• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

விழிகள் - 07

Relay Stories

Vaigai - Avid Readers (Novel Explorer)
Aug 2, 2021
156
186
43
Karur

அத்தியாயம் - 07



வீட்டில் அனைவரும் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருந்த வேளையில், கமலி மட்டும் சொல்ல முடியாத துயர் ஒன்றில் சிக்கியவள் போல, ஜன்னல் கம்பிகளில் முகம் புதைத்துக் கொண்டே வாசலை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தாள்.



"பார்த்தியாடி, உன் சிநேகிதிக்கு இந்த ஆதவன் பயலை விட்டுட்டுப் போக மனசே இல்ல போல... அவன் எப்போ வருவான்னு பார்த்துட்டு இருக்குது. காலையிலயும் ஒழுங்காவே சாப்பிடல..." என்று மீராவிடம் அவளைச் சுட்டிக் காட்டினார் பாட்டி.



"பரவால்லியே அம்மத்தா, நான் உனக்கு லவ் சீன் காட்டின காலம் போக, இப்போ நீ எனக்குக் காட்டுற? நல்ல முன்னேற்றம் தான் போ" என்று அவருக்குத் திருஷ்டி சுத்துவது போல நெட்டி முறித்தாள் மீரா. பேத்தியிடம் உரையாடிக் கொண்டே இருந்தாலும் பாட்டியின் கவனமெல்லாம் கமலியின் மீதுதான்.



சோர்வையும் மீறி அவள் கண்கள் திடீரெனப் பளிச்சிட, "ஆதவன் பையன் காரு வெளில நிக்கிதா பாரு?" என்று பாட்டி கேட்க மீரா ஆச்சரியமாகப் பார்க்க, கையில் ஒரு பையுடன் அதிவிரைவாக வந்தான் ஆதவன்.



எடுத்த காரியத்தைச் செவ்வனே சிறப்பாக முடிக்கும் வரை, ஆதவன் எப்போதும், ஆதவன் 2.0 போலத்தான் இருப்பான். இப்போதும் அப்படித்தான் கால்களில் சக்கரம் கட்டிவிட்டது போல அவர்களை நோக்கி வந்தான். பாட்டியையும் மீராவையும் கவனிக்காமல் கமலியிடம் சென்று நின்றான்.



"உன் போன் கொடு"



"எதுக்கு?"



"கொடும்மா" என்று அவன் சொல்லவும், அவளுக்கு அவன் சொன்ன "மா" இத"மா"க இருந்தது. அடுத்து நடக்கப் போவது அறியாமல்.



"இந்தா இதைப் போட்டுக்கோ... நாம போற இடத்துக்குச் சேருற வரைக்கும் இதுதான் உன் காஸ்ட்யூம்... போட முடியாது, வெயிலா இருக்கு, பழக்கமில்லை, இப்படியெல்லாம் காரணம் சொல்லாமல் போட்டுட்டு ரெடி ஆகு" என்றவன் மீரா பக்கம் திரும்பி,



"ஹேய் குள்ளபேட்டா, நீ பண்ண அதிகப்பிரசங்கித் தனத்தை நான் கவனிக்கலன்னு நெனைச்சு புதுசா ஸ்கெட்சு போடாத... அவளுக்கு போன், சிம், எதுவும் கொடுக்காத… நான் வேற ஏற்பாடு பண்ணி வைக்கிறேன்" என்றுவிட்டு அங்கிருந்து அகன்றான்.



அதற்குள், கமலி அந்த ஆடையைப் பிரித்துப் பார்த்துக் கண்களை அகல விரித்தாள்.



"ஐய் ஹூடீ(hoodie)" என உச்சஸ்தாயியில் உணர்ச்சி வசப்பட்டாள் மீரா. ‘இந்தச் சாக்கு பையிலா வாழ வேண்டும்?’ என்று நினைத்த கமலிக்கு, அப்போதே மூச்சு முட்டுவது போல இருந்தது. ஆனால் மீராவோ, காணாததைக் கண்டது போல மகிழ்ந்தாள். தன்னியல்பும் மீறிக் கமலி சீறினாள்.



"ஹேய் பிசாசு, இந்தச் சாக்குப் பைக்கு ஏன்டீ இவ்வளோ எக்ஸைட் ஆகுற?" கமலி கேட்கவும்,



"அடக் கிறுக்கி, இப்போல்லாம் இதுதான் ட்ரெண்டு… இதைப் போட்டுக்கிட்டு, டான்ஸ் ஆடுனா பார்க்கவே ஸ்டைலா இருக்கும். அதைவிட முக்கியமா அந்த ஹூடியோட தொப்பையைப் பாரேன்" என்றவாறு சட்டையைப் பிடுங்கி வயிற்றுப்பகுதியைக் காட்டினாள்.



இருபுறமும் துளை கொண்டு கைகளைப் பொருத்திக் கொள்ளவும், எதையாவது வைக்கவும் தாராளமாக இடம் இருக்கவும், அதைக் காட்டி, "பார்த்தியா, எவ்வளோ பெரிய பாக்கெட்? இந்த டிரஸ் போட்டால் பேகே தேவை இல்லை... எல்லாத்தையும் இதுக்குள்ள சொருகி வெச்சுடலாம்" என்று மீரா ஆர்ப்பரிக்க,



"பேக் (bag) எதுக்கு? அதான் பேக்கு நீயே இருக்கியே" என்று முணுமுணுத்தாள் கமலி.



ஆதவனிடம் பேசிவிட்டுத் தனது ஜோடிப் புறாவைப் பார்க்க வந்த மாது, மீராவின் ஆர்ப்பரிப்பைத் தூரத்தில் இருந்து ரசித்துக் கொண்டிருந்தான். ‘கவலைனா என்னனு தெரியுமா என் ஜிலேபிக்கு? எப்பவும் எப்படித்தான் இவ்வளவு எனர்ஜெடிக்கா இருக்காளோ? இடியே விழுந்தாலும் தூசி தட்டுறது மாதிரி தட்டுவா... ஆனால், அப்பப்போ நம்ம தலைல இடியை இறக்கிடுவா’ என்று மனதிற்குள் சிலாகித்துக் கொண்டிருந்தவனின் காதில்,



"நான் மட்டும் இதைப் போட்டேன்னு வெச்சுக்கோயேன்" என்று மீரா தொடங்கிய வாக்கியத்தை,



"கமலிக்காக செஞ்சு வெச்சுருந்த பலகாரத்தை ஆட்டயப் போட்டு இதுக்குள்ள ஒளிச்சு வெச்சுத் தின்னுவ… அதானே ஜில்லு?"என்றான்.



கண்களைச் சுருக்கி அவனைச் செல்லமாய் முறைத்த மீரா, "அதென்னவோ சரிதான்… ஆனா இந்த மாதிரி சரியான டைமிங்கில என்னைய டேமேஜ் பண்ணப் பார்த்த, உன்னையே கடிச்சுத் தின்னுடுவேன்" என்றாள்.



"அதற்காகத்தான் நானும் காத்திருக்கேன் தேவி" என்று சன்னக் குரலில் சொன்னவன், கமலியிடம் சில புத்தகங்களைக் கொடுத்தான். "இதெல்லாம், ஆது... ம்ஹ்ம் இந்த மாதவனோட புக்ஸ், அங்க போரடிச்சால் படிங்க" என்றான்.



"புக்குக்கும் உனக்கும் என்ன மேன் சம்பந்தம்?" என்று மீரா எடுத்துக் கொடுக்க, அவள் வாயை வலுக்கட்டாயமாகப் பொத்தியவன், "கமலி, லேட் பண்ணாதீங்க... ப்ரோக்கு கோவம் வரும்" என்று விட்டு மீராவையும் தள்ளிக் கொண்டு வெளியேறினான். அடுத்தடுத்து மூச்சு விடவும் நேரமின்றி ஓடப் போகிறோம் என்று அறியாத கமலி, மூச்சு முட்ட அந்த உடைக்குள் தன்னைப் பொருத்திக் கொண்டு அறையிலேயே அமர்ந்து கொண்டாள்.



உணவு மேஜை இருக்கும் இடத்தில் பேச்சு சத்தம் அதிகமாக இருந்தது. ஏதோ ஒரு உந்துதலில், கமலி அங்கே வர, "வாம்மா இப்போதுதான் உன்னையக் கூட்டிட்டு வரச் சொன்னேன்… வந்து சாப்பிடு" என்றார் சுந்தரம்.



மரியாதை நிமித்தமாய் புன்னகைத்த கமலி, அங்கிருந்த நால்வரையும் ஆச்சரியமாகப் பார்த்தாள்.



"ஹாய் சிஸ்ட்டர்" என்றனர் நான்கு ஆண்களும். ஆதவன், மாதவனின் வயது ஒத்த இளைஞர்கள் தான் அவர்கள். கண்டவுடனேயே, நட்பு பாராட்டத் தோன்றும் இலகுவான முக லட்சணம் அவர்களுக்கு. "ஒண்ணும் பயப்படாதீங்க... நீங்களும் இனி நம்ம செட்டு" என்றான் நால்வரில் ஒருவன்.



"உங்களை பத்திரமாய்க் கொண்டு சேர்ப்பது எங்கள் பொறுப்பு" என்றான் மற்றொருவன்.



தான் அணிந்திருந்த அதே உடையைத்தான் அவர்களும் அணிந்து இருந்தார்கள். கமலியின் மூளை எல்லாப் புள்ளிகளையும் இணைக்க முயற்சி செய்தது. இந்தத் தோற்றத்தில் தன்னைப் பெண் எனக் கண்டு கொள்வது கொஞ்சம் சிரமம் தான். இதில் இவர்களும் அதேபோல உடையில் இருப்பதற்குக் காரணம், அவர்களுக்குள் ஒருவராக இவளை இடமாற்றப் போகிறானா ஆதவன்? என்று கணக்குப் போட்டவள்,



‘ஏன்? இவரே கூட்டிட்டுப் போக மாட்டாரோ? நேத்து நான் அவரோட முழுப் பொறுப்புன்னு சொன்னாரே? இப்போ பொறுப்பு பருப்பாகி அடுப்பில் வேகுதோ?’ என்று பொருமிக் கொண்டே அவனை விழிகளால் ஆராய்ந்தாள் கமலி.



ஆதவனோ, மருந்திற்கும் அவள் பக்கம் திரும்பவில்லை. ஆனால், சற்று முன்பு இறுக்கமாக இருந்தது போல இல்லாமல், சிரித்துக் கொண்டு உணவருந்திக் கொண்டிருந்தான் அவன். ‘ஒருவேளை என்கிட்டப் பேசத்தான் கசக்குதா? ஆமா, பிரச்சனைக்கு மேல பிரச்சனை தரும் என்னைய யாருக்குத்தான் பிடிக்கும்?’ இப்படியெல்லாம் தானே கேள்வியாகி, தானே பதிலுமாக மாறித் தனக்குள்ளே உரையாடிச் சோர்ந்து கொண்டிருந்தாள் கமலி.



அவள் முகத்தில் இருந்து என்ன உணர்ந்தானோ, நால்வரில் ஒருவனான அருண், தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டு அவளிடம் பேச்சுக் கொடுத்தான்.



"என்னம்மா பயம்மா இருக்கா"



"இ..இல்ல… அ..அண்ணா… ஒரு மாதிரி பாரமா இருக்கு?"



"என்னாச்சு?"



"எனக்காக எவ்வளவு பேரு கஷ்டப்படுறீங்க?"



"கண்ணு, கஷ்டப்படாமல் எதுவும் கெடைக்காது... கஷ்டப்படாமல் கிடைக்கிறது என்னைக்குமே நிலைக்காது" என்று சூப்பர் ஸ்டார் தோரணையில் சொன்னவன், "ஒரே ஒரு வாழ்க்கை, அதை நிம்மதியா வாழனும்... அதுக்காகக் கஷ்டப்பட்டால் தப்பில்ல... சில் சில்" என்று சொன்னவன், பிறகு ஏதேதோ பேசி அவளைச் சாப்பிட வைத்தான். பாட்டிக்கே லேசாகக் குறுகுறுப்பாக இருக்க, மீராவின் காதைக் கடித்தார்.



"என்னடி, உன் ஆது இவளைப் பார்க்கவே மாட்டுறான்... இந்த அருண், அவளைப் பார்க்கவே விட மாட்டுறான்? முக்கோணக் காதல் கதை ஆகிடப் போகுது" என்றார்.



"ஏ கெழவி, ஆது ரொம்ப பொஸசிவ், அவனுக்குப் புடிச்ச விஷயத்தை அவ்வளவு சீக்கிரம் விட்டுத் தர மாட்டான்... என்னவோ இருக்கு இதுல" என்றாள் இளையவள்.



அனைவரும் உணவருந்திவிட்டு, அவர்களது கல்லூரிக் கதைகளைப் பேசிக்கொண்டு இருக்க, நால்வரில் இருவர், அவர்கள் வந்திருந்த காரின் முன் நின்று ஏதோ பேசிக்கொண்டு இருந்தார்கள். கமலிக்காகச் சமைத்த உணவு, பொடி, பலகாரம் எல்லாம் ஏற்கனவே அந்தக் காரில் வைக்கப்பட்டிருக்க, அதில்தான் தான் புறப்படுவோம் என்று கணித்திருந்தாள் கமலி.



இறுதியாக ஒரு பிரியாவிடை உரையைக் கூட இரத்தினச் சுருக்கமாய், மனதிற்குள் அவள் அசைபோடும்போது,



"செல்லம்மா, தங்கச்சி..." என்று கூவிக்கொண்டே வந்தான் அருண்.



"என்ன அண்ணா?"



"உன் திங்ஸ் எல்லாம் ரெடியா?" என்று அவன் கேட்க, ஒரு பையைக் காட்டினாள் கமலி.



"வெரி நைஸ்... சரி காரு பின்னாடி இடம் இல்ல… நீ பின் சீட்டுல ஜன்னல் பக்கமா இந்த பேக்கை மட்டும் வெச்சிட்டு வா" என்று அவளை அனுப்ப, "கமலி" அழுத்தமாக அழைத்தான் ஆதவன். உணர்வேதும் வெளிப்படுத்தாமல், அதே நேரம் வேறு எங்கும் காணாமல். அவளையே பார்த்த வண்ணம் எட்டு வைத்து வந்தவன் இரு கைகளால் அவள் தோளை அணைப்பது போல நெருங்கினான்.



மீரா உட்பட அனைவருக்குமே அந்த நொடி இதயத்துடிப்பு பல மடங்காகிட, அவளது ஆடையில் பின் பக்கத்தில் இருந்து தலைக்கவசம் போல, நெற்றி வரை மூடும் பகுதியை இழுத்து அவளுக்கு அணிவித்தான். சில நொடிகள் என்றாலும், இப்படி நெருங்கி விட்டானே, என்று கமலிக்கே நாணமாய் வந்தது. அவனோ எதையும் பிரதிபலிக்காத முகத்தோடு "அங்க போயி சேருற வரைக்கும் முகத்தை இப்படி மறைச்சுக்கோ... அந்தத் தீனிமூட்டையோட மிச்ச ஆட்கள் இன்னும் கூட நம்ம வீட்டை நோட்டம்விட வாய்ப்பு இருக்கு, அதனால விறுவிறுன்னு காருக்குள்ள உட்கார்ந்து பையை வெச்சுட்டு வெடுக்குன்னு வா..." என்று சொன்னவன்,



அவள் மிரள்வதைப் பார்த்துச் சின்னச் சிரிப்போடு, "மின்னல் மாதிரிப் போயிட்டு, மின்னல் மாதிரி வரணும்" என்றான்.



அவன் சிந்திய புன்னகை அவள் இதழையும் அடையாமல் இல்லை. நாலாபுறமும் தலை ஆட்டியவள், நடக்கும்போது கொஞ்சம் சிரிப்பாகத்தான் இருந்தது. அவளது ஒல்லியான தேகத்திற்கு அந்த ஆடை நிஜமாகவே சாக்குபை போலத்தான் இருந்தது. கமலி நடக்கத் தொடங்கவும்,



"மச்சி, பத்திரம்" என்று ஆதவன் சொல்ல தலை அசைத்தான் அருண். இரண்டடி இடைவெளி விட்டுக் கமலியைப் பின்தொடர்ந்த அருண், ஆதவன் சொன்னதுபோல கமலி காரில் ஏறி அமரப்போகும் அந்தச் சில நொடிகளில் அவளைத் தள்ளி, தானும் ஏறி அமரக் கார் புயல் வேகத்தில் கிளம்பியது. என்ன நடந்தது என்று சுதாரிக்கும் முன்னரே, தன் தோழியும், அவள் குடும்பமும் சிறு புள்ளியாக மறைவதைக் கண்டு கமலிக்கு அழுகையாய் வந்தது. "சாரி மா" என்றவன் அவள் கையில் ஒரு "அந்தக் காலத்து அலைப்பேசியைத் திணித்தான்.



"ஹலோ" விம்மியபடி கமலி பேச,



"நான்தான்" என்றான் ஆதவன்.



"..."



"கோவமா இருக்கியா?"



"..."



"சரி நான் சொல்றதை கவனமாக் கேளு... நான் உன்னைத் தனியா விடல... நான் வருவேன்… நாந்தான் உன்னை அங்க அழைச்சுட்டுப் போவேன்... நான் உடனே கெளம்பினா அந்த வானர கோஸ்டிக்குச் சந்தேகம் வரும். நீ நிம்மதியா அங்க இருக்கணும்னா இப்போ நாம பண்ணுற விஷயம் எதுவும் யாருக்கும் தெரியக் கூடாது, புரிஞ்சுதா?” என்றான்.



"எப்போ வருவீங்க?" அவன் சொன்ன அத்தனையிலும் அவளுக்கு எழுந்த கேள்வி என்னவோ அது மட்டும் தான்!"



"வருவேன்..." என்றவன் அழைப்பை உடனே துண்டித்து விட்டிருந்தான். அலைப்பேசியை கமலி அருணிடம் கொடுக்க, "இல்லம்மா இது உனக்குத்தான், வெச்சுக்க" என்றான். "வருவேன்" என்று சொன்ன ஆதவனைச் சந்திக்கும் தருணத்தை எதிர்நோக்கித் தூரமாய் சென்று கொண்டிருந்தாள் கமலி. சந்திப்பார்களா?



காரில் முக வாட்டத்துடன் அமர்ந்திருந்த கமலியைச் சிரிக்க வைப்பதற்காக அருண் எவ்வளவோ முயற்சி செய்தான்.



பெற்றோரை விட்டு விட்டு எளிதாக வந்த கமலியால், மீராவின் வீட்டை விட்டு வந்ததை எளிதாக எடுத்துக் கொள்ள முடியவில்லை.



அவளின் உயிர் அங்கேயே நின்று விட்டு, வெறும் உடல் மட்டும் நகர்வதைப் போல் உணர்ந்தாள். அவளைப் பேச வைக்க முயன்ற அருணும் கடைசியில் தோற்றே போனான்.



நடந்த நிகழ்வின் தாக்கத்தில், கண்களை மூடித் தன் உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்த முயன்ற கமலி, முடிவில் உறங்கிப் போனாள்.



இடையில் எங்கும் நிற்காமல் கார் அசுர வேகத்தில் பறந்தது. பல மணி நேரத்திற்குப் பிறகு மெல்லக் கண்களைத் திறந்து பார்த்த கமலி, தன்னைச் சுற்றித் தெரிந்த கும்மிருட்டில் மிரண்டு போனாள்.



பயத்தில் நடுநடுங்கியவள், "அருண் அண்ணா, கொஞ்சம் வண்டியை நிப்பாட்ட முடியுமா?" என்றாள்.



"ஏன்டா?" என்றான் அருண்.



"அது... அது... ரெஸ்ட்ரூம் போகணும்" என்றாள் தயங்கித் தயங்கி.



கார் நின்றதும், அவளிடம் ஒரு பெரிய மரத்தின் பின்பகுதியைச் சுட்டிக் காட்டினான் அருண்.



தயக்கத்துடன் தலையசைத்துக் கொண்டு, அணிந்திருந்த உடையால் முடிந்தவரை தன்னை மறைத்துக் கொண்டு, மெல்ல மரத்தின் அருகே சென்றாள்.



அவர்களின் காரைக் கடந்த மற்றொரு கார், தங்கள் வேகத்தைக் குறைத்து இவர்களை நோட்டமிட்டதும், அருணின் கண்ணசைவில் மற்றொரு நண்பன், "டேய், பீர் குடிக்காத குடிக்காதன்னு சொன்னா கேட்டியா? பாட்டில் பாட்டிலாக் குடிச்சிட்டு ஒவ்வொரு மரத்துக்காக உரம் போட்டுட்டு இருக்க?” என்று கமலி சென்ற திசையைப் பார்த்து நக்கல் போல் கூறினான்.



தன் வேகத்தைக் குறைத்த அந்தக் கார் மீண்டும் வேகம் எடுக்க நகர்ந்தது.



மெதுவாகத் திரும்பிய கமலியின் பாத சத்தத்தில், கல் இடுக்கில் பதுங்கி இருந்த தவளை துள்ளி அவள் மேல் விழ, “வீல்…” என்று அலறிக் கத்தினாள்.



அவர்களைக் கடந்து சென்ற கார் சடன் பிரேக் உடன் நின்றதும், சுதாரித்துக் கொண்ட அருண், கமலியின் கைகளைப் பிடித்து இழுத்துக் காரினுள் அடைத்து, காரை வேகமாக இயக்க உத்தரவிட்டான். ஆனால் அருணின் காரை, நகர விடாமல் அந்தக் கார் குறுக்காக வந்து நின்றது. கமலியின் இதயம் வாய்க்குள் வந்து துடித்தது. முடிந்தவரை தன் முகத்தைச் சரிவாக மறைத்துச் சீட்டோடு ஒன்றினாள்.



"ஏதோ பொண்ணு சத்தம் கேட்டது?" என்று அவர்களைக் கடந்து சென்ற காரில் இருந்த ஒருவன் கேட்டான்.



"ப்ரோ அப்படியெல்லாம் எதுவும் இல்ல ப்ரோ" என்றான் அருண்.



"டேய், துர்கேஷ் சார், பொண்ணத் தேடச் சொன்னால், ஊர்ல இருக்க எல்லாப் பெண்ணையும் தேடுவீங்களாடா? எவனோ என்னமோ பண்ணிட்டுப் போறான். வந்து காரை எடுத்துத் தொலைங்கடா. அந்தப் பொண்ணக் கூட்டிட்டு வரலைன்னா நம்ம கதையை எல்லாம் முடிச்சிடுவாரு டா.



அந்த வீட்ல அந்தப் பொண்ணு இல்லைன்னு தானடா அந்த இன்பார்மர் சொன்னான். இவங்க கூட தான் அந்தப் பொண்ணு இருக்குனு யாருடா சொன்னது. எரிச்சலைக் கிளப்பாம காரை எடுங்கடா" என்று கோபப்பட்டான் காரில் இருந்த மற்றொருவன். துர்கேஷ் என்ற வார்த்தையைக் கேட்டதும், கமலிக்கு கண்ணைக் கட்டிக் கொண்டு வந்தது. அருணின் பயம் அவன் நெற்றியில் அரும்பிய வியர்வைத் துளிகளில் தெரிந்தது.



"சும்மா இருடா. ஒருவேளை அந்தப் பசங்க இவங்களா இருந்தா? எதுக்கும் ஒரு தடவை செக் பண்ணிட்டு வரேன்" என்ற துர்கேஷின் கையாள், அருணின் கார் அருகே வந்து, பின் சீட்டை ஜன்னல் வழியே எட்டிப் பார்த்தான். நத்தை போல் சுருண்டு பதுங்கி இருந்த கமலி, தன் முகத்தைச் சீட்டோடு புதைத்துக் கொண்டிருந்தாள் பயத்தில். அருளும் அவன் நண்பர்களும் சண்டைக்குத் தங்களை தயார் படுத்திக் கொண்டனர்.



"ஏய் தம்பி உன் முகத்தைக் காட்டுடா. பொம்பளக் குரலில் நீ கத்தியதும் எனக்கு ஒரு டவுட்டு" என்றவனின் கை அவள் தலையில் பொருந்தி இருந்த ஆடையைச் சற்று விலக்க, அவன் மேல் எழுந்த மது வாடையிலும் சிகரெட் வாடையிலும் முகம் சுளித்த கமலி, குமட்டிக் கொண்டு அவன் முகத்தின் மீதே வாந்தி எடுத்தாள். மீண்டும் ஓங்கரிப்பு போல் வர தன் மடியில் முகத்தை மறைத்துக் கொண்டாள்.



"அடச்சை... மப்பு ஓவராகி வாந்தி எடுக்கிறான். உன்னச் சந்தேகப்பட்டது தப்புன்னு மூஞ்சில வாந்தி எடுத்து நிரூபிச்சிட்ட" என்றவனின் முகத்தைக் கழுவ அருண் தனக்குள் எழுந்த சிரிப்பை அடக்கிக் கொண்டு தண்ணீர் பாட்டிலை நீட்டினான்.



"தேங்க்ஸ் ப்ரோ. டேய், இந்தக் கார்ல எந்தப் பொண்ணும் இல்ல. வழிய விடுங்கடா" என்று தன் கூட்டத்தினருக்கு உத்தரவு கொடுக்க, அருணின் கார் சீறிப் பாய்ந்தது.



"சூப்பர் கமலி, சூப்பர்!" காரில் இருந்தவர்கள் அனைவரும் பெருஞ்சிரிப்புடன் அவளைப் பாராட்ட, அவளின் காதுக்குள் எதுவும் விழவில்லை. அவள் பயத்தில் மயங்கித் தன்னை மடி மீதே சரித்து இருந்தாள்.



கார் காட்டுப் பாதைக்குள் நுழைந்தது.

 
  • Like
Reactions: Samithraa