• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

விழிகள் - 04

Relay Stories

Vaigai - Avid Readers (Novel Explorer)
Aug 2, 2021
156
186
43
Karur

அத்தியாயம் - 04 (ரித்தி)



கமலி சென்னைக்கு அடுத்து உள்ள ஸ்ரீபெரும்புதூரில் அலமேலு பாட்டியின் வீட்டிற்கு வந்து நான்கு நாட்கள் ஆகி இருந்தது.



இன்னும் வீட்டில் யாரிடமும் சிறியவர்கள், கமலி பற்றிய உண்மையைக் கூறி இருக்கவில்லை.



அப்போதைக்கு கமலி ஒரு வாரம் இங்கே தங்கப் போவதாக மட்டுமே கூறி இருக்க, அவளுக்கான உபசரிப்பு அழகாய் அமைந்தது.



காலை எழுந்த மீரா, விஜயலட்சுமியிடம் செல்லம் கொஞ்சத் தொடங்குவது தொடங்கி இரவு தூங்கும் முன் மீராவிடம் அலமேலு பாட்டி சிக்கி விழிப்பது வரை என ஒவ்வொரு நாளும் இனிமையாய் அமைய, கமலி மனதில் தன்னையும் அறியாமல் இந்த வீட்டில் தானும் ஒருவளாய் பிறந்திருக்கக் கூடாதா என ஒரு ஏக்கம் வந்தமர்ந்தது.



நான்கு நாட்களா? என நினைக்கும் அளவிற்குக் கண்மூடித் திறக்கும் முன் பறந்திருந்தது நாட்கள்.



"ஒரு இடத்துல இருக்கவே மாட்டியா மீரா..." என்று குமுதா மீரா முன் வந்து நிற்க,



"நான் எங்கேயும் போகலையே ம்மா?" என்றாள் மீரா.



"அப்படியா? அஞ்சு நிமிஷம் முன்ன?" இடுப்பில் கைவைத்து அவர் முறைக்க, மீராவிற்கு முன்,



"தோட்டத்துல இருந்தா ஆண்ட்டி!" என்றாள் கமலி.



"அதுக்கு முன்னாடி?"



"அலமேலு பாட்டி ரூம்ல!"



"அதுக்கும்..."



"அதுக்கும் முன்னாடி பாத்ரூம்ல இருந்தேன்... போதுமா.." என்ற மீரா கமலியை முறைக்க, கமலி அதற்கு மேல் முறைத்து வைத்தாள்.



"அரை மணி நேரமா உன்னை மாதவன் தேடுறான்…" குமுதா சொல்ல,



'அதுக்கு தானே நிக்காம ஓடிட்டு இருக்குறேன்' நினைத்துக் கொண்டவள் கமலியைப் பார்க்க, இன்னும் கடினமாக வந்த பார்வையை அடக்கி வைக்கப் பெரும்பாடு பட்டுக் கொண்டிருந்தாள் கமலி.



"இவளைப் புடிச்சு வை கமலி… நான் போய் அவன்கிட்டச் சொல்றேன்" என்று குமுதா நகர,



"உங்களுக்கு அவ்வளவு கஷ்டம் வேண்டாம் அத்தை… நானே வந்துட்டேன்" என்றவனைப் பார்த்துத் திருதிருவென விழித்து நின்றாள் மீரா.



"என்ன டி என்ன பண்ணி வச்ச?" சரியாய் மகளைக் குமுதா நாடி பிடித்துக் கேட்க,



"அத்தை, நான் பார்த்துக்குறேன்… நீங்க கிளம்புங்க!" என்று மாதவன் கூறிவிடவும்,



"அதானே! என்னைக்கு தான் அவளை விட்டுக் கொடுத்தீங்க ரெண்டு பேரும்!" என்றவர்,



"ஆமா ஆதி எங்க?" என்றார்.



"ரூம்ல இருப்பான்…" என்று மாதவன் கூறவும் அவர் சென்றுவிட,



"பைத்தியமா டி நீ? ஏன் இப்படிப் பண்ணின?" என்று கோபமாய் மாதவன் கேட்க,



"நான் கூடச் சொன்னேன்… இவ தான் கேட்கலை" என்றாள் கமலியும்.



"எடுத்துக் குடுக்குறியா? அந்த துர்நாற்றம் துர்கேஷ் இன்னும் உனக்காக தான் வெயிட்டிங்காம்… எப்படி வசதி?" என்று சத்தம் இல்லாமல் மீரா கமலி அருகே முணுமுணுக்க, கமலி முறைத்தாள்.



"ஆதி சொன்னான்னு தான் உனக்கு நான் சப்போர்ட் பண்ணினதே! வான்ட்டடா போய் தலையக் குடுக்கச் சொல்றியா? இப்ப ஆதி என்ன பண்ணப் போறானோ?" மீண்டும் கோபமாய் மட்டுமே மாதவன்.



"ப்ச்! சும்மா கத்தாத… எனக்கு மட்டும் வேண்டுதலா? நீ வேணா சண்டைக்கு வாடான்னு. அவங்க தான் ஆரம்பிச்சாங்க" மீரா.



"வேண்டாம், என்னால உங்களுக்குள்ள பிரச்சனை வேண்டாம்... நான் வேணா..." எனக் கமலி சொல்லி முடிக்கும் முன்,



"நீ கொஞ்சம் பேசாம இரு டி… வாயைத் திறந்தாலே அபசகுனப் பேச்சு..." என கமலி வாயை அடைத்தாள் மீரா.



"ஆமா! எனக்கொரு டவுட்? அவங்களுக்கு எப்படி கமலி இங்க தான் இருக்காங்கன்னு..." என யோசித்தபடி கேட்ட மாதவன் மீராவின் திருட்டு விழிப் பார்வையில் பதிலைக் கண்டு கொண்டான்.



"மீரா, நீ..." எனக் கோபமாய் மாதவன் ஆரம்பிக்க, கமலி, மீரா இருவரின் பார்வை மாதவனைத் தாண்டி வாசல்புறம் பயத்துடன் பார்க்கவுமே புரிந்து கொண்டான் யாரோ நிற்பதை.



"அம்மத்தா!" மீரா கூற, மெதுவாய் மாதவன் திரும்ப,



"என்ன பேசிட்டு இருக்கீங்க? கமலியால என்ன பிரச்சனை? நீ என்னவோ சொல்ற? கமலி அவங்க வீட்டுல சொல்லிட்டுத் தானே வந்தா?" புரியாத பார்வையோடு வார்த்தையாலும் அலமேலுப் பாட்டி கேட்க,



"அப்பத்தா…" என மாதவன் தயங்க,



"நான் சொல்றேன் அம்மத்தா" என மாதவனைக் கண்களால் அடக்கினாள் மீரா.



"வேண்டாம்… டேய் மாதவா, நீ சொல்லு… எனக்கு அவ மேல நம்பிக்கை இல்ல..." உடனே பதில் அப்பத்தாவிடம் இருந்து வர,



"அம்மத்தா!" எனக் கோபமாய் கூறிய மீராவை விட்டு,



"இப்ப உண்மையைச் சொல்லப் போறிங்களா இல்லையா? எனக்கு உன் மேல தான் டா சந்தேகமா இருக்கு" என அலமேலுப் பாட்டி மாதவனைக் குறி வைத்துப் பார்க்க,



"அப்பத்தா! எனக்கும் இதுக்கும் சம்மந்தம் இல்லை… இதோ நிக்கிறாளே… பிளான் இவளோடது. என் கூடப் பொறந்தானே அவன் தான் எக்ஸிகியூட் பண்ணினது..." என்று மீராவோடு ஆதவனையும் கோர்த்துக் கூறிவிட்டு மாதவன் ஜகா வாங்கப் பார்க்க,



"அடப்பாவி!" என விழித்தாள் கமலியே.



"நினச்சேன் டா..." எனப் பார்த்த மீரா,



"ஆமா ஆமா! பிளான் பண்ணி இவளைக் கூட்டிட்டு வந்தது எல்லாம் நாங்க ரெண்டு பேர் தான்" என்று கூறவும், கமலியோடு மாதவனுமே புரிந்து கொண்டான் என்னவோ முடிவு செய்து விட்டாள் என்று.



அது பொய் இல்லை என்பதைப் போல, "கல்யாணத்தை நிறுத்திப் பொண்ணைக் கடத்திக் கூட்டிட்டு வந்தது நானும் அத்தானும் தான்… ஆனா, இவன் மாப்பிள்ளையை எதுக்குக் கடத்தினான்னு கேளு அம்மத்தா… கமலி! நீ சொல்லு டி. மாப்பிள்ளையைக் கடத்தினது இவன் தானே?" என்று கேட்டுக் கண்ணடிக்க,



'பத்த வச்சுட்டியே பரட்ட!' என மாதவன் விழி பிதுங்கி நிற்க, தன்னால் தான் அங்கே பிரச்சனை என பயந்து நடுங்கி நின்றது என்னவோ கமலி தான்.



முழுதாய் கூறாவிட்டாலும் மீரா ஒப்புதல் கடிதம் மட்டும் இன்றி, ஒரே வார்த்தையில் அலமேலுப் பாட்டிக்குப் புரியும் விதமாய் திருமணத்தை நிறுத்திக் கமலியை அழைத்து வந்ததைக் கூறி இருக்க அதுவே அவருக்கு அத்தனை அதிர்ச்சி.



"என்ன சொன்ன?" என்ற அம்மத்தாவின் அதிர்ந்த பார்வை தான் மீராவிற்குத் தன் பேச்சை தனக்குப் புரியவே வைத்தது.



"போச்சு! நீயே உளறிட்டியே" என நினைத்துப் பாவமாய் மாதவனைப் பார்க்க, அவன் தலையில் அடிக்காத குறையாய் மீராவை முறைத்து வைத்தான்.



"நானே சொல்றேன் பாட்டி" என அங்கே முன் வந்தாள் கமலி.



*************



திருவொற்றியூரில் உள்ள தன்னுடைய வீட்டில் அவ்வளவு கோபமாய் நின்றிருந்தார் ராதா கிருஷ்ணன்.



"அவளைப் பார்த்துக்குறதை விட உனக்கு என்ன பெரிய வேலை? அவளுக்கு என்ன குறை வச்சோம்? எப்படி, எங்க தப்பு நடந்தது?" எனச் சாந்தி, ராஜ ராஜனை நிற்க வைத்து ராதாகிருஷ்ணன் கேள்விகளால் துளைக்க, ராஜ ராஜன் அமைதியாகவே நின்றார்.



மகள் சென்றது அதிர்ச்சி தான் அவருக்கும் என்றாலுமே, அந்த துர்கேஷ் மீதான நல்லெண்ணம் எல்லாம் கொஞ்சம் கொஞ்சமாய் குறைந்து அவன் மீது வீசிய அந்த மதுவின் நாற்றத்தில் காணாமலே போயிருந்தது.



கூடவே மாமனாரின் தற்போதைய செயல்கள் எல்லாம் ராஜராஜனுக்கு அதிர்ச்சியே!



கமலி தான் விசாலாட்சி இறக்கக் காரணம் எனப் பேத்தி மேல் கோபம் எனச் சிறிதாய் ராஜ ராஜன் நினைத்திருக்க, அப்படி இல்லை கோபம் என்பதைத் தாண்டி வெறுப்பைக் கமலி மேல் ராதாகிருஷ்ணன் வளர்த்து வைத்திருப்பது அறிந்த போது இன்னும் தளர்ந்து போனார்.



இதை எல்லாம் விடத் தோழி வீட்டில் தான் மகள் இருக்கிறாள் என்பது இன்னும் கொஞ்சம் மகள் மீதான நம்பிக்கை உயர, பெற்றவராய் ராஜ ராஜனுக்கு நிம்மதி கூட. இன்னும் அவளுடனான தனது நேரத்தை அதிகரித்து அவளைத் தான் பார்த்திருக்க வேண்டுமோ என்று கூடத் தோன்றி இருந்தது.



மூன்று நாட்கள் போதுமாய் இருந்தது ராதாகிருஷ்ணனுக்கு தன் பேத்தி எங்கே இருக்கிறாள் எனத் தெரிந்து கொள்ள. அதுவும் மீரா தானாய் வந்து தன் வாயால் சிக்கி இருக்க, திருமணத்தன்று எடுத்த வீடியோ உபயமாய் மீரா யார் என்பதையும் கண்டு கொள்ள முடிந்திருந்தது.



"துர்கேஷ் பார்த்துக்குறேன்னு சொல்லியிருக்கான். அதுக்காக இதை அப்படியே விட முடியாது. முதல்ல நீங்க ரெண்டு பேரும் போய் அவளைக் கூட்டிட்டு வர்ற வழியைப் பாருங்க… அவ ஒத்து வரலைனா துர்கேஷ் என்ன பண்ணினாலும் நாம கேட்கக் கூடாது..." என்று ராதா கிருஷ்ணன் கூறிய போது திரும்பி சாந்தியை ராஜ ராஜன் பார்க்க,



"நான் போய் பேசிக் கூட்டிட்டு வர்றேன் ஐயா!" என்றவளை எண்ணி விரக்தியாய் சிரிக்க தான் முடிந்தது.



'தானே வீட்டோடு மாப்பிள்ளையாய் வந்து எதிர்த்துப் பேச முடியாத நிலையில் இருக்கும் பொழுது மகள் இருந்த இடத்தில் இவளை வைத்திருக்கும் ராதா கிருஷ்ணனை எதிர்த்துச் சாந்தி பேசி விடுவாளா என்ன?' என்ற நினைப்போடு அமைதியாகி விட்டார்.



*************



"என்னை வேண்டாம்னு சொல்லிட்டுப் போனவ ஒண்ணு இல்லாமல் போகணும். இல்ல என் காலுக்குக் கீழ கிடக்கனும்… அவ மட்டும் இல்ல, என்னையே இந்த துர்கேஷையே அந்தப் பேச்சு பேசினாலே அந்த மீரா, அவளை நான் சும்மா விடவே மாட்டேன். கேவலம் ஒரு பொண்ணு நம்ம எல்லாரையும் ஏமாத்தி மண்டபத்துல இருந்து கமலியைக் கூட்டிட்டுப் போயிருக்கா… யார் குடுத்த தைரியம்? அந்த மீரா பின்னாடி யார் இருக்கான்னு விசாரிக்கச் சொன்னேனே…" என்று கேள்வியாய் அங்கே இருந்த ஆஜானுபாகு ஆசாமிகளிடம் துர்கேஷ் கேட்க,



"முடிஞ்சது பாஸ்... பெரிய இடம் எல்லாம் ஒண்ணும் இல்ல... அந்த மீரா, அவளோட மாமா பையனுங்க ரெண்டு பேர்னு இவங்க மூணு பேரும் தான், பொண்ணை மண்டபத்துல இருந்து தூக்கி இருக்காங்க… பெரிய பேக்ரவுண்ட் எல்லாம் இல்ல. அன்னைக்கு உங்களை மூட்டைல கட்டி வச்சது கூட..." என்று ஆரம்பித்ததுமே இன்னும் அவமானமாய் உணர்ந்தான் துர்கேஷ்.



திருமணம் நின்று நான்கு நாட்களாகியும் இன்னும் வீட்டிற்குச் சென்றிருக்கவில்லை அவன். ‘எத்தனை பெரிய சாம்ராஜ்யத்திற்கு உரிமையானவன்! இப்படித் தன் வீட்டிற்குச் செல்லவே முடியாதபடி ஆளாக்கி விட்டாளே!’ என நினைத்த துர்கேஷ் கமலியின் வீட்டருகே இருக்கும் ஹோட்டலில் தான் தங்கி இருக்கிறான்.



"யார்றா அவனுங்க? கொஞ்சம் போதைல இருந்த செகண்ட்ல என்னையே..." என்றவன் அவமானத்தில் கையிலிருந்த கண்ணாடி கிளாசைத் தூக்கிக் கோபமாய் வீசத் தூள் தூளாய் சிதறியது.



"தூக்குங்க டா... என்ன வந்தாலும் நான் பார்த்துக்குறேன். அந்தக் கமலி, மீரா மட்டும் இல்ல, நான் அவமானப்படக் காரணமான ஒவ்வொருத்தனையும் தூக்குங்க… நான் யாருன்னு அவங்களுக்குக் காட்டணும்." துர்கேஷ் கூற,



"பாஸ்! கொஞ்சம் பொறுமையா இருக்கச் சொல்லி ராதா கிருஷ்ணன் சார் சொன்னாரே" என நியாபகப்படுத்தினான் ஒருவன்.



"அந்தக் கிழவன் என்ன டா சொல்றது? அந்த ஆளை நான் பார்த்துக்குறேன். சொத்து முக்கியமேன்னு பார்க்குறேன்… இல்லைனா அவனை தான் முதல்ல போட்டுருப்பேன், மண்டபத்துல அவமானப்பட்டு நின்ன நிமிஷத்துக்கு" என்றவன்,



"நாளைக்கு காலையில நான் சொன்னபடி எல்லாரும் என் காலுல கிடக்கணும்..." என்றவன் கண்களில் கொலைவெறி தெரிய,



"போங்க டா… அவங்க எங்க இருந்தாலும் போய் தூக்குங்க. அந்தக் கமலிக்கு வாழ்நாள் தண்டனையை நான் கொடுக்குறேன். என்னை விட்டுப் போகாம இருக்க என்ன பண்ணணுமோ அதை நான் பண்றேன்" எனச் சொல்லிக் கொண்டவனின் கோணலான புன்னகை அவனின் கீழ்தரமான எண்ணத்தை அப்பட்டமாய் வெளிக்காட்டியது.



***********



கமலி, அலமேலுப் பாட்டியிடம் உண்மையைக் கூறிவிட்டாளா? அப்படிக் கூறி இருந்தால் அலமேலுப் பாட்டி கமலி விஷயத்தில் என்ன முடிவை எடுப்பார்?



துர்கேஷின் இந்தக் குணம் அறியாத அப்பாவி கமலி அவன் கைகளில் சிக்கிடுவாளா? துர்கேஷின் கட்டளையை அவன் ஆட்கள் நிறைவேற்றி விடுவார்களா?