• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

விழிகள் - 03

Relay Stories

Vaigai - Avid Readers (Novel Explorer)
Aug 2, 2021
156
186
43
Karur

அத்தியாயம் - 03 (சமித்ரா)



காரிலிருந்து எட்டிப் பார்த்த மீரா “ஹேய், தீவட்டித் தலையா, அங்க பாரு, உன் பாஸ் சாக்கு மூட்டையில இருக்கான்" என்று கத்தியவளின் வாயை இறுக்க மூடி அவளையும் காரினுள் அழுத்தினான் மேடி.



பின்னால் என்ன சத்தம் இது? என்று கேட்டுத் திரும்பிப் பார்த்தவர்கள் காரிலிருந்த மீராவின் கத்தலில் அங்கு ஓடிவர, “இவளை வச்சு ஒரு ஆளைக் கடத்த முடியுதா" என்று மாதவனிடம் கடுப்பில் சொன்ன ஆதவன், காரை வேகமாக ரிவர்ஸ் எடுத்துப் பின் அதே வேகமாக முன்னோக்கிச் சென்றபடியே “இவனுங்ககிட்ட மட்டும் மாட்டினோம், இன்னிக்கு டிபனுக்குச் சட்னி தான்" என்றபடியே காரை மேலும் வேகம் எடுத்தான் ஆதி.



அதே வேகத்துடன் திரும்பி “ஏய் குட்டச்சி, நீயே கத்தி ஊரைக் கூட்டிருவ போல, அவனே சோத்து மூட்டையைப் போல தின்னு தின்னு பொதி மாடு போல வெய்ட்டா இருக்கான். அவனைச் சாக்கு மூட்டையிலே கட்டித் தூக்கிட்டு வர்றதுக்குள்ள எனக்குச் சாப்பிட்டது எல்லாம் ஆவியாகிப் போச்சு." என்று மீராவிடம் கத்திய ஆதி,



"டேய், எல்லாம் உன்னால தான். ஐடியா தரானாம் ஐடியா, ராத்திரியே பொண்ணைத் தூக்கினமா, காரில் பறந்தோமான்னு இருந்திருக்கலாம். உன் பேச்சைக் கேட்டு அந்தத் தடிமாடைக் கடத்துறதுக்குள்ள போதும் போதும்னு ஆச்சு, இதுல வேற அவன் எலி மாதிரிப் பிராண்டி கீச் கீச்னு கத்திக் கூப்பாடு போடறான்.” என்று மாதவனிடமும் கத்தினான் ஆதி.



"ஹேய் ப்ரோ கூல் கூல்… எதுக்கு இந்தளவுக்கு டென்ஷன். ப்ரீயா விடுடா. உனக்கு ஆதவன்னு பேர் வச்சா, இப்படி பேச்சாலே சுட்டெரிக்கக் கூடாது.” என்று சிறு சிரிப்புடன் மேடி கிண்டலடிக்க,



அதுவரை பின்னால் வாயை இறுக்கிய கமலியின் கையை விலக்கிய மீரா, "லூசுப் பசங்களா, ஒரு காரியத்தைச் செய்யச் சொன்னால் அதைச் சரியா செய்யாமல், என்னை ராத்திரியும் சாப்பிட விடாம, காலையிலும் சாப்பிட விடாமல் டென்சன் பண்ணிட்டு, இரண்டு பேரும் சண்டையா போடுறீங்க, இவ எனக்காக கல்யாணத்தில் எனக்குப் பிடிச்ச ஐயிட்டங்களா டிபன்ல மெனு சொல்லிருந்தா தெரியுமா?” என்று கடுப்பில் எகிறினாள் மீரா.



"ஏய் குட்டிச்சாத்தான், இப்படியே திங்கிறதுலயே இருடி, உன் ப்ரண்டக் காப்பாத்த வந்தியா, திங்க வந்தியா” என்றவன்,



"ஏம்மா லோட்டஸ், இப்படி ஒரு ப்ரண்ட நம்பிக் கல்யாணத்தில இருந்து தப்பிக்க நினைச்சியே சோ சேடு” என்று பரிதாபமாக, கிண்டலாக கமலியிடம் கேட்டான் மேடி.



"அ..அ..அது…” என்று திக்கித் திணறியவள், "மீரா எனக்காக என்ன வேணா செய்வா, ஷீ இஸ் மை குட் ப்ரண்ட்." என்று சொல்ல,



"அப்படி சொல்லுடி, என் தங்கக் குட்டி” என்று கமலியைக் கொஞ்சிய மீரா, மற்ற இருவரையும் பார்த்து தன் காலர் இல்லாத பட்டுச் சுரிதாரின் கழுத்துப் பட்டியைக் கெத்தாக இழுத்து விட்டாள்.



மீராவின் சின்னப் பிள்ளை செய்கையைக் கண்டு மேடி சிரிக்க, ஆதியோ "அவள் எது செய்தாலும் ஈன்னு பல்லைக் காட்டு, அவளுக்குக் குளுகுளுனு இருக்கும்.” என்று மேடியிடம் காய்ந்தவனை, "டேய், பின்னால் அந்தப் பவுன்சர் கூட்டம் துரத்திக்கிட்டு வருவதற்குள் நாம் வேகமாக எஸ்கேப் ஆகணும். அதை விட்டுட்டு அவளிடம் வம்பிழுத்துட்டு, எங்கயாவது வண்டியைக் கொண்டு இடிச்சிடாதே" என்று மேடியும் பதிலுக்குக் காய, அவனை முறைத்த ஆதவன் வாய்க்குள்ளே கெட்ட வார்த்தைகளில் முணுமுணுத்தான்.



காரினுள் ஒருவரை ஒருவர் கிண்டலும், கேலியும், நக்கலுமாகப் பேசிக் கொண்டே வர, கமலியோ வயிற்றில் ஒரு கையை வைத்துக் கொண்டே மீராவின் கையைச் சுரண்டி “ஏய், எனக்கு ரொம்பப் பசிக்குதுடி, உன் மச்சானை எதாவது ஹோட்டல் பார்த்தா நிப்பாட்டச் சொல்லேன்." என்று மெதுவான குரலில் முணுமுணுக்க பாவமாகப் பார்த்தாள் மீரா.



அவளின் பசிக் குரலைக் கேட்ட மீராவுக்குப் பாவமாகப் போயிற்று. அதோடு இப்போது ஆதியிடம் பேசினால் கடித்துக் குதறி விடுவான் என்று தெரியும். ஆனாலும் அவள் கேட்டதைச் செய்ய வேண்டும் என்று உள்மனம் கூப்பாடு போட்டது.



அதோடு கமலி கோடீஸ்வரரின் ஒரே பெண். சாப்பாட்டை அடுத்தவர்களிடம் கேட்க வைத்த அவளின் தாத்தா அப்பாவின் மேல் கோபம் கொப்பளித்தாலும், ‘என்றாவது ஒருநாள் அவர்களைத் தனியறையில் அடைச்சு வைச்சு நாலு நாளைக்குச் சோறு தண்ணி கொடுக்காமல் இருக்க வைக்கணும்’ என்று மனதிற்குள் திட்டிக் கொண்டாள் கடுப்பாக.



பின் காரின் முன் அமர்ந்திருந்த மாதவனைப் பார்த்துக் கெஞ்சும் குரலில் “மேடி பசிக்குதுடா, எங்கயாவது ஹோட்டல் இருந்தால் நிறுத்துடா, கமலிக்கும் பசிக்குதாம்.” என்று அவளையும் சேர்த்துக் கொண்டாள் மீரா.



“ஓக்கே, நல்ல ஹோட்டலாப் பார்த்து நிறுத்துறேன்… நல்லா திருப்தியாய் சாப்பிடுங்க. வேணும்னா ரெஸ்ட்டும் எடுங்க. பின்னாலயே அந்தப் பலூனோட ஆட்கள் வந்து கோழி அமுக்குற மாதிரி அமுக்கித் தூக்கிட்டுப் போகட்டும்” என்று ஆதவன் எரிச்சலாகச் சொல்ல, அதைக்கேட்டு கமலியின் முகம் சிறுத்துப் போயிற்று.



அதைப் பார்த்த மாதவனுக்கு என்னவோ போல ஆக, மீராவோ “டேய் அத்தான், ஓவராப் பேசாதே, நாங்க தான் பசி தாங்க மாட்டோம்னு தெரியாதா உனக்கு. சும்மா கிண்டல் பண்ணிக்கிட்டு இருக்க” என்று எட்டி ஆதவன் தலையில் கொட்டினாள் மீரா.



“மீரு, நேத்து தானே கார்ல வச்சு எந்தச் சேட்டையும் செய்யக் கூடாதுன்னு ஆதி சொன்னான். அடங்கவே மாட்டியா? இப்ப என்ன பசிக்குது அவ்வளவு தானே, விடு ஹோட்டல் வந்தால் நிறுத்தச் சொல்றேன்.” என மேடி மீராவைக் கண்டிக்க, இப்போது மீராவின் முகம் சுண்டிப் போனது.



பின்னால் அமர்ந்திருந்த இரு பெண்களின் முகமும் சுருங்கி இருப்பதைக் கண்ட ஆதவனுக்கு மனம் இலகினாலும், காரை எங்கேயும் நிறுத்தவில்லை.



விளையாட்டுத் தனமாக இந்தக் கடத்தலைச் செய்திருந்தாலும், அதில் இருக்கும் சாதக பாதகங்களை உணராமல் காலை எடுத்து வைக்கவில்லை ஆதி. அதனால்தான் இவர்களைக் கண்டித்துக் கொண்டே வந்தான். முதலில் இவளைக் கொண்டு போய் வீட்டில் சேர்க்க வேண்டும். அதற்குப் பிறகே மத்த ஐடியாவை யோசிக்க வேண்டும் என்ற எண்ணிக் கொண்டே பயணத்தைத் தொடர்ந்தான் ஆதி.



மண்டபத்தில் சாக்கு மூட்டையைச் சுற்றி பவுன்சர்கள் மட்டும் அல்லாமல் கமலியின் தாத்தா, அப்பா உறவுகள் எனக் கூட்டமாக நின்றிருக்க, சாக்குப் பையிலிருந்த துர்கேஷ் தன் வாயிலிருந்த பிளாஸ்டரைப் பிய்க்க முடியாமல் திணறியபடி, குதித்துக் குதித்து எம்ப அதைக் கண்ட மற்றவர்கள், “அச்சோ, இதுக்குள்ளே என்ன இருக்குன்னு தெரியலேயே… இப்படி மூட்டை குதிச்சு ஆடிக்கிட்டு இருக்கு” என்று பவுன்சரில் ஒருவன் அருகில் நின்றவனிடம் சொல்ல,



அவனோ “எதுக்கும் போலீஸிலிருந்து ஆளை வரச் சொல்லலாமா? எதும் பாம் மாதிரி வைச்சிருந்தால் நமக்குத் தெரியாமல் வெடிச்சிருச்சுனா, நாம் எல்லாரும் பரலோகத்திலே தான் சந்திக்கணும்” என்று மற்றவனின் காதைக் கடித்தான்.



“டேய், எல்லாரும் இப்படி நின்னுக்கிட்டே இருக்கீங்களே, அதில் என்ன இருக்குனு சாக்கை அவுத்துப் பாருங்க டா” என்று கமலியின் அப்பா ராஜராஜன் சொல்ல,



“சார் அதுல பாம் எதுவும் இருந்தா என்ன பண்றது” என்று பவுன்சர் கேட்க,



“டேய், கார்ல ஒரு பெண் உன்னை ஏமாத்திட்டுப் போயிட்டா. அவள் காரைத் துரத்திப் பிடிக்கணும்னு தோணல… உங்களை எல்லாம் நம்பி மாப்பிள்ளையை விட்டா, அவரையும் தொலைச்சிட்டு இப்ப சாக்கில் என்ன இருக்குன்னு பார்க்க பயந்துகிட்டு இருக்கீங்க. நீங்க எல்லாம் என்னடா பவுன்சர் சர்விஸ். உங்க சர்வீஸ் மேனேஜரை உடனே வரச்சொல்லு,” என்று அவனிடம் கோபப்பட்டார் ராஜராஜன்.



"சார் அவசரப்படாதீங்க, போலீஸ் வந்திரட்டும்” என்று மற்றொரு பவுன்சர் சொல்ல,



“வாட்? அவங்க வர்ற வரைக்கும் இப்படியே மூட்டையைப் பார்த்துட்டு இருக்கச் சொல்றியா” என்றவர் கடுப்பாகி, “போய் அதை அவுத்துப் பாருங்கடா” என்று கத்தவே ஆரம்பித்து விட்டார்.



கூட்டத்தில் ஒருவன் மட்டும் பம்மியபடியே சாக்கு மூட்டையைக் கைகள் நடுங்க மெதுவாக அவுக்க, அதில் இருந்த துர்கேஷ் “ம்ம்ம்', ஹ்ம்ம்” எனத் திணறியபடியே வெளியில் வருவதைக் கண்டு, “ஐயோ, பாஸ் நீங்களா” என்று அவனின் வாயில் ஒட்டியிருந்த பிளாஸ்டரை எடுத்து விட, “அச்சோ மாப்பிள்ளை, நீங்களா?” என்று அங்கிருந்த மற்றவர்களும் அதிர்ச்சியில் சத்தமிட்டார்கள்.



அருகில் நின்றிருந்த பவுன்சரிடம் “தூக்கி நிறுத்துடா” என்று கத்த முடியாமல் சைகையில் சொல்ல, அவனின் கைகளைப் பிடித்துத் தூக்கி நிறுத்தவும் பவுன்சர் மூக்கிலே ஒரு குத்துக் குத்தினான் துர்கேஷ்.



“ஏன்டா நாயே, இரண்டு பேர் என்னைச் சாக்குல தூக்கிக் கட்டும் வரை பார்த்துட்டு இருந்தீங்களா” என்று கோபத்துடன் காட்டுக் கத்தல் கத்தவும்,



‘இவன்கிட்டே வேலை செய்யறதுக்கு என் மூக்கு உடைந்தது தான் மிச்சம்’ என்று முணுமுணுத்துவன், “சார், நீங்க தானே நைட் பிரண்ட்ஸ் கூட பேச்சுலர்ஸ் பார்ட்டி இருக்கு… யாருக்கும் தெரியக் கூடாது, நீங்களும் வர வேண்டாம்னு சொன்னீங்க” என்றவனை மீண்டும் ஒரு குத்து விட்டான் துர்கேஷ்.



“டேய் வாயை மூடு” என்று சுற்றிலும் பார்க்க அங்கே கமலியின் தாத்தா அப்பா மற்றும் உறவுகள் நிற்பதைப் பார்த்தவன் பவுன்சரைப் பார்த்து முறைத்தான்.



“இவங்களுக்கு முன்னாடி என் மானத்தை வாங்கிட்ட இல்ல, இதுக்கு எல்லாம் உன்னைத் தனியா கவனிச்சுக்கிறேன்” என்று சினத்துடன் கூறியபடி ராஜராஜன் அருகே போன துர்கேஷ், "மாமா, நைட் யாரோ என்னைக் கடத்தி கட்டி வச்சுட்டாங்க" என்று ஒன்றும் தெரியாத சின்னப்பிள்ளை போலக் கூறிவனின் நயவஞ்சகத்தை அறியாமல்,



"யார் மாப்பிள்ளை அது… உங்க எதிரிங்க யாரும் இந்த வேலையைக் காட்டிட்டாங்களா? உங்களுக்கு அடையாளம் தெரியுமா கடத்தினவங்கள?” என்று கேட்டவர், "நீங்க மண்டபத்திலிருந்து எங்கே போனீங்க? அவனுக என்னமோ சொல்றாங்களே" என்று யோசனையாகக் கேட்க,



அவனோ முதலில் அதிர்ந்து பின் அசடு வழிந்தபடி "பிரண்ட்ஸ் எல்லாரும் பார்ட்டி கேட்டாங்க மாமா, அவாய்ட் பண்ண முடியல” என்றவன், "அவங்க தான் பார்ட்டி செலபரேட் செஞ்சாங்க மாமா, நான் ஜஸ்ட் வேடிக்கை மட்டும் தான்" என்று கூறிய துர்கேஷ் மேல் வாடை அடிப்பதைக் கண்டு, முகம் சுழிக்க ஒரு அடி தள்ளி நின்ற ராஜராஜன் தன் மாமனாரைப் பார்க்க, அவரோ துர்கேஷை முறைத்துவிட்டு "போய் ரெடி ஆகுங்க மாப்பிள்ளை" என்று சொல்ல, ராஜராஜன் திகைத்து தன் மாமனார் ராதா கிருஷ்ணனைப் பார்த்தார்.



அப்போது மண்டபத்தின் உள்ளிருந்து வேகமாக வந்த ஒரு பெண்மணி, "பொண்ணையும் காணாம்” என்று சத்தமிட, எல்லோரும் அதிர்ந்து போய் ஒருவரை ஒருவர் முகத்தைப் பார்த்து "என்னது?" என்ற கேள்விக் கணையோடு நின்றனர்.



இங்கு காரில் போய் கொண்டிருந்தவர்களில் "மீரா, இந்த விக் ரொம்பவும் அன்கம்பர்டபிளா இருக்குடி" என்று கமலி சொல்ல,



"ம்ம்” என்றவள் காரிலேயே விக்கைக் கழற்றிவிட, அதில் சற்றே ஆசுவாசமாகித் தன்னுடைய குட்டை முடியைக் கையாலேயே சரி பண்ணிக் கொண்டே, “இன்னுமா ஹோட்டல் வரல” என்று மீராவைப் பார்த்துக் கேட்டதும், அவளோ ஆதவனைக் கை காண்பிக்க, கப்சிப் என்றாகிப் போனாள் கமலி.



ஆதவனோ எதையும் கண்டு கொள்ளவில்லை. அவனுக்கு எங்கேயும் காரை நிறுத்திட எண்ணமில்லை. ஏதாவது பிரச்சனையில் திரும்ப மாட்டினால், நானும் மேடியும் என்றால் பிரச்சினை இல்லை. பெண்களை வைத்து ரிஸ்க் எடுக்க விரும்பாமல், வண்டியின் வேகத்தை அதிகப் படுத்தினான் ஆதவன். மாதவனோ ஆதியை பார்க்க “நேராக வீட்டிற்கே போய் விடலாம்” மெல்லிய குரலில் சொல்லியவனிடம் தலையை ஆட்டினான் மாதவன்.



அவன் நிறுத்தாமல் காரை ஓட்டுவதைக் கண்டு, மாதவனிடம் மெல்லிய குரலில் பேசியதைக் காதில் வாங்கிய கமலிக்கு, ஆதவனின் மேல் நல் எண்ணம் உருவானது. அதை மீராவிடம் சொல்லாமல் மறைத்தவள் அவளிடம் வேறு பேச்சைத் தொடங்கவும் ஆண்கள் இருவரும் அமைதியாக வந்தனர்.



மாதவனுக்கோ கமலியை வீட்டிற்குக் கூட்டிப் போனால் அப்பத்தா என்ன சொல்லப் போகிறாரோ என்று நினைக்க, ஆதவனுக்கோ அப்படி ஒரு எண்ணமே இல்லை. அவள் வீட்டின் சூழல் சரியானதும், அப்பத்தாவை வைத்துப் பேசி திரும்ப அனுப்பி விடும் எண்ணம்தான்.



இதைப்பற்றி எல்லாம் கவலை இல்லாத மீரா தன் அத்தானுங்களைப் பற்றியும், சிறுவயதில் இருந்து அவர்களது சேட்டையையும் பற்றிப் பேச, கமலியின் மனமோ தனக்கு மட்டும் ஏன் இப்படி ஒரு குடும்பத்தில் பிறக்கக் கொடுத்து வைக்கவில்லை என்று மனம் ஏங்கத் தொடங்கியது.



ஆளுக்கொரு மனநிலையில் இருக்க, கார் அவர்களின் வீட்டின் போர்ட்டிகோவில் நிற்க, அதிலிருந்து இறங்கிய நால்வரைப் பார்த்த அலமேலு, “ஏன்டா, இதென்ன இந்தப் பொண்ணு சோளக்காட்டுப் பொம்மை மாதிரி இருக்கு, எங்கிருந்து இவளைக் கூட்டிட்டு வந்தே” என்று ஆதவனை அலமேலு கேட்க,



அதைக் கேட்ட ஆதவனோ “அப்பத்தா, என்னைப் பார்த்தா உனக்கு எப்படித் தெரியுது” என்றவன், ''அது உன்ற பேத்தியின் பிரண்டு... கண்ணாடி போட்டுமா உனக்குக் கண்ணு தெரியல” என்று கிண்டலடிக்க,



மீராவோ “என்ன அம்மத்தா, இது யாருன்னு தெரியலயா? நம்ம கமலி தான், என் ப்ரண்ட்...” என்று சொல்லிப் பல்லைக் காட்ட, “உன்னை அப்புறம் கவனிச்சிக்கிறேன்டி” என்றவர், “சீக்கிரம் கை கால் அலம்பிட்டு வாங்க, சாப்பிடலாம்…” எனக் கமலியின் முடியை, தன் கையில் பிடித்து பூவிற்கு முழம் அளப்பது போல் அளந்து பார்க்க, அதில் கமலி நெளிய ஆண்கள் இருவரும் நமுட்டுச் சிரிப்புடன் திரும்பிவிட,



“அம்மத்தா...” எனப் பல்லைக் கடித்தாள் மீரா.



“நீ வாடி...” என அவரிடமிருந்து கமலியை இழுத்துக் கொண்டு அறைக்குள் நுழைந்துவிட, “ஏன்டா நான் என்னத்தச் சொல்லிட்டேன்னு இந்தச் சிறுக்கி சிலிர்த்துகிட்டுப் போறா” என்று தன் பேரன்களிடம் அலமேலு கேட்க, இருவரும் கோரசாக "அதை அவளிடமே கேளுங்க" என்று சொல்லிவிட்டு இனி மீரா பார்த்துக் கொள்வாள் என்று எண்ணித் தாங்களும் தங்கள் அறைக்குள்ளே நுழைந்தனர்.



மண்டபத்திலோ மாப்பிள்ளையைக் காணோம் என்று பதறிய சிறு நேரத்தில், பொண்ணும் ஓடிப் போயிட்டாளே என்று உறவுகள் பேச ராதாகிருஷ்ணன் முகமோ ரௌத்திரமாக மாறியது.



“இவ பிறந்ததால என் பொண்ணைத் தொலைச்சேன்… இப்ப வளர்ந்ததாலே என் மானமே போச்சு” என்று மருமகனிடம் கோபத்துடன் கத்தியவர், சாந்தியைக் கோபமாக முறைத்தார்.