• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

வாடகை தாய்

Santirathevan_Kadhali

Vaigai - Avid Readers (Novel Explorer)
Sep 10, 2021
7
3
3
Malaysia
"நீ உதித்த வார்த்தைகள் என் மனதைக் காயப்படுத்தவில்லை மகனே....நீ என் வயிற்றில் பிறந்தவன்...எனக்குத் தாய்மைப்பேறு அளித்த தலைமகன். ஆனால் இக்கூற்றை உன்னிடம் நான் கூறிவிட்டால் என் உயிருக்கு ஆபத்து வந்துவிடும்", என்று எண்ணிய வண்ணம் தங்கநாதேஸ்வரனைப் பார்த்த வண்ணம் அமர்ந்திருந்தாள் மாலா.

மாலாவின் எண்ண அலைகள் 20 ஆண்டுகளுக்கு முன் பின்னோக்கிச் சென்றன. அப்பொழுது அவளுக்கு சரியாக 28 வயது எட்டியிருந்தது. தனியார் அலுவலகம் ஒன்றில் வேலை செய்து கொண்டிருந்தாள் மாலா.

தன் வேலைகளைச் சுறுசுறுப்புடனும் கவனத்துடனும் செய்து முடிப்பதால் அனைவரின் கவனத்தையும் ஈர்த்திருந்தாள். மாலா என்ற பெயரைக் கேட்டாலே அவளைப் பற்றிப் பெருமையாகப் பேசுபவர்கள் தான் அதிகம். அத்துணை சுறுசுறுப்பானப் பெண்ணவள். அவளைக் கண்டு பொறாமைப்படும் சிலர் இருப்பதை உணர்ந்தும் அவர்களைக் கண்டு கொள்ளாமல் அனைவரிடமும் மலர்ந்த வதனத்துடன் பாரபச்சம் காட்டாது நட்பு பாராட்டி வந்தாள் மாலா.

அவ்வகையில் நாட்கள் மெல்ல கழிய மாலாவும் திருமணம் செய்யாமல் தன் வயது முதிர்ந்த பெற்றோரை கவனத்துடன் பார்த்துக் கொண்டாள். வீட்டில் ஒரே மகள் என்பதால் தன் தாய் தந்தைக்கு ஆறுதலாக அவள் மட்டுமே இருந்து வந்தாள். தன் பெற்றோர்கள் அவளை திருமணம் செய்து கொள்ளும்படி எவ்ளவோ வற்புறுத்தியும் அவள் அதனைச் சிறிதும் செவிமடுக்கவில்லை.

தன் பெற்றோரைவிட தனக்கு வேறு எதுவும் பெரிதல்ல என்று எண்ணியவளாய் அவர்களுக்கு வாழ்நாள் முழுவதும் சேவைச் செய்யவே விரும்பினாள். அவ்வாறே அவளின் ஐந்து வருடமும் இனிதே கழிய திடீரென்று ஒருநாள் மாலாவின் வாழ்க்கையில் மாற்ற முடியாத திருப்பம் ஒன்று ஏற்பட்டது.

காலைக் கதிரவன் தன் தங்கக் கரங்களை நீட்டி புவிக்கு வெளிச்சம் தந்து கொண்டிருக்கும் பொன்னான காலைப் பொழுது அது. வானம்பாடிகளோ தங்கள் ஜோடிகளுடன் சேர்ந்து இனிமையானக் குரலில் தேவகானம் பாடிக் கொண்டிருந்தன. சூரியனின் முகத்தைக் காண ஏங்கியச் சூரியக்காந்திகளோ ஆதவனைக் கண்ட மகிழ்ச்சியில் இதழ்களை விரித்து அழகாகப் பூத்துக் குலுங்கின.

அன்று தான் மாலாவின் வாழ்வில் மறக்க முடியாத சம்பவம் ஒன்று ஏற்பட்டது. அன்று மாலாவிற்கு பிறந்தநாள் என்பதால் இத்துணைக் காலம் அன்புடன் தன்னை பார்த்துக் கொள்ளும் மகளுக்கு ஏதாவது பரிசளிக்க வேண்டும் அன்ற எண்ணத்தில் மாலாவின் தந்தை அரசு அருகில் உள்ள நகைக்கடைக்குச் செல்ல எண்ணிணார்.

"மாலா கிட்ட சொல்லாம போறது தான் நல்லது இல்லனா முடியாதக் காலத்துல எதுக்கு உங்கள வறுத்தி பரிசலாம் வாங்கிக் கொடுக்குறிங்க ? நீங்க எனக்கு செய்யாததான்னு கண்டிப்பா என்ன திட்டுவா. அதுனால சொல்லாம போறது தான் சரி", என்று எண்ணிய வண்ணம் தன் சக்கர நாற்காலியின் வாயிலாகவே சென்றார் அரசு.

அவ்வாறே அவர் சாலை வழியே கடைக்குச் சென்று கொண்டிருந்த போது திடீரென்று வானம் கருக்க ஆரம்பித்தது. குளிர்ந்த தென்றல் வீச ஆரம்பித்தது. அரசுவோ கடைக்குச் செல்லும் பாதி வழியைக் கூட அடையாமல் இருந்தார்.சற்று நேரத்தில் மழை பொழிந்துவிடும் நிலையில் இருந்தது வானம்.

"நான் வீட்டுக்குப் போகறத்துக்குள்ள மழை வந்துருமா?" என்று எண்ணிய வண்ணம் தன் சக்கரநாற்காலியின் சக்கரங்களை வேகமாகச் சுழற்ற ஆரம்பித்தார் அரசு.

"மழை வர்றத்துகுள்ள வீட்டுக்குப் போகலனாலும் பரவாயில்ல கடைக்காவது போயாகனும்", என்று எண்ணிய வண்ணம் நெடுஞ்சாலையக் கடக்க முற்பட்டார் அரசு. அவர் மழை வந்துவிடுமோ என்றப் பதற்றத்தில் இருந்ததால் சாலையின் இருபுறமும் பார்க்காமல் நேராகவே சாலையைக் கடக்க முற்பட்டார்.
ஆனால், துர்அதிர்ஷ்டவசமாக
எதிரில் ஒரு மகிழுந்து மின்னல் வேகத்தில் வந்து கொண்டிருப்பதை அவர் கவனிக்கத் தவறினார்.

வேகத்தைக் கட்டுப்படுத்த இயலாத மகிழுந்தோ அவரை மோதிவிட்டு மின்னல் வேகத்தில் பறந்து சென்றது. அரசு எந்தவொரு சுயநினைவுமின்றி இரத்த வெள்ளத்தில் மூழ்கிக் கிடந்தார்.

மாலாவின் வீட்டில்....

"க்ரீங் க்ரீங்", என்று தொலைப்பேசி மணி ஒலித்தது.

"ஹலோ மாலா வீடா?", நாங்க மருத்துவமணயிலிருந்து பேசுறோம்.

மாலா சற்று நேரம் மௌனம் காத்தாள்.

"அம்மா யாரோ ஹாஸ்பிட்டல்ல இருந்து அழைச்சிருக்காங்க...அப்பா வேற இன்னும் வீட்டுக்கு வரல", என்று தன் தாயாரிடம் கூறினாள்.

"ஹலோ மாலா லைன்ல இருக்கிங்களா?", மருத்துவமனை ஊழியர்.

"உங்க அப்பா சாலை விபத்துக்குள்ளாகி ரொம்ப மோசமான நிலையில இருக்கார்மா சீக்கிரம் வாங்க", என்று கூறிவிட்டு அழைப்பைத் துண்டித்தார்.

மாலாவிற்கு கண்கள் குழமாகின. தன் தாயாரிடம் சொல்ல முடியாமல் வாயடைத்துப் போய் நின்றாள்.
"என் பிறந்தநாள் அப்போவா இப்படி?" என்று கண்கலங்கிய வண்ணம் நடந்தவற்றைத தன் தாயாரிடம் கூறலானாள்.

அரசுவின் நிலையை அறிந்த மாலாவின் தாயார் பதற்றமடைந்தார்.

"சீக்கிரமா கிளம்பு மாலா...அப்பாவ போய் பார்க்கனும். எதுக்கு அவர் இப்படி சொல்லாம போனார்...உன்கிட்ட சொல்லிருந்தா நீயே அவர அழைச்சிட்டுப் போய்ருப்பல...ஏன் அவருக்கு இந்த வேண்டாத வேலை", என்று அழுது கொண்டே புலம்பினார்.

மருத்துவமனையில்....

"உங்க அப்பாக்கு மண்டையில பலமா அடிப்பட்டிருக்கு அதனால் அறுவை சிகிச்சைக்கு ரொம்ப பணம் செலவாகும். அறுவை சிகிச்சைப் பண்ணலனா அவர் உயிர்க்கே ஆபத்தாயிரும் சீக்கிரமா எப்படியாவது பணத்தக் கட்டிருங்க மீதிய நாங்க பாத்துக்குறோம்", என்றார் ஒரு மருத்துவர்.

மாலா செய்வது அறியாது விழித்தாள். அவளிடம் அந்நேரத்தில் போதியப் பணம் இல்லை. தன் அலுவலக முதலாளியிடம் கேட்க எண்ணினாள். ஆனால், அவள் கூச்ச சுபாவம் உள்ளவள் என்பதால் கேட்கச் சற்றுத் தயங்கினாள்.

"எப்படிதான் அவ்ளோ பணத்த புரட்டரது பணமே பத்தாது போல. என்னாதான் பண்ண?", என்று சிந்திக்கலானாள்.

இணையத்தளங்களில் ஏதாவது உதவியோ அல்ல வேலை வாய்ப்புகளோ கிட்டுமா என்று தேடிப் பார்த்தாள். ஆனால், எந்த வேலையும் அவளுக்குப் போதியப் பணத்தை அளிக்கும் வேலையாக இல்லை. ஒரு வாரத்திற்குள் கட்டணம் செலுத்தாவிட்டால் தன் தந்தையின் உயிருக்கு ஆபத்தாகிவிடும் என்று உணர்ந்தவளாய் பலரிடம் வேலைக் கேட்டு அங்கும் இங்கும் அலைந்தாள். அலுவலக வேலை முடிந்ததும் வேறு வேலைக்குச் செல்ல எண்ணினாள். தன் தோழிகளிடம் உதவிக் கேட்டாள் அவர்களும் மாலாவுக்கு உதவ முன் வந்தனர்.

2 நாட்கள் கழிந்தன. மாலா வழக்கப்படி தன் அலுவலகத்திற்குச் சென்றாள். அங்கே..

"மாலா...உனக்கு ஒன்னு தெரியுமா நம்ம அலுவலக முதலாளி அர்ஜுன் சார் இருக்கார்ல அவர் மனைவி அருந்ததிக்கு கர்பப்பைல ஏதோ ஒரு பிரச்சனை இருக்கறதால அவங்களால கருதரிக்க முடியாதம். அதனால நம்ம சாரும் வாடகைத் தாயத் தேடி அலஞ்சிட்டு இருக்காரம். யாரும் முன் வரமாட்டுறாங்கன்னு பேசிக்குறாங்க. அப்படி யாராவது உதவி செஞ்சாங்கனா சார் அவங்க கேக்குறது எல்லாத்தையும் செஞ்சி தர்றதா வாக்குறுதி கொடுத்திருக்காரு", என்றாள் லக்ஷ்மனா.

"உண்மையாவா சொல்ற நான் ஏன் அவருக்கு உதவி செய்யக் கூடாது?", மாலா.

"என்னா பேசுற நீ வாடகை தாய் ஆகனுமா கல்யாணமே ஆகல உனக்கு...அதுவும் உங்க அம்மா அப்பா நிச்சயமா சம்மதிக்கமாட்டாங்க", என்றாள்.

"என் அப்பாவோட உயிருக்காக என் உயிரக் கூட கொடுக்கத் தயார் லஷ்மனா. அதுக்காக நான் எதையும் செய்வேன்.நீ தயவு செஞ்சி தடுக்காத", என்று கூறிவிட்டு அர்ஜுனின் அலுவலக அறையை நோக்கிச் சென்று அர்ஜுனிடம் தன் எண்ணத்தைக் கூறினாள்.

"மாலா நீங்க இத ஸீரியஸ்ஸா வா சொல்றிங்க? அதுனால பல பின்விளைவுகள சந்திக்க வேண்டி இருக்கும்", அர்ஜுன்.

"ஒரு குடும்பத்தோட வம்ச விருத்திக்காகவும் என் அப்பாவோட உயிருக்காகவும் இத நான் செஞ்சா அது எனக்கு புண்ணியம் தான்", என்றாள்.

"சரி நாளைக்கே இத செஞ்சிரலாம்", அர்ஜுன். மறுநாள் அர்ஜுன் அருந்ததியின் சம்மதத்ததோடு மாலாவை அழைத்துக் கொண்டு கருதரிப்பு மையத்திற்குச் சென்றான். அங்கே அவர்களின் கரு மாலாவின் கருவறைக்குள் செலுத்தப்பட்டது.

"ரொம்ப நன்றி மாலா இந்த உதவிய நாங்க என்னைக்கும் மறக்கமாட்டோம். இந்தாங்க நீங்கக் கேட்டப் பணம்", என்று அறுவை சிகிச்சைக்கான பணத்தை மாலாவிடம் கொடுத்தார் அர்ஜுன்.

"நீங்க குழந்தை பிறக்கற வரை வீட்டுலே இருக்கலாம். ஏதாவது உதவினா எங்கள கூப்பிடுங்க நாங்க உங்களுக்கு வாழ்நாள் முழுதும் கடன்பட்டிருக்கோம்", என்றாள் அருந்ததி.

பணம் கிடைத்த நிம்மதியுடன் மாலாவும் மருத்துவமணையில் அறுவை சிகிச்சைக்காண பணத்தைக் கட்டினாள். தன் பெற்றோரிடம் வாடகைத் தாய் ஆகிய செய்தியை மறைத்தாள். பணம் தன் தோழியின் மூலம் கிடைத்தது என்றும் கூறினாள்.

2 வாரங்கள் கழிந்தது அரசு மருத்துவமணையிலிருந்து வீட்டிற்கு அனுப்பப்பட்டார். அவரின் உடல் நலமும் தேறி வர ஆரம்பித்தது. தன் மகளின் செயலை மெச்சினார்.

"ஆமா மா 2 வாரமா நீ ஏன் வேலைக்கு போகல?" மாலாவின் அம்மா லலிதா.

"அது சார் வெளியூருக்குப் போயிட்டார் அதான் லீவு மா" மாலா.

"ஓ சரிமா", அரசு.

நாட்கள் மாதங்களானது. மாலாவின் வயிற்றில் இருக்கும் சிசு வளர வளர அவளுக்குள் பல மாற்றங்கள் ஏற்பட ஆரம்பித்தது. வயிற்று வலியால் துடிக்கலானாள். தலைவலி வாந்தி என்று பல நோய்கள் அவளை ஆட்கொண்டன.

மாலவின் பெற்றோருக்கு மாலாவின் செயல்கள் அனைத்தும் விசித்திரமாகத் தோன்றின. பல உணவுகள் உண்பதைத் தவிர்த்தாள். எந்நேரமும் சோர்வாகவே காணப்பட்டாள். வேலைக்குச் செல்வதையும் நிறுத்தினாள்.


திடீரென்று ஒருநாள் வயிற்று வலி அதிகமானதால் மாலா வலியால் துடிதுடித்துப் போனாள். அதற்கு மேல் அவளால் உண்மையை மறைக்க இயலவில்லை. நடந்தவை அனைத்தையும் கூறி முடித்தாள். அவள் கூறியவை அனைத்தும் மாலாவின் பெற்றோருக்கு அதிர்ச்சியைத் தந்தாலும் அவர்களால் அவள் கூறுவதை நம்ப இயலவில்லை.

நேரடியாக அர்ஜுனைத் தொடர்புக் கொண்டு நடந்தவற்றைக் கேட்டு விசாரித்தனர். அவர்களுக்கு மாலாவின் மேல் அதீத கோபம் வந்தாலும் அவள் மீது ஒரு புறம் இரக்கமும் அவர்களுக்கு வந்தது. அவர்களால் தன் மகளுக்கு நேர்ந்த சோதனையை ஏற்றுக் கொள்ள முடியவில்லை. வேறு வழியின்றி மனபாரத்துடன் அதனை ஏற்றுக் கொண்டவனர்.

10 மாதம் கழிந்தது. மாலா ஒர் ஆண்குழந்தையை வெற்றிக்கரமாய் ஈன்றெடுத்தாள். குழந்தை ஈன்ற அக்கணமே அவளிடமிருந்து குழந்தை பறிக்கப்பட்டது.

"மாலா இதோட உங்களுக்கும் என் மகனுக்குமான உறவு முடிஞ்சிருச்சி. இனி நீங்க இந்த விஷயத்தப் பத்தி யார்கிட்டயும் பேசக் கூடாது பேசுனா உங்க உயிர்க்கு உத்தரவாதமே இல்ல", என்று கூறிவிட்டு அர்ஜுன் குழந்தையுடன் அவ்விடம் விட்டகன்றான்.

வயிற்றில் சுமந்த அன்பு ஒரு புறம் இருக்க முதலாலியின் கட்டளை ஒருபுறம் இருக்க மிகவும் வேதனையுடனே வாழும் நாட்களைக் கடந்து வந்தாள் மாலா.

மகனைப் பார்க்க வேண்டும் என்ற ஆசை இருந்தாலும் நிர்பந்தனைகள் அவளை துயரத்தில் ஆழ்த்தின. அப்படியே 20 வருடக் கால வாழ்க்கையை கடந்து வந்தாள் மாலா.

"மன்னிச்சிருங்க அம்மா" என்ற வார்த்தையக் கேட்டதும் சுயநினைவுக்கு வந்தாள் மாலா. அங்கே தங்கநாதேஸ்வரன் கண்ணீருடன் நின்று கொண்டிருந்தான்.

"என்னாச்சி இப்போ எதுக்கு அலறிங்க சின்ன முதலாளி", மாலா.

"தயவு செஞ்சி என்ன மன்னிச்சிருங்க அம்மா வேலைனால வந்த மன உளைச்சல்ல வார்த்தைய விட்டுட்டேன். அதுவும் உங்கள இத்தனை நாள் வேலைக்காரியப் போலவே நடத்திட்டேன் மா", தங்கம் என்ற புனைப்பெயரைக் கொண்ட தங்கநாதேஸ்வரன்.

"முதலாளி திட்டினா அதுக்கு ஒரு காரணம் இருக்கும்", மாலா.

"இதுக்குமேல தயவு செஞ்சி என்ன முதலாளின்னு கூப்பிடாதிங்க அம்மா நான் உங்க கருவறையில பிறந்தவன். கரு எங்க அம்மா அப்பா கொடுத்ததா இருந்தாலும் தொப்புல் கொடி உறவு உங்களோடது தான் மா" என்றான்.

"உனக்கு எப்படி இது தெரிஞ்சது?" மாலா.

"எனக்கு கல்யாணம் பண்ணி வைக்க ஒரு பொண்ண பாத்தாங்க அப்போ தான் நான் வாடகை தாய் மூலமா பிறந்தவன்னு எங்க அப்பா அம்மா சொன்னத நான் காதால கேட்டேன்", என்றான்.

மாலா அமைதியானாள். அவளுக்கு வார்த்தைகள் தொண்டைக்குழியிலே சிக்கிக் கொண்டன. அர்ஜுனுக்கு இது தெரிய வந்தால் பெரும் பிரச்சனையாகிவிடும் என்று எண்ணினாள்.

"சரி தங்கம் இனி நீ இதப் பத்தி மறந்துரு அருந்ததி அம்மா தான் உனக்கு நிஜ அம்மா. நான் இந்த அலுவலகத்துல ஒரு வேலைக்காரிதான். என்னப் பெயர் சொல்லியே கூப்பிடு.பத்து மாதங்கள் வலி தான் வாழ்க்கை என்று எண்ணி உன்னை சுமந்தேன் இருந்தாலும் நீ என் பிள்ளை இல்லை..." என்று தன் மகனின் பேச்சுக்கு முட்டுக்கட்டை வைத்தாள்.

"முடியாது அம்மா நான் இத எல்லார் முன்னாடியும் சொல்லியே ஆகனும். உங்கத் தியாகத்த அவங்களும் புரிஞ்சிக்கனும்", தங்கம்.

"வேணாம் பா அம்மாக்கு ஏதும் ஆச்சினா நான் அதைத் தாங்கிக்குவேன் ஆனா உனக்கு ஏதும் ஆகக் கூடாது. அதுக்காக நான் எதையும் செய்யத் தயார். நீ எனக்குப் பிறந்த ஒரே மகன் உன் உயிருக்கு உத்தரவாதமா நான் என்னைக்கும் இருக்கமாட்டேன்", மாலா.

"அப்படி சொல்லாதிங்க மா நாளை காலை கிளம்பியிருங்க நானே உங்கள வேலைக்கு கூட்டிட்டு வந்து நீங்கதான் என்ன ஈன்றெடுத்த தெய்வம்ன்னு சொல்லுறேன்", தங்கம்.

மாலைப் பொழுது சாய்ந்தது. தங்கநாதேஸ்வரனே தன் தாயாரை வீட்டுக்கு அழைத்துச் சென்றான். மாலாவை அவள் வீட்டில் விட்டு விட்டு மறுநாள் காலை வருவதாகச் சொன்னான்.

மாலாவிற்கு வயிற்றில் புளியைக் கரைப்பது போல இருந்தது. "அவனுக்கும் உனக்கும் இனி எந்தத் தொடர்பும் இல்லை", என்று அர்ஜுன் கூறியது மாலாவிற்கு பிரம்மையை ஏற்படுத்தியது.

தன் பொருட்கள் அனைத்தையும் மூட்டைக் கட்டினாள். அவள் இப்பொழுது தனி ஒருவளாக இருப்பதால் அவ்வளவு வேலைப் பளு அவளுக்கு இல்லை. 20 வருடக் காலத்தில் தன் பெற்றோரின் நினைவுகள் மட்டுமே அவ்வீட்டில் தங்கியிருந்தது.

கால் பயணமாய் தண்டவாளத்தை நோக்கிச் சென்றாள். தன் பிறந்த ஊரின் நினைவுகளுடன் வேறு ஊருக்கு பயணமாகினாள்.

மறுநாள் காலை தங்கநாதேஸ்வரன் தன் வாடகைத் தாயின் வீட்டிற்கு வந்தான். அவனுக்கு அங்கு ஏமாற்றம் மட்டுமே மிஞ்சியிருந்தது. தங்கம் செய்வதறியாது விழித்தான். அங்கே மாலாவின் வீட்டின் பூட்டு தங்கநாதேஸ்வரனின் அத்துணைக் கேள்விகளுக்கும் மௌனமாய் பதிலளித்தது.