• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

வரம் - 27

Relay Stories

Vaigai - Avid Readers (Novel Explorer)
Aug 2, 2021
156
186
43
Karur
அத்தியாயம் – 27



“Everything is fiar in love and war” காதலில் அவரவர் மனதிற்கு பட்டதே நியாயம்.அதீத கோபமும் ஆழ்ந்த காதலை உள்ளடக்கியதே......இதை புரிந்து கொண்டால் பல குழப்பங்களுக்கு விடை கிடைத்து விடும்.

நம்பிக்கை துரோகம் என்ற ஒரு வார்த்தையில் அவள் உறுதியாக நிற்க,அவனோ என் காதலில் நம்பிக்கை இருக்கிறது அது அவளுக்கு அனைத்தயும் புரிய வைக்கும் என்ற மனத்திண்மையோடு வெளியேற நடக்கும் நிகழ்வுகளை காலமும் அதன் போக்கில் கவனித்து கொண்டு தான் இருந்தது..
திருமணத்திற்கு செல்லாமல் நேராக வீட்டிற்கு வந்தவன் அங்கு பூரணி எங்கே என பேச்சியம்மாள் கேட்டதற்கு “அவளுக்கு உடம்பு சரியில்லைம்மா அதனால அவங்க அம்மா வீட்ல இருக்கா” என அவர் முகத்தை பார்க்காமல் பதில் சொல்லிவிட்டு வீட்டிற்குள் சென்றவன் உடை மாற்றிவிட்டு வயலுக்கு புறப்பட பேச்சியோ “என்னடா ஆச்சு...நல்லாதானே இருந்தா.....ஆமா நீ போகலியா” என கேள்விகனைகளை தொடுக்கவும்
“இல்லம்மா நான் தான் கொண்டு போய் விட்டு வந்தேன்..... மசக்கைனா அப்டிதான் இருக்கும்னு அத்தை சொன்னாங்க” என சுரத்தே இல்லாமல் பதில் சொன்னான் புகழ்.

அவரோ “மசக்கையா” என்றவர் சட்டென்று“டேய் புகழுஊஊஉ என்ன தம்பி சொல்ற” என அவன் அருகில் வந்து சந்தோஷத்தில் அவர் முகம் திளைத்திருக்க “நிசமாத்தான் சொல்றியா” என வியப்புடன் கேட்கவும்
அவரது மகிழ்ச்சியில் அவனின் மனநிலையும் மாற சிரித்துகொண்டே “உண்மைதான்மா.....தலை சுத்துதுன்னு சொன்னா ...அதான் நேத்து ரவைக்கு அத்தை வீட்டுக்கு போய்ட்டோம்.அப்புறம் அங்க ஒரு பெரியம்மா பார்த்திட்டு சொன்னாங்க”....என நடந்ததி சொன்னான் புகழ்.
“ இம்புட்டு சந்தோஷமான சமாச்சாரத்தை ஏண்டா வந்த உடனே சொல்லலை....நான் கேட்ட பிறகு சொல்ற நீ” என திட்டியவர் பின்னர் வாடி கிடக்கும் மகனின் முகத்தை பார்த்ததும் “ஏன் புகழு ஏதாவது பிரச்சனையா? அங்க உங்க மாமனார் ஏதாவது சொன்னாரா? ஏன் சுரத்தே இல்லாம இருக்க” என சந்தேக பார்வையோடு கேட்க
உடனே சுதாரித்து கொண்ட புகழ் “என்னமா நீங்க ....மாமா எல்லாம் ஏதும் சொல்லலை.....நல்லா தான் பேசினாரு....எனக்கு தான் இங்க சோளகாட்டுல பூச்சி விழுந்து தட்டு எல்லாம் வீணாகிடுச்சு....அதான் கொஞ்சம் மனசு சரியில்லை...சீக்கிரம் கிளம்பி வந்திட்டேன்.....இப்பவும் அங்கதான் கிளம்பிட்டு இருக்கேன்”என்றான்.
“ என்ன கண்ணு பண்றது இட்டதெல்லாம் பயிரா? பெற்றதெல்லாம் பிள்ளையான்னு நினச்சுட்டு அடுத்த வேலையை பார்க்கணும் தம்பி.....விவசாயத்துல மட்டும் நம்ம நினச்ச மாதிரி ஏதும் நடந்திடாது....அதுக்கு எல்லாமே ஒத்து வரனும்” என சொல்லி பெரு மூச்சுவிட்டவர் “நீ அதை நினச்சு விசனபடாத தம்பி...நம்ம வீட்டுக்கு வாரிசு வர போகுது...அதை நினச்சு சந்தோஷபடுவியா....என்ன புள்ளடா நீ என அவனை தேற்றியவர் சரி பூரணி எப்போ வருவா?” என அடுத்த கேள்விக்கு வந்தார்.
அவனோ “இல்லம்மா ஆறுமாச உழைப்பு வீணாகிடுச்சுனுதான் என்றவன் சரிம்மா எனக்கு நேரமாச்சு நான் கிளம்பறேன்” என அவரின் பேச்சை தவிர்த்து நிற்காமல் அங்கிருந்து வெளியேற பேச்சியோ புரியாமல் அவனை பார்த்து கொண்டு நின்றார்.கண்ணாலம் பண்ணியும் இன்னும் வயலு வயலுனு இருந்தா எப்படிதான் குடும்பம் கொண்டு வர போறானோ என புலம்பிகொண்டே நகர்ந்தவர் “ஏய் கனகா...... ஏய் புள்ள கனகா” என கனகாவை அழைத்து தான் அப்பத்தா ஆகபோகும் சந்தோஷத்தை பகிர்ந்து கொண்டார்.
அதற்கு பின்பு மல்லிகை தோட்டமே புகழ் வசிக்கும் இருப்பிடமானது.வேலை இருக்கிறது என சொல்லி அவன் வீட்டிற்கு வருவது இல்லை.அப்படியும் ஒருசில நாளில் இரவில் தாமதமாக வந்து விடிய பொழுதில் கிளம்பி சென்று விடுவான்.
இங்கு பூரணியோ மசக்கையில் துவண்டு போய் கிடந்தாள்.மகள் உண்டாகி இருக்கிறாள் என்ற சந்தோஷத்தில் ஒரு வாரம் மாணிக்கமும் மணியம்மையும் மகிழ்ச்சியில் திளைத்து இருந்தனர்.அதற்குள் பாரியும் வந்து விட வீடே சந்தோஷத்தில் நிறைந்து இருந்தது.இடையில் பூரணியின் உடல்நிலை பற்றி புகழ் அலைபேசியில் மணியம்மையிடம் விசாரித்து கொண்டு இருந்தான்.
பத்து நாட்கள் நன்றாக சென்று கொண்டிருக்க அதற்கு பின்பே மணியம்மைக்கு சற்று சந்தேகம் வந்தது.பூரணியின் உடல் நிலை பற்றி மணியம்மையிடம் விசாரித்த புகழ் பூரணியிடம் பேசவில்லை.அவராக தருகிறேன் என்று சொன்னாலும் நான் வேலையாக இருக்கேன் அத்தை அப்புறம் பேசிக்கிறேன் என தவிர்த்து விடுவான்.பூரணியிடம் மச்சான் கிட்ட பேசறியா பூரணி என்றால் எனக்கு களைப்பா இருக்கு...நான் பொறவு பேசிகிறேன்மா என அவளும் சொல்லிவிட்டாள்.தாய் அறியாத சூழ் உண்டோ ? ஏனோ அவர் மனதில் ஒரு பொறி தட்ட பூரணியை கவனிக்க ஆரம்பித்தார்.
எல்லார் முன்னிலையிலும் நன்றாக பேசும் பூரணி தனிமையில் சுவற்றை வெறித்தவாறு அமர்ந்திருப்பதை கண்டார்.அவள் மசக்கையில் சோர்ந்து இருக்கிறாள் என அனைவரும் நினைக்க ஏனோ மணியம்மைகோ வேறு பிரச்சனை இருப்பது போல் தோன்றியது.

ஒரு நாள் இருவரும் பேசிக்கொண்டு இருக்கும்போது “நீ எப்போ பூரணி மச்சான் வீட்டுக்கு போகபோற” என கேட்டார் மணியம்மை .
அவளோ“தெரியலைம்மா” என சொல்லவும்
“என்னடி சொல்ற” என அவர் அதிர
“ஏன்ம்மா நான் இங்க இருக்க கூடாதா ? நான் பொறந்து வளர்ந்த வீடு......என் அப்பா வீடுதானே...இதுக்கு ஏன் இவ்ளோ அதிர்ச்சி ஆகறிங்க “என சாதரனமாக சொன்னாள் பூரணி.
“என்னடி இப்படி சொல்ற...நீ எத்தன நாளைக்கு வேணாலும் இங்க இரு...நான் வேண்டாம்னு சொல்லலை.....ஆனா அங்க புகழு நங்கை இவங்க எல்லாம் உன்னை எதிர்பார்ப்பாங்க இல்லயா அதான் கேட்டேன் “ எனஅவள் வாயில் இருந்தே உண்மைகளை தெரிந்து கொள்ள அவர் கேட்கவும்
அவளோ நான் மாணிக்கத்தின் பிள்ளை என்பதி நிருபிக்கும் வகையில் ஏதும் சொல்லாமல் வேலையில் கவனமாக இருக்க...சிறிது நேரம் அமைதியாக இருந்த மணியம்மை பின்னர் “ பூரணி என்னை பாரு என்றவர் உனக்கும் உன்ற மச்சானுக்கும் ஏதாவது பிரச்சனயா” என நேரிடையாக விஷயத்திற்கு வந்தார்.
அவளோ தாயின் முகத்தை பார்க்க முடியாமல் தலை குனிந்தவள் “அதெல்லாம் ஏதும் இல்லைம்மா” என பதில் சொல்லிவிட்டு எழ முயற்சிக்க
“அப்போ உனக்கும் நங்கைக்கும் ஏதாவது சண்டையா” என மாமியார் மருமகளுக்குள் ஏதாவது பிணக்கோ என நினைத்து அவர் கேட்கவும்
“அப்படி எல்லாம் ஏதும் இல்லம்மா என வேகமாக மறுத்தவள் பச் இப்போ எதுக்கு நீங்க இத்தனை கேள்வி கேட்டுகிட்டு இருக்கீங்க.....நான் இங்க இருக்கிறது உங்களுக்கு கஷ்டமா இருந்தா சொல்லிடுங்க...அதுக்காக இப்படி எல்லாம் கேள்வி கேட்க்காதீங்க” என சொல்லிகொண்டே அவள் எழவும் ... அப்போது “என்ன கேள்வி...யாருடா என் தங்கத்தை கேட்கிறது” என்றபடி வந்தார் மாணிக்கம்.
ஏற்கனவே பூரணி மேல் உயிரே வைத்து இருந்தவர் அவளை இவ்ளோ நாள் பிரிந்து இருந்ததது அவரது பாசத்தை அதிகபடுத்த மகளை பார்த்ததும் அவளை கைமேல் வைத்து தாங்கி கொண்டு இருந்தார்.மேலும் மகள் தாயாக போகிறாள் என தெரிந்ததும் அவரது சந்தோசம் இரட்டிப்பு ஆக அங்கு பூரணியின் பேச்சிற்கு மறுவார்த்தை இல்லை.
தந்தையை கண்டதும் “இங்க பாருங்கப்பா இந்த அம்மாவ...... ஏன் இங்க இருக்க உங்க வீட்டுக்கு போகலயான்னு கேட்கிறாங்க”....என புகார் கடிதம் வாசிக்க
உடனே அவர் “ஏம்புள்ள நீ சும்மா இருக்க மாட்ட......புள்ள எவ்ளோ நாளுக்கு அப்புறம் நம்ம வீட்டுக்கு வந்து இருக்கு...அதை போய் பேசிகிட்டு இருக்க” என மணியம்மையை அடக்கியவர் “இது உன் வீடு பூரணி...எவ்ளோ நாள் வேணாலும் நீ இங்க இருக்கலாம்” என சொல்லவும் அவளோ மணியம்மையை நக்கலாக ஒரு பார்வை பார்க்க அவர் ஏதும் பேசவில்லை.அதற்கு பிறகு அவர் புகழிடம் பேசவும் அவனோ “வேலை அதிகமாக இருக்கிறது...கொஞ்சம் பயிர் எல்லாம் விஷ பூச்சில் நாசமாகிடுச்சு...அது சம்பந்தமா பார்த்திட்டு இருக்கேன் அத்தை...அதான் வரமுடியலை.....சீக்கிரம் வந்திடறேன்” என சொல்லவும் அவரால் மறுபேச்சு பேச முடியவில்லை.
இங்கு பேச்சியம்மாள் தான் அப்பாத்தா ஆக போகும் விஷயத்தை பரப்பி கொண்டிருக்க எல்லாரும் “எங்க உன்ற மருமகளை காணோம்.....புள்ள பெக்கறவரைகும் அவங்க அப்பன்வீட்ல இருப்பாளா....இவ்ளோ பேச்சு பேசற...நீ பார்த்துக்க மாட்டியா” என ஊரில் பேசவும்

ஒரு சிலரோ என்ன இருந்தாலும் அவங்க அப்பன்வீட்டு வசதி வருமா? அதான் அந்த பொண்ணு அங்கே இருக்கு” என சொல்லவும் பேச்சியம்மாவோ புகழை தேடி வயலுக்கு வந்தார்.
பேச்சியை பார்த்ததும் வேலையை மேற்பார்வை செய்து கொண்டிருந்தவன் ...”என்னம்மா நீங்க வந்து இருக்கீங்க....மருதுகிட்ட சொல்லி இருந்தா நானே வந்து இருப்பேன்ல” என சொல்லிகொண்டே அவரை நோக்கி வந்தான்.
அவரோ ஏதும் பேசாமல் அவனை முறைத்தவர் “ம்ம்ம்ம் ஆத்த முட்டாதவன் சித்தப்பன் வீட்ல பொண்ணு கட்டுனானனாம்........என் பையனை பார்க்கணும்னா நான் ஆள் விட்டு சொல்லிவிட வேண்டியாதா இருக்கு...அந்த அளவுக்கு என் பையன் பெரிய மனுசனாகிட்டான்....என்ன பண்றது”...... என எரிச்சலுடன் சொல்லவும்
சட்டென்று முகம் மாறிய புகழ் “இல்லமா அது வந்து வந்து ..கொஞ்சம் வேலை அதான்” என இழுக்க
அவரோ “சரி சரி நேரமாச்சு சீக்கிரம் கிளம்பு” என பரபரக்க
“எங்கம்மா கிளம்பறது.....யாரு கிளம்பனும்” என்றான் புகழ்.
“ எல்லாம் உன்ற மாமனார்வீட்டுக்கு தான்...போய் பூரணிய கூட்டிட்டு வா....இன்னிக்கு நாளும் நல்ல நாளா இருக்கு....நான் இங்க இருந்து எல்லாம் பார்த்துகிறேன்.....நீ போய் கூட்டிட்டு வா “என்றார் அவர்.
“நானா ஆஆஅ என ஒரு நிமிடம் அதிர்ந்தவன் பின்னர் தாயின் முகத்தை பார்த்ததும் “இல்லம்மா அது வந்து” என தயங்க
“ நீ எனடா நீ புரியாம பேசிட்டு இருக்க......அவ நம்ம வீட்டு பொண்ணுடா....கொண்டான் கொடுத்தான் வீட்ல நாளு நாளைக்கு இருக்கலாம்...அதுக்காக மசகனக்கா இருக்க முடியுமா ?” என்றவர் அவன் அமைதியாக இருப்பதை பார்த்து “அங்க இருக்கிறது உன் பொண்டாட்டிதான” என அவனை அடிகண்ணில் நோட்டம் விட்டவாறு அவர் கேட்கவும்
அவனோ சற்று தடுமாறியவன் “என்னமா நீங்க இப்படி கேட்கிறிங்க ...அவளுக்கு இன்னும் வாந்தி,மயக்கம் எல்லாம் சரியாகலை ...அதான் அங்க இருக்கட்டுமேனு” என அவன் சொல்லி முடிக்கவும்
“நானும் இரண்டு புள்ள பெத்தவ தான் .....என்னாலயும் பார்த்துக்க முடியும்...நீ போய் அவளை கூட்டிட்டு வா” என அவர் பிடிவாதமாக சொல்ல புகழோ ஏதும் பேசாமல் நின்று கொண்டு இருந்தான்.
அதற்கு பின்பு ராசப்பர் மூலம் முயற்சி செய்தும் புகழிடம் இருந்து எந்த பதிலும் வாங்க முடியவில்லை.தனது முடிவில் பிடிவாதமாக இருந்தான். பேச்சிக்கு புகழை பற்றி நன்கு தெரியுமாதலால் அதற்கு மேல் அவனை வற்புறுத்தவில்லை.ஆரம்பத்தில் இருந்தே புகழ் அப்படிதான்.சில முடிவுகளை எடுத்துவிட்டான் என்றால் யார் சொன்னாலும் பின்வாங்க மாட்டான்.இப்போதும் அவள் மசக்கையில் இருப்பதால் அங்கு இருக்கிறாள் என்று சொல்கிறானே தவிர வேறு எந்த வார்த்தையும் அவனிடம் இருந்து வாங்கமுடியவில்லை.பாண்டி மூலம் முயற்சி செய்யலாம் என்றால் அவன் வெளிநாடு செல்வது தொடர்பாக அலைந்து கொண்டு இருக்கிறான்.மேலும் ஒரு முறை பேச்சி புலம்பிய போது “கணவன் மனைவிக்கு இடையில் நம்ம நுழைவது தப்பும்மா...அவர்களாக வந்து சொன்னால் நாம் பிரச்சனைகளை தீர்த்து வைக்கலாம்.மேலும் அண்ணன் எப்பவும் தவறான முடிவுகளை எடுக்க மாட்டங்க....அதனால் நீங்க வற்புறுத்தாதீங்க” என சொல்லிவிட்டான்.
“அம்மா ...அம்மாஆஆஅ” என பூரணி கையில் மாத்திரையை வைத்தபடி கத்திக்கொண்டு இருக்க மணியம்மையோ அவளையே பார்த்த வண்ணம் நின்று கொண்டு இருந்தாள்.

“என்னம்மா யோசனை ...இப்போ அந்த தண்ணிய கொடுகிறிங்களா இல்லையா ?”என அவள் மீண்டும் கத்தவும் ..”ம்ம்ம் என்ன பூரணி என்று அருகில் வந்தவர் ஏண்டி மாத்திரையை முழுங்காம எதுக்கு கூப்பாடு போட்டுக்கிட்டு இருக்க”என்றார்.
“நல்ல கூத்து போ....ஏன் மணியம்மை இவ்ளோ நேரம் புள்ள அதுக்குதான் உன்னை கூப்பிட்டா...நீ தான் அவளையே வெறிச்சு பார்த்திட்டு நின்ன” என பூரணி அருகில் அமர்ந்திருந்த மாணிக்கம் சொல்லவும் ஓ ...என்றவர் அவளிடம் தண்ணீரை கொடுக்க “ உங்க அம்மா கொஞ்ச நாளா இப்டி தான் இருக்கா பூரணி ? நினைப்பு எல்லாம் எங்க இருக்குனே தெரியலை என்றவர் சரி கண்ணு...நான் சந்தை வரைக்கும் போயிட்டு வந்திடறேன்.....நீ படுத்து தூங்கு” என சொல்லிவிட்டு அவர் செல்ல மணியம்மையும் எதுவும் பேசாமல் திரும்பி சென்றார்.
சமையல் அறையில் அவர் சமையல் செய்து கொண்டிருக்க அவரின் அருகில் வந்து நின்றாள் பூரணி.அவளை பார்த்ததும் “என்ன பூரணி என்ன வேணும்.....சாப்பிட ஏதாவது வேணுமா....இந்த நேரத்துல அதிகமா பசி எடுக்கும்.....எதுவேணும்னாலும் கேளு செஞ்சு தரேன்”என்றார்.
அவளோ “ஏன்ம்மா நான் இங்க இருக்கிறது உங்களுக்கு பிடிக்கலியா” என பூரணி நேரடியாக விஷயத்திற்கு வர
அவரோ “என்னடி உளற .......என் பொண்ணு என் வீட்ல இருக்கிறது எனக்கு பிடிக்காம இருக்குமா?” என சிரிக்க நினைத்து முடியாமல் குரல் சற்று இடற
“இல்லம்மா....நீங்க கொஞ்ச நாளா சரியில்லை.....என்னாச்சும்மா....என் மேல ஏதாவது கோபமா” என கேட்கவும்
“உன்மேல எனக்கு என்னடி கோபம்.....என் மேலதான் எனக்கு கோபம்” என சொல்லிவிட்டு வேலையை தொடர்ந்தார் மணியம்மை.

“நீங்க என்ன பண்ணீங்கம்மா” என அவள் புரியாமல் கேட்கவும்

“எம் மக சந்தோஷமா வாழ்ந்துகிட்டு இருக்கான்னு நினைச்சிருந்தேன் பாரு...அது எவ்ளோ பெரிய முட்டாள் தனம்னு இப்பதான் எனக்கு புரியுது” என அவள் முகம் பார்க்காமல் அவர் சொல்லிகொண்டே வேலையில் கவனமாக இருக்க
“அம்மாஆ” என அவள் அவர் முகத்தை பார்க்க
வேலையை நிறுத்திவிட்டு அவள் முகம் பார்த்தவர் “நானும் ஒரு பொண்ணுதான்டி......எந்த நேரத்துல பொண்ணுங்க எப்படி இருப்பாங்கனு எனக்கும் தெரியும்.....அதும் நீ என் கைக்குள்ளேயே வளர்ந்தவ.....உனக்கு எதையும் மறச்சு வச்சுக்க தெரியாது.....கோபமோ சந்தோஷமோ உடனே வெளிபடுத்திடுவ....ஆனா இப்போ” என அவர் சொல்லி நிறுத்த
“எனக்கு ஒண்ணுமில்லம்மா...நான் சந்தோஷமாதான் இருக்கேன்” என சொல்லும்போதே அவள் குரல் உள்ளே செல்லவும்
“என்னதான் புகழ் எனக்கு அண்ணன் பையனா இருந்தாலும் நீ நான் பெத்த பொண்ணுடி.....உன்னை பத்தி எனக்கு நல்லா தெரியும்....இந்த கல்யாணம் வேணா குழப்பத்துல நடந்து இருக்கலாம். உன் மனசுல ஏகப்பட்ட கனவு இருந்திருக்கலாம்.ஆனா ஒன்னு புரிஞ்சுக்க பூரணி...இந்த பெண் ஜென்மம் இருக்கே...அது மத்தவங்களுக்காகவே பிறந்து மடியர ஜென்மம்.....என் பொண்ணுக்கு அப்படி ஒரு வாழக்கை அமையக்கூடாது...அவளுக்கு பிடிச்ச மாதிரிதான் அமையணும்னு நினச்சேன். ஆனா நம்ம நினைச்சது எல்லாம் நடந்திட்டா விதின்னு ஒன்னு இருக்கிறதையே மறந்திடுவமே......உங்க அப்பாவோட மானம் ஒருபக்கம்னாலும் உன்கிட்டயும் புகழ் கிட்டயும் கேட்டுதானே இந்த கண்ணாலத்தை நடத்தினோம்.....முதல்ல அப்படி இப்டினாலும் அப்புறம் நீயும் சந்தோஷமா இருக்கிறதா தான சொன்ன ..... ஆனா இப்போ என்னமோ எனக்கு பயமா இருக்கு பூரணி...நாங்க தப்பு பண்ணிட்டமோ...எங்க பொண்ணோட வாழ்க்கையை நாங்களே சீரழிச்சிட்டமோ” என சொல்லும்போதே அவருக்கு அழுகை வர
“ஐயோ அம்மா” என பதறி அவரின் அருகில் சென்று அமர்ந்தவள் “என்னம்மா நீங்க இப்படி எல்லாம் பேசறிங்க.......நீங்க நினைக்கிற மாதிரி எல்லாம் ஏதும் இல்லம்மா.....அங்க எனக்கு ஒருகுறையும் இல்லை...என்னை நல்லா பார்த்துகிறாங்க....நீங்க எதையாவது மனசில போட்டு குழப்பிக்காதீங்க” என ஆறுதல் சொன்னாள் பூரணி.
அவரோ “இல்ல பூரணி புள்ளை உண்டாகி இருக்கும்போது ஒவ்வொவொரு பொண்ணும் அவ புருசனைதான் அதிகம் தேடுவா.....ஆனா” என சொல்லி அவள் முகத்தை பார்க்க
பூரணியோ தலை குனிந்தவள் “அது வந்தும்மா “ என இழுக்கவும்
“புருஷன் பொண்டாட்டி பிரச்சனை நாளு சுவருக்குள்ள இருக்கணும்னு சொல்வாங்க.....சண்டை இல்லாத சம்சார வாழக்கை இல்லை...ஆனா அது மாசகனக்கா இருக்க கூடாது பூரணி....புகழ்கிட்ட என்னால கேட்கமுடியாது. ஆனா நீ என் பொண்ணு ....நான் உனக்கு அம்மா ...என்கிட்டே சொல்லுடி...உங்களுக்குள்ள ஏதாவது சண்டையா” என அவர் கேட்கவும்
அவளோ சற்று நேரம் அமைதியாக இருந்தவள் பின்னர் நிமிர்ந்து “அம்மா நான் உங்க பொண்ணு...கண்டிப்பா உங்க வளர்ப்பை குறை சொல்றமாதிரி நடந்துக்க மாட்டேன்.ஆனா இப்போ ஏதும் என்னை கேட்காதீங்க....நான் எந்த முடிவும் எடுக்காம இருக்கேன்....என்னை விடுங்க...இந்த முறையாவது எனக்கு அவகாசம் கொடுங்க.....என் வாழ்க்கையை நான் யோசிச்சு முடிவு எடுக்கணும்” என அவள் அழுத்தமான குரலில் உறுதியாக சொல்லவும் மணியம்மையோ “பூரணி என்னடி சொல்ற......ஏதாவது பெரிய பிரச்சனையா தூக்கி எங்க தலயில போற்றாதடி” என அவர் பதறவும்

“அம்மா அதெல்லாம் ஏதும் இல்லை......எல்லாமே கொஞ்ச நாள்ல சரியாகிடும்.......எனக்கு டைம் கொடுங்க”......என அவள் சொல்லவும்
மணியம்மையோ கண்களில் கலக்கத்துடன் அவளை பார்த்து கொண்டிருக்க
“என்னம்மா இப்படி பார்க்கிறிங்க...நான் சொல்றதுல நம்பிக்கை இல்லயா ?”என அவள் கேட்கவும்
“அப்படி எல்லாம் இல்லை பூரணி......விளயாட்டுதனமா பேசிட்டு இருக்க என் பொண்ணு பூரணியா இப்படி பேசறதுன்னு ஆச்சிரியமா இருக்கு”ஒரு பக்கம் சந்தோஷமா இருந்தாலும் ஒரு பக்கம் பயமாவும் இருக்குடி” என தன மனதில் உள்ளதை அவர் மறைக்காமல் சொல்ல
“மலையில கிடைக்கிற பாறைகூட உளியால அடிபட்டு அடிபட்டு ஒரு உருவமா மாறது இல்லையாம்மா...அந்த மாதிரி வாழக்கையில் எனக்கு ஏற்பட்ட வலியும் வேதனயும் என்னை கொஞ்சம் கொஞ்சமா பக்குவபடுத்திருச்சு .இப்போ எல்லாம் நான் பேசற வார்தைகளை கூட ஒருமுறை எனக்குள்ளே சொல்லி பார்த்திட்டுதான் பேசறேன்.....மனசில பட்டதை எல்லாம் பேசிட்டு சந்தோஷமா சுத்திட்டு இருந்த பூரணி இப்போ இல்லம்மா......நீங்க என்னை பத்தி கவலைபடாதீங்க......இந்த கொஞ்ச நாள்ல நான் நிறைய விஷயம் கத்துகிட்டேன் என அவள் சொல்லவும் அவள் கண்களில் தெரிந்த உறுதியும் மிளிர்வும் மணியம்மைக்கு ஒரு புதிய பூரணியை காட்டியது. அவளது மாற்றம் எது வந்தாலும் சமாளித்து கொள்ளுவாள் என்ற தெம்பை கொடுத்தது.
“சரிம்மா எனக்கு இடியாப்பம் சாப்பிடனும்போல இருக்கு...செஞ்சு தறிங்களா........அதும் தேங்காய் பாலோட கொடும்மா ” என அவள் கெஞ்சுவது போல் கேட்க
அவரோ சிரித்து கொண்டே “இதோ இப்ப செஞ்சிடறேன் என்றவர் இந்த பாரிபுள்ளைய கூப்பிடு ..... அவளும் இப்போ முதல்ல மாதிரி இல்ல பூரணி.....எதோ பறிகொடுத்த மாதிரியே இருக்கா.......சரியா சாபிட்றது இல்லை...யார்கூடவும் பேசறது இல்லை...யார் கண்ணு பட்டுச்சோ இந்த வீட்டோட சந்தோஷமே காணாம போய்டுச்சு” என கவலையுடன் சொன்னார்.
“ஏன் என்னாச்சு சின்ன மகாராணிக்கு ........நானும் கவனிச்சேன் எங்கிட்டயும் அவ சரியா பேசறதே இல்லை.....ஏன்ம்மா பரிட்சையில மார்க்கு எதாவது குறைவா வாங்கிட்டாளோ...அதான் பயபுள்ள இப்படி ஆக்ட் கொடுத்திட்டு இருக்கோ” என கண்களை உருட்டியபடி அவள் கேட்கவும் மணியம்மைகோ முகத்தில் சிரிப்பு வர “தெரியலை பூரணி...ஒருவேளை அப்படிக்கூட இருக்கலாம்......உங்க அப்பா வேற என் புள்ள டாக்டர்னு இப்பவே சொல்லிக்கிட்டு இருக்காரு...இவ இப்படி பண்றாளே” என புலம்பவும்
“எங்க போனா அவ...இருங்க பிடிச்சு கேட்கலாம்...கொஞ்ச நாள் நான் இல்லாம போனா அவளுக்கு துளிர் விட்டு போச்சு...இதோ வரேண்டி” என சொல்லிகொண்டே பாரியை தேடி போக அவளோ அறைக்குள் ஏதோ புத்தகம் படித்து கொண்டு இருந்தாள்.
பாரி என அழைத்தபடி உள்ளே நுழைந்தவள் “என்னடி பண்ணிக்கிட்டு இருக்க......வந்து நாலு நாள் ஆச்சு ...அறையை விட்டு வெளியே வரதே இல்லை....சாப்பிடும்போது பாத்துக்கிறதோட சரி...என்னாச்சு உனக்கு என பேசியபடியே அவள் அருகில் அமர்ந்தவள் என்னடி புக்” என பிடுங்கி பார்த்தவள் அதில்

பன்னீர் வாசனையானது என்று
அனைவருக்கும் தெரியும்.
ஆனால் அது ரோஜாவின் கண்ணீர் துளி
என்பது யாருக்கு தெரியும்??!!!!!!!!!!!

இருண்டுகிடந்த என்மனதில்
தீபமாய் நீ நுழைய
எங்கும் ஒளிபரவ
இப்போது காற்றாய்
நீயே வர
தடுமாறி போனேனடா
நானும் !!!!!!!!!!!!!!!!!!!!!!

என்ற கவிதைகள் இருக்க “என்னடி இது ..கவிதையா இருக்கு......எல்லாம் நீ எழுதினதா என அவள் மறுபுறம் திருப்ப முயற்சிக்க பாரியோ நீ கொடுக்கா முதல்ல” என அதை பிடுங்கி தன்னிடம் வைத்துகொண்டாள்.
உடனே அவள் “ஏண்டி நான் படிக்க கூடாதா ....நீ டாக்டரா வருவேன்னு நாங்க எல்லாம் நினச்சிட்டு இருந்தா நீ என்னடானா தனியா உட்கார்ந்து கவிதை படிச்சிகிட்டு இருக்க......இதான் படிக்கிற லட்சணமா” என கேட்கவும்
“நினைக்கிறது எல்லாம் நடந்திடுச்சுனா நல்லாத்தான் இருக்கும்...ஆனா அப்படி நடக்க மாட்டேங்குதே” என பாரி சலிப்புடன் சொல்லவும்
“ இங்க பாருடா ...பயபுள்ள தத்துவம் எல்லாம் பேசுது....இது எப்போ இருந்து “ என நக்கலாக சொன்னவள் “அப்படி என்னடி நீ நினைச்சது நடக்கலை.....அதுக்கு இப்படி எல்லாம் இத்துப்போன கவிதையை படிச்சுகிட்டு இருக்க” என பூரணி கிண்டலாக கேட்க
“அதெல்லாம் உனக்கு தெரியாதுக்கா....தோல்வியோட வலி வந்தாதான் தெரியும்” என அவளின் மனதில் இருப்பது வார்த்தையாக வெளிவர அதுவரை விளையாட்டாகவே பேசிகொண்டிருந்த பூரணி சற்று அதிர்ந்து அவளை கூர்ந்து கவனித்தாள்.

 

Relay Stories

Vaigai - Avid Readers (Novel Explorer)
Aug 2, 2021
156
186
43
Karur
அவளது பார்வையை கண்டுகொண்ட பாரி....சட்டென்று எழுந்தவள் “சரிக்கா நான் குளிக்க போறேன்” என அங்கிருந்து நழுவ பூரணியோ ஏதும் பேசாமல் அவளையே பார்த்து கொண்டு இருந்தாள்.
அவள் பதில் சொல்லாமல் தன்னையே பார்ப்பதை பார்த்த பாரி “எனக்கு ஒன்னுமில்லக்கா...நான் நல்லா இருக்கேன்” என சிரித்துகொண்டே சொல்லவும்
“ம்ம்ம் நல்லா இருந்த ...எங்க வீட்டுக்கு வரும்போது எல்லாம் நல்லாத்தான் இருந்த.....ஆனா இப்போ அப்படி தெரியலியே” என அவள் முகத்தை பார்த்தபடியே கேட்டாள்.
பாரியோ சற்று சுதாரித்து “ஐயோ பூரணிக்கா அங்க வந்த பாரிதான் இங்கும் இருக்கா.....அதே பாரிதான்” என சொல்வதற்குள் அவள் கண்களில் இருந்து நீர் முத்துகள் கீழே விழுந்தன.
“பூரணிஇஈஈஈஈ ...பூரணிஈஈ” என்ற இழுவை குரல் கேட்டதுமே கனகாக்கா என்றபடி உள்ளே இருந்து பூரணி ஓடிவர
எதிரே கையில் பையோடு நுழைந்த கனகா “அட என்னபுள்ள இது...வாயும் வயிரும்மா இருக்கும்போது இப்படி எல்லாம் ஓடிவரகூடாதுன்னு தெரியாதா உனக்கு என பாசத்துடன் ஒரு அதட்டல் போட்டவர்...எப்படி இருக்க புள்ள ....... இந்தாபுள்ள உனக்கு பிடிக்குமேனு அதிரசம் கொண்டுவந்தேன்” என அன்பையும் அதிரசத்தையும் சேர்த்து அவளிடம் கொடுக்க
“ உங்களுக்கு எதுக்கு சிரம்மம்....இங்க கடையில எல்லாம் கிடைக்குமுக்கா என சொல்லிகொண்டே நீங்க முதல்ல உள்ளார வாங்க...எங்க மாமா வந்து இருக்காறா...புள்ளைங்களை எல்லாம் கூட்டிட்டு வந்து இருக்கலாமல” என அவள் வாயிலை பார்க்கவும்

“உன்ற மாமாவுக்கு இங்க சோலி இருக்குனு சொன்னாரு.....அதான் நானும் அவர்கூடவே உன்னை பார்த்திட்டு போலாம்னு வந்திட்டேன்....சோலிய முடிச்சு வருவார்...அதுக எல்லாம் எதுக்கு” என பேசிகொண்டே உள்கூடத்தில் சென்று அமர
“வாங்க வாங்க என்றபடி வெளியே வந்த மணியம்மை......ஊர்ல எல்லாம் சௌக்கியமா? எங்க மாப்பிளையை காணோம்” என கேட்கவும் “மாமா ஒரு சோலியா போயிருக்காரு வந்துருவாருங்கம்மா” என்றார் கனகா.
இருங்க காபி எடுத்திட்டு வரேன் என அவர் உள்ளே செல்லவும் பூரணி கனகாவிடம்“அப்புறம்க்கா எப்படி உங்க வீட்டு ஜெயில்ல இருந்து வெளியே வந்தீங்க..... உங்க மாமியார் எப்படி விட்டாங்க.....அதும் புள்ளைங்க இல்லாம” என அவள் சிரித்து கொண்டே கேட்கவும்
கனகாவோ “எனக்கே ஆச்சிரியம் தான் புள்ள.....நேத்து பேச்சியத்தை எங்க வீட்டுக்கு வந்து இருந்தாங்க.....மாமாவும் அத்தையும் பேசிட்டு இருந்தாங்க....அப்புறம் மாமா ரவைக்கு வந்து படுக்கும்போது நாளைக்கு வெள்ளியம்பாளையத்துல ஒரு சோலி இருக்கு.....நீ வரீயா ..அப்படியே உன்ற தங்கச்சிய பார்த்திட்டு வருவன்னு கூப்பிட்டாரு......கரும்பு திங்க கூலிகேட்கனுமா....உடனே சரின்னு சொல்லிட்டேன்”... என கதையாக விளக்கி கொண்டிருக்க அதற்குள் மணியம்மை காபி எடுத்து வந்தார்.
“உங்களுக்கு ஏனுங்கம்மா வீண் சிரமம்....நான் இப்பதான் வீட்ல சாப்பிட்டு வந்தேன் என்ற கனகா அப்படியே அதுல மல்லிகைபூ இருக்கு எடுத்து பூரணிக்கு வச்சுவிடுங்க” என சொல்லவும் அந்த பூவை பார்த்த உடனே பூரணிக்கு புரிந்து விட்டது...இது தங்களது மல்லிகை தோட்டத்தின் பூ தான் என்று ...அவள் கனகாவை பார்க்க அவளோ காபியை சுவைத்து கொண்டு இருந்தாள்.
“புள்ளைங்க எல்லாம் என்ன படிக்கிறாங்க என மணியம்மை பேச்சை ஆரம்பிக்கவும் விபரம் சொன்ன கனகா ஆனா பூரணி உன்மேல எனக்கு வருத்தம்புள்ள....அக்கா அக்கானு சுத்திகிட்டு இருந்திட்டு ......நீபாட்டுக்கு சொல்லாம இங்க வந்திட்டா... அப்பவும் நான் கேட்டேன்ல...உங்க அப்பா வீட்டுக்கு போவியான்னு...நீ இல்லைனு சொன்ன”...என பேச்சை ஆரம்பிக்கவும்
“இல்லக்கா அது வந்து” என அவள் இழுக்க
அதற்குள் மணியம்மை “அவளுக்கு கொஞ்சம் வாந்தி மயக்கம் இருக்கு கனகா ...அதான்” என சமாளித்தார்.
“நீங்க சொல்றதும் சரிதானுங்கம்மா.... இந்த நேரத்துல கூடமாட ஒரு ஆளு வேணும் தான் ...........ஆனா எங்க பேச்சியத்தை மத்தவங்க மாதிரி இல்லை...பேச்சு தான் ஏறுமாறா இருந்தாலும் பாசமா இருப்பாங்க.....எனக்கு மூணு பிரசவமும் நடந்தப்ப பார்த்துகிட்டது பேச்சியத்தை தான்.... நல்லா பார்த்துக்குவாங்க......அப்புறம் நானும் இருக்கிறேன்ல.....நல்லா பார்த்துக்குவோம்”......என அவள் பெருமையாக சொல்லவும் மணியம்மையின் முகத்திலும் சற்று கர்வம் இருந்தது.தன் தாய்வீட்டு ஆட்களை மற்றவர்கள் புகழும்போது எந்த பெண்ணிற்கும் ஒரு கர்வம் வருவது இயல்புதானே.
“சரிக்கா அப்புறம் உங்க வேலை எல்லாம் எப்படி போயிட்டு இருக்கு...ஆமா நீங்க புதுசா வாங்கின கோதாவரி செனையா இருந்துச்சே......கண்ணு போட்டுருச்சா..காளைக் கண்ணா இல்ல கெடாரி கண்ணா” என அவள் பேச்சை மாற்ற...
உடனே “அதை ஏன்புள்ள கேட்கிற...அது பெரும் பிரச்சனை ஆகிடுச்சு....ஒரு நாள் அதுக்கு ரொம்ப முடியாம போய் உங்க மாமாவும் இல்லை.....தடுமாறிப்போயிட்டோம்” என்றாள்.
“ஏன் என்னாச்சு கனகா ...டாக்டர கூப்பிட வேண்டியது தான ...பக்கத்துல யாரும் இல்லயா” என மணியம்மை கேட்கவும்
“ யாரு இருக்கா பாண்டி டவுனுக்கு போய்டுச்சு...புகழு தம்பி வீட்டுக்கு வரதே இல்லை...... அப்புறம் பூரணி உன்ற மச்சான் போக்கு சரியில்லை.....வீட்டுக்கே வரது இல்லை.....வேலை வேலைன்னு அங்கேயே கிடக்கிறார்...பாவம் பேச்சி அத்தை எதுவும் சொல்ல முடியாம தவிக்கிறாங்க.....எனக்குமே உன்மேல கோபதான்புள்ள....புள்ள உண்டாகி இருக்க சரி...அதுக்காக கட்டுன புருஷனை மறந்திட்டு இங்க வந்து உட்கார்ந்து இருக்க.....அது தப்பு புள்ள” என பேச்சுவாக்கில் தன் மனதில் பட்டதை எல்லாம் கனகா பேச மணியம்மையோ பூரணியை பார்க்க அவளோ தரையை பார்த்தபடியே அமர்ந்திருந்தாள்.
அதற்கு பிறகு சில மணிநேரம் கனகா பேசிவிட்டு வரதன் வந்ததும் புறப்பட்டவள் “சீக்கிரம் ஓலைபாளையம் வந்து சேரு பூரணி” என்றவள் மணியம்மையிடமும் “நான் உங்க மகளை நல்லா பார்த்துக்குவேன்....நீங்க அங்க அனுப்பி வைங்க.....பூரணி இல்லாம எனக்கும் அங்க பொழுது போகமாட்டேங்குது”என சொல்லிவிட்டு கிளம்பினாள்.
கனகா வந்து போனதில் இருந்து மணியம்மை மனதில் மீண்டும் குழப்பம் குடி கொண்டது.. ஒரு நாள் இரவில் “ஏன் மணியம்மை .....கொஞ்ச நாளா உன் முகமே சரியில்லை.....நானும் வேலை களைப்பா இருக்கும்னு நினச்சேன்...ஆனா ரொம்ப நாளாவே இப்படியே இருக்க....என்னடி உனக்கு பிரச்சனை...உடம்புக்கு ஏதாவது நோவா ? எதா இருந்தாலும் சொல்லிடுபுள்ள...உனக்கு ஏதாவது ஒண்ணுனா என்னால தங்கிக்க முடியாது” என அக்கறையாக விசாரிக்கவும்
மாணிக்கத்தின் அன்பை அறிந்தவரானதால் “அப்படி எல்லாம் ஏதும் இல்லைங்க மாமா....நான் நல்லா தான் இருக்கேன்” என சிரித்து கொண்டே சொல்லவும்
“உன் வாய் தான் சிரிக்குது...ஆனா கண்ணுல ஒரு கலக்கம் தெரியுது...என்னனு சொல்லுடி...சொன்னாதான எனக்கு தெரியும்.....நானே இப்பதான் எல்லா பிரச்சனயும் முடிஞ்சு நிம்மதியா இருக்கேன்...அதும் நம்ம பூரணி உண்டாகி இருக்கிறது எனக்கு எவ்ளோ சந்தோசம்...என் பொண்ணும் சந்தோஷமா குடும்பம் நடத்துறான்னு பெருமை பட்டுகிட்டு இருக்கேன்.....இப்போ உனக்கு என்னடி ஆச்சு......மனசவிட்டு சொல்லுடி” என அவரை தன் மார்பில் சாய்த்து கொண்டு அவர் கேட்கவும்

“இல்லைங்க மாமா...பூரணிய நினைச்சாதான் ஒரே கவலையா இருக்கு.....இன்னும் விளையாட்டு தனமாவே இருக்கா......இன்னும் கொஞ்ச நாள்ல அவளுக்கு குழந்தை பொறக்க போகுது ...இன்னும் இப்படியே இருந்தா எப்பிடி” என மெதுவாக அவர் ஆரம்பித்தார்.
“அட லூசே இதுக்குதான் இவ்ளோ விசனப்பட்டு கிடந்தியாக்கும்......ஏண்டி அவ சின்ன பொண்ணுதாண்டி...புள்ள பெத்திட்டா உடனே பெரிய பொண்ணாக முடியுமா? போடி இவளே.....அதுவே வாந்தி மயக்கமுனு முடியாம கிடக்கு.....இப்போ போய் திட்டிகிட்டு இருக்கா ? என மநியம்மைஅய் அவர் கடிந்து கொள்ள
“ஆமா நாளைக்கு புருஷன்வீட்டுக்கு போகாம இப்படி இருந்தா நாலு பேரு என்ன சொல்வாங்க”.....என அவர் கோபத்தில் வார்த்தையை விட
“யாரு என்ன சொன்னாலும் பரவாயில்லை....என் பொண்ணு இங்க தான் இருப்பா.....புள்ள பெத்ததுக்கு அப்புறம் தான் போவா”....என அவர் உறுதியாக சொல்லவும்
“இப்படி சொன்னா ஊர்ல அப்படியே மெச்சிக்குவாங்க போங்க” என அவர் வேகமாக சொல்லவும்
நீ சொன்னாலும் சொல்லாட்டியும் கண்டிப்பா என் பொண்ணை குறை சொல்ல மாட்டங்க.....அப்படி பட்ட ஆளுக்கு நான் என்ற மகளை கொடுக்கல.........புகழை பத்தி எனக்கு நல்ல தெரியும்...அவன் உங்க அண்ணன் மாதிரிடி...எப்பவும் உறவுக்கு மரியாதை கொடுக்கிறவன்.....என்ன அவங்க அம்மா திமிரு கொஞ்சம் அவன்கிட்ட இருக்கு...இப்பவும் பாரு.....என்னோட சரிக்கு சமமமா போட்டி போட்டுக்கிட்டு வராம இருக்கான்......என்ற பேரனோ பேத்தியோ வரட்டும்...அப்புறம் வந்து தானே ஆகணும் என கர்வமாக சொன்னவர் இங்க பாருடி ரொம்ப நாளைக்கு அப்புறம் நம்ம வீட்ல சந்தோஷமா இருக்கோம்.....நீ எதாவது புலம்பிட்டு இருக்காத...பேசாம தூங்கு என அடக்கி உறங்க வைத்தார்.
மணியம்மையோ அதற்கு மேல் ஏதும் சொல்லாமல் “அவராது சந்தோஷமாக இருக்கட்டும்......இப்போது தான் எல்லாம் மறந்து நிம்மதியாக இருக்கிறார்.இந்த நேரத்தில் நான் ஏதாவது சொல்லி மீண்டும் இரு குடும்பத்துக்குள் பிளவு வந்து விட்டால் பின்னர் பூரணி நிலை நினைக்கும்போதே அவர் நெஞ்சம் பதற “தாயே முத்துமாரி உன்னை தான் மலைபோல நம்பி இருக்கேன்....என்ற மகளுக்கு நல்லவழி காட்டு தாயீ” என கடவுளின் மீது பாரத்தை போட்டுவிட்டு கண் மூடினார்.
மறுநாள் காலையில் வீட்டில் வேலை வேகமாக நடந்து கொண்டிருக்க வெகுநேரம் கழித்து எழுந்த பூரணி வெளியே வந்தவள் .....”டேய் சொக்கா இலை எல்லாம் அறுத்து வச்சுடியா.....வாழை பழம் பழுத்து இருக்கான்னு பாரு...இல்லை பக்கத்துல வாங்கிட்டு வா...அப்படியே வெத்தலை பாக்கு இல்லடா...அது கடைக்கு போனா வாங்கிட்டு வந்திடு” என மணியம்மை வெளியே நின்று கொண்டு கத்திக்கொண்டு இருக்க “என்னம்மா விசேஷம் .....இலை.வெத்தலை பாக்குனு சொல்லிட்டு இருக்கீங்க” என கேட்டுகொண்டே வெளியே வந்தாள் பூரணி.
“எழுந்திட்டியா பூரணி...முதல்ல போய் குளிச்சிட்டு வா ...அவங்க வர நேரமாச்சு என சொல்லிகொண்டே ஐயோ பாயசம் அடுப்புல இருக்கு” என்றபடி வேகமாக அவர் சமையல் அறைக்குள் ஓட பாரியோ “அம்மா பந்தி பாய் இங்க காணோம்......வேற என்ன எடுக்கணும்” என பரண் மேல் இருந்து கொண்டு சத்தம் கொடுக்கவும்
“ஹே வௌவால் மாதிரி அங்க என்னடி தொங்கிட்டு நிக்கிற” என பூரணி அவள் நிற்கும் விதத்தை பார்த்து கிண்டலாக கேட்கவும்

“அதை ஏன்க்கா கேட்கிற......இந்த அம்மா என்னை பரண்மேல ஏத்திவிட்டு இந்த வீட்டையே ரவுண்டு அடிகிறாங்க.....ஆனா என்ன வேணும்னு சொல்ல மாட்டேங்கிறாங்க...எனக்கு கால் வலிக்குது” என அவள் சலித்தபடி சொல்லவும்
“சரி இறங்கு நான் ஏறேன் என அவள் நாற்காலியில் கால் வைக்கவும்.....ஏய் பூரணி உனக்கு அறிவு இருக்கா...வயித்துல புள்ளைய வச்சிக்கிட்டு நீ எங்கடி பரண் மேல ஏற என திட்டியபடியே அங்கு வந்த மணியம்மை ஏண்டி உன்னால் கொஞ்சம் நேரம் அங்க இருக்க முடியலியா” என பாரியை சேர்த்து திட்டவும்
“அம்மாஆஅ நான் மட்டும் இருந்தா பரவயில்லை...இங்க கரப்பான் பூச்சி,பள்ளி எல்லாமே குடித்தனம் இருக்கே...நானும் இதுகளோட எவ்ளோ நேரம் தான் போராடறது” என பாரி அழுவது போல் சொன்னாள்.
“அப்போ பெருச்சாளி இன்னும் வெளியே வரலியா” என பூரணி கேட்க
“எனதூஊ பெருச்சாலியாஆஆஅ ஐயோஓஒ” என கத்தியபடி அவள் வேகமாக மேல் இருந்து குதிக்க முயல
“ஏய் இல்லடி அவ பொய் சொல்றா...நீ குதிச்சு கலை கையை உடச்சுகாத என மணியம்மை கத்த உடனே பூரணி சிரிக்க ,பாரியும் மணியம்மையும் அவளை முறைக்க ..அப்போது “என்னங்கத்தை யாரோட காலும் கையும் உடையபோகுது” என குரல் கேட்கவும் வேகமாக மூவரும் திரும்பி பார்க்க அங்கு அழகன் தன் மனைவியுடன் நின்று கொண்டிருந்தான்.

வயதும், வளர்ப்பும் கவலைகளை மறக்க செய்ய
சந்தோஷ வானில் சிறகை விரித்து
பறந்து கொண்டு இருந்தவள்
திடீரென்று வாழ்க்கை என்னும் கடலில்
தள்ளிவிடப்பட்ட
அலையின் போக்கில் அவள் செல்லும்வரை
அப்பயணம் அவளுக்கு சுகத்தை கொடுக்க
திடீரென காற்றின் திசை மாறி
தடம் மாற சில நிமிடம் நினைவுகள் கலங்க
தவித்து நின்றாள் இப்பாவை.
ஆனால் இப்பிரபஞ்சத்தின் ஆக்கசக்தி அழிவுசக்தி
இரண்டுமே பெண்ணாக இருக்க அப்பெண்
சோதனையை கண்டு துவண்டு விடுவாளா என்ன?
விதியும் காலமும் அவளை சுழற்றி விட
நாணலை போல் வளைந்து எதிர் கொள்வாளே தவிர

நெடுமரம் போல் சாய்ந்து மடியமாட்டாள்.