• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

விழிகள் - 02

Relay Stories

Vaigai - Avid Readers (Novel Explorer)
Aug 2, 2021
156
186
43
Karur

அத்தியாயம் - 02 (காவ்யா கிருஷ்ணன்)



வெகு நேரம் மேடையின் அருகிலேயே நின்றுக் கொண்டு மீரா வருகிறாளா இல்லையா என்று பார்த்துக் கொண்டிருந்த மாதவனின் தோளை யாரோ தட்ட, திரும்பிப் பார்த்தவனின் கண்கள் சுருங்கியது.



அவன் எதிரே ஆஜானுபாகுவான தோரணையுடன் ஒரு பௌன்சர் எனப்படும், கூட்டத்தைக் கட்டுப்படுத்த வைத்திருக்கும் ஆள், மேடியை ஏற இறங்கப் பார்த்துக் கொண்டிருந்தான்.



அவனின் பார்வையில் தன்னை ஏதோ குறைவாக மதிப்பிடுகிறான் என்று புரிந்துகொண்ட மேடி, முகத்தில் எந்தச் சலனத்தையும் காட்டாது இருக்கத் தன் முகத்தைச் சரி செய்தவன், மீண்டும் பெண்கள் இருவரும் சென்ற திசையைப் பார்க்க ஆரம்பித்தான்.



அவனின் சாதாரணத் தோற்றமும், அதற்கு நேர்மாறான அவனின் திமிர் செயலும் அந்த ஆளை உசுப்பியதோ, “தம்பி. இங்க எதுக்கு நின்னுட்டு இருக்கீங்க? இது வீவீஐபி ரோ, நீங்க அந்தப் பக்கம் போங்க... மாப்பிள்ளைத் தம்பி பார்த்தால் கோச்சிக்கப் போறாரு” என்று நீண்டு இருந்த ஒரு பெரிய வரிசையைக் காட்டினான்.



‘நம்ம பீஸுங்க தர்ற தோரணையப் பார்த்தா கல்யாணமே கனவு தான், இதுல கோச்சிப்பாங்கலாம்ல...’ மனதில் கிண்டலாக நினைத்து, கண்களைச் சுருக்கி துர்கேஷைப் பார்த்துவிட்டு, ‘கோச்சிக்கோ கோச்சிக்கோ’ என்று முனங்கியபடி விடாத கிண்டல் சிரிப்போடு நகர்ந்துவிட, இப்போது அந்த பௌன்சர் தான் குழம்பிப் போனான்.



அங்கிருந்து நேராக ஆதவனைத் தேடி வந்த மேடி, அவன் அந்த மண்டபத்தின் பக்கச் சுவர்களைத் தடவிப் பார்த்துக்கொண்டு இருப்பது தெரிய “என்ன? எப்பவும் கூட்டத்துல இவன் பார்வை எல்லாம் அனுமார் மாதிரி முறைச்சிட்டுத் தானே இருக்கும். இது புதுசா இருக்கேண்ணே, புதுசா இருக்கே...” என வாய்விட்டுப் புலம்பியபடி ஆதவனைக் கண்காணிக்க ஆரம்பித்தான்.



ஆதவன் வெளியாட்கள் பார்வையில் சற்று அமைதியானவன். எந்த வம்பு தும்பிற்கும் போகாத, பழகிய பின் அவனின் கவுன்ட்டர்களில் சிக்கிச் சின்னாபின்னம் ஆகும் ஆட்கள் அதிகம். ‘இவனா டா அவன்’ என்று கேட்கும் அளவிற்கு சைலண்டாகச் சிரிப்பு மூட்டிவிட்டு எதுவும் தெரியாதது போல் நகர்ந்து விடுவான்.



இதனால் பல சமயங்களில் மாட்டிக் கொண்டு முழிப்பது மேடிதான். கூடவே இருக்கும் இவனோ வாய்விட்டு அனைவரையும் வம்பிழுக்கும் பேர்வழி. பல சமயங்களில் ஆதவனிற்கு விழ வேண்டிய அடி யாவும் மாதவனிற்கு விழும். மாதவன் கண்களைக் கவரும் அனைத்தையும் ரசிக்கும் பெரிய மனதுக்காரன்! முக்கியமாக அழகுப் பெண்களை அளவிட்டு ரசிக்கும் ரகம்.



இப்போது ஆதி சுவர்களை அளவிட்டுக் கொண்டு இருக்க, ‘ரைட்டு, நம்ம கம்பி எண்ணப் போறது கன்போர்ம்’ என்று நொந்த மாதவன், அதற்கு மேல் பொறுக்க முடியாது வேகமாகச் சென்று அவனின் பின் தலையில் தட்ட,



“என்டம்மே.” என்று வேண்டுமென்றே மெதுவாக அலறியவன், எதிரில் இருந்தவனை அடிக்கக் கை ஓங்கிட, “ஹேய், ஞானல்ல ஞானல்ல” என்று கைகளைத் தலைக்கு மேல் குவித்து இப்போது மேடி அலற, “ஷிட் நீதானா?” என ஆசுவாசமாகி, அவனின் தலையில் ஒரு போடு போட,



“அவ்வ்வ்வவ்...” என்று முகத்தை அழுவது போல் வைத்த மேடி, “அண்ணாவ்… நீயா அடித்தது, என்னை நீயா அடித்தது” என்று பாட ஆரம்பிக்க,



“டேய் சாவடிக்காத. இப்போ நிறுத்தல, தூக்கிப் போட்டு மிதிப்பேன்” என்று ஆதி மிரட்ட ஆரம்பித்து விட்டான்.



பின் “இருடா” என்று சலித்தவன், மீண்டும் நிமிர்ந்து சுவர்களை வேடிக்கை பார்த்து அங்கிருக்கும் ஜன்னல்களை எண்ண ஆரம்பித்தான்.



“என்ன? என்ன ஆதி, சுவரைத் தடவித் தடவி அப்போ பிடிச்சு என்னடா பார்த்துட்டு இருக்க?” என்று மேடி கேட்க,



“ப்ச் ஒண்ணுமில்லை, இவ்வளவு பெரிய பில்டிங்கா இருக்கே... அதான் எவ்வளோ நாளாய் கட்டிருப்பாங்க? எத்தனை கல்லு வச்சுக் கட்டிருப்பாங்கனு பார்க்குறேன்” என்று கடுப்பாகக் கூறிவிட்டு முறைக்க,



இப்போது மேடிக்குக் குழப்பம். ‘இவன் ஏன் இவ்ளோ டென்சனா இருக்கான்’ என யோசித்தபடியே இருக்க, “ப்ச் தேவையில்லாத வேலை இதெல்லாம். அவளுக்கு ஏன் நாம ஹெல்ப் பண்ணனும். அந்தப் பொண்ணுக்கு வாயில்லையா என்ன?” என ஆதி எரிச்சலாகச் சொல்ல,



“டேய் ஆதி, என்ன சொல்ற? நீதான் இந்தப் ப்ளானை ஆரம்பிச்சது. மறந்துட்டியா? சரியா எக்ஸ்கியூட் பண்ணும் போது பின்வாங்குற..” என மேடியும் எரிச்சலாகச் சொல்ல,



“ம்ம் மீரு கேட்டாளேன்னு தான் சரி சொன்னேன். ஆனா ஏதோ தப்பு செய்யற ஃபீல். தன் பிரச்சினைக்கு யாரோ வந்து உதவி செய்வாங்கன்னு ஏன் எதிர்பார்க்கனும்? அப்போ அந்தப் பொண்ணுக்குக் கொஞ்சமும் சுயமா யோசிக்கத் தெரியாதா? என்னமோ எனக்குச் சரியாப் படல… இந்த லூசுக்காக செஞ்சி, நாமதான் மாட்டப் போறோம்” என ஆதி தொடர்ந்து புலம்ப, மேடிக்கும் அதே சந்தேகம் தான். இவ்வளவு தூரம் வந்த பிறகு பின்வாங்க முடியாதே என ஆண்கள் இருவரும் யோசனையில் இருக்க,



சரியாக அப்போது, “டேய் மங்குனி மச்சாங்களா, சீக்கிரம் வாங்கடா. அங்க எல்லா ஐட்டமும் தீரப் போகுது” என்ற மீராவின் குரல் பின்னிருந்து வர, கொலை வெறியுடன் திரும்பினார்கள் இருவரும்.



தோளில் ஏதோ ஒரு பெரிய மூட்டை போன்ற பேக்கை அணிந்து இருந்தவள், போட்டிருந்த உயர்தர லெஹெங்கா உடைக்கும், அந்த உடை அணிந்திருக்கும் பெரியவள் என்ற தோற்றத்திற்கும், சற்றும் பொருத்தமில்லாது ஒரு கையில், இளம்சிவப்பு மற்றும் மஞ்சள் கலந்த பெரிய பஞ்சு மிட்டாயும், இன்னொரு கையில் மஹா குல்பி எனப்படும் முழங்கை அளவிலான குல்பி குச்சியுமாய் மூன்றையும் பிடிக்க முடியாமல் பிடித்து வைத்துக்கொண்டு, இரண்டில் இது ஒரு வாய் அது ஒரு வாய் என்று இங்கி பிங்கி விளையாடிக் கொண்டே இவர்களை வேறு தலையாட்டி அழைத்துக் கொண்டு இருக்க, அதுவரை இருந்த கோபம் கூட மறைந்தது. கூட வளர்ந்தவர்களின் முகத்தில் அப்படியே ஒரு புன்னகையும் மலர்ந்தது.



அருகே சென்ற ஆதி அவள் கையில் இருந்து லாவகமாக ஒரு குல்பி குச்சியைப் பிடுங்கிக் கொள்ள, மேடி ஒன்றைப் பிடுங்கிக் கொண்டு கூடவே அவள் தோளில் இருந்த பையையும் வாங்கிக் கொள்ள,



சிரித்தபடி விட்டுக் கொடுத்தாலும், “ஏய் மேடி, அது நான் வாய் வைச்சது, இது தான் உனக்கு” என்று கூற,



“என்ன?” என்றான் அவள் கண்களை ஊடுருவியபடி, அதில் சிவந்தவள் வெட்கம் என்ற பெயரில் முகத்தை அஷ்டகோணலாக மாற்ற, அதை ரசிக்கும் நிலைக்கு ஆளான மேடி முழிக்க, இவற்றை சகிக்கும் நிலைக்கு ஆளான ஆதியோ, “ஆரம்பிச்சிட்டாய்ங்கயா ஆரம்பிச்சிட்டாய்ங்கயா” என்று அலறியபடி மீராவின் முதுகிலேயே, மாதவனிற்குத் தெரியாமல் ஒரு அடியைப் போட்டவன் “வந்து தொலைங்க” என முன்னே நடந்தான்.



“ஸ்... அம்மா…” என்றவள் அவளும், ஆதி இல்லையென்றதும் “என்னடா” என அவனுக்குக் கேட்டு விடாதபடி மேடியிடம் எகிற ஆரம்பித்தாள்.



“எரும எரும… கருமமே கண்ணா போய் வேலைய முடிச்சிட்டு வான்னு அனுப்பினா, என்னடி பண்ணிட்டு வந்திருக்க? கலர் கலரா தின்னுட்டே வர... என்ன ஆச்சு ப்ளான் ஓகேவா?” என்று கேட்க,



“அதெல்லாம் இந்த மீரா போனா வேலையாகாமல் இருக்குமா என்ன? எல்லாம் சக்சஸ் தான்” எனத் தலையைச் சிலுப்பிக் கொண்டாள் பெண்.



“அது சரி, எல்லாம் அவனுக்குத் தெரியுற வரை தான் பேபி உன் கெத்து எல்லாம்” என்று சீண்டிய மேடியை,



“எல்லாம் தெரியும்டா வெண்ணைகளா... வந்து சேருங்க, கொட்டிக்கிட்டு உங்க கொட்டம் அடிப்பிங்களாம்” என்று எப்போதும் போல் அமைதியாக இருந்து கொண்டே அனைத்தும் அறிந்து கொண்டு போகிற போக்கில் அவர்களை டேமேஜ் செய்த ஆதியின் குரலில் ஜெர்க் ஆகியவர்கள், பின் ‘ஈ’ என்று இளித்துக் கொண்டு அவன் பின் ஓடினார்கள்.



மறுநாள் காலை, கமலி கண்களில் வழியும் கண்ணீரோடு, இன்னமும் தன்னைக் காப்பாற்ற வராத தன் தோழியை எண்ணி நொந்தபடி தவித்துக் கொண்டு இருந்தாள், அவளுக்கென ஒதுக்கப்பட்ட அறையில்.



தன்னைக் காலையில் வந்து பார்ப்பதாகவும் காப்பாற்றுவதாகவும் உறுதி கொடுத்த தங்கத் தோழி, தகரத் தோழியைக் காணாமல் அவள் கலங்கிக் கொண்டு இருக்க, உறவுக்காரப் பெண்மணிகள் அவளை அழைத்துச் செல்லவும் வந்து விட்டனர்.



அழகுநிலையப் பெண் இறுதியாக ஒருமுறை அவளின் முகத்தைச் சரி செய்து அனுப்பிவிட, அனைத்தையும் கலைத்துப் போட்டுவிட்டு ஓடும் வெறியே கிளர்ந்தது கமலிக்குள்.



மேடையில் சென்று அமர வைக்கப்பட்டவள், ‘அவ்வளவு தான் வாழ்க்கையே போச்சு... எதையும் யோசிக்காம கல்யாணத்துக்குச் சரின்னு சொன்னது எதுக்கு? இந்தத் துரு புடிச்ச இயந்திர வாழ்க்கை வேண்டாம்னு தானே? திரும்ப அதே குழில தள்ளிவிடப் பார்க்குறாங்களே... அம்மா... நீ ஏன் இல்லாமல் போன?’ எப்போதும் எழும் கேள்வி இன்று மிக மிக பூதாகரமாக அவளுள் எழும்ப அவளையும் மீறித் தொண்டையை அடைத்துக் கொண்டு தேம்பல் வெளிப்பட்ட அதே நொடி,



“என்னது? மாப்பிள்ளையைக் காணோமா...” என்ற ஒருவரின் உரத்த குரல், அந்தப் பெரும் கூட்டத்தையும் மீறி வெளிப்பட, தீயாய் அந்த வரி அங்கு பரவ ஆரம்பித்தது.



அதில் ஆனந்த அதிர்ச்சியோடு நிமிர்ந்தவளுக்குக் கண்களில் வழிந்த கண்ணீர் கூடச் சட்டென நின்று போனது. ‘மிரு... சொன்னதைச் செஞ்சிட்டடி... தேங்க்ஸ்டி…’ என்று தனக்குள்ளே முணுமுணுத்துக் கொண்டாள்.



அதே நேரம், நேற்று ஆதவன் தடவிக் கொண்டு இருந்த சுவரின் இறுதியில் இருந்த சறுக்கும் படியில், பெரிய மூட்டை போல் ஒன்றைக் கட்டி உருட்டிவிட்டுக் கொண்டு இருந்தனர் ஆதியும் மேடியும்.



“தின்னு தின்னு... ஹூம், குடிச்சிக் குடிச்சி குண்டோதரன் ஆன கதை இவன வைச்சு தான் எழுதணும் போல. அப்பா.... என்ன கணம்? உருட்டவே உசுரு போகுதே, தூக்கினால் தொங்கிடுவன் போலயே...” எனப் புலம்பியபடி நிமிர்ந்தான் மேடி.



“அடங்குடா, மீராவ அனுப்பினியா இல்லையா?” என்று கேட்ட ஆதவனை முறைத்த மற்றவன், “எல்லாம் ஆச்சு ஆச்சு...” என்று கூறிவிட்டு, “ம்ம்... வண்டியைப் பின் பக்கமா சுத்தி தான் எடுத்துட்டு வரணும், நீ போறியா நான் போகவா?” என்று கேட்க,



“எதே... நான் எல்லாம் இங்க தேவுடு காக்க முடியாது. நான் போய் வண்டியை எடுக்குறேன், நீ இங்க நில்லு” என்றுவிட்டுச் சாவியைப் பிடுங்கிக் கொண்டு நகர்ந்தான் ஆதவன்.



பின்னே, கண்ணைக் காட்டினால் போதும். கையை நீட்டினால் போதும். சிட்டாகப் பறந்து வருவேன் என்று கூறிய மணப்பெண்ணை விட்டுவிட்டு, இந்தத் தடிமாடு தாண்டவரையனைத் தூக்க வைத்த பெருமை மாதவனையே சேரும் என்பதால் ஆதவனின் கோபம் தன் தமயனின் மேல் திரும்பியது.



‘அல்வா துண்டு மாதிரி முடிக்கிற வேலையைச் சுத்தி வளைச்சு மூக்கத் தொட வைக்கிறானே...’ என்று புலம்பியபடி நகர்ந்தான்.



இரவெல்லாம் அமைதியாக இருந்த மாதவன், சரியாக விடியலில் இவர்கள் சென்று கமலியை அழைத்து வரக் கிளம்பிய போது சரியாக முட்டுக்கட்டை போட, “என்னடா?” என்று பதட்டமாகக் கேட்டவர்களிடம்,



“இப்போ நீங்க போய் பொண்ணைத் தூக்கினா இருக்கிற கூட்டத்துக்கும், அவங்க பலத்துக்கும் ஈஸியா நம்மைப் பிடிச்சிடுவாங்க. அதனால…”



“அதுக்காகலாம் ஒரு பொண்ணை பச்சை மண்ணை, அம்போன்னு விட்டுவிட்டுப் போக முடியுமா?” என மீரா முந்திக்கொண்டு பரிந்து வர,



அவளை அல்ப்பமாகப் பார்த்த மாதவன், பின் கண்டு கொள்ளாது, “அதில்லை, நம்ம ஏன் பொண்ணை விட்டுட்டு மாப்பிள்ளையைத் தூக்கக் கூடாது?” என்று சாதுவாகக் கேட்டான்.



‘எத, மாப்பிள்ளையையா?’ குழப்பமும் பயமுமாகப் பார்த்தனர் இருவரும்.



“ச்சீ, மாப்பிள்ளையை இப்போ தான் கவனிச்சிட்டு வரேன். அவனோட எக்ஸோட ரொமான்ஸ் பண்ணிட்டுத் தண்ணியப் போட்டுட்டு இருக்கான். எப்படியும் இன்னும் அரை மணி நேரம் தாங்க மாட்டான். அவனைத் தூக்குறதும் ஈசி. அவன் கூட இருக்க பீஸுங்களும் மட்டையாகி தான் இருக்குதுங்க... சோ... இவனைத் தூக்கிக் குழப்பம் பண்ணி, அந்தக் குழம்பின குட்டையில் பொண்ணையும் கூட்டிட்டு எஸ்கேப் ஆகிறது ஈஸி” என்று விம் போட்டு மேடி விளக்க,



அவனை எக்கி அணைத்த மீரா, “தெய்வமே... தெய்வமே...” என்று பாட ஆரம்பித்தாள்.



“அடச்சீ நிறுத்து... இப்போ இது ரொம்ப முக்கியம்? எதையோ ஒண்ணுத்தை பண்ணுவோம். இல்லனா ரெண்டும் சேர்ந்து கல்யாணத்தை முடிச்சி ஹனிமூனே போயிடுவாய்ங்க...” என்று அதட்டிய மேடி, இருவரையும் அழைத்துக் கொண்டு தங்கள் திட்டத்தில் சிலதை மாற்றி அமைத்து நினைத்தபடி நடத்த ஆரம்பித்தனர்.



மூட்டையில் இருந்த துர்கேஷின் நிலை சற்றுத் தெளிய ஆரம்பிக்க, அதிலேயே எம்பி எம்பிக் குதிக்க ஆரம்பித்தான் துர்கேஷ்.



மண்டபத்தினுள்ளே கலவரம் வெடிக்க ஆரம்பித்தது. இருபக்கமும் ஆள் பலமும் சரி, அடிதடியும் சரி அதிகம் தான். எனவே, ஆளுக்கு ஒரு பக்கம் அடித்துக் கொள்ள ஆரம்பிக்க, நடுவில் முழித்துக் கொண்டு நின்ற கமலியைப் பிடித்து இழுத்தாள், மீரா.



“ஆ...” என்று அலறியபடி திரும்பியவளின் முகத்திற்கு நேரே தன் முகத்தைக் காட்டி முறைத்த மீரா, “உனக்கு மைக் தரவாடி... கத்தாத பிசாசே. சத்தம் போடாம அதோ அங்க இருக்கு பாரு. அந்த ரூம்க்கு வந்து சேரு.” என்று தலையில் அடித்தபடி நகர்ந்துவிட, சுற்றத்தை முழித்துப் பார்த்த கமலி மீரா கூறியது போல் நழுவிச் சென்றாள்.



அறைக்குள் வந்தவளுக்கு ஒரு உடையைக் கொடுத்த மீரா, “சீக்கிரம் இதை மாத்திட்டு வா… உனக்கு ரெண்டு நிமிஷம் தான் டைம்.” என்று கூற,



அவள் கொடுத்த உடையை வாங்கியவள், வேகமாகத் தன் மணப்பெண் தோற்றத்தைக் கலைத்து, தோழி கொடுத்த உடையை மாற்றிக் கொண்டு வெளியே வர, அவளின் தோள் வரையே ஆன லேயர் கட் முடியைக் கட்டிய மீரா, தன் கையில் இருந்த விக்கை அவள் தலையில் மாட்டி வெளியே அழைத்து வந்தாள்.



"இந்த கெட் அப்ல உன்னை யாரும் கண்டு பிடிக்க முடியாது தான். இருந்தாலும் தலையக் குனிஞ்சிட்டே வேகமா என் பின்னாடியே ஓடி வந்துடுடி" என்று பதட்டமாகக் கூறிய மீரா விடுவிடுவென்று நடக்க ஆரம்பித்தாள். கூட்டத்தில் இருவரும் நழுவி பக்கவாட்டில் இருந்த அந்தச் சறுக்கு படியில் இறங்கி மாதவனை நெருங்கினர்.



அதே நேரம் ஆதவனும் வண்டியை எடுத்துக் கொண்டு வந்து நிறுத்த, வேகமாகப் பெண்கள் இருவரும் அதில் போய் ஏறிக் கொள்ள, ஆதவனும் மாதவனும் துர்கேஷ் இருந்த மூட்டையை நகற்றி ஒரு மரத்திற்குப் பின் வைத்தனர்.



"டேய்... என்னடா பண்ணுறீங்க இங்க" என்ற ஒரு கட்டைக் குரல் அவர்கள் அத்தனை பேரின் மூச்சையும் ஒரு நொடி நிறுத்தியது. சட்டெனக் கமலியின் தலையைப் பிடித்து வண்டிக்குள் அழுத்திவிட்டு பயத்தோடு வெளியே பார்த்தாள், மீரா.

 

Sampavi

Vaigai - Avid Readers (Novel Explorer)
Mar 21, 2022
251
158
43
Theni
Nice going