• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

வண்ண நிழல்கள் - 1.

Infaa

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jan 7, 2022
915
81
93
Chennai
வண்ணம் – 1.

நள்ளிரவு 12 மணி, சென்னை மாநகரம் ஆழ்ந்த நித்திரையில் இருக்கும் நேரம்.... கடிகாரம் அதன் வேலையை சரியாக செய்து, அதை ஒலியெழுப்பி பறைசாற்ற, அதைக் கொஞ்சம் கூட கண்டுகொள்ளாமல் பெரும் பரபரப்பில் இருந்தான் இருபத்துநான்கு வயது இளைஞன் விஷ்வா.

இன்னும் பதினைந்தே நாளில் வெளிவர வேண்டிய திரைப்படத்தின் எடிட்டிங், வேலைகள் அனைத்தும் அத்தனை பரபரப்பாக நடந்தேற, அவனது கவனம் முழுவதும் திரையிலும், தனக்கு முன்னால் இருந்த மூன்று கணினி திரைகளிலும் நர்த்தனம் ஆடிக் கொண்டிருந்தது. -

அவன் இதை முடித்துக் கொடுத்தால்தான், இசையமைப்பாளர் தன் இசையை கோர்க்க சரியாக இருக்கும்.

அவனது கவனத்தை கலைக்க முயன்றும் முடியாமல், சிறு பயத்தோடும், தயக்கத்தோடும் நின்றுகொண்டிருந்தார் அவனது உதவியாளர் வாசுதேவன்.

விஷ்வாவின் வயதுக்கு ஒத்த அனுபவம் அவருடையது... ஆனாலும் அவனிடம் நெருங்கிச் செல்லவே பயமாக இருக்க, விலகி நின்றிருந்தார்.

விஷ்வாவின் இருக்கைக்கு பக்கத்தில் இருந்த படத்தின் டைரக்டருக்கே வாசுதேவனைப் பார்க்க பாவமாக இருக்க, “சொல்லுங்க வாசுதேவன்... ரொம்ப நேரமா கையைப் பிசைஞ்சுட்டே நிக்கறீங்க? என்னன்னு சொல்லுங்க...” டைரக்டர் கல்யாண் பேசிய பிறகுதான் அங்கே அப்படி ஒருத்தர் நிற்பதையே கவனித்தான் விஷ்வா.

“என்ன...?” தன் சுழல் நாற்காலியில் இருந்து சுழன்று திரும்பியவன், அவர் பக்கம் பார்க்க, அதில் சினேக பாவம் கொஞ்சமும் இருக்கவில்லை.

“தம்பி...” அவர் இழுக்க,

“கால் மீ விஷ்வா... எத்தனை முறை சொல்லியாச்சு... என்ன?” தான் கேட்டதையே திரும்பக் கேட்டான்.

அந்த ‘என்ன?’ என்ற கேள்வி அவருக்குள் பல பூகம்பங்களை விதைப்பதை அவன் எங்கே உணர்ந்தான்?

எச்சில் கூட்டி விழுங்கியவர், “அது... விஷ்வா தம்பி...” அவர் இன்னுமே தயங்க, அவன் தலையிலேயே அடித்துக் கொண்டான்.

“உங்கள திருத்தவே முடியாது” இப்படிச் சொன்னவனை புரியாமல் பார்த்திருந்தார்.

“நான் என்னதம்பி செய்தேன்?” அவர் அப்பாவியாக வினவ, அவனுக்கு பாவமாக இருந்ததோ இல்லையோ, கல்யாணுக்கு பரிதாபமாக இருக்க, வேகமாக அவருக்கு துணை வந்தார்.

“விஷ்வா... கூல்... அவர் என்ன சொல்றார்னு கேப்போமே...” கல்யாண் சொல்ல, மறுவார்த்தை அவன் பேசவில்லை.

தனது பத்தொன்பதாவது வயதில், தன்மேல் பெரும் நம்பிக்கை வைத்து, பலகோடி செலவில் எடுக்கப்பட்ட படத்தின் எடிட்டிங் பொறுப்பை தன்னை நம்பி கொடுத்த கல்யாண் மீது அவனுக்கு எப்பொழுதுமே பெரும் விசுவாசமும், நன்றியும், மதிப்பும் இருக்க, அவரை எதிர்த்து ஒரு வார்த்தை கூட பேசாமல் அமைதியாகிவிட்டான்.

“சொல்லுங்க வாசு...” கல்யாண் கேட்கவே, அவர் என்னவோ விஷ்வாவைத்தான் பார்த்தார்.

“எனக்கு இந்த ட்ராமாவுக்கெல்லாம் நேரமில்லை... ஸ்பீக்...” கடித்த பற்களுக்கு இடையே அவன் வார்த்தைகளை துப்ப, சற்று நடுங்கினார்.

“ப்ரடியூசர் மதன் வந்து ரொம்ப நேரமா வெயிட் பண்ணிட்டு இருக்கார். அதான்...” அவர் எச்சிலை முழுங்க, அவன் கண்களில் ரவுத்திரம் மின்னியது.

அவர் அதற்கே இரண்டடி பின்வாங்க, “இங்கே என்ன நிலைமைன்னு உங்களுக்குத் தெரியுமா இல்லையா?” அவன் இருக்கையை விட்டு பட்டென எழ, அவர் வேகமாக பின்வாங்கினார்.

“ரொம்ப சீனியர்... பெரிய இடம்... அவரை பகைச்சுக்கறது...” அவர் மென்று முழுங்கினாலும், சொல்ல வந்ததை சொல்லிவிட, மறுத்து பேசப் போனவனை கல்யாண் தடுத்தார்.

“அவர் சொல்றதிலும் ஒரு நியாயம் இருக்கு விஷ்வா” அவர் சொல்ல, தன் கோபத்தை கைவிட்டு, ஆழமாக மூச்செடுத்தான்.

“சரி, என்னவாம்...” விஷயம் இன்னதெனத் தெரிந்தும் கேட்டவனை, அச்சமாகத்தான் ஏறிட்டார்.

“அதுவந்து... அவரோட படத்தை நீங்கதான் எடிட் பண்ணி கொடுக்கணும்னு...” அவர் தயங்கி தேங்குகையிலேயே அவனது முறைப்பு அவரது வார்த்தைகளை முடித்து வைத்தது.

“இங்கே என்ன நிலைமைன்னு உங்களுக்கே தெரியுமா இல்லையா? அப்படியும் அவருக்கு பரிஞ்சுகிட்டு இங்கே வந்து நிக்கறீங்க?”.

அவனே இரவு பகல் பாராமல், இருபத்திநாலு மணி நேரம் போதாமல், கைவசம் இருக்கும் படங்களை முடித்துக் கொடுக்க வேண்டிய கட்டாயத்தில் உழன்று கொண்டிருக்க, புதிதாக ஒன்றை உடனடியாக முடித்துக் கொடு என அவர் கேட்பதில் நியாயம் இல்லை தானே.

“பரிஞ்சுன்னு இல்ல தம்... விஷ்வா. அதைச் செஞ்சு கொடுக்கலன்னா தேவையில்லாமல் எதையாவது செய்வாரே என்பதுதான் என் கவலையே” அவனது எதிர்காலத்தைக் குறித்து அவர் பயப்படுவது அவனுக்கு நன்கு புரிந்தது.

அதைக் கேட்ட கல்யாணுமே, “ஆமா விஷ்வா... நானும் அதைத்தான் சொல்றேன். போய் பேசு போ...” கல்யாண் சொல்ல, அதற்கு மேலே மறுக்காமல் இருக்கையில் இருந்து எழுந்து கொண்டான்.

“நீங்க இதைக் கொஞ்சம் பாருங்க... நான் அவர்கிட்டே பேசிட்டு வர்றேன்” சொன்னவன் அங்கிருந்து வெளியேற, அவர் முகமோ கவலையைப் பிரதிபலித்தது.

“சார்... அவன் நம்மகிட்டேதான் இப்படி எகிறுவான். அங்கே போய்ட்டா அப்படியே ஆளே மாறிப் போய்டுவான். சோ, பயப்படாமல் வந்து உக்காருங்க” கல்யாண் அவரது கையைப் பிடித்து இருக்கையில் அமர வைத்தார்.

“அது எனக்கும் தெரியும் சார்... ஆனாலும் சில நேரம் ரொம்ப கிளீயர் கட்டா பேசிடறார். அது எல்லா ஆள்கிட்டேயும் செட் ஆகாதே” இவர்கள் தங்களுக்குள் பேசிக் கொள்ள, விஷ்வாவோ மதனைத் தேடிச் சென்றான்.

வரவேற்பு அறையில், தன் ஆறடி உயரத்தையும், அதற்கேற்ற உடற்கட்டையும் அனாயசமாக சுமந்தவாறு, கால்மேல் கால் போட்டு அமர்ந்திருந்தான் மதன்.

கழுத்திலும், கையிலும் தடிமனான நகைகள் மின்ன, தங்கப்பல் தெரிய சிரித்து, இருக்கையில் இருந்து எழுந்து அவனை வரவேற்றார்.

“விஷ்வா... வாங்க... உங்களைப் பிடிக்கணும்னா முடியாத காரியமா இருக்கே. எப்படி இருக்கீங்க?” ஆர்ப்பாட்டமாக அவனை வரவேற்க, அவனும் மலர்ந்து சிரித்தான்.

“நான் என்ன உங்களை மாதிரி உலகம் சுற்றும் வாலிபனா? நான் உண்டு, என் ஸ்டுடியோ உண்டுன்னு இருக்கறேன்” சொன்னவன் அவருக்கு இருக்கையை காட்டிவிட்டு, எதிரில் அமர்ந்தான்.

“அப்படியுமே உங்களை புடிக்க முடியலையே...” அவர் தனது மேனேஜரை அனுப்பியும் அவனைப் பார்க்க முடியாமல் அவன் திரும்பி வந்ததால், ஒரு ‘க்’ வைத்தே பேசினார்.

“அதனால இப்போ என்ன கெட்டுப் போச்சு, அதான் பாத்தாச்சே” ‘நான் தவிர்த்தும் என் முன்னால் இருக்கின்றாயே’ என்ற அர்த்தத்தில் அவன் சொல்ல, மதனின் முகம் சற்று இருண்டது.

“சரி அதை விடுங்க, என்னன்னு சொல்லுங்க...” பிரச்னையை பெரிதாக்க அவன் விரும்பவில்லை.

“உங்களை எதுக்கு தேடி வருவோம்ன்னு தெரியாதா? என் படம் ஒண்ணு முடிஞ்சு தயாரா இருக்கு...” அவர் சொல்ல, அவரையே பார்த்திருந்தான்.

“முடிஞ்சு தயாரா இருந்தால் பரவாயில்லையே, ரிலீஸ் டேட் வேற சொல்லிட்டீங்க போல” தன் வழுவழுப்பான கன்னத்தையும், மோவாயையும் தேய்த்துக் கொண்டவாறே கேட்டான்.

“எல்லாம் நீங்க இருக்கற தைரியம்தான்...” அவர் விட்டுக் கொடுப்பதாகவே இல்லை.

“சார், நான் நேரடியாவே சொல்லிடறேன்... என் கைவசம் உடனே முடிச்சு கொடுக்க வேண்டிய படமே ஏழு இருக்கு. இன்னும் ஒரு ரெண்டு மாசத்துக்கு என்னால் இங்கே இருந்து அசையக் கூட முடியாது.

“அப்படி இருக்கும்போது, நீங்க உங்க ரிலீஸ் டேட்டை அனவுன்ஸ் பண்ணி வச்சிருக்கீங்க, அதுக்கு முன்னாடி நான் படத்தை கொடுக்கணும்ன்னா... அது ரொம்பவே கஷ்டம்” அவன் தன் நிலையை உரைத்தான்.

அன்புக்கு கட்டுப்படுவது என்பது வேறு, அதிகாரத்துக்கு அடிபணிவது என்பது வேறாயிற்றே. அவனிடம் கலந்து ஆலோசிக்க வேண்டும் என்பது இல்லை, ஆனால் எடிட்டர் இவன் என அவர் முடிவு செய்த பிறகு, அவனுக்கு வசதிப்படுமா என கேட்டிருக்க வேண்டுமே.

“ரெண்டுமணிநேர படம்தான்... உங்களுக்கு என்ன நேரமாயிடப் போகுது? உங்க கூடவே டைரக்ட்டரும் இருப்பார்” அவர் சொல்ல, விஷ்வாவுக்கு கண்மண் தெரியாத கோபம்தான் வந்தது.

அதை அவரது வயதைக் கருதி அடக்கிக் கொண்டவன், “இல்ல சார், எனக்கு நேரமில்லை... நீங்க இப்போதைக்கு வேற ஆளை வச்சு பாத்துக்கோங்க. உங்க அடுத்த படத்துக்கு வேண்ணா நான் எடிட் பண்ணித் தர்றேன்” சற்று அழுத்தமாகவே மறுத்தான்.

“இண்டஸ்ட்ரியில் என் உயரம் தெரியாமல் பேசறீங்க...” தான் நேரில் சென்றாலே அனைவரும் அலறுவார்கள். அப்படி இருக்கையில் விஷ்வா அசைய மறுப்பது அவரது ஈகோவைத் தூண்டியது.

“என்ன சார், மிரட்டிப் பாக்கறீங்களா? இந்த வேலை இல்லன்னா, எனக்குத் தெரிஞ்ச வேலையை செஞ்சுட்டுப் போறேன். அதுக்காக முன்னாடி நான் கமிட் பண்ணதை மாத்தி பேச என்னால் முடியாது.

“நீங்க சொன்ன தேதியில் படம் வரணும்ன்னா வேற ஆளை வச்சு பண்ணுங்க. இல்லையா... ரெண்டு மாசம் வெயிட் பண்ணுங்க, சாய்ஸ் இப்போதும் உங்களோடதுதான்” அவன் தன் நிலையில் இருந்து மாறாமலே இருந்தான்.

அது அவருக்கு பெரும் கோபத்தை அளிக்க, “எனக்கே முடியாதுன்னு சொல்ற அளவுக்கு வளந்துட்டியா? இன்னும் மீசை கூட முளைக்காத சின்னப்பய, போனா போகட்டும்னு வாய்ப்பு குடுக்க வந்தா, சும்மா பிலிம் காட்டுற?” சகட்டுமேனிக்கு அவர் பேச, அங்கே ஓடிவந்தார் வாசுதேவன்.
“சார்... என்ன இது? எல்லாரும் வேடிக்கை பாக்கறாங்க” வாசுதேவன், மதனிடம் விரைய, அப்பொழுதுதான் தங்களைச் சுற்றி இருந்தவர்களை கவனித்தார்.

“வாசு... சொல்லி வைங்க... வளர வேண்டிய வயசு...” சற்று மிரட்டலாகவே சொன்னார்.

“நான் சொல்றேன் சார்... இப்போ நீங்க கிளம்புங்க” அவரை அங்கிருந்து கிளப்பினால்தான் ஆயிற்று எனத் தோன்றவே பிடிவாதமாக அவரைக் கிளப்பினார்.

மதனை அழைத்துக்கொண்டு வாசுதேவன் காருக்குச் செல்ல, “என்னைய்யா நினைச்சுட்டு இருக்கான் அவன்? அவ்வளவு பெரிய ஆள் ஆயிட்டானா? எனக்கே முடியாதுன்னு சொல்றான்.

“பேமண்ட் வேண்ணா டபிளா கொடுக்கறேன்னு சொல்லுய்யா... அவன் எனக்கு படம் பண்ணியாகணும். இல்ல... அவன் எவனுக்குமே படம் பண்ண முடியாத மாதிரி செஞ்சுடுவேன்” அவர் மிரட்டிவிட்டுச் செல்ல, வாசுதேவனுக்கு அத்தனை கவலையும், பயமும் ஒருங்கே எழுந்தது.

“சார், உங்க படம் பண்ணாமலா? எல்லாத்தையும் நான் பேசி சரி பண்றேன், நீங்க நாளைக்கே படத்தை கொடுத்து அனுப்புங்க” அவர் சொல்ல,

“இந்த மயி*** அப்போவே செய்திருக்க வேண்டியதுதானே... இப்போ என்னவோ இங்கிட்டு ஆட்***கிட்டு வர்றீர்” ஒரு சின்னப் பையனிடம் தோற்று திரும்பியதை அவரால் ஏற்க முடியவில்லை.

‘இதுக்கே எப்படி செய்யப் போறேன்னு தெரியலை... இதில் இவர் வேற’ மனதுக்குள் காய்ந்தார்.

மற்றபடி தான் நினைப்பதை அவரால் வெளியே காட்ட முடியாதே.

மதனைப் பொறுத்தவரை அவன் ஒரு தயாரிப்பாளன் மட்டுமல்ல, பைனான்சியரும் கூட. மூன்றாவது தலைமுறையாக இந்த சினிமா உலகில் நிலைத்து இருக்கின்றார்.

அவர் இன்றி அங்கே எதுவும் நடக்காது... இப்போது இயக்குனர்களிடமே கூட ‘விஷ்வா எடிட்டர் என்றால் படமே செய்ய வேண்டாம்’ என்றால் அவர் தேர்ந்தெடுக்கும் எந்த இயக்குநரும் கண்டிப்பாக விஷ்வாவை தேர்ந்தெடுக்கவே மாட்டார்கள்.

அவரிடம் பைனான்ஸ் வாங்கும் தயாரிப்பாளராக இருந்தாலும் இதே நிலைதான். படத்தை வெளியிடும் நேரத்தில், விஷ்வா அதில் பணியாற்றி இருந்தாள், அந்த படத்தை வெளியிட விடாமல் அவரால் தடுக்க முடியும்.

அப்படி இருக்கையில், விஷ்வா அவரை எதிர்ப்பது அத்தனை புத்திசாலித்தனம் கிடையாது என்பது அவரது எண்ணம்.

ஆனால் இதையெல்லாம் சொன்னால் கேட்கும் நிலையில் விஷ்வா கிடையாது என்பது அவரது கவலையை அதிகரிக்க, பதட்டத்தோடு அவனைப் பார்க்க விரைந்தார்.

‘விஷ்வாவிடம் விஷயத்தை சொல்ல முடியுமா?’ என்பதே அவருக்கு பெரும் பதட்டத்தை அளித்தது.
 

Infaa

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jan 7, 2022
915
81
93
Chennai
***தன் அறைக்குள், களைப்பாக நுழைந்த முதலாளியின் மகள், பூமிகாவை கைத்தாங்கலாக உள்ளே அழைத்துச் செல்ல முயன்றாள் அவளது தோழி தேன்மொழி.

அவள் தன்னை தாங்கிக் கொள்ள முயல, அவளை வேகமாக தடுத்தாள். “தேனு... வேண்டாம் விடு, நான் நல்லாத்தான் இருக்கேன்...” இப்படிச் சொன்னவளை மெல்லிய புன்னகையோடு ஏறிட முயன்றாலும் அது அவளால் முடியவில்லை.

பூமிகாவைப் பார்க்கையில் எல்லாம், உள்ளுக்குள் பிசையும் மனதை என்ன செய்து சமாதானம் செய்துவிட முடியுமாம்?

“நீ நல்லா இல்லைன்னு இப்போ யார் சொன்னா? உனக்கு ஹெல்ப் பண்ணத்தான நான் இருக்கேன், அதையே செய்யக் கூடாதுன்னு சொன்னா எப்படி?” அவள் எதிர் கேள்வி கேட்க அமைதியாகச் சென்று படுக்கையில் படுத்துக் கொண்டாள்.

‘டாக்டர் என்ன சொன்னாங்க பூமி?’ தோழியிடம் கேட்கத் துடித்த நாவை அடக்கியவள், அவளை வசதியாகப் படுக்க வைத்து, ஆக்ஸிஜன் மாஸ்க்கை அணியப் போனாள்.

“ம்ஹும்... இது வேண்டாம்... இது இல்லாம இருந்தாலாவது சீக்கிரம் போய்டுறனான்னு பார்ப்போம்” அவள் இயலாமையில் பேச, தேன்மொழியின் கண்களோ சட்டென கலங்கிப் போனது.

“அப்படி சொல்லாத பூமி... எனக்கு உன்னை விட்டா யார் இருக்கா?” தோழியின் அருகே அமர்ந்து, அவளது கரத்தை கெட்டியாக பற்றிக் கொண்டாள்.

அவள் பேசுவதைக் கேட்டவாறே அங்கே வந்தான் ப்ரதிக். பூமிகாவின் இரண்டாவது அண்ணன்.

அவனைப் பார்த்தவுடன், தேன்மொழி தோழியின் அருகே இருந்து எழுந்து விலகிச் செல்ல, அவனது பார்வையோ அவளைத்தான் தொடர்ந்தது.

‘இவளுக்கு யாரும் இல்லையாமா?’ அவன் மனதுக்குள் பல்லைக் கடிக்க, பூமிகா அவனையே நிதானமாக ஏறிட்டாள்.

“என்னண்ணா...?” பூமிகா அவனிடம் கேட்டு அவனைக் கலைக்க,

“ஒண்ணும் இல்லம்மா, சும்மா உன்னை பாத்துட்டு போகலாம்னு வந்தேன். நீ ரெஸ்ட் எடும்மா...” சொல்லிவிட்டு அவன் கிளம்ப முயல, வேகமாக அவனைத் தடுத்தாள்.

“அண்ணா....” அவளது அழைப்புக்கு அவன் நின்றுவிட,

“என்னம்மா... ஏதாவது வேணுமா?” அவள் அருகே வந்து அமர்ந்தான்.

“ம்... ஆமா... தேனுக்கு லைப்ரேரியில் ஏதோ ஒரு புக் வேணும்னு சொன்னா, அதைக் கொஞ்சம் எடுத்து தாயேன்...” அவள் கேட்க, தேன்மொழி வேகமாக அவள் அருகே வந்தாள்.

“இல்ல பூமி... நானே பாத்துக்கறேன்... ஆதர் பேர் எல்லாம் பாத்து எடுக்கணும்”.

“ஆமா, ஆமா... எனக்கெல்லாம் அதை படிக்கத் தெரியுமா? அவளையே போய் எடுத்துக்க சொல்லு” அவன் அடக்கப்பட்ட கோபத்தில் கத்த, தேன்மொழி அவன் பக்கமே திரும்பவில்லை.

“அண்ணா... வேண்ணா ஒண்ணு பண்ணேன்... இவளையே அழைச்சுட்டு போய் எடுத்து கொடு” அவள் சொல்ல, தேன்மொழி பதறினாள் என்றால், ப்ரதிக்கின் கண்கள் ஒளிர்ந்தது.

“ஐயோ... அதெல்லாம் எதுவும் வேண்டாம் பூமி, நானே பாத்துக்கறேன்” அவள் படபடக்க, அவனோ முறைத்தான்.

“ஏய்... உனக்கு என்னதான் பிரச்சனை? நானும் பாத்துட்டுதான் வர்றேன், நீ ரொம்ப பண்ற” அவன் அவளிடம் கத்த, இப்பொழுது அவனை நேர்கொண்ட பார்வை பார்த்தாள்.

“என்னன்னு உங்களுக்குத் தெரியாதா?” அவள் கேட்க, அப்படியே அடங்கிப் போனான்.

அதைப் பார்த்த பூமிகா, “அண்ணா... என்ன நடக்குது இங்கே?” அவள் கேட்க, பட்டென படுக்கையில் இருந்து எழுந்து கொண்டான்.

“நான் பிறகு வர்றேன்...” அவன் அங்கிருந்து செல்ல, பூமிகா, தேன்மொழியை கேள்வியாக ஏறிட்டாள்.

“என்ன தேனு? என்ன பிரச்சனை?” அவளிடம் கேட்க, மறுப்பாக தலை அசைத்தாள்.

“சொல்லிக்கிற மாதிரி எதுவும் இல்லை பூமி. நீ இதையெல்லாம் யோசிக்காதே, நிம்மதியா இரு” தோழியின் அருகில் அமர, அவளோ தன் பார்வையை மாற்றிக் கொள்ளவே இல்லை.

“அப்போ சொல்ல மாட்ட...”.

“சொல்லக் கூடாதுன்னு இல்ல பூமி. இது அவசியமே இல்லாததுன்னு சொல்றேன். மத்தபடி உன்கிட்டே நான் எதையாவது மறைச்சு இருக்கேனா?

“அதிகமா பேசாதே, யோசிக்காதே பூமி... மனசை ரிலாக்ஸா வச்சுக்கோ. உனக்கு குடிக்க சூடா ஏதாவது எடுத்து வரவா?” அருகே இருந்த பிளாஸ்கை கையில் எடுத்துக் கொண்டாள்.

“ஆமா, குடிக்க கொஞ்சம் தண்ணி வேணும்...” சொன்னவள் படுக்கையில் சாய்ந்து கொள்ள, மற்றவளோ கிளம்பினாள்.

பூமிகாவின் அறையில் இருந்து வெளியே வந்த உடனேயே... மனம் பாறாங்கல்லாக கனக்க, இமைகளை மூடி அப்படியே நின்றுவிட்டாள்.

அவள் அப்படி நிற்கவே, திடுமென தன் இமைகளில் நிழலாடுவது தெரிய, அது யாராக இருக்கும் என்பதும் சேர்த்தே புரிய மனதுக்குள் சலித்துக் கொண்டாள்.

சலிப்பு என்பதை விட, பயம் எனச் சொல்ல வேண்டுமோ? முன்னர் அவனைப் பார்த்து மட்டுமே பயந்தவள், இப்பொழுது தன்னைக் குறித்தே பயந்தாள்.

அதை தனக்குள் மறைத்தவாறு, இமைகளைத் திறந்தவள், அமைதியாக அங்கிருந்து செல்ல முயல, வேகமாக அவளைத் தடுத்தான்.

“உன் மனசில் நீ என்னதான் நினைச்சுட்டு இருக்க? எனக்கு என்ன பதில் சொல்லப் போற? எனக்கு இப்போவே தெரிஞ்சாகணும்” அவனது பிடிவாதம் கண்டு வெகுவாக பயந்தாள்.

“உங்களுக்கு வேண்டிய பதில்ன்னா அது என்கிட்டே இல்லை. என்னோட பதில்ன்னா, அதை நான் எப்போவோ சொல்லிட்டேன்” சொன்னவள் அங்கிருந்து செல்ல முயல, அவளது கரத்தைப் பிடித்து தடுத்தான்.

“என்னை தொட்டு பேசாதீங்கன்னு நான் ஏற்கனவே சொல்லி இருக்கேன்” அவள் சீற்றமாக உரைக்க,

“தொடறது மட்டும் இல்லை...” சொன்னவன், அவள் கன்னத்தில் அழுத்தமாக முத்தம் வைக்க, அதிர்ந்து விழித்தாள்.

அதிர்ந்து விழித்தவளின் கண்களில் நீர்மணிகள் திரள, வேகமாக அவளை விட்டு விலகி நின்றான்.

“அழாத...” உள்ளடக்கிய குரலில் அவன் அத்தனையாக அவளைக் கடிந்துகொள்ள, நீர்மணிகள் அவள் கன்னத்தில் இறங்கியது.

“நீங்க செய்யறது மிகப்பெரிய பாவம்... எனக்குன்னு கேக்க யாரும் இல்லைன்னுதானே இப்படியெல்லாம் பண்றீங்க?” அழுகையை அடக்க முடியாமல் திணறியவாறு அவள் நியாயம் கேட்க, தன் தலையை அழுத்தமாக கோதிக் கொண்டான்.

“நிஜமாவே என் மனசு உனக்குப் புரியலையா மொழி...?” அவன் இயலாமையில் சோர்ந்துபோய் கேட்க, அவனது ‘மொழி’ என்ற அழைப்பு உள்ளுக்குள் ஏற்படுத்திய பாதிப்பை முழுதாக மறைத்தவாறு அவனையே வெறித்தாள்.

“இல்ல... நீங்கதான் என் நிலையை மறந்துட்டு பேசறீங்க” அவள் குரல் அடைக்க சொல்ல, அவளது வேதனையை வாங்க முடியாத தவிப்பு அவனிடம்.

“உனக்கு என்னைப் பிடிக்கலையா? அப்படின்னா சொல்லிடு, நான் புரிஞ்சுப்பேன். சொல்லு.... சொல்லு...” அவன் பிடிவாதமாக நிற்க, வெளிவர மறுத்த குரலை சீர் செய்ய முயன்றாள்.

“எனக்குப் பிடிக்கும்...” அவள் சொல்ல, அவனது கண்கள் ஒளிர்ந்தது.

அதைப் பார்த்தவாறே, “உங்களை மட்டும் இல்லை... உங்க அண்ணா, அம்மா, அப்பா, அண்ணி, பூமி... எல்லாரையும் எனக்குப் பிடிக்கும். பூமி என் உயிர்” அவள் இதை சொல்லச் சொல்ல, அவனது முகம் களை இழந்து போனது.

“நீ மனுஷியா? இல்ல கல்லா? ச்சே...” அடக்கப்பட்ட குரலில் கத்தியவன், வேகமாக அங்கிருந்து விலகிச் சென்றான்.

அவன் அங்கிருந்து செல்லவே, வெடித்துக் கிளம்பிய அழுகையை அடக்கியவள், பூமிகாவுக்கு தண்ணீர் எடுத்துவர கீழே செல்ல, பூமிகாவின் தாய், பிரபா சொன்னதுதான் அவள் மனதுக்குள் நிழலாடியது.

‘ஒரு பொண்ண வீட்டுக்கு கூட்டி வர்றோம், நம்ம வீட்டிலேயும் ரெண்டு பசங்க இருக்காங்கன்னு ஞாபகம் வச்சுக்கோங்க. இதுக்கு மேல நான் எதையும் சொல்ல விரும்பலை’ ப்ரதிக் தன்னை நெருங்குகையில் எல்லாம், இந்த வார்த்தைகள் மட்டுமே அவள் காதுக்குள் ஒலித்து அவளைத் தெளிய வைத்துக் கொண்டிருந்தது.

அவள் கீழே இறங்கி வர, “நம்ம பொண்ணு இன்னும் எத்தனை நாள் நம்மளோட இருப்பா பிரபா?” பூமிகாவின் அப்பா நித்யானந்தத்தின் குரல் அவளது செவிகளைத் தீண்ட, அப்படியே நின்றுவிட்டாள்.

“என்னங்க இது? பூமி விஷயம் உங்களுக்குத் தெரியாததா? அவ இத்தனை வருஷம் நம்மளோட இருந்ததே கடவுள் நமக்கு கொடுத்த வரம் தான். அப்படி இருக்கும்போது...” மகளின் வாழ்நாட்கள் எண்ணப்படுகிறது என்பதை அவரால் சொல்ல முடியவில்லை.

“இதுக்குத்தான்.... தலைப்பாடா அடிச்சுகிட்டேன், மூணாவது குழந்தை வேண்டாம்ன்னு. எனக்கு பொண்ணு வேணுமே வேணும்னு பிடிவாதமா இருந்து பெக்க வச்சுட்டு, இப்போ இருவது வருஷமா சிலுவையை சுமக்க வேண்டி இருக்கு...” இப்படிச் சொன்ன மனைவியை சூடாக ஒரு பார்வை பார்த்தார்.

“நீ சொல்லி சொல்லியே என் பொண்ணு எனக்கு இல்லாமல் போகப் போறா. இன்னுமா உன் புலம்பல் நிக்கலை?” தன் குரல் மகளுக்கு கேட்டுவிடக் கூடாதே என்ற கவலையில் குரலடக்கி அவர் கத்த, பிரபாவின் பார்வையில் ஒரு அலட்சியமே தெரிந்தது.

“நான் சொல்லலன்னா மட்டும் நூறு வருஷம் வாழ்ந்துடுவாளா? இன்னும் ரெண்டோ மூணோ மாசம்ன்னு...” அவர் சொல்லிக் கொண்டே போக,

“வாயை மூடு நீ...” தன் கட்டுப்பாட்டையும் மீறி நித்யானந்தம் கத்தி இருக்க, பிரபா அசையவில்லை என்றாலும், இதைக் கேட்டுக் கொண்டிருந்த தேன்மொழி தன் அழுகையை அடக்க முடியாமல் கிச்சனுக்குள் சென்று புகுந்து கொண்டாள்.

தொடரும்........
 

Thani

Vaigai - Avid Readers (Novel Explorer)
Feb 2, 2023
60
28
18
Deutschland
என்ன அம்மா அவங்க, பெத்த பொண்ணு மேல் பாசம் கூடவா இல்லை 🤧
அசால்ட்டா சொல்லுறாங்க இன்னும் இரண்டோ மூணுமாசம் என்று 😡
பாசம் தான் இல்லை மனிதாபம் கூடவா இல்லை 😡
 
  • Like
Reactions: Infaa

Infaa

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jan 7, 2022
915
81
93
Chennai
என்ன அம்மா அவங்க, பெத்த பொண்ணு மேல் பாசம் கூடவா இல்லை 🤧
அசால்ட்டா சொல்லுறாங்க இன்னும் இரண்டோ மூணுமாசம் என்று 😡
பாசம் தான் இல்லை மனிதாபம் கூடவா இல்லை 😡

அவங்களுக்குள் வேறு ஏதாவது இருக்கலாம். நன்றி!