• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

ராஜாத்தி - கனியம்மை

Admin 01

Administrator
Vaigai - Tamizh Novelist (Admin Crew)
Jul 30, 2021
583
376
63
Tamil Nadu, India
கனியம்மை

திருநெல்வேலி
கீரைகாரன்தட்டு,1970

"ஏலே..! விரசா போய் சாந்தி பெரியம்மாவா கூட்டிட்டு வாயா",என்ற தந்தையின் பதட்ட குரலில் என்னவோ ஏதோ என்று தன் வீட்டு பின்னே வேலி போட்டு தட்டி அடைத்து இருக்கும் இடத்தில் இருந்து தன் அப்பாவின் அண்ணன் மனைவியை,"ஓய் பெரியம்மா! இங்குட்டு வந்து போவியளாம் அய்யா வரச் சொன்னாவ?"என்று அவசர கதியில் கத்தி விட்டு ஓட்டம் பிடித்தான்,பதினெட்டு வயதான முத்துசாமி.

பயினி(பதநீர்) கலக்கித் தன் கணவர் ராகவனுக்கு கொடுத்துக் கொண்டிருந்த சாந்தியும்,"இதைக் குடிச்சிட்டு தோட்டத்துக்குப் போங்க சாமி நா அங்கன போய் ஒரு எட்டு பார்த்திட்டு வாரேன்,சிந்தாவுக்கும் வயிறு நல்லா இறங்கி இருந்துச்சி என்னனு போய் பாக்கேன்"என தன்போக்கில் கணவரிடம் சொல்லிக் கொண்டே,"நீங்க போங்க சாமி,பிறவு முத்துக்கிட்ட விவரம் சொல்லி அனுப்புறேன்",என்று முத்துவின் பின்னே சென்றார்.

கையைத் துடைத்துக் கொண்டே வந்த சாந்தி அங்கே பதட்டமாக இருந்த தன் கொழுந்தனிடம்,"என்ன தம்பி சிந்தாக்கு வலி வந்துட்டா?" என்று கேட்டுக்கொண்டே அந்த பனை ஓலை வேய்ந்த வீட்டுக்குள் நுழைந்தாள்.

அங்கே அவர் கண்டது,வலியில் துடித்த சிந்தாவும்,அவருக்கு பக்கத்தில் 5 வயதே ஆன அவரின் மகள் திருநாமகனி,இரண்டு வயதான தங்கையைக் கையில் ஏந்தி தன் தாயை பயமாக பார்த்துக் கொண்டு இருப்பதைத்தான் "ஏ புள்ள கனி,விரசா போய் தேவியை முத்துகிட்ட கொடுத்துட்டு பாப்பாத்தி ஆச்சியை கூட்டியா" என்று அவளை வெளியே அனுப்பி ஒரு பாத்திரத்தில் வென்னீர் வைக்க ஆரம்பித்தார்.அப்படியே திரும்பி வலியில் துடித்த சிந்தாவை பார்த்து,"தேவையா புள்ள இது,எத்துன வாட்டி உன்னைய டவுன் ஆஸ்பித்திரிக்குக் கூப்புட்டேன் குடும்ப கட்டுப்பாடு பண்ண, இப்ப பாரு ஒன்பதுல வந்து நிக்குது உனக்கு வலி தாங்க கூட சத்தில்ல.என்னவோ போ புள்ள" தன் பாட்டில் புலம்ப ஆரம்பித்தார்.

அவருக்கு இந்த பிள்ளைகளைப் பார்த்தாலே தன்னாலே மனது கனிந்துவிடும்,அதும் வெளியே சென்ற கனியைப் பார்க்க, இன்னும் மனது கனக்கும்.இப்பொழுது சிந்தாவுக்கு பிறக்க இருப்பது அவர்களுக்கு ஒன்பதாவது குழந்தை.ஏற்கனவே கஷ்ட ஜீவனம் இப்பொழுது இன்னொரு குழந்தை அதுவும் பெரிய மகளுக்கு அடுத்த வாரம் தான் சீமந்தம் செய்ய முடிவெடுத்துள்ளனர்.

சிந்தாமணி,தங்கசாமி இவர்களுக்கு ஆண் நான்கு,பெண் நான்கு என எட்டு மக்கட்செல்வங்கள்.பெரிதாகவருமானம் என்பது சொல்லிக் கொள்ளும்படி இல்லை.தங்கசாமி சுற்றியுள்ள ஊர்களில் உள்ள தோட்டம் மற்றும் வயல்களுக்கு வேலி அமைக்கும் வேலை செய்து வருகிறார்.சொந்தமாக சிறிது நிலம் உள்ளது.அதில் கிழங்கு,காய்கறி பயிரிட்டு வீட்டுக்கும் போக மீதியை வெள்ளி அன்று அவ்வூரில் நடைபெறும் சந்தையில் விற்றும்,சுற்றியுள்ள வீடுகளில் உள்ள பெண்கள் அனைவரும் தீப்பெட்டி அடுக்குதல்,பீடி சுருட்டுதல், ஓலைப்பாய் பின்னுதல் போன்றச் சின்னச் சின்ன வேலைகள் செய்தும் தங்கள் வாழ்வாதாரத்தைப் பார்த்துக் கொள்கின்றனர்.

விரைந்து வந்த பாப்பாத்தி ஆச்சியும் பிரசவம் பார்க்க,ஒன்பதாவது மகவு பெண் குழந்தையாகப் பிறக்க,அவர்கள் வீட்டின் பெண்களின் எண்ணிக்கை ஐந்தாகக் கூடியது.பாப்பாத்தி ஆச்சியும் "இனி குழந்தை பிறந்தால் உன் உடம்பு தாங்காது,அதனால போய் குடும்பக் கட்டுப்பாடு செஞ்சிட்டு வந்துடு" என்று கூறும் போதே சிந்தாவின் முகத்தில் பயம் படற,"நா 4 புள்ளையோட பண்ணிட்டேன் சிந்தா பயப்படாத" என்று தைரியம் அளித்தார் சாந்தி.அதன்பிறகே அவர் முகம் சற்று தெளிந்தது.

பாப்பாத்தி ஆச்சியும்,குழந்தையை சுத்தப்படுத்தி வெளியில் கொண்டு வந்துக் காட்ட,ஆவலாக தன் கையில் பெண் குழந்தையை ஏந்திய தங்கசாமிக்கு அவ்வளவு மகிழ்ச்சி.குழந்தைகள் என்றால் உசுரு,ஏனென்றால் அவரின் முதல் மனைவி வயிற்றில் பிள்ளை இருக்கும் போதே ஒரு வித விஷக் காய்ச்சலால் இறந்துவிட்டார்.அன்று அவர் அழுத அழுகையைச் சொல்லிமாளாது.பின்னர் ஒருவருடம் கழிந்தப் பிறகே அவரின் மாமனார் கரையாகாக் கரைத்துத் தன் இளைய மகளையேக் கட்டி வைத்துவிட்டார்.

அப்பாவிடம் இருக்கும் சிசுவைக் காண அனைவரும் அவரைச் சுற்றி வளைக்க,சிறுமியான கனி எட்டி எட்டி பார்ப்பதைக் கண்டவர் கனியை அருகில் அழைத்துக் குழந்தையைக் காட்டினார்.கனியும் "பாப்பா அழகா இருக்குல்ல அப்பு"என்று சிரிக்கும் மகளை வாஞ்சையாகப் பார்த்தார்.தன் அக்காவைப் போல் குண்டாக, வெள்ளந்தியாக இருக்கும் தன் மகள் கனியை மிகவும் பிடிக்கும்,அதனாலேயே அவரின் பெயரையே தன் மகளுக்கு வைத்தார்,இந்த ஒரு காரணத்துக்காகவே கனியை சிந்தாவுக்குப் பிடிக்காமல் போகும் என்பதையும் அறிந்திருந்தால் அப்பெயரை வைக்காமல் இருந்திருப்பார்.

மின்னல் போல் ஐந்து வருடம் கடக்க,இவர்கள் குடும்பத்திலும் கனமான நாட்களாகவே கடந்தது….சிந்தாவுக்கு குழந்தை பிறந்த ஒரு பத்து நாட்களுக்குள் பெரிய மகளுக்கும் மகன் பிறக்க, அடுத்தடுத்து மகன்களுக்கும் மணம் முடிக்க என எல்லாம் நல்ல முறையில் நடந்தாலும் வரும் மருமகள்கள் அப்படி அமையவேண்டுமே…!

மாமியார் கரித்துக் கொட்டுவதால் என்னவோ வந்த மருமகள்கள் ஒருவருக்கும் கனியைப் பிடிக்காமலே போயிற்று.பெரிய மருமகள் எப்பொழுதும் அக்கம்பக்கத்து வீட்டு பெண்களிடம்,"எப்புடி இருக்கா பாரு,ஆளும் மூஞ்சியும் ஒன்னுத்துக்கும் துப்பில்ல.வளர்ந்து மட்டும் நிக்குறா சட்டி மாறி" என்று ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமாக,எதற்கு திட்டுகிறாள் மதினி,என்பது கூடத் தெரியாத அசட்டுப் பெண்ணாகவே வளர்ந்தாள் கனி.

தங்கசாமியும் வேலையின் போது மின்சாரம் தாக்கிப் படுத்த படுக்கையாகிவிடவும்,கனிக்கு வேலை அதிகம் ஆகியது.ஆடுகளுக்கு புல் அறுத்துக் கொடுத்த பிறகே பள்ளிச் சொல்லவேண்டும். இல்லையேல் சிந்தா அடி விளாசிவிடுவார்.அப்படி அந்த புல்லும் அருகில் இருக்காது,பக்கத்து தெரு கணேசன் தோட்டத்துக்கு நடந்துச் சென்று,அவர்கள் எப்போது கண் அசருவார்கள் எனக் காத்துக்கிடந்து உள்ளே புகுந்து புல் அறுத்துக் கொண்டுவருவர்.

இதனால் பள்ளிக்கு செல்வது பதினொரு மணிக்கு மேல் ஆகிவிடும்.சிலநேரம் தோட்டத்து இடுவையில், மரத்தில் எனப் பாம்புகள் நிறைய உலாவரும்,அதைக்கண்டு நடுங்கி அதே இடத்தில் நின்றும்விடுவாள்...பின் பெரியவர்கள் யாராவது வருகிறார்களா?அவர்களுடன் இந்த இடத்தைத் தாண்டிவிடலாம் என்று எதிர்ப்பார்த்துக்கொண்டே இருப்பாள்.

பள்ளிக்கு நேரம் ஆகிவிட்டதே என்று அதுவேறு பயம் கொடுக்கும்.மனதில் அந்த குண்டு வாத்தி எப்பப்பாரு திட்டிகிட்டே வேற இருக்கும்.'எதற்கு'என்றே தெரியாது,பதநீர் குடித்துவிட்டு வருவதால் ஒருவிதக் கிறக்கத்தால் தூங்கி தூங்கி வழிவதாலோ?இல்லை சட்டைக்கு பொத்தான்களுக்கு பதில்,அவர் எவ்வளவு சொல்லியும் முட்களைப் பயன்படுத்துவதாலோ? இல்லை நேரம் கழித்து வருவதாலோ?எதுவோ ஒன்று அவர்க்குக் கனியைப் பிடிக்காமல் போயிற்று.தண்டனையாக 2 மணிநேரம் முட்டிப் போட வைத்துவிடுவாள்.சிலநேரம் மயங்கியும் விழுந்துவிடுவாள்.இவ்வளவு இருந்தும் படிப்பில் படுசுட்டி.இதற்கும் எழுதிப்பழகப் பலகை கூட இருக்காது;வீட்டில் மின்சாரமும் இருக்காது;தெரு விளக்கு எரியும் இடத்தில் தோழிகள் அனைவரும் கூட்டாக அமர்ந்து மண்ணில் தான் தமிழ் எழுத்துக்களையும், கணிதத்தின் கூட்டல் கழித்தல் போன்றவற்றையும் எழுதிப் பழகினாள் கனி.

பெரியவர் முத்து தவிர்த்து மற்ற மூன்று மகன்கள் தங்கள் மனைவியரைக் கூட்டிக்கொண்டு மெட்ராஸ் சென்றுவிட்டனர்.இதே பட்டிக்காட்டில் எத்தனை நாள் தான் குப்பைக் கொட்டுவது,என்று இவர்களுக்கு இருக்கும் சிறிது நிலத்தையும் நான்காகப் பிரித்து,அதையும் விற்றுப் பணமாக்கி,பிழைப்பைத் தேடிச் சென்றுவிட்டனர்.

மற்றவர்கள் அவரவர் மனைவி குடும்பம் என்று பார்க்க,பெரிய மகன் முத்து மட்டும் வந்த காசை ஊதாரியாகச் செலவு செய்து,ஊருடன் தங்கிவிட்டார்.

கனியின் எட்டாவது வயதில் அவளுக்கு முன் பிறந்த ஜெயம்,ஆற்றில் குளிக்கும் போது ஆற்றொடு அடித்து செல்ல,எங்குத் தேடியும் அவள் உடல் மட்டும் கிடைக்கவேயில்லை.இந்த இழப்பு அக்குடும்பத்திற்க்கு மீண்டும் ஒரு பெரும் துயரத்தைத் தந்தது.

அதன்பின் இரண்டு வருடம் சிந்தாக்கு கனி,தேவி மற்றும் லட்சுமியை பார்த்துக்கொள்ளவே நேரம் சரியாக இருந்தது.தன் கைத்தொழில் செய்யக்கூட முடியாத அளவு பிள்ளைகள் படுத்தி எடுத்தனர்.

கனி மட்டும் ஓரளவு அடம் செய்யாமல் அப்பொழுதே இரவு 11 மணி வரை கூட தன் தாய்க்கு உதவியாக ஓலை பின்னுவாள்.தூங்கி வழிந்தால் அதற்கும் தலையில் நறுக்கென்று கொட்டிவிடுவார் சிந்தா.,கூட இருப்போர்,"பாவம்ல சின்னப்புள்ளய இப்படி அடிகிறவ உறங்கிட்டு போட்டோமே "என்றப் பிறகே தூங்க அனுமதிப்பார்.

காலையில் எழுந்து வீட்டின் முன் விசாலமாக இருக்கும் இடத்தை மற்றும் ஆட்டுக்கொட்டகை முதற்கொண்டு பெருக்கி தண்ணீர் தெளித்து சுத்தப் படுத்தவேண்டும்.பின்,காலை உணவாகப் பெரும்பாலும் கம்மங்கூழ், கோதுமைக்களி,பதநீர் இப்படி ஏதாவது ஒன்று தான் செய்திருப்பார்.

இட்லி,தோசை, பொங்கல் எல்லாம் பண்டிகை நாட்களில் மட்டுமே செய்வார்கள்.கனிக்கு, கோதுமைக்களியைக் கூடச் சின்ன வெங்காயம் வைத்து சாப்பிட்டுவிடுவாள்.கம்மங்கூழ் மட்டும் பிடிக்காத ஒன்று.'வேண்டாம்'என்றால் அதற்கும் சிந்தா அடிபின்னிவிடுவார்.

அன்றைக்கு வேலைகள் அனைத்தும் முடித்து பள்ளி செல்லக் கிளம்பிய கனியை,"ஏட்டி கனி இனிமே வீட்டிலயே இருந்துக்க,உன்ற தங்கச்சிங்களை என்னால ஒத்தையா சமாளிக்க முடியமாட்டுக்கு,பள்ளிக்கூடம் எல்லாம் இனிமே போவ வேண்டாம்,வீட்ல இருக்க வேலையை செஞ்சிகிட்டு இங்கனையே இருந்துக்கோ "சொல்லிட்டு சென்றத் தாயின் பேச்சால் திகைத்தக் கனி அவரின் பின்னே சென்று,"யம்மோய் படிக்கனுமோய் நானு,போய்ட்டு வந்து வீட்டுவேலையும், தங்கச்சிகளயும் பார்த்துக்கிறேன்மா, பள்ளிக்கூடம் மட்டும் நிறுத்தாத படிக்கணும்மோய்"அழுதக் கனியைக் கண்டு இன்னும் கோபம்தான் எழுந்தது சிந்தாக்கு,"அடியே இம்புட்டு நேரம் சொன்னது உன்றக் காதுல விழலயாக்கும் செவுட்டு மூதி.உன்ற அய்யனும் படித்துட்டாரு,உன்ற அண்ணங்களும் செலவுக்குனு காசு தாரதும் இல்ல,வேற எப்புடி நம்ம வயத்தப் பாக்க, ஒழுங்கா நா சொன்னா மாறி செஞ்சிப்போடு".சொல்லிச் சென்றுவிட்டார்.

அழுதுக்கொண்டே தனது அப்பாவிடம் சொல்ல,அவரும் வீட்டின் நிலையைப் பார்த்துக்கொண்டுத் தானே இருக்கிறார்.அதனால் கலங்கிய மகளின் தலையைக் கோதி,"கனிமா அம்மோய் சொல்றதக் கேளு தங்கம்,தங்கச்சி புள்ளைங்களப் பார்த்துக்க வேண்டிப் படிப்ப விட்டுடுமா.இந்த அய்யனுக்காக இதை செய்வியா தாயி"என்று கூறிய தந்தையை ஒருநிமிடம் பார்த்துக்கொண்டிருந்த கனி, "சரி அப்பு நா இனிமே போவல இங்கனவே இருக்கேன்"என்று அழுதுக்கொண்டே சென்றுவிட்டாள்.செல்லும் மகளை நினைத்தும்,தன் கையாகா நிலையை நினைத்தும் கண் கலங்கினார் தங்கசாமி.

கனியின் வாழ்க்கை தினமும் அடியும்,வசவும்,சரியான சாப்பாடு இல்லாமலும்,வேலை வேலை என்று நாட்கள் கடக்க, அவளின் பதினைந்தாவது வயதில் பெரியவள் ஆனாள்.

இரவு தூங்கும்போது கைச்சப்பும் சிறு பிள்ளையே அவள்.இதுவரை பாவாடை,சட்டை என்று சந்தையில் சிந்தா வாங்கி வரும் உடையை உடுத்திய கனி,சடங்குக்கு வந்த அவளின் பெரிய அக்கா பொட்டுகனி கொடுத்த சீலைகளைக் கட்ட ஆரம்பித்தாள்.அதைச் சரிவரக் கட்டக்கூடத் தெரியாது,ஏதோ பொம்மைக்கு சுற்றிய துணி மாறி கட்டிச் சுற்றிவருவாள்.

மாராப்பு விலகுவதும்,இடைத்தெரிவதும்,தெரியாத அசடாகவே இருந்தாள்.புரியும்படி,தாய் சொல்லி கொடுத்து இருந்தால் கூடப்பரவாயில்லை.அப்படியும் இல்லை,ஒருநாள் மருமகளின் கிண்டல் பேச்சால் கனியை கவனிக்க,தன்போக்கில் தீப்பெட்டி அடிக்கிக் கொண்டிருந்தாள் துணி விலகி இருப்பது கூடத் தெரியாமல்.இதனைக் கண்ட சிந்தாவுக்கு ஆத்திரம் அதிகமாக அங்கே மாடு விரட்ட வைத்து இருந்த மூங்கில் கொம்பினால் கனியின் முதுகிலேயே அடி விளாச,திடீரென்று முதுகில் விழுந்த அடியால் வலி எடுக்க, "அய்யோ ம்மோய் என்னாத்துக்கு அடிக்கிற வலிக்குதுமோய்" என்று கத்தக் கத்த அடி வெளுத்து வாங்கினார்,பின் அங்கு எரிந்து கொண்டு இருந்த விறகு அடுப்பில் இருந்து ஒருக் கட்டையை உருவி கதறக்கதற அவள் கையில் சூடு வைத்துவிட்டார்...இதனை திருப்தியாக பார்த்துக் கொண்டிருந்த அவளின் மதினி,தன்னுடைய அத்தை அடியை நிறுத்தியப் பிறகே வேறு வேலைப் பார்க்கச்சென்றாள்.

வலி தாங்காமல் ஓடிய
கனி,"என்னத்த செஞ்சிப்போட்டேன் நானு என்னத்துக்கு அம்மை அடிச்சி சூடு வச்சது,ரொம்ப வலிக்குதே கை வேற எரியுதே"என்று அழுதுக்கொண்டே ஆற்றின் அருகே அமர்ந்துவிட்டாள்.நடந்ததைக் கேள்விப்பட்டு அங்கே வந்த சாந்தி,"என்னதான்டி உன்றப் பிரச்சனை?என்னத்துக்கு அந்த புள்ளைய அந்த அடி அடிச்சி சூடு வச்சியாம்,அறிவில்லை எங்க கனி?",என்றவரிடம் "மேற்க பக்கம் அழுதுட்டு ஓடிப்போனாகா"என்ற சிந்தாவின் பதிலில்,இன்னும் கோபம்வர நாலு வார்த்தை நறுக்கென்று கேட்டுவிட்டு கனியை கூட்டிவரச் சென்றார்.

அவர் சென்ற பின்னரே மனதுக்கு ஏதோ செய்ய,விளக்கு வைக்கும் நேரம் ஆகியும் வராத கனியை நினைத்து சிந்தாவுக்கு பயம் பிடித்துக்கொண்டது. அக்கம்பக்கம் தோழிமார்கள் வீட்டில் தேடியும் கிடைக்கவில்லை என்றதும் அழுகைவர,சாந்தி அக்காவுடன் சேர்ந்து ஊரையே சல்லடை போட்டுத் தேடியும் கனியைக் கண்டு பிடிக்கமுடியவில்லை.

கனிக்கு,நேரம் செல்லச் செல்ல பயம்வர,அங்கு இருக்கவே முடியவில்லை.ஊரில் உள்ள காவல் தெய்வமான இசக்கி அம்மன் 'வயது புள்ளைகளைக் கண்டா நாய் மாறி வந்து பயமுறுத்தி ஊர் எல்லையில் துரத்தி விட்டுச்செல்லும்'என்றும், 'வயது வந்த இளைஞர்களை இரத்தக் காவு வாங்கியது' என ஊரார் பேசி கேட்டு இருக்கிறாள்.அதுவேறு பயத்தைத்தர,அங்கு தீட்டு துணிகளை வெளுக்கும் இடத்தில் சென்று ஒளிந்துக்கொண்டாள்…

சாந்தியும்,சிந்தாவும் விசாரித்ததில் இங்குதான் அநேகம் பேர் கனியைப் பார்த்ததாக சொல்லியதால் ஆற்றங்கரைக்கு விரைந்து வந்துத் தேட அங்கும் அவளை காணாததால்,இருவருக்கும் என்ன செய்வது என்றேத் தெரியவில்லை.

பயத்தில் காதை அழுத்தமாக முடிய கனிக்கு, தூரத்தில் தன் அன்னையின் குரல்போல் கேட்க மெதுவாக எட்டிப்பார்க்க சாந்தி பெரியம்மாவும்,அன்னையும் வருவதைக்கண்டு மகிழ்ந்த கனி அவர்களிடம் ஓடிச்சென்றாள்.ஆள் அரவம் கேட்டு திரும்பியவர்கள், ஓடிவந்தவள் வந்த இடத்தைப் பார்த்து இன்னும் அதிர்ந்தனர்.முதலில் சுயத்துக்கு வந்த சிந்தா,"எங்க போய் ஒளிஞ்சி இருக்கா பாரு"என்று மீண்டும் அடிக்கப் பொருள் தேட,சாந்தி உடனே, "அவளே வலியோட இருக்கா சிந்தா,வீட்டுக்கு விரசா போவோம் வா,மற்றதை பிறவு பார்க்கலாம்"என்று அழைத்துச்சென்றாள்…

வீட்டிற்க்கு அருகே வரவும் தான் ஊரே கூடி தன் குடிசை முன் நிற்பதை அறிந்து மேலும் பதட்டமடைந்தனர் அம்மூவரும்.

ஊருக்கு பெரியவரான வெள்ளையன் தாத்தா,"என்ன சிந்தா எங்குட்டு இருந்தா உன்ற மவ?இம்புட்டு பதட்டப்பட வச்சிப்புட்டாலே என்னவே பண்றது?",என்று ஆரம்பித்த பெரியவரின் பேச்சு,ஒரு கட்டத்தில் நீண்டு,பேனை பெருமாள் ஆக்கி அதை வடமும் இழுத்து முடிவில் அவளின் திருமணத்தில் கொண்டுவிட்டது,அவர்களின் பேச்சு.விளைவு அடுத்த 48வது நாள் செல்வி.கனி,திருமதி தர்மேந்திரன் ஆக்கப்பட்டாள்.

16 வயதில், தன்னைவிட இரு வயதேக் கூடுதலான வேலை வெட்டி ஒன்றும் இல்லாத ஒருத்தருக்கு வாக்கப்பட்டாள்,கனி.வாய்த்த மாமியாரும் ஒரு வாய் கஞ்சிகூடக் கொடுக்காமல் பசியில் அவளை வாடவிட, மெலிந்து போனாள்.மாதம் கடந்து தங்கையைக் காண வந்த பொட்டுகனி,அவள் இருந்த நிலையைப் பார்த்து அதிர்ந்தார்.
வீட்டில் அவள்தான் கொஞ்சம் சதைப் பிடிப்போடு இருப்பாள்.இன்றோ பஞ்சத்தில் அடிபட்டவள் மாறி சோர்ந்துப் போய் இருக்க,பொட்டுகனி தன் தங்கையிடம் விரைந்துச்சென்று,"ஏ புள்ள கனி என்னடி ஆச்சு என்னத்துக்கு இப்படி காஞ்சிப்போய் கிடக்க,எதாச்சும் வயித்துக்கு சாப்டியாடி" என்று பதற,அக்காவின் குரலைக் கேட்டதும்,ஓடி வந்து அவள் கழுத்தில் முகம் புதைத்துக் கதறிவிட்டாள்.
"பொட்டுக்கா என்னைய இங்குட்டு இருந்து கூட்டிக்கிட்டு போய்டுக்கா,ரொம்ப பசிக்குது,நம்ம வீட்ட விட நல்ல சாப்பாடு கிடைக்கும் தானே இந்த கல்யாணத்துக்கு ஒத்துகிட்டேன் யாருமே சாப்பாடு கூடப் போட மாட்டுகுறாங்கக்கா.அம்மை அடிச்சாலும் பரவால்லக்கா என்னைய இங்கிட்டிருந்து கூட்டுப்போக்கா",என்ற தங்கையை அதிர்ந்துப் பார்த்த பொட்டுகனி,"வா புள்ள என்னோட"என்று அவளின் மாமியார் தங்கத்திடம் சென்று, "என்னங்க பண்ணி வச்சி இருக்கீங்க?மருமவனு கூடப் பார்க்க வேணாம் உங்களை மாறி ஒரு பொண்ணுனு ஆச்சும் பாத்திகளா?அவளுக்கு ஒருவாய் நீச்சத்தண்ணி கூடவாத் தர மனசு ஒப்பல உங்களுக்கு?இனி இவளை இங்க விடப்போறது இல்ல எங்க இவ மாப்பிளை? கூப்பிடுங்க அவர,ஒன்னு அவரு எங்களோட மெட்ராசுக்கு வரட்டும் இல்ல இன்னைக்கே இதுக்கு ஒரு முடிவு எடுத்துடலாம்" என்றார்.

வீட்டுக்கு வந்தவகளுக்கு இளநீர் வெட்டிக்கொண்டு வந்த தர்மனின் தந்தைக்கு,அப்பொழுதுதான் தெரியவந்துது மருமகளுக்கு நடந்தது.பின்,தன் மனைவியின் குணத்தை அறிந்த அவரும் பொட்டுகனியிடம்,"இங்கன நடந்த அத்தனைக்கும் நா மாப்பு கேட்டுகுறேன்மா".நீ உன்ற இஷ்டப்படியே மெட்ராசுக்கு புள்ளைகளக் கூட்டிக்கொண்டு போமா,நா அனுப்பி வைக்கிறேன்".என்று கூறினார் தர்மனின் அப்பா கணேசன்.

பின் தம்பதிகள் மெட்ராஸ் வரவும்,கனியின் அக்கா கணவர் சங்கரின் மளிகைக்கடையில் வேலைப்பழக ஆரம்பித்தார் தருமர்.ஒரு மூன்று மாதம் வேலை கற்றப்பின் தனியாகப் பக்கத்து ஊரில்,ஒரு சிறிய கடை மற்றும் தங்க இடம் வாடகைக்குப் பார்த்துக் கொடுத்தார்,சங்கர்.

ஓரளவு நன்றாகச் பணம் கையில் பார்க்கவும்,கொஞ்சம் திமிரும் கர்வமும் கூடியது தர்மருக்கு,பிறகு எதற்கு என்றாலும் அடி உதை தான் கனிக்கு.வாயே திறக்கக்கூடாது.இதிலேயே மூன்று பிள்ளைகள் நான்கு வருட இடைவெளியில்.பெண் 2 ஆண் 1 என்று பிள்ளைகளைப் பெற்றெடுத்தாள்.

மீண்டும் விதி விளையாடியது.திடீர் என்று நன்றாகச் சென்ற வியாபாரம் படுத்துவிட்டது.கடன் வாங்கியோர் அநேகம் பேர் தர்மாவை ஏமாற்ற,தங்கிய வீட்டிலும் 10 ஆண்டுக்கு மேல் ஆனதால் வீட்டை காலி பண்ணச் சொல்ல,மீண்டும் கனிக்கு சோதனைக்காலம் ஆரம்பித்தது.

"மூன்று பிள்ளைகளை எப்படி கரை சேர்ப்பேன் நான்" கிட்டத்தட்ட நடுரோட்டில் நிற்க வேண்டியநிலை.அப்பொழுதுதான் தன்னிலையை உணர்ந்தாள்.பின் தன்னைப் போல் தன் பிள்ளைகளும் அசடாக இருந்து வாழ்வில் கஷ்டப்படக்கூடாது என்று கணப்பொழுதில் முடிவெடுத்து,தான் இதேமாறி வெகுளியாக இருந்தால் இனியும் சரிப்படாது,தன் கணவரையும் இனி நம்பமுடியாது என்று தீர்க்கமாக முடிவெடுத்தாள்.பின் அவ்வீட்டின் பெரியவர் முன் தனக்கு பிறந்த வீட்டுச் சீதனமாக கொடுத்த, ஐந்து பவுன் நகையைத் தந்து இதை வித்துப் பணம் தரமுடியுமா? என்றுக்கேட்டாள்.அவரும் அவள் முகத்தைப் பார்த்து என்ன நினைத்தாரோ?தானே அந்த நகையின் மதிப்பிற்கு மேலேயே பணத்தைக் கொடுத்தார்.

ஏதோ தெய்வாதீனமாக ஒரு இடம் விலைக்கு வர,அதை அடி மாட்டு விலைக்கு அப்பெரியவரே இவர்களுக்கு கைமாற்றிவிட,அடுத்த மூன்றாம் மாதத்தில் சொந்த வீட்டில் குடிபெயர்ந்தனர்,கனியின் குடும்பத்தினர்.
வீடு கட்டுவதற்குள்,அவள் பட்டக் கஷ்டம் சொல்லிமாளாது. அவ்வீட்டின் சிறுபகுதியைக் கடையாக மாற்றி அக்கடையைப் பார்த்துக்கொண்டு தங்களின் வருமானத்தைப் பெருக்கிக்கொண்டாள் கனி.அசடாக இருந்தால் இங்கேயும் தன்னை ஏமாளியாகவே பார்ப்பார்கள்,என்று தன்னைச் சிடுசிடுவென்று மாற்றிக்கொண்டாள்.

குழந்தைகளிடம் கூடக் கண்டிப்பும் அன்பும் சரி விகிதத்தில் தான் காட்டினாள்.தன்வாழ்க்கையில் நடந்த ஒவ்வொரு நிகழ்ச்சியிலும் தான் கற்றப் பாடத்தால் கனியாக இருந்தவள் 'கனியம்மையாக', கண்டிப்புமிக்கவளாகத் தன்னை மாற்றிக்கொண்டாள்.

ஊதாரியாக இருந்த கணவரும் பெண் வயதுக்கு வந்ததும் மனதில் அவளின் எதிர்காலம் குறித்து பயம் பீடிக்க, ஒரு இரும்புக்கடை ஆரம்பித்து,கனிக்கு அவர் பங்குக்கும் கொஞ்சம் உதவ ஆரம்பித்தார்.

கனி,தான் இழந்த சிறுவயது வாழ்க்கை,படிப்பு,நல்ல துணிமணி,உணவு,சுதந்திரம், நல்ல மணவாழ்க்கை என்று பார்த்துப்பார்த்து தனக்குக் கிடைக்காததைத் தன் பிள்ளைகளுக்குச் செய்தாள்.

இன்றுவரையும் யார் கையையும் எதிர்பார்க்காமல் அந்த சிறு பெட்டிக்கடையில் வரும் வருமானத்தைக் கொண்டே வாழ்ந்துவருகிறார் கனியம்மை.

இவரைப்போல் வீட்டிற்க்கு ஒரு கனியம்மை இன்றும் இருக்கத்தான் செய்கிறார்கள். அவர்களுக்கும் வாழ்வு மகிழ்ச்சியாக அமைய வாழ்த்தி விடைப்பெறுவோம்…

***
நன்றி.
 
  • Like
Reactions: AnuPriyam

AnuPriyam

Vaigai - Avid Readers (Novel Explorer)
Aug 4, 2021
2
2
3
Karur
kaniyammai oda appavithanamum kuzhanthaigalukaga thelivu petru nimirunthathum super. nalla thanambikai story