• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

விழிகள்- 06

Relay Stories

Vaigai - Avid Readers (Novel Explorer)
Aug 2, 2021
156
186
43
Karur

அத்தியாயம் - 06 (ஷம்லா பஸ்லி)



ராதா கிருஷ்ணனிடம், சாந்தி மகளைக் கூட்டி வருவதாக வாக்கு கொடுக்க, ராஜராஜனுக்கு உள்ளூர வெறுப்பு தான் உண்டாயிற்று.



அவரது மகள் என்ன கடைப் பொருளா? ஆளாளுக்குப் பந்தாடுவதற்கு? அருமை பெருமையாக வளர்த்தாலும், அவளுக்கு என்ன தேவை என்று கவனிக்கத் தவறிப் போனோம் என்று தன் மீதே ஆத்திரமும் உண்டாயிற்று.



மாமனார் அந்தப் பக்கமாக நகர்ந்ததும், சாந்தியைத் தீர்க்கமாகப் பார்த்தார் ராஜராஜன். சாந்தி மென்மையாகப் பார்த்துவிட்டுக் குரலை வெகுவாகத் தழைத்துக் கொண்டு பேசினார்.



"பெரியவரிடம் நான் இதைச் சொல்ல வேண்டிய நிர்பந்தம். அதனால சொன்னேன். அதற்காக நம் பெண்ணை அந்தக் கயவனுக்குக் கட்டி வைக்க நான் ஒருநாளும் சம்மதிக்க மாட்டேன். கமலியை நான் பெறா விட்டாலும், அவளை என் மகளாகத்தான் பாவிக்கிறேன் அத்தான். அவளது எதிர்காலம் நல்லபடியாக அமைய வேண்டும் என்று உங்களைப் போல எனக்கும் ஆசை இருக்கிறது. அவள் இருக்கும் இடம் பெரியவருக்குத் தெரிந்தது போல அந்தத் துர்கேஷிற்கும் தெரிந்து அவன் ஆட்களை அனுப்பியிருக்கிறான். போனவர்கள், நன்றாக உதைபட்டு தான் திரும்பி இருக்கிறான்கள். அவன் அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்குமுன் நாம் முந்திக் கொள்ள வேண்டும் அத்தான். அதற்கு நான் ஒரு திட்டம் வைத்திருக்கிறேன்" என்றவர் சுற்றுமுற்றும் பார்த்தபடி,



"வாங்க, அறைக்குள் போய் பேசலாம்" என்று கணவரை அழைத்துப் போனார் சாந்தி.



********



துர்கேஷ் அனுப்பிய ஆட்களை அடித்து விரட்டிய பின்னர், ஆதவன் மீராவை முறைத்துப் பார்த்தபடி, கூடத்து சோபாவில் அமர்ந்தான்.



மீராவுக்கு அவனது அந்தப் பார்வை உள்ளூரக் குளிர்பரப்பியது. ஆயினும், அதைக் காட்டிக் கொள்ளாமல் ஆதவனைப் பார்த்து இளித்து வைத்தாள் மீரா.



மீரா வளர்ந்திருக்கிறாளே தவிர இன்னும் அவளுக்குப் பொறுப்பு என்பது மருந்துக்கும் இல்லை, என்று ஆதவன் உணர்ந்திருந்ததால், அவளைத் திட்டி எந்தப் பயனும் இல்லை என்று வெறுமனே முறைத்தான். ஆனால் அவன் சிந்தனை வேறுவிதமாக இருந்தது.



வீடு வரை ஆட்கள் தேடி வந்து விட்டனர். எந்த நேரமும் கமலியைக் காவல் காத்துக் கொண்டு வீட்டோடு இருப்பது சாத்தியமல்ல. அது மட்டுமின்றி, வீட்டு உறுப்பினர்களுக்கும் இதனால் ஆபத்துதான்.



கூடத்தில் மற்றவர்களும் அமர்ந்திருக்க,



"அப்பா, எனக்கு ஒரு யோசனை தோன்றுகிறது” என்றான் ஆதவன்.



"என்ன யோசனை ஆதவா? எதைப் பத்தி?”



"இன்றைக்கு அந்தத் துர்கேஷ் ஆட்கள் அடி வாங்கிட்டுப் போயிட்டாங்க, ஆனால் அவங்க பயந்து வராமல் இருக்க மாட்டாங்க. இனியும் வருவாங்க. நாம அவங்க எப்ப வந்து தாக்குவார்கள் என்று எப்போதும் எச்சரிக்கையாக இருந்து கொண்டே இருக்க முடியாது. அதனால கமலியைப் பாதுகாப்பான இடத்துக்கு அனுப்பி வச்சுடலாம்னு நினைக்கிறேன்."



"எங்கே அனுப்ப முடியும் ஆதவா?" என்ற சுந்தரத்திற்கும் ஒரு யூகம் இருந்தது



ஆதவன் தன் யோசனையைச் சொன்னான். வீட்டினருக்கும் அந்த யோசனை சரி என்று தோன்றியது.



*********



அன்றைய இரவு கமலி தூக்கம் வராமல் புரண்டு கொண்டு இருந்தாள். அவளருகே மீரா ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தாள்.



காலையில் நடந்தவற்றை அவள் மனம் அசை போட்டுக் கொண்டிருந்தது.



அவளைக் காப்பாற்ற அந்த இரு ஆண்பிள்ளைகளும் தங்கள் உயிரைப் பணயம் வைத்துச் சண்டை போட்டதை இப்போது நினைத்தாலும் உடம்பு நடுங்கியது. அந்தச் சண்டை அவளால் தான் என்று ஒருவரும் அவளைக் குற்றம் சாட்டவில்லை.



அதே சமயம் மீரா செய்த காரியத்திற்கு அந்த இடத்தில் அவளது தாத்தாவாக இருந்தால் அவள் கன்னம் பழுத்திருக்கும். ஆனால், ஆதவனும் சரி, வீட்டினரும் சரி கண்டனப் பார்வை பார்த்ததோடு விட்டு விட்டார்களே!



வீட்டுப் பெண்கள் தங்கள் வேலையைப் பார்க்கப் போய்விட, சுந்தரராஜனும், ஏதோ கணக்குப் பார்க்க அவரது அறைக்குள் தஞ்சமாகி விட்டார்.



ஆதவன் மட்டுமாக எங்கோ கிளம்பிச் சென்று விட்டான்.



என்னதான் தன் நன்மைக்காக தான், என்று மனதைத் தேற்ற முயன்ற போதும், ஆதவன் சொன்ன யோசனையை கேட்ட பிறகு, அவள் ரொம்பவே சோர்ந்து போய் அமர்ந்திருந்தாள்.



"ஏம்மா கமலி! இப்படி வா. உன் சினேகிதிக்கு என்னாச்சு? என்னைப் பார்த்து அப்படி முறைக்கிறாள்?” என அவளது மனதை மாற்றும் முயற்சியாக அழைத்துத் தனக்கருகில் அவளை அமர்த்திப் பேச்சுக் கொடுத்தார் அலமேலு.



"ஓய் பாட்டி, எதானாலும் நீ நேரே என்கிட்டக் கேளு. உன் கூட நான் கோபம் பாட்டி. கமலி வந்ததில் இருந்து என்னை நீ கண்டுக்க மாட்டேங்குற. ரொம்ப ஆடுற அலு" எனப் பொய்யாகக் கோபம் கொண்டாள் மீரா.



"என்னை அலு கிலுனு கூப்பிடாதேன்னு எத்தனை வாட்டிச் சொல்லி இருக்கேன்? அழகா அல்லு என்று கூப்பிடு. எனக்குப் பிடிச்ச ஆட்டர் பெயர் அப்படித் தான் துவங்கும்" என்றார் பரவசமான முகத்தோடு.



"அது யாரு பாட்டி, ஆட்டர்?" என்று அதுவரை அவள் இருந்த மனநிலை மாறி ஆவலாக வினவினாள் கமலி.



"ஆக்டரை தான் உன் பாட்டி ஆட்டர் வாட்டர் என்று பண்ணிட்டுது கமல். இதுக்கு இங்கிலீஷ் தெரியாது. ஆனால் அல்லு அர்ஜுன் பெயர் மட்டும் நல்லாத் தெரியும்" இடையில் குறுக்கிட்டுத் தோழியிடம் விளக்கம் கூறினாள் மீரா.



"எல்லா இங்கிளீஸும் எனக்குத் தெரியும். இவள் கிடக்குறாள் சின்னச் சிறுக்கி. அல்லு அர்ஜுன் எவ்வளவு சூப்பரா சண்டை போடுவான், ரொம்ப அழகா டான்ஸ் பண்ணுவான்" என்ற பாட்டியின் தோளில் சிறு புன்னகையுடன் சாய்ந்து கொண்டாள் கமலி.



"பாட்டி, உன் கோணல் வாயை வச்சுட்டுச் சிரி பார்க்கலாம். ஒரு ஃபோட்டோ எடுப்போம்" என்று பாட்டியின் அடுத்த பக்கத் தோளில் சாய்ந்து செல்ஃபி எடுத்தாள் மீரா.



அங்கு வந்த மாதவன், "ஐ... ஜிலேபி" என்று கத்த, "எங்கேடா எங்கே?" எனச் சுற்றும் முற்றும் தேடினாள் மீரா.



"அடியே, அடங்கு லூசு. நான் செல்ஃபியைச் சொன்னேன். எப்பப் பாரு சாப்பாடு ஞாபகம் தானா?” என்றவன், “செல்ஃபி எடுக்கிறப்போ இந்த அத்தானை விட்டுட்டியே மீரு" என்று சோகமே உருவாக மேடி சொல்ல,



"உன்னை நான் விட்டு விடுவேனா வா" அவனோடு சேர்ந்து இளித்துக் கொண்டு போஸ் கொடுத்தாள்.



"குரங்குங்க ரெண்டும் போட்டோ எடுக்கிற மாதிரி இருக்கு" எனப் பாட்டி நொடித்துக் கொள்ள, "உனக்குப் பொறாமை பாட்டி" என்று மீரா பழிப்புக் காட்டிவிட்டுப் போனாள்.



இதையெல்லாம் பார்த்த கமலிக்கு, இன்னும் கொஞ்சம் நாள் இங்கே தங்க முடியாமல் போனதே என்ற ஏக்கம் உண்டாயிற்று.



‘தனது குடும்பமும் இவ்வாறு கலகலப்பாகச் சேட்டைகளும், செல்லச் சண்டைகளும், சிரிப்புச் சத்தங்களும் என்று அமர்க்களமாக சந்தோஷமாய் இருந்திருந்தால் அவள் எதற்காக ஒரு அந்நியர் வீட்டிற்கு வந்து தஞ்சமடையப் போகிறாள்?’ என்று பெருமூச்சுடன் எண்ணியபடியே தூங்கிப் போனாள்.



**********

ஸ்ரீபெரும்புதூர்…



மறுநாள் காலையில் அந்த வீடே பரபரப்புடன் இருந்தது.



ஆதவன் சொன்ன யோசனைப்படி கமலியைக் கொண்டு விடுவதற்கான ஏற்பாடுகளைச் செய்து கொண்டிருந்தனர். அப்படி என்ன ஏற்பாடு என்று நினைக்கிறீங்களா? அவள் தங்கப் போகும் இடத்தில் சாப்பிடுவதற்கு நொறுக்குத் தீனி, சில பொடி வகைகள், என்று அந்த வீட்டுப் பெண்கள் தயார் செய்து கொண்டிருந்தனர்.



தோட்டத்தில் பூத்துக் குலுங்கிய ரோஜாச் செடிகளுக்கு மத்தியில் நின்று எங்கோ இலக்கின்றி வெறித்துக் கொண்டிருந்தாள் கமலி. அவளது மனம் ஒரு நிலையில் இல்லை. தனக்காக ஒரு குடும்பமே கஷ்டப்படுகிறது, என்று வருத்தமாக இருந்தது. நான்கு நாட்கள்தான் என்றாலும் அந்தக் குடும்பத்தில் ஒருத்தியாக உணரத் தொடங்கி இருந்தவளுக்கு ஆதவன் சொன்ன யோசனை பிடிக்கவில்லை. அதற்குக் காரணமான அந்த துர்கேஷ் மீது ஆத்திரமாக வந்தது. அவனால் அல்லவா இப்படி அவள் ஓடி ஒளியும்படி ஆகிவிட்டது.



"என்ன தாயீ பலத்த யோசனை? உன்னை வீட்டுக்குக் கூட்டிட்டுப் போயிடுவாங்கனு பயமா இருக்கா?" என்றவாறு அலமுப் பாட்டி அங்கே வந்தார்.



"ம்ஹூம், இல்லை பாட்டி! என்னால உங்க குடும்பத்துக்கு எவ்வளவு பிரச்சினை? நான் இங்கே வந்திருக்கக் கூடாதோ என்று தோணுது" எனும்போதே அவளது கண்கள் கலங்கியது.



"ஒரு விஷயத்தைச் செய்ய முன்னாடி ஆயிரம் தடவை யோசிக்கணும். ஆனால் செய்ததற்குப் பின்னால் ஏன் செய்தோம் என்று நினைப்பது தவறு! நீ எங்களை நம்பி இங்கே வந்துட்ட. இனிமேல் பிரச்சனைகள் வரத்தான் செய்யும். அதை எப்படி சமாளிச்சு முன்னேறனும்னு தான் யோசிக்கணும் கண்ணு… உனக்கு நாங்க இத்தனை பேர் பக்கபலமாக இருக்கும்போது நீ கவலைப்படாதே. என் பேரன் சொன்ன இடம் நல்ல பாதுகாப்பான இடம் தான்… உன் பிரச்சினை தீரும் வரை நீ அங்க பத்திரமாக இருக்கலாம் தாயீ…”



“ஆனால், உங்களை எல்லாம் இனிமே பார்க்க முடியாதே, நான் எல்லாரையும் ரொம்ப மிஸ் பண்ணுவேன் பாட்டி" எனக் குரல் தளுதளுக்க அவரது தோளில் சாய்ந்தாள் கமலி. எப்போதும் திடமாக இருக்கும் அலமேலுப் பாட்டிக்குப் பார்த்த சில தினங்களில், இந்தச் சிறு பெண் தங்கள் மீது வைத்த பாசத்தில் நெகிழ்ந்து போனவராக, அவளை ஆறுதலாக அரவணைத்துக் கொண்டார்.



**********



அதே நேரம் மருத்துவமனையில்.



முன் தினம் ஆதவன் வீட்டிற்குச் சென்று கமலியைக் கைப்பற்றி வராமல் போனது மட்டுமின்றி, அடியும் வாங்கி வந்திருந்த தனது ஆட்களை மருத்துவமனையில் சென்று பார்த்தவன், ஆத்திரத்தில் இரத்தம் கொதிக்க நின்றிருந்தான் துர்கேஷ்.



"ஏன்டா, தடி தடியா இத்தனை பேர் போய் இருக்கீங்க? வேளா வேளைக்கு நல்லாக் கறியும் மீனுமா கொட்டிக்கத் தெரியுதுல்ல? அவனுங்க பச்சா பசங்க… அந்த இரண்டு பேரை உங்களால் திருப்பி அடிக்க முடியலை?" கோபத்தில் கதிரையைக் காலால் எட்டி உதைத்தான்.



அவர்களோ எதுவும் பேச முடியாமல் மௌனமாக இருக்க, "அந்தச் சிறுக்கி கமலி என்ன ஆட்டம் காட்டுறாள்? முதல்ல அவனுங்களைச் சாய்க்கிறேன். அப்புறம் உன்னைத் தொடுறேன் டி. உன் கூட அந்த மீராவையும் சேர்த்து. விட மாட்டேன். யாரையும் விட மாட்டேன். அந்தக் கிழட்டுப் பய ராதா கிருஷ்ணனை நம்பி ஏமாந்தது போதும். நானே ஆட்டத்தில் புகுந்து விளையாடப் போறேன்" சிங்கமாக கர்ஜித்தவனின் கண்கள் இரத்தமெனச் சிவந்து போயின.
 

Sampavi

Vaigai - Avid Readers (Novel Explorer)
Mar 21, 2022
251
158
43
Theni
நைஸ்