பகுதி – 28.
பூமிகாவுக்கு அன்று பிறந்தநாள்... இதுவரைக்கும் ஒரு பிறந்தநாளைக் கூட அவள் சிறப்பாகவோ, ஸ்பெஷலாகவோ செலவழித்தது இல்லை. அதற்குரிய மனநிலையில் அவள் இருந்தது இல்லை என்பது ஒரு காரணம் என்றால், உடல்நிலை அதற்கு ஒத்துழைக்காது என்பதுதான் மிகப்பெரிய காரணம்.
இந்த கொண்டாட்டங்கள் எல்லாம் அவளது இதயத்துக்கு அழுத்தம் கொடுக்கும் என்பதால், எதையும் அவர்கள் செய்தது இல்லை.
ஆனால் இந்த பிறந்தநாளை அவர்கள் கொண்டாடியே ஆகவேண்டும் என்ற நிலையில் அவர்கள் இருக்க, அவர்களைத் தடுக்கும் நிலையில் அவள் இருக்கவில்லை.
நேற்று காலையில் அவளது உடல்நிலையை பரிசோதித்த வீட்டு மருத்துவர், அவளது இதயம் துடிக்கவே தயங்குவதாக சொல்லி இருக்க, எந்த நேரமும் அவளை மருத்துவமனையில் சேர்க்கும் நிலைமையில்தான் அவர்கள் இருந்தார்கள்.
இதுவே சென்னையில் இருந்த பூமிகாவாக இருந்திருந்தால், படுக்கையோடு படுக்கையாக எப்பொழுதோ மாறி இருப்பாள். இப்போதைய அவளது இந்த சின்ன நடமாட்டத்துக்கும், அவளது உச்சபட்ச வில் பவர்தான் காரணம் என்பதுதான் இங்கே கவனிக்கப்பட வேண்டியதே.
“இப்போ நாம வெளியே போறோம்... வர்றியா?” ஆகாஷ் கேட்டு நிற்கையில், அவள் கண்கள் ஒளிர்வதும், அவன் கழுத்தை கட்டிக்கொண்டு கங்காரு குட்டியாக மாறுவதும் காண ஆச்சரியமாக இருந்தது.
அன்று காலையில் அவள் கண் விழிக்கையில் நேரம் ஒன்பதைக் கடந்திருந்தது. ‘அன்று மாலை வரைக்கும் கேக் கட்டிங்கை தள்ளி வைக்கும் நேரம் கூட அவர்களுக்கு இல்லை’ என மருத்துவர் சொல்லி இருக்க, காலையிலேயே அதை வைத்துவிட முடிவெடுத்தார்கள்.
“குட் மார்னிங் பூமி... ஹேப்பி பெர்த்டே” அவளிடம் சிறு அசைவு தெரியவே, அவளோடு ஒட்டிக்கொண்டு படுத்திருந்த ஆகாஷ், அவள் காதுக்குள் சொல்ல, அவளது உறக்கம் பறந்தோடிப் போனது.
சொல்லப்போனால் அன்று இரவு அவள் உறங்கவே விடியற்காலம் ஆகி இருந்தது. மூச்சுக்கு திணறிக்கொண்டு இருந்தவளால் எப்படி உறங்க முடியும்? அவன்தான் தன் நெஞ்சில் அவளைப் போட்டுக்கொண்டு, வருடிக் கொண்டே அமர்ந்திருந்தான்.
அவனுக்குமே உறக்கமும், விழிப்பும் அல்லாத இரவாகத்தான் அது கடந்திருந்தது.
“தேங்க்ஸ்... நிஜமாவே இது சந்தோஷமான பிறந்தநாள் தான்...” அவள் சொல்ல, அவள் நெற்றியில் அழுத்தமாக இதழ் ஒற்றினான்.
“கீழே போலாமா?” அவன் கேட்க, மறுப்பாக தலை அசைத்தவள், அவனை இறுக்கினாள்.
“ம்ஹும்... இப்படியே இருந்து போகணும்...” தன் நேரம் நெருங்க நெருங்க, அவளுக்குள் பெரும் கலவரம்.
“போகலாம்... போகலாம்... இப்போ அவங்களுக்காக, ஒரு பத்து நிமிஷம்...” அவன் கெஞ்சலாக கேட்க, அவளிடம் இருந்தது முழு மறுப்பு மட்டுமே.
அவனோடு வாகாக ஒட்டிக் கொண்டவள், “இங்கேயே கேக் கட் பண்ணலாம், கொண்டு வரச் சொல்லுங்க” அவள் கேட்க, அவனால் மறுக்க முடியவில்லை.
‘எழணும், குளிக்கணும், ட்ரஸ் மாத்தணும்...’ இதையெல்லாம் சொல்ல ஆசைப்பட்டாலும், அவளால் முடியவே இல்லை என்கையில், பிடிவாதமாக என்ன செய்யவாம்?
“சரி, பிரஷ் பண்ணு... நான் கீழே தகவல் சொல்றேன்...” அவளுக்குத் தேவையானதை எடுத்து கொண்டு வர, அந்த பிரஷை பிடிக்கும் தெம்பு கூட அவளுக்கு இல்லை.
அதே நேரம்... வெளியே கதவை மெல்லியதாக தட்டும் ஓசை கேட்கவே, “என் எனிமிதான்னு நினைக்கறேன்...” சொன்னவன், வேகமாக ஒரு சட்டையை எடுத்து அணிந்துகொண்டு கதவைத் திறக்கப் போனான்.
அவன் கதவைத் திறக்கையில், அவனது நினைப்பை பொய்யாக்காமல் அங்கே தேன்மொழியே நிற்க, “பூமி...?” கேள்வியாக இழுத்து நிறுத்தினாள்.
“உள்ளே வா...” அவன் அழைக்க,
“இல்ல... நான் இங்கேயே இருக்கறேன்... அவ எழுந்துட்டாளா? எப்படி இருக்கா?” இறுதி கேள்வியை குரலைத் தாழ்த்தி கேட்க, இமைகளைத் திறந்து மூடினான்.
“கேக்கை இங்கேயே கட் பண்ணிடலாமா? அவளை அலைக்க வேண்டாம்...” அவன் சொல்ல, இப்பொழுது அவள் தயங்கிக்கொண்டு வெளியே நிற்கவில்லை.
அவள் வேகமாக உள்ளே வர, பூமிகா சோர்ந்துபோய் படுத்திருந்தாள். “பூமி...” அவள் அருகே இருந்த பிரஷை கையில் எடுத்துக் கொண்டவள் அழைக்க, மெதுவாக கண் திறந்தாள்.
அவளது கரத்தில் இருந்த கவரைப் பார்த்தவள், ‘இது என்ன?’ அவளிடம் பார்வையில் வினவ,
“உன்னோட பிறந்தநாள் ட்ரஸ்...” சொன்னவள், அதை அந்த கவருக்குள் இருந்து எடுக்க, ஒரு பிரம்மாண்டமான நெட்டட் கவுன்... அடர் நீல நிறத்தில், வெளியே வெள்ளை நிற பூக்கள் வெய்த, வலை வேயப்பட்டிருக்க, உடை அத்தனை அழகாக இருந்தது.
அதைப் பார்க்கவே கொள்ளை அழகாக இருக்க, அதை அணியும் ஆசை இருந்தாலும், எழுந்து அமரவே தெம்பு இல்லை என்கையில், அதை அணிவதற்குள் தன் ஆவி போய்விடும் எனத் தோன்ற, “இல்ல, வேண்டாம்...” வேகமாக மறுத்தாள்.
“ஏன் வேண்டாம்? ரொம்ப அழகா இருக்கு பூமி, நான் ஹெல்ப் பண்றேன்...” அவள் சொல்ல,
‘சில நாட்களாக நீதானே செய்கிறாய்...’ என கண்களால் சொல்ல, அவள் அருகே அமர்ந்தாள்.
“பிடிவாதம் பிடிக்காத பூமி...” அவள் கெஞ்ச, பூமி பிடிவாதமாக இருந்தாள்.
“இதென்ன வெள்ளை கலர் ட்ரஸ்ஸா?” அவன் கேட்க,
‘இவர் ஆரம்பிச்சுட்டார்...’ பூமிகா சிரிப்பாக பார்த்திருக்க, தேன்மொழி போலியாக முறைத்தாள்.
“இது வெள்ளையா?” தேன்மொழி சிலிர்த்துக்கொண்டு கேள்வி கேட்க,
“ஓ... மஞ்சளா?” அவன் அடுத்த கலருக்கு தாவ, பூமிகா அவன் இன்னும் எந்த கலரை எல்லாம் சொல்வானோ? என்பதுபோல் ஒரு பார்வை பார்த்தாள்.
“எதே... எல்லோவா?” தேன்மொழி அதிர,
“தேனு...” அழைத்த பூமி, மறுப்பாக தலை அசைக்கவே, அவன் விளையாடுவதாக நினைத்து அமைதியானாள்.
“என்ன இது? பூமிக்கா?” அவளிடம் கேட்க,
“ஆமா... என் பிறந்தநாள் ட்ரஸ்ஸாம்... நல்லா இருக்கா?” அவனிடம் கேட்டாள்.
‘இது எதுக்கு?’ என ஒரு பார்வை பார்த்தவன்... தேன்மொழியின் கண்களில் கெஞ்சலைக் காணவே, அந்த கேள்வியை தனக்குள் புதைத்தான்.
“கேக்கை இங்கேயே எடுத்துட்டு வாங்க... வெளியே வச்சு கட் பண்ணிடலாம்” மறுக்கவே முடியாத குரலில் அவன் சொல்ல, அமைதியாக கேட்டுக் கொண்டாள்.
“இவளை ரெடி பண்ணணுமே...” தேன்மொழி கேட்க,
“அதை நான் பார்த்துக்கறேன்... ஒரு மணி நேரத்தில் எல்லாரும் இங்கே வாங்க. கொஞ்சம் ஹாட் வாட்டர் பிளீஸ்” அவன் சொல்ல, உடையை அங்கேயே வைத்துவிட்டு அங்கிருந்து அகன்றாள்.
“சரி, நாம ப்ரஷ் பண்ணுவோமா?” கேட்டவன், அவளுக்கு பல் துலக்கிவிட அருகே அமர்ந்தான். அவனது அனைத்து செய்கைகளுக்கும் அமைதியாக ஒத்துழைத்தாள்.
அவளுக்கு பல் துலக்கி முடிக்கையில், ப்ரதிக் ஒரு பக்கெட்டில் வெந்நீரும், டவ்வலையும் கொண்டுவர, தேன்மொழி அவன் பின்னால் நின்றிருந்தாள்.
“ஓகே... நான் வெளியே வெயிட் பண்றேன்...” சொன்னவன், ப்ரதிக்கோடு வெளியே காத்திருக்க, தேன்மொழி அறைக்குள் வந்தாள்.
தேன்மொழியின் வேலையையும் தானே செய்துவிட அவனுக்கு மனம் பரபரத்தாலும், சில செய்கைகள் பேராபத்து என்கையில் கொஞ்சம் ஒதுங்கிக் கொண்டான். அவன் வெளியே வரவே, பிரதிக் அவன் கரத்தில் ஒரு செய்தித்தாளை கொடுத்தான்.
“இதை எதுக்கு என்கிட்டே கொடுக்கறீங்க?” எனக் கேட்டு அவன் முகம் பார்க்க, ப்ரதிக் ஒரு அர்த்தமுள்ள புன்னகையைக் கொடுத்தவன் அமைதியாக வெளியே கிடந்த படுக்கையில் சென்று அமர்ந்தான்.
அவன் அவ்வாறு செய்யவே, அசுவாரசியமாக அந்த செய்தித் தாளில் பார்வையைப் பதித்த ஆகாஷ் திடுக்கிட்டு போனான். ‘பிரபல சினிமா தயாரிப்பாளரும், மறைந்த நிக்கி மந்தனாவின் தகப்பனுமான வேதாந்த் மாரடைப்பின் காரணமாக மருத்துவமனையில் அனுமதி’ என்ற கொட்டை வாசகத்தில் அந்த கட்டுரை இடம் பெற்றிருந்தது.
மகளின் இறப்பை தாங்க முடியாததால் அவரது உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாகவே இருப்பதாகச் சொல்ல, அவன் இதழ்களில் ஒரு விரக்திப் புன்னகை. ஆனாலும் அவனால் மகிழ எல்லாம் முடியவில்லை.
கூடவே நடிகை ‘நிக்கி’யின் இறுதி புகைப்படம் என அவர்கள் ஒரு புகைப்படத்தை வெளியிட்டு இருக்க, பார்த்தவனுக்கு தன் கண்களை நம்பவே முடியவில்லை.
அவள் போட்டிருந்த ஸ்டீராய்ட் மருந்துகளின் பக்க விளைவின் காரணமாக அவளது உடல் அடையாளமே தெரியாமல் ஒரு மாதிரி பெருத்துப் போயிருந்தது. அதன் கீழே அவள் பயன்படுத்திய மருந்துகள், அதன் பக்க விளைவுகள் என பக்கம் பக்கமாக விவரித்திருக்க, அவனால் படிக்க முடியவில்லை.
‘இது அவ என்றால்... நியூஸ் சேனலில் காட்டிய அவளது உடல் வேறா?’ எண்ணியவனுக்கு வேதாந்தின் நினைவு வந்தது. ‘அவன் எதையும் செய்ய வல்லவன் தான்’ கசப்பாக எண்ணிக் கொண்டான்.
‘கடைசியா பெத்த பொண்ணை கௌரவமா தகனம் பண்ணக் கூட உன்னால் முடியலை இல்ல?’ அந்த நினைப்பால் சந்தோசம் கொள்ளவும் இல்லை.
சாதாரணமாக கடக்க முயன்றாலும் முடியவில்லை. ஆயிரம் இருந்தாலும் அவனும் ஊனும், உயிரும், உணர்வும் கொண்ட மனிதன் தானே. அவன் ஒன்றும் ஞானியோ, புத்தனோ, முற்றும் துறந்த முனிவனோ இல்லைதானே.
(இந்த இடத்தில் ஆகாஷ் யார் என உங்களுக்கு எல்லாம் சந்தேகம் வந்திருக்கும் என நினைக்கிறேன்).
‘எல்லா ஆட்டமும்...’ வலியும், வேதனையுமாக எண்ணியவன் அந்த இடத்தில் தன் நினைப்பை நிறுத்தினான். ப்ரதிக் எழுந்து வந்து அவன் தோளைத் தொட்டு அழுத்த, சட்டென தன்னை மீட்டுக் கொண்டான்.
“இதை எதுக்கு என்கிட்டே கொடுத்தீங்க?” கேள்வியாக அவனைப் பார்த்தான். அவனது அந்த கேள்விக்கு ப்ரதிக் எந்தவிதமான பதிலையும் சொல்லவில்லை. ஆனால் அவன் பார்வையில் என்னவோ இருந்தது.
அதை ஆகாஷ் ஆராய முயல, “இல்ல... சினிமா நியூஸ் என்றால் நமக்கு எல்லாம் கொஞ்சம் சுவாரசியமா இருக்குமே அதான். அது மட்டும் இல்லை, திரையில் இந்த நிக்கியை நான் ரசிச்சு இருக்கேன். அதனால் இந்த செய்தியைப் படிக்க எனக்கு ஒரு ஆர்வம்னு வச்சுக்கோங்களேன்” ப்ரதிக் சொல்ல, ஆகாஷ் அதை நம்பவில்லை.
அவன் நம்பவில்லை என்றாலும், அவனிடம் அதைப்பற்றி கேட்டு, மேலே துருவவும் அவன் விரும்பவில்லை.
“எனக்கு இதில் எல்லாம் விருப்பம் இல்லை” ஆகாஷ் முடித்துவிட, ப்ரதிக் தோளைக் குலுக்கிக் கொண்டான். அங்கே அவர்களுக்குள் ஒரு கனமான அமைதி நிலவ, ப்ரதிக் ஆகாஷின் அருகே அமர்ந்து கொண்டான். ஆகாஷிடமோ அப்படி ஒரு அமைதி நிலவியது. அவன் மனதுக்குள் இப்பொழுது பூமி மட்டுமே நிறைந்து இருந்தாள்.
“அவங்க என்ன பண்றாங்கன்னு தெரியலையே... நேரம் வேற ஆகுது” ஆகாஷ் பிரதிக்கிடம் கேட்டான்.
“வருவாங்க...” அவன் பதில் கொடுக்க,
அறைக்குள்ளோ....
“தேனு... இதெல்லாம் வேண்டாமே...” சோர்வாகவே சொன்னாள்.
“கொஞ்ச நேரம் பூமி... நான் என்னவோ எனக்கு இந்த வேலை இனிமேல் கிடைக்காதுன்னு நினைச்சேன்...” அவள் கண்ணை சிமிட்ட, அந்த நேரத்திலும் பூமிகா சிறு வெட்க புன்னகை காட்டினாள்.