• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

விக்கிரம பாண்டியபுரம் - 1

Hema Sree

Vaigai - Avid Readers (Novel Explorer)
Mar 15, 2022
3
2
3
Paramakudi
வணக்கம் மக்களே..

நான் ஹேமா ஸ்ரீ வள்ளி காந்தன்.

விக்கிரமபாண்டியபுரம் - இது என்னோட இரண்டாவது கதை.. தென் தமிழகத்தோட செவி வழிக் கதைகள், கொஞ்சம் கூகிள் , கொஞ்சம் என்னோட கற்பனை எல்லாமே இதுல இருக்கும். இது ஊர் உருவான விதம் பற்றி சொல்லத்தான்.. நிகழ் கால நிகழ்வுகள் இனிமேல் தான் வரும். படிச்சுட்டு உங்களோட கருத்துக்களை (முக்கியமா வரலாற்றுல ஏதாவது பிழை இருந்தா சொல்லுங்க.. கண்டிப்பா மாத்திக்கறேன்.(y)(y) ) சொல்லுங்க மக்களே..:love::love::love:

வதனி அக்கா என்னையும் நம்பி இந்த வாய்ப்பைக் கொடுத்ததுக்கு ரொம்ப ரொம்ப நன்றி 🙏🙏🙏🙏🙏
 
  • Love
Reactions: Vathani

Hema Sree

Vaigai - Avid Readers (Novel Explorer)
Mar 15, 2022
3
2
3
Paramakudi
1200 களில் பாண்டிய நாட்டிலிருந்து சேர நாட்டிற்கு செல்லும் ஒரு ராச பாட்டை..

மன்னன் விக்கிரம பாண்டியன் தன் முழுப் படையுடன் அந்த பாதையை ஆக்கிரமித்திருந்தான்.

பாண்டிய குல காவலன்
கொற்கை குடியின் வேந்தன்
அங்கையர் கன்னியின் அறச் செல்வன்
தமிழ்ச் சங்கத்தின் தலைவன்
மாமதுரையின் முதல்வன்
மாமன்னர் விக்கிரம பாண்டியன் வருகிறார்….

என்ற மெய் கீர்த்தியில் மொத்த படையும் வெற்றி வேல் வீர வேல்
… மன்னர் வாழ்க .. மன்னர் வாழ்க … என சிலிர்த்து அடங்கியது.. இன்னும் இரு நாட்களில் திருச்செந்தூரை கடந்து விட வேண்டும் என்பது அப்படையின் திட்டம்.. அன்று இரவு ராத்தங்களுக்காக தயாராகிக் கொண்டிருந்தது படை.. மன்னர் விக்கிரமனோ படையிடம் நேரடியாக நிறை குறைகளை விசாரித்துக் கொண்டிருந்தார்..

“அய்யா…”, என்ற அழைப்பில் திரும்பிப் பார்த்தார் விக்கிரமன். தளபதி தவத்திரு நல்லான் நின்று கொண்டிருந்தார்.

“சொல்லுங்கள் நல்லனாரே..”, வழக்கம் போல் அவரின் அழைப்பில் முகம் சிவந்தார் தளபதி.

“தங்களின் அனுமதி வேண்டுமய்யா.. மறுக்க கூடாது”, அவசர அவசரமாய் வந்தது நல்லனாரின் குரல்.

“எதற்கு நல்லனாரே..”, இலகுவாகவே கேட்டார் விக்கிரமன்.

“அருகில் நானறிந்த கொற்றவையின் ஆலயம் ஒன்று உள்ளது. உக்கிரமான காளி அவள். எண்ணியதனைத்தையும் ஈடேற்றி வைக்கும் தெய்வம். அதுதான் பொழுது புலர்வதற்குள் அவளை ஒருமுறை பார்த்து வரலாம் என நினைக்கிறேன்..”, மனக் கண்ணில் காளியின் முகம் வந்து போனது நல்லனாருக்கு.


“நல்லனாரே… அன்னையை வழிபட அனுமதி எதற்கு வாருங்கள் செல்வோம்” என்று விட்டு தன் தேரில் ஏறினார் விக்கிரமன். இப்படி திடுமென மன்னரும் வருவார் என நினைக்காததால் பதறிப் போய் பார்த்தார் தவத்திரு நல்லனார்.

“நல்லனாரே, வாருங்கள் நாம் பொழுது புலர்வதற்குள் மீண்டு விடலாம்” , என்று சொல்ல இருவரும் தேரிலேயே பயணித்தார்கள்.

ஒரு பெரிய வேம்பின் நிழலில் இருந்த அந்த சிறிய கல் மண்டபம் தான் அந்த கொற்றவையின் வசிப்பிடம். இந்த நொடியே எழுந்து வந்து விடுவேன் என்பது போல ஆங்காரமாய், உக்கிரமாய், கோபத்தில் சிவந்த விழிகளுடன் நின்றாள் காளி.

விக்கிரம பாண்டியன் உருகிப் போய் நின்றான் அன்னையின் அழகில்.. மீனாட்சியின் புன்னகைக்கும் காளியின் கோபத்துக்கும் உவமை சொல்ல மொழிகளே இல்லை என நெகிழ்ந்து நின்றது மன்னன் மனம்.

அந்த அன்னையின் ஆசிகளோடு போர்க்களம் புகுந்தவனுக்கு வேறென்ன கிடைக்கும் வெற்றியைத் தவிர.. பாண்டியன் புகழ் சேர மண்ணில் பொறிக்கப்பட்டது. படைகள் வெற்றி மிதப்பில் இருக்க மன்னனுக்கோ மனமெங்கும் கொற்றவையின் முகம்.

தன் மொத்த படையையும் அழைத்துக் கொண்டு மீண்டும் அந்த கோவிலுக்கே வந்து விட்டான் விக்கிரம பாண்டியன். அன்று முழு நாளும் அங்கேயே தங்கி கொற்றவைக்கு பலியிட்டு தங்கள் வெற்றியை கொண்டாடித் தீர்த்தனர் பாண்டிய படையினர்.

ஆனாலும் மன்னனுக்கு நிறைவில்லை.. சுற்று வட்டார ஊர்களில் இருந்து உள்நாட்டுப் பணி புரியும் நாட்டதிகாரிகள் என்னும் அரையர்கள், ஊரில் உள்ள நிலங்களில் அளந்து பணி செய்யும் நாடுவகை செய்வோர், மக்கள் அரசுக்கு வரி செலுத்துவதை கணக்கு வைக்கும் வரியிலார், வட்டாட்சியர்போல் செயல்படும் புரவு வரித்திணைக் களத்தார் என அனைவரையும் வரவழைத்தார்.

நாடு வகை செய்வோர் நிலத்தினை அளக்கும் கோல் 'சுந்தர பாண்டியன் கோல்' கொண்டு கோவிலைச் சுற்றி உள்ள நிலங்களைஅளந்து, புள்ளடிக் கற்கள் என்னும் எல்லைக் கற்கள் நட்டு கோவில் சுவரிலும், ஊரின் ஆவணக் களரியிலும் அதை விக்கிரம பாண்டியன் தந்த இறையிலி நில தானமென பதிவு செய்தனர்.

தான் போரில் உபயோகித்த வாள், தேர், அத்துடன் கோவில் திருப்பணி நிவந்தமென 5000 பொன் கழஞ்சுகளையும் அளித்தான். அதை அரையர்களும் வரியிலாரும், புரவு வரித்திணைக் களத்தாரும் சரி பார்த்து ஆவணக் களத்தில் பதிவு செய்தனர். கோவிலில் தினமும் விளக்கு ஏற்றவும் உத்தரவிட்டு, மனமே இல்லாமல் மதுரை திரும்பினான் விக்கிரம பாண்டியன்.


அரசனின் ஆணை அப்படியே நடந்தேறியது.. கொற்றவையின் புகழ் செவி வழிச் செய்தியென நாடு முழுவதும் பரவியது..

கோவில் காட்டின் நடுவே இருக்க , எல்லையோரங்களில் மக்கள் குடியேறத் தொடங்கினார்கள்.. முதலில் இரவில் சலங்கை சத்தம் கேட்டதாக மக்கள் பேசிக் கொள்ள, கொற்றவையின் நகர் வலமது என்று சன்னதம் ஆடி குறி சொன்னான் ஒருவன்.. விக்கிரம பாண்டியனின் வேண்டுதலுக்காக காளியே காவல் காக்கும் இடம் என மீண்டும் நாடெங்கும் பேச்சானது.. மெல்ல மெல்ல மக்கள் வரவால், காளியின் அருளால் உருக் கொண்டது விக்கிரம பாண்டியபுரம்…

-கொற்றவை அருள்வாள்.
 
  • Love
Reactions: Vathani