• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

விழிகள் - 09

Relay Stories

Vaigai - Avid Readers (Novel Explorer)
Aug 2, 2021
156
186
43
Karur

அத்தியாயம் - 09 (பானுரதி)



குறிஞ்சி நிலமும், முல்லை நிலமும் கை கோர்த்து நிற்பது போல், கண்ணுக்கெட்டிய தூரமெங்கிலும் மலைகளும் காடுகளும் பரந்திருக்க, மலைக்காற்று மெல்ல வந்து மலைவாழ் மக்களை நலம் கேட்டுச் செல்ல, விதம் விதமான பட்சிகளின் கானம் காது தீண்டிச் சென்று கொண்டிருந்தது.



அதே நேரத்தில் வாஞ்சி ஈஸ்வரனின் அந்த அளவான பெரிய ஓட்டு வீட்டின் உள்ளே தலை குனிந்தபடி அமர்ந்திருந்தாள் கமலி. ஈஸ்வரன் கண் ஜாடை காட்ட, அவளின் முன்னால் வாழை இலையைப் போட்டுக் காலை உணவைப் பரிமாறினார் வாணியம்மை.



இயற்கையின் எழில் கொஞ்சும் அழகால் கூட, கமலியின் மனதின் கனத்தைக் கலைக்க முடியவில்லை. அவளின் மனம் முழுவதும் மீரா இங்கே வர மாட்டாளா? எப்போது வந்து சேருவாள்? என்பதிலேயே இருந்தது. ஏக்கம் மீராவின் பெயரில் இன்னொருவனின் வருகைக்காகத் தான் என்பதைக் கமலி மறைத்தாலும், அவள் மனதிடம் அவள் தன்னை மறைக்க முடியுமா?



‘ஏய் நீ ஆதவனைத் தானே எப்போ வருவான்னு பார்த்திட்டு இருக்க? பிறகு ஏன்டி நடுவில மீராவை இழுக்கிறாய்…’ எனக் கமலியின் மனசாட்சி அவளைக் கேள்வி கேட்க,



‘அப்புடியெல்லாம் இல்லையே... எல்லாரும் வந்தா ஜாலியா இருக்குமேனு தான் யோசிச்சனே தவிர… யார் மேலும் எனக்குத் தனிப்பட்ட எதுவுமே இல்லை…’ என பதில் கொடுத்த கமலியை முறைத்த மனசாட்சி,



‘நம்பிட்டன் நம்பிட்டன். போடி அந்தப் பக்கம்… கண்ணாளனே எனது கண்ணை நேற்றோடு காணவில்லைனு பாடிட்டுச் சுத்தறியா இல்லையான்னு பார்ப்போம். அப்புறம் இருக்குடி உனக்கு…’ என்றபடி ஓரமாகப் போய் விட்டது.



கமலியோ இலையில் கிடந்த உணவை அளைந்து கொண்டிருந்தாள்.



‘எனக்கும் மனசுக்குப் பிடிச்ச கணவன், மனசுக்குப் பிடிச்ச வாழ்க்கைனு ஒரு நிறைவான வாழ்க்கை கிடைக்காதா?’ என அவள் தன்னுள் உழன்று கொண்டு கிடக்க,



"ஏன் கிடைக்காமல்? கண்டிப்பா கிடைக்கும்!" என்ற வாஞ்சி ஈஸ்வரன் ஐயாவின் குரலில் திடுக்கிட்டு நிமிர்ந்து பார்த்தாள் கமலி.



"இங்க கிடைக்காத மூலிகையே இல்லை தெரியுமா?" எனத் தன் போக்கில் சொல்லிக் கொண்டிருந்தார் அவர். வாணியம்மை தன் கணவரை யார் இந்தப் பிள்ளை என்பது போலப் பார்க்க, ‘சொல்கிறேன் பொறு என்ன அவசரம்’ என்பது போல அவர் தன் மனைவியை அடக்கினார்.



சாப்பிட்டு முடித்து எல்லோரும் வீட்டுத் திண்ணையில் இருக்கும் போது, வாஞ்சி ஈஸ்வரன் தன் மனையாளை உள்ளே அழைத்துச் சென்றார்.



"இங்கப் பாரு வாணி… அந்தப் பிள்ளை எதுவோ இக்கட்டுல மாட்டித் தவிக்குது… அது தான் நம்ம பேத்தி மீரா இங்க அனுப்பி விட்டிருக்கா… பாவம் அதுக்கு இங்க தான் பாதுகாப்பாம்..."



"என்னங்க நீங்க? இந்த ஊரோட கட்டுப்பாடு தெரியாமல் கதைக்கிறீங்க... இங்க சொந்தம் எண்டு உள்ளவங்க மட்டும் தான் தங்கலாம்…"



"அதெல்லாம் தெரியும் வாணி... ஆபத்துக்கு உதவுறது ஒண்டும் பாவமில்லை…"



"என்னவோ செய்யுங்கோ… நான் சொன்னால் மட்டும் கேட்கவோ போறியள்.."



"அதெல்லாம் சரி தான்… ஆனா நீ உன் திருவாயை ஆரிட்டையும் திறந்திடாத சரியோ…"



"நான் ஏன் திறக்க? எனக்கு வேற வேலை இல்லையோ…" என முணுமுணுத்துக் கொண்டு வாணி போய் விட, வாஞ்சிஈஸ்வரன் திண்ணைக்கு வந்து சேர்ந்தார்.



கணவன் மனைவி இருவரும் இரகசியம் எனப் பேசிக் கொண்டிருந்த சங்கதி, அவர்களின் வெண்கலக் குரலால் திண்ணையில் இருந்தவர்களுக்குத் திவ்வியமாகக் கேட்டது.



அவர் வந்து அமர்ந்ததுமே, "தாத்தா.. என்னால தானே உங்களுக்கும் பிரச்சினை... நான் வேற எங்கயாவது போகிறேனே…" எனக் கமலி தொடங்க,



அவளது தலையைக் கோதி விட்டவர், "தெரிஞ்சோ தெரியாமலோ நீ என்னைத் தாத்தா எண்டு அழைச்சு இருக்கிறாய்… இனி நீ என் பொறுப்பு... எந்தக் கொம்பன் வந்து உன்னைத் தூக்கறான்னு நானும் பார்க்கிறன்…" எனத் தன் வெண்கலக் குரலில் மீண்டும் முழங்கினார் வாஞ்சி ஈஸ்வரன்.



கமலிக்கு மீண்டும் கண்ணீர் எட்டிப் பார்த்தது. தனக்காய் எத்தனை நபர்கள் துணை நிற்கிறார்கள் என்பதை நினைக்கையில், தான் இன்னும் சந்தோஷமாகவும் நிம்மதியாகவும் வாழ வேண்டும் என்கிற வெறியே அவளுக்கு வந்தது.



அதே நேரத்தில் நாட்காட்டி ஒன்றைக் கையில் வைத்திருந்த வாஞ்சி ஈஸ்வரன், "சரி பிள்ளைகளா… இன்று வெளியே எங்கும் சுற்றாமல் ஓய்வெடுங்கள். நாளையிரவு எங்களின் காட்டம்மன் கோவிலில் அம்மனுக்குத் திருக்கல்யாணம் நடக்க இருக்கிறது. அதற்குப் போய் கொண்டாடி விட்டு வரலாம்…" எனச் சொல்லி முடித்து விட்டு வெளியே போய் விட்டார்.



ஆண்கள் எல்லோரும் ஒரு ஓரமாக இருந்து அரட்டையடிக்கத் தொடங்க, கமலி தனக்கென ஒதுக்கப்பட்ட அறைக்குள் அடைந்து கொண்டாள்.



அவளது கவனம் முழுவதும் ஆதவன் கொடுத்திருந்த ஃபோனிலேயே இருந்தது. அவனிடம் இருந்து ஒரு அழைப்பு வந்து விடாதா என அவள் மனம் ஏங்கத் தொடங்கியிருந்தது. பின்னர் தானே தனக்குள், ‘என்ன நான் இப்படி ஆகி விட்டேன்? அவரின் அழைப்புக்காக மனது ஏனிப்படித் தவிக்கின்றது… இல்லை இல்லை அவர் எனக்கு உதவி செய்திருக்கிறார். அதை எப்படி மறக்க முடியும்? அதனால் தான் அவர் மீது ஒரு மரியாதை வந்திருக்கிறது. அவ்வளவு தான் மற்றுபடி வேறொன்றுமில்லை…’ எனப் பேசிக் கொண்டவள், அப்படியே தூங்கி விட்டாள்.



***********

அடுத்த நாள் மாலை, ஆதவன் வீட்டில் பொய் சொல்லி வண்ணக்காடு நோக்கிப் புறப்பட்டிருந்தான்.



அவன் மனதில் கமலி தான் தனக்கானவள் என்ற எண்ணம் எப்போதோ தோன்றி விட்டிருந்தது. ஏற்கனவே பெரிய இக்கட்டில் இருந்து மீண்டு வந்த பெண்ணிடம், தன் காதலைச் சொல்லி அவளை மேலும் சங்கடத்துக்கு உள்ளாக்கக் கூடாது என நினைத்தவன், கமலிக்குத் தன் காதலை எப்படி உணர்த்துவது என்பதிலேயே மூழ்கி இருந்தான்.



அவளை ஒரு நாள் பிரிந்திருந்ததே மனதோரம் லேசான வலியைக் கொடுக்க, அடுத்த நாளே அவளைக் காணவென்று புறப்பட்டு விட்டான்.



ஆதவன் வண்ணக் காட்டுக்குள் நுழைந்த அந்த மாலைப் பொழுதில், துர்கேஷும் அவனது அடியாட்களும் வண்ணக் காட்டில் தான் கமலி இருக்கிறாள் என்பதை எப்படியோ தெரிந்து கொண்டு, எப்படி கமலியை அங்கிருந்து கடத்திச் செல்வது என்ற திட்டத்தோடு, அந்த ஊரில் இருந்த காட்டுக் கோவிலுக்கு அருகில் மறைந்திருந்தார்கள்.



வண்ணக்காட்டு காட்டம்மன் கோவிலில் அன்றைய நாள் திருவிழா விசேஷமானது. சுத்துப்பட்டி கிராமத்தில் இருந்து, அந்தக் கிராமத்தில் உள்ளவர்களின் சொந்த பந்தமே அன்று திரண்டு வந்து, விடிய விடிய அந்தத் திருவிழாவை நடத்தும்.


அதன்படி அலமேலு தன் மகன், மகள், மருமகள் பேரப் பிள்ளைகளோடு வண்ணக் காட்டுக்குப் புறப்பட்டு வந்து கொண்டிருந்தார். அவருக்கு ஆதவன் அங்கே தான் போகிறான் என்பது நன்றாகத் தெரியும். ஆனால் அதை வெளிக்காட்டிக் கொள்ளவில்லை. இதற்கிடையில் தான் ஆதவன் காதலில் அனைத்தையும் மறந்து ஆர்வக் கோளாறில் அவர்களுக்கு முன்னால் அங்கே வந்து சேர்ந்திருந்தான்.



ஆதவன் வண்ணக் காட்டுக்குள் வந்து அரைமணி நேரத்துக்குள் அலமேலு குடும்பத்தாரோடு வந்து சேர்ந்து விட்டார்.



வாஞ்சி ஈஸ்வரனின் வீடே அந்த உறவுகளால் நிறைந்து சந்தோஷத்தைத் தத்தெடுத்துக் கொண்டது.



"பாத்தியா அம்மத்தா.. இந்தத் திருட்டுப் பயல் செய்த வேலையை... எங்களுக்கு அங்க ரீலு விட்டிட்டு இங்க ஏன் வந்தான் எண்டு கேளுங்கோ…" என மீரா அலமேலுக்கு எடுத்துக் கொடுக்க.



"அதுவா… அது நான் வேற வேலை சம்மந்தமாத் தான் போனேன். அப்புறம் தான் இண்டைக்கு காட்டம்மன் திருவிழா எனறதே நினைவு வந்தது. வருஷா வருஷம் இங்க வர்றது வழமை தானே… அதான் உடனே திருப்பிக் கொண்டு இங்க வந்திட்டன்…" என அளந்து விட்டான் ஆதவன்.



அவன் தன்னைப் பார்க்கத் தான் வந்திருக்கிறான் என்கிற பூரிப்பில் நின்றிருந்த கமலிக்கு, அவன் சொன்னதைக் கேட்டதும் முகம் சுருங்கிப் போய் விட்டது.



‘அப்போ வேற எங்கயோ போகத்தான் வந்தியளா? என நினைத்தவள் அதன் பிறகு ஆதவனை நிமிர்ந்து கூடப் பார்க்கவில்லை. அவளைப் பார்க்க ஆசையாக வந்தவனுக்கு அவளின் அந்தப் பாராமுகம் லேசான கோபத்தைக் கொடுக்க, அவனும் முகத்தைத் தூக்கி வைத்துக் கொண்டு போய் விட்டான்.



இப்படியே அவர்களின் கண்ணாமூச்சி ஆட்டம் தொடர, இராத்திரி கோவிலுக்குப் போகின்ற நேரமும் வந்து சேர்ந்தது.



மீரா தன் தோழி கமலிக்குச் சிவப்பு வண்ணப் புடவையும், தனக்கு மஞ்சள் வண்ணப் புடவையும் கொண்டு வந்திருந்தாள். இருவரும் தங்கள் புடவைகளை உடுத்திக் கொண்டு வர, ஆதவனும் மாதவனும் விழி விரித்து தங்கள் தங்கள் ஜோடிகளை இரசிக்க மறக்கவில்லை.



கோவிலுக்குச் செல்லும் பாதையில் மாதவன் மீராவைச் சீண்டுவதும், அவள் வெட்கப்படுகிறேன் பேர்வழியென்று தன் புடவை நுனியைக் கடித்துப் பிய்ப்பதும் என்று எதையோ செய்து கொண்டிருக்க, ஆதவனோ தன்னவளைக் கண்களால் மட்டும் படம் பிடித்துக் கொண்டு நடந்தான்.



ஒருவாறு கோவிலை வந்து சேர்ந்தவர்கள் திருவிழா உற்சாகத்தில் தங்களை மெல்ல மெல்லத் தொலைக்க, அந்தப் பெரிய காட்டம்மன் சிலைக்கு முன்னால் மஞ்சள் தாலிகள் நிறைய வெற்றிலையில் வைத்து அடுக்கப்பட்டிருந்தது.



இந்தக் காட்டம்மனின் திருவிழாவில், அம்மனின் கழுத்தில் புதுத் தாலி ஏறியதும், அடுத்து அங்கே வந்த தம்பதிகளில் ஆண்கள் தங்களின் மனைவிமார் கழுத்தில் புதுத் தாலி கட்டுவார்கள். இது அந்த ஊரில் ஒரு வழக்கம்.



எல்லோரும் வரிசை கட்டி நின்று அம்மனைத் தரிசித்துக் கொண்டு இருக்கும் போது அது நடந்தது.



கூட்டத்தில் நின்றிருந்த இருவர் முன்னால் நின்றிருந்த ஊர்ப் பெரியவர் முன்னால் வந்து நின்று, கமலியைக் கை காட்டி, "இந்த ஊர் வழக்கப்படி இங்கே சொந்த பந்தங்கள் இல்லாதவர்கள் உள்ளே வரக் கூடாது. இந்தப் பொண்ணுக்கு அப்படி சொந்தம் என்று இங்கே யாரும் இல்லை. அப்படி இருக்க இந்தப் பொண்ணு எப்படி இங்கே ஊருக்குள் வரலாம் தலைவரே..." எனக் கமலியின் இரகசியத்தைப் போட்டுடைத்தார்கள்.



சுத்தி நின்ற ஊர் மக்கள் அப்போது தான் அங்கே புதிதாக நின்றிருந்த கமலியையே திரும்பிப் பார்த்தார்கள்.



ஊர்ப் பெரியவருக்கு முன்னால் வந்து நின்று, கமலி பற்றிப் புகார் அளித்த இருவரும் துர்கேஷின் அடியாட்கள் தாம். அவர்கள் இருவருக்கும் வண்ணக் காட்டுக்குள் உறவினர்கள் இருக்கிறார்கள். அதைப் பயன்படுத்தி தான் அவர்கள் மூலம் இப்படிப் பேச வைத்திருந்தான் துர்கேஷ்.



அதற்குள் துர்கேஷும் தன் அடியாட்களோடு அங்கே வந்து விடவே, பயத்தில் மீராவின் பின்னால் ஒளிந்து கொண்டாள் கமலி.



"என்ன தலைவரே, ஏதாவது தீர்ப்புச் சொல்லுங்கள்... இந்த ஊர் கட்டுப்பாட்டை மீறினவங்களுக்கு என்ன தண்டனை கொடுக்கப் போறீங்கள்..." என துர்கேஷின் அடியாட்கள் உசுப்பேற்றுவது போலப் பேச, அங்கே ஒரு அசாதாரண சூழ்நிலை நிலவியது.



ஊர்த் தலைவர் வாய் திறப்பதற்குள் முன்னால் வந்த துர்கேஷ், "அந்தப் பிள்ளை நான் கட்டிக்கப் போற பொண்ணு தான்… இந்த ஊரைப் பத்தித் தெரிஞ்சு கொள்ளோணும் என்ற ஆர்வத்துல உள்ள வந்துட்டா... பெரிய மனசு பண்ணி என்னோட அனுப்பி வைச்சிருங்கோ…" எனத் தன் பக்கத்துக்கு அளந்து விட, எங்கே தன்னை அனுப்பி விடுவார்களோ எனக் கமலி விதிர் விதிர்த்துப் போனாள்.



வாஞ்சி ஈஸ்வரன் மீது இப்போது ஊர்ப் பெரியவரின் பார்வை திரும்பியது



"என்ன வாஞ்சி... உன்னைப் பெரிய மனுஷன்னு நினைச்சேன். இப்புடி ஒரு காரியம் பண்ணீட்டியேயா… இதுக்குத் தண்டனை என்ன தெரியுமா? ஊரை விட்டுத் தள்ளி வைக்கிறது... உன் வீட்டு நல்லது கெட்டதுக்குக் கூட யாரும் வர மாட்டாங்கள்… சீக்கிரமா அந்தப் பிள்ளைய அந்தப் பையனோட அனுப்பி வைச்சிரு… தண்டனையாவது கொஞ்சம் குறையும்…" என ஊர்ப் பெரியவர் தன் வெண்கலக் குரலில் முழங்க, கமலியின் பார்வை வாஞ்சி ஈஸ்வரன் மீது நிலைத்து நின்றது.



தனக்காய் ஒருவர் இப்படி ஒரு கொடுமையை அனுபவிக்க வேண்டுமா என நினைத்தவள், ‘நான் இந்த ஊரை விட்டுப் போனால் ஐயாவுக்குத் தண்டனை குறையுமல்லவா’ என யோசனை செய்தாள். பின்னர் அவளது விழிகள் துர்கேஷின் மேல் பதிந்தது. இந்த துர்கேஷின் கையில் மாட்டுவதை விட மரணத்தை ஆசையோடு தழுவிக் கொள்ளலாம் அல்லவா என்ற எண்ணம் அவளது மூளையில் உதிக்க, சுற்றுப்புறத்தைக் கண்களால் அலசினாள் கமலி.



கோவிலில் விதம் விதமான கத்திகளும், வாள்களும் கிடந்தன. கைக்கெட்டும் தூரத்தில் இருந்த ஒரு கூர்மையான கத்தியை யாருக்கும் தெரியாமல் கையில் எடுத்த கமலி, அதைத் தன் மணிக்கட்டுக்கு அருகே கொண்டு சென்ற வேளை, அவளைப் பிடித்து முன்னால் இழுத்த ஆதவன், அடுத்த நொடியே அங்கிருந்த மஞ்சள் தாலிக் கயிறொன்றை எடுத்து அவளது கழுத்தில் கட்டியிருந்தான்.



கணப்பொழுதில் நடந்தேறிய அந்தச் சம்பவத்தில் எல்லோரும் திகைத்து நிற்க, கமலியைத் தன் தோளோடு அணைத்துக் கொண்ட ஆதவன், "இதை பாருங்க… இப்போ இந்தப் பொண்ணு என்னோட பொண்டாட்டி… அதாவது மிஸஸ்.ஆதவன்… எனக்கு இந்த ஊருக்குள்ள சொந்த பந்தம் இருக்கு என்ற பட்சத்துல எம் பொண்டாட்டிக்கும் இந்த ஊருல அந்த உரிமை இருக்கு என்றதை இப்ப நான் இங்க பதிவு பண்ணுறன்…" என்று சொல்லிக் கொண்டே, கோவில் குங்குமத்தை எடுத்துத் தன் மனைவியின் உச்சியில் திலகமிட்டான் ஆதவன்.



தன் உச்சியில் குங்குமம் வைத்தவனையே விழி எடுக்காமல் பார்த்தபடிச் சிலையென நின்றாள் ஆதவனின் மனைவி கமலி.

 
  • Like
Reactions: Samithraa