பகுதி – 22.
பூமிகாவும், ஆகாஷும் பெரியவர்கள் காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்கிக் கொள்ள, பிரபாவின் கண்களில் கண்ணீர் நிறைந்து கன்னத்தில் வழிந்தது. தன் மகளைக் கன்னம் தாங்கி, அவள் நெற்றியில் அழுத்தமாக முத்தம் வைக்க, பூமிகாவிடம் பெருத்த அமைதி.
நித்யானந்தம் மகளை மென்மையாக அணைத்து, அவனையும் தன் கைகளுக்குள் இழுத்து கட்டிக்கொள்ள, “சார்... போதும்...” பூமிகாவின் உடல்நிலையைக் கருதி அவரைத் தேக்கினான்.
“நாங்க இங்கே பக்கத்துல இருக்கறோம்ப்பா...” பூமிகா சொல்ல, அவர்களுக்கு தனிமை கொடுத்து அனுப்பினார்.
மகளது வாழ்க்கை விடிந்துவிடும், அவள் இன்னும் நூறு நாள் வாழ்ந்துவிடுவாள் என்பதெல்லாம் இல்லை, அவள் சாகும் வரைக்கும், அவளுக்கு பிடித்த விதத்தில் இருக்கட்டும்’ என்பது மட்டுமே அவரது எண்ணமாக இருந்தது.
கோவிலுக்கு வெளியே இருந்த குளக்கரையில் இருவரும் அமர, “என்ன இது?” அவன் கரத்தில் தான் கட்டிய கையிற்றை வருடியவாறு கேட்டாள்.
“நான் உன் பொண்டாட்டி ஆயிட்டேன்... வேற என்ன?” அவன் சொல்ல, அவளுக்கு மெல்லிய சிரிப்பு எட்டிப் பார்த்தது.
“என்னை உங்க மனசுக்குள்ள ஏத்திக்காதீங்க” அவள் சீரியசாக சொல்ல, அவன் அவள் முகம் பார்த்தான்.
“என்னைப்பத்தி கவலைப்படறியா? இதென்ன பூமி? நான் உனக்கு மட்டும்தான்... வேற எதையும் இப்போ யோசிக்காதே” அவன் சொல்ல, அவன் தோளில் தலை சாய்த்துக் கொண்டாள்.
“அப்படின்னா உங்களுக்கு என்னைப் புடிக்குமா?” அவள் கேட்க, அவள் தலையில் தன் கன்னம் தாங்கியவன்,
“நீ என்ன நினைக்கறியோ அதான்... புடிக்கும்ன்னு நினைச்சா புடிக்கும்... புடிக்காதுன்னு நினைச்சா புடிக்காது... ரொம்ப புடிக்கும்னு நினைச்சா ரொம்ப புடிக்கும்...” அவனது குரல் கனிந்து கிடக்க, அவளது இதயம் படபடத்தது.
கடமைக்கென செய்யும் செய்கையில், ஒரு உயிரோட்டமோ, அக்கறையோ நிச்சயம் இருக்காது. ஆனால்... அவன் தனக்கென ஒவ்வொன்றையும் செய்கையில், அதில் நேசமோ, பாசமோ இல்லை என அவளால் நினைக்க முடியுமா என்ன?
அதற்கு மேலே அவனிடம் எதையும் கேட்கவோ, அவனும் பேச முயலவோ இல்லை. அந்த அமைதியை அனுபவித்துக்கொண்டு அமர்ந்திருந்தார்கள். அவர்களை தூரத்தில் இருந்து பார்த்த அனைவரின் கண்களும் நிச்சயம் கலங்கி இருந்தது மட்டும் உண்மை.
சற்று நேரத்தில் வீட்டுக்கு வந்த ப்ரதிக்கும், தேன்மொழியும் செல்ல சீண்டலும், ப்ரதிக்கின் அடாவடியிலும் திளைக்க, அவர்களைப் பாராமல் பார்த்திருந்தாள் பூமிகா.
தன் தோழியின் முகத்தில் கவிழும் வெட்கமும், தவிப்பும், படபடப்பும்... அவள் கன்னங்கள் சிவக்கும் அழகும், அவள் கண்கள் தன்னவனைத் தேடி சுழலும் விதமும் என அவளைப் பார்க்கவே அத்தனை கவிதையாக இருந்தது.
முதலில் இப்பொழுது திருமணம் வேண்டாம் என மறுத்தவளை, “எனக்கு உன் கல்யாணத்தைப் பார்க்கணும்... கூடவே உன்னை பத்திரமா இவங்ககிட்டே ஒப்படைச்சுட்டு போனாத்தான் என்னால் நிம்மதியா சாகக் கூட முடியும்” என பூமிகா சொன்ன வார்த்தைகள், மறு பேச்சு பேசாமல் திருமணத்துக்கு சம்மதிக்க வைத்தது.
“நீங்க இன்னுமே ஹால்ல என்ன பண்றீங்க? அவங்க அவங்க ரூமுக்கு போங்க...” காலையில் சீக்கிரம் எழுந்து வேலை பார்த்திருந்த களைப்பில், பிரபா அனைவரையும் போகச் சொன்னார்.
ப்ரதிக் சற்று கலவரமாக தாயைப் பார்த்தவன், தன்னவளை கண்களால் ‘வா’ என அழைத்தான்.
‘ஐயோ... நான் மாட்டேன்...’ கண்களில் அதே கலவரத்தை தனதாக்கி, வேகமாக மறுப்பாக தலை அசைத்தாள்.
‘பிளீஸ்டி...’ இப்பொழுது அவன் கெஞ்ச, ‘ம்ஹும்...’ அழுத்தமான தலை அசைப்போடு,
“பூமி... வா... வந்து படு... ரொம்ப சோர்ந்து தெரியற” தோழியை கை பிடித்து எழுப்ப, அவள் இதழ்களிலோ குறும்பு புன்னகை.
“என்னை நான் பார்த்துக்கறேன்... நீ அண்ணாவை கவனி” சீண்டலாக சொல்ல, தோழியை போலியாக முறைத்தாள்.
“பூமி... சும்மா இரு...” அடிக்குரலில் அவளை அடக்கியவள், ப்ரதிக்கை திரும்பியும் பாராமல் அறைக்குச் செல்ல, அவன் அருகே இருந்த சோபாவை கோபமாக குத்தினான்.
“என்னடா... நீ இன்னும் போகல?” தாயின் குரலில் கலைந்தவன், அதற்கு மேலே அங்கே இருந்தால் வேலைக்கு ஆகாது என்பதால், தனக்கு ஒதுக்கப்பட்டிருந்த அறைக்குச் சென்றான்.
“ஏன் பிரபா...? அவங்களை விடேன்...” நித்யானந்தம் மனைவியிடம் மகனுக்காக பேச, அவரோ தன் தலையிலேயே அடித்துக் கொண்டார்.
“அவ என்ன ஓடியா போகப் போறா? இதுக்கெல்லாம் நேரம் காலம் பார்க்கறது இல்லையா? எல்லாம் எனக்குத் தெரியும், பேசாம இருங்க” அவரை அடக்க, இந்த திருமணம் நடக்கவே செய்யாதோ என பயந்தவர் ஆயிற்றே, எனவே மனைவியை மறுத்துப் பேசாமல் அமைதியாக சென்றுவிட்டார்.
சிவா ஏற்கனவே வேலைக்கு கிளம்பிச் சென்றிருக்க, காவேரியும் படுக்கப் போயிருந்தார்.
தங்கள் அறைக்கு வந்த தேன்மொழி, முதலில் பூமிகாவுக்கு உடை மாற்ற உதவி செய்ய, “இந்த ட்ரஸ் ரொம்ப வெயிட்டா இருக்கு இல்ல... கஷ்டமா இருந்ததா பூமி?” அவளிடம் கேட்க, அவளோ தன் கழுத்தில் கிடந்த ஆகாஷின் செயினை கரத்தால் வருடிக் கொண்டிருந்தாள்.
அவள் ஏதோ யோசனையிலும், லயிப்பிலும் இருக்கவே, தன் வாயை மூடிக் கொண்டவள், அவளுக்கு வேண்டியதைச் செய்ய, உடை மாற்றியவள், படுக்கையில் அமர்ந்து கொண்டாள்.
“பூமி... படுத்துக்கோ...” அவளது தோளை அழுத்தி படுக்க வைக்க முயல,
“நான் ரெஸ்ட் ரூம் போய்ட்டு வர்றேன்” அவள் எழுந்துகொள்ள, “உள்ளே லாக் போடாதே...” வழக்கமாக அவளிடம் சொல்லும் அதே டயலாக்கைச் சொல்ல, தோழியைப் பார்த்து புன்னகைத்தாள்.
“நான் ரொம்ப சுயநலவாதியோ தேனு?” சற்று கவலையாக அவள் கேட்க, தோழியின் கன்னத்தை பாசமாக வருடினாள்.
“அப்படி இருந்ததால்தான் எனக்குன்னு ஒரு குடும்பம் கிடைச்சிருக்கு. இல்லன்னா அனாதையா நின்னிருப்பேன்...” அவள் கண்கலங்கவே, தன்னையே கண்டித்துக் கொண்டாள்.
“சந்தோஷமா இருக்க வேண்டிய நாள், எதுக்கு தேனு கண்ணெல்லாம் கலங்கற?” அவளையும் கடிந்துகொள்ள,
“இது ஆனந்தக் கண்ணீர்... நீயும் கண்டபடி பேசாதே... உனக்கு சந்தோஷமா? எனக்கு வானம் அளவுக்கு சந்தோஷமா இருக்கு பூமி” சொன்னவள் தோழியின் கன்னத்தில் இதழ் பதிக்க, அவளோ சிரித்துக் கொண்டாள்.
“இந்த முத்தத்துக்கு எல்லாம் சொந்தக்காரன், உரிமைக்காரன் ஒருத்தன் வந்துட்டான். இனிமேல் நீ அவனுக்குத்தான் இதெல்லாம் கொடுக்கணும்” குறும்பு புன்னகையில் அவள் சொல்ல, தேன்மொழியின் முகத்தில் சட்டென ஒரு செம்மை பரவியது.
“இதென்ன காலியாகற கடைச்சரக்கா? அதெல்லாம் நிறையவே ஸ்டாக் இருக்கு... இது உனக்கானது... ஒரு வேளை...” எதையோ சொல்லத் துவங்கியவள், சில தனிப்பட்ட கேலிகள் அவளை படபடக்கச் செய்தால், அதன் எதிர்வினைகளை எண்ணி சட்டென வாயை மூடிக் கொண்டாள்.
“நீ போய்ட்டு வா பூமி...” அவள் சொல்லவே, தோழி சொல்லாமல் விட்டது அவளுக்குப் புரிய, அவள் கரத்தை தட்டிக் கொடுத்துவிட்டு சென்றாள்.
உள்ளே நுழைந்தவள், அந்த வெஸ்ட்டர்ன் டாய்லெட்டின்மேல் அமர்ந்தவள், அந்த செயினை எடுத்து, அதில் இதழ் பதித்தாள்.
“ஆகாஷ்...” மெதுவாக சொல்லிப் பார்த்தவளுக்கு, அவன் அருகே இருக்க வேண்டும்போல் இருந்தது.
அதே நேரம்... தேன்மொழியிடம் இருக்கும் அலைபேசி அதிர்ந்து அவளது கவனத்தை திருப்ப, முந்தானையில் இருந்த பின்னை அகற்றியவளின் கவனம் அதில் செல்லவே, “மொழி... மொழி...” என ப்ரதிக் விடாமல் செய்தி அனுப்ப, வேகமாக அதை கையில் எடுத்துக் கொண்டாள்.
“ம்...” அவள் ஒற்றை எழுத்தை அவனுக்கு பதிலாக அனுப்ப, பல முத்த ஸ்மைலிகள் படை எடுத்தது.
“என்ன பண்ற?” கூடவே செய்தியும் வர,
“படுக்கப் போறேன்...” அவனுக்கு தகவல் கொடுத்தாள்.
“பூமி?” அவன் கேட்க,
“வாஷ்ரூம் போயிருக்கா...” அவள் செய்தி அனுப்ப, அதற்கு எந்தவிதமான பதிலும் இருக்கவில்லை.
தோளைக் குலுகியவள், புடவையில் ஆங்காங்கே குத்தியிருந்த ‘பின்’களை எல்லாம் அகற்ற, தங்கள் அறைக்கதவு திடுமென திறந்து மூடும் ஓசையில் திடுக்கிட்டு திரும்பியவள், அங்கே ப்ரதிக்கை நிச்சயம் எதிர்பார்க்கவே இல்லை.
முந்தானையை எடுத்து நலுங்காமல் படுக்கையில் விட்டிருந்தவள், கையில் இருந்த மொத்த பின்’னையும் கீழே வைத்துவிட்டு, முந்தானையை எடுக்கும் முன்னர், கண்ணிமைக்கும் நேரத்தில் அவளை நெருங்கியவன், அவளை இழுத்து அணைத்திருந்தான்.
“ஹையோ... என்னங்க... இங்கே என்ன பண்றீங்க?” பதறிய அவளது இதழ்கள், அவன் இதழ்களுக்குள் இப்பொழுது அலறிக் கொண்டிருக்க, அவனோ அவள் இதழ்களை மொத்தமாக கவ்வி சுவைத்துக் கொண்டிருந்தான்.
“சத்தியமா முடியலை மொழி...” முத்தத்துக்கு இடைவெளி விட்டு பிதற்றியவன், மீண்டுமாக அவளை முத்தமிட, மொத்தமாக தடுமாறிப் போனாள்.
“பூமி இருக்கா...” சின்னக் குரலில் அவனைத் தேக்க முயல,
“அதெல்லாம் அவ தப்பா நினைக்க மாட்டா... சந்தோஷம்தான் படுவா...” சொன்னவன், அவள் கன்னத்தில் முத்தமிட்டு, கள்வெறி கொண்டு, அவள் கழுத்தில் இறங்கி, அவள் தேகத்தில் முகம் பதிக்க, பதறினாள்.
அதுவும் அவன் இதழ்பதித்து, பல்த்தடம் வேறு பதிக்க, “ம்மா...” அவன் சிகைக்குள் கை கோர்த்து நெரித்தவள், அவனை விலக்க முயன்றாள். பெரும் பசியில் இருப்பவனிடம் பிரியாணி பொட்டலத்தை கொடுத்துவிட்டு, அதைப் பிரிக்காதே எனச் சொன்னால் முடியுமா என்ன?
அவனோ இன்னும் அழுத்தமாக அவளில் பதிய, “முத்தத்தோட விடுவீங்கன்னு பாத்தா, இதென்ன...” அவனது அடாவடி தாங்க முடியாமல் திணறினாள்.
“மொழி... இப்படியே இருந்தேன்னா நைட்டுக்குள்ள ஒரு வழி ஆயிடுவேன். பிளீஸ் டி...” தன் உணர்வுகளை அவளிடம் வெளிப்படுத்தி அவன் கெஞ்ச, அவளுக்கு பாவமாக இருந்தாலும், தோழியை அறைக்குள் வைத்துக்கொண்டு அவனோடு இருக்க முடியுமா என்ன?
“ஒரு பத்து நிமிஷம் நீங்க உங்க ரூம்ல இருங்க, நான் அங்கே வர்றேன்... பிளீஸ்...” அவள் அவனை சமாதானப்படுத்த, அரை மனதாக அவளை விட்டு விலகினான்.