• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

விழிகள் -08

Vathani

Administrator
Staff member
Jul 23, 2021
949
434
93
Tirupur
அத்தியாயம் - 08 (அனுபமா)

அடிபட்ட புலியாய் தன் அறையினுள் உலாவிக் கொண்டிருந்த ராதாகிருஷ்ணன் மனதில் ஓயாத சஞ்சலம். அவருடைய சிந்தையில் துர்கேஷை எப்படிச் சமாளிப்பது? என்பதைக் குறித்துப் பல யோசனைகள்.

பற்றாக்குறைக்கு இந்தத் திருமணம் நடக்காத காரணத்தால் அவருக்குத் தொழிலில் ஏற்படப் போகும் சரிவுகளும், சந்திக்கப் போகும் பிரச்சனைகளும் மனதில் தோன்றி பீதியைக் கிளப்பின.

*********
அடர்ந்த வனப்பகுதியில் சற்று நேரம் அருண் மற்றும் நண்பர்களுடன் பயணித்த கமலி, பொழுது புலரும் நேரத்தில் பறவைகளின் ஓசையில் தரிசித்தது என்னமோ அழகிய மலர்களின் தோற்றத்தையும் பறவைகளின் கூட்டங்களையும் தான்… எப்பேர்ப்பட்ட காயத்தையும் ஆற்றும் சக்தி, இயற்கைக்கு உண்டு என்பது உண்மை ஆவது போல் கமலியும் தன் பிரச்சனைகளை மறந்து இயற்கையில் இலயித்தாள்.

இயற்கையின் பாதையில் சற்று நேரம் அடர்வனத்தில் பயணித்த காரானது ஒரு மலை கிராமத்தில் ஊர் பொதுத் திடலில் வந்து நின்றது.

அங்கே அவர்களின் கார் ஊர் மக்கள் கூட்டத்தின் இடையே நின்றபோது,

"யாரப்பா அது? ஊருக்குப் புதுசா வந்து இருக்கிறது?" என்று அக்கூட்டத்தில் மிக வயதான ஒருவர் கேள்வி எழுப்பினார்.

காரில் இருந்து இறங்கிய அருண் "வணக்கம் ஐயா... நாங்க சென்னையைச் சேர்ந்தவங்க. இந்த ஊருல இருக்குற வாஞ்சி ஈஸ்வரன் ஐயாவைப் பார்க்க வந்திருக்கோம் ஐயா. அவங்க பேத்தியை அவங்ககிட்ட விட்டுட்டுப் போவதற்காக வந்தோம்" எனச் சொல்ல,

"ஓ! வைத்தியர் ஐயா வீட்டுப் பிள்ளைகளா? அதுதானே பார்த்தேன். ஊரு கட்டுப்பாட்டை மீறி இங்கே யாரும் வர முடியாது. சரி தம்பி இங்கேயே இருங்க ஐயாவை நாங்க அழைச்சுக்கிட்டு வருகிறோம். அவர் பார்த்துச் சரின்னு சொன்னதுக்கு அப்புறமா உங்களை உள்ள அழைச்சுக்கிறோம். அதுவரைக்கும் தப்பா நினைச்சுக்காதீங்க தம்பி இது ஊர் கட்டுப்பாடு. "என்று சொல்லி விட்டு விறு விறு என நடந்தார்.

அவர் சென்ற பத்தாவது நிமிடத்தில் சிவப்பழம் என ஒருவரும், திருமகளை ஒத்த தோற்றமுடைய ஒரு மூதாட்டியும் ஓடி வந்து கொண்டிருந்தார்கள்.

"ஐயா, யாருயா நீங்க? எங்க பேத்தியைக் கூட்டிட்டு வந்ததாய் சொன்னீங்களாமே எங்கய்யா எங்க பேத்தி? கண்ணுல காட்டிடுங்க தங்கங்களா" எனக் கூறியபடியே வந்த வாஞ்சி ஈஸ்வரன்,

ஹுடிக்குள் நின்றிருந்த அனைவரையும் அணைத்து வரவேற்று அவர்கள் வீடு நோக்கி அழைத்துச் சென்றார்.

********

கூண்டுப்புலி போல நடை பயின்ற இராதா கிருஷ்ணன் எண்ணங்களின் தாக்கத்தில் இருந்து விடுபடும் பொருட்டு தன் அறையில் இருந்து வெளியே வந்தார்.

அந்த நேரம் சாந்தியும் ராஜராஜனும் தங்களுக்குள் கமலி பற்றிய கவலையைப் பகிர்ந்து கொண்டிருந்தார்கள்.

"என்னங்க, நம்ம போய் பார்த்தும் கூட அங்க நம்ம பொண்ணு இல்ல… என்ன சொன்னாலும் துர்கேஷும் நம்ப மாட்டேங்குறான். பெரியவரும் ஒத்துக்க மாட்டேங்குறாரு... என்னங்க இப்படி ஆச்சு. அவங்க என்னங்க பொண்ண வச்சுக்கிட்டு அனுப்பாமல இருக்கறாங்க... நம்மளே நேராப் போய் பார்த்துட்டு வந்துட்டோம். பொண்ணு அங்க இல்ல. அப்ப நம்ம என்ன பண்ண முடியும்?

"தவறவும் இந்தத் துர்கேஷுக்கு கல்யாணம் பண்ணிக் கொடுக்கறதுக்குப் பேசாம நம்ம பொண்ண நம்மளே கொண்டு போய் பாழும் கிணற்றில் தள்ளிடலாம். அடியாள் எல்லாம் வைத்து ரகளை பண்ணி அடி வாங்கி அசிங்கப்பட்டு வந்தது தான் மிச்சம்…"

எனத் தன் போக்கில் பொருமிக் கொண்டிருக்க, இவை யாவற்றையும் பின்னிருந்து கேட்டுக் கொண்டிருந்த ராதா கிருஷ்ணன் கொதி நிலையை அடைந்தார்.

"போதும்மா நிறுத்து. விட்டா ரொம்பத்தான் பேசிக்கிட்டே போற. உன் பொண்ணால இப்ப துர்கேஷ் கிட்ட நான் எவ்ளோ அவஸ்தைப் படறேன் தெரியுமா?"

"என் பிசினஸ்ல எவ்ளோ பிரச்சனையை உண்டு பண்ணி இருக்கான் தெரியுமா? கஷ்டப்பட்டு நான் வளர்த்த குழந்தைமா என் பிசினஸ். நம்ம குடும்பம் இவ்வளவு செழிப்பா இருக்குறதுக்குக் காரணமே அந்தப் பிசினஸ் தான். அதுக்கு ஏதாவது பிரச்சனைனா… அது உன் பொண்ணால வந்துச்சுன்னா, உண்டு இல்லைன்னு பண்ணிடுவேன்..."

"சும்மா சும்மா வெட்டி நியாயம் பேசிட்டு இருக்காம உன் பொண்ணக் கூட்டிட்டு வந்து கன்வின்ஸ் பண்ணி அவனுக்குக் கல்யாணம் பண்ணி வைக்கிற வழியப் பாருங்க. அது முடியலன்னா தயவு செஞ்சு இந்த வீட்டை விட்டு வெளிய போயிடுங்க" எனக் கத்தி விட இதுவரை இந்தக் கோபத்தை எதிர்பார்க்காத ராஜராஜனும் சாந்தியும் விக்கித்து நின்றார்கள்.

*************

இங்கே துர்கேஷின் கோட்டையில் கமலியைத் துரத்திக் கொண்டு சென்ற அடியாட்கள் அனைவரும் அவள் கிடைக்கவில்லை என்ற தகவலையே தந்து கொண்டிருக்க, ஆத்திரத்தின் உச்சத்தில் இருந்த துர்கேஷ் தன் பொருட்கள் அத்தனையும் உடைத்து அந்த இடத்தையே ரணகளம் ஆக்கிக் கொண்டிருந்தான்.

அப்போது அவனுடைய அடியாள் ஒருவன் "அண்ணே, நாங்க சென்னையில் இருந்து திருச்சி போற பாதையில தேடிக்கிட்டுப் போன போது ஒரே ஒரு கார் மட்டும் ஓரம் கட்டி நின்னுகிட்டு இருந்தது. அந்தக் கார்ல இருந்து ஒருத்தன் இறங்கி பாத்ரூம் போய் இருந்தான். ஆனால் அவனைப் பார்க்கும்போது பொண்ணு மாதிரி இருந்தது. ஆனா இருட்டுல சரியாத் தெரியல. அதனாலயும் ஒரு சந்தேகத்தில் கிட்ட போய் பார்க்க முயற்சி பண்ணினோம் அண்ணே. ஆனா அது பொண்ணு இல்லன்னு ரங்கன் கன்ஃபார்மா சொன்னதுனால விட்டுட்டு வந்துட்டோம்... திருப்பி வேணா அந்தப் பக்கம் போய் தேடிப் பார்க்கலாமா?" எனக் கேட்க,

"அதைக் கேட்காமல் செய்யுங்கடா முண்டங்களா... எனக்கு எப்படி இருந்தாலும் அவ வேணும்... இரு நானும் உன் கூட வரேன் அது எந்த இடம் டா அது?"

"வண்ணக்காடு போற வழி அண்ணே" எனச் சொல்ல, சுதாரித்த ரங்கன், "அண்ணே! அது வண்ணக்காடு போற வழியா இருந்தா நிச்சயம் அவங்க அங்க உள்ளே போகவே முடியாது அண்ணே. அந்த மலை கிராமத்துக்குள்ள சொந்த பந்தம் இருந்தால் மட்டும்தான் உள்ள போக முடியும்... ஆகையால் அதுக்கு வாய்ப்பே இல்லை" எனக் கதற,

"எதுவா இருந்தா என்னடா? வாங்க நம்ம திருப்பிப் போய் அந்தப் பக்கம் தேடிப் பார்ப்போம்" என துர்கேஷும், அவன் அடி ஆட்களும் வண்ணக்காடு கிராமத்தை நோக்கிக் கிளம்பினார்கள்.

துர்கேஷின் கைகளில் கமலி சிக்குவாளா? சொந்த பந்தமற்ற கமலி வண்ணக்காடு கிராமத்துக் கட்டுப்பாட்டை மீறி உள்ளே வந்திருக்கிறாள். அங்கு அவளுக்கு நடக்கப் போவது என்ன?

***********

ராஜராஜனும் சாந்தியும் விக்கித்து நின்ற நேரத்தில் ராதாகிருஷ்ணன் மேலும் மேலும் தன் கோபத்தைக் காண்பிக்கப் பொறுமை இழந்த ராஜராஜனும்,

"போதும் நிறுத்துங்க ரொம்பப் பேசிட்டே போறீங்க. என் பொண்ணைப் பார்த்துக்க எங்களுக்குத் தெரியும். இதுவரைக்கும் நாங்க இங்க இருந்ததே எங்க பொண்ணுக்காகதான். எப்ப அவளையே உங்க சுய லாபத்துக்காக துர்கேஷ் மாதிரி ஒரு ஆளுக்குக் கல்யாணம் பண்ணிக் கொடுக்கிறதுக்கு ரெடி பண்ணறீங்களோ அப்பவே உங்களப் பத்திப் புரிஞ்சு போச்சு. இனி நானும் இங்க இருக்க மாட்டேன். என் பொண்ணும் இங்க வரமாட்டா உங்க சொத்து, சுகம் எதுவும் எங்களுக்கு வேண்டாம். எங்களுக்கும் தனி சம்பாத்தியம் இருக்கு, வீடு இருக்கு, வாசல் இருக்கு. அதனால நாங்க தனியா போய்க்கறோம்."

"கிளம்பு சாந்தி இனி ஒரு நிமிஷம் கூட இந்த வீட்ல நம்ம நிக்கக்கூடாது." எனச் சொல்லிக் கொண்டே கிளம்ப ஆயத்தமானார் ராஜராஜன்.

**********

இங்கே வண்ணக்காடு கிராமத்தில் பேரப் பிள்ளைகளை வீட்டுக்கு அழைத்து வந்த வாஞ்சி ஈஸ்வரன் தாத்தாவோ, "பிள்ளைகளா, வீட்டுக்கு வந்துட்டோம். எல்லாரும் உடுப்பைக் கழற்றிப் போட்டுட்டு கை கால் கழுவிட்டு வாங்கப்பா. வயித்துக்கு ஏதாவது ஆகாரம் செஞ்சுக்கலாம்." எனக் கூற,

ஒவ்வொருவராகச் சென்று கை கால்களை அலம்பி வந்தார்கள். அவர்கள் உள்ளே வந்தவுடன் "எங்கப்பா பேத்திப் பொண்ணு?" என மீராவை எதிர்பார்த்த வாணி அம்மையின் கண்களில் பட்ட கமலியைக் கண்டவுடன் வாணியம்மை அதிர்ச்சி அடைந்தார்.

"யாரப்பா இது? மீராப் பொண்ணு எங்கப்பா?" எனக் கேள்வி எழுப்பிய வாணி அம்மையை, "வாணி, கொஞ்சம் பொறு. பிள்ளைகளுக்கு ஆகாரம் கொடு. எல்லாத்தையும் நான் உன்கிட்ட விபரமாய் சொல்றேன்." என்ற தாத்தாவின் குரல் அடக்கியது.

************
மறுபுறம் துர்கேஷின் அடியாட்கள் கமலியைத் தேடி வண்ணக்காடு நோக்கிப் புறப்பட்டனர்.

சும்மா ஆடின சாமிக்கு கொட்டடித்தார் போல துர்கேஷும் அவர்களுடன் இணைந்து கொண்டதும் ஆக்ரோசத்தின் உச்சத்தில் தேடல் துவங்கியது. அந்தத் தேடலைக் காணும் பொழுது வெறி கொண்ட வேங்கை தன் இறையான புள்ளி மானைத் தேடுவது போல இருந்தது.