• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

விதையாய் விழுந்து மரமாய் எழுந்த மலரே 22

Pandiselvi

Vaigai - Avid Readers (Novel Explorer)
Oct 30, 2021
33
8
8
Chennai
அத்தியாயம் 22

பகலவனின் வெளிச்சம் பார்த்து பறவைக் கூட்டங்கள் எல்லாம் இறைதேடி தன் கூட்டை விட்டு பறந்து சென்றது.

சித்-அமுதி திருமண வாழ்வில் நுழைந்து ஒரு மாதம் முடிந்து விட்டது. தந்தை என்றால் இப்படித்தான் என்று நினைத்துக் கொண்டிருந்தவனுக்கும், தந்தையின் வாசமே என்ன என்றறியாத குழந்தைக்கும் தன் உயிரனுக்களை கொடுக்காமலே தந்தைக்குரிய அத்தனை உணர்வுகளையும் அக்கறைகளையும் கொடுத்து தந்தையாய் மாறிப் போனான் சித்து. முதலில் பயந்து பயந்து பேசிக் கொண்டிருந்த சரண் கூட அவனுடன் நன்றாக ஒட்டிக் கொண்டான். அப்பா என்றால் இப்படித்தான் இருப்பார் என்று அவன் மனதில் ஆழப் புதைந்த எண்ணம் கொஞ்சம் கொஞ்சமாக கரைய ஆரம்பித்து தந்தையென்றால் சித்தின் உருவத்தை மனதில் நினைக்கும் அளவுக்கு சித் அவர்களை அக்கறையாக பார்த்துக் கொண்டான். குழந்தைகளுக்கு அது தானே வேண்டும். அது தானே அவர்கள் மனதில் பதியும் அவ்வயதில். ஆனால் அமுதி மட்டும் அந்த வீட்டின் மருமகளாக அத்தனை கடமைகளை செய்தாலும் சித்திடம் மட்டும் மனம் விட்டு பேசவோ நெருங்கவோ இல்லை. அவனும் அதை பெரிதுபடுத்தவும் இல்லை. அவன் வேலையை அவன் செய்து கொண்டிருந்தான். அமுதிக்கு முன்னால் அவள் அன்னை இருந்து பார்த்துக்கொள்வார் இப்போது இருவரையும் பார்த்துக் கொண்டு அலுவலகம் செல்ல கஷ்டமாக இருந்தது. சித்தும் அதைக் கவனித்துக் கொண்டு தான் இருந்தான். அவளாக கேட்பால் என்று எதிர்பார்த்திருந்தவன் அவள் எதுவுமே சொல்லாமல் அவளுக்குள் அடக்கவும் அவனே அவளிடம் பேச முடிவு செய்தான்.

அன்று விடுமுறை குழந்தைகள் மதிய உணவை சாப்பிட்டு விட்டு உறங்கிக் கொண்டிருக்க, சந்திரமதியும் அவர்களுடன் இணைந்து கொண்டார். சாந்தி மதிய வேலைகளை முடித்து விட்டு எப்போதும் ஒரு மணி நேரம் அவர் வீட்டுக்குச் சென்று விட்டு வருவார். அதுபோல் அவரும் சென்று விட்டார். அமுதி அடுக்களையை ஒதுங்க வைத்து விட்டு அறைக்குள் வரும் போது சித்தார்த் மட்டும் ஏதோ வேலை செய்து கொண்டிருந்தான்.

அமுதி உள்ளே வரவும், "அமுதி உங்க கிட்ட கொஞ்சம் பேசனும்" என்கவும், அவள் அமைதியாக என்னவென்று அமர்ந்தாள்.

"நீங்க பசங்களையும் பார்த்துக் கிட்டு வீட்லயும் வேலையை பாதி முடிச்சுட்டு ஆபிஸ் போயிட்டு வந்து கஷ்டப்படுறேங்க. அம்மாவுக்கும் உடம்பு முடியாததால உங்களுக்கு புல்லா உதவி பண்ண முடியாது. முன்னாடியாது கற்பகம்மா இருந்தாங்க. இப்போ நீ மட்டும் தனியாக கஷ்டப்படுற. உங்களை பார்க்கவே ரொம்ப டயர்டாகுற மாதிரி இருக்கு. நீங்க வேனா... வேலையை ரிசைன் பண்ணிடுறேங்களா?"

அவள் என்ன சொல்வதென்று தெரியாமல் முழிக்கவும், "இல்லை பசங்களை சாந்தியக்கா பார்த்துக்கிட்டாலும் நீ இருந்து பார்க்குற மாதிரி இருக்காதுல.. அதுனால தான்.. உனக்கு ஓகேனா ரீசைன் பண்ணிடு" என்றான்.

அவள் குழப்பத்தில் அவன் ஒருமையில் அழைத்ததையெல்லாம் காதில் வாங்கவில்லை. இந்த ஒரு மாதத்தில் அவன் காட்டும் அக்கறையிலும் குழந்தைகள் மேல் காட்டும் பாசத்திலும் ஒரு குறையும் வைத்ததில்லை. எதுவுமே கண்டு கொள்ளாத மாதிரி தான் தெரியும்‌. ஆனால் எப்படி எப்போது பார்ப்பான் என்றே தெரியாது. வீட்டில் நடக்கும் அத்தனையும் ஏன் மற்றவர்களின் மனதைப் படிப்பதில் கூட வல்லவன் தான். முதல் தடவை குழந்தைகளுக்கு மெடிக்கல் ஷாப்பில் ஏதோ வாங்கி வர சொல்லும் போது அவள் ஏடிஎம் கார்டை எடுத்து நீட்டும் போது முறைத்தானே. அப்பப்பா என்ன கோவம்... பல்லை கடித்துக் கொண்டு "எனக்கு தேவைப்படும் போது நானே வாங்கிக்கிறேன். என் பசங்களுக்கு நானே வாங்கிப்பேன்" அமைதியாகவும் அதே நேரம் மிக அழுத்தமாகவும் சொன்னான். அதன் பிறகு அவள் அந்த மாதிரி செயலை செய்யவே பயப்படுவாள். இப்போது வேலையை விட மாட்டேன் என்று சொல்வதற்கு அவளிடம் எந்த காரணமும் இல்லை. பைனான்ஸியல் பிராபளம் என்று சொன்னால் அவ்வளவு தான் கோவப்படுவான் என்பது அவளுக்குத் தெரியும்.

குழப்பத்தில் இருந்தவளை, "என் மேல நம்பிக்கை இருந்தால் வேலையை ரிசைன் பண்ணுங்க இல்லனா வேண்டாம்" என்று பார்த்துக் கொண்டிருந்த வேலையை மூடி வைத்து விட்டு குளியலறை சென்றான்.

நம்பிக்கை என்ற ஒற்றை வார்த்தையில் அவள் மனதை கரைத்து விட்டான். 'உன் மேல் நம்பிக்கை இல்லை என்று சொன்னால் அந்தக் கடவுள் கூட மன்னிக்க மாட்டார்' என்று நினைத்து அவன் குளியலறையிலிருந்து வெளியே வரவும், "நான் வேலையை ரிசைன் பண்ணிடுறேங்க" என்றாள்.

"ம் ஓகே நல்லது. பசங்க பெரிசானதுக்கப்புறம் உனக்கு வேலைக்கு போனும்னு தோனுச்சுனா நீ தாராளமா போ"

"ம் சரி" என்றவள், அதன் பின் அவன் ஒருமையில் அழைத்ததே புரிந்தது. 'என்ன திடீர்னு? ஒருவேளை தெரியாமல் கூப்டுருக்கலாம்' என்று அவனிடம் கேட்கக்கூட தோன்றாமல் அவளே அவளை சமாதானம் சொல்லிக் கொண்டாள். தூரமாய் நின்றாலும் கள்வனவன் அவளின் ஒவ்வொரு அசைவுகளையும், ஏன் மனதின் ஓட்டங்களையும் கூட அவன் கண்களெனும் கேமராவில் படம்பிடித்துக் கொண்டிருக்கிறான் என்பதை பாவம் பேதையவள் அறியவில்லை.

அந்த மாதத்தோடு வேலையை விட்டு விட்டாள். குழந்தைகளும் குடும்பமும் மட்டுமே முழுநேர வேலையானது. எப்போதும் தாயும் மகனும் மட்டும் தனி இருமரங்களாக அமைதியாக இருக்கும் வீடு இப்போது அந்த மரத்தில் குருவிக்கூட்டம் ஒன்று கூடு கட்டி மென்மையாய் கீச்சிடுவது போல் எப்போதும் கலகலப்பாக இருந்தது. சந்திரமதிக்கோ மிகவும் சந்தோஷம். அமுதியையோ அவள் பெற்ற குழந்தைகளையோ எப்போதும் கடிந்து கூட பேச மாட்டார். குழந்தைகளை தன் மகன் வழி வந்த பேரப்பிள்ளைகளை விட அதிக பாசம் காட்டினார்.

வேலையை விட்டு நின்ற பிறகு அமுதியின் உலகமே அந்த வீடு, சந்திரமதி, குழந்தைகள் மற்றும் சித் என்றாகிப் போனது. அந்த வீட்டைத் தவிர வெளியாட்கள் என்றால் வசந்தின் குடும்பம் ஆனந்தி மற்றும் அவர்கள் மகன் அர்விந்த். வீட்டில் உள்ள ஒவ்வொருவருக்கும் பார்த்து பார்த்து செய்வாள். காலையில் இருந்து இரவு வரை சித்தின் தேவைகளை சொல்லாமலே செய்து முடித்து வைத்திருப்பாள். இதுவரை அனைத்தும் அவனே பார்த்துக் கொண்டவனுக்கு அதுவே மிகப்பெரிய வித்தியாசமாகவும் புதுவித அனுபவமாகவும் இருந்தது.

அன்று வழக்கம் போல் வேலைகளை முடித்து விட்டு குழந்தைகளை தூங்க வைத்து விட்டு சித்தின் வருகைக்காக காத்திருந்தாள். ஹாலில் சோபாவில் அமர்ந்து டிவி பார்த்துக் கொண்டிருந்தவள் தன்னையறியாமலே கண்ணயர்ந்து விட்டாள். அன்று ஏனோ வேலை அதிகமாக இருந்ததால் நள்ளிரவுக்கு மேல் தான் வீட்டிற்கே வந்தான். வழக்கம் போல் அவனிடம் இருக்கும் வீட்டு சாவியை வைத்து கதவைத் திறந்து உள்ளே வரும் போது வரவேற்றது தலையை சோஃபாவில் சாய்த்து கால்களை சோஃபாவில் குறுக்கி வைத்து கையில் ரீமோட்டுடன் தூங்கிக் கொண்டிருந்த அமுதி தான். அவளை சில வினாடிகள் பார்த்தவன் அவளைத் தாண்டி அறைக்குள் சென்று பிரஷ்ஷப்பாகி வந்தான். வந்தவன் அவளையே கண் கொட்டாமல் பார்த்துக் கொண்டிருந்தான்.

அவள் வந்த பிறகு அந்த வீடும், அவனும் அவன் அன்னையும் மனதளவில் சந்தோஷமாக இருக்கிறார்கள் என்றே சொல்லலாம். வீட்டிற்கு உயிர் இருந்தும் உணர்வுகள் இல்லாதது போல் தோன்றும். ஆனால் இன்றோ அந்த வீட்டில் உயிரும் உணர்வும் சேர்ந்து நிறைந்திருந்தது. ஒரு வீட்டின் மகிழ்ச்சிக்கு முக்கிய காரணமே பெண்கள் தான் போல. இதுவரைக்கும் அவளாக எதுவும் கேட்டதில்லை அவனிடம். கேட்கும்படி வைத்தும் இல்லை அவன். சிறு முகச்சுழிப்பு கூட இல்லாமல் அவன் சொல்லாமலே அவன் தேவைகள் ஒவ்வொன்றையும் செய்து வைத்திருப்பாள். அழகான அன்றலர்ந்த மலர் ஒன்று துயில் கொள்வது போல் உறங்குபவளை அவனும் ரசித்துக் கொண்டு தான் இருந்தான். அவன் போக்கில் அவளைப் பற்றி நினைத்துக் கொண்டிருந்தவன் நேரமாவதை உணர்ந்து, "அமுதி..." என்று தோளைத் தொட்டு மெதுவாக எழுப்பினான்.

அவள் எழுந்து, "சாரி தூங்கிட்டேன்.. வந்து ரொம்ப நேரமாச்சா?" என்று கேட்டுக் கொண்டே அவனுக்கு இரவுணவை எடுத்து வைத்தாள்.

அவள் வைத்த இட்லிகளை பிய்த்து வாயில் போட்டுக் கொண்டே, "காலையிலிருந்து உனக்கு வொர்க் கரெக்டா இருக்கே அமுதி. ஏன் நான் வரும் வரைக்கும் வெயிட் பண்றேங்க? நான் வந்து நானே போட்டு சாப்டுப்பேன். நான் இதை விட லேட்டா கூட வருவேன். எனக்கு பழக்கம் தான் இதெல்லாம். நீ மார்னிங் சீக்கிரம் எழுந்து பசங்களை வேற பார்த்துக்கனும். சோ இனிமே எனக்காக வெயிட் பண்ணாம பசங்க கூடவே தூங்கு"

"பரவாயில்லைங்க மதியம் தான் ரெஸ்ட் எடுக்குறேனே. எனக்கு எந்த பிரச்சனையும் இல்லை"

"ம் ஓகே ஆனா உன் ஹெல்தையும் பார்த்துக்கோங்க"

"ம் சரிங்க" என்று அவன் சாப்பிடவும் எடுத்து வைத்து விட்டு , அன்றைய நாளை முடிக்க தூக்கத்தை தழுவினர்.

அலுவலகம் செல்லும் நேரம் தவிர மற்ற நேரங்களில் எங்கு வெளியில் சென்றாலும் சரணையும் உடன் அழைத்துச் செல்லுவான். அவன் கேட்கும் ஒவ்வொரு குழந்தைத்தனமான கேள்விக்கும் சித் பொறுமையாக பதில் சொல்வான். ஏற்கனவே சரண் பக்குவப்படட்வன். சித்து டன் சேர்ந்து இன்னும் பக்குவமாக வளர்ந்தான். தந்தை மகன் உறவைத் தாண்டி நண்பர்கள் போலத்தான் இருக்கும் அவர்களது பேச்சு. ஹாசினியோ சொல்லவே வேண்டாம். ஹனி யிலிருந்து அம்மு என்று அழைக்க ஆரம்பித்திருந்தான். ஏனோ அவனுக்கு அவள் அவன் மேல் வைத்திருக்கும் பாசமும், அவன் அவள் மேல் வைத்திருக்கும் பாசமும் அவ்வாறு அழைக்கத் தூண்டியது உள்மனது. இப்போதெல்லாம் அம்மு என்று அழைத்தால் தான் திரும்பிப் பார்க்கும் அளவுக்கு வந்திருந்தாள் ஹாசினி.

அன்று விடுமுறை எப்போதும் போல் அமுதி வேலைகளை பார்த்துக் கொண்டிருக்க சித்தும் சரணும் ஹாலில் அமர்ந்து அவன் சித்திடம் பாட சம்மந்தமாக கேள்வி கேட்டுக் கொண்டிருக்க அவனும் சரணுக்கு புரியும்படி எடுத்து சொல்லிக் கொண்டிருந்தான். அப்போது ஹாசினி ஓடி வந்து சித்தை கட்டிக் கொண்டாள்.

"ஏய் நில்லுடி.. அம்மு நில்லு" என்று அமுதி கையில் டவலோடு பின்னாலே ஓடி வந்தாள்.

"ஹேய் அம்மு என்னதிது? குளிச்சுட்டு துவட்டாம அப்படியே ஓடி வந்துட்டியா?", சித்தார்த்.

"ம் கூ..கூ.. அப்பா.." (ம் குடு குடு அப்பா) என்று அமுதி கையில் இருந்த டவலைப் பறித்து சித்திடம் கொடுக்க அவனும் அவள் மழலை மொழி புரிந்து, "குடு அமுதி" என்று வாங்கித் துவட்ட ஆரம்பித்தான். இப்போதெல்லாம் அன்றைக்கு பிறகு அவன் ஒருமையில் அழைப்பதை பழகிக் கொண்டாள்.

அவளும் குடுத்து விட்டு ஹாசினியின் ட்ரெஸ் எடுத்து வந்து கொடுத்தாள். சித்தே அவனுக்கு தெரிந்த அளவு நெற்றியில் கருப்பு கண்மை வைத்து பவுடர் போட்டு ட்ரெஸ் போட்டு விட்டு, "அழகு பொண்ணு" என்று மகளுக்கு திருஷ்டியும் எடுத்துக் கொண்டான்.

"அய்யோ டாடி.. உங்க கையில பொட்டு வச்சு பொட்டு அண்டா சைஷ்ல வந்துருக்கு" என்கவும் அமுதிக்கு சிரிப்பு வந்து விட்டது. சந்திரமதியும் சேர்ந்து சிரிக்க, "ஏம்மா அந்த அளவுக்கா பெரிசா இருக்கு?" என்றான் தன் அன்னையிடம்.

"ரொம்ப பெரிசா இல்லை. ஆனா பெரிசா தான் இருக்கு"

"ம்மா நீங்க கூட கிண்டல் பண்ண ஆரம்பிச்சுட்டேங்க ம்ம். என்ன உங்க பேரன் ட்ரெனிங் ஆ"

"டாடி நான் எதுவும் ஆச்சிக்கு சொல்லலியே. அவங்களே கத்துக்கிட்டாங்க"

"இதுல ஆச்சியும் பேரனுக்கும் பெருமை வேற" என்று சிரித்தான்.

"ஏன் சித்து வீட்லயே அடைஞ்சு கிடக்குறேங்க. வெளில எங்கயாவது போயிட்டு வரலாம்ல. நீங்களும் கல்யாணம் ஆனதுல இருந்து சேர்ந்து எங்கேயும் போகல. நீ மட்டும் தான் பசங்களோட போயிட்டு இருக்குற. அமுதி நீயும் சேர்ந்து எங்கயாவது போயிட்டு வாமா'

அமுதிக்கு சந்திரமதியின் பேச்சை மறுக்க முடியாமல், "ம் சரிங்கம்மா" என்றாள். சித்தார்த்தும் அமுதியைத் தான் பாரத்துக் கொண்டிருந்தான். அவள் சம்மதம் சொன்னது அவனுக்குமே அதிர்ச்சி. தனியாக சென்றால் பேசுவதற்கு சங்கடப்படுவாள் என்று சித் வசந்த் குடும்பத்தாரை அழைக்க, 'திருமணமாகி முதல் முறை குடும்பமாக செல்கிறார்கள்' என்று நாகரீகம் கருதி, "நீங்க போயிட்டு வாங்க வேலை இருக்கிறது. இன்னொரு நாள் சேர்ந்து போலாம்' என்று சொல்லி விட்டனர்.

அதன் பிறகு இவர்கள் நான்கு பேர் மட்டும் மாலுக்கு சென்று ஏதாவது படம் பார்த்து விட்டு வரலாம் என்று குடும்பமாக கிளம்பினர். காரில் முன்னிருக்கையில் அமுதியும் ஹாசினியும் அமர்ந்திருக்க பின்னால் சரண் மட்டும் அமர்ந்து ஜாலியாக விளையாண்டு கொண்டிருந்தான். வெகுநாட்கள் கழித்து அமுதியின் வாழ்க்கை நிறைந்த உணர்வு. குழந்தைகளின் மகிழ்ச்சி அவளுக்கும் தொற்றிக் கொண்டது. சித்தார்த்திற்கு சொல்லவே வேண்டாம். இரண்டு மாதத்திற்கு முன் இப்படி குடும்பம் சகிதமாக படத்திற்கு செல்வாய் என்று சொன்னால் நம்பியிருக்க மாட்டான். இன்று மனைவி மக்களுடன் செல்வது ஏதோ புது உணர்வு. கண்கள் அவ்வப்போது அமுதியின் பக்கம் செல்வதையும் தடுக்க முடியவில்லை. அதீத உற்சாகத்தால் இதயம் கூட வேகமாக துடித்தது. அமுதியின் மலர்ந்த முகத்தைக் கண்களால் அளந்து கொண்டிருந்தான். இறுக்கமாய் இருக்கும் உதடுகள் கூட புன்னகையால் மலர்ந்தது. அவன் விழிகளின் ஊடுருவல் தெரிந்ததோ என்னவோ அவளுக்கும் குறுகுறுப்பு வந்து ஒட்டிக்கொண்டது. ஆணவனுக்கே புது உணர்வுகள் உடம்பெல்லாம் பாயந்ததென்றால் பெண்ணவளுக்கு வார்த்தைகளால் சொல்லத்தான் வேண்டுமோ?.
சித்-அமுதி திருமணத்திற்கு பின் எப்போதும் சித்துடன் மட்டுமே தனியாக செல்பவர்கள் இப்போது அமுதியும் இணைந்து கொண்டதால் சரணுக்கு சொல்ல முடியாத மகிழ்ச்சி. உற்சாகமும் மகிழ்ச்சியும் பொங்க செல்பவர்கள் அங்கு சென்ற பின்பு அது மொத்தமாய் வடிந்து போகப்போவது பாவம் அவர்கள் அறியாமல் போனது தான் விதியோ?.

தொடரும்..