• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

விதையாய் விழுந்து மரமாய் எழுந்த மலரே 21

Pandiselvi

Member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Oct 30, 2021
Messages
33
அத்தியாயம் 21

அமுதியின் பெற்றோர்களை பேருந்தில் ஏற்றி விட்டு டிராபிக்கில் வீடு வந்து சேர்வதற்குள் தாயும் பிள்ளைகளும் காரிலே தூங்கி விட்டனர். பார்க்கிங்கில் வண்டியை நிறுத்திய சித், "அமுதி வீடு வந்துருச்சு" என்று மெதுவாக தோளில் தட்டவுமே அவள் படக்கென்று விழித்துக் கொண்டாள்.

"நான் சரணைத் தூக்கிக்கிறேன். நீங்க ஹாசினியைத் தூக்கிட்டு வாங்க" என்று முன்னே நடக்க ஆரம்பித்து விட்டான்.

இருவரும் ஆளுக்கொரு குழந்தையை கையில் வைத்துக் கொண்டு வீட்டைத் திறக்கும் சத்தத்தில் சரண் விழித்துக் கொண்டான். முதலில் திருதிருவென விழித்தவன் அதன்பின் சித்தின் கையிலிருந்து இறங்கிக் கொண்டான்.

"சரண் முழிச்சுட்டியா? சரி வா உள்ளே தூங்கலாம்" என்று மறுபடியும் அவன் தூக்கப் போக அவன் ஒரு அடி பின்னால் நகர்ந்தான். அவன் நகரவும் என்னவென்று அவனைப் பார்க்க "நான் சந்திரா ஆச்சிக்கூட தூங்கப் போறேன்" என்கவும், "சரி வா நானே கொண்டு போய் விடுறேன்" என்று அவன் அன்னையை எழுப்பி சொல்லி தூங்க வைத்து விட்டு வந்தான்.
அவன் சரணை விட்டு வருவதற்குள் அமுதி படுக்கையை சரி செய்து வைத்திருந்தாள். அவன் வரவும் "பாப்பாக்கும் எனக்கும் பாதி இடமே போதும் நீங்க அந்தப் பக்கம் தூங்கிக்கோங்க. உங்களுக்கு கீழே படுக்க கஷ்டமா இருக்கும்" என்றாள்.

"இல்லை நீங்க ப்ரியா படுத்துக்கோங்க"

"பரவாயில்லைங்க எங்களுக்கு இடம் அதிகமாவே இருக்கு" என்கவும் அவனுக்கும் கீழே படுத்தால் முதுகு வலி எடுப்பதாலும் அது நான்கு பேர் படுக்கும் கிங் சைஸ் பெட் என்பதால் ஹாசினிக்கு மறுபக்கம் படுத்துக் கொண்டான்.
ஹாசினியும் சித்தும் உறங்கிக் கொண்டிருக்க அமுதிக்கு உறக்கம் வருவேனா என்றிருந்தது. ஏனென்றால் சரணின் நடவடிக்கை‌. 'அவன் பின்னால் நகர்ந்தது அவரு வேனா பார்க்காம இருந்திருக்கலாம். ஆனால் நான் பார்த்தேனே? அவன் மனசுல எதுவோ ஓடிட்டு இருக்கு. இல்லனா அப்படி பண்ண மாட்டான். சரண் முகமே சரியில்லை. நல்லவேளை அவனை இவரு நோட் பண்ணல‌. நோட் பண்ணிருநதா பீல் பண்ணிருப்பாரு' என்று சித் பார்க்கவில்லை என்று இவள் நினைத்துக் கொண்டிருக்க, இவளே நோட் பண்ணிருக்கும் போது போலீஸ்காரன் அவனுக்கு பார்க்காமலா புரியாமலா இருந்திருக்கும்?.

காலைப் பொழுது சீக்கிரமே எழுந்து எவ்வளவு சொல்லியும் சாந்தியுடன் அமுதியும் வேலைகளைப் பார்த்துக் கொண்டிருந்தாள். ஒவ்வொருவராக எழுந்து வர அவர்களுக்கு டீ குடுத்து விட்டு சரணுக்கு குடுக்கவும் அவன் குடிக்காமல் வெகுநேரம் கையிலே வைத்திருந்தான்.

"சரண் என்னாச்சு சீக்கிரம் பாலைக்குடிடா.. ஸ்கூலுக்கு போனும்ல. இன்னைக்கும் லீவ்னு நினைச்சுட்டு இருக்கியா?" என்றாள் அமுதி.

"நாம இனிமே சித் அங்கிள் வீட்டில தான் இருக்கப்போறோமா? ஏன் இங்க இருக்கனும்?" என்றான் தன் மனதுக்குள் இருந்ததை ஒருவழியாக கேட்டு விட்டு பதிலுக்காக தன் தாயின் முகம் நோக்கினான்.

அவளுக்கு இப்போது தான் புரிந்தது. 'அவன் இதற்காக தான் நேற்று அப்படி நடந்து கொண்டானா? கடவுளே இவனுக்கு எப்படி நான் புரிய வைப்பது? புரிந்து கொள்ளும் வயதா? சமூகத்தில் உள்ள வாழ்ந்து அனுபவித்த, எல்லாம் புரிந்த சிலரே புரிந்து கொள்ளாமல் மறுமணத்தைக் கேவலமாக பார்க்கும் போது? இவனுக்கு நான் என்ன சொல்லி புரிய வைக்க?' என்று கலங்கிப் போய் நின்றிருந்தாள்.

அங்கிருந்த அனைவரும் ஒரு நிமிடம் எதுவும் பேசாமல் அதிர்ந்து மௌனமாகினர்.

எல்லாரும் அமைதியாக இருக்கவும், "சித் அங்கிள் சொல்லக் கூடாதுடா செல்லம்.. சித் தம்பி தான் உனக்கு இனிமேல் அப்பா. அப்போ அப்பா கூட தான இருக்கனும்" என்றார் சாந்தி.

"அப்பாவா..! எனக்கு அப்பா பிடிக்காது. அப்பான்னு கூப்பிட முடியாது" என்றான் அழுத்தமாக முகத்தை உர்றென்று வைத்துக்கொண்டு. அமுதிக்கு முகம் சுருங்கி கண்கலங்க ஆரம்பித்து விட்டது. ஹாசினியை கையில் வைத்து சிரித்து விளையாடிக் கொண்டிருந்த சித்துவிற்கு கூட நெஞ்சில் ஏதோ தாக்க பட்டென்று அவன் முகம் நோக்கினான்.

"அப்படி சொல்லக்கூடாது செல்லம். நீ..." என்று அவர் ஆரம்பிக்கவும் 'வேண்டாம்' என்று சித் தலையாட்டவும் அவர் அமைதியாக இருந்து கொண்டார். இதை எடுத்தோம் கவிழ்த்தோம் என்று சொல்லி புரிய வைக்க முடியாது. அதுவும் அவன் சிறுவன். அவனுக்கு அவன் மனதில் என்ன ஓடிக் கொண்டிருக்கிறது என்று கேட்டு அவன் வழியில் தான் பதில் சொல்ல வேண்டும் என்று முடிவெடுத்தான்.

"சரி அமுதி ஸ்கூலுக்கு டைம்மாச்சு. நீங்க கிளப்புங்க" என்று சொல்லவும் அடுத்தடுத்து வேலைகளை முடித்து பள்ளி செல்லும் நேரமும் வந்து விட்டது.

"அமுதி நானே இன்னைக்கு ஸ்கூல விட்டு வர்றேன். சரண் வா போலாம்" என்று வண்டி சாவியை கையில் எடுத்துக் கொண்டு அவனிடம் பேக்கை வாங்கவும், "வேண்டாம் நான் எப்பவும் போல ஸ்கூல் வேன்லயே போயிப்பேன்" என்று முகத்தை திருப்பிக் கொண்டான்.

சித்தார்த் திற்கு ஒரு நிமிடம் என்ன செய்வதென்று புரியவில்லை. அமுதிக்கும் ஏதோ விவரம் தெரியாமல் பேசும் சிறு குழந்தையை சித்தின் முன்னால் அதட்டவும் முடியவில்லை. என்ன சொல்லி அவன் மனதை சரிசெய்வது என்றும் விளங்கவில்லை. அவன் பேசப்பேச தாயவளுக்கு தான் அழுகை முட்டிக் கொண்டு வந்தது. 'இதற்குத் தானே இரண்டாம் திருமணமே வேண்டாம் என்றேன்' என்று உள்ளுக்குள் நெருப்பிலிட்ட புழுவாய் துடித்துக் கொண்டிருந்தாள்.

'முதல் நாளே எதுவும் பேச வேண்டாம். அவன் வழியிலேயே செல்லலாம்' என்று நினைத்து "சரிங்க இன்னைக்கு அவன் வேன்லயே போகட்டும்" என்று அவன் அலுவலகம் செல்ல தயாரானான். அவனுக்கு ஒன்று அப்போது தான் புரிந்தது. 'ஹாசினி சிறுகுழந்தை அவளுக்கு விவரம் தெரியாது. ஆனால் சரண் விஷயத்தில் அப்படி இல்லை. அவனுக்கு தான் அதிக கேர் எடுத்து பார்த்துக்கனும். என்ன செய்யலாம' என்று யோசித்துக் கொண்டே குளித்து முடித்து குளியலறையில் இருந்து வெளியே வந்தவனை அவனின் அயர்ன் செய்த யூனிபார்ம் வரவேற்றது. அதை எடுத்து அணிந்து கொண்டு அறையிலிருந்து வெளியே வந்தவனுக்கு டைனிங் டேபிளில் காலை உணவு தயாராக இருந்தது. அவன் அமரவும் அமுதி அவனுக்கு பரிமாறினாள். சாந்தி வெகுநாட்களாக அவர்கள் வீட்டில் நன்றாக சமைத்தாலும் அமுதியின் சமையல் அவனுக்கு பிடித்திருந்தது. முதல் தடவை அவள் இவர்கள் வீட்டில் சமைக்கும் போதே பிடித்து அன்று கொஞ்சம் அதிகமாகவே சாப்பிட்டான். அவன் அன்னை நன்றாக இருக்கும் போது அவர் கையால் ருசியாக சாப்பிட்டது. இப்போது அவன் தான் அவரை அந்த வேலையெல்லாம் செய்ய வேண்டாமென்று ஆள் வைத்தது. அன்னைக்காக சொன்னாலும் சிலநேரம் உணவில் சலிப்புத் தட்டிவிடும். அன்று சொல்லாதது இன்று "நீங்க நல்லா சமைக்கிறேங்க அமுதி" என்றான்.

அவன் பாராட்டுவான் என்று நினைக்காதவள் அவன் திடிரென பாராட்டவும் "தேங்கஸ் சா.." சார் என்று சொல்ல வந்தவள் பின் "தேங்க்ஸ்ங்க" என்று சிறுபுன்னைகை சிந்தினாள்.

அமுதிக்கும் சித்திற்கும் அன்றைய காலை புதிதாக இருந்தது. சித்திற்கு இதுவரை தானே அனைத்தையும் செய்து ஏனோ தானோ என்று கிளம்புபவன், இன்று எல்லாமே மனைவியாய் வந்தவள் செய்யும் போது ஏதோ வித்தியாசமாக இருந்தது. இருந்தும் அவள் கஷ்டப்படக்கூடாது என்று நினைத்து "அமுதி நீங்களும் ஆபிஸ் கிளம்பனும்ல. அதுனால காலைல கொஞ்சம் வேலையை கொறைச்சுக்கோங்க".

"இல்லங்க எப்பவும் நான் பார்க்குறது தான்".

"ம் சரி உங்க விருப்பம்" என்று விட்டு ஹாசினியைக் கொஞ்சி விட்டு அலுவலகம் சென்றான். அமுதி வழக்கம் போல் அவளின் ஆபிஸ் காரில் அலுவலுகம் சென்றாள்.

இரண்டு நாட்கள் இப்படியே சென்று விட, மூன்றாம் நாள், "சரணோட ஸ்கூல் வேன் பஞ்சராம். அதுனால் நானே அவனை ஸ்கூல்ல விட்ருறேன்".

'நமக்கு எதுவும் அதுமாதிரி மெஸேஜ் வரலியே' என்று மொபைலே ஆராய்ந்து விட்டு சித்தைப் பார்த்த அமுதி அவன் கண் சிமிட்டவும், எதெற்கென்று காரணம் புரியாவிட்டாலும் சரி என்று தலையசைத்தாள்.

சரணும் வேறு வழியின்றி அவனுடன் சென்றான். வெளியே உர்றென்று முகத்தை வைத்திருந்தாலும் உள்ளே சந்தோஷமாக உணர்ந்தான். இதுவரை நிறைய குழந்தைகள் தந்தையுடன் இருசக்கர வண்டியில் வருவதைப் பார்த்து ஏக்கமாக இருக்கும். ஆனால் வண்டியில் உடன் வருவது தந்தை என்று நினைக்கும் போது வெறுப்பாய் அந்த நினைப்பை உதறித் தள்ளிடுவான். ஆனால் பிஞ்சு மனமோ அவ்வப்போது அந்த ஆசையை நினைத்து ஏங்கிக் கொள்ளும். பள்ளி வந்ததும் அவனை விட்டு, தலையைக் குனிந்து பேக்கை வாங்குவதற்கு கையை நீட்டி நின்றவனை பேக்கை கொடுக்காமல் வண்டியில் சாய்ந்து மார்பின் குறுக்கே கைகட்டி நின்று பார்த்துக் கொண்டிருந்தான்.

'என்ன இன்னும் பேக்கை கொடுக்கல?' என்று நிமிர்ந்தவன், சித் அவனை உறுத்துப் பார்த்துக் கொண்டிருப்பதை பார்த்து, "பேக்கை குடுங்க. கிளாசுக்கு டைமாச்சு" என்றான்.

"நான் பேக்கை கொடுக்கனும்னா சரண் செல்லம் ஏன் டூ டேஸ் ஆ உம்முனு இருக்கேங்கனு சொல்லனும். அப்போ தான் குடுப்பேன்"

"ஏன்னா... ஏன் எல்லாரும் உங்களை அப்பானு கூப்பிட சொல்றாங்க. எனக்கு அப்பான்னு கூப்பிடவே பிடிக்கல" என்றவனுக்கு கண்கலங்க ஆரம்பித்து விட்டது.

"அய்யோ ஏன்டா அழுகுற?" என்று அவனை தூக்கி வண்டியில் உட்கார வைத்து, "யாரு உன்னையை அப்படிக் கூப்பிட சொன்னது? சாந்தி ஆன்ட்டியா? இனிமேல் உன்னை கூப்பிட சொல்ல வேண்டாம்னு சொல்லிட்டேன்"

அப்பவும் உர்றென்று மௌனமாக கண்ணீர் வடித்துக் கொண்டிருந்தான்.

"சரண் குட்டி இன்னும் என்ன? எங்க அம்மாலாம் ஆம்பள பசங்க அழக்கூடாதுனு சொல்வாங்க. உங்க அம்மா சொல்லலியா? அழுகாச்சியா இருக்கே?"

அவன் அவசரமாக கண்ணீரைத் துடைத்துக் கொண்டு, "எங்க அம்மாவும் தான் சொல்லிருக்காங்க"

அவன் செயலில் சிரித்து விட்டு "ம் இப்போ தான் வெரி குட் பாய்" என்று கன்னம் தட்டினான்.

"சாந்தி ஆன்ட்டி மட்டுமில்ல கற்பகம் ஆச்சியும் அப்படி தான் சொன்னாங்க ஊருக்குப் போறதுக்கு முன்னாடி" என்று அமைதியானான்.

"ஓஓ அப்படி என்ன சொன்னாங்க ஆச்சி?" என்று அவன் மனதில் இருப்பதை மெது மெதுவாக வெளிக்கொண்டு வந்து கொண்டிருந்தான்.

"அதுவா... நானும், அம்மா, பாப்பா இனிமே உங்க வீட்ல தான் இருப்போமாம். அப்புறம் அமுதி அம்மான்னா நீங்க தான் இனி அப்பாவாம். அப்புறம் நான் ரொம்ப சேட்டை பண்ணக்கூடாதாம். எதுக்கும் அடம்பிடிக்கக் கூடாதாம். அப்புறம்...." என்று நாடியில் கைவைத்து யோசித்து யோசித்து வரிசையாக சொல்லிக் கொண்டிருந்தான்.

"நீங்க அடிப்பேங்களா? ரொம்ப கோவப்படுவேங்களா?"

"இல்லையே ஏன் உன்னை அடிக்கனும் நீதான் குட் பாயாச்சே. குட்டிப்பசங்க கிட்டலாம் கோவம் வராதே "

"ஆனால் முன்னாடி அப்பாக்கு... ரொம்ப கோவம் வரும். நான் தப்பே பண்ணாம திட்டுவாங்க அடிப்பாங்க" என்றான்.

"ஓஓ" என்று அவனுக்கு சரண் எதற்கு இப்படி நடந்து கொள்கிறான் என்பதற்கு காரணம் புரிந்தது. "அதெல்லாம் மறந்துறனும். சரியா.. எல்லாரும் ஒரே போல இருக்க மாட்டாங்க. உன்னை, அம்மா, பாப்பாவை இனிமே உங்களை பத்திரமா நான் தான் பார்த்துப்பேன். சரியா? உனக்கு என்னைப் பிடிக்கும் தான?" என்று ஆர்வமாக கேட்டான் அவன் பதிலை அறிவதற்காக.

"ம் பிடிக்குமே... ஆனால் அப்பானு சொன்னா பிடிக்கல". ஏனோ அவனுக்கு அவ்வார்த்தையே பிஞ்சு மனதில் விஷம் என்று மனதில் பதிந்து விட்டது.

"அப்போ அங்கிள்னே கூப்பிடவா?" என்றான்.

"ம்ம்" என்று சித்தும் அவனைப் போலவே நாடியில் கைவைத்து யோசித்து, "அப்பா உனக்குப் பிடிக்கல. அப்போ டாடி கூப்பிடுறியா?" என்றான்.

சரணும் அவனைப் போலவே ஏதோ யோசித்து விட்டு, "ம் சரி" என்றான் மகிழ்ச்சியாக. சித்திற்கும் அதை விட மகிழ்ச்சி இவ்வளவு சீக்கிரத்தில் குழந்தையின் மனதைப் படித்து விடுவான் என்று நினைக்கவில்லை. அமுதிக்கு அவனிடம் அமர்ந்து பேசவே உள்ளுக்குள் ஏதாவது சொல்லிவிடுவானோ என்று பயம். அதனால் தான் சித்தே பொறுமையாக ஒவ்வொரு வார்த்தைகளாக தேடிப்பிடித்து பேசி அவன் மனதை அறிய முற்பட்டது. அதில் வெற்றியும் கண்டுவிட்டான். ஹாசினியை விட சரணைத் தான் முதலில் கவனிக்க வேண்டும் என்று நினைத்து அவன் எடுத்த முயற்சி வெற்றியும் அடைந்து விட்டது.

ஸ்கூல் பேக்கை அவன் கையில் கொடுத்து விட்டு "பாய். ஈவ்னிங் நான் இருக்க மாட்டேன். நீங்க சமத்தா ஸ்கூல் வேன்ல வந்துரனும்"

"ம்ம்" என்று தலையாட்டி விட்டு மெது மெதுவாக நடந்தவன் திரும்பி திரும்பி சித்தைப் பார்த்துக் கொண்டே சென்றான். அவனும் வண்டி அருகே நின்று சரணைத் தான் பார்த்துக் கொண்டிருந்தான். சரண் என்ன நினைத்தானோ பள்ளி உள்ளே நுழைவதற்கு முன் வேகமாக ஓடி வந்தான். "என்னாச்சு சரண்?" என்று தூக்கிய சித்தை, கன்னத்தில் முத்தமிட்டு "பாய் டாடி" என்று சிரித்துக் கொண்டே சொல்லி விட்டு உள்ளே ஓடி விட்டான்.

அவனுக்கு கண்ணெல்லாம் கலங்கி விட்டது. என்ன உணர்கிறான் என்றே தெரியவில்லை. தன் உதிரத்தில் உதிர்க்கா விட்டாலும் ஏதோ அவர்களுக்கிடையில் ரத்த சம்பந்தம் உண்டான உணர்வு. பெண்ணின் தாய்மையை ஒவ்வொரு இடத்திலும் பெருமையாக சொல்லப்படுவதை விட ஆணின் பாசத்தை சொல்வது குறைவது தான். அது சொல்லப்படாத சொல்ல முடியாத உணர்வு. தாயின் பாசத்தை வாழ்வின் ஒவ்வொரு கட்டத்திலும் அனுபவிப்போம் என்றால் தந்தையின் பாசத்தை ஒவ்வொரு மனிதனும் அவன் அந்த இடத்திற்கு வரும் போது தான் உணர்வான். தந்தையின் பாசம் அவர் காட்டும் அக்கறையிலும், வழிகாட்டலிலும் ஏன் கண்டிப்பிலும் கலந்திருக்கும். தன் பிள்ளைகள் தந்தையைப் புரிந்து கொண்டு அவர் சொல்லுக்கு மதிப்பளிக்கும் போதும், அவன் முகத்தில் உள்ள மகிழ்ச்சியைக் கண்டும் ஒவ்வொரு தகப்பனுக்குமே ஏதோ ஜெயித்த உணர்வும், உள்ளத்தி
ல் மகிழ்வும் வருமே அந்த உணர்வைத் தான் இப்போது சித்தும் அனுபவித்துக் கொண்டிருந்தான்.


தொடரும்.
 
Top