டிக்கொண்டு போய்விடுவான். அந்த நரகத்தில் மறுபடியும் விரும்பியோ விரும்பாமலோ வாழ வேண்டிய நிலை வரும். ச்சாரு வீட்டாருக்கு ஏதும் சொல்லிருப்பாளோ?

"ச்சாருவின் அம்மாவிற்கு தெரிந்தாலே அப்படி அப்படியே எங்க வீட்டுக்கும் தகவல் போய்விடுமே. "

இந்த அதிர்ச்சியை சற்றும் எதிர்பார்க்காதவாய் விழித்துக்கொண்டிருந்தாள் சிற்பிக்கா.

யாழ் இசை தொடரும்......
 
Top