சாருமதி
பார்வதி சந்தானத்தின் ஒரே புதல்வியான சாருமதி ஆசிரியர் பயிற்சித் தேர்வை முடித்து விட்டு நிம்மதியாக வீட்டில் அமர்ந்த சமயம் அது.. அடுத்து டெட் எழுதிக் கொள்ளலாம் என்று பயிற்சி வகுப்புக்கு விண்ணப்பித்து விட்டு வீட்டில் ஓய்வெடுத்தாள் சாரு..
மிகவும் மென்மையானவள், அதிர்ந்து கூடப் பேசத் தெரியாது.. ஒரே செல்லப் பொண்ணு அப்பாவுக்கு
சாருமதி தன்னுடைய புடவைகளை எல்லாம் அயர்ன் பண்ணிக் கொண்டு இருக்க.. அவளுடைய அம்மா பார்வதி ஆர்வமாய் அவளிடம் வந்தார்..
"சாரும்மா உனக்கு ஒன்னு தெரியுமா?".. என்று ஆர்வமாய்க் கேட்க..
"மா டீச்சர் ஆகிட்டு ஒன்னு கூடத் தெரியலைன்னா எப்படி?".. சாருமதி சிரிக்காது அம்மாவிடம் கேட்க..
"வாலு.. நான் என்ன சொல்ல வந்திருக்கேன்?.. அதைக் கேட்காம நீ கேலி பேசிக்கிட்டு இருக்கியா?.. ஒழுங்கா அம்மா சொல்ல வர்றதை நின்னு கேளுடி".. என்று அயர்ன் பாக்ஸ் சுவிட்ச் ஆப் பண்ணியவர், அவளைத் தன்னோடு இழுத்துக் கொண்டு
வந்து சோபாவில் அமர வைத்தார்..
"அப்படி என்ன சொல்லப் போறம்மா நீ".. என்றவாறே அம்மாவின் மடியில் படுத்துக் கொண்டவள் அம்மாவைப் பார்க்க
"இதோ பாருடி ஒரு நல்ல இடத்தில் இருந்து வரன் வந்திருக்கு உனக்கு.. பத்து பொருத்தமும் பொருந்தி வந்திருக்கு உனக்கும் மாப்பிள்ளை பையனுக்கும்.. பெயர் ராஜா, நாளைக்கு பொண்ணு பார்க்க வரேன்னு சொல்லி இருக்காங்க அவங்க வீட்டில்".. என்று பார்வதி கூறவும்..
திகைத்துப் போய் அம்மாவைப் பார்த்தவள், "நாளைக்கேவா அம்மா?".. என்று வெட்கத்துடனும் பயத்துடனும் கேட்க
"ஆமாம் சாரும்மா, அதனால அம்மா என்ன சொல்ல வரேன்னா ஒழுங்கா நல்ல பிள்ளையா நடந்துக்கோ இனிமேல், முதல் மாதிரி ஆடக்கூடாது, மெதுவா நடந்து பழகு".. என்று வாய்க்கு வந்தபடி அறிவுரை மழையைக் கொட்ட..
"தங்கள் சித்தம் என் பாக்கியம்.. முடியலை மம்மி விட்டுடுங்க என்னை".. என்றவள் எழுந்து ஓடியே விட.. தன் மகளை கனிவுடன் பார்த்த பார்வதிக்கு இனி தன் மகள் தனக்கு சொந்தம் கிடையாதா?.. என்ற ஏக்கத்தில் கண்ணீர் வழிந்தது கண்களில்..
எல்லாமே நல்லபடியாக முடிய, இன்னும் ஒரு வாரத்தில் திருமணம் என்ற நிலையில் பத்திரிக்கை அனுப்பும் பணிகளை நல்லபடியாக முடித்த பார்வதி சந்தானம் தம்பதியர்கள்.. திருமண அலைச்சல் எல்லாம் முடிந்தது என்ற நிம்மதி பெருமூச்சுடன் அமர்ந்தார்கள்..
சந்தானம் விவசாயத்தை பூர்வீகமாய்க் கொண்டவர், மிகவும் வசதியானவர்.. மாப்பிளை வசதி இல்லை என்று தெரிந்தாலும், அவருக்கு மாப்பிள்ளையை மிகவும் பிடித்துப் போன ஒரே காரணத்தால், தன்னுடைய மருமகனாய் ஏற்றுக் கொண்டார் சந்தானம்..
அதுதான் தன்னுடைய சொத்துக்கள் ஏராளமாய் இருக்கிறதே என்று நினைத்து திருப்தி ஆனவராய், அவரை தன்னுடைய மகனாக ஏற்றுக் கொண்டார் மனதளவில்
தன் மகளிடம் மனம் விட்டுப் பேச பெற்றவர்களுக்கு இப்பொழுதுதான் நேரம் கிடைத்தது எனலாம்..
"அம்மாடி சாரு, இங்கே விளையாட்டுப் பிள்ளையா எங்க செல்ல மகளா இருந்திட்டே.. ஆனால் இனிமேல் உனக்கு கல்யாணம் ஆனா தானா பொறுப்பு வந்து சேர்ந்திடும் அதனால கவலைப்படாதே.. மாமனார், மாமியார், நங்கையா என்று எல்லோரும் அங்கே இருக்காங்க.. அவங்க மனம் வருந்தாம பேசிப் பழகனும், எதாவது உனக்குப் பிடிக்காம நடந்ததுன்னா அவங்ககிட்டே எதிர்த்துக் கேட்டு சண்டை போட வேண்டாம், உடனே மாப்பிள்ளைக்கிட்டே தனியாச் சொல்லிடு.. மாப்பிள்ளை பார்த்துப்பார் எல்லாவற்றையும்.. நல்ல பொண்ணுன்னு பேர் எடுக்கணும் நீ, எங்களை பாராட்டனும் எல்லோரும்.. என்ன பொண்ணு வளர்த்தேன்னு யாரும் கேட்கக் கூடாது".. என்று அதுவரை செல்லமாக வளர்ந்த தன் மகள் புகுந்த வீட்டில் நல்லபடியாக வாழனுமே என்ற தவிப்பில் அந்தப் பெற்றோர்கள் புத்திமதிகளைக் கூற..
சாருமதியும் அனைத்தையும் தலையாட்டியவாறு கேட்டுக் கொண்டாள்..
திருமண நாளும் வர நல்ல தெளிவான, நல்ல எண்ணங்கள் மட்டுமே நிறைந்து, எதிர்காலம் பற்றிய கனவுகளோடு திருமண வாழ்க்கையில் அடியெடுத்து வைக்கத் தயாரானாள் சாருமதி..
திருமணத்திற்கு முதல் நாளில் திருமண மண்டபத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டாள் சாருமதி..
மணப்பெண்ணுக்கான அறையில் அவளுக்கு அலங்காரம் செய்து கொண்டு இருந்தார்கள்.. அங்கே அவளை பார்க்க வருவதும் போவதுமாய் இருந்தார்கள் மாப்பிள்ளை வீட்டார்கள், இடையில் மாப்பிள்ளையின் போன் அழைப்பு வேறு அவளை பிஸியாக்கிவிட...
அவளைப் பார்க்க வேண்டும் என்று ஒரு பெண்மணி உள்ளே வர மாப்பிள்ளையின் அத்தையாம் அவர், அவரை அவளுக்கு அறிமுகம் செய்து வைக்கப்பட அவருக்கு வணக்கம் தெரிவித்தவள் அவரது கேள்விகளுக்கு பதில் சொல்லி விட்டு, தன்னுடைய உறவினர்களுடன் பேச ஆரம்பிக்க.. அவர் அங்கேயே ஒரு இருக்கையில் அமர்ந்து கொண்டார்..
பின் அலங்காரம் முடிந்து ரிசப்ஷனுக்கு அழைத்துச் செல்லும் பொழுது சாருமதியின் அருகே வந்தவர் "அங்கே ஸ்டேஜ்லயும் இப்படி சிரிச்சுக்கிட்டு இருக்காதே, எல்லோரும் வருவாங்க போவாங்க, ஏதாவது சொல்வாங்க புரியுதா?".. என்று விட்டு அவர் சென்று விட..
சாருமதிக்கு அவர் சொன்னதைக் கவனிக்க நேரமில்லை... ரிசப்ஷன் முடிந்து மறுநாள் திருமணமும் முடிய... கனவனது வீட்டுக்கு அழைத்துச் செல்லப்பட்டாள் சாருமதி...
சாருவின் புகுந்த வீட்டில் அவ்வளவு வசதி எல்லாம் இல்லை வாடகை வீடுதான்.. மாப்பிள்ளை கவர்ன்மெண்ட் உத்தியோகம், மாமனார் ரிட்டயர்டு வெட்னரி டாக்டர், மாமியார்
ஹவுஸ்வொய்ப், கொழுந்தனார் tnpc தேர்வுகள் எழுதிட்டு இருக்கார்..
கூடவே மும்பையில் கணவர் வேலையில் இருப்பதால், இங்கே கவர்ன்மெண்ட் ஜாபில் இருக்கும் நாத்தனார் அவருடைய 2 குழந்தைகள் என்று பெரிய குடும்பம் அவளுடைய புகுந்த வீடு..
ஒரே ஒரு ஹால், ஒரு கிச்சன், 2 பாத்ரூம்.. ஒரு பெட் ரூம் மட்டுமே அடங்கிய வீடு அது..
அப்பா அம்மா நல்ல புத்திமதிகள் கூறி இருக்க நல்லபடியாகவே வாழ்க்கையை ஆரம்பித்தாள்..
அவளை முதலிரவு அறைக்குள் அனுப்பி விட்டுவிட்டு, அவளைத் தேடி வந்த மாமியார் "இதோ பாரு நான் சொல்றதை நல்லா கேட்டுக்கோ, என் மகன் வந்தான்னா அவன்கிட்ட ஒரு சத்தியம் வாங்கிக்கோ, உன்னை தவிர வேற பொண்ணுங்களை நினைக்கக் கூடாதுன்னு".. என்றவர்..
"நீ சத்தியம் வாங்கிப்பேன்னு என்கிட்டே சத்தியம் செய்".. என்று அவர் கூற
"இல்லை அத்தை, அம்மா யாருக்கும் சத்தியம் பண்ணக் கூடாதுன்னு சொல்லி இருக்காங்க".. என்று தயங்கியவாறே சாருமதி கூற..
"சரி நான் சொன்னதையாவது செய் என்று விட்டு அவர் போய் விட".. ராஜா உள்ளே வந்து கதவை தாழிட்டு விட்டு அவள் அருகே அமர்ந்து கொள்ள...
அவனைக் கண்டு புன்னகை செய்தவள் அவன் அம்மா சொன்னதை ஒரு வார்த்தை விடாது சொல்லி முடிக்க.. "அம்மா அப்படித்தான், நீ எதுவா இருந்தாலும் என்கிட்டே சொல்லு".. என்றவன் அவளை அணைக்க.. அவர்களுடைய வாழ்க்கை இனிதே ஆரம்பமானது..
ஒரு வாரம் போக மறுவீடு செல்ல புது மணமக்கள் ஆயத்தம் ஆக மகனுக்கு தெரியாது அவளிடம் வந்த மாமியார் "இதோ பாரும்மா, என்னால உங்களைப் பிரிஞ்சு இருக்க முடியாது அதனால் போயிட்டு இன்னைக்கே வந்திடுங்க".. என்று அவளது கையைப் பிடித்துக் கொண்டு கண்ணீருடன் கூற.. அவளுக்கும் அவரைப் பார்த்து மனம் இளகிப் போகவே.. அவர் சொன்னதைச் செய்ய ஒத்துக் கொண்டாள்..
இருவரும் சாருவின் அம்மா வீட்டுக்கு கிளம்ப அங்கே அவர்கள் இருவருக்கும் விருந்து தடபுடலாக இருந்தது..
பார்வதி மறுவீடு வந்தால் எண்ணெய் தேய்ச்சு குளிச்சு கறிவிருந்து சாப்பிட்டுவிட்டுத்தான் போகணும் என்று உறுதியாய்ச் சொல்லி விட..
சாருவும் இயல்பாகவே கணவனிடம் மாமியார் சொன்னதைக் கூற.. "அம்மாவை நான் பார்த்துக்கிறேன் விடு".. என்று விட சாருவுக்கும் சந்தோசமாகவே போனது..
மகளை தனிமையில் சந்தித்த பார்வதி புகுந்த வீட்டில் அவளை சந்தோசமாக இருக்கியா என்று கேட்க.. சற்றே தயங்கிய சாருமதி மாமியார் செய்தது பேசியது எல்லாம் கூறவே...
"சரி நீ எதுவும் பேசாதே, எதுவானாலும் உங்க வீட்டுக்காரர்கிட்டே சொல்லிடு, மறைக்காதே எதையும்".. என்று கூறி விட்டார்..
மறுவிருந்து முடிந்து கணவர் வீட்டுக்குச் சென்றவளை மாமனாரும் கொழுந்தனாரும் வரவேற்க.. அவளுக்கு டீ எடுத்து வந்து கொடுத்தார் மாமனார்..
ஆனால் மாமியாரோ எதுவும் பேசாது கட்டிலில் படுத்துக் கொண்டு தூங்குவது போல படுத்திருக்க.. சாருவும் தன்னிடம் பேசாது இருப்பவரிடம் என்ன பேசுவது என்று புரியாது அறைக்குள் சென்று விட்டாள்..
இரவாகிவிட்டதால் சாருமதி நைட்டியை அணிந்து கொண்டு சமையல் அறைக்குச் சென்று பாலைக் கலக்க
"அண்ணி எனக்கும் அப்பாவுக்கும் சேர்த்து கலந்திடுங்க, அம்மா கேட்டா அப்புறமாய் நான் கலந்துக்கிறேன்".. என்று கொழுந்தனார் கூறி விட..
சாருவும் புன்னகையுடன் தங்கள் வீட்டில் பாலில் தண்ணீர் கலக்க மாட்டார்கள் என்பதால் திக்காகவே கலந்து மாமனாருக்கு கொழுந்தனாருக்கும் கொடுத்தவள் கணவனுக்கும் கொடுத்துவிட்டு தானும் குடித்து விட்டு டம்ளரை கழுவி வைக்க கிச்சன் வந்தாள்
பாலைக் குடித்தவன் "வாவ் அண்ணி பால் சூப்பரா இருக்கு, நிஜமா பால் இந்த டேஸ்ட்ல இருக்கும்னு இப்போதான் தெரியும் எனக்கு".. என்று அவன் கூற
அதுவரை படுக்கையில் படுத்து இருந்தவர் எழுந்து அமர்ந்து போய் பால் இருந்த பாத்திரத்தைப் பார்க்க, அதில் ஒரு டம்ளர் அளவு மட்டுமே பால் இருக்க, கோபத்தில் கத்த ஆரம்பித்தார்..
"எல்லா பாலுமே காலி, நான் எப்படி தயிர் போடுவேன்?".. என்றவர் மேலும் அழுது கொண்டே கத்த..
அதுவரை மற்றவர்களின் அழுகையை கோபத்தை கண்டிராத மென்மையான பெண்ணான சாருவோ பயத்தில் அறைக்குள் வந்து கணவனிடம் சொன்னாள்..
பெருமூச்சு விட்டவாறே எழுந்து வந்த ராஜா "இப்போ என்ன அம்மா பால்தானே வேணும் உனக்கு?.. டேய் சரவணா போய் பால் வாங்கிட்டு வந்திடு பண்ணையில்".. என்று அனுப்பியவன்.. அப்பாவைப் பார்த்து
"நாளையில் இருந்து அரை லிட்டர் பால் தனியா வாங்குங்க அப்பா.. எல்லோரும் இரவு குடிக்கறதுக்கு வச்சுக்கோங்க அதை, இப்படி கத்திக்கிட்டு இருக்க வேணாம் புரியுதா?"..
என்றவன் அறைக்குள் சென்று விட..
ராஜாவுக்கு சிகரெட் குடிக்கும் பழக்கம் உண்டு எனவே வீட்டுக்கு வெளியே சென்று குடித்து விட்டு உள்ளே வந்தவனை "நில்லுப்பா ராஜா, உன் பொண்டாட்டி என்ன நைட்டியை போட்டுக்கிட்டு அலையுறா?.. உங்க அக்காவைப் பார்த்தியா சுடிதார்தானே போட்டுக்கிறா?".. என்று மேலும் ஏதேதோ சொல்லி வைக்க..
நேராக அறைக்குள் வந்த ராஜா உறங்கிக் கொண்டு இருந்த மனைவியை எழுப்பி "இனிமேல் நைட்டி போடாதே எனக்குப் பிடிக்கலை" என்று கூறவும்,
என்னதான் மென்மையான பெண்ணாக இருந்தாலும், தன்னுடைய உடை விஷயத்தில் யாராவது ஏதாவது சொன்னால் அவளுக்குப் பிடிக்காது..
அதனால் "இதோ பாருங்க இதுவரை இல்லாதது இப்போ என்ன?.. நான் படுக்கும்பொழுது தானே நைட்டி போட்டேன்?".. என்று கூற..
"அதெல்லாம் எனக்குத் தெரியாது எங்க அக்கா மாதிரி நீயும் சுடிதார் போட்டுக்கோ".. என்று சொல்லவும்..
சாருமதிக்கும் கோபம் வரவே
"இதோ பாருங்க என்மேல ஏதாவது தப்புன்னா என்கிட்டே சொல்லுங்க திருத்திக்கறேன், அதை விட்டுட்டு உங்க அக்கா கூட என்னை கம்பேர் பண்னாதீங்க".. என்று கூற..
இருவருக்கும் பேச்சுவார்த்தை முற்ற.. பேச முடியாது அழுகை வரவும் படுக்கையில் படுத்தவள் அழ ஆரம்பித்தாள்.. அதுவரை கோபத்தில் பேசிக் கொண்டு இருந்தவனுக்கு மனைவி அழவும் பதறிப் போனது..
அவள் அருகில் அமர்ந்தவன் அவளது தோளைத் தொட.. அதைத் தட்டி விட்டவள் "இதோ பாருங்க உங்க தேவை முடிஞ்சு இப்போதான் தூங்க விட்டீங்க, இப்போ அடுத்து சண்டை, நானும் மனுசிதானே?".. என்று மேலும் அழ.. அமைதியாய் அருகில் படுத்துக் கொண்டான் ராஜா..
அடுத்த நாள் எழுந்தவள் வழக்கம் போல தன்னுடைய வேலைகளை பார்க்க ஆரம்பிக்க, அவளை அழைத்த மாமியார் நாத்தனாரின் குழந்தைகளை கவனிக்கச் சொல்ல, அவளும் மறுபேச்சு இன்றிச் செய்தாள்..
அன்று மாலை கணவனும் மனைவியும் சமாதானம் ஆகி விட சந்தோசமாய் சினிமாவுக்குச் சென்றனர்.. வாசலில் நின்ற மாமியாரிடம் சொல்லிவிட்டு அவர்கள் செல்ல...
மாலை சினிமா முடிந்து வீட்டுக்கு
வந்தவர்கள் களைப்பாக இருக்கின்றது என்று அறைக்குள் சென்று விட... சிறிது நேரத்தில் அறைக் கதவைத் தட்டிய மாமியார் சாருவை வந்து எல்லோருக்கும் தோசை சுடச் சொல்ல.. அவள் நைட்டியோடவே வந்து தோசை வார்த்தாள் அனைவருக்கும்.. சாருவை பொறுத்த வரை கண்ணியமான உடைகள் அணிவது என்றுமே தப்பு இல்லை என்பதாகும்..
8 பேருக்கும் தோசை சுட்டு சுட்டு சாருவுக்கும் இடுப்பு வலி எடுத்துவிட, அறைக்குள் சென்று படுக்கலாம் என்று போக..
"இதெல்லாம் எடுத்து கழுவி வைச்சுட்டு போ சாரு"..என்று நாத்தனார் கீதா கூறவும்
"நீங்க போய் படுங்க அண்ணி நான் எடுத்து வைச்சுக்கிறேன், நாளைக்கு எல்லாத்தையும் கழுவிக்கலாம்".. என்று கொழுந்தனார் சரவணன் கூறவே அவனை பார்த்து நன்றி சொன்னவள் அறைக்குள் சென்று விட்டாள்
அன்றும் அதே கதைதான் ராஜா சிகரெட் குடிக்கப்போக அவனை நிறுத்திய மாமியார் அவனை அடுப்பு மேடைக்கு அழைத்துச் சென்று அடுப்பை சுட்டிக்காட்டிச் சொன்னார்.. "பாருடா ராஜா எவ்வளவு எண்ணெய் சிந்தி இருக்குதுன்னு, எண்ணெய் விக்கிற விலைக்கு இதெல்லாம் தேவையா?".. என்று கேட்க.. அந்த எண்ணெய் சொட்டுகளை எண்ணிய ராஜா
"13 சொட்டு சிந்தி இருக்காம்மா, இரு இப்போவே போய் அவளை கன்னத்தில் நாலு அப்பு விட்டு திருத்துறேன்".. என்று வெளியே சென்றவன் புகைத்தவாறே யோசித்தான் மனைவியைப் பற்றி...
எது நடந்தாலும் தன்னிடம் குழந்தையாய் சொல்பவள், நேற்று அழவும் அவனுக்குக் கஷ்டமாகிப் போனது.. தன்னை நம்பி வந்தவளை அழவிடுவது அவனுக்கு கொஞ்சமும் பிடிக்கவில்லை.. அதனால் இனிமேல் பொறுமையாக இருக்க வேண்டும் என்று முடிவு எடுத்தவன் அறைக்குள் சென்று விட்டான்..
பின் மனைவியை அனுகியவன் நடந்ததைக் கூறி "நாளைக்கு நீ அப்பாகிட்ட போய், அத்தை இப்படி சொன்னாங்க அவர்கிட்ட, அதனால அவர் என்னை அடிச்சு திட்டினார்ன்னு சொல்லிடு, என்ன நான் சொல்றது புரியுதா?".. என்று ராஜா ஐடியா கொடுக்க..
அவளும் அடுத்த நாளே அதை செயல்படுத்தி விட..
ஒரு நாள் மருமகளை அருகில் இருந்த ஒரு பெண்ணின் வீட்டுக்கு அழைத்துச் சென்றவர் அவரிடம் தனிமையில் பேசவும், அவர் சாருவிடம் வந்து அவளது கையில் ஏதோ கட்டிவிட வரவும் "என்ன இதெல்லாம்?.. இதெல்லாம் கட்டிக்க எனக்குப் பிடிக்காது கொஞ்சமும்".. என்று கேட்க..
அந்தப்பெண் ஏதோ கூறவும் சாருவுக்கும் அவளுக்கும் வாக்குவாதம் வரப்போக.. "இப்போ எதுக்கு கொஞ்சம் கூட அடக்கம் இல்லாம பேசிக்கிட்டு இருக்கே நீ?.. இப்படி சொல் பேச்சு கேக்க மாட்டேங்குறேன்னுதான் உனக்கு மந்திருச்சு கயிறு கட்டிவிட சொல்லி இருக்கேன்".. மாமியார் எரிச்சலோடு கூறவும்..
அங்கே இருந்து வெளியேறி வேகமாய் வீட்டுக்கு வந்தவள் தன்னுடைய மாமனாரும் கணவரும் அமர்ந்து பேசிக்கொண்டு இருக்கவும்.. அவர்களிடம் நடந்ததைக் கூறியவள்..
"எனக்கு இதெல்லாம் பிடிக்காது மாமா, அதுவும் இல்லாமல் அந்தபொம்பளை என்னைப்பத்தி தப்பா பேசுது, உங்க மருமகளை மத்தவங்க பேசட்டும்னு விடுறீங்களே, உங்களுக்கே நியாயமா இருக்கா?".. என்று சாரு கேட்கவும்..
அப்பொழுது வீட்டுக்குள் வந்த அம்மாவிடம் "என்னம்மா இதெல்லாம்?".. ராஜா சலிப்பாய் அம்மாவைப் பார்த்துக் கேட்கவும்..
"நான் எதார்த்தமாய்த்தான் பண்ணினேன்டா, அதை உன்பொண்டாட்டி தப்பாய்ப் புரிஞ்சுக்கிறா, இனிமேல் நான் எதுவும் சொல்லலை, அவளுக்கு இங்கே ஒண்ணா இருக்க பிடிக்கலை போல இருக்கு".. என்று வேண்டும் என்றே கத்தி பெரிது பண்ணி விட..
"சாருமதி எப்படியோ போங்க என்று அறைக்குள் சென்று விட்டாள்..
அதற்கு பின்னர் வேறொன்றும் நடந்தது மாமனார், கணவர், கொழுந்தனார் இருக்கும் பொழுது அமைதியாக இருப்பவர் அவர்கள் அனைவரும் சென்றதும் ஆரம்பித்து விடுவார், எதையாவது ஜாடை பேசுவது, உணவில் வேண்டுமென்றே காரத்தை அள்ளிப் போடுவது என்று..
ஆரம்பத்தில் அதைப் பெரிதாக எடுத்துக் கொள்ளாமல் யாரிடமும் சொல்லாமல் இருந்தவள் இப்பொழுது கன்சீவ் ஆகிவிடவே.. அவரது இந்த நாடகம் கடுப்பையே கிளப்பியது..
கடவுள் புண்ணியத்தில் மேல் வீட்டில் குடியிருந்த ரேகா என்ற பெண் சாருவோடு நட்பாகிவிடவே, கொஞ்சம் பொழுதும் போனது அவளுக்கு..
இங்கே வீட்டில் வைத்துப் பேசினால் மாமியார் ஒட்டுக் கேட்கிறார் என்பதால் ரேகாவின் வீட்டுக்குச் சென்று அம்மாவிடம் பேசி விட்டு வருவாள் சாரு..
ஒரு நாள் அம்மா வீட்டுக்குச் சென்றவள் மனதில் அழுத்திக் கிடந்த எல்லாவற்றையும் அப்பாவிடமும் அம்மாவிடமும் கொட்டி அழுதாள்..
"என்னால முடியலைப்பா.. தெரிஞ்சு செய்யறாங்களா தெரியாம செய்யறாங்களான்னே தெரியலை.. எல்லா தப்பும் பண்ணிடுவாங்க அப்புறம் தெரியாத மாதிரியே நடிக்குறாங்க, நான்தான் இனி பைத்தியம் ஆகணும்".. என்றவாறு அவள் அழ..
அன்று இரவு முழுவதுமே தூங்காது யோசித்தபடியே படுத்திருந்த சந்தானம்.. அடுத்த நாள் காலை உணவு முடிந்த பின்னர், சாருவிடம் பேச ஆரம்பித்தார்..
"சாரும்மா அப்பா சொல்றதை தெளிவா கேட்டுக்கோ, அவங்க உங்க வீட்டுக்காரர் இல்லாதப்போ தப்பா பேசினா நீ போன்ல ரெக்கார்டர் செய்து வைச்சுக்கிட்டு அவர்கிட்ட தினமும் போட்டுக் காட்டிடு.. வாயால குறை சொன்னால் கூட உனக்கு வேற வேலையே கிடையாதுன்னு சொல்லிட்டு போய் விடுவாங்க.. ஆயிரம்தான் இருந்தாலும் அம்மா, அக்கா இல்லையா?, அதனால நீ என்ன செய்யறேன்னா தைரியமா நான் சொன்னதைச் செய்யணும்..
படிச்ச பொண்ணு நீ, மாப்பிள்ளையும் நல்ல மனுஷன், நீ சொன்னதை வைச்சுப் பார்க்கும் பொழுது உனக்கு ஆதரவா இருக்கார்ன்னு தோணுது.. அதனால நான் என்ன சொல்றேன்னா, இந்தம்மாகிட்டே பேசினால் உங்க ரெண்டு பேருக்கும்தான் மனக்கசப்பு வரும் புரியுதா?".. என்று சந்தானம் கேட்க..
"ஆமாம்டி எதுவா இருந்தாலும் எங்களுக்கும் போன் பண்ணு, அடுத்த நிமிஷமே நாங்க ஓடி வந்திடறோம், பயப்படாதே".. என்று சாருவின் அம்மா பார்வதியும் தைரியம் கூற..
அப்பாவின் மடியில் படுத்துக்கொண்டவள்
"எனக்கு அங்கே போகவே பயமா இருக்குப்பா.. நான் மட்டும் தனியா இருப்பேன், அத்தையும் கீதாவும் ஒண்ணா சேர்ந்துட்டு என்கூட பேசமாட்டாங்க.. கஷ்டமா இருக்கும் தெரியுமா எனக்கு?".. அழுதவாறே கூறியவள்
"மாமாவும் சரவணனும் இருக்கும் பொழுது என் கூட பேசிட்டு இருப்பாங்க, அதனால பிரச்சனை இல்லை.. ஆனால் அவங்க போன பின்னால் இவங்க ரெண்டு பேரும் என்னை பார்த்து ஏதாவது பேசிக்கிட்டே இருப்பாங்க".. என்று புலம்ப..
"சரிடா அதான் அப்பா சொல்லிக் கொடுத்து இருக்கேன்தானே நீ அது மாதிரியே செய்.. அவங்க ரெண்டு பேரையும் கணக்கில் சேர்க்காதே".. என்று கூறி விட..
அன்று மாலை கணவனுடன் புகுந்த வீடு சென்றவளுக்கு மனது தெளிவாக இருந்தது..
அடுத்த நாளில் இருந்து ரெக்கார்டர் செய்தவள் கணவருக்கு போட்டுக் காட்ட.. இப்படியே ஒரு வாரம் போனது.. ராஜாவும் அந்த ரெக்கார்டரை கேட்டுவிட்டு அவளை பொறுமையாக இருக்க சொல்லி விடுவான்.. வசமாக சிக்கட்டும் அப்புறம் பார்க்கலாம் என்று.. அவனுக்குமே தன் மனைவி கர்பமாக இருக்கும் சமயத்தில் சந்தோசமாய் இருக்க விடாது செய்கிறார்களே என்று ஆனது
ஒரு நாள் இரவு சாருமதி அறையை விட்டு வெளியே செல்லலாம் என்று லைட்டை போட போகலாம் என எழுந்திருக்க.. அறைக்கு வெளியே இருந்த சீரியல் பல்ப் வெளிச்சத்தில் ஏதோ நிழலாட..
சத்தம் இல்லாமல் கணவனை எழுப்பியவள் அவன் காதருகில் குசுகுசுவெனப்பேச.. அவனும் சடாரென கதவைத் திறக்க அவன் அம்மா படுக்கையறை வாசலிலேயே தலை வைத்துக்கொண்டு படுத்திருந்தார்..
அன்று இரவில் இருந்து ராஜா தன் மனைவிக்கு புதுப்பாடம் எடுக்க ஆரம்பித்தான்..
"எங்கம்மா யாரும் இல்லாதப்போ உன்னைப் பேசுறாங்களா?.. நீயும் பேசு..
சாப்பாட்டில் காரம் போடுறாங்களா?.. நீ வேற சமைச்சு சாப்பிடு..
அவங்க அடியேன்னு கூப்பிட்டா நீ அடியேஅடியேன்னு அழுத்தி சொல்லு"... ஆனால் ஒரு விஷயம் அவங்க பாணியை அப்படியே கடைபிடிக்கணும்..
தெரிஞ்சு செய்யறாளா தெரியாம செய்யறாளான்னு தெரியாம அவங்களும் குழம்பனும் புரியுதா?".. என்று மேலும் நிறைய ஐடியாவை ராஜா அள்ளி விட..
சந்தோஷமிகுதியில் அவனை தாவி அணைத்துக் கொண்டவள் அன்றிலிருந்து புது சாருமதியாக உருமாறினாள்..
ஆம் திருமணமாகி புகுந்த வீட்டுக்குப் போகும் பொழுது அனைத்து மணப்பெண்களும் நல்லபடியாக தங்கள் வாழ்க்கையை ஆரம்பிக்கணும் என்ற எண்ணத்துடனேயே செல்கின்றார்கள்.. அதாவது நல்லபடியாக நடத்தினால் அவளும் நல்ல மருமகளே..
அன்றி அவளை வேறு மாதிரி நடத்தினால் அதற்கு ஏற்றாற் போல அவளும் மாறத்தானே வேண்டும்?..
இங்கே சாருவுக்கு அறிவுரை சொல்ல ஆட்கள் இருந்தாலும், கணவரும் புரிந்து கொண்டதாலும் எந்த குழப்பமும் இன்றி அவளால் தன்னை மாற்றிக் கொள்ள முடிந்தது..
ஆனால் நிறைய இடங்களில் இந்த நெளிவுசுழிவு தெரியாத காரணத்தால் புதிதாக திருமணம் ஆன பெண்கள் மனஉழைச்சலுக்கு உள்ளாகிறார்கள்..
ஆயிற்று சாருவுக்கு இரண்டு குழந்தைகளும் பிறந்தாயிற்று.. இப்பொழுது சிறந்த மனைவி ஆகவும், கேடி மாமியாருக்கேற்ற கேடி மருமகளாகவும் மாறிவிட்டாள்.. அதற்காக வாயாடி என்றும் கிடையாது எதுவாக இருந்தாலும் அதை மற்றவர்கள் முன்னால் வெளிப்படுத்தி விடுகிறாளே என்ற பயமே மேற்கொண்டு மாமியாரையும் நாத்தனாரையும் யோசிக்க வைத்தது
***
நன்றி.