• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

வண்ண நிழல்கள் - 7.

Infaa

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jan 7, 2022
915
81
93
Chennai
பகுதி – 7.

மனைவி சொல்வதில் இருந்த உண்மை புரிய, தன் மகளுக்கென ஏதாவது செய்தாக வேண்டும் என அந்த தந்தையின் உள்ளம் தவித்தது. அவளுக்கென மிச்சமிருக்கும் இந்த மூன்று மாதங்களாவது அவள் தன்னைக் குறித்த கவலை இல்லாமல் இருக்க வேண்டும் என நினைத்தார்.

வேகமாக தன் அலைபேசியை எடுத்தவர், கிராமத்தில் இருக்கும் தன் அக்காவுக்கு அழைக்க, தந்தையின் சொத்தைப் பிரிப்பதில் ஏற்பட்ட பிரச்சனையில் பேச்சு விட்டுப் போயிருந்த அக்காவுக்கு, தன் தம்பி திடீரென அழைக்க பெருத்த ஆச்சரியம்.

கூடவே மனசும் உடலும் பதற, ‘பூமிகாவுக்கு எதுவுமோ?’ என்ற எண்ணம் கொடுத்த அதிர்வில், வேகமாக அலைபேசியை எடுத்தார்.

“தம்பி... சொல்லுப்பா...” தன் அழைப்பை அக்கா எடுக்கவே மாட்டாரோ?’ என எண்ணி இருந்தவருக்கு, தன் அக்கா அழைப்பை ஏற்றதே பெருத்த நிம்மதியாக இருக்க, அவரது பதட்டம் கண்டு சற்று கலங்கினார்.

“அக்கா, எப்படிக்கா இருக்க?” தம்பி இப்படி கேட்ட பிறகுதான் அவருக்கு சற்று நிம்மதியாக இருந்தது.

“எங்களுக்கு என்னப்பா, எல்லாரும் நல்லா இருக்கோம். அங்கே எல்லாரும் எப்படி இருக்கீங்க? பூமி... பூமி நல்லா இருக்கா தானே...” தன் அக்கா இப்படிக் கேட்க, வாய்விட்டே அழுதுவிட்டார்.

“ஆனந்தம்... என்னப்பா இது? எதுக்கு அழற? அவளுக்கு ஒண்ணும் இல்ல தானே...” சற்று பதறினார்.

“அவளைப்பத்தி பேசத்தான்க்கா போன் பண்ணேன்... எனக்கு உன்கிட்டே கொஞ்சம் பேசணும்க்கா... நான் அங்கே வரவா?” மகளை விட்டு எங்கும் அசையாதவன், ‘வரவா?’ எனக் கேட்டதே அதிசயமாக இருக்க,

“இதென்னப்பா கேள்வி? இது உன் அக்கா வீடு, நீ எப்போ வேண்ணா வரலாம்” அவர் அழைக்க,

“நான் நாளைக்கே வர்றேன்க்கா...” சொன்னவர் அலைபேசியை வைத்துவிட்டார்.

நித்யானந்தத்தில் அக்கா காவேரிக்கு பலத்த யோசனைதான். அப்பாவின் சொத்தில் பாதி அவருக்கும் வேண்டும் என காவேரி சண்டை போட, ‘சொத்தில் பங்கில்லை, ஆனால் பணமாகத் தருகிறேன்...’ எனச் சொல்லி நித்யானந்தம் பணத்தைக் கொடுத்துவிட்டார்.

அது அவர்களது அப்பாவின் சுய சம்பாத்தியம், அது மனைவிக்கு போயிருக்க, தாய் அதை மகனுக்கென பாதியையும், மிச்சத்தை தன் பேத்திக்கும் என எழுதி வைத்துவிட்டு இறந்துவிட்டார்.

எனவே கோர்ட் படியேறி, சொத்தில் பங்கு வேண்டும் என அவரால் போராட முடியவில்லை. அந்த கோபத்தில் தம்பியோடான பேச்சை முறித்துக் கொண்டார்.

அவரது கணவனும் போன வருடம் மாரடைப்பில் அகால மரணம் அடைந்திருக்க, ஓடோடி வந்த நித்யானந்தம்தான் அனைத்தையும் முன்னின்று நடத்திக் கொடுத்திருந்தார்.

அதிலேயே தம்பியின் மீதான கோபம் காணாமல் போயிருக்க, தம்பியிடம் இத்தனை வருடங்கள் கோபம்கொண்டு இருந்துவிட்டு, திடுமென அவனோடு உறவை வளர்க்கத் தயங்கி விலகி நின்றிருந்தார்.

இப்பொழுது தம்பியே பேச, அவருக்கு அளவிட முடியாத சந்தோஷம். அதுவும் வீட்டுக்கே வருகிறேன் எனச் சொல்ல, ‘என்னவாக இருக்கும்?’ என்ற யோசனைதான்.

“என்னம்மா போனைக் கையில வச்சுட்டு அப்படியே நிக்கறீங்க? யார் போன் பண்ணா?” பிஈ முடித்து, பக்கத்து ஊரில் இருக்கும் குடை கம்பெனியில் மேனேஜர் வேலை பார்க்கும் தன் மகன் சிவா வந்து கலைக்கும் வரைக்கும் யோசனையிலேயே இருந்தார்.

“ஹாங்... என்னப்பா கேட்ட?” அவர் அவனிடம் திருப்பிக் கேட்க,

“சரியா போச்சு போங்க... யார் போன் பண்ணா? என்ன யோசனைன்னு கேட்டேன்?”.

“அதுவாப்பா... உன் மாமா தான் போன் பண்ணான். நாளைக்கு இங்கே வர்றானாம்”.

“நாளைக்கா? இங்கேயா? என்னவாம்?”.

“அதுதான்ப்பா எனக்கும் தெரியலை... அந்த யோசனையில தான் அப்படியே உக்காந்துட்டேன்”.

“சரி விடுங்க... எதுவா இருந்தாலும் நாளைக்கு தெரியப் போகுது... இப்போ எழுந்து எனக்கு சாப்பாடு போடுங்க... வாங்க...” அவன் அழைக்க, எழுந்து சென்று மகனுக்கு சாப்பாட்டைப் பரிமாறினார்.

“சிவா, நாளைக்கு தம்பி வர்றானே... கொஞ்சம் லீவ் போடறியா?” சற்று தயக்கமாகவே கேட்டார்.

“அம்மா, என்ன விளையாடறீங்களா? எனக்கு இப்போ ப்ரோபேஷன் பீரியட் தான் நடக்குது. இந்த ஒரு வருஷத்தில், மொத்தமே ஆறு நாள்தான் எனக்கு லீவ் இருக்கு.

“அதிலும் நாலு நாள் ஏற்கனவே லீவ் போட்டாச்சு... மிச்சம் இருக்கற நாலு மாசத்துக்கு, இன்னும் ரெண்டு நாள்தான் இருக்கு. அதில் ஒண்ணு போனா, மிச்சம் இருக்க ஒரு நாளை வச்சு என்ன செய்யறது?

“ஏதாவது அவசரத்துக்குன்னா அந்த ஒரு நாள் போதுமா? அவர் உங்களைப் பாக்கத்தானே வர்றார்... பேசி அனுப்புங்க. என்னைப் பாக்கணும்ன்னா சாயங்காலம் வரைக்கும் வெயிட் பண்ணச் சொல்லுங்க” சொல்லிவிட்டு, உணவை முடித்துக் கொண்டு கிளம்பிவிட்டான்.

மகன் சொல்வதில் இருக்கும் நியாயம் புரியவே, அமைதியாக இருந்துவிட்டார்.

அன்றைக்கு இரவே, ‘அக்காவைப் பார்க்க காரில் கிளம்புகிறேன்’ எனச் சொன்ன கணவனை புருவம் நெரியப் பார்த்தார் பிரபா.

“என்ன திடீர்ன்னு ஒரு அக்கா பாசம்?” ஆராய்ச்சியாக அவரைப் பார்த்தவாறே கேட்டார்.

“ஏன்... என் அக்காவை நான் பாக்க போகக் கூடாதா?” செல்லும் விஷயம் பழம் எனத் தெரியும் வரைக்கும், மனைவியிடம் மூச்சு கூட விடக் கூடாது என எண்ணிக் கொண்டார்.

“தாராளமா போகலாம்... ஆனா உங்க அம்மா இறந்த இந்த நாலு வருஷத்தில், சுத்தமா உறவை முறிச்சுகிட்டாங்களே அதுக்குத்தான் கேட்டேன்” சொன்னவர் அதற்கு மேல் எதுவும் சொல்லவில்லை.

அன்று இரவே ட்ரைவரை அமர்த்திக்கொண்டு நாகர்கோவிலில் இருக்கும் தன் அக்காவைக் காண கிளம்பிவிட்டார்.

விடியற்காலையில் வாசலில் வந்து இறங்கிய தம்பியைப் பார்த்த காவேரிக்கு, கையும் ஓடவில்லை, காலும் ஓடவில்லை.

“தம்பி... வாப்பா... உள்ளே வா...” அக்கா அழைக்க, அவளது வீட்டுக்குள் சென்றார்.

தாய் ஏற்கனவே குரல் கொடுத்துவிட்டுத்தான் வாசலுக்கு அவரை வரவேற்கச் சென்றதால், உறங்கி எழுந்த முகத்தோடு வந்து அவரை வரவேற்றான் சிவா.

“வாங்க மாமா... எப்படி இருக்கீங்க? ஊர்ல எல்லாம் எப்படி இருக்காங்க?” கை மறைவில் ஒரு கொட்டாவியை வெளியேற்றியவாறே அவரிடம் கேட்டான்.

“ம்... எல்லாரும் நல்லா இருக்கோம்... வந்து தூக்கத்தை கெடுத்துட்டனோ?” அவனிடம் கேட்டார்.

“அதெல்லாம் இல்லை, நான் வழக்கமா எழற நேரம் தான்... நீங்க கொஞ்சம் தூங்கி எழுந்து பிரஷ் ஆகுங்க... உக்காந்தே வந்தது முதுகு வலிக்கும். அம்மா அந்த ரூமைக் காட்டுங்க...” அவரிடம் சொன்னவன், தாய்க்கும் குரல் கொடுக்க, வேகமாக செயல்பட்டார்.

“கொஞ்சம் டீ குடிச்சுட்டு படுத்துக்கப்பா...” சொன்னவர் வேகமாக செயல்பட, அடுத்த கொஞ்ச நேரத்தில் படுக்கையில் ஆழ்ந்த நித்திரையில் இருந்தார்.

வண்டியில் வருகையில் எல்லாம், ‘விஷயத்தை எப்படி பேசுவது?’ என்ற யோசனையிலேயே அவர் வந்திருக்க, சரியாக உறங்கவில்லை.

இங்கே வந்து அவர்களைப் பார்த்தவுடன், சிறு நம்பிக்கையும், தைரியமும் பிறக்க, தன்னை மீறி தூங்கிவிட்டார்.

அலுவலகத்துக்கு கிளம்பி வந்தவன், “மாமாவை எங்கம்மா?” தாயிடம் கேட்க,

“அவன் நல்ல தூக்கம்ப்பா... எழுப்பலாம்னு போனா, அவன் தூங்கறதைப் பாத்துட்டு எழுப்ப மனசே வரலை” ‘அவன் நிம்மதியாகத் தூங்கி எத்தனை நாள் ஆயிற்றோ?’ என்று எண்ணிக் கொண்டார்.

“சரி விடுங்க... எப்படியும் இன்னைக்கு நைட் தானே கிளம்புவார்... அப்போ பாத்துக்கறேன்” சொன்னவன் உணவில் கவனமானான்.

“சிவா, சாயங்காலம் கொஞ்சம் சீக்கிரம் வர்றியா?” சற்று தயங்கியே மகனிடம் கேட்டார்.

“ம்... சரிம்மா... நாலு மணிக்கு பெர்மிஷன் போட்டு வர்றேன்” அவன் சொல்ல, அவருக்கு அதுவே போதுமானதாக இருந்தது.

“நீங்க சாப்பிடல?” தாய் தன்னோடு சேர்ந்துதான் உணவு உண்பார் என்பதால் கேட்டான்.

“அதான் தம்பி வந்திருக்கானே, நான் அவனோட உக்காந்து சாப்பிடறேன்”.

“ரொம்ப லேட் பண்ணிடாதீங்கம்மா...” அக்கறையாகவே சொன்னான்.

“சரிப்பா... நீ கிளம்பு” அவனை அனுப்பி வைத்தவர், தம்பி எழுந்து வர காத்திருந்தார்.

ஒரு தூக்கம் போட்டு எழுந்து வந்த நித்யானந்தம், காலை உணவை உண்டு முடித்த பிறகும் எதுவும் சொல்லாமலே போக, காவேரி மெதுவாக பேச்சு கொடுத்தார்.

“என்னப்பா... வந்ததில் இருந்து எதையோ சொல்ல ஆரம்பிக்கற, பிறகு தயங்கற? பிஸ்னஸ்ல ஏதும் நஷ்டமா? பணம் ஏதும் வேணுமா? நீ குடுத்த பணத்தில் இந்த வீடு கட்டினது போக, ஃபிக்ஸட்ல தான் அதெல்லாம் தூங்குது.

“உனக்கு எவ்வளவு வேணுமோ? இல்லன்னா மொத்தமா வேணும்ன்னாலும் எடுத்துக்கோ” ஒரு வேளை அவர் அதற்காகத்தான் தயங்குகிறாரோ என்பதால், காவேரியே கேட்டார்.

“அக்கா, எனக்கு பணம் எல்லாம் வேண்டாம்க்கா... அது என்கிட்டே நிறையவே இருக்கு... எனக்கு தேவை கொஞ்சம் நிம்மதி. அதுவும் உன்னால் கொடுக்க முடிஞ்ச நிம்மதி...” சொன்னவர், படபடவென தான் வந்த விஷயத்தைப் பேச, காவேரிக்கு தன் காதுகளையே நம்ப முடியவில்லை.

“தம்பி... இது... நீ... என்னப்பா சொல்ற? அதெப்படி முடியும்?” அதிர்ந்து போயிருந்த மூளையை கொஞ்சமாக மீட்டெடுத்து, அவரிடம் கேட்டார்.

“உன்னால முடியும்க்கா... எனக்காக... பிளீஸ்... என் பொண்ணுக்காக... இதை உதவியா இல்ல, பிச்சையா கேக்கறேன்” அவர் கெஞ்ச, காவேரியால் அதைப் பார்க்க முடியவில்லை.

“டேய் தம்பி, என்னடா இது... பெரிய வார்த்தை எல்லாம் சொல்லிட்டு. இது ஒத்து வருமாடா...?” மறுக்கவும் முடியாத, ஏற்கவும் முடியாத நிலை காவேரிக்கு.

சென்னை, பெங்களூர், கல்கத்தா என பல இடங்களில் பல கம்பெனிகளை வைத்து நடத்தும் தம்பி. கம்பீரமாகவே வளைய வருபவன், இப்படி தன் முன்னால் யாசகம் கேட்பதை தாங்கிக் கொள்ளவே முடியவில்லை.

“நீ மனசு வச்சா கண்டிப்பா முடியம்க்கா... சிவா கிட்டே பேசிட்டு எனக்கு ஒரு நல்ல முடிவா சொல்லு...” சொன்னவர், தான் வந்த வேலை முடிந்தது என அப்பொழுதே கிளம்பிவிட்டார்.

நித்யானந்தம் சென்னைக்கு வந்த பிறகு, கிட்டத்தட்ட ஒரு வாரம் கழித்து ஒரு ஞாயிற்றுக்கிழமை, காவேரியும், சிவாவும் சென்னைக்கு வந்தார்கள்.

“வாங்க அண்ணி... என்ன இங்கே வர இப்போதான் வழி தெரிஞ்சதா?” கேட்டவாறே உள்ளே அழைத்துச் சென்றார் பிரபா.

“அக்கா... வாக்கா... வா சிவா... பிரபா காபி கொண்டு வரச் சொல்லு” நித்யானந்தம் சற்று பரபரப்பாக, பிரபா புருவம் நெரித்தார்.

‘இதென்ன எலி அம்மணமா ஓடுது... திடீர் அக்கா பாசம் வேற...’ எண்ணியவாறே கிச்சனுக்கு குரல் கொடுக்க, அடுத்த பத்து நிமிடங்களில் அவர்கள் கேட்ட காபி அங்கே வந்தது.

“எடுத்துக்கோங்க அண்ணி...” அவரிடமிருந்து ட்ரேயை வாங்கி, தானே அவர்களுக்கு கொடுத்தார்.

அவர்கள் அதைக் குடித்து முடிக்கும் வரைக்கும், யாரும் எதுவும் பேசிக் கொள்ளவில்லை. காவேரி ஒரு மாதிரி சங்கடத்தில் நெளிந்தால், சிவாவின் முகத்தில் ஒருவித கோபம் தெரிந்தது.
 

Infaa

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jan 7, 2022
915
81
93
Chennai
“என்ன அண்ணி, திடீர்ன்னு கிளம்பி வந்திருக்கீங்க? சிவாவுக்கு ஏதும் வரன் வந்திடுக்கா? இல்லன்னா கல்யாணமா?” பெரிய விஷயம் எதுவும் இல்லையென்றால், தாயும் மகனுமாக கிளம்பி வந்திருக்க மாட்டார்களே என எண்ணி கேட்டார்.

“பிரபா, வந்த உடனேயே அவங்களை உக்காத்தி வச்சு கேள்வி கேக்கணுமா? அவங்க கொஞ்சம் ரெஸ்ட் எடுக்கட்டும்... எல்லாம் பிறகு பேசிக்கலாம்” நித்யானந்தம் இடைபுக, பிரபா வாயை மூடிக் கொண்டார்.

‘எப்படி இருந்தாலும் பூனைக்குட்டி வெளியே வந்துதானே ஆகணும்...’ எண்ணியவர் எதையும் வெளியே காட்டிக் கொள்ளவில்லை.

“தம்பி... பூமிகா எப்படிப்பா இருக்கா?” அவளைப் பார்த்து பல வருடங்கள் ஆகி விட்டதால் கேட்டார். தாய் இறந்தபொழுது இங்கே வந்து பார்த்தது, அதன் பிறகு வரவே இல்லை.

“அவ... அவ ரூம்ல இருக்காம்மா... நீங்க ஃப்ரஷ் ஆகுங்க, நாம பிறகு அவளைப் போய் பாக்கலாம்” நித்யானந்தம் சொல்ல,

“வெளியே போய்ட்டு வந்த உடனே நேரா அவகிட்டே நாம போக கூடாது. சின்ன அலர்ஜின்னாலும் இப்போ அவ இருக்கற கண்டிஷனுக்கு ரொம்ப ஆபத்தாயிடும் அதான்...” அக்காவின் பார்வைமாறுதலைப் பார்த்து, நித்யானந்தம் அதையும் சேர்த்தே சொல்ல, மையமாக தலை அசைத்தார்.

அவர்கள் இருவரும் விருந்தினர் அறைக்குச் செல்லவே, “என்னங்க... இங்கே என்ன நடக்குது? எனக்குத் தெரிஞ்சாகணும்” கணவரைப் பிடித்துக் கொண்டார்.

“நீதான் என்னவோ சொன்னியே... அதான் இந்த ஏற்பாடு...” இப்படிச் சொன்ன கணவனை புரியாமல் ஏறிட்டார்.

“நான் என்ன சொன்னேன்? அதுக்கு நீங்க என்ன பண்ணி வச்சிருக்கீங்க? கொஞ்சம் தெளிவா சொல்லுங்க...”.

“அக்கா வரட்டும், வந்த பிறகு பேசிக்கலாம்...” சொன்னவர் எழுந்து மகளைப் பார்க்கப் போனார்.

அவர் பூமிகாவின் அறைக்குச் செல்கையில், அவள் அப்பொழுதுதான் எழுந்திருக்க, தேன்மொழி அவளிடம் அமர்ந்து எதையோ சுவாரசியமாகப் பேசிக் கொண்டிருந்தாள்.

“என்னம்மா, தூங்கி எழுந்தாச்சா?” கேட்டவரின் பார்வை மகளைத்தான் ஆராய்ந்து கொண்டிருந்தது.

வெளிப் பார்வைக்கு அவளிடம் எந்த வித்தியாசமும் இல்லாமல் போக, அவள் நாட்களை எண்ணிக் கொண்டிருக்கிறாள் என்பதைத்தான் அவரால் ஏற்க முடியவில்லை.

“ம்... ஆமாப்பா... இன்னைக்கு காலேஜ் போகலாம்னு இருக்கேன்” இப்படிச் சொன்ன மகளை சிறு அதிர்வோடு ஏறிட்டார்.

“என்னது காலேஜா? எதுக்கும்மா அதெல்லாம்...?”.

“போகணும்ப்பா...” அவள் பிடிவாதமாக சொல்ல, அவர் எங்கே மறுப்பது?

“அவ எனக்காகத்தான் சொல்றா சார்... அவ காலேஜுக்கு வரலன்னா, நானும் போக மாட்டேனே, அதான் இவ்வளவு பிடிவாதமா இருக்கா” தேன்மொழி இடைபுக, இப்பொழுது எதையும் சொல்ல முடியாத நிலைதான் அவருக்கு.

“அப்படி இல்லப்பா... எனக்கு இந்த ரூமுக்குள்ள இருக்கவே மூச்சு முட்டுது... எனக்கு இங்கே இருந்து வெளியே போகணும்” அவள் குரலில் இருந்த ஏக்கத்தில், அவருக்கே ஒரு மாதிரியாகப் போயிற்று.

“அதுக்குத்தாம்மா ஒரு ஏற்பாடு பண்ணலாம்னு இருக்கேன்...” துவங்கியவர், அதை எப்படிச் சொல்வது எனத் தெரியாமல் தடுமாறினார்.

“என்னப்பா... என்னன்னு சொல்லுங்க...” அவரது தயக்கம் அவளுக்கு சற்று ஆச்சரியமாக இருந்தது.

“உன் அத்தையை வரச் சொல்லி இருந்தேன்... அவ வந்திருக்காம்மா” அவர் சொல்ல, ‘இந்த தகவல் இப்பொழுது எனக்கு எதற்கு?’ என்பதுபோல் அவரை ஏறிட்டாள்.

“அது... அதை எப்படிச் சொல்ல... அது வந்தும்மா... எதுவா இருந்தாலும் நான் உனக்கு நல்லதை மட்டும்தான் செய்வேன்னு உனக்குத் தெரியும் தானே...” அவர் மென்று முழுங்க, தகப்பனையே பார்த்திருந்தாள்.

“நீ என் பொண்ணும்மா... உனக்கு இதுவரை எந்த நல்லதையுமே பண்ணிப் பாக்க முடியாத பாவி நான்...” அவர் கண் கலங்க முயன்று, மகளின் நிலை நினைவுக்கு வர, சட்டென தன்னை மீட்டுக் கொண்டார்.

“அப்பா, எதுவா இருந்தாலும் நேரடியா சொல்லுங்க, எதுக்கு இப்படி சுத்தி வளைக்கறீங்க?” அவர் சொல்ல வருவது அவருக்கு சுத்தமாகப் புரியவில்லை.

“அதும்மா... நீ இதை உன் அப்பாவோட ஆசையா மட்டும் பாக்கணும் சரியா?” அவர் இன்னும் தயங்க,

“சொல்லுங்கப்பா...” நிதானமாகவே கேட்டாள்.

“உனக்கு ஒரு கல்யாணத்தைப் பண்ணிப் பாக்கணும்னு எனக்கு ஒரு ஆசைம்மா” அவர் சொல்லிவிட்டு, மகளையே பதைபதைப்பாக பார்த்திருக்க, பூமிகாவால் தன் காதுகளை நம்பவே முடியவில்லை.

“அப்பா... என்னப்பா இது? எதுக்குப்பா இந்த விபரீத விளையாட்டு? நான் இன்னும் இருக்கப்போற இந்த கொஞ்ச நாளுக்கு, இதெல்லாம் அவசியமா?” சற்று சலிப்பாக கேட்டாள்.

“எனக்காகம்மா... இந்த அப்பாவுக்காக...” அவர் கெஞ்ச,

“இதுக்கு அத்தையும், சிவாவும் சம்மதிச்சுட்டாங்களா?” அவள் கேட்க, அப்பொழுதுதான் தான் அவசரப்பட்டுவிட்டதே அவருக்குப் புரிந்தது.

“அவங்களுக்கு சம்மதம் இல்லாமலா இங்கே வரைக்கும் வந்திருக்காங்க? அதெல்லாம் அவங்களுக்கும் சம்மதம்தான்...” அவர் பேச, மறுப்பாக தலை அசைத்தாள்.

“இது தேவை இல்லாத வேலைப்பா... முதல்ல நீங்க அவங்களுக்குச் சொல்லி புரிய வைங்க, போங்க...” அவள் பிடிவாதமாக சொல்ல, மகளிடம் வாதாடாமல் எழுந்து கொண்டார்.

“என்ன தேனு... அப்பா இப்படி சொல்லிட்டார்... கல்யாணம் எல்லாம் சின்ன விஷயமா? அது எவ்வளவு பெரிய விஷயம்? என் வாழ்க்கையில் எனக்கு சின்ன சந்தோஷமே நான் எதிர்பார்த்த விதத்தில் நடக்கலை, அப்படி இருக்கும்போது இது...” அவள் வருத்தமாக பேச,

“ஏன் பூமி அப்படிச் சொல்ற? அப்பாவோட ஆசை...”.

“அதுக்காக... என்னோட ரொம்ப சின்ன ஆசை என்னன்னு தெரியுமா? இந்த கிச்சுகிச்சு மூட்டி சிரிப்போமே... நான் குழந்தையா இருந்தப்போ, எனக்கு விவரம் தெரியற வயசில், எங்க அம்மா என் சின்ன அண்ணாகிட்டே அப்படி விளையாடுவாங்க.

“அவன் சிரிக்கற சத்தம் இந்த வீடு முழுக்க கேக்கும்... அப்போ அவங்க ரெண்டுபேரையும் பாக்கணுமே... அதைப் பாக்கவே அவ்வளவு சந்தோஷமா இருக்கும். எனக்கும் அப்படி விளையாடணும்னு ரொம்ப ஆசை.

“ஆனா அதை என்னால செய்ய முடியாது... ஏன்... ஏன்னா அப்போ ஹார்ட் வேகமா பம்ப் ஆகணும்... எனக்கு அப்படி ஆனா, நான் மயக்கம் போட்டுடுவேன், பத்து நாள் ஐசியூ... வென்ட்டிலேட்டர் லெவலுக்கு போய்டுவேன்.

“ஒரு குட்டி ஆசை... அதுவே இல்லைங்கும்போது... எனக்குன்னு தனியா ஒரு வாழ்க்கை, குடும்பம்...” இதைச் சொல்கையில் பூமியின் கண்களில் வழிந்தது என்ன ஏக்கமா? தேன்மொழி அவளைப் பார்த்துக் கொண்டே இருந்தாள்.

அவளது கரத்தை அழுத்தமாக பற்றிக் கொண்டவள், “அதுக்கு வாய்ப்பு இருக்குன்னுதான் உன் அப்பா சொல்லிட்டு போறார் பூமி...”.

தேன்மொழி சொல்ல, “அதில் காதல் இருக்காது தேனு... கட்டாயம் மட்டும்தான் இருக்கும்” அவள் இப்படிச் சொல்ல, தேன்மொழிக்கு பெரும் அதிர்வுதான்.

‘உனக்கு காதலிக்கணுமா?’ கேலியாக கூட அவளிடம் கேட்டுவிட முடியவில்லை. பேசும் வார்த்தைகளின் வீரியம், அவளுக்குள் எந்த விதமான மாற்றங்களை உருவாக்கும் எனத் தெரியாமல், அதை அவளிடம் கொட்டிவிட முடியாதே.

ஆனாலும் தோழியின் உள்ளுக்குள் ஓடும் ஏக்கமும், ஆசையும் ஒரு மாதிரி புரிய அந்த கடவுளை மனதார சபித்தாள்.

அவர் கீழே இறங்கி வருகையில், பிரபா கோபமாக அவரை எதிர்கொள்ள, காவேரி கையைப் பிசைந்துகொண்டு நிற்பதைப் பார்த்தவர், மனைவிக்கு விஷயம் தெரிந்துவிட்டது என்பதை உணர்ந்து கொண்டார்.

‘நீங்க என்ன லூசா?’ என்னும் பார்வையை மனைவி கொடுக்க, அவர் தன் அக்காவைத்தான் பார்த்தார்.

“அக்கா... என்னக்கா...? சொல்லு...” நித்யானந்தம் தன் அக்காவிடம் கேட்க,

“அதை ஏன் அவங்ககிட்டே கேக்கறீங்க? என்கிட்டே கேளுங்க” மனைவி கத்த, அது மாடி வரைக்கும் எட்டியது.

“தேனு... வெளியே அவங்க பேசறாங்க போல?” சொன்னவள், வேகமாக அறையில் இருந்து வெளியே வந்து, கீழே எட்டிப் பார்த்தாள்.

“அண்ணி, கொஞ்சம் பொறுமையா இருங்க...” காவேரி அவளைத் தடுக்க முயல,

“இங்கே பேச்சு என்னைப் பத்திங்கறதால நான் முதல்ல பேசலாமா?” சிவா இடைபுக, அப்பொழுதுதான் பூமிகா அவனைப் பார்த்தாள்.

“மாமா, எனக்கு பூமிகாவைப் புடிக்கும்... ஆனா நீங்க யோசிக்கற விதத்தில் அவளை நான் எப்பவும் யோசிச்சுப் பாத்ததில்லை. அஃப்கோர்ஸ் நீங்களுமே அதை யோசிச்சிருக்க மாட்டீங்கன்னு எனக்குத் தெரியும். இப்போ உங்க சூழ்நிலை நீங்க எதையோ ஆசைப்படறீங்க.

“அதை நான் தப்புன்னு சொல்லவே இல்லை... ஆனா இதில் சம்பந்தப்படப் போறது நான்... நீங்க என்னவோ கொஞ்ச நாள் ஏற்பாடுன்னு சொல்றீங்க, அதெப்படி முடியும்? எனக்குள்ளே இருக்கற என் மனசு என்ன ஸ்லேட்டா? இல்லன்னா தண்ணியா?

“அழிக்கறதுக்கும்... எதிலும் ஒட்டாமல் இருக்கறதுக்கும்? என் வாழ்க்கையோட ஒரு அத்தியாயம் ஆரம்பிக்கற இடம் அது. எனக்குன்னு சில ஆசைகள், கனவுகள் எல்லாம் இருக்கும் தானே.

“அம்மா என்னவோ... இதை ஒரு தியாகமா, உதவியா செய்ன்னு சொல்றாங்க. இப்போ வரைக்கும் எனக்கு பூமி மேலே விருப்பம் இல்லாமல் போகலாம். ஒரு வேளை அவ கழுத்தில் தாலி ஏறின பிறகு வந்தா? அவ இல்லாம போகும்போது நான் எப்படி என்னை சமாதானம் பண்ணிப்பேன்?

“எனக்கு என் வாழ்க்கையை வாழணுமே தவிர போராட விருப்பம் இல்லை.. சும்மா அவளையே பாத்துகிட்டே இருக்க முடியுமா? எப்போ அவ மூச்சுக்கு திணறுவா? எப்போ அவ மயக்கமாவா? கோமாவுக்கு போவான்னு பயந்துட்டே இருக்க முடியாது.

“வாழ்க்கையில் எப்பவாவது டென்ஷன் வரலாம்... டென்ஷனோடவே வாழ முடியாது மாமா. வாழ்க்கைங்கறது ஒரு முறைதான்... அதை என் விருப்பப்படி, எனக்கு புடிச்ச மாதிரி வாழத்தான் நான் ஆசைப்படறேன்.

“பால்பாட்டிலை கையில் வச்சுக்க ஆசைப்படறேனே தவிர, ஆக்ஸிஜன் சிலிண்டரை தூக்கவோ, தொடவோ கூட எனக்கு துளியும் விருப்பம் இல்லை” அவன் சொல்ல, அங்கே ஊசி விழுந்தால் கூட ஓசை கேட்கும் அமைதி நிலவியது.

“இதை எல்லாம் எங்க அம்மாகிட்டே சொன்னா, அவங்களுக்குப் புரியலை. அவங்களுக்கு புரிய வைக்கவும் முடியலை. தம்பிமேல இருக்கற பாசம் அவங்க கண்ணை மறைக்குது? புள்ளையோட வாழ்க்கை புரியலை... நீங்க புரிஞ்சுப்பீங்கன்னு நம்பறேன்” அவன் மொத்தமாக கொட்டிவிட, அங்கே யாரும் எந்த பதிலும் பேசவில்லை.

தொடரும்......