• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

விரும்பியே தொலைகிறேன் உன்னில் என்னை

ரமா

New member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Jan 11, 2023
Messages
24
விரும்பியே தொலைகிறேன் உன்னில் என்னை!
பாகம் 20
நிலுக்ஷிகா புண்ணியகுமார்

ஓட்டப்பந்தயத்தில் முதல் இடத்தை தட்டிப் பறிக்கும் முயற்சியில் ஈடுபட்ட வேங்கையை போல் மாயாவின் கைகளில் சீறிப்பாய்ந்தது அவளுடைய உயர்ரக வண்டி.

அந்தோ பரிதாபம் எங்கிருந்தோ வந்த கனரக வாகனம் ஒன்றைக் கண்டு தன் வேகத்தை அவள் கட்டுப்படுத்த முன்னே அது அவளது வண்டியை பதம் பார்த்தது.
கண்ணிமைக்கும் நேரத்தில் நடந்து முடிந்த சம்பவத்தால் தூரத் தூக்கி வீசி எறியப்பட்ட வண்டியில் இரத்த வெள்ளத்தில் மூழ்கிக்கிடந்தால் நவநாகரீக மங்கை.

வினை விதைத்தவன் வினை அறுப்பான் எனும் ஆன்றோரின் வாக்கிற்கு சிறந்த எடுத்துக்காட்டாக தற்போது மாயாவின் நிலையைக் கூறலாம்.

நடந்து முடிந்த கோர விபத்து அவ்வழியாக போவார் வருவோர் அனைவரின் கவனத்தையும் திசை திருப்பவே அனைவரும் ஸ்தம்பித்துப் போய் நின்றிருந்தனர். அவ்விடத்தில் நின்ற நிலாவும் யாழினியும் விபத்தைக் கண்டு உறைந்து போய் நின்றிருந்தனர்.

முதலில் சுதாகரித்த யாழினி கூட்டத்தை விலக்கிக் கொண்டு முன்னே போய் நின்றாள். இயல்பிலேயே உதவும் குணம் கொண்ட யாழினி மாயாவின் நிலைகண்டு, இப்புவியை விட்டு செல்ல துடிக்கும் மாயாவின் உயிரை மீட்டு வரப் போராடினாள்.

இயல்பிலேயே இரத்தத்தைக் கண்டு பயம் கொள்ளும் கவிநிலாவும் தைரியம் வரப்பெற்றவளாக அவ்விடத்தை அடைந்து உள்ளே இருப்பது தன் ஆசைநாயகன் நிகிலுடைய உயிர்த்தோழி என்பதைக் கண்டு விரைந்து செயல்பட்டாள்.

கவிநிலா அவளிடம் "யாழினி இவங்க எனக்கு தெரிஞ்சவங்க தான். எப்படியும் அவங்கள காப்பாத்திடனும்" என்று கூறினாள். அவளது கருத்தை ஆமோதித்த யாழினியும் அவ்விடத்தில் நின்றவர்களின் உதவியுடன் மாயாவை வெளியே எடுத்தாள்.மாயாவின் தலையிலிருந்து இரத்தம் ஆறாகப் பெருக்கெடுத்தது. தனது துப்பட்டாவின் உதவியுடன் அவளது தலையை சுற்றி யாழினி கட்டுப்போட கவிநிலா மருத்துவமனையைத் தொடர்பு கொண்டாள்.

அடுத்த ஐந்து நிமிடத்தில் அவ்விடத்திற்கு வந்த அம்பியுலன்ஸின் உதவியுடனும், யாழி மற்றும் நிலா துணையோடும் மாயா மருத்துவமனை அழைத்துச்செல்லப்பட்டாள்.

மாயாவைப் பரிசோதித்த மருத்துவர்கள் அதிக இரத்தம் வெளியேறியிருப்பதாகவும், அவளின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாகவும் கூறிச்சென்றனர்.

மாயாவின் பெற்றோர் செய்த புண்ணியத்தால் யாழினியின் இரத்தம் பொருந்தவே உதவி செய்யும் நோக்குடன் யாழினி தன் இரத்தத்தை மாயாவுக்கு வழங்க உள்ளே சென்றாள்.

எவளின் உயிரைப் பறிக்க மாயா திட்டம் தீட்டினாளோ கடைசியில் அவள் இரத்தமே மாயாவின் உயிரைக் காக்க உதவியது.

வெளியே தனித்து விடப்பட்ட கவிநிலா நிகிலைத் தொடர்பு கொண்டு மாயாவின் நிலை பற்றிக் கூறி அவனை உடனே வர அழைத்தாள்.

மாயாவுடனான கோபத்தைப் பின்தள்ளி தன் காதலியின் வேண்டுகோளுக்கிணங்க மாயாவின் பெற்றோரை அழைத்துக்கொண்டு நிகில் அவ்விடம் நோக்கி விரைந்தான்.

அடுத்தவர்களுக்கு நாம் செய்யும் நன்மைகளின் பிரதிபலிப்பு நமக்கு திரும்ப கிடைக்கும்போது இரண்டு மடங்காக கிடைக்கும். இதுவே நன்மை இல்லாமல் தீமையாக இருக்கும் பட்சத்தில் அதனுடைய பிரதிபலிப்பு பலமடங்கு நமக்கு கிடைக்கும் எனும் பொருளுடைய 'தீதும் நன்றும் பிறர் தர வாரா' எனும் புறநானூறு செய்யுளுக்கேற்ப மாயா தண்டனை பெற்றுக்கொண்டாள்.

தாயின் கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டியதற்கு தண்டனையாக வலது கைமூட்டு விலகியும் மற்றவர்களைக் கொன்று அவர்களின் உயிர் மேல் சிம்மாசனம் போட்டு அமர நினைத்த மாயாவின் கால்கள் இரண்டிலும் என்புமுறிவு ஏற்பட்டிருந்தது.

மாயாவின் பெற்றோருடன் நிகில் மருத்துவமனை வந்து சேர்ந்தான். தாயைக் கண்ட சேய்போல் கவிநிலா நிகிலை தஞ்சமடைந்து மாயாவின் நிலையை விளக்கினாள்.

இரத்தம் கொடுத்து வெளியே வந்த யாழினி கவிநிலா நிகிலை அணைத்திருப்பதை கண்டாலும் அந்நொடியில் எதனையும் கேட்க விரும்பாமல் ஓரமாய் சென்று நின்றுகொண்டாள்.

வெளியே வந்த வைத்தியருள் ஒருவர் "அவங்களுக்கு கால்லையும் கையிலயும் பலத்த அடி. அதனால் என்புமுறிவு ஏற்பட்டுள்ளது. ஆனால் தலையில் ஏற்பட்ட அடியால் அதிக இரத்தம் வெளியேறியிருந்தது. உரிய நேரத்தில் அவர்களை மருத்துவமனைக்கு அழைத்து வந்ததாலும் தேவையான ரத்தத்தை வழங்கியதாலும் உயிருக்கு பாதிப்பில்லை. இருப்பினும் தலையில் அடிபட்டு இருப்பதால் சிறிது நேரம் கழித்து தான் அவர்களின் உடல்நிலை பற்றி சரியான தகவலை கூற முடியும்" என்று கூறினார்.

மாயாவின் நிலையை கேட்டறிந்த பெற்றோரும் மனமுடைந்து நின்றிருந்தனர்.

அதற்கிடையில் வெளியே ஓடிவந்த தாதியரில் ஒருத்தி "மாயாவின் நிலை கவலைக்கிடமாக இருக்கு டாக்டர்" என்று கூறி வைத்தியரை உள்ளே அழைத்துச் சென்றார்.

இதனைக் கேட்ட மாயாவின் தாய் பெருங் குரலெடுத்து அழுதார். " நான் தலைப்பாடா அடைச்சுக்கிட்டேனே. என் பேச்சை அப்பாவும் மகளும் கேட்டீங்களா? இப்ப பாத்தீங்களா? யார் கொடுத்த சாபமோ தெரியல? என் பொண்ணுக்கு இப்படி ஒரு நிலைமை" என கதறி அழுதார்.

அத்தாயின் வேதனையை பொறுக்க முடியாத அம்மு அவரைத் தன் கைகளில் தாங்கிக் கொண்டாள்.

சாதாசிவம் அவ்விடம் வரவே அவரிடம் அத்தாயை ஒப்படைத்த அம்மு வைத்தியசாலையின் சத்திரசிகிச்சைப் பிரிவின் அருகே வைக்கப்பட்டிருந்த பிள்ளையார் சிலையை நோக்கி நடந்து சென்று இறைவனிடம் வேண்டினாள்.

மீண்டும் அவரை நோக்கி நடந்து வந்த யாழினி அத்தாயைத் தேற்றும் முகமாக"அம்மா நீங்க கவலைப்படாதீங்க உங்க பொண்ணுக்கு எதுவும் ஆகாது பழையபடி உங்க பொண்ணு எழுந்து நடப்பா" என்று கூறி தான் எடுத்து வந்த திருநீறை கொடுத்து "இதை வெச்சுவிடுங்கோ எல்லாம் சரியா நடக்கும்" என்றாள்.

சதாசிவம் "இந்த யாழினி பொண்ணு ரொம்ப நல்லவ போல. நாம் இவளுக்கு தீங்கு நினைத்தோம் ஆனால் இவ என் பொண்ணை காப்பாற்ற இப்படி முயற்சி செய்யுறா" என நினைத்துக்கொண்டார்.

அதன்படி யாழினி கொடுத்த திருநீறை வைத்தியரின் அனுமதி பெற்று மாயாவின் நெற்றியில் பூசியதும் மாயாவின் உடல் நிலை தேறியது.

அதைக் கண்டதும் மாயாவின் தாய் அம்முவிடம் "ரொம்ப நன்றிமா உன்னால தான் என் பொண்ணு பிழைச்சா. உனக்கு எப்படி கைமாறு செய்றதுன்னே தெரியல" என்று கூற அம்முவும் அவர்களுடன் உரையாடிவிட்டு அங்கிருந்து வீட்டுக்குப் புறப்பட்டாள்.

"யாழினி நீங்க கவியை வீட்டுக்கு கூட்டிப் போங்க. அவளால ஹாஸ்பிடல் மணம், பிளட் இவைகள் எல்லாம் பார்த்தா ரொம்ப ரெஸ்லசா ஃபீல் பண்ணுவா" என்று கூறி கவிநிலாவை நிகில் வீட்டிற்கு அம்முவுடன் அனுப்பி வைத்தான். அவர்களது அன்னியோன்ய தன்மையே அமுதாவிடம் சொல்லாமல் சொல்லியது அவர்கள் இருவரும் காதலர்கள் என. இருப்பினும் அதை வெளிக்காட்டாதவளாய் அமுதா கவியை அழைத்துக் கொண்டு அங்கிருந்து கிளம்பினாள்.

அமுதா கவிநிலாவை வீட்டிற்கு அனுப்பி வைக்க மதுவர்ஷனை தொடர்பு கொண்டு வைத்தியசாலைக்கு வரும்படி கூற அவனும் அடுத்த 10 நிமிடத்தில் அவ்விடம் வந்து சேர்ந்தான்.

இருவரது உடலிலும் உள்ள இரத்தத்தைக் கண்டு தன்னை பெற்றவராலும் அவரது நண்பராலும் அமுதாவிற்கும் தன் அன்புத் தங்கைக்கும் ஏதேனும் நடந்துவிட்டதோ என ஒரு நொடி பதறிப்போய் அவர்களருகில் விரைந்தான். அவர்கள் இருவருக்கும் ஏதுமில்லை என்றபின்பே அவனது மனம் அமைதியடைந்தது.

பின் அவர்கள் இருவரையும் வீட்டிற்கு அழைத்துவரும்போது தன் அம்மு கூறியதிலிருந்தும் காலையில் முகநூலில் கண்ட செய்தியிலிருந்தும் விபத்துக்குள்ளானவள் தன்னவளைக் கொலைசெய்யத் துணிந்த மாயா என்பதை உணர்ந்துகொண்டு அவளுக்கு இது தேவைதான் என நினைக்காமல் இருக்க முடியவில்லை.

இருப்பினும் எங்கே தன் எண்ணத்தை வெளியே சொன்னால் அம்மு தன்னை தவறாக நினைப்பாளோ என்று எண்ணி தனது எண்ணத்தைத் தனக்குள்ளே புதைத்துக் கொண்டான்.

மாயாவின் நலனுக்காக தான் காலையில் செல்ல முடியாமல் போன கோவிலுக்கு மீண்டும் தான் செல்லப்போவதாக யாழினி கூறியபோது மாலையில் தானே வந்து அழைத்துச் செல்வதாகக் கூறிச் சென்றான்.

அதன்படி வீட்டிற்கு வந்த அம்மு அன்று வெள்ளிக்கிழமை என்பதால் தலைமுழுகிப் பட்டுடுத்தி தயாராகியிருக்க மாலை ஐந்து மணியளவில் அகரனின் வீட்டின் முன்பாக மது தன் வண்டியுடன் நின்றிருந்தான்.

தன்னவளின் தேவி தரிசனத்தில் ஒரு நொடி ஸ்தம்பித்தாலும் அதை வெளியே காட்டாது பெரும் பிரயத்தனப்பட்டான். இருப்பினும் ஏதோவொரு உந்துதலில் "அழகாயிருக்க" முழுநிலவில் சிறுமறுபோல் தன்னவளின் மதிமுகத்தில் அவள் இட்டிருந்த கண்மையை எடுத்து அவள் காதோரத்தில் பொட்டுவைத்தான். தன்னவனின் செயலில் அம்மு வெட்கம் மேலிட நிலத்தினுள் புதைந்துகொண்டாள்.

அடுத்த நொடி அவ்விடம் விட்டு நகர்ந்து வண்டியில் ஏறிக்கொண்டான். எங்கே தன் செயலால் அம்மு கோபமடைந்துவிடுவாளோ எனும் பயத்துடன் வண்டியைச் செலுத்தினான். இருவரையும் ஏற்றிக்கொண்டு வண்டி கோவில் நோக்கி விரைந்தது.

கோவில் வாசலில் வைத்து தன்னவளுக்காக பூ வாங்கிக் கொடுத்து உள்ளே அழைத்துச் சென்றான். தன் அம்மு தன் காதலை சொல்லி விட்டதால் வந்த தைரியமே அனைத்திற்கும் காரணம்.

தன்னவன் தன்மீது எடுத்துக்கொள்ளும் உரிமையான செயல்களை இரசித்தவாறே அம்மு நடந்து சென்றாள்.

தன் விரோதி என்றும் அறியாது மாயாவிற்காக வேண்டும் தன் சகபாதியை ஓரக்கண்ணால் இரசித்தவாறே அம்மு அனைவர் சம்மதத்துடனும் தனக்கு மனையாளாக வரவேண்டும் என கடவுளிடம் விண்ணப்பத்தை வைத்தான் மது.

வீட்டிற்கு வரும்வரை செல்லக்கதைகள் பேசி அம்முவை சிரிக்கவைத்தவாறே அழைத்துவந்தான் மதுவர்ஷன். இந்த இனிமையான பயணம் இன்னும் நீளாதோ என்றிருந்தது இருவருக்கும்.

அகரன் வேலை விட்டு வீட்டுக்கு வரும்போது அவனது தொலைபேசி சிணுங்கியது. அதனை எடுத்துப் பார்க்கவே ஆராதனாவின் படம் தன்னைப் பார்த்து தொலைபேசியில் சிரிப்பதை கண்டு கொண்டான்.

யாழினியுடன் நட்பு பாராட்டி நடித்த போது ஒருநாள் அவளது வீட்டிற்கு வந்த ஆராதனா தனக்குத் தேவைப்படும் என அகரனின் தொலைபேசி எண்ணை தானும் எடுத்துக்கொண்டு தனது எண்ணை அவனது தொலைபேசியிலும் பதித்துவிட்டு சென்றிருந்தாள்.

விடாமல் ஒலித்து ஓய்ந்தது அகரனின் தொலைபேசி. தொலைபேசி தொல்லைபேசியாய் மாறிவிட்டதை உணர்ந்த அகரன் அதனை வெறித்தபடி நின்றிருந்தான்.

தொலைபேசியை உயிர்பிக்காவிட்டால் அவள் தன்னை விடமாட்டாள் என்பதை அறிந்து எரிச்சலுடன் தொலைபேசியை உயிர்ப்பித்தபோது மறுபுறம் ஆராதனாவின் அழுகுரல் கேட்டது.

அதில் பதட்டம் அடைந்தவனாய் என்னாச்சு தனு என பதட்டத்துடன் வினவினான். அதன்போது தான் இன்று தோழி வீட்டிற்கு தனியே சென்றதாகவும் திரும்பி வரும்போது இருட்டிவிட்டதாகவும் தற்போது யாரோ தன்னைப் பின்தொடர்வதாகவும் கூறி அழவே அகரன் அவள் இருக்குமிடம் அறிந்து அவளைக்காக்க விரைந்தான்.

அகரன் அவ்விடம் செல்லும்போது ஆராதனா யாருடனோ சம்டையிட்டுக்கொண்டிருப்பது தெரிந்தது. திருடன் ஒருவன் அவளது மாலையைப் பறிப்பதையும் அதற்காக ஆராதனா போராடுவதையும் கண்டவன் அவ்விடம் விரைந்து அவளைக் காத்தான்.

ஆராதனாவை தன் வண்டியில் ஏற்றி அழைத்துவரும்போதே அவள் எவ்வளவு பயந்துள்ளாள் என்பதை அவளது அணைப்பிலும் அது காட்டிய நடுக்கத்திலும் கண்டுகொண்டான்.

அம்முவை வீட்டில் இறக்கிவிட்டுத் திரும்பும்போது அகரன் ஒரு பெண்ணை ஏற்றி வருவதைக் கண்டான் மதுவர்ஷன். அவர்களின் நெருக்கம் அவன் கண்ணுக்குத் தப்பவில்லை. "ஓஹ் தம்பிப் பாப்பாவுக்கு இன்னொரு பாப்பா கேக்குது போல" என நினைத்துச் சிரித்தவாறே கிளம்பினான் மதுவர்ஷன்.

மறுபுறம் அகரனது மனநிலை ஆராதனாவின் செயலை நினைத்து எரிச்சலுடனேயே இருந்தது.

அதனை அதிகரிக்கும் முகமாக ஆராதனாவை வீட்டில் இறக்கிவிட்டபோது கீழே இறங்கியவள் நன்றிகூறி மீண்டும் அகரனை அணைத்துக்கொண்டாள்.

அதன்போது அவளை எட்ட நிறுத்திய அகரன் " வசந்த்ராஜ் பேலஸில் வசிக்கிற. சொல்லிக்கிற அளவுக்கு பணம் இருக்கு. ஆனா ஒரு சாதாரண செயினுக்கு திருடன் கூட மல்லுக்கு நிக்கிற. இப்ப பார்த்தியா உனக்குத்தான் காயம்" என்று கடிந்தவாறே அவளது கடத்தினோரத்தில் கசிந்து இரத்தத்தை தனது கைகுட்டையால் துடைத்து விட்டான்.

அகரனைப் பார்த்து புன்னகை சிந்திய ஆராதனா தனது செயினை வெளியே எடுத்துக்காட்டி "இந்த மாலைக்காக நான் சண்டை போடல இதுக்காகத்தான்" என்று கூறி அதிலிருந்த மோதிரத்தை காட்டினான். என்றோ ஒருநாள் அகரன் ஆராதனாவிற்காக வாங்கிக் கொடுத்த மோதிரம் அன்று அவனைப் பார்த்து சிரித்தது. அதைக் கண்ட அகரன் அவளின் அன்பின் ஆழத்தைக் கண்டு வியந்துபோய் நின்றிருந்தான்.

30/12/2022
 
Top