• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

வண்ண நிழல்கள் - 6.

Infaa

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jan 7, 2022
915
81
93
Chennai
பகுதி – 6.

மாதங்கள் கடந்து வீட்டுக்கு வந்த தன் பெரிய மகனை கொள்ளை ஆசையில் வரவேற்றார் வடிவு.

“சாமி... வாய்யா... இப்போதான் வீட்டுக்கு வர வழி தெரிஞ்சதா? உள்ள வா...” வாசலுக்கே வந்து தாய் வரவேற்க, அவனுக்கு அத்தனை சந்தோஷம்.

“அம்மா... எப்படிம்மா இருக்கீங்க?” கேட்டவன் வீட்டை அண்ணாந்து பார்த்தான்.

அவனது பங்களா... புதுக்களை அப்படியே இருக்க, வாசலில் கட்டியிருந்த தோரணம், பூ அனைத்தும் அவனை அப்படியே வரவேற்றது.

“எனக்கென்ன சாமி... ரொம்ப நல்லா இருக்கேன். நீதான் ஆளே துரும்பா இளைச்சுட்ட” அவனது கரத்தைப் பிடித்துக் கொண்டு உள்ளே அழைத்துச் சென்றவர், அவனை உச்சிமுதல் பாதம் வரை பார்வையிட்டார்.

“என்னம்மா அப்படிப் பாக்கறீங்க?” அவன் கேட்க,

“இவ்வளவு பணத்தையும் நீ எப்படி சம்பாதிக்கிறன்னு பாக்கறாங்க போல” சொன்னவாறே அங்கே வந்த அறிவு, வாய்விட்டு சிரிக்க, தாய் அவனை முறைத்தார்.

“டேய்... பணம் கிடக்குது... என் புள்ளையை பாத்து எத்தனை மாசமாச்சு” அவரது பார்வை அவனை பாசமாக வருடிக் கொண்டிருந்தது.

“ஹாய் ப்ரோ... என்ன ரெஸ்டிங்கா? இப்போ என்ன மூவி பண்ற?” இப்படிக் கேட்ட தம்பியை விழி விரித்து பார்த்தான்.

‘அண்ணா...’ என ஆசையாக அழைத்து, கோபமாக சண்டை போட்ட தன் தம்பியை எங்கே? எனத் தேடியது அவனது உள்ளம்.

இந்த ஐந்து வருடங்களில் அவன் இழந்தது அதிகம் எனப் புரிந்தது.

“அப்பாவை எங்கம்மா?” அவன் பார்வையை சுழற்ற,

“அதை ஏன் கேக்கற...? ஊர்ல விவசாயம் பாத்துட்டு இருந்த மனுஷனுக்கு, இங்கே சுத்தி இவ்வளவு இடத்தை பாதத்தில் இருந்து தோட்டம் ஒண்ணே கதி.

“ஒரு பக்கம் முழுக்க பூச்செடி, இன்னொரு பக்கம் காய்கறி... வீட்டுக்குப் பின்னாடி இருக்கற இடம் முழுக்க, மா, பலா, வாழை... கொய்யா, சப்போட்டா இப்படி மரமா வச்சு தள்றார்.

“காலையில் விடிஞ்சதில் இருந்து, நைட் தூங்கற வரைக்கும் அது ஒண்ணுதான் வேலை. சாப்பிட வர வேண்டியது, சாப்ட்டுட்டு அங்கேயே போய் இருக்க வேண்டியது.

“இந்த கொடுமைக்கெல்லாம் மேல... நைட் அங்கே ஒரு கட்டிலைப் போட்டு படுத்துக்கறார்ன்னா பாரேன். ரூம்ல ஏசி போட்டிருக்கு, சில்லுன்னு உள்ளே தூங்கலாம்ல்லன்னு கேட்டா,

“ ‘எனக்கு இந்த இயற்கை காத்தும், இந்த மண் வாசனையும் தான் பிடிச்சிருக்கு’ன்னு தத்துவம் பேசறார். துணைக்கு அம்மாவை வேற கூப்ட்டுக்கறார்ன்னா பாரேன்...” அவன் சொல்லி சிரிக்க, வடிவு அவன் தோளிலேயே அடி போட்டார்.

“என்னடா கிண்டலா இருக்கா? உங்களுக்கு பிடிச்ச மாதிரி நீங்க இருக்கீங்க. அவருக்கு பிடிச்ச மாதிரி அவர் இருக்கறார். இதில் என்ன தப்பிருக்கு?” கணவனுக்காக அவர் பரிந்துகொண்டு வர, இளையவர்கள் இருவரும் சிரித்துக் கொண்டார்கள்.

“தப்புன்னு யார் சொன்னா? சும்மா வாழ்றீங்கன்னு தானே சொன்னேன்” அவன் நியாயம் பேச, அவனது காதைப் பிடித்து முறுக்கினார்.

“ஆ... அம்மா... விடுங்கம்மா... வலிக்குது” அவன் அலற,

“அப்படி ஒண்ணும் வலிக்காது...” அவனது நடிப்பை பார்த்து இன்னும் காதை வலிக்க முறுக்கினார்.

“வலிக்காதுன்னாலும் நான் பெர்ஃபாம் பண்ணா தான காதை விடுவீங்க” சொன்னவன் தாயின் கரத்தில் இருந்து காதை உருவிக் கொண்டு, தாயை பின்னால் இருந்து கட்டிக் கொண்டான்.

தன் முகத்தை தாயின் பின்னங்கழுத்தில் வைத்து தேக்க, “எலேய்... புருபுருன்னு பண்ணாதடா, கூசுது... இவனோட இது ஒரு தொல்லை. ஆஊன்னா கட்டிக்கிருவான்” மகனின் கன்னம் வருடி சிலாகிக்க, விஷ்வா அதை ஆசையாகப் பார்த்திருந்தான்.

அவனும் ஒரு காலத்தில் தாயிடம் இப்படி விளையாடியவன் தான். ஆனால் இன்று தாயை தொட்டுப் பேசக் கூட அத்தனை தயக்கமாக இருந்தது. தாய்க்குத் தெரியாமல் அவன் வாழ்வில் நடந்த, நடக்கும் நிகழ்வுகள் எல்லாம் ஒரு குற்றவுணர்வைக் கொடுக்க, சற்று விலகியே நின்றான்.

“என் அம்மாவோட இந்த வாசனை எனக்கு ரொம்ப புடிக்கும்மா...” அவன் கொஞ்ச, அவன் கன்னம் கிள்ளி முத்தம் வைத்தார்.

“கொஞ்சுறது கிடக்கட்டும், உனக்கு காலேஜுக்கு போக நேரமாவல?” சின்ன மகனிடம் தாய் கேட்க, தாயை இன்னும் கட்டிக் கொண்டான்.

“நேரமாவுது தான்... நீங்கதான் இன்னும் சோத்தைப் போடவே இல்லையே. அதைத் திங்காம எப்படி போறது?” அவன் கேட்க,

“ஐயோ... இவனை எதிர்பாத்து உக்காந்து, அதை மறந்துட்டேன் பாரேன். வா ராசா...” சின்ன மகனை அவர் அழைத்துச் செல்ல, விஷ்வாவுக்கு ஏக்கமாக இருந்தது.

என்னவோ தான் அவர்களை எல்லாம் விட்டு அன்னியப்பட்டுப்போன உணர்வு.

“எய்யா... போய் குளிச்சுட்டு சாப்பிட வா...” தாய் அழைக்க,

“சரிம்மா... நான் வர்றேன்...” சொன்னவன், அங்கிருந்த அகலமான படிகளில் மாடி ஏறினான்.

முன்னர் இருந்த ஒற்றைப் படுக்கையறை கொண்ட வீட்டுக்கு மேலே இருந்தது அவனது ஒரு அறை. நான்குபேர் தாராளமாக படுத்து உருளலாம் என்னும் அளவுக்கான குயின் சைஸ் படுக்கை அவனை வரவேற்க, அமைதியாக அதில் சென்று அமர்ந்தான்.

இந்த வீடு கட்டுவதற்கு ஒரு வருடங்களுக்கு மேல் ஆகி இருக்க, இந்த வீட்டின் பிளானை பார்த்த பிறகு, கட்ட ஆரம்பித்த பிறகு, இரண்டு மூன்றுமுறை மட்டுமே இங்கே வந்து பார்த்திருக்கிறான்.

அவனது தந்தை இரவு பகல் பாராமல் உடனிருத்து கட்டிய வீடு. பணம் என்னவோ அவனோடதுதான்... ஆனாலும் அதை ஒரு பொருளாக, மனதுக்குப் பிடித்தவர்களோடு பகிர்ந்து இருப்பதில் மனம் நிறைந்து போனது.

படுக்கையில் சில நிமிடங்கள் புரண்டவன், நேரமாவதை உணர்ந்து எழுந்து குளித்து முடித்து கீழே வர, அவனது தந்தை அவனுக்காக காத்திருந்தார்.

“அப்பா...” அழைத்தவன் அவர் அருகே செல்ல,

“வாப்பா... நல்லா இருக்கல்ல? சாப்ட்டியா? நீ வர்றேன்னு சொல்லி இருந்தா மார்க்கெட் போய் மீன் வாங்கிட்டு வந்திருப்பேன்”.

“ம்கும்... நீங்க வாங்கிட்டு வந்து, நல்லா செஞ்சு வைப்பீங்க. பிறகு எல்லாத்தையும் நாமதான் தின்னு தீக்கணும். அவன் வர்றேன்னு சொல்லிட்டு என்னைக்கு வந்திருக்கான்?” அறிவு பட்டென கேட்க, அவனுக்கு பெருத்த கோபம்.

“டேய்... நான் என்ன பார்ட்டி, கொண்டாட்டம்னு உன்னை மாதிரி ஊர் சுத்தறேன்னு நினைக்கறியா? நீ இப்போ உல்லாசமா சுத்துறியே... இதெல்லாம் நான் சம்பாதிக்கறதால் தான்... முதல்ல அதைப் புரிஞ்சுக்க” அவன் பட்டென சொல்ல, சின்னவனின் முகம் அப்படியே சுண்டிப் போனது.

“அண்ணே... நான் தப்பா எல்லாம் சொல்லலை... வழக்கமா நீ வருவன்னு எல்லாம் செஞ்சு வச்சு காத்திருந்து, இவங்க ஏமாந்துதான் போவாங்க, அந்த ஆதங்கத்தில் தான் பேசினேன்” அவன் இறைஞ்சும் குரலில் சொல்ல, விஷ்வாவுக்கு ஒரு மாதிரியாகிப் போனது.

“சரி விடுடா... நானும் கொஞ்சம் அப்சட் ஆயிட்டேன்”.

“இதெல்லாம் உன் பணம், நான் அனுபவிக்கலாம், ஆனா உரிமை கொண்டாட முடியாதுன்னு எனக்கும் தெரியும்ண்ணா. நான் படிச்சு முடிச்சு, எனக்கு ஒரு நல்ல வேலை கிடைச்சுட்டா, இங்கே இருந்து போய்டுவேன்” சொன்னவன் சாப்பாட்டில் இருந்து எழுந்து செல்ல,

“சின்னவனே... இதென்ன பாதி சாப்பாட்ல எந்திரிக்கறது? உக்காந்து சாப்ட்டு போ” தாய் அவனை கண்டிக்க, மறுப்பாக தலை அசைத்தான்.

“இதுவும் அவன் சம்பாதிச்சதுதான்ம்மா... நான் சொல்லல... இவன் மாறிட்டான்னு, நீங்கதான் நம்பலை...” தன் கையை கழுவிக் கொண்டு, தன் பைக்கை கூட எடுக்காமல் விருட்டென சென்றான்.

“அறிவு... நான்தான் தெரியாமல் சொல்லிட்டேன்னு சொல்றேனே...” அவன் பின்னால் வந்தவன் கத்தினான்.

“இதை நீ முதல்முறை சொல்லலை...” அத்தனை பொறுமையாக அவன் சொல்லிச் செல்ல, அவனிடம் அறை வாங்கிய உணர்வு.

“நான் அப்படி என்ன சொல்லிட்டேன்னு அவன் இப்படி பிஹேவ் பண்ணிட்டு போறான்? நான் சம்பாதிக்கறது எல்லாம் யாருக்கு? உங்களுக்காகத்தான?” அவன் ஆதங்கமாக கேட்க, பெரியவர்களிடம் பெருத்த அமைதி.

“சரிப்பா விடு, சின்னப்பையன் ஏதோ தெரியாமல் பேசிட்டு போறான். நீ வா... வந்து சாப்பிடு...” தாய் அழைக்க,

“நீங்க என்ன அவனுக்கு சப்போட் பண்ற மாதிரியே பேசறீங்க? வீட்டுக்கு வா... வான்னு கூப்பிட வேண்டியது. வந்தா இவ்வளவு பிரச்சனை... ச்சே... ஒரு நிம்மதியும் இல்லை...” அவன் காட்டு கூச்சல் போட, பெரியவர்களுக்கு எதுவும் சொல்ல முடியாத நிலை.

“கொஞ்சம் பொறுமையா இருப்பா... முதல்ல சாப்பிடு வா...” அவன் கோபத்தை கண்டுகொள்ளாமல் அவனை அழைத்தார்.

“உங்களுக்கு இப்போ இந்த சாப்பாடுதான் முக்கியமா போச்சா?” அவன் அதற்கும் கத்த, அவனது தந்தை அமைதியாக அங்கிருந்து வெளியேறிவிட்டார்.

அதைப் பார்த்தவன், “என்னம்மா இது? ஆளாளுக்கு இப்படிப் பண்ணா எப்படி? பிறகு யாரைப் பாக்க நான் இங்கே வாறேனாம்?” அவனுக்கு தனது முன்கோபம்தான் பெரும் எதிரி என்பது புரியவே இல்லை.

அவன் தன் கையை மீறி நிற்கையில், வடிவாலும் எதையும் சொல்ல முடியவில்லை. அவனது கோபத்தை சுட்டிக் காட்டினால், அதற்கும் அவன் பெரும் கோபம் மட்டுமே கொள்வான் என்பது புரிய, அமைதியாக இருக்கையில் அமர்ந்துவிட்டார்.

“சாமி... இப்படி வந்து உக்காரு...” அவர் அழைக்க,

“என்ன அட்வைஸ் பண்ணி கொல்லப் போறீங்களா? இதைக் கேட்டாலே இன்னும் கடுப்பாவுது. அப்படி நான் என்ன தப்பு பண்றேன்னு ஆளாளுக்கு என்னை திருத்தப் பாக்கறீங்க?” அவனுக்கு தான் செய்யும் தவறு புரியவே இல்லை.

அவனது இந்த முன்கோபம் எத்தனை பெரிய ஆபத்தானது என்றும், அதன் எதிர்வினைகள் அவனை தனிமரமாக்கும் என்பதும் சுத்தமாகப் புரியாமலே போனது.
 

Infaa

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jan 7, 2022
915
81
93
Chennai
“நான் சம்பாதிக்கறேன்... கொஞ்சம் அப்படி இப்படித்தான் இருப்பேன். ஏன் அட்ஜஸ்ட் பண்ண மாட்டானாமா? நான் எவ்வளவு கஷ்டப்படறேன்னு எனக்கு மட்டும்தான் தெரியும்.

“தூங்கறதுக்கு கூட நேரமில்லாமல், உடம்பை வருத்தி உழைச்சால்... என்னவோ கொலைக்குத்தம் பண்ண மாதிரி ட்ரீட் பண்ண வேண்டியது. எனக்கு எதுவும் வேண்டாம் போங்க...” சொன்னவன் அங்கிருந்து அகன்று தன் அறைக்குச் செல்ல, வடிவுக்கு அத்தனை வருத்தம்.

‘முன்ன எல்லாம் என் பிள்ளை இப்படி இல்லையே...’ எண்ணியவர் கண்ணீர் விட, அவரது தோளில் ஒரு கரம் வந்து விழுந்தது.

“என்னங்க... இவன் என்னங்க இப்படி மாறிட்டான்? ஊரு உலகத்துல சம்பாதிக்கற பசங்க எல்லாம் இப்படித்தான் மாறிடுவாங்களா என்ன?” தன் கணவரிடம் வருத்தமாக கேட்க, அவரால் பதில் சொல்ல முடியவில்லை.

“நீ அவனை நினைச்சு உடம்பை வருத்திக்காத... விடு... கொஞ்ச காலம் போனா, அவனுக்கே மனுஷங்க அருமை புரிஞ்சுடும்” மனைவியின் அருகே அமர்ந்தவர், அவர் முன்னால் தட்டை எடுத்து வைத்து பரிமாறினார்.

அதைப் பார்த்த வடிவு, “அந்த ஒண்டி குடித்தனத்தில், பழையசோறு சாப்ட்டப்போ இருந்த நிம்மதி, இந்த பங்களாவில் இல்லையேங்க” பெரும் வருத்தமாக சொல்ல, கோட்டைச்சாமிக்கும் அதே நினைப்புதான்.

“அப்பாங்க சம்பாத்தியத்தில் புள்ளைங்களுக்கு இருக்கற உரிமை, புள்ளைங்க சம்பாத்தியத்தில் அப்பாங்களுக்கு இருக்கறது இல்லை வடிவு. நாளையில் இருந்து நான் ஆட்டோ ஓட்டலாம்னு இருக்கேன், நீ என்ன சொல்ற?” அவர் கேட்க,

“அது அவனுக்கு தெரியவந்தா, இன்னும் கத்துவானேங்க” இப்படிச் சொன்ன மனைவியை வருத்தமாக ஏறிட்டார்.

“அது அவனுக்கு தெரிய வந்தா தானே... நம்மளோட கடைசி காலத்துக்குன்னு தெரிஞ்சு செஞ்சானோ, தெரியாமல் செஞ்சானோ... ஃபிக்ஸட்ல அவன் போட்டு வச்சிருக்க பணத்துக்கு வட்டியே நம்மளுக்கு போதும் தான்...

“அவனே இது என் வீடு, இந்த வீட்டை விட்டு போய்டுங்கன்னு சொல்ல முன்னாடி, நாமளே போய்ட்டா, நமக்கு கொஞ்சம் கௌரவமா இருக்கும். நானும் என் உடம்பில் தெம்பு இருக்கற வரைக்கும் ஆட்டோ ஓட்டி சம்பாதிக்கறேன்...” அவர் சொல்லிக்கொண்டே போக, வடிவு கண்ணீர் வடித்தார்.

“நம்ம புள்ள இப்படியெல்லாம் பேசுவான்னு நான் எதிர்பாக்கவே இல்லைங்க” அவர் புலம்ப, அவர் மட்டும் எதிர்பார்த்தாரா என்ன?

அவனைப் பெற்றவர்கள் இங்கே இவ்வளவு வருத்தப்பட, அவனோ ‘நிக்கி’யோடு அலைபேசியில், வீடியோ காலில் சல்லாபித்துக் கொண்டிருந்தான்.

கண்ணாடிக் கல்லுக்கும், வைரக்கல்லுக்கும் வித்தியாசம் தெரியாமல் போனது யார் பிழை?

*** “ஏய்... என்ன...? நின்னுட்டே தூங்கறியா?” பிரபாவின் குரல் திடுமென கிச்சனுக்குள் கேட்க, அதிர்ந்து விழித்தவள், வேகமாக அடுப்பை பற்றவைத்தாள்.

“உன்னை அவளை பாக்கச் சொன்னா, நீ இங்கே என்ன பண்ற?” பிரபா விடாமல் கத்தினார்.

“அது... பூமி குடிக்க தண்ணி வேணும்னு கேட்டா, அதான்... அதை எடுக்க வந்தேன்”.

“இன்ட்டர்க்காம்ல கேக்க வேண்டியது தானே...” அவர் அதற்கும் பேச, இவளோ விழித்தாள்.

‘பூமிக்கு என்னன்னு தெரிஞ்சுக்க வந்தேன்’ என அவரிடம் சொல்ல முடியாமல் அமைதியானவள், தண்ணீர் வெதுவெதுப்பாக சூடாகவே, பிளாஸ்கில் ஊற்றிக் கொண்டாள்.

“தண்ணி வேணுமா மேம்?” பிரபாவிடம் கேட்க,

“ம்... குடு...” அவர் கேட்கவே, மீதம் இருந்த தண்ணீரை டம்ப்ளரில் ஊற்றி அவருக்கு கொடுத்தாள்.

அவர் குடித்து முடிக்கவே, டம்ப்ளரை வாங்கி கழுவி வைத்தவள், அங்கிருந்து செல்ல முயல, “பூமிக்கு என்னன்னு சொன்னாங்கன்னு தெரிஞ்சுக்க தான வந்த?” பிரபாவின் குரல் அவளைத் தேக்க, கிச்சனுக்கு வெளியே வந்துவிட்டவள், நின்று அவரைத் திரும்பிப் பார்த்தாள்.

“பிரபா... எதுவும் சொல்ல வேண்டாம்... அவளை அனுப்பு...” நித்யானந்தம் அங்கே வர, பிரபாவின் முகம் இறுகிப் போயிருந்தது.

“நீயே சொல்லு... உனக்கு தெரிஞ்சுக்கணுமா? இல்லையா?” பிரபா அவளிடம் கேட்க,

“தேன்மொழி, நீ போ...” நித்யானந்தம் அவளைப் போகச் சொல்ல, அவளது பார்வை பிரபாவைத்தான் பார்த்துக் கொண்டிருந்தது.

“உன்னையும் திருத்த முடியாது, இவளையும் திருத்த முடியாது... என்னவோ செய்...” சொன்னவர், அங்கிருந்து செல்ல முயல,

“ரூம்ல இருங்க... உங்ககிட்டே நான் பேசணும்...” இப்படிச் சொன்ன மனைவியை எதுவும் செய்ய முடியாமல், அங்கிருந்து சென்றார்.

கணவர் செல்லவே, “பூமி என்ன சொன்னா?” அவளிடம் கேட்க, தேன்மொழியோ விழித்தாள்.

“என்ன... அவ எதுவும் சொல்லலையா? அவளுக்கு அதிகபட்சம் மூணு மாசம் டைம் கொடுத்திருக்கார். அவளோட ஹார்ட் வால்வு கொஞ்சம் கொஞ்சமா பழுதாயிட்டே வருது. அதை மாத்தலாம்ன்னா, அவளோட ஹார்ட் அதை ஏத்துக்கற வலுவில் இல்லையாம்” அவர் சொல்லச் சொல்ல, தேன்மொழி விக்கி விக்கி அழத் துவங்கி இருந்தாள்.

“அவளோட நாள் நெருங்கிட்டு இருக்கு... உனக்கும் அது தெரியணும்னு நான் நினைக்கறேன்” அவர் சொல்ல, அவளால் தாங்கிக் கொள்ளவே முடியவில்லை.

இது ஒன்றும் அவளுக்குத் தெரியாத விஷயம் இல்லை. ஆனால்... தன் உயிர் தோழி நாட்களை எண்ணுகிறாள் என்பதை அவளால் ஏற்க முடியாமல் திணறினாள்.

“அவ முன்னாடி இப்படி அழுதுத் தொலையாத... போ...” அவர் சொல்ல, முடிந்த அளவுக்கு தன்னை மீட்டுக் கொள்ளப் போராடினாள்.

“மேடம்... இன்னொரு விஷயம்... நான் உங்ககிட்டே சொல்லணும்” அவள் சொல்ல, அவளை கூர்மையாக ஏறிட்டார்.

“ப்ரதிக் என்ன பண்ணான்?” அவர் நேரடியாக கேட்டுவிட, அவள் அதிர்ந்துவிடவெல்லாம் இல்லை.

“அது... அது...” திணறியவள், தன் கன்னத்தை கரத்தால் வருட, அவள் சொல்ல வருவது அவருக்குப் புரிந்து போனது.

“ஓ... அவ்வளவு தூரம் போயாச்சா? அவனை கன்னம் கன்னமா அறைஞ்சு துரத்தி விட வேண்டியது தானே...?” அவர் கேட்க, அவளால் பதில் சொல்ல முடியவில்லை.

‘நான் உங்ககிட்டே சொல்லிட்டேன்... நீங்க என்ன செஞ்சீங்க?’ அவளால் அந்த கேள்வியை மனதுக்குள் கேட்க முடிந்ததே தவிர, அவரிடம் நேரடியாக கேட்க முடியவில்லை.

“நீ போ... நான் அவனைப் பாத்துக்கறேன்” அவர் சொல்ல, அவளுக்கு என்னவோ நம்பிக்கை சுத்தமாக இல்லை.

அவன் தன்னிடம் ‘காதல்’ எனப் பிதற்றிய அன்றே அவரிடம் போய் சொல்லிவிட்டாள். அவனை அவர் கண்டித்து வைப்பார், ப்ரதிக் தன் பக்கமே வர மாட்டான் என நினைக்க, காதல் எனப் பிதற்றியவன், தொட்டு பேசத் துவங்கி, இன்று கன்னத்து முத்தம் வரைக்கும் வந்துவிட்டான்.

அவன் தன்னைத் தொட்டுப் பழகாமல் இருக்கும் வரைக்கும்தான் அவனை விலக்கி நிறுத்த முடியும், அதற்கு மேலே அவனை அவளால் நிறுத்த முடியாது என்பது அவளுக்குத் தெளிவாகத் தெரிந்தது.

அவள் அங்கிருந்து செல்லவே, பிரபா தன் கணவனைத் தேடி வர, “அவ சின்னப் பொண்ணு, அவகிட்டே இவ்வளவு கோபத்தை காட்டணுமா? அது மட்டுமில்லை, பூமியோட விஷயம் அவளுக்குத் தெரிஞ்சாகணும்னு என்ன அவசியம் வந்தது?” இப்படிக் கேட்ட கணவனை அசட்டு சிரிப்போடு ஏறிட்டார்.

“நீங்க என்ன நினைக்கறீங்க? பூமி போன உடனே, இவளுக்கும் இன்னொரு பாடை கட்டிடலாம்ன்னா?”.

“பிரபா...” மனைவி இப்படி கேட்கவே, அதிர்வும் கோபமும் கலக்க, சற்று கோபமாகவே கத்தினார்.

“அவளோட வாழ்க்கையை அவ வாழ வேண்டாமா? அவளுக்குன்னு இங்கே என்ன சந்தோஷம் இருக்கு? அவ எதையாவது ஆசைப்பட்டு கேட்டு, வாங்கி நீங்க பாத்திருக்கீங்களா?”.

“அவ கேக்க முன்னாடியே, அவளுக்கு வேண்டியதை எல்லாம் பூமிக்கு செய்யற மாதிரியே நாம செய்யறோமோ?” புரியாமல் கேட்டார்.

“கேக்கறதுக்கு முன்னாடியே கொடுக்கற திருப்தி உங்களுக்கு இருக்கலாம். ஆனா அது அவளுக்குப் பிடிக்குதான்னு உங்களுக்குத் தெரியுமா? பூமி, பூமி, பூமி... அவளைச் சுத்தியே வாழறா.

“அவ இல்லாமல் போற நாள்... இவளை என்ன சொல்லி தேற்றுவோம்னு ஏதாவது யோசிச்சு வச்சிருக்கீங்களா?” மனைவியின் கேள்வியில், நொறுங்கிப் போய் அமர்ந்துவிட்டார்.

‘அதுதானே... இவள் கேட்பதும் நியாயம் தானே... பூமிதான் அவ வாழ்க்கையா? அவ இல்லன்னா என்ன ஆவா?’ நினைக்கையிலேயே அவர் நெஞ்சம் நடுங்கியது.

“இன்னொரு விஷயம்... இத்தனை வருஷத்தில் என் பொண்ணு என்ன சந்தோஷத்தை அனுபவிச்சு இருக்கா? உங்க பிடிவாதத்துக்குப் பொறந்து, கஷ்டப்பட்டது மட்டும்தான் மிச்சம்...” கோபமாக கத்திவிட்டு செல்ல, தலையில் கை வைத்து அமர்ந்துவிட்டார் நித்யானந்தம்.

தொடரும்.....
 

saru

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jan 24, 2022
257
13
28
Hosur
Poranthuruchi
Atheye enna iruthukitu yriyara
Pava povane sollu
Avala happya anupi vaikalame
Dr kita pesuratha partha pasama triuthu
Analum ethuku ipdi pandranga
Oruvela pasatha kottita Ava ilaa porapa atha kadapathu kadinamnu ipadi pandrangala
Analum writer antha alavu pova viduvangala enna
Ava heroine ache
Ha ha vishwa pana ellathaum vaangathu pa
Evlo kodi kodi ya sambarichalum un pazhakam un nadavadikai oru nimodathil kazhi pannidum
Apram panam mattume kooda irukum
 
  • Love
Reactions: Infaa

Infaa

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jan 7, 2022
915
81
93
Chennai
Poranthuruchi
Atheye enna iruthukitu yriyara
Pava povane sollu
Avala happya anupi vaikalame
Dr kita pesuratha partha pasama triuthu
Analum ethuku ipdi pandranga
Oruvela pasatha kottita Ava ilaa porapa atha kadapathu kadinamnu ipadi pandrangala
Analum writer antha alavu pova viduvangala enna
Ava heroine ache
Ha ha vishwa pana ellathaum vaangathu pa
Evlo kodi kodi ya sambarichalum un pazhakam un nadavadikai oru nimodathil kazhi pannidum
Apram panam mattume kooda irukum

அவளை இப்படி வாரிக் கொடுக்க, பெற்றே இருக்க வேண்டாம்னு யோசிக்கறாங்க.

விஷ்வாவுக்கு எல்லாமே ஒரு நாள் புரியும்.

நன்றி!
 

Kothai Suresh

Vaigai - Avid Readers (Novel Explorer)
Aug 2, 2021
121
8
28
INDRANAGAR ADYAR
பிரபா ஆதங்கம் சரிதான்.
விஷ்வா முன் கோபத்தை குறைக்கணும்