• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

விழிகள் - 05

Relay Stories

Vaigai - Avid Readers (Novel Explorer)
Aug 2, 2021
156
186
43
Karur

அத்தியாயம் - 05 (அதியா)



"இதுக சொன்ன கதை பத்தாதுன்னு நீ என்ன கதை சொல்லப் போற?” கோபத்தில் கத்த ஆரம்பித்தார் அலமேலுப் பாட்டி.



"இவங்க யாரும் என்னைக் கடத்தல. கல்யாணத்தில் விருப்பமில்லாமல் நான்தான் இவங்களோட ஓடி வந்து விட்டேன்" என்றாள் கமலி.



"ஏன்? நீ வேற யாரையாவது மனசுல நினைச்சு இருக்கியா?"



"ஐயையோ! அப்படியெல்லாம் இல்லை பாட்டி" பதறினாள் கமலி.



"பின்ன?"



"அப்பா, அவருடைய மனைவி, தாத்தான்னு சேர்ந்து இருந்தாலும், அவங்கள என்னால உறவாக உணர முடியலை. அங்கே எல்லாம் பணத்துக்கு தான் முதல் பாசம். மத்தது எல்லாம் வெறும் வேஷம். எனக்கு அவங்க பார்த்திருக்கும் மாப்பிள்ளை, அவங்களையும் தூக்கிச் சாப்பிட்டுடுவான்.



என்னுடைய கெஞ்சல்களும், கதறல்களும் யாருடைய காதுக்கும் கேட்கவில்லை. என் வாழ்க்கை அவ்வளவுதான் என்று நான் நினைத்த போது, என் திருமணத்திற்காக மீரா அங்கே வந்தாள். நான் அவளிடம் உதவி கேட்கவில்லை. வாழ்வதற்கு உயிர்ப் பிச்சை கேட்டேன். நான் மிகவும் கெஞ்சிக் கேட்டதால்தான் எனக்கு இவர்கள் உதவி செய்தார்கள்.



என்னோட வாழ்க்கையைக் காப்பாத்துன இவங்களைத் தப்பு சொன்னீங்கன்னா, இவங்க கிட்ட உதவி கேட்ட நான் தான் முதல் குற்றவாளி! எனக்கு தண்டனை தாங்க பாட்டி. என்னைப் பெத்த மகராசி உயிரோட இருந்திருந்தால் இப்படி ஒரு நிலை எனக்கு வந்திருக்காது..." என்று கைகளால் தன் முகத்தை மூடி அழ ஆரம்பித்தாள் கமலி.



"இந்தா, இப்ப நான் என்ன சொல்லிட்டேன்னு அழுற. இந்த வீட்டை உன் வீடா நெனச்சுக்கோ. இந்த வீட்ல என் பேச்சை மீறி யாரும் எதுவும் சொல்ல மாட்டாங்க. பயப்படாத! தாய் இல்லாத பிள்ளையை இனி யாரு கட்டாயப் படுத்தறான்னு நான் பார்த்துக்குறேன். மீரா மாதிரி நீயும் எனக்கு ஒரு பேத்தி தான். இந்த வீட்ல ரெண்டு தடித்தாண்டவராயங்க எதுக்கு இருக்கிறாங்க. இனிமே அவங்க ரெண்டு பேரும் தான் உனக்கு பாடி கார்ட்ஸ். எங்கள மீறி உன்னை யாரும் எதுவும் செய்திட முடியாது.



ஆமா... உன்னைக் கட்டிக்கிறேன்னு சொன்னானே, அந்த மாப்பிள்ளை பேர் என்ன?" என்றார் அலமேலு பாட்டி.



"துர்கேஷ்..." என்றாள் கமலி மூக்கை உறிஞ்சிக் கொண்டு.



"என்னாதூ... சூட்கேஸ்... ஆ.. அப்படி எல்லாமா பேர் வைப்பாங்க?" நாடியில் கையை வைத்து ஆச்சரியமாகக் கேட்டார். அலமேலுப் பாட்டி அடித்த லூட்டியில் அடக்க மாட்டாமல் சிரித்தனர் அனைவரும்.



"ஓய் அம்மத்தா... அது சூட்கேஸ் இல்ல துர்கேஷ்" என்றாள் மீரா சிரித்துக் கொண்டே.



"அது சரி! இவ்வளவு பெரிய விஷயத்தை முன்னாடியே சொல்லி இருக்கணும். அப்புறம் வீட்டுக்குப் பெரியவன்னு நான் எதுக்கு இருக்கேன்? என்னடா மாதவா?" என்றார் அலமேலுப் பாட்டி மிரட்டல் குரலில்.



"இல்ல பாட்டி! நம்ம மீ..." என்று மாதவன் ஆரம்பித்ததும், சொன்னால் கொன்று விடுவேன் என்பது போல் பாட்டியின் பின்னால் நின்று கொண்டு மீரா பரதநாட்டியம் ஆட ஆரம்பித்தாள்.



"அது ஆதவன் தான் சொல்ல வேண்டாம் என்று சொன்னான்" என்று மொத்தப் பழியையும் ஆதவன் தலையில் போட்டு உருட்டி நின்றான்.



"இருக்கட்டும். இருக்கட்டும்… அந்த ஆதுப் பயல நான் பார்த்துக்கிறேன். வீட்டில் இருக்கும் மத்தப் பெரியவங்க கிட்ட நான் பேசிக்கிறேன்.



டேய் மாதவா! ஒரு விஷயத்தைச் செய்வதற்கு முன்னாடி தான் யோசிக்கணும். செஞ்ச பிறகு யோசிக்கக் கூடாது. இந்தப் புள்ள கமலிக்கு இனி எந்தப் பிரச்சனையும் வரக்கூடாது. இவங்க அப்பா, அம்மா கிட்ட நான் பதமாப் பேசி இவளோட மனசைப் புரிய வைக்கிறேன். அதுவரைக்கும் இந்தப் புள்ள நம்ம பொறுப்பு" என்றார் அலமேலுப் பாட்டி அதிகாரமாக.



"வாவ்..." இப்படி ஒரு மாற்றத்தைத் தன் பாட்டியிடம் இருந்து எதிர்பாராத மாதவனும் ஆனந்தமாய் அதிர்ந்தான்.



மாதவனும், கமலியும் முன்னே செல்ல பின்னே தங்கிய மீரா, தன் பாட்டியின் காதில், "அம்மத்தா! எனக்கு என்னவோ கமலி விஷயத்துல ஆது அத்தான் மேல ஒரு சின்ன டவுட் இருக்கு. ஆது அத்தானைக் கொஞ்சம் நல்லா வாட்ச் பண்ணுங்க" என்று எப்பொழுதும் தங்களை ரிங் மாஸ்டர் போல் விரட்டிக் கொண்டிருக்கும் ஆதவனை மாட்டி விட்டுச் சந்தோஷமாகத் தலையை ஆட்டிக் கொண்டே, அறையை விட்டு வெளியே வந்த மீராவின் கையைப் பிடித்துத் தனியாக அழைத்து வந்தான் மாதவன்.



"ஏய் எருமை, ஏன்டா இப்படி கையப் புடிச்சுத் தரதரன்னு இழுத்துட்டு வர"



"என்னைக்கு இருந்தாலும் நான் தான பிடிக்கணும்"



"என்ன?" என்றவளின் முகம் ஆயிரம் வண்ணங்களைக் காட்டியது.



"புரியாத மாதிரி நடிக்கிறவங்களுக்கு என்னைக்குமே புரியாது" என்றான் கீழ் உதட்டைக் கடித்துக் கொண்டு.



"ஆமா இவரு பெரிய டைரக்டரு. எங்க நடிப்பைக் கண்டு பிடிச்சிடுவாரு" என்றாள் தன்னைச் சமாளித்துக் கொண்டு.



"ஏய் குள்ள வாத்து! பாட்டி காதுல என்னடி சொன்ன?" என்றான் மாதவன் அவள் காதைத் திருகியபடி.



"ஹான்... உண்மையச் சொன்னேன்" என்று அவன் கையைத் தட்டி விட்டுப் படு ஸ்டைலாக முன்னே நடந்தாள் மீரா.



"மீரா! கமலிக்கு உதவி செய்ய வேண்டும் என்று சொன்னது நீ! அப்புறம் ஏன் நீ அந்த துர்கேஷ்க்கு போன் பண்ணி கமலி இங்கே இருக்கிற விஷயத்தைச் சொன்ன? ஆதுக்கு இந்த விஷயம் தெரிஞ்சா உன்மேல ரொம்பக் கோபப்படுவான். எல்லாத்தையும் விளையாட்டுப் போல எடுத்துக்கிற நீ! பாட்டி கிட்ட இப்ப ஆதுவையும் ஏன் மாட்டி விட்ட?" என்றவனின் கேள்வியில், "கலகம் பிறந்தால் தானே வழி பிறக்கும். கமலி எப்பயும் பயந்து இதே மாதிரி ஒளிந்து கொண்டிருக்க முடியுமா? அத்தோடு அத்தானை..." என்று திருதிருத்து முழிக்க ஆரம்பித்தாள் மீரா.



"ஏய், உன் முழியே சரியில்லை. வேறு என்ன பாட்டி கிட்டச் சொன்ன?"



"மேடி, கொஞ்சம் கிட்ட வாயேன்" என்று ஹஸ்கி வாய்ஸில் பேசினாள்.



"என்ன?" என்று அவனும் ஹஸ்கி வாய்ஸில் பேசியபடி குனிந்தான்.



"அது... அது... ஊருக்கே குறி சொல்லுமாம் பல்லி… அது விழுந்துச்சாம் கழநிப் பானையில துள்ளி" என்று கூறி அவனைத் தள்ளிவிட்டு வேகமாக ஓடினாள்.



"ஏய்! அந்தப் பல்லி யாருன்னு கண்டு பிடிச்சா, நீ கில்லி!" என்று முகத்தைச் சுழித்து அவனுக்குப் பழிப்பு காட்டிவிட்டுச் சென்றாள்.



'டேய் ஆது! இந்தச் சூனியக்காரி உனக்கு என்ன சூனியம் வச்சு இருக்கான்னு தெரியலையே" என்று ஆதவனுக்காகப் பரிதாபப்பட்டான் மாதவன்.



அலமேலுப் பாட்டி தன் மகன், மகள், மருமகள் என அனைவரையும் அழைத்துப் பாசத்தைத் தேடி வந்திருக்கும் கமலிக்கு அனைவரும் ஆதரவாக இருக்க வேண்டும் என்று தன் முடிவை அறிவித்தார்.



சுந்தர்ராஜ் சற்று யோசித்ததும், "சுந்தரு, ரொம்ப யோசிக்காதப்பா. பொம்பளப் புள்ள மனசு வெறுத்துப் போய் வந்திருக்கு. நாமளும் அடைக்கலம் தரலைன்னா, வேறு ஏதாவது முடிவு எடுத்தா என்ன பண்ணுறது? கமலிப் புள்ள நம்ம கிட்டக் காசு கேக்குதா? பணம் கேக்குதா? பாசத்தையும், பந்தத்தையும் தானே தேடுது. தாய் இல்லாத பிள்ளை" என்று அலமேலுப் பாட்டி எடுத்துக் கூறியதும், அனைவரின் முகமும் ஒப்புதலாய் மலர்ந்தது.



சமையலறையில் விஜியும், குமுதாவும் இரவு உணவை முடித்துவிட்டு, அனைவரையும் சாப்பிட அழைத்தனர்.



உணவு மேஜையைச் சுற்றி அனைவரும் அமர்ந்து உணவு உண்டு கொண்டிருக்கும் வேளையில் மீரா, மாதவனோடு எப்பொழுதும் போல் வம்பு செய்து கொண்டிருந்தாள்.



குமுதாவும் விஜயாவும் மாறி மாறிக் கமலிக்கு உணவு பரிமாற அவர்களின் அன்பில், குனிந்தபடியே சாப்பிட்டுக் கொண்டிருந்த கமலியின் தொண்டைக் குழிக்குள் உணவு சிக்கிக் கொண்டதும் விக்கல் எடுக்க ஆரம்பித்தது.



ஆதவன் தனக்கு எதிரே அமர்ந்திருந்த கமலிக்குத் தண்ணீர் டம்ளரை நகட்டி வைத்தான்.



மீரா பாட்டியைப் பார்த்து ஜாடை செய்ய, 'நானும் பார்த்துக் கொண்டே தான் இருக்கிறேன்' என்பது போல் பாட்டியும் கண்களால் பதில் சொன்னார்.



"ஆங்... கமலி... இன்னும் ஒரு வாரம் இங்கே தங்குவதற்கு உன் பேரன்ட்ஸ் என்ன சொன்னாங்க?" என்றான் ஆதவன்.



ஆதவன் பாட்டியிடம் மாட்டிக் கொண்டதை நினைத்து, மாதவனும் மீராவும் நமட்டுச் சிரிப்பு சிரித்தனர்.



கமலியோ என்ன பதில் சொல்வது என்று தெரியாமல் தலையை எல்லாப் பக்கமும் ஆட்டினாள். தன் அருகில் இருந்த மாதவனிடம், "ஏன்டா சிரிக்கிற?" என்று அடிக்குரலில் கேட்டான் ஆது.



"பங்கு, நீ மாட்டிக்கிட்ட பங்கு!"



"என்னடா உளர்ற"



"இங்கே இருக்கிற எல்லோருக்கும் உண்மை தெரிஞ்சு போச்சு. ஓவர்... ஓவர்..." என்று மெதுவாகச் சொன்னான்.



மாதவன் சொன்னதும் ஆதவன் சுற்றிப் பார்க்க, அனைத்துக் குடும்ப உறுப்பினர்களும் கொலை வெறியோடு அவனைப் பார்ப்பது தெரிந்தது.



"எப்படிடா?" பல்லைக் கடித்துக் கொண்டு சிரித்தபடியே ஆது கேட்க, "எல்லாம் அவள் செயல்!" என்று மீராவின் பக்கம் கையை நீட்டினான் மாதவன்.



கோபத்தோடு மீராவை ஆதவன் பார்க்க, வாய் நிறைய உணவை அடைத்துக் கொண்டு, கையில் வைத்திருந்த சப்பாத்தித் துண்டை அவன் புறம் நீட்டி வேண்டுமா? என்று தலை அசைத்தாள்.



அவளைத் திட்ட வேண்டும் என்று நினைத்த ஆதவனும், மாடர்ன் டிரஸ் போட்ட குரங்கு போல் இருந்தவளைப் பார்த்துச் சிரித்து விட்டான்.



கமலியின் விஷயத்தைப் பெருந்தன்மையாய் எடுத்துக் கொண்ட தன் குடும்பத்தை நினைத்துப் பெருமைப்பட்டான் ஆதவன்.



"சாரி! கமலி வந்த அன்றே உங்களிடம் இந்த விஷயத்தை நான் சொல்லி இருக்க வேண்டும். சொல்லாமல் நாட்களைக் கடத்தியது தப்புதான். அவளுக்கு ஒரு பாதுகாப்பான இடத்தை ஏற்படுத்திக் கொடுத்துவிட்டுச் சொல்ல வேண்டும் என்று நினைத்திருந்தேன்" என்றான் ஆதவன்.



"நம் குடும்பத்தைத் தவிர வேறு பாதுகாப்பான இடம் அவளுக்கு நிச்சயம் இருக்காது ஆதவா! ஆனால் நாம் கமலியின் பெற்றோரிடம் சொல்லாமல் இருப்பதும் தவறுதான்" என்றார் சுந்தர்.



"இப்பொழுது நான் அங்கே சென்றால் மீண்டும் அந்த துர்கேஷுக்கே என்னைத் திருமணம் செய்து வைத்து விடுவார்கள். இப்பொழுது சொல்ல வேண்டாம், ப்ளீஸ் அங்கிள்" என்று கண்ணீரோடு கெஞ்சிய கமலியைக் கண்டதும் அனைவரின் மனதும் இளக ஆரம்பித்தது.



கமலியின் கண்ணீரைத் துடைக்கப் பரபரத்த தன் கைகளைக் கட்டுப்படுத்திக் கொண்டான் ஆதவன்.



"சரிமா, கவலைப்படாதே! எது நடந்தாலும் உனக்கு நாங்கள் அனைவரும் துணை நிற்போம்" என்றார் சுந்தர்.



கண்களில் கண்ணீர் நிற்காமல் வழிந்து கொண்டிருந்த கமலிக்கு, தன் கைக்குட்டையை கொடுப்பதற்காக ஆதவன் முன்னே செல்ல, "எங்களுக்குத் தெரியும்!" என்ற அலமேலுப் பாட்டி தன் சேலை முந்தானையால் கமலியின் கண்ணீரைத் துடைத்து விட்டார்.



'சூப்பர், சிஐடி சகுந்தலா!' என்று தன் மனதிற்குள் பாட்டியைக் கிண்டல் அடித்தாள் மீரா.



அதுவரை ஏக்கத்துடன் இருந்த கமலிக்கு அந்தக் குடும்பத்தினரின் அன்பும் அக்கரையும், சர்க்கரையாய் தித்தித்தது.



இரவில் மீராவின் அறையில் அவள் அருகில் படுத்திருந்த கமலி, "ஏய் மீரு! குமுதா ஹேப்பி டீ" என்றாள்.



"எதே! எங்கம்மா எதுக்குடி ஹேப்பி?" என்றாள் மீரா அரை குறைத் தூக்கத்தில்.



"லூசு... நான் சந்தோஷமா இருக்கேன்டி"



"என் தூக்கத்தைக் கெடுத்த... அந்த சூட்கேஸ்க்கு போன் பண்ணி இங்க வரச் சொல்லிடுவேன் ஜாக்கிரதை!"



"ச்சீ... பே..." என்று கமலியும் மறுபுறம் திரும்பி நிம்மதியான உறக்கம் கொண்டாள். மறுநாள் அவளின் உறக்கம் கலையப் போவது தெரியாமல்.



காலையில், மீரா எழுவதற்குள் எழுந்த கமலிக்கு நேற்றைய உற்சாகம் தொற்றிக் கொள்ளவே, சத்தம் இல்லாமல் எழுந்து மொட்டை மாடிக்குச் சென்றாள் சூரிய தரிசனம் காண.



அதிகாலைக் குளிர் காற்றும், பறவைகளின் சலசலப்பும், சிவக்கத் தொடங்கிய வானமும், புத்துணர்வை வாரி இறைக்க, சூரிய நமஸ்காரம் செய்ய ஆரம்பித்தாள்.



இறுதியாகக் கைகள் இரண்டையும் மேலே வானோக்கித் தூக்கி, உடம்பை வில்லாய் பின்னோக்கி வளைத்து, அவளது தளிர்க்கரங்கள் தரையைத் தொட, மூடி இருந்த இமையை மெல்லத் திறந்தாள்.



அவளின் பார்வைக்கு ஆதவனும், மாதவனும் கையைக் கட்டிக் கொண்டு நிற்பது தெரிந்ததும், கண்ணோரம் சுருக்கம் விழ இறுக்கமாகக் கண்களை மூடிக் கொண்டாள்.



"வாவ்… சூப்பர்... ஆஸம்..." என்று மாறி மாறி இருவரும் பாராட்ட, "ப்ளீஸ்!” என்றாள் கண்களை மூடிக் கொண்டே.



திடீரென்று இருவரைக் கண்டதும், தடுமாற்றம் கொண்டவள் மேலே எழ முடியாமல் தத்தளிக்க, அவளின் தவிப்பை ரசித்துக் கொண்டே முன்னே வந்த ஆதவன், அவளின் முதுகின் பின்னே கை கொடுத்து அவளை நிமிர்த்த முயன்றான்.



கீழிருந்து மேலே அவள் எழும்போது, காற்றில் பறந்த அவள் கூந்தல் ஆதவனின் காதோரம் உரசி ரகசியம் பேசியது.



உடம்பில் அத்தனை நரம்புகளும் சிலிர்த்து எழ, "யோகா செய்வதே, மனதைக் கட்டுப்படுத்த தான். உன் மனது கட்டுக்குள் அடங்காமல் பறக்கிறது. ஜாக்கிரதை!” என்று சிரித்த முகமாகக் கூறிக் கொண்டே விலகிச் சென்றான் ஆதவன்.



"ப்ரோ இப்ப என்ன நடந்துச்சு ப்ரோ?" என்றான் மாதவன்.



மாதவனுக்கு பதில் சொல்வதற்குள், "டேய்..." என்ற அலமேலுப் பாட்டியின் சத்தத்தில் அனைவரும் திரும்பிப் பார்த்தனர்.



புறாக்களுக்கு தானியம் வைப்பதற்காக வந்த அலமேலுப் பாட்டியின் கண்களில் சரியாக இந்தக் காட்சி சிக்கியதும், சிக்கிக் கொண்டனர் வசமாக.



"பாட்டி..." என்று ஆதவன் கூப்பிட்டதும், "கீழ இறங்கிப் போங்கடா அயோக்கிய ராஸ்கல்களா!" என்றார் அலமேலுப் பாட்டி.



"ரைட்டு! விடு ஜூட்டு!" என்று இருவரும் மடமடவெனக் கீழே இறங்கிச் சென்றனர்.



"உன்னப் பெத்தவங்க கிட்ட பத்திரமா ஒப்படைக்கிற வரைக்கும் சூதானமா நடந்து கொள்." என்ற அலமேலுப் பாட்டியின் வார்த்தைகள் புரியா விட்டாலும், "சரி" என்று தலையசைத்து விட்டுக் கீழே இறங்கிச் சென்றாள் கமலி.



காலை நேரப் பரபரப்புடன் அலமேலுப் பாட்டியின் வீடு களை கட்டியது.



துர்கேஷின் ஆட்கள் அலமேலுப் பாட்டியின் வீட்டைச் சுற்றி நின்று வேவு பார்த்துக் கொண்டிருந்தனர்.



ஆதவனும், மாதவனும் வீட்டை விட்டு வெளியேறியதும், அதிரடியாக அலமேலுப் பாட்டியின் வீட்டிற்குள் புகுந்தனர். துர்கேஷின் ஆட்களைக் கண்டதும் கமலி பயந்து நடுங்கி மீராவின் பின் பதுங்கிக் கொண்டாள்.



கமலியைத் தங்களோடு அனுப்பும்படி வம்பு செய்தனர். கமலியின் பெற்றோர்கள் வந்தால் தான் அனுப்புவோம் என்று சுந்தர் தன்மையாக அவர்களுக்கு எடுத்துக் கூறினார்.



"டேய்! இந்தப் பொண்ணு, இனிமேல் எங்க வீட்டுப் பொண்ணு. எங்க வீட்டுப் பொண்ணு மேல கைய வச்சா அவ்வளவுதான்" என்று அலமேலுப் பாட்டி மிரட்டினார்.



"உங்க வீட்டுப் பொண்ணா? அது எப்படி?" என்று நக்கல் அடித்தான் அடியாள்.



"எங்க வீட்டுப் பையனுக்குக் கட்டிக் கொடுத்தா இனிமே அது எங்க வீட்டுப் பொண்ணு தான்டா, முட்டாப் பயலே!" என்று அலமேலுப் பாட்டி சொன்னதும், கமலியின் அடிவயிற்றில் பட்டாம்பூச்சிகள் பறக்கத் தொடங்கின.



"டேய், இந்தப் பாட்டி ரொம்பப் பேசுது. முதல்ல இந்தப் பாட்டியைக் கவனிப்போம்" என்று அலமேலுப் பாட்டியின் மேல் கை வைக்கப் போகும்போது, ஆதவனும், மாதவனும் ஒருசேர அவனை அடித்துத் துவைத்தனர்.



“டேய், உங்களப் பார்த்துட்டு தான் முன்வாசல் வழியாப் போகிற மாதிரி போயி, பின் வாசல் வழியாக வந்தோம். எப்புடி" என்றான் மாதவன்.



அடுத்து நடந்த இருவரின் அதிரடியில், தங்கள் கை கால்களுக்கு கட்டுப்போட புத்தூருக்குப் பேருந்து ஏறினர் துர்கேஷின் அடியாட்கள்.



சண்டை நடந்து முடிந்ததும், மீராவைப் பாசமாகப் பார்த்தான் ஆதவன். அவன் பாசப்பார்வையில் பயந்து கமலியின் பின்னே ஒளிந்து கொண்டாள் மீரா.