• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

வண்ண நிழல்கள் - 3.

Infaa

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jan 7, 2022
915
81
93
Chennai
பகுதி – 3.

கிச்சனுக்குள் தேன்மொழி தண்ணீரை சுட வைக்க, அவள் நினைவுகளோ பூமிகாவையே சுற்றி வந்தது.

‘பூமிகா’ நித்யானந்தம், பிரபா இவர்களின் ஒரே மகள். மூத்தவன், சஞ்சித்துக்கும், இளையவன் ப்ரதிக்குக்கும் பிறகு, தனக்கு இன்னொரு குழந்தையே வேண்டாம் என முடிவெடுத்த பிரபாவை, பிடிவாதமாக பெண் குழந்தை வேண்டும் என சாதித்துக் கொண்டார் நித்யானந்தம்.

அவரோடு கூட அவனது தாய் தெய்வாவுக்கும் அந்த பிடிவாதம் இருந்தது என்பதால், பிரபாவால் எதுவும் செய்ய முடியாமல் போனது.

கருவில் இருக்கும் குழந்தை ‘பெண்’ எனத் தெரிந்தது முதலே, நித்யானந்தத்தை கையில் பிடிக்க முடியவில்லை.

அவர்களது குடும்பத்தொழிலான ஷூ கம்பெனி சற்று தோய்வில் சென்றுகொண்டிருக்க, மகள் பிறந்த நேரம், வெளிநாட்டு ஆர்டர் ஒன்று எதிர்பாராமல் கிடைக்க, அவரது தொழில் அசுர வளர்ச்சியைக் கண்டது.

ஒரு ஷிப்ட் நடந்த ஃபேக்டரி மூன்று ஷிப்ட் நிற்காமல் வேலை நடக்க, மகள் பிறந்த சேதியை கொண்டாட ஓடி வந்தவருக்கு இடியென ஒரு சேதி சொல்லப் பட்டது.

பிறந்த குழந்தையின் உடல் சில நிமிடங்களிலேயே நீலம் பூக்க, குழந்தையை தூக்கிக்கொண்டு குழந்தைகள் நல மருத்துவரிடம் ஓடினார்கள்.

உடனடியாக செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டு, சில பல சோதனைகளின் முடிவில், குழந்தையின் இதயம் முழுதாக வளர்ச்சியடையவில்லை என்ற உண்மையையையும், அதன் வால்வுகள் கூட சுருங்கிப் போயிருப்பதாகவும் சொல்ல, நிலை குலைந்து போனார்.

“ஏதாவது செய்ங்க டாக்டர்...” நித்யானந்தம் கதறினால், பிரபா ஒரு இறுக்கத்துக்குப் போயிருந்தார். அவள் மாமியாரையும், கணவனையும் பார்த்த பார்வையில் சிறிதும் மரியாதை இருக்கவில்லை.

“கொஞ்சம் பொறுமையா இருங்க, முதல்கட்ட சோதனையில் நமக்கு இவ்வளவுதான் தெரிய வந்திருக்கு. அடுத்த கட்ட பரிசோதனையோட முடிவுகளை வச்சுத்தான் நாம எதையும் சொல்ல முடியும்” சொன்னவர், ஸ்பெஷலிஸ்ட்க்கு பரிந்துரைக்க, குழந்தையை நித்யானந்தம் தான் தூக்கிக்கொண்டு ஓடினார்.

அடுத்து வந்த நாட்களில் குழந்தையின் பரிசோதனைகள் துவங்க, எத்தனையோ விதமான சோதனைகள், சில பல ஒப்பீனியன்கள் என சென்றும் நித்யானந்தம் மகிழும் விதமாக யாரும் எதையும் சொல்லவில்லை.

“குழந்தையோட இதயம் எந்தவிதமான சிகிச்சைக்கும் தாங்கும் நிலையில் இல்லை. அதுவும் குறிப்பா, அவளோட இதயம் சாதாரண வளர்ச்சியில் இல்லாமல் போனதே நமக்கு பெரிய குறை.

“இப்போதைக்கு அவளோட உடல் இப்படி நீலம் பாய்வதை தடுக்க வேண்ணா, இதய வால்வுகளை மாற்றலாம். அதுக்கும் அதிகபட்சமா பத்து வருடம்தான் கேரண்டி.

“அதுக்கும் மேல, அவளோட ஹார்ட் இயங்கற நிலையில் இருந்தா மட்டுமே நாம அவ மேலே கை வைக்க முடியும். அப்படி இல்லன்னா... அந்த இதயம் எப்போ நிக்குதோ...” அவர் சொல்லிக் கொண்டே போக,

“போதும் டாக்டர்... என் பொண்ணுக்கு எதுவும் ஆகாது... நான் ஆக விட மாட்டேன்” நித்யானந்தம் தன் நெஞ்சோடு குழந்தையை இறுக்கிக் கொள்ள, அவர் கைகளில் நெளிந்தாள்.

ஒரு மாதத்துக்கு உள்ளாகவே அந்த இதய வால்வு அறுவை சிகிச்சை நடக்க, அவளது உடல் நீலம் பாய்வது நின்று போனது.

ஆனாலும் அவளிடம் யாரும் அதிர்ந்து பேசக் கூடாது, அவளுக்கு சிறு அதிர்ச்சி கூட அளிக்கக் கூடாது என ஏகப்பட்ட கட்டுப்பாடுகள்.

கொழுப்பற்ற சத்தான உணவுகள், திட உணவு அவள் உண்ணத் துவங்க வேண்டிய நேரத்தில், அவள் அதைச் செய்யாமல் போக, நீராகாரம், அதுவும் பல வித ஊட்டச்சத்துக்குள் நிறைந்ததாக இருக்க வேண்டும் என பார்த்து பார்த்து செய்தார்.

ஐந்து நட்சத்திர ஹோட்டல் செஃப் ஒருவரை வேலைக்கு அமர்த்தி, மகளுக்கு தேவையான உணவுகளை கொடுக்கச் செய்தார்.

உடல் எடை போட்டுவிடக் கூடாது, கொழுப்பு சேரக் கூடாது, ஆரோக்கியமும் முக்கியம் என நித்யானந்தம் செய்த முயற்சியின் பலனோ என்னவோ, பூமிகா ஒரு நார்மல் குழந்தையாகவே வெளிப் பார்வைக்கு இருந்தாள்.

உடல் உழைப்பில் சிறிதாக ஓடினால் கூட மூச்சு வாங்க மயக்கம்போட்டு விழுந்து, நீலம் பாய்ந்துவிடும் அவளது தேகம். பள்ளி செல்லும் வயதில், சரியாக அவளை பள்ளிக்கு அனுப்பினாலும், அவள் படிக்க வேண்டும் என்றோ, மதிப்பெண் வாங்க வேண்டும் என்றோ அவர்கள் விரும்பியதே இல்லை.

இவ்வளவுதூரம் அவளைப் பார்த்தும், இரண்டாவது படிக்கையில், உடம்பில் நீலம் பூத்து அவள் மயக்கம் போட்டு விழ, உடனடியாக ஆம்புலன்சில் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார்கள்.

அடுத்தகட்ட பரிசோதனையில், ‘அவளது ரத்தத்தை, அவளது இதயத்தால் பம்ப் செய்ய முடியவில்லை’ என்ற உண்மை தெரியவர, இடிந்து போனார்.

“இதென்ன டாக்டர் திடீர்ன்னு இப்படி சொல்றீங்க?” அவர் மருத்துவரிடம் கவலையாக வினவ,

“அவளுக்கு கொடுத்த பத்து வருஷத்தில் ஏழு வருஷம் முடிஞ்சு போச்சு. இன்னும் மூணு வருஷம் வேண்ணா நாம எதுவும் செய்யலாம்...” உண்மை இதுதான் என அவர் சொல்ல, நித்யானந்தத்தால் அதை ஏற்க முடியவில்லை.

“இதுக்கு வேற வழியே இல்லையா டாக்டர்?” அவர் கேட்க,

“நம்மளோட ப்ளட் எல்லாமே சில உறைநிலையில்தான் உள்ளுக்குள் ஓடிகிட்டே இருக்கும். உங்களுக்கு புரியற மாதிரி சொல்லணும்ன்னா, தண்ணி ரொம்ப லைட்டா இருக்கும், பால் ஒரு திக்னஸ்ல இருக்கும், அதுவே நம்ம ப்ளட் இன்னொரு திக்னஸ்ல இருக்கும்.

“சில மாத்திரை மூலம், ப்ளட்டோட கன்சிஸ்ட்டன்சியை நம்மளால் குறைக்க முடியும். அப்படி நாம செய்தா, ஹார்ட்டோட சின்ன இயக்கத்துக்கே ப்ளட் பாடிக்குள்ளே சர்க்குலேட் ஆகும்.

“இதில் இருக்கும் சிக்கல் என்னன்னா, நாம கொடுக்கற அந்த மாத்திரையால், ரத்தத்தோட உறையிற தன்மை ரொம்ப கம்மியாயிடும். அதாவது சாதாரணமா நமக்கு அடிபட்டா, ரத்த வர்றது சில நொடியில் நின்னு, உறைஞ்சு போய்டும்.

“ஆனா இந்த மாத்திரை சாப்ட்டா, அவளுக்கு ஏதாவது அடிபட்டா, ரத்தம் உறையாமல், நிக்காமல் வெளியேறிட்டே இருக்கும். அது ரொம்ப ஆபத்தா கூட முடியலாம்.

“பெரியவங்கன்னா, அதுக்கு ஏற்ற மாதிரி பாத்து நடந்துப்பாங்க. அதுவே குழந்தைங்க கிட்டே நாம அதை எதிர்பாக்க முடியாது. அது பெரிய ரிஸ்க்” அவர் சொல்ல, நித்யானந்தம் முகமோ கொஞ்சம் தெளிந்தது.

“நீங்க எந்த மருந்தை என் மகளுக்கு கொடுங்க டாக்டர்... நான் அவளைப் பாத்துக்கறேன்” அவர் சொல்ல,

“நீங்க பாத்துப்பீங்கன்னு எனக்குத் தெரியும் நித்யானந்தம். மகளுக்காக ஒரு ஆம்புலன்ஸ், அதில் ஒரு நர்ஸ், வீட்டிலேயே பைவ்ஸ்டார் செஃப், இப்படி இவ்வளவு செய்திருக்கும் நீங்க, அதையும் செய்வீங்கன்னு தெரியும்” அவர் சொல்லி, அந்த மருந்தை அவளுக்கு கொடுத்தார்கள்.

அப்படியும் பத்து வருடங்கள் கேரண்டி கொடுத்திருந்த வால்வு எட்டே வருடங்களில் அதன் வேலையைச் சரிவரச் செய்யாமல் போக, அடுத்ததாக அதே அறுவை சிகிச்சையைச் செய்து வால்வை மாற்றினார்கள்.

ஆனால் அந்த வால்வுக்கும் பத்து வருட கேரண்டி கொடுத்தவர், அடுத்த முறை, திறந்தநிலை அறுவைசிகிச்சை இல்லாமல், சிறு துளை மட்டுமே போட்டு அறுவைசிகிச்சை செய்யும் அளவுக்கு நம் மருத்துவத்துறை முன்னேறி இருக்கும் எனச் சொன்னதைக் கேட்டு அவரால் சந்தோஷப்பட முடியவில்லை.

ஏனென்றால் அடுத்த அறுவைசிகிச்சையை தாங்கும் அளவுக்கு அவளது இதயம் பலம் மிக்கதாக இருக்குமா? இல்லையா? என கணிக்க முடியாது எனச் சொல்லி இருக்க அவரால் சந்தோஷப்பட முடியுமா என்ன?

வீட்டிலும் சரி, வெளியிலும் சரி, பூமிகாவுக்கு நட்போ, பேச்சுத் துணைக்கு ஆளோ என யாருமே இருந்தது இல்லை.

சொல்லப்போனால் பள்ளியிலும் சரி, வீட்டிலும் சரி, அவளிடம் முகம் கொடுத்து பேசவே ஆசிரியர் முதல், அனைவரும் பயப்பட்டார்கள்.

‘அவளுக்கு ஏதாவது ஒண்ணுன்னா நான் சும்மா இருக்க மாட்டேன். அவளை பாத்துக்கறது மட்டும்தான் உங்க வேலையா இருக்கணும்’ என அவர் சத்தம் போடுகையில் யார் என்ன செய்வார்கள்?

பூமிகாவிடம் பேசவே மாட்டார்கள் என்கையில் மற்றது எல்லாம் எப்படியாம்? அவள் ஆறாவது படிக்கையில் பள்ளியை மாற்றி இருக்க, அங்கே அவளுக்கு கிடைத்த நட்புதான் தேன்மொழி.

பூமிகா யாரிடமும் ஒட்டுதலோடு இருப்பதோ, பேசுவதோ கிடையாது. அதிகம் பேசினால் அவளுக்கு சற்று மூச்சுவாங்கும் என்பதால், அவள் அதைக் கூட செய்வது இல்லை.

வகுப்பறையில் மாணவ, மாணவிகள் எல்லாம் அவளை ஒரு கேலிப் பொருளாக மட்டுமே பார்த்தார்கள்.

ஆனால் அங்கே அவளிடம் பேசிய ஒரே ஜீவன் தேன்மொழி. “ஹாய்... நீயும் ஸ்கூலுக்கு புதுசா? நானும் புதுசுதான்...” தந்தையின் வேலை விஷயமாக தேன்மொழி சென்னைக்கு வந்திருக்க, அவளுக்கும் அங்கே புது நட்புக்கள் கிடைக்கவில்லை என்பதால், பூமிகாவிடம் பேச்சு கொடுத்தாள்.
 

Infaa

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jan 7, 2022
915
81
93
Chennai
பழைய பள்ளியில் எல்லாம் தன்னைப் பார்த்தாலே அனைவரும் பயப்பட்டு, விலகி நின்றிருக்க, தன்னைத் தேடி வந்து பேசிய தேன்மொழியை அந்த நொடியே அவளுக்குப் பிடித்தது.

“ம்... ஆமா...” பூமிகா சொல்ல,

“என்பேர் தேன்மொழி, உன் பேர் என்ன?”.

“நான் பூமிகா...” காற்றுக்கு கூட வலிக்குமோ என அவள் அத்தனை மென்மையாக பேச, அந்த குரலின் இனிமையில் தேன்மொழி ஆச்சரியமானாள்.

“வாவ்... உன் வாய்ஸ் சூப்பரா இருக்கு... நீ பாட்டு பாடுவியா? பாடினா நல்லா இருக்கும்” இப்படிச் சொன்னவளை பெரும் வியப்பாகவும், சுவாரசியமாகவும் ஏறிட்டாள்.

“அது... இல்ல...” அவளது பாராட்டுதல் பூமிகாவை படபடக்கச் செய்ய, திடுமென அவள் மூச்சு வாங்கத் துவங்கினாள்.

அதைப் பார்த்த தேன்மொழி, “மிஸ்... பூமியைப் பாருங்க...” அவள் தடுக்கும் முன்பாகவே தேன்மொழி குரல் கொடுத்திருக்க, டீச்சருக்கு சப்தநாடியும் அடங்கியது.

“ஏய் தேனு... அவகிட்ட உக்காரும்போதே வேண்டாம், போகாதேன்னு சொன்னேனா இல்லையா? இப்போ பார்... பூமி...அந்த எமர்ஜென்சி பட்டனை அழுத்து” ஆசிரியர் சொல்லிக் கொண்டிருக்கையிலேயே, தன் புத்தகப் பைக்குள் இருந்து சிறு ஆக்ஸிஜன் மாஸ்க்கை எடுத்து அவள் அணிந்துகொள்ள, அவளது சுவாசம் சீராகத் துவங்கியது.

அதைப் பார்த்த பிறகுதான் அந்த ஆசிரியரின் மூச்சு சீராக, “தேனு, நீ முதல்ல இங்கே இருந்து எந்திரி... அவளைத் தனியா விடு” அவர் போட்ட சத்தத்தில், இன்னுமே பயந்து போனாள்.

பூமிகா ஒரு மாதிரி மூச்சுக்குத் திணறுவதைப் பார்த்தே அவள் அரண்டு போயிருக்க, ஆசிரியரின் சத்தத்தில் அவள் மிரளாமல் போனால்தான் ஆச்சரியம்.

தேன்மொழி அப்படியும் கிளம்பாமல் பூமிகாவைப் பார்க்க, அவள் பேசாமல் கிளம்பிப் போயிருந்தால் கூட பூமிகா எதையும் உணர்ந்திருக்க மாட்டாள். அவள் அப்படி தன்னைப் பார்க்கவே, என்ன நினைத்தாளோ, “அவ இங்கேயே இருக்கட்டும் மிஸ்...” அவரிடம் கோரிக்கை வைக்க, அந்த ஆசிரியரோ விழித்தார்.

“இல்ல வேண்டாம்... உன்கிட்டே ஏதாவது பேசி உன்னைத் தொல்லை பண்ணுவா. அவ வேற இடத்தில் உக்காரட்டும்” மீண்டும் இப்படி ஒரு சூழ்நிலை வந்தால், அவருக்கும் எத்தனை முறைதான் சம்மாளிக்க முடியும்?

தேன்மொழியை அவர் ஒரு பார்வை பார்க்க, “இல்ல மிஸ்... அவளை டிஸ்டப் பண்ணாம உக்காந்துக்கறேன்” இப்படிச் சொன்னவளை முறைத்தார்.

“நீ அவ யாருன்னு தெரியாம பேசற...” அவர் சொல்ல,

“நீ தொட்டாலே அவ பாடி ஆயிடுவா...” ஒரு குறும்புக்கார மாணவன் குரலுயர்த்தி கத்த, மற்ற மாணவ மாணவியர் பட்டென சிரித்துவிட, ஆசிரியருக்கு வந்ததே கோபம்.

உடனடியாக ‘பிடி’ ஆசிரியரை வர வைத்து, அந்த மாணவனை பிரின்சிபல் அறைக்கு அனுப்பிவிட, மற்ற மாணவர்கள் அனைவரும் அடங்கிப் போனார்கள்.

“இன்னொரு முறை யாராவது இப்படி பண்ணீங்க, டிசி கொடுத்து வீட்டுக்கு அனுப்பிடுவோம் பாத்துக்கோங்க” ஆசிரியர் போட்ட சத்தத்தில் வகுப்பறையே அமைதியில் மூழ்கியது.

ஆசிரியர் பாடம் நடத்தத் துவங்கவே, “சாரி...” பூமிகா மெதுவாக தேன்மொழியிடம் மன்னிப்பை வேண்ட, அவளோ மென்மையாக புன்னகைத்து அவளது கரத்தைப் பற்றிக் கொண்டாள்.

“பரவாயில்ல விடு... உனக்கு இப்போ எப்படி இருக்கு? மூச்சு வாங்குதா? என்ன ஆச்சு?” கேட்டவள் பின்னர் பதறி, “இல்ல, இல்ல, நீ எதையும் சொல்ல வேண்டாம்... பொறுமையா நாம பேசிக்கலாம்” அவள் சொல்ல, இப்பொழுது சிரிப்பது பூமிகாவின் முறை ஆனது.

‘நான் இப்போதான் சிரிக்கறேன்...’ பூமிகா எண்ணிக் கொண்டவள், அன்று பள்ளியில் இருந்து வீட்டுக்குச் சென்றவுடன் தந்தையிடம் அவளைப் பற்றி பேசினாள்.

“எனக்கு அவளை ரொம்ப புடிச்சிருக்குப்பா... நாங்க ஃப்ரண்ஸ் ஆயிட்டோம்” அவள் சொல்ல, அதைக் கேட்டவாறே அங்கே வந்தார் அவளது தாய் பிரபா.

“ஒரே நாள்லேயே ப்ரண்டுன்னு முடிவே பண்ணியாச்சா? நாளைக்கே அவ பேசலைன்னு கண்ணைக் கசக்காமல் இருந்தா சரி... இந்த ஸ்கூல் போற வேலை எல்லாம் அவசியமா?” தாய் படபடக்க, அவள் முகம் அப்படியே சோர்ந்து போனது.

அதைப் பார்த்த நித்யானந்தம், “பிரபா... நீ இங்கே இருந்து கிளம்பு” அவர் சொல்ல, நொடித்துக் கொண்டார்.

பிரபா அங்கிருந்து செல்லவே, “அவ சொல்றதை எல்லாம் பெருசா எடுத்துக்காதம்மா, உனக்கு அவளோட பேசணும்னா பேசு... நீ சந்தோஷமா இருக்கணும், அதுக்காக இந்த அப்பா என்ன வேண்ணா செய்வேன்டா” அவர் பாசமாக அவள் தலை கோத, அவள் நெஞ்சுக்குள் தாயை எண்ணி பெரும் ஏக்கம் தான்.

பூமிகா பிறந்தது முதலே மருத்துவமனையும் அவளுக்கு இன்னொரு வீடு போன்றதாகவே மாறிப் போனது. வருடத்தில் சில பல நாட்களோ, மாதங்களோ அவள் அங்கே செலவழிக்க வேண்டி இருக்கும்.

அப்படி அவள் குழந்தையில் இருந்தே மருத்துவமனையில் இருக்கையில் எல்லாம், மற்ற படுக்கைகளில் இருக்கும் குழந்தைகளை எல்லாம் அதன் தாய் அரவணைத்து வைத்திருப்பதை பார்த்திருக்கிறாள்.

ஆனால் தன் தாய்,தன்னை தொட்டு கூட பார்க்க மறுப்பதை அந்த வயதிலேயே உணர்ந்து இருக்கிறாள். தகப்பன் அரவணைத்துக் கொண்டாலும், தாயின் அணைப்புக்கும், பாசத்துக்கும் வேண்டி மனம் ஏங்கும்.

மகளது பார்வை மனைவியின் பின்னால் செல்வதைப் பார்த்தவர், “என்னடா... ஏதாவது சொல்லணுமா? வேணுமா?” மகளின் உள்மன ஏக்கம் புரியாமல் கேட்டார்.

தன்மேல் உயிரையே வைத்திருக்கும் தகப்பனிடம், தாயின் அன்புக்கும், அரவணைப்புக்கும் ஏங்குகிறேன் எனச் சொல்லப் பிடிக்காமல் அமைதியாகிவிட்டாள்.

அது ஒரு ஏக்கமாகவே அவளுக்குள் தேங்கிப் போனது மட்டும் உண்மை.

மகளிடம் விடைபெற்று, மனைவியைத் தேடி வந்த நித்யானந்தம், “பொண்ணுகிட்டே என்ன பேசணும்னு உனக்குத் தெரியாது? ஏன் இப்படி அரக்கி மாதிரி நடந்துக்கற?” அவளிடம் கத்தினார்.

“நான் இப்போ சொல்லலைன்னா, நாளைக்கு மூச்சைப் பிடிச்சுகிட்டு சரிஞ்சிடுவா பரவாயில்லையா? அவளுக்கு எதுவும் நிலையா கிடைக்காதுன்னு முதல்ல புரிய வைங்க.

“சும்மா... எல்லாம் சாதிச்சு கொடுத்துடுவேன்னா, அது எல்லா நேரமும், எல்லா விஷயத்திலும் முடியுமா?” பிரபா போட்ட சத்தம், மேலே நின்று கேட்டுக் கொண்டிருந்த பூமிகாவுக்கும் தெளிவாக கேட்கவே செய்தது.

“அவ குழந்தைடி... என்ன பேசற? கொஞ்சம் பொறுமையா பேசு, அவளுக்கு கேட்டுடப் போகுது” நித்யானந்தம் பதற,

“இதெல்லாம் அவளுக்குத் தெரியறது நல்லதுன்னுதான் நான் சொல்றேன். புரியுதா?” அவர் அதற்கும் பேச, நித்யானந்தம்தான் அமைதியாக வேண்டி இருந்தது.

தாயின் பேச்சைக் கேட்ட பூமிகா, ‘ஒரு வேளை தேன்மொழி நாளைக்குப் பேச மாட்டாளோ?’ எண்ணியவள் சற்று கவலையானாள்.

ஆனால் மறுநாளோ... தேன்மொழி பேசியதோடு மட்டுமல்லாமல், அது பூமிகாவின் வாழ்வில் ஒரு முக்கியமான நாளாகவும் மாறிப் போனது.


தொடரும்........
 

Infaa

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jan 7, 2022
915
81
93
Chennai
Nice update infaaa
Paavam kutti
Nalla amma hoom

மிக்க நன்றி!

சில அம்மாக்கள் இப்படியும் இருக்காங்க.