அதுவரை அழுபவள் போல் முகத்தை வைத்து கொண்டு இருந்தவள் சட்டென முகபாவனையை மாற்றி “ ஏமாந்திட்டியா...ஹே இந்த முறை நீ ஏமாந்திட்டியா என முகத்தை சுருக்கி அவளுக்கு பலிப்பு காட்டியவள் எனக்கும் தெரியும் நீ விளயாட்டுகுதான் பண்றேன்னு......... இத சாக்கா வச்சு உன்னை இன்னும் கொஞ்சம் திட்டலாம்னு பார்த்தா நடுவுல அப்பா வந்து கெடுத்திட்டாரு...என்னப்பா நீங்க “ என அவளும் முகத்தை சுருக்கியபடி புகாரை தந்தையின் மேல் திருப்பினாள்.
“அட புள்ளைங்களா ரண்டு பெரும் சேர்ந்து என்னை முட்டலாக்கிடிங்க.....உங்களை பெத்ததுக்கு எனக்கு இது தேவைதான் “ என அவர் சொல்லி சிரிக்கவும்
அவர்களோ “அது எங்க செல்ல அப்பாவுக்கு இப்பதான் புரியுது...ஆனாலும் அப்பா நீங்க இவ்ளோ அறிவாளியா இருந்திருக்க வேண்டாம்” என இருவரும் அவரின் இருபுறமும் வந்து நின்று சொல்லி சிரிக்க தனது மகள்களின் மகிழ்ச்சியில் அவரது மனம் நிறைந்து போனது.
பின்னர் பாரி விடுதிக்கு கிளம்ப உள்ளே சென்றதும் பூரணியோ தந்தையின் தோளில் சலுகையாக சாய அவரும் அவளிடம் “பூரணிமா . ....இன்னும் கொஞ்ச நாள் பொறு ...ஒரு மல்லிகை தோட்டம் விலைக்கு வருது ....அதை வாங்கி கொடுக்கிறேன் ” என்றார்.
“நெசமாவாப்பா என வியப்புடன் கண்களை விரித்தவள் ஆனா நம்ம ஊர்ல மல்லிகை தோட்டம் இல்லையே” என அவள் வினவ
“அதான் ஊரு ஓரத்துல ஒரு தோட்டம் இருக்குதுல்ல “ என்றதும்
“அது புகழ் மச்சான் தோட்டம் தானே....அங்க தான் அவரு யாரயும் விடமாட்டரே......யாருக்கும் பூவும் கொடுக்க மாட்டாரு என சொன்னவள் நீங்க விலைக்கு வாங்க போறிங்களாப்பா” என கேட்டாள்.
அவரும் “நான் வாங்கலைம்மா ...அவனே கொடுக்க போறான்......இல்ல கொடுக்க வைக்கிறேன் என அழுத்தமாக சொல்லிவிட்டு சரி சரி அப்பாவுக்கு கொஞ்சம் தண்ணீ எடுத்திட்டு வா” என்றபடி அருகில் இருக்கும் நாற்காலியில் அமர்ந்தார்.
“எனக்காக தான் நீங்க அந்த தோட்டத்தை வாங்கிறதா இருந்தா அதை வாங்காதீங்கப்பா....... எனக்கு அந்த தோட்டத்து பூவே வேண்டாம்ப்பா....” என அழுத்தத்துடன் அவள் சொல்ல
அவரோ அதிர்ந்து அவளை நிமிர்ந்து பார்த்தவர் “ஏம்மா” என்றார்.
“அது அப்படித்தான்பா” என சொல்லும்போதே கண்களில் கண்ணீர் குளமாக நிற்க..... ...பழைய சம்பவம் அவள் நினைவிற்கு வந்தது . அது அவளது மனவேதனையை மேலும் அதிகப்படுத்த அதை மாணிக்கம் பார்த்து விடக்கூடாது என்பதற்காக திரும்பி நின்றவள் .... ‘இருங்க நான் உங்களுக்கு தண்ணீ எடுத்திட்டு வரேன்” என்றபடி வேகமாக உள்ளே சென்றாள்.
“காத்தமுத்து அண்ணே அங்க என்ன பண்ணிட்டு இருக்கீங்க..... நெல்லங்காட்டுல மடை நிறைஞ்சு வயலுக்குள்ளே தண்ணீ போக போகுது ...அதை கொஞ்சம் அடைச்சு தென்னந்தோப்பு பக்கம் திருப்பி விடுங்க......ஏற்கனவே தண்ணீ இல்லாம சிரமபட்டுகிட்டு இருக்கோம்...இதுல இப்படி தண்ணீய வீண் பண்ணா எப்படி” என சோளதட்டு அறுப்பை மேற்பார்வையிட்டு கொண்டே வேலையாட்களுக்கு வேலை சொல்லி கொண்டி இருந்தான் புகழ்.
“இதோ அடைச்சு விட்றேன் தம்பி” என ஓடிய காத்தமுத்து சொன்ன வேலையை முடித்து விட்டு வந்தவர் ......”அது எப்படி தம்பி இங்க இருந்துகிட்டே அங்கிட்டு மடை நிரம்பரத சரியா சொல்றிங்க....நானும் இந்த வேலையை நாப்பது வருசமா பார்க்கிறேன்...எனக்கு இன்னும் பிடிபட மாட்டேங்குது ....இன்னும் கொஞ்சம் தாமசமா போய் இருந்தா நீங்க சொன்ன மாதிரி வெள்ளாமை காட்டுக்குள்ளே தண்ணீ நுழைஞ்சு எல்லாமே வீணாய் போய் இருக்கும்” என்றார்.
புகழோ சிரித்து கொண்டே “எல்லாம் ஒரு கணக்குதான் அண்ணே” என்றான்.
.அதற்குள் அங்கு வந்த மருது “அய்யா ஆத்தா சாப்பாடு கொடுத்து விட்ருக்காங்க.....தொண்டுபட்டிகிட்ட வச்சிடட்டுங்களா” என கேட்டான்.
அப்போது தட்டு அறுத்து கொண்டிருந்த ஒரு நடுத்தரவயது பெண்மணி புகழை பார்த்து “ஏங்கண்ணு நீ இன்னும் சாப்டலையாக்கும்...வயசு பையன் இப்படி சாப்பிடாம இருந்தா எப்படி...சொல்லி இருந்தா நாங்க கொண்டுவந்த கம்மகூழாவது கொடுத்து இருப்போம்ல .......இப்படி காலநேரத்து சோத்தை மதியம் சாப்பிட்டா எப்படி கண்ணு” என்று அக்கறையுடன்கேட்டார்.
இது தான் கிராமம்.இங்கு முதலாளி தொழிலாளி என்ற பாகுபாடு அதிகம் கிடையாது.ஒருவருக்கு துன்பம் என்றால் அனைவரும் ஓடி வந்து உதவுவர்.அதே போல் முதலாளிகளும் அவர்களை வேலை செய்யும் கருவியாக பார்க்காமல் சக மனிதர்களாக அவர்களை நடத்துவர்.பெரும்பாலும் அவர்களை அழைக்கும் முறையே அண்ணா ,அக்கா,பெரியம்மா என உறவுகளை சொல்லித்தான் அழைப்பார்கள்.மனித நேயம் இந்தியாவில் இன்றும் தழைத்து நிற்க இந்த கிராமங்களே முக்கிய காரணம்.
“இல்லை பெரியம்மா...வரும்போது தான் நீச்ச தண்ணீ குடிச்சுட்டு வந்தேன்....அதான் பசியில்லை ...நீங்க வேலைய பாருங்க...நான் சாப்பிட்டு வந்திடறேன்”என்றவன் தொண்டுபட்டியை நோக்கி நடந்தான்.
“என்ன புகழு இப்பதான் சாப்பாட்டு வேலை நடக்குதா” என கேட்டுகொண்டே அங்கு வந்தார் ராசப்பன்.
அப்போது தான் சாப்பிட அமர்ந்தவன் அவரை பார்த்ததும் சிரித்துகொண்டே “ஆமாங்க சித்தப்பா...இன்னைக்கு கொஞ்சம் அறுப்பு வேலை இருந்தது....அதான் முடிச்சுட்டு வரதுக்கு இவ்ளோ நேரமாகிடுச்சுங்க என்றவன் உட்காருங்க சித்தப்பா சாப்பிடலாம்” என்றான்.
“நமக்கு எல்லாம் வயசாகிடுச்சுப்பா ...... அதான் வெல்லேனே சாப்பாட்டு வேலைய முடிசுட்டேன்....இல்ல உங்க சித்திகிட்ட யாரு பேச்சு வாங்கிறது என்றபடி அருகில் இருக்கும் கயிற்று கட்டிலில் அமர்ந்தவர் அப்புறம் புகழு சோளத்தை முடிச்சுட்டு அடுத்து நெல்லு அறுக்கனுமா” என்றார்.
இன்னும் முடிவு பண்ணலைங்க சித்தப்பா...அதுக்குள்ள தக்காளி வேற விளைஞ்சு கிடக்கு....அது நம்ம வெள்ளையனுகிட்ட சொல்லிருக்கேன்...மொத்தமா கொள்முதல் பண்ணிக்கனு....அவனும் சரின்னுட்டான் பார்க்கலாம்” என்றான்.
“ஏன் புகழு அப்படி மொத்தமா கொடுத்தா பெருசா லாபம் இருக்காதே ...நம்மலே சந்தைக்கு கொண்டு போனா நல்ல லாபம் தான” என அவர் அனுபவசாலியாக பேச
“எனக்கும் புரியுதுங்க ....ஆனா அந்த வேலையை பார்த்தா இங்க நெல்லு அறுப்பு ஒருவாரத்துக்கு நின்னு போய்டும்...அதுல வர நட்டத்தை பார்த்தா இது ஒன்னும் பெருசா இல்லைங்க சித்தப்பா....அப்புறம் அவனும் இப்பதான் படிப்பை முடிச்சுட்டு விவசாயத்துல இறங்கி இருக்கான். இப்ப எல்லாம் படிச்ச பசங்க எங்க விவசாயத்துக்கு வராங்க.....எதோ இவனை மாதிரி வர நான்கு பேர நம்ம மாதிரி ஆளுங்க உதவி பண்ணாதான அவங்களும் இதோட அருமையை புரிஞ்சுக்குவாங்க....அதுவுமில்லாம ஆரம்பித்துல நான் பட்ட கஷ்டம் வேற யாரும் படகூடாது” என சொல்லும்போதே குரல் கரகரக்க பேச்சை நிறுத்தியவன் வேகமாக எழுத்து கை கழுவ சென்றான்.
“உன்னை மாதிரி இளவட்ட பசங்க எல்லாம் விவசாயத்துல ஆர்வத்தோட இறங்கினா கண்டிப்பா விவசாயம் நம்ம நாட்ல பெரிய அளவுல வளர்ச்சி அடையும் புகழு.அன்னைக்கு ஆபிசர் சொன்னாங்க நீ இயற்க்கை வேளாண்மை ஆய்வுக்கு ரண்டு ஏக்கர் நிலம் கொடுத்திருக்கேன்னு ரொம்ப சந்தோசமப்பா” என மன நினைவுடன் அந்த பெரியவர் சொல்லவும்
.அவனோ சிரித்து கொண்டே எந்த பதிலும் சொல்லாமல் “அப்புறம் சித்தப்பா அக்கா நல்லா இருக்காங்களா ..... என்ன சொல்றான் என் மருமகன்” என அவர் பேரனை பற்றியும் பாசத்துடன் விசாரிக்க
“எல்லாரும் நல்லா இருக்காங்க என்றவர்...ம்ம்ம் உன் மருமகன் எப்போ மாமன் எனக்கு ஒரு பொண்ண பெத்து தரபோறாருனு கேட்கிறான் என சொல்லிவிட்டு சிரித்தவர் சட்டென்று அட பாரு வந்த விஷியத்தை விட்டுட்டு வேற எதோ பேசிட்டு இருக்கேன் என்றவர் இன்னைக்கு உங்க அம்மா என்ன வர சொல்லிருந்தாப்ல.....உன் ஜாதகத்தை கொடுத்து சீக்கிரம் ஒரு பொண்ண பாருங்க......ஆவணியில கண்ணாலத்தை முடிச்சடனும்னு சொன்னாப்ல.....என்னப்பா இது எல்லாம்” என அவர் கேட்கவும்
அவனோ “அதுக்குள்ள அம்மா ஆரம்பிசுட்டங்கலா என மெல்லிய குரலில் கேட்டவன் ....ம்ம்ம் எப்பவுமே எனக்கு என்ன வேணும்னு நான் முடிவு பண்ண முடியறதே இல்லை.காலமும் மத்தவங்களுமே என்னோட தேவைகளை முடிவு பண்றாங்க என வருத்தத்துடன் சொன்னவன் விடுங்க சித்தப்பா ....என்ன நடக்கணும்னு இருக்கோ அது நடக்கட்டும்” என சலிப்புடன் சொன்னான் புகழ்.
“நான் வேணும்னா உங்க அம்மாகிட்ட பேசி பார்க்கட்டுமா தம்பி” என அவர் கேட்க
“என்ன பேசுவிங்க சித்தப்பா....என்ன பேசுவிங்க .......அவங்க கேட்கிரதலையும் ஒரு நியாயம் இருக்கு...பெத்தவங்க நிலையில இருந்து பார்த்தா அவங்க சொல்றதும் சரிதான” என்றான் புகழ் .
“அப்போ சரி தம்பி நான் பொண்ணு பார்க்கட்டுமா...உனக்கு சம்மதம் தான” என அவர் உனக்கு சம்மதம் என்ற வார்த்தையை அழுத்தி கேட்டதும் அவர்அருகில் அமர்ந்திருந்தவன் வேகமாக எழுந்து சிறிது தூரம் நடக்க அவனது நடையும், உடல் மொழியும் அவன் எந்த அளவு துயரத்தில் இருக்கிறான் என்பதை ராசப்பருக்கு சொல்லாமல் சொல்ல அவர் அமைதியாக அவனையே பார்த்து கொண்டு இருந்தார்.
“சித்தப்பா தெற்கால இருக்கிற வாழை தோட்டத்துக்கு கொஞ்சம் மருந்து வைக்கனும்னு சொன்னீங்கள ......அதை வச்சிடலாம் சித்தப்பா.......பழம் எல்லாம் சிறுத்து காய்க்குது...அது வச்சாதான் பழம் நல்லா முழுசா இருக்கும்” என அவன் சொல்ல
இதற்கு மேல் எதுவும் பேசவிரும்பவில்லை என்பதை அவன் இப்படி சொல்கிறான் என புரிந்து கொண்ட ராசப்பர் மேற்கொண்டு அவனிடம் எதும் பேசாமல் “சரி தம்பி நீங்க சொன்னதே செஞ்சிடலாம்” என்றார்.
“சரிங்க சித்தப்பா.....அறுப்பு முடியற நேரம் ...நான் வயலுக்கு போறேன்” என அவன் நகர
தம்பி ஒரு நிமிஷம் என்றவர் “கோமதி பொண்ணுக்கு என் பொண்ண கட்டி கொடுத்திருக்க ஊர்ல தான் மாப்பிள்ளை பார்த்து இருக்காங்களாம்.பெரிய இடமாம்.பையன் பெரிய வேலையில இருக்கானாம்.பொண்ணுக்கும் பையனுக்கு இஷ்டம்தான்.ஆனா ஒரு சின்ன பிரச்சனை” என சொல்லி அவர் நிறுத்தினார்.
அவனோ “இது நமக்கு சம்பந்தம் இல்லாத பேச்சு சித்தப்பா.....நான் வரேன்” என மீண்டும் நகர முற்பட
அவரோ மீண்டும் “அவங்க வீட்ல ஒரு பொண்ணு இருக்காம் என சொல்லி சிலவினாடி நிறுத்தியவர் ......அதுக்கும் மாப்பிள்ளை பார்த்திட்டு இருக்காங்க....ரண்டு கண்ணாலத்தையும் ஒரே நேரத்துல முடிச்சிடலாம்னு சொல்றாங்க..... வசதி வாய்ப்பு தேவை இல்லை.நல்ல பையனா இருந்தா போதும்னு சொல்றாங்க.....அதான் உன் ஜாதகத்தை வேணா கொடுத்து பார்க்கட்டுமா” என சொல்லி மறுபடியும் நிறுத்த
புகழோ நடந்தவன் நின்று அவரை திரும்பி அவரை ஆழ்ந்து ஒரு பார்வை பார்க்க ...அந்த பார்வையை சளைக்காமல் எதிர்கொண்டவர்
“நான் சொல்றத சொல்லிட்டேன்...அப்புறம் உன் விருப்பம். மொட்டு வெடிச்சாத்தான் பூ மலரும் புகழு......பூ மலர்ந்தால் தான் அதோட படைப்பும் முழுமை அடையும்.எதையும் மனசுகுள்ளே வச்சு புழுங்கிட்டு இருந்தா ஒரு கட்டத்துல அந்த புழுக்கமும் முற்றி வெடித்துவிடும்.நான் சொல்றதை சொல்லிவிட்டேன்.இனி உன் முடிவு தான்” என அழுத்தமாக சொல்லிவிட்டு அங்கிருந்து கிளம்பினார்.
புகழோ அசையாமால் அங்கே நின்று கொண்டு இருந்தான்.
புகழை பற்றி ராசப்பர் நன்கு அறிவார்.அவன் எதையும் வாய் விட்டு சொல்ல மாட்டான்.மனதிற்குள்ளே வைத்து கொள்வான்.பெற்றவர்களால் கூட அதை அறிய முடியாது.சில சமயம் புகழின் தந்தை இது குறித்து ராசப்பரிடம் சொல்லி வருத்த பட்டு இருக்கிறார்.”இவன் என்ன இப்படி இருக்கிறான் ராசு.......வாய் விட்டு சொன்னால் தானே என்ன நினைக்கிறானு தெரியும்.....இவனை எப்படி திருத்தரதுனே தெரியலை” என்பார்.
அதனால் ராசப்பர் புகழிடம் எப்போதும் கவனத்துடன் தான் பேசுவார்.ஆனால் பூரணி விஷயத்தில் அவனது முகமே அதை காட்டி கொடுத்துவிடும்.மனதில் உள்ளது அவனது செய்கையில் வெளிப்பட்டு விடும்.வெகுநாட்களாக அவரும் அதை கவனித்து கொண்டுத்தான் இருக்கிறார். புகழ் மனதிற்குள் என்ன நினைக்கிறான் என்பது ராசப்பருக்கும் தெரியும். ஒவ்வொரு முறையும் சீர்கொடுத்து விடும்போது பூரணிக்கு கொடுக்கும் பொருளை அவன் ஆசையாக தடவி பார்ப்பதும், அவர் அங்கு சென்று வந்த பின் பூரணி என்ன சொன்னால் என்பதை தான் முதலில் கேட்பான்.பலவருடங்களாக இதை பார்த்து கொண்டு இருப்பவர் என்பதால் அவனை அவர் நன்கு அறிவார்.அதனால் தான் பேச்சியம்மாள் சொன்னதும் அதிர்ந்து அவர் அவனை தேடி வர அவனோ சித்தாந்தம் பேச ,அவரும் புகழ் வாய் விட்டு சொல்லாமல் தான் எப்படி கேட்பது என நினைத்தவர் இது போன்ற ஒரு வெடியை கொளுத்தி போட்டு விட்டு வந்தார்.கண்டிப்பாக புகழ் இது தொடர்பாக ஏதாவது ஒரு முடிவு எடுப்பான் என அவர் முழுமையாக நம்பினார்.
சோதனை மேல் சோதனை
போதுமடா சாமி
வேதனைதான் வாழ்க்கை என்றால்
தாங்காது பூமி
என்ற பாடலோடு மீண்டும் அந்த மினி பேருந்து வந்து நிற்க...
“இன்னைக்கு ஏண்டா விசிலு இப்படி பாட்டு போட்ருக்கான் என்றபடி பாண்டி மற்றும் அவனது கூட்டாளிகளும் உள்ளே ஏறினர். பேருந்திற்குள்ளும் அதிக கூட்டம் இல்லாமல் இருக்க என்ன விசிலு இன்னைக்கு பஸ்ல கூட்டமே இல்ல” என்ற படி அவர்கள் இருக்கையில் அமர
“பக்கத்து ஊர்ல திருவிழா தம்பி...அதான் யாரும் வரலை” என அவர் பதில் சொன்னார்.அதுக்கு நீ ஏன் சோக பாட்ட போடற......நம்ம தல பாட்டு போடு என்றவர்கள் அவன் பாட்டை போட்டதும் ஆடிகொண்டே பேருந்தின் கடைசி இருக்கைக்கு சென்றவர்கள் இன்னிக்கு இந்த சீட் நமக்குதான்” என்றபடி அமர்ந்தார்கள்.
“ஏண்டா உங்களுக்கு வெட்கமா இல்லை.......ஸ்கூல் படிக்கிற பிள்ளைங்களுக்கு பயந்துகிட்டு” என பாண்டி கோபமாக சொல்லவும்
உடனே ஒருவன் ரோசத்துடன் “மாப்ள பயம் எல்லாம் இல்லை......இந்த சீட்டுக்கு ஒரு போட்டி வச்சாங்க...அதுல நாங்க தோத்துட்டோம்... நம்ம எல்லாம் வாக்கு தவறாதவங்க... சொன்ன வார்த்தைக்கு கட்டுப்பட்டு அவங்களுக்கு விட்டு கொடுத்திட்டோம்”என கீழே விழுந்தும் மீசையில் மண் ஒட்டலை என்பது போல் சொன்னான் பாண்டியின் நண்பன் கோபி. .
“அப்படி என்னடா போட்டி” என பாண்டி கேட்க
“இரு மாப்ள அதான் சொல்ல வந்தேன்...அந்த புள்ளங்க ஒரு விடுகதை சொல்லுச்சுங்க...அதுக்கு பதில் சொன்னா உங்களுக்கு இந்த சீட்டு.......இல்லை எங்களுக்கு ...பேச்சு மாறகூடாது இதுக்கு இங்க இருக்கிற எல்லாரும் சாட்சி”அப்டின்னு சொல்லுச்சுங்க.
“என்னது விடுகதையா......என்னடா இது சின்னப்புள்ளத்தனமால இருக்கு” என சொல்லி நக்கலாக சிரித்தான்பாண்டி .
“அதான் மாப்பு நாங்களும் அப்படி நினச்சு தான் அதுக்கு சரின்னு” சொன்னோம் என்றனர்..
அப்புறம் “ அவள் அந்த விடுகதையை சொன்னா மாப்ள என சொல்லி நிறுத்தியவன்.....நிஜமா சொல்றோம் ஒன்னும் புரியலைடா....அவ என்னமோ முறுக்கு பிழியரற மாதிரி சுத்தி சுத்தி வார்த்தைகளை போட்டு விடுகதை கேட்கிறா....எங்க யாருக்கும் விடை தெரியலை...திரும்ப கேட்டா அந்த புள்ளைங்க சிரிக்கறாங்க” என அவன் தங்கள் அவமானப்பட்டதை அவனுக்கு விளக்க .
“என்னடா உலரிங்க ...புரியற மாதிரி சொல்லுங்கடா...தமிழதான கேட்டா” என அவன் கேட்கவும்
“அதான் மாப்பள எங்களுக்கும் சந்தேகமாவே இருந்தது என்றவன் எங்களுக்கு பதில் தெரியலை...உடனே அப்போ நாங்கதான் பின்னாடி சீட்ல உட்காருவோம்னு சொல்லிட்டாங்க...யோசிக்கவே விடலடா எங்களை ” என அவன் சொன்னதும்
“அடச்சே .....கேட்கிரதுக்கே கேவலமா இருக்கு...ஏன்டா உங்களை எல்லாம் என பல்லை கடித்தவன் ...யாருடா அவ ....படிகிறவயசுல விடுகதை எல்லாம் சொல்லி உங்களை தொரத்தி விட்டவ” என அவன் வேகமாக கேட்கவும்
“அதெல்லாம் இல்ல மாப்ள....அன்னைக்கு நான் வரலை...இவனுக அந்த புள்ளைங்கள பார்த்து ஜொள்ளு விட்டு பதில் சொல்லாம இருந்திருப்பாணுக” என அருகில் இருந்த ஒரு சுள்ளான் துள்ள
“டேய் அடங்குடா” என ஒருவன் அவனை அமுக்கினான்.
“பஸ்ல எப்பவும் அது ஓரத்துல தான் உட்காரும் மாப்ள நாளைக்கு உனக்கு காட்றேன்” என்றார்கள்.
மறுநாள் விடுமுறை என்பதால் நண்பர்களுடன் அவன் ஊரை சுற்றிவிட்டு அனைவரும் சென்றுவிட நண்பன் கோபியுடன் வீட்டிற்கு திரும்பி கொண்டிருந்தவன் அவர்களுக்கு முன் சில பெண்கள் பட்டு பாவாடை தாவணி அணிந்து கொண்டு சைக்களில் முன்னே சென்று கொண்டு இருந்தனர்.
“டேய் மாப்பள என்னடா இது......காட்டுக்குள்ள இருக்க பட்டாம்பூச்சி எல்லாம் நம்ம ஊரு ரோட்ல வருதுங்க.... கொஞ்சம் வண்டிய அழுத்தி பிடி” என அவன் பின்னால் இருந்த கோபி பாண்டியை உசுபேத்த
அட ஆமா என்றவன் இருடா ஒரு விளையாட்டு காட்டலாம் என்றவாறே வண்டியை வேகமாக முறுக்கி அவர்களுக்கு முன் ஸ்டைலாக பாண்டி செல்ல
பின்னால் அமர்ந்திருந்தவன் “அட இதுங்க நம்ம பஸ்ல வர பொண்ணுங்க....அடடா இதுகளுக்கா இவ்ளோ சீன போட்டோம்” என வருத்தத்துடன் சொன்னான்.
“என்னது நம்ம பஸ்ல வர பொண்ணா” என சொல்லிகொண்டே வேகமாக u டேர்ன் போட்டு அவன் வண்டியை திருப்ப அதற்குள் அவன் அருகில் வந்து விட்ட அப் பெண்கள் பயந்து அலறி கத்திகொண்டே சைக்கிளை நிறுத்தினர்.
திடீரென்று தங்கள் முன் வண்டி நின்றதும் தடுமாறிய பெண்கள் “ஏனுங்க .....என்னங்க இது...ரோட்ல இப்படி பொம்பளை புள்ளைங்க வழிமறிச்சு வம்பு பண்றிங்க” என முன்னாடி நின்று இருந்த ஒருத்தி கேட்கவும்
“ம்ம்ம் நீங்க எல்லாம் எங்களுக்கு அத்தைமக பாரு...வழி மறிச்சு வம்பு பண்றதுக்கு......நாங்க அந்த பக்கமா போறதுக்கு வண்டிய திருப்புனோம்....நீங்க எதுக்கு கத்தி வண்டிய நிருத்துனிங்க...நீங்க பாட்டுக்கு போகவேண்டியது தான என்னடா மாப்ள” என சொல்லி கொண்டே கோபி பாண்டி முகத்தை பார்க்க பாண்டியின் கண்களோ நிலைகுத்தி நின்று இருந்தது.
மீண்டும் அதே வெண்ணிலவு ...அதை பார்வை மோதல்..... கண்கள் இரண்டும் பேசிக்கொள்ள அதை கட்டுபடுத்த வழியில்லாமல் தவித்து கொண்டு இருந்தான் அவன்..
மண்ணிற்குள் புதைந்திருக்கும் வைரம் போல்
அவன் மனதிற்குள் காதல் புதைந்திருக்க
சுட்டால் மட்டுமே மண் பொன்னாகும்.
அது போல் அவனாக சொன்னால் மட்டுமே
அவனது காதல் மெய்படும்.
மௌனமும் சில நேரங்களில்
நிஜத்தை நிழலாக மாற்றிவிடும்.
வானத்தை வசபடுத்தியவனுக்கு
அதில் உள்ள நிலவை சிறைபிடிப்பது
சிரமமா என்ன ?
குழம்பிய குட்டைக்குள் அனுபவம்
வலையை வீச
சிக்குமா அந்த திமிங்கலம் ??????????