• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

வாழவும் ஆளவும் அவள்(ன்) 33

Aashmi S

Active member
Vaigai - Tamizh Novelist (Fiction Storyteller)
Joined
Jul 31, 2021
Messages
156
அனைத்து பிரச்சனைகளும் ஓரளவிற்கு சரியாகி இருக்க சின்ன சின்ன மனஸ்தாபங்கள் விரைவில் சரியாகிவிடும் என்ற எண்ணத்தோடு அந்த வீட்டில் உள்ள அனைவரும் அன்றைய நாளை நிம்மதியாக கழித்தனர். மறுநாள் காலையில் சகோதரிகள் இருவரையும் காண ஆவலோடு சூரியன் மேல் எழும்பி வர அவனுடைய ஆவலை பொய்யாகாமல் அப்போதுதான் தங்கள் வீட்டின் முன்பு அழகான கோலமிட்டு முடித்து புன்னகை முகத்துடன் எழுந்தனர் ஆது கார்த்தி இருவரும் .

அவர்கள் இருவரின் புன்னகை முகத்தை பார்த்த அவ்வீட்டு பெண்மணி தாங்களும் புன்னகைத்துக் கொண்டு காலை சமையலை செய்ய ஆயத்தமாகினர். ராதிகா முருகனுக்கு இதுவரை செய்த பணிவிடைகள் அனைத்தையும் தவறாமல் செய்தார். அதில் அவர் சொல்ல விரும்பிய விஷயம் 'ஒரு புருஷனா நீங்க எனக்கு சரியா தான் இருந்தீங்க, ஆனாலும் உங்க மனசுல உள்ள விஷயம் எல்லாம் தெரியும் போது நம்ம வாழ்ந்த வாழ்க்கைக்கு ஒரு அர்த்தமே இல்லாத மாதிரி ஆகுது. ஆனா உங்கள நான் என்னோட கணவனா மட்டும் இல்லாம, காதலனாகவும் தான் இதுவரைக்கும் பாத்துட்டு இருக்கேன்! அந்த ஒரு காரணத்தினால் என்னால உங்களை கவனிக்காமல், எதுவும் செய்யாமல் இருக்க முடியாது. ஒரு பொண்டாட்டியோட கடமையை நான் சரியா தான் செய்வேன் ஆனா அதே மாதிரி உங்க கிட்ட இருந்து ஒரு புருஷனா உங்க கடைமையை நீங்க செய்யணும்னு நான் எந்த விஷயத்தையும் நான் எதிர்பார்க்க மாட்டேன்' என்ற உள்ளர்த்தம் பொதிந்திருந்தது.


ஒரு நாளே ஆகி இருந்தாலும் அவருடைய இந்த மாற்றம் அனைவரது கண்களிலும் படதான் செய்தது. காயங்கள் ஆற காலம் தேவைப்படுமே என்ற எண்ணத்தில் அனைவரும் அதை அமைதியாக ஏற்றுக் கொண்டனர்.

காலை உணவிற்காக அனைவரும் ஒன்று கூட பெண்கள் அமர்ந்திருந்த ஆண்களுக்கு சாப்பாடு பரிமாறிக் கொண்டிருந்தனர். புனிதா ஏக்கமாக தன் மகனை பார்ப்பதை கண்டு கொண்ட ஆதர்ஷினி அவர் கையில் ஒரு தட்டை கொடுத்து "இந்த ஈகோ, ஏக்கம் எதுவுமே இனி இந்த வீட்டில் இருக்கவே கூடாது. நீங்க உங்களோட ஏக்கத்தை கண்ணுல காட்டுவீங்க, ஆனா என்னோட புருஷன் அத உள்ளுக்குள்ள புதைத்து வைத்து இருப்பான் அவ்வளவுதான் வித்தியாசம்! உங்க பிள்ளைக்கு உங்களுக்கு ஊட்டிவிட தோணுதா சந்தோஷமா போய் ஊட்டி விடுங்கள். ஆனால் ஒரு பிள்ளைக்கு மட்டும் ஊட்டி விட நினைக்காதீங்க உங்களுக்கு ரெண்டு பிள்ளைங்க மட்டும் கிடையாது. இன்னும் எத்தனை பேர் இருக்காங்க எல்லாருக்கும் சேர்த்து ஒரு ஒரு வாய் ஊட்டி விட்டா அங்க எல்லாருமே சந்தோஷப்படுவாங்க" என்று அவர் எண்ணம் புரிந்தார் போல் கூற அவரும் மகிழ்ந்து சமர் வாயருகே சாப்பாட்டை நீட்டினாள்.

இவர்கள் இருவரும் அமைதியாக பேசிக்கொண்டு இருந்ததால் அங்கிருந்த யாருக்கும் இவர்கள் பேசியது கேட்கவில்லை, ஆனால் தன்னருகே சாப்பாடு வரவும் சமர் கண்கள் கலங்கிவிட்டது. சிறுவயதுமுதல் எவ்வளவு நாட்கள் இப்படி ஒரு நாள் தன் அன்னை கையால் சாப்பிட முடியாதா என்று ஏங்கி இருப்பான், இன்று அதை தன் மனைவி நிறைவேற்றி விட்டாள் என்று எண்ணி மகிழ்ந்தான்.

அவன் ஒரு வாய் வாங்கியவுடன் அருள் "அம்மா எனக்கு அது என்ன அவனுக்கு மட்டும் ஊட்டி விடுறீங்க?" என்று அருள் வாய்விட்டு கேட்க அடுத்து அவனுக்கு ஊட்டி விட்டார். மற்றவர்கள் வாய் திறக்கும் முன்பே அனைவருக்கும் ஒவ்வொரு வாய் ஊட்டி விட அந்த இடம் மகிழ்ச்சியால் நிரம்பி வழிந்தது. புனிதாவை பின்பற்றி விஜயாவும் ராதிகாவும் இதையே செய்ய நாங்கள் மூவருமே உங்கள் அனைவருக்கும் அன்னைதான் என்ற விதம் அங்கு நிரம்பி இருந்தது. தன் வீட்டில் பிறந்தால் மட்டும் தான் பிள்ளைகளா அடுத்த வீட்டில் இருந்து வந்தாலும் அவர்களும் தங்களுடைய பிள்ளைகள் தானே என்ற ரீதியில் தங்கள் வீட்டு மருமகளுக்கும் மூன்று மாமியாரும் ஊட்டிவிட்டனர்.

அப்போதுதான் எழுந்து வந்த பாட்டி ஆதர்ஷினி கார்த்திகா இருவருக்கும் தன்னுடைய மருமகள்கள் ஊட்டிக் கொண்டிருப்பதை பார்த்து "இப்படியே ஊட்டி ஊட்டி வளருங்கள் ஏற்கனவே அவளுக ரெண்டு பேரும் பேசுற வாய்க்கு எவனும் எதிர்த்து பேச முடியல. இதுல இன்னும் நீங்க இப்படி கொஞ்சி கொஞ்சி ஊட்டிக் கொண்டே இருந்தா இவங்க ரெண்டு பேரும் ஏழு ஊருக்கு பேசுவாங்க. அப்புறமா நீங்க எல்லாரும் என்ன பாடு பட போறீங்கள ஒழுங்கு மரியாதையா நடக்கிற வழியை பாரு இப்படி கொஞ்சிகிட்டு இருந்தால் சரியாக இருக்காது" என்று வழக்கமான பல்லவியை பாட

"ஐயோ பாட்டி உனக்கு யாரும் சாப்பாடு வாயில் தரல அப்படி என்கிற கவலையில் பேசுறியா? கவலையே படாத நாங்க ரெண்டு பேரும் உனக்கு வந்து ஊட்டி விடுறோம்" என்று கூறி ஆதர்ஷினி கிளம்ப, அவளைப் பின்பற்றி கார்த்திகாவும் கிளம்பினாள். அவர்கள் இருவரும் தன்னை நோக்கி வருவதை பார்த்து பார்த்து அரண்டு விட்டார். அதை கண்டு கொண்டாலும் கைநிறைய சாப்பாட்டை அள்ளி பாட்டியின் வாயில் திணித்த பிறகே இருவரும் அங்கிருந்து நகர்ந்தனர்.


பாட்டிக்கு இவர்கள் இருவரும் கொடுத்ததே போதும் போதுமென்றாகி விட அவர் ஒரு மூலையில் அமர்ந்து விட்டார். அதற்கு மேல் வாய் பேச தான் அவரால் வாய் திறக்க முடியவில்லையே! இவர்கள் இருவரும் வருவதைப் பார்த்த சரண் "அண்ணி இரண்டு பேரும் ஊட்டும்போது கொஞ்சம் பார்த்து ஊட்டுங்க நீங்க ஊட்டுற ஸ்டைல் பார்த்தாலே கொஞ்சம் பயமா இருக்கு, அதுவும் பாட்டி ரொம்ப வயசாவங்க இப்படி குடுக்குறப்ப ஏதாவது ஆகி மேலே போய் சேர்ந்துட்டா உங்களுக்கு தான் கஷ்டம்" என்று கிண்டலாக கூற

"அதெல்லாம் கவலையே படாத கொழுந்தனாரே எப்படி கொடுத்தால் எப்படி உள்ளே போகும் அப்படிங்கற விஷயமே எங்களுக்கு நல்லாவே தெரியும். அதுக்கு ஏத்தாப்ல சும்மா சூப்பரா கொடுத்து பாட்டி வயிறு நிறைய வெச்சுடுவோம். உயிர் போற அளவுக்கு எல்லாம் கொண்டு போக மாட்டோம்" என்று பதில் பேசி முடித்தாள் கார்த்திகா.

இப்படி கேலியும் சிரிப்புமாக அந்த உணவு முடிய அனைவரும் தங்களுடைய வேலைகளுக்கு கிளம்பி வெளியே வந்த நேரம், வீட்டிற்கு உள்ளே நுழைந்தனர் தாத்தாவும் தந்தையும். அனைவரும் அவர்கள் இருவரையும் கேள்வியாக பார்க்க வெளியே கிளம்பி இருந்தவர்களை பார்த்து பொதுவாக "உங்க எல்லார்கிட்டயும் ஒரு சில முக்கியமான விஷயம் பேசனும் அதனால கொஞ்ச நேரம் எல்லாரும் வீட்டிலேயே இருங்கள்" என்று தாத்தா கூறினார்.


'நேத்து ராத்திரி தான் மனசுல நெனச்சேன் இதுங்க அவ்வளவு நல்லவங்க கிடையாது, புதுசா என்ன பிரச்சினை கிளப்ப போறாங்களோனு மறுநாளே வந்து நிக்குது இது நம்ம எல்லாரும் சந்தோஷமாக வாழ்ந்து நிம்மதியா இருந்த மாதிரிதான்' என்று கார்த்திகா மனதில் நினைத்து பெருமூச்சு விட அவள் பக்கத்தில் நின்று கொண்டிருந்த ஆதுக்கு நன்றாகவே புரிந்தது.

"பிரச்சனை ஆரம்பம் ஆகறதுக்கு முன்னாடியே என்னவாய் இருக்கும் அப்படின்னு யோசிச்சு பெரு மூச்சு விடாதே! எனக்கு தெரிஞ்சு இவங்க நல்லது பண்றேன் அப்படின்னு குதர்க்கமாக ஏதாவது பண்ணிட்டு வந்து இருக்கும், கவலையே படாத இவ்வளவு நாள் இவர்களை எதிர்த்து பேசாத என்னோட புருஷன் கண்டிப்பாக ஏதாவது பேசுவான் நம்ம ஜாலியா என்ஜாய் பண்ணலாம்" என்று தன் தங்கைக்கு ஆறுதல் கூறினாள். ஆனால் அவள் கூறியது தான் நடக்கப் போகிறது என்பது அப்போது அவளுக்குப் புரிந்திருக்கவில்லை.

சமருக்கு அங்கு நிற்க இஷ்டம் இல்லை என்றாலும் அனைவரும் பொதுவாக இருக்கும் இடத்தில் நகர்ந்து செல்ல மனமில்லாமல் நின்று கொண்டிருந்தான். அனைவரையும் பொதுவாக பார்த்த தாத்தா "இந்த வீடு அதுபோக சில சொத்துக்கள் எல்லாம் சமர் பெயரில் இருக்கு, இவ்வளவு நாள் அவனுக்கு உரிமை இல்லை அப்படின்னு சொல்லி உரிமை இல்லாத இடத்துல மத்த எல்லாரும் இருந்து இருக்கோம்" என்று கூறியதுதான் தாமதம் சமருக்கு கோபம் உச்சத்தை தொட்டு விட்டது.


"போதும் நிறுத்துங்க இப்போ எதுக்காக இது எல்லாத்தையும் இங்க சொல்லிக்கிட்டு இருக்கீங்க. அது எப்படி இந்த வீடு என்னோட பெயரில் இருக்கமுடியும் இவ்வளவு நாள் இது பரம்பரை சொத்து அப்படின்னு சொல்லிட்டு இருந்தீங்க. அப்படி பார்க்கும்போது எனக்கு மட்டும் இந்த சொத்துல பங்கு வராதே அருள், சரண், சரண்யா, நிலா எல்லாருக்குமே பரம்பரை சொத்தில் பங்கு இருக்கும் தானே! அது எப்படி அந்த காலத்திலிருந்தே இருந்து வந்த பரம்பரை வீடு சில சொத்துக்கள் மட்டும் என்னோட பெயருக்கு மாறி இருக்கும் அப்படின்னு சொன்னா இவங்க எல்லாருக்கும் தனி தனியா பிரிஞ்சு இருக்கா? இல்ல நீங்க வச்சு இருக்கீங்களா?" என்று கேள்வி மேல் கெள்வி கேட்டான்.


வீடு அவன் பெயரில் இருப்பது அவனுக்கும் ஆதர்ஷினி கார்த்திகா மூவருக்கும் மட்டுமே அதிர்ச்சி அளிக்கும் விஷயமாக இருந்தது. மற்ற அனைவரும் சாதாரணமாகவே இருந்தன, அதிலிருந்தே இன்னும் ஏதோ ஒரு விஷயம் உள்ளது என்பதனை கண்டு கொண்டவர்கள் பொறுமை காத்தனர்.


"இந்த சொத்து ஆரம்பத்திலிருந்தே உன்னோட பெயரில் தான் இருந்து இருக்கு, அதாவது எப்போ நாங்க எல்லாரும் உன்ன இந்த வீட்டை விட்டு ஒதுக்கி வைக்க ஆரம்பித்தோமோ அப்பவே இந்த சொத்து இந்த வீடு எல்லாத்தையும் உன்னோட பெயருக்கு வர மாதிரி என்னோட அப்பா மாத்தி வச்சி இருக்காங்க. உனக்கு ஞாபகம் இருக்கும் அப்படின்னு நினைக்கிறேன் உன்னோட ஒரு வயசுல தான் என்னோட அப்பா இறந்து போனாங்க. என்னோட அம்மா அதுக்கு முன்னாடியே இறந்து போய் இருந்தாலும் உன்னை பார்த்த பிறகுதான் எங்க அப்பாவோட உயிர் போச்சு. அந்த ஒரு வருஷமும் மத்தவங்க யாரும் ஒன்னும் பெருசா தூக்கி வளக்காமல் இருந்தாலும் அவரை 1 அவருடைய கைக்குள்ளே தான் வைத்து வளர்த்தார். என்ன நினைச்சாரோ அப்படின்னு தெரியல அவருடைய உயிலில் இப்படி இந்த பரம்பரை வீடும் ஒரு சில சொத்துக்களும் உனக்கு மட்டும்தான் வந்து சேரும் மிச்சம் இருக்கக்கூடிய சொத்துக்கள் எல்லாம் தான் உங்க எல்லாருக்குமே சரிசமமா பிரியும்" என்று அமைதியாக கூறினார்.


"தாத்தா அப்படி பண்ணாங்க அப்படின்னு சொல்லி நீங்க சொல்றீங்க, ஆனா அது நியாயமாகுமா? எல்லாருக்கும் சரி சரி பிரிச்சு கொடுத்தா மட்டும் தான் அது பரம்பரை சொத்து! இப்படி எனக்கு மட்டும் கூடுதலாக குடுத்துட்டு மத்தவங்க எல்லாருக்கும் குறைத்துக் கொடுக்கும் போது அது சரியாக இருக்குமா? தேவையில்லாத பிரச்சினைகள் எங்களுக்குள்ள வரத்தானே செய்யும். நீங்க எங்களுக்குள்ள சண்டை இழுத்து விட பாக்குறீங்களா?" என்றும் அப்பொழுது சிறிது கூட தன்னுடைய குரலில் காட்டம் குறையாமல் வினவினான் சமர்.

இதற்கு மேல் விட்டால் பிரச்சனை வேறு விதமாக மாறிவிடும் என்பதை உணர்ந்த செல்வராஜ் "டேய் அவங்க சொல்றது எல்லாம் உண்மை தான்டா. உனக்காக நான் சொத்து வாங்க போகும் போதே இந்த விஷயம் எனக்கு தெரிஞ்சிருச்சு. எனக்கு மட்டும் இல்ல இந்த வீட்ல இருக்க எல்லாருக்குமே தெரியும் இவங்க நாலு பேருக்கு மட்டும் தான் இன்னைக்கு இந்த விஷயம் தெரிஞ்சு இருக்கு, மத்தபடி இந்த வீட்டில் இருக்க கூடிய உன்னோட தம்பி தங்கச்சி அம்மா சித்தி லிருந்து எல்லாருக்குமே இந்த விஷயம் தெரியும். நீ இந்த வீட்டுக்கு வரவே மாட்டேன் அப்படின்னு சொல்லி கடைசி வரைக்கும் இருந்தா கடைசி ஆயுதமாக எல்லாருமே இத தான் உபயோகப்படுத்த நினைத்து இருந்தோம். உன்னோட வீட்ல நாங்க எல்லாரும் இருக்கும்போது நீ எப்படி இல்லாமல் இருக்கலாம் இதுதான் எங்களோட கடைசி கேள்வியா உன் முன்னாடி வர தான் இருந்துச்சு. அதுக்கு எதுக்குமே வழி இல்லாம நீ அங்க வந்த எல்லாரும் சந்தோஷமா இருக்க, இங்க யாருமே யாருக்கும் ஓரவஞ்சனை பாக்கல நீ பிறந்ததில் இருந்து இத்தனை வருஷம் நிறைய பேரோட அன்பு பாசம் எதுவுமே இல்லாமல் கஷ்டப்பட்டு இருக்க! அதுக்காக உன் மேல உண்மையான பாசம் வச்ச தாத்தா உனக்கு இந்த சொத்தை எல்லாம் எழுதி வச்சிருக்காரு. இதெல்லாம் அவரு பொக்கிஷமாக பாதுகாத்த சொத்துக்கள் நீ எக்காரணம் கொண்டும் இந்த சொத்தை எதையுமே அழிக்கவும் மாட்ட விற்கவும் மாட்ட என்று அந்த வயதிலேயே அவருக்கு தெரிந்திருக்கிறது. அதனால்தான் இது உன்னோட பேர்ல எழுதி வச்சு இருக்காரு மத்த எல்லாமே எல்லாருக்கும் சரிசமமா தான் பங்கு வச்சு இருக்காங்க. அதே மாதிரி இது எல்லாமே பூர்வீக சொத்துகள் அதாவது குடும்பமாக வசிக்க கூடிய சொத்துக்கள் தான் உன்னோட பேருல தனியா இருக்கு நீ எங்க எல்லாரையும் வீட்ட விட்டு வெளிய போங்க சொல்லுவியா?" என்று எதிர்கேள்வி கேட்டார்.


"சித்தப்பா நீங்க என்ன சித்தப்பா இப்படி கேக்குறீங்க? நான் எப்படி உங்க எல்லாரையும் இங்க இருந்து போக சொல்லுவேன் சின்ன வயசுல இருந்தே குடும்பமா வாழுற சூழ்நிலையை ரொம்பவே ஆசைப்பட்டவன் நான் அப்படி இருக்கும்போது உங்க எல்லாரையும் ஒதுக்கி வைக்க எப்படி மனசு வரும்" என்று ஆதங்கமாக கேட்டான்.


"மனுஷங்க புத்தி மாறிக்கிட்டே இருக்கும் எதையுமே மாறாமல் நிலையாக இருக்கிறது ரொம்பவே கஷ்டம். ஆனால் குடும்ப பாசத்துக்காக ஏங்கி போய் இப்ப கிடைக்கும்போது அதை ரொம்ப ஆழ்ந்து அனுபவிக்கிற அதுவும் அப்படி இருக்கும்போது கண்டிப்பா என்னால இங்கே இருக்க யாருக்கும் பிரிவு வராது. அப்படி என்கிற விஷயம் தாத்தாக்கு புரிஞ்ச காரணத்தினால் தான் அவரை உனக்கு எல்லாத்தையும் எழுதி வச்சு இருக்காரு. உன்னோட ஒரு வயசுல தாத்தா இறந்துட்டாங்க ஆனா அந்த ஒரு வருஷத்துக்குள்ள உன்ன இங்க இருந்த ஒரு சிலர் என்ன பாடு படுத்தி இருந்தா இந்த அளவுக்கு சரியா கணிச்சு இந்த வீட்டை உன்னோட பேர்ல எழுதி வச்சு இருப்பாங்க. இதை பத்தி எதுவும் பேசவேண்டாம் இப்போ இவங்க இதெல்லாம் சொல்வதற்கு காரணம் என்ன அதை மட்டும் யோசிப்போம் நீ அதனால கத்தாம அமைதியாய் இரு" என்று அவனை அடக்கினார்.


அவனும் அதற்கு மேல் பேசாமல் அமைதி காத்தான். இப்போது அனைவரது பார்வையும் தாத்தா மற்றும் சமர் தந்தை புறம் திரும்பியது. தாத்தா ஒரு பெருமூச்சை வெளியிட்டு விட்டு "நாங்க உனக்கு ரொம்பவே அநியாயம் பண்ணி இருக்கோம் அந்த அநியாயத்தை எல்லாம் நினைச்சு பாக்கும்போது மனசார உன்கிட்ட மன்னிப்பு கேட்க கூட எங்களுக்கு தோனல, ஏன்னா நாங்க மன்னிப்பு கேட்டா நீ கண்டிப்பா எங்களை எதிர்த்து திட்டவோ, அசிங்கமா பேச மாட்ட அமைதியா இருப்ப! நான் போக போக மன்னிக்க முயற்சி பண்றேன் அப்படின்னு பெரிய மனசு பண்ணி என்னை மன்னிக்கவும் செய்வ! அந்த குற்ற உணர்ச்சியே எங்கள நாளுக்கு நாள் கொண்ணுடும்! இப்ப இருக்குற குற்றவுணர்ச்சி எங்கள கொன்றுவிட்டு தான் இருக்கு, இருந்தாலும் உன்கிட்ட வந்து மன்னிப்பு கேக்குற அளவுக்கு எங்களுக்கு அருகதை இல்லை. எங்களுக்கு என்னோட பொண்டாட்டி நினைக்கும்போது ஆச்சரியமா இருந்துச்சு தப்புன்னு தெரிஞ்சும் உடனே வந்து மன்னிப்பு கேட்டா! ஆனாலும் அவ வாயால என்னென்ன பேச முடியுமோ பேசிக்கொண்டு தான் இருக்கா. இந்த மாதிரியாக இருந்தாலும் இந்த வீட்ல யாருமே அதை பெருசா கண்டுகொண்டதே இல்லை ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு சூழ்நிலையிலும் தப்பு பண்ணியிருந்தாலும் நாங்க எல்லாம் மொத்த பிரச்சினைக்கு காரணமா இருக்கோம். நானோ இல்ல உன்னோட அப்பாவோ ஒரு இடத்தில் முடிவாக இருந்தா நிச்சயமாக உனக்கு இந்த நிலைமை வந்திருக்காது. முழுக்க முழுக்க உன்னோட நிலைமைக்கு காரணம் நாங்க ரெண்டு பேரும் தான் அதுக்கான காரணம் உண்மையும் கிடையாது என்கிற விஷயம் எங்களுக்கு புரிந்தது. அதனாலதான் நாங்க என்ன பண்றதுன்னு தெரியாம உன்ன விட்டு ஒதுங்கியே இருப்போம் அப்படின்னு அமைதியா இருந்தோம். இன்னைக்கி வக்கீல் திடீர்னு போன் பண்ணி இந்த விஷயத்தை இங்கே கிட்ட சொன்னாரு ஏன் சொன்னாரு எதுக்கு சொன்னாரு அப்படின்னு எங்களுக்கு புரியல! ஆனா கண்டிப்பா இந்த வீட்டில் உள்ள யாரோ ஒருத்தர் இங்க இந்த விஷயத்தை சொல்ல சொல்லி இருக்காங்க, அதனால தான் சொல்லி இருக்காரு அப்படிங்கற விஷயமும் தெரியுது. கண்டிப்பா அவங்க தப்பான எண்ணத்தில் சொல்லி இருக்க மாட்டாங்க நல்ல எண்ணத்தில் தான் சொல்லி இருப்பாங்க. அதுவும் எனக்கு ரொம்ப தெளிவா புரியுது எங்களை மன்னித்து விடாதே முடிஞ்சா தண்டனை கொடு! இல்லையா இவ்வளவு நாள் நாங்க ஒன்னும் ஒதுக்கி வைத்தும் இனி நீ எங்களை ஒதுக்கி வச்சிடு" என்று அவனிடம் கைகூப்பி நின்றவர் தளர்ந்த நடையுடன் அங்கிருந்து அகன்றார். தன் மகனின் முகத்தை காண முடியாமல் அவன் தந்தையும் கைகூப்பி விட்டு சென்று விட்டார்.

அவர்கள் இருவரும் மனதளவில் எந்த நிலைமையில் இருப்பார்கள் என்பதை அறிந்திருந்த வீட்டில் உள்ளவர்களும் எதுவும் கூறவில்லை அதன்பிறகு யாரும் எதுவும் பேசாமல் அவரவர் வேலையை பார்க்க கிளம்பி சென்றுவிட்டனர்.


தன் கணவனின் மனநிலையைப் பற்றி நன்கு அறிந்த ஆதர்ஷினி தோட்டத்திற்கு கிளம்பி சென்றாள். அங்கே அவள் கண்ட காட்சியில் தன்னையறியாமல் சத்தமாக சிரிக்க ஆரம்பித்துவிட்டாள்.
அடுத்து என்ன நடந்தது என்பதனை அடுத்த அத்தியாயத்தில் பார்ப்போம் தங்களுடைய கருத்துக்களை ஆவலுடன் எதிர்பார்க்கும் உங்கள் தோழி என்னுடைய பதிவுகளில் ஏதேனும் பிழைகள் இருந்தால் மன்னித்துக் கொள்ளவும் இன்னும் இரண்டு அத்தியாயங்கள் மட்டுமே உள்ளன. அந்த இரண்டு அத்தியாயங்கள் மட்டுமே இருப்பதாகவும் இருக்கும் என்பதனை தெரிவித்துக் கொள்கிறேன்.
 
Top