• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

வண்ண நிழல்கள் - 5.

Infaa

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jan 7, 2022
915
81
93
Chennai
பகுதி – 5.

பூமிகா மறுநாள் பள்ளிக்குச் செல்லவே அதிகம் யோசித்தாள். அவள் பள்ளிக்குச் செல்வதே அவளது பொழுதுகள் போக வேண்டும் என்பதற்காகத்தானே தவிர, மற்றபடி அவள் படிக்க வேண்டும் என அங்கே யாரும் எதிர்பார்க்கவில்லை.

மருத்துவரின் யோசனையே கூட அதுதான். “அவளை நீங்க வீட்டிலேயே வச்சிருந்தா, அவ உங்களை விட்டு போற வேகம் அதிகமாகும். அதுவே அவளுக்கு சின்னதா ஒரு மாறுதல் இருந்தாலும், அது அவளைக் கொஞ்சம் இயல்பா இருக்க விடலாம்” என்ற அவரது வார்த்தைகள்தான் நித்யானந்தத்தை மகளை பள்ளிக்கு அனுப்ப வைத்தது.

அன்றும் மகள் கூடவே அவரும் கிளம்பி வர, மகளது முகம் சற்று வாடிக் கிடப்பதைப் பார்த்து கவலையானார்.

“என்ன பூமி? ஏன் ஒரு மாதிரி இருக்க?” அவர் கேட்க, மறுப்பாக தலை அசைத்தாள்.

அவளுக்காக மட்டுமே வாழும் ஜீவன் அவர். அவரிடம் தன் கவலையைச் சொன்னால், அவர் வருத்தப்படுவார் என்பதை விட, அதை அழிக்க முயல்வார், கோபம் கொள்வார் என்பதுதான் அவளுக்கு பெருத்த யோசனையாக இருந்தது.

“அந்த தேன்மொழி உன்கிட்டே பேசுவாளா? மாட்டாளான்னு யோசிக்கறியா? நான் வேண்ணா அவகிட்டே, உன்னோட ஃப்ரண்டா இருக்க சொல்லி கேக்கவா?” அவர் கேட்க, அவளோ பதறினாள்.

“வேண்டாம்ப்பா... நீங்க அவகிட்டே பேச வேண்டாம்ப்பா... பிளீஸ்...” அவளையும் மிரட்டுவாரே என்பதுதான் அவளது பதட்டத்துக்கு காரணம்.

அது அவருக்கும் புரிய, “உன்னை தொல்லை செய்யறவங்க மேலேதான் அப்பா கோபப்படுவேன் பூமி. உனக்கு புடிச்சவங்க கிட்டே அப்பா கோபப்படுவேனா?” அவர் அவள் தலையை வருட, அவர் நெஞ்சில் சாய்ந்து கொண்டாள்.

அதைப் பார்த்தவாறே அங்கே வந்த பிரபா, “என்ன அப்பாவும் பொண்ணும் வாசல்ல வச்சு கொஞ்சிக்கறீங்க?” அவர் கேட்க, தகப்பனை விட்டு விலகி நின்றாள்.

“அப்பா, நான் கிளம்பறேன்ப்பா...” இப்படிச் சொன்ன மகளை ஆச்சரியமாகப் பார்த்தார்.

என்றைக்கும் அவள் பள்ளி செல்ல நித்யானந்தம் வேண்டும். அவர் இல்லாமல் அவள் செல்லவே மாட்டாள். அப்படி இருக்கையில், இன்று அவளாகவே கிளம்புகிறேன் எனச் சொன்னால் ஆச்சரியப்பட மாட்டாரா என்ன?

“அப்பா வர வேண்டாமா பூமி? நீ மட்டும் தனியாவா போற?” தகப்பன் கேட்க, அமைதியாக தலை அசைத்தவள், தாயை ஒரு பார்வை பார்த்துவிட்டு கிளம்பிவிட்டாள்.

மகளது ஏக்கப் பார்வை தகப்பனுக்குப் புரிய, “பொண்ணுகிட்டே ஆசையா நாலு வார்த்தை பேசலாமே பிரபா” கோரிக்கையாகவே கேட்டார்.

“ஏன்... நீங்க பேசறது போதாதாக்கும்? இதிலே நான் வேற பேசணுமா என்ன? அவளைப் பாத்தாலே, எனக்கு நீங்க செஞ்சதுதான் ஞாபகத்துக்கு வருது” இப்படிச் சொன்ன மனைவியை வேதனையாகப் பார்த்தார்.

“பொண்ணு வேணும்னு ஆசைப்பட்டது அவ்வளவு பெரிய குத்தமா பிரபா?” அவர் குரலில் அத்தை வலி, ஆதங்கம்.

“அது குத்தமில்லை, அதுக்காக என்னை கட்டாயப்படுத்தினீங்க பாத்தீங்களா? அது குத்தம். உங்க அம்மாவோட சேர்ந்து, என்னைப் பாடா படுத்தினீங்களே, அதுக்குத்தான் உங்களுக்கு இப்படி ஒரு பொண்ணு வந்து பொறந்திருக்கா” அவர் ஆத்திரமாக கத்த, மனைவியை அமைதியாக ஏறிட்டார்.

“அவ நார்மலா இருந்திருந்தாலும் அவகிட்டே இப்படித்தான் நடந்துட்டு இருப்பியா பிரபா?” தொண்டை அடைக்க அவர் கேட்க, பிரபா கொஞ்சமும் அசையவில்லை.

“அதுதான் இல்லையே... பெத்து கொடுத்ததோட நம்மளை விட்டுடுவாங்கன்னு பாத்தா... காலம் முழுக்க தூக்கி சுமக்கற பாரத்தை இல்ல அந்த கடவுள் கொடுத்திருக்கார்.

“நீங்கதான பொண்ணு வேணும்னு ரொம்ப ஆசைப்பட்டீங்க... வச்சு கொண்டாடுங்க, என்னால் முடியாது” வெடுக்கென சொல்லிவிட்டு உள்ளே சென்றுவிட, நித்யானந்தமும் அப்படியே கிளம்பிவிட்டார்.

பூமிகா பள்ளிக்குச் சென்று அவளுக்காக காத்திருக்க, அவளை ஏமாற்றாமல் பள்ளிக்கு வந்த தேன்மொழி, அவள் அருகில் சென்று அமர்ந்தாள்.

“ஹாய்... குட் மார்னிங்... நான் உனக்கு ஒண்ணு எடுத்துட்டு வந்தேன்” சொன்னவள், தன் பையில் இருந்து ஒரு சாக்லேட்டை எடுத்துக் கொடுக்க, கண்கள் மின்ன அதைப் பெற்றுக் கொண்டாள்.

அதை அவள் தன் பைக்குள் பத்திரப்படுத்த, “சாப்பிடல?” தேன்மொழி அவளிடம் கேட்டாள்.

“ம்ஹும்... சாக்லேட் சாப்ட்டா சளி வந்துடும்... எனக்கு அது ஒத்துக்காது”.

“ஹையோ... இது தெரியாம நான் வாங்கிட்டு வந்துட்டேனே... அப்போ என்கிட்டேயே கொடுத்துடு” அவளுக்குத் தன்னால் ஏதும் ஆபத்து வந்துவிடக் கூடாதே என்ற பதட்டம் அவளிடம் வெளிப்பட்டது.

“இல்ல, நான் சாப்பிட மாட்டேன்... பத்திரமா வச்சுக்கறேன்” முதல் முதலாக மூன்றாவது மனிதர்களிடம் இருந்து அவள் வாங்கும் முதல் பரிசு அவளை அதை திருப்பிக் கொடுக்க அனுமதிக்கவில்லை.

அவளது நல்ல நேரமோ, இல்லை கெட்ட நேரமோ, பள்ளி பாட வேளை துவங்கிய சற்று நேரத்திலேயே கொஞ்சம் அசவுகரியமாக உணர்ந்தாள். அவள் நெளிவதைப் பார்த்த தேன்மொழி, அவளைக் கேள்வியாக ஏறிட்டாள்.

“ஒண்ணும் இல்ல... நீ பாடத்தை கவனி...” பூமிகா சொல்ல, திரும்பிக் கொண்டாலும், அவளை கவனித்துக் கொண்டே இருந்தாள்.

பல நிமிடங்கள் கடக்க, ஓய்வறைக்குச் செல்ல வேண்டும் எனத் தோன்றவே, “மிஸ்... கேன் ஐ கோ டூ வாஷ்ரூம்?” பூமிகா எழுந்து கேட்க, அவளை அங்கே யாரும் கேள்வி கேட்பதோ, தடுப்பதோ இல்லை என்பதால், ஆசிரியர் அனுமதித்தார்.

அவள் சற்று முன்னால் செல்லவே, அப்பொழுதுதான் தேன்மொழி, பூமிகாவின் ஆடையில் அந்த சிறு கறையை கவனித்தாள். சட்டென இருக்கையில் இருந்து எழுந்தவள், “மிஸ்... மீ டூ...” அவள் கேட்க, ஆசிரியரோ அவளை முறைத்தார்.

“வாட் தேன்மொழி... அவளுக்கு படிக்க வேண்டாம்... ஆனா நீ படிச்சாகணும், சும்மா அவ பின்னாடியே சுத்தணும்னு பாக்கற?” அவர் சாட, பூமிகா வகுப்புக்கு வெளியே நின்று தேன்மொழியைப் பார்த்தாள்.

ஆனால் தேன்மொழி எதைப்பற்றியும் கவலைப் படாமல், வேகமாக ஆசிரியரின் அருகே வந்தவள், அவர் காதுக்குள் எதையோ சொல்ல, அவர் பெரும் பதட்டத்துக்கு உள்ளானார்.

“என்ன...? என்ன சொல்ற நீ?” பூமிகா எப்படி ரியாக்ட் செய்வாளோ எனத் தெரியாத பதட்டத்தில் அவர் இருந்தார்.

அதென்னவோ பூமிகா விஷயத்தில் அங்கிருக்கும் ஆசிரியர்கள் அனைவருக்கும் ஒரு பயம் தான்.

“நான் பேசிக்கறேன் மிஸ்... கன்ஃபாம் பண்ணிட்டு சொல்றேன்” அவருக்கு இருந்த பதட்டத்தில், ‘உனக்கு எப்படி இதெல்லாம் தெரியும்?’ என எதிர் கேள்வி கேட்பதைக் கூட மறந்திருந்தார்.

சட்டென தெளிந்து, “நானும் வரவா?” அவர் கேட்க,

“இல்ல மிஸ்...” சொன்னவள் வெளியே ஓடினாள். அவள் செல்லவே, பக்கத்து வகுப்பறை ஆசிரியரிடம் தன் வகுப்பை பார்க்கச் சொல்லிவிட்டு, ஓய்வறையை நோக்கி அவரும் சென்றார்.

பூமிகா தன்னைத் தானே கண்டுகொள்ளும் முன்பாக அவளைப் பிடித்துக் கொண்டாள் தேன்மொழி.

“தேனு... நீ எதுக்கு வந்த? நான் ஓகே தான்... நீ கிளாசுக்கு போ...” சொன்னவள் அங்கிருந்த ஒரு அறைக்குள் நுழைய முயல, அவளோ அதை அனுமதிக்கவில்லை.

“பூமி... உனக்கு நாம எல்லாம் எப்படி வயசுக்கு வருவோம்ன்னு தெரியுமா?” எந்தவிதமான பூச்சும், மழுப்பலும் இல்லாமல், நேரடியாக அவளிடம் கேட்டாள்.

“அது எதுக்கு இப்போ?” அவளுக்கு எதுவும் புரியவில்லை.

“நீ சொல்லு... எனக்குத் தெரிஞ்சாகணும்”.

“ஏய்... இதையெல்லாமா கேப்பாங்க...? எனக்கு அதெல்லாம் தெரியாது போ” திடுமென இதைப்பற்றி பேசினால், அவளுக்கு அதை எப்படி எடுக்கவென்று தெரியாமல், அந்த பேச்சை தவிர்க்க முயன்றாள்.

“பூமி... நான் ஒண்ணு சொன்னா நீ டென்ஷன் ஆக கூடாது” அவள் சொல்லிக் கொண்டு இருக்கையில், ஆசிரியரும் உள்ளே வந்திருந்தார்.

“என்ன...? என்னன்னு சொல்லு...?” ஏதும் புரியாத குழப்பமே அவளிடம் மிஞ்சிற்று.

“எனக்கென்னவோ நீ பெரிய போண்ணாயிட்டன்னு தோணுது. உள்ளே போய்ட்டு, ஏதாவது... ப்ளட் பாத்தன்னா டென்ஷன் ஆகாதே. அது இயற்கை தான்... சரியா?” கேட்டவள், அவளது கரத்தை அத்தனை அழுத்தமாக பற்றிக் கொண்டாள்.

பூமிகா திடுமென மூச்சுக்குத் திணறுவதுபோல் தோன்ற, ஆசிரியர் கையோடு கொண்டு வந்திருந்த ஆக்ஸிஜன் மாஸ்க்கை அவளுக்கு அணிவித்தார்.

கூடவே அவளை உள்ளே இருந்து வெளியே அழைத்து வந்து நிறுத்தியவர், “பூமிகா ரிலாக்ஸ்... ரிலாக்ஸ்...” ஆசிரியர் சொல்லிக் கொண்டே இருக்க, சில பல நிமிடங்களுக்குள் தெளிந்தாள்.

இப்படியான காட்சிகள் அங்கே மாதத்துக்கு ஒரு முறையாவது நடக்கும் என்பதால், அனைவரும் கடந்து செல்ல, தேன்மொழி வெலவெலத்துப் போனாள்.

இப்படியான காட்சிகளை எல்லாம் அவள் படத்தில், அவசரசிகிச்சைப் பிரிவில் செய்வதை மட்டுமே பார்த்திருக்கிறாள்.

அப்படியும் பூமிகாவின் கரத்தை அவள் விடாமல் கெட்டியாக பற்றிக் கொண்டிருக்க, “தேன்மொழி, முதல்ல ஆம்புலன்ஸை வரச் சொல்லு... போ...” ஆசிரியர் குரல் கொடுக்க,

“வேண்டாம் மிஸ்... நான் ஓகே தான்...” மாஸ்க்கை விலக்கிய பூமிகா சொல்ல, ஆசிரியர் சற்று இயல்பானார்.

“நிஜமாவே ஓகேயா? இப்போ போய் செக் பண்ணிட்டு வர்றியா?” அவர் கேட்க, தேன்மொழியின் கரத்தை விடாமல் பற்றியவாறே உள்ளே அழைத்துச் சென்றாள்.

தேன்மொழியின் முகம் சற்று வெளிறிப் போயிருக்க, “என்ன பயந்துட்டியா?” அவள் கேட்க,
 

Infaa

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jan 7, 2022
915
81
93
Chennai
“செத்துட்டேன்...” ஒரு வேகத்தில் சொல்லிவிட்டவள், பூமிகாவின் முகம் அழுகைக்குச் செல்ல, வேகமாக தன் நாக்கை கடித்துக் கொண்டாள்.

“இல்ல, இல்ல... ஒரு ஃப்ளோல வந்துடுச்சு” சொன்னவள், என்ன நினைத்தாளோ, தோழியை இறுக கட்டிக் கொள்ள, பூமிகா திகைத்தாள். ஆனாலும் அந்த அணைப்பு கொடுத்த தைரியமும், நம்பிக்கையும், பேரன்பும் அதிகமாக இருக்க, தேன்மொழியை அவளுக்கு அவ்வளவு பிடித்தது.

“உனக்கு எதுவும் ஆகாது பூமி...” அவள் காதுக்குள் சொன்னவள் விலகி நிற்க, மௌன புன்னகையை கொடுத்தவள், அங்கிருந்த அறைக்குள் சென்று மறைந்தாள்.

அவள் வெளியே வரும் வரைக்கும், தேன்மொழி பதட்டத்தோடு காத்திருக்க, பெரும் தடுமாற்றத்தோடு வெளியே வந்தாள் பூமிகா.

தேன்மொழி அவளை ‘என்ன?’ என்பதுபோல் பார்க்க, அவளோ மையமாக தலை அசைத்தாள்.

“மிஸ்...” தேன்மொழி குரல் கொடுக்க, ஆசிரியர் உள்ளே வர, அவரிடம் விஷயத்தைச் சொன்னார்கள்.

“பூமிகா, இப்போ எப்படி வீட்டுக்குப் போற? அப்பாவுக்கு கால் பண்ணவா?” அவர் கேட்க,

‘இந்த விஷயத்தை அப்பாகிட்டே எப்படிச் சொல்றது?’ என்ற தயக்கம் அவளிடம். ஆனாலும் வேறு வழி இல்லை என்பதால் சம்மதித்தாள்.

அவளை அங்கே இருக்கும் ஆம்புலன்சில் வீட்டுக்கு அனுப்ப ஆசிரியருக்கு மனமில்லை.

அவளது தகப்பனிடம் விஷயத்தைச் சொல்லி அவரை வர வைக்க, அவரோ சந்தோஷம் பாதி, துக்கம் மீதி என வந்து சேர்ந்தார்.

தேன்மொழிக்கும் அவளோடு செல்ல ஆசை இருந்தாலும், பள்ளியில் இருந்து அப்படிச் செல்ல முடியாது என்பதால் வகுப்பறைக்குச் சென்றாள்.

வீட்டுக்குச் சென்ற அவர்களை வரவேற்ற பிரபாவிடம் அத்தனை இறுக்கம். ஆனாலும் செய்ய வேண்டிய அனைத்தையும் செய்துதானே ஆக வேண்டும்.

மகளை அவளது அறைக்கு அனுப்பிய நித்யானந்தம் தன் மனைவியைத் தேடி வர, தங்கள் அறையில் அமர்ந்திருந்தார்.

“என்ன பிரபா இங்கே வந்து உக்காந்திருக்க...? அவளுக்கு செய்ய வேண்டியதை செய்யல?” இப்படிக் கேட்ட கணவனை கோபமான பார்வையில் பார்த்தார்.

“என்ன...? எதுக்கு இப்படிப் பாக்கற?” அவர் புரியாத குழப்பத்தில் கேட்க,

“செஞ்சு...?” ஆத்திரத்தில் வெடித்தார்.

“அப்படின்னா? புரியல...?”.

“இல்ல... அவளுக்கு செய்ய வேண்டியதை எல்லாம் செய்யச் சொன்னீங்களே, அதுக்கு கேக்கறேன். செஞ்சு என்ன செய்யப் போறீங்க? நீங்க சந்தோஷப்படற அளவுக்கு இதில் எதுவும் இல்லை”.

“இனிமேல் மாசம் பொறந்தா, அவ படற கஷ்டத்தில் இன்னொன்னு அடிஷனலா சேரப் போகுது, அவ்வளவுதான். அதைத் தவிர அவளுக்கு வேற என்ன இருக்கு?” இப்படிக் கேட்ட மனைவியை வேதனையாக பார்ப்பதைத் தவிர அவரால் என்ன செய்ய முடியும்?

“இப்படி ஒரு நாளை ஒவ்வொரு அம்மாவும் அவ்வளவு ஆசையா எதிர்பார்ப்பாங்க. ஆனா எனக்கு...” நித்யானந்தம் கேட்க,

“அதையேத்தான் நானும் கேக்கறேன்... எனக்கு அவ வாழ்க்கையில் சந்தோஷத்தை கொடுக்கற அளவுக்கு என்ன இருக்கு. இன்னைக்கு வரைக்கும் அவளை கஷ்டப்படுத்தி மட்டும்தான் பாக்கறீங்க?” சொன்ன பிரபா முதலும் கடைசியுமாக அத்தனை அழுது அன்றுதான் பார்த்தார்.

முதல் முறையாக மனைவியை புரிந்துகொள்ள முயன்றார் நித்யானந்தம். ஆனால் சற்று நேரத்தில் மனைவி தெளிந்துவிட, அது அத்தோடு நின்று போனது.

அதன் பிறகு, மகளுக்கு உணவு விஷயத்தில் அப்பொழுது கொடுக்க வேண்டிய உணவுகள் என சிலது இருக்க, அதை மருத்துவரின் ஆலோசனைப்படி ச்செஃப்பிடம் கொடுக்கச் சொன்னார்.

கொழுப்பு உணவுகளோ, முட்டையின் மஞ்சள் கருவோ என அவளுக்கு எதுவும் கொடுக்க கூடாது எனச் சொல்லி இருக்க, மிகுந்த கவனமெடுத்தார்கள்.

மறு முறை மகளை ஒரு மகப்பேறு மருத்துவரிடம் அழைத்துச் சென்ற பிரபா, “இவளுக்கு இந்த மாச பிரச்சனையில் இருந்து விலகி இருக்க ஏதாவது வழி இருக்கா டாக்டர்...?” இப்படிக் கேட்டவரை அமைதியாக ஏறிட்டார் மருத்துவர்.

“என்ன பிரபா... ஒரு பொண்ணா இருந்துட்டு இப்படி கேக்கறீங்க? அது எவ்வளவு பெரிய பிரச்சனையில் போய் முடியும்னு உங்களுக்குத் தெரியுமா இல்லையா?” நிதானமாக மருத்துவர் கேட்க, தலை கவிழ்ந்தார்.

“அவளால இதையெல்லாம் சமாளிக்க முடியுமா டாக்டர்? என் பொண்ணுக்கு மட்டும் ஏன் இப்படி எல்லாம் நடக்கணும்?” அவர் அவர்களது குடும்ப மருத்துவர் என்பதால், தன் மனக்குறையை சொல்லி அழ, இரக்கமாக அவரைப் பார்த்தார்.

“இவ்வளவு கவுன்சிலிங்... அவளோட நிலை இப்படி எல்லாத்தையும் சொல்லிக் கொடுத்தும், நீங்க இப்படி பேசறதுதான் எனக்கு கவலையா இருக்கு”.

“என்ன செய்ய டாக்டர், ஆயிரம் இருந்தாலும் அவ என்னோட பொண்ணு. ஒவ்வொரு நாளும் அவ அவளோட வாழ்நாளை எண்ணிகிட்டு இருக்கான்னு நினைக்கும்போது என்னால் எப்படி நிம்மதியா இருக்க முடியும்?” ஒரு தாயின் மனக் குமுறலை, வேதனையை அவர் வெளிப்படுத்த, மருத்துவருக்கு எதுவும் செய்ய இயலாத நிலைதான்.

“உங்க பொண்ணுக்கு இன்னொரு கஷ்டம் வேண்டாம்னு நீங்க நினைக்கறது எனக்குப் புரியுது. ஆனா... அவளோட ஹார்மோன்களை நாம இம்பேலன்ஸ் பண்றது, அவளோட உடல்நிலையை இன்னும் மோசமாகத்தான் செய்யும்” இப்படிச் சொன்ன மருத்துவரை, இதயம் பிளக்கும் வலியோடு ஏறிட்டார்.

“இது... மாச பிரச்சனையோட மட்டும்ன்னா நான் இவ்வளவு கவலைப்பட மாட்டேன். அவளோட உணர்வுகளில் ஏதாவது மாற்றத்தை கொண்டு வந்தா, அதை எப்படி நாங்க சமாளிப்போம்?” அவரது கவலையைக் கேட்டு சிரித்துக் கொண்டார்.

பூமிகாவுக்கு போஷாக்கான உணவுகள் வழங்கப்படுவதாலோ என்னவோ, அவளது உடல்நிலைக்கு அவள் உட்கொள்ளும் மருந்துகளின் தாக்கங்களையும் மீறி, அவளின் உடல் வளர்ச்சி கச்சிதமாகவே இருந்தது.

அதுவும் வயதுக்கு வந்தவுடன், அவளது உடலின் வளர்ச்சியில், ஒரு தாயாக பூரிக்க வேண்டிய பிரபாவின் மனது, அதிக கவலை கொண்டது.

‘உங்கள் மகள் அத்தனை தூரத்துக்கு நீடித்திருக்க மாட்டாள்’ என்ற உண்மையை அவருக்கு ஞாபகப்படுத்த மனமில்லாமல் அமைதியானார்.

“அவ... அவளுக்கு... நல்லா இருப்பா தானே...” எதிர்பார்ப்பும், ஏக்கமுமாக கேட்கும் அந்த தாயுள்ளத்தை உடைத்துப் போடும் தைரியம் அவருக்கு இருக்கவில்லை.

ஆனாலும் ஒரு மருத்துவராக சில உண்மைகளை தெளிவுபடுத்தியே ஆகவேண்டிய கட்டாயம் அவருக்கு இருக்க, “அவளுக்கு இப்போ என்ன குறையாம்? ஆனா கடவுள் போடும் கணக்கை நம்மளால் எதுவும் செய்ய முடியாது பிரபா. சோ மனசை தயாரா வச்சுக்கோங்க...” அவர் சொல்ல, தன் முகத்தை அழுத்தமாக துடைத்துக் கொண்டார்.

“ஓகே டாக்டர்... நான் கிளம்பறேன்...” அவர் எழுந்துகொள்ள,

“சில உண்மைகளை நாம ஏத்துக்கிட்டு தான் ஆகணும் பிரபா. அவளை நல்லபடியா பாத்துக்கோங்க...” சொல்லி அனுப்ப, அந்த அறையில் இருந்து வெளியே வந்த பிரபா முற்றிலும் வேறாக இருந்தார்.

அத்தனை நேரமாக தன் மகளுக்கென பேசியவர், குமுறியவர், அழுதவர் இவரா? என்பதுபோல் அவரது தோற்றம் இருக்க, மகளுக்கு அருகே வந்து அமர்ந்தார்.

“என்னம்மா...? ஏன் ஒரு மாதிரி இருக்கீங்க? எனக்கு மறுபடியும் ஏதும் புது பிரச்சனையா என்ன?” இப்படிக் கேட்ட மகளை, உணர்வுகளைத் துடைத்த முகத்தோடு ஏறிட்டார்.

“அதெல்லாம் எதுவும் இல்லை... வா போகலாம்...” அவர் எழுந்துகொள்ள, தாயிடம் கொஞ்சிக்கொள்ள, அடைக்கலமாக அந்த மகளின் உள்ளம் தவித்தது.

“உங்களுக்கு ஏம்மா என்னைப் புடிக்கலை? நான் இப்படி பொறந்தது என்னோட தப்பா?” தாயின் பின்னால் சென்றவாறே அவள் கேட்டுவிட, அவளை அழுத்தமாக பார்த்தார்.

“இல்ல... உங்க அப்பா பண்ண தப்பு...” வெடுக்கென சொல்லிவிட்டு நடக்க, பூமிகாவுக்கு அத்தனை வருத்தம்.

கிட்டத்தட்ட இரண்டு மாதங்களுக்குப் பிறகு பூமிகா பள்ளிக்குச் செல்ல, தேன்மொழி அவளை வரவேற்றாள்.

“பூமி... எப்படி இருக்க? நீ இவ்வளவு நாளா ஸ்கூலுக்கு வரலைன்னு சொன்ன உடனே, இனிமேல் வரவே மாட்டியோன்னு நினைச்சேன்” அவளது கரத்தை பற்றிக் கொள்ள, பூமிகாவுக்கு ஆச்சரியம் தான்.

“புது ஃப்ரண்ட்ஸ் யாராவது கிடைச்சாங்களா?” இயல்பாக கேட்க முயன்றாலும், அவள் குரலில் சிறு வருத்தம் இழையோடவே செய்தது.

“ஏன் அப்படிக் கேட்ட? நான் இந்த ஸ்கூல், உன் கிளாஸ்க்கு வரப் போறேன்னு சொன்ன உடனேயே, முதல்ல உன்னைப்பத்திதான் என்கிட்டே நிறைய சொன்னாங்க.

“பூமிகான்னு ஒருத்தி உன் கிளாஸ்ல இருப்பா... அவகிட்டே நீ எப்படி நடந்துக்கணும், செய்யணும்... பேசணும்... இப்படி சொன்னதை விட, என்ன செய்யக் கூடாதுன்னு நிறைய சொன்னாங்க.

“அப்போவே எனக்கு உன்னைப் பாக்கணும்னு தான் தோணிச்சு. அதனால புதுசா யார்கிட்டேயும் ஃப்ரண்ஷிப் வச்சுக்க புடிக்கலை. நீ வரலன்ன உடனேதான் கொஞ்சம் அப்சட் ஆனேன்... இப்போ ஓகே தான்... வா...” அவளது இடத்துக்கு அவளை அழைத்துச் சென்று உடன் அமர்ந்து கொண்டாள்.

அன்று துவங்கிய அவர்களது நட்பு, அடுத்த ஐந்து வருடங்களுக்கு எந்தவிதமான பிரச்சனையும் இல்லாமல் வளர்ந்தது.

தேன்மொழி என்றால் பூமிகாவின் வீட்டில் அனைவருக்கும் தெரியும். பூமிகா என்றால், தேன்மொழியின் பெற்றவர்களுக்கும் நன்றாகவே தெரியும்.

தேன்மொழியின் தாய் மிகவும் அருமையாக சமைப்பார். விதம் விதமாக அவள் கொண்டுவரும் உணவு வகைகளை பார்த்து ரசிப்பதோடு, உண்டு பார்க்கவும் பூமிகா விரும்புவாள்.
 

Infaa

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jan 7, 2022
915
81
93
Chennai
ஆனால் அவளது உடல்நிலையைக் கருத்தில் கொண்டு அதை அவள் அடக்கிக் கொள்வாள். தேன்மொழிக்குமே அவளுக்கு கொடுக்க ஆசை இருந்தாலும், மாதத்தில் சில பல நாட்களாவது பள்ளிக்கு வர முடியாமல் அவஸ்தைப்படும் அவளது உடல்நிலையை எண்ணி கொடுக்கவே மாட்டாள்.

பூமிகாவின் உணவில், உப்பு, காரம், எண்ணெய் என அனைத்தும் பெயருக்கு இருக்கும். அனைத்தும் வேக வைத்த உணவாக மட்டுமே அவள் உண்பாள்.

அவர்கள் பத்தாவது முடித்திருந்த அந்த நேரத்தில்தான் அந்த கோர விபத்து நடந்தது. தேன்மொழி பள்ளிக்கு வந்திருந்த நேரத்தில், அவளது வீட்டில் கேஸ் சிலிண்டர் வெடித்து சிதறி, அந்த விபத்தில் அவளது பெற்றவர்கள் இருவரும் நொடியில் கருகிப் போயிருந்தார்கள்.

பள்ளியில் இருந்த அவளை அழைத்துச் செல்ல, உறவுக்காரர் ஒருவர் வந்திருப்பதாகச் சொல்ல, தோழியிடம் விடைபெற்று வீட்டுக்குச் சென்றாள்.

அவளை அழைத்துச் சென்றவர், அவளை அவரது வீட்டுக்கு அழைத்துச் செல்லவே, குழம்பிப் போனாள். விஷயம் இன்னதென கேள்விப்பட்ட பொழுது, அவளைத் தேற்றுவார் யாரும் இருக்கவில்லை.

பள்ளியில் எல்லாம் விஷயம் தெரியவர, பூமிகா தோழியைப் போய் பார்த்தே ஆகவேண்டும் என பிடிவாதம் பிடித்தாள்.

“உன்னால் அதையெல்லாம் தாங்கிக்க முடியாது பாப்பா. அவ அழுவா, நீ அழுவ, உனக்கு முடியாது...” நித்யானந்தம் மகளுக்கு சொல்லி புரிய வைக்க முயன்றுகொண்டிருந்தார்.

“பிளீஸ்ப்பா... அவளுக்குன்னு வேற யாருமே கிடையாது. என்னை அவ எப்படி பாத்துப்பான்னு சொல்லி இருக்கேன் தானே... அவ கூட நான் இருக்கணும்ப்பா...” அவள் தகப்பனிடம் கெஞ்ச, அவர் மனைவியின் முகம் பார்த்தார்.

‘நான் சொன்னா மட்டும் கேக்கப் போறீங்களா?’ என்னும் பார்வையோடு அவர் விலகிக் கொள்ள, மகளது பிடிவாதம் வெல்ல, அவளை அழைத்துக்கொண்டு தேன்மொழியைக் காணச் சென்றார்.

பூமிகா அவளைக் காணச் செல்கையில், அந்த வீட்டின் கூடத்தில் தேன்மொழி சுருண்டு படுத்திருக்க, பூமிகாவைக் கண்டவுடன் வாரிச் சுருட்டிக்கொண்டு எழுந்தவள், “பூமி...” கதறிக்கொண்டு தோழியிடம் ஓடி வந்தாள்.

திடுமென அவளது உடல்நிலை அவளுக்கு நினைவுக்கு வர, சட்டென நின்றுவிட்டாள். ஆனால் பூமிகாவோ, தோழியை இறுக அணைத்துக் கொள்ள, “என்னை அவங்களை பாக்க கூட விடலை பூமி... நான் அனாதை ஆயிட்டேன். எங்க அம்மா அப்பா என்னை விட்டு போய்ட்டாங்க...” அவள் தேம்பி அழ, பூமிகாவும் அழுதாள்.

அதைப் பார்த்த நித்யானந்தம், “பாப்பா...” மென்மையாக அழைத்து அவளைக் கலைக்க,

“தேனு அழறாப்பா... நாம அவளையும் கூட்டி போய்டலாம்... பிளீஸ்ப்பா” இப்படிக் கேட்ட மகளையும், சுற்றிலும் இருந்தவர்களையும் சங்கடமாக ஒரு பார்வை பார்த்தார்.

“பாப்பா... என்ன பாப்பா இது...?” அங்கே சூழ்நிலை என்னவென்று புரியாமல் இருக்கையில், ஒரு பெண்ணை அங்கிருந்து அழைத்துச் செல்லலாம் எனச் சொல்வதும், செய்வதும் விளையாட்டா என்ன?

“வேண்டாம் பூமி... நீ போ... நான் வரலை... என்னை அனாதை ஆஷ்ரமத்தில் சேர்த்து விடப் போறாங்க. நான் அங்கேதான் போவேன்... இன்மேல் உன்னை பாக்க முடியாது...” அவள் சொல்லி அழ, அங்கே பெருத்த அமைதி நிலவியது.

நித்யானந்தம் அங்கே இருந்தவர்களைப் பார்க்க, “அவ அம்மா அப்பாவுக்கு கூடப் பொறந்தவங்கன்னு யாரும் கிடையாது. இருந்த ஒரே அண்ணனும், டெல்லியோ, பாம்பேயோ எங்கேயோ இருக்கார்.

“இவங்க சாவுக்கு கூட வரலை... நானும் இவளுக்கு ஒண்ணு விட்ட மாமா தான். இவ பொறுப்பை ஏத்துக்கற அளவுக்கு சூழ்நிலை எல்லாம் சரி கிடையாது. ஏதோ என்னால் முடிஞ்சது, அவளை ஒரு பாதுகாப்பான இடத்துக்கு அனுப்பறதுதான்...” அவர் சொல்ல, அவர் இத்தனை நாள் செய்ததே பெரிது எனத் தோன்றியது.

“அப்பா, பிளீஸ்ப்பா... தேனு என் கூடவே இருக்கணும்ப்பா... என்னால் இவ இல்லாமல் இருக்க முடியாது...” இதைச் சொல்கையிலே பூமிகா மூச்சுவாங்கத் துவங்க, பதறிப் போனார்.

“பூமி...” ஒரு பக்கம் தேன்மொழி கதற, அவசரமாக தன் கையில் இருந்த ஆக்ஸிஜன் மாஸ்க்கை மகளுக்கு அணிவித்தார்.

“சரி, நாமளே கூட்டி போகலாம்... நீ இப்படி டென்ஷன் ஆகாதே” அவர் சொல்ல, நித்யானந்தம் யார் எனத் தெரிந்த தேன்மொழியின் மாமாவுக்கு ஒரு பக்கம் ஆச்சரியம் என்றால், மறு பக்கம் பெருத்த நிம்மதி.

அடுத்த அரைமணி நேரத்தில், தேன்மொழிக்கென அவசரத்துக்கு அவர்கள் வாங்கிக் கொடுத்த மூன்று செட் உடையோடு, பூமிகாவின் காரில், அவளோடு பயணித்துக் கொண்டிருந்தாள் தேன்மொழி.

பூமிகாவுக்கு எத்தனை நிம்மதியோ, நித்யானந்தத்துக்கு அத்தனை கலவரம். ‘மனைவி என்ன சொல்வாளோ?’ என்பது அவரது பெருத்த யோசனையாக இருக்க, கார் அவர்கள் வீட்டை நோக்கி பயணித்தது.

தேன்மொழியை பார்த்துக்கொண்டு வருகிறேன் எனச் சொன்னவர்கள், அவளோடு வந்து இறங்கினால் பிரபா சும்மா இருப்பாரா என்ன?

சட்டென மூண்ட கோபத்தை மகளின் உடல்நிலை கருதி அடக்கிக் கொண்ட பிரபா, “அவங்களை ரூமில் விட்டுட்டு வாங்க... உங்ககிட்டே பேசணும்” இப்படிச் சொன்ன மனைவியை, ‘இதுவே போதும்’ என்ற நிம்மதியில் பார்த்திருந்தார் நித்யானந்தம்.

அவர்கள் இருவரையும் பூமிகாவின் அறையில் விட, “அப்பா, தேனுக்கு ட்ரஸ் எல்லாம் வாங்கணும்... யூனிஃபாம்... இன்னும்...” இப்படித் துவங்கிய மகளை, வாயில் கை வைத்து தடுத்தார்.

அதே நேரம், தங்கள் வீட்டுக்கு சிறு பையோடு வந்து இறங்கிய புதியவளை, சுவாரசியமான பார்வையோடு பார்த்திருந்தான் ப்ரதிக்.

“எல்லாம் செய்யலாம் பாப்பா... கவனமா இருக்கணும்... அம்மாடி... கொஞ்சம்...” மகளை கலவரப்படுத்திவிடாதே எனச் சொல்ல நினைத்தவர், அவளது இழப்பை கருதி அதை அடக்கிக் கொள்ள,

“நான் பூமியை பாத்துக்கறேன் சார்... அவளை கஷ்டப்படுத்தற மாதிரி எதுவும் செய்ய மாட்டேன்” அவள் சொல்ல, தலையசைத்தவர் வேகமாக இறங்கிச் சென்றார்.

தேன்மொழிக்கு கண்ணைக் கட்டி காட்டில் விட்ட நிலை. அந்த மாமா வீடு அதிகம் மிரட்டி இருந்தது என்றால், பூமிகாவிடம் இருக்கையில் அதன் அளவு பாதியாக இருந்தது, அவ்வளவுதான்.

பெற்றவர்கள் இல்லாமல், சூனியமான நிலையில், அடுத்த வீட்டுக்கு தான் பாரமாக மட்டுமே தெரிவோம் என்ற உண்மையை சில நாட்களிலேயே கண்டு கொண்டிருந்தாள்.

இங்கேயும் பிரபாவின் பார்வை பெரிதான அதிர்ச்சியைக் காட்ட, பூமிகாவிடம் அன்றி, பெரியவர்களிடம் பேசி, தான் அனாதை விடுதிக்குச் செல்வதுதான் சரியாக இருக்கும் என்ற முடிவுக்கு வந்தாள்.

“பூமி... நான் இப்போ வர்றேன்...” அவளிடம் சொல்லிவிட்டு, கீழே இறங்கி வர, அவளை எதிர்கொண்டான் ப்ரதிக்.

“ஹோய்... நீதான் தேன்மொழியா...? சாரி... உன் அம்மா அப்பாதான்... கேஸ் வெடிச்சு இறந்தவங்க இல்ல?” அவன் கேட்க, கண்களில் நீர் பொங்கி விட்டது.

அதைத் துடைத்தவாறே அவள் படிகளில் கீழே இறங்க, ப்ரதிக் வெளியே சென்றுவிட்டான்.

தேன்மொழி, பூமிகாவின் பெற்றவர்களைப் பார்க்கப் போக, அவர்களது அறை எது எனத் தெரியாமல் அவள் நிற்க, “நான் இவ்வளவு தூரம் சொல்றேன்... அதைப் புரிஞ்சுக்காமல்... நம்ம வீட்ல ரெண்டு வயசுக்கு வந்த பசங்க இருக்காங்க.

“இப்போ ஒரு வயசுப் பொண்ணை வீட்ல வச்சுக்கலாம்னு சொல்றீங்க. பஞ்சையும் நெருப்பையும் பக்கத்துல வச்சுட்டு பாத்துட்டே இருப்பேன்னு நீங்க சொல்றது எனக்கு வேடிக்கையா இருக்கு” அவர் சொல்ல, அவர் சொல்வது இன்னதென தெளிவாகப் புரிய, தேன்மொழி அதிர்ந்து போனாள்.

தொடரும்......