அத்தியாயம் - 10 (பாலதர்ஷா)
இதை அவள் சற்றும் எதிர் பார்க்கவில்லை. ஆதவனை அவளுக்குப் பிடிக்கும் தான். அவன் பால் புரியாத உணர்வு உண்டானதும் உண்மைதான்.
ஆனால் அந்த உணர்வானது இன்னது தான் என்று உணர்வதற்கு முன்னர், அவள் கழுத்தில் அவளே எதிர் பாராத நொடிப் பொழுதில் தொங்கிய தாலியையும், அவன் இட்ட திலகத்தையும் தொட்டுப் பார்த்தவளுக்கு, இந்த உறவைச் சட்டென ஏற்றுக் கொள்ள முடியவில்லை.
முடியவில்லை என்பதைக் கடந்து, அவளது சம்மதத்தை எதிர் பாராது, அந்தத் தாலியைக் கட்டியவனையே அதிர்ந்து விழித்தாள் கமலி.
பாவம் விழிப்பதை தவிர அவளாலும் என்ன செய்திட முடியும்?
உண்மை தானே! இக்கட்டான சூழ்நிலை என்றாலும், அவனுக்கும் அவளது தாத்தாவிற்கும் பெரிதாக வேறுபாடு இல்லையே!
பார்க்கப் போனால் இவனைக் காட்டிலும் அவள் தாத்தா பரவாயில்லை என்றே தோன்றியது. அவராவது இந்த நாளில், இந்த நேரத்தில், இன்னாரோடு தான் உன் திருமணம் என்ற தகவலாவது தந்தார்.
ஆனால் இவன்?
தவறு செய்தது ஆணென்று ஆகிவிட்டால், தாலியை வாங்கிக் கொண்ட பாவத்திற்காய், பெண்ணானவள் சகித்து தான் போக வேண்டும் என்றில்லையே! அதை உடனே அறுத்து எறிந்தால் என்ன என்றுதான் இருந்தது.
ஆனால் அதைச் செய்யத்தான் அவளால் முடியவில்லை.
அப்படி அவள் செய்தால் அவளைப்போல் ஓர் நன்றி கெட்டவள், இந்த உலகத்திலேயே இருக்க முடியாது.
உண்மை தானே அவனும் சரி. அவனது குடும்பத்தினரும் சரி, வயது வேறுபாடின்றி, அன்பைப் பொழிந்தது மட்டுமின்றி, தனக்கு அடைக்கலம் தருவது ஆபத்து என்று தெரிந்தும், அடைக்கலம் கொடுத்தவர்களை, ஊர் மக்கள் முன்னிலையில் அவமானப்படுத்த மனம் ஒப்பவில்லை.
அதே சமயம் அவன் மேலான கோபத்தினையும் அடக்க முடியாது, தனது தோள்களில் விலங்கிட்டிருந்த அவனது கைகளை உதறும் பொருட்டு, அமைதியாய் விலகி வந்தவளின் உதாசீனம் அவளது செயலில் தெளிவாகவே புரிந்தது.
அவனுக்கும் இதை விட்டால் வேறு வழி தெரியவில்லை.
இதுவரை தவறென்பதே செய்திடாத தாத்தா பாட்டியினர், ஊர் மக்கள் முன்னிலையில் தலை கவிழ்ந்திருப்பதை அவனால் பார்க்க முடியவில்லை. அதே சமயம் தன்னவளைத் தன் ஒப்புதலோடு அந்தக் கேடு கெட்டவனிடம் அனுப்புவதா? அதைத் தாங்காது தற்கொலை செய்யத் துணிந்தவளின் செயல் என எல்லாம் சேர்ந்து அவனை இந்த முடிவிற்குத் தள்ளி விட்டது.
ஆனால் யாருக்கு நன்மை செய்ய வேண்டுமென்று இதைச் செய்தானோ, அவளே அவனைப் புரிந்து கொள்ளாது முறுக்கிக் கொண்டு நிற்பதைக் கண்டவனுக்கு ஒரு மாதிரியாகப் போக, இடம் உணர்ந்து பின்னர் விளக்கம் தரலாமென அவனும் அமைதி காத்தான்.
இவர்கள் அமைதியாக இருந்தால் மற்றவர்களும் அமைதி காப்பார்கள் என்றில்லையே!
"ஆதவா... என்ன இது?" ஆதங்கமாய் ஒலித்தது சுந்தராஜனின் குரல்.
பின்னே நடப்பவற்றை விதியே என்று ஏற்றுக் கொள்ள அவர்கள் ஒன்றும் ஞானிகள் இல்லையே! சாதாரண மனிதர்கள் தானே!
மகனின் திருமணம் இப்படித்தான் இன்னாரோடு, இன்னார்கள் முன்னிலையில் நடந்தேற வேண்டுமென்று எத்தனை எத்தனை கனவுகள் கண்டிருப்பார்கள்? திடுதிடுப்பென இப்படி ஒன்று நடந்தால் அவர்களால் மட்டும் ஏற்றுக் கொள்ள முடியுமா?
"அப்பா..." தயக்கத்தில் சுருங்கி ஒலித்தது ஆதவனின் குரல்.
"என்னடா அப்பா...? இங்க நிக்கிறது அப்பா தான் என்கிற நினைப்பிருந்தா இப்படி ஒரு காரியம் பண்ணிருப்பியா? அடைக்கலம் மட்டும் தானே குடுக்கப் போறோம்னு இவளைக் கூட்டிட்டு வந்த! ஆனா இங்க நடக்கிறதைப் பார்த்தா அப்படித் தெரியலையே”
உண்மையச் சொல்லு... கல்யாண மண்டபத்தில இருந்து இவ ஓடி வந்ததுக்கான காரணம் என்ன? இவளுக்கு தான் இவ கல்யாணத்தில இஷ்டமில்லையா? இல்லை உனக்கு தான் அவ வேற ஒருத்தனைக் கல்யாணம் பண்ணிக்கிறதில இஷ்டமில்லையா?" என்றார் கோபமாய் சுந்தராஜன்.
இப்படி ஓர் சந்தேகம் அவர் நிலையில் இருப்பவர்கள் யாராக இருந்தாலும் அவர்களுக்கும் கண்டிப்பாக வந்திருக்கும்.
"மாமா... நான் தான் சொன்னேனே! அவளுக்கு அந்த..." அவர் கோபம் கண்டு, அதுவரை சமைந்திருந்த மீரா, அவருக்கு விளக்கம் தர முன்னே வர, அவளைப் பார்வையால் அடக்கியவர்,
"எல்லாத்துக்கும் உன் விளையாட்டுத் தனம் தான் காரணம். விளையாட்டுப் பிள்ளை தானேன்னு, உன்னோட பேச்சைக் கேட்டு இவளை வீட்டுக்குள்ள சேர்த்ததுக்கு, நாலு பேருமா சேர்ந்து, இத்தனை பேர் முன்னாடி கரியைப் பூசிட்டிங்கல்ல…" என்றார்.
"என்னப்பா நடக்குதிங்க? முதல்ல இந்தப் பொண்ணு யாரு? இந்தத் தம்பி என்னன்னா தனக்குப் பரிசம் போட்டிருக்கிற பொண்ணு என்கிது. உங்க பையன் என்னன்னா, தாலியைக் கட்டிட்டுத் தன்னோட சம்சாரம் என்கிறான். இப்போ எதை நாங்க நம்புறது?" ஊர் தலைவர் நடப்பவற்றைக் கண்டு குழம்பிப் போனார்.
"இன்னுமாய்யா சந்தேகம் உங்களுக்கு? அது தான், அந்தப் பெரிய மனுசனே தெளிவாச் சொல்லுறாரே!
எனக்கும் அவளுக்கும் தான் கல்யாணம்னு பெரியவங்களா முடிவெடுத்திருந்தாங்க.. தாலி கட்டுற நேரம் பார்த்து, பொண்ணக் கடத்திட்டு வந்திட்டுது இந்தக் குடும்பம். இப்போ உங்க முன்னாடி தாலியக் கட்டி, அவங்க செய்த தப்புக்கு, உங்களையும் உடந்தை ஆக்குறாங்க. இதுக்கு நீங்க சம்மதிக்கக் கூடாது தலைவரே! அப்புறம் ஆளாளுக்கு இதையே செய்து, ஊருக்குன்னு இருக்கிற மரியாதையைக் கெடுத்திடுவாங்க." நீதி கேட்பது போல் முன் வந்து குற்றப் பத்திரிகை வாசித்தான் துர்கேஷ்.
அவனும் வல்லவன் தான்... அவன் பணத்தினால் எதையும் சாதித்திட முடியும் தான். ஆனால் ஓர் ஊரே திரண்டிருக்கும் இடத்தில் அவனால் என்ன செய்திட முடியும்? பின் அவனுக்கு எதிராக அவர்கள் திரண்டு விட்டால் அவன் எண்ணம் கெட்டு விடாதா?
ஆடுற மாட்டை ஆடித்தான் கறக்க வேண்டும் என நினைத்தவன், வாழைப் பழத்தில் ஊசி ஏற்றுவது போல், ஊரின் கட்டுப்பாட்டை நினைவு படுத்தினான்.
"என்னப்பா... இந்தத் தம்பி சொல்லுறது உண்மை தானா?” ஆதவனை நோக்கிப் பெரியவர் கேள்வி தொடுக்க, பதில் சொல்ல முடியாது தலை கவிழ்ந்தான் அவன்.
"இன்னும் என்னய்யா அவனைக் கேட்டுட்டு? அந்தத் தாலியைக் கழற்றி, அவன் மூஞ்சி மேலயே எறிஞ்சிட்டு பொண்ணை என்னோட அனுப்புங்க."
"என்ன தம்பி? அந்தத் தாலி என்ன விளையாட்டுப் பொருளா? ஒரு மண்டலமா அம்மன் கழுத்தில போட்டு பூஜை பண்ண தாலி... அவ்வளவு ஈஸியா எல்லாம் கழற்றிட முடியாது. அப்படி கழட்டுறது எண்டாலுமே, அடுத்த வருஷத் திருவிழாவில தர்ற தாலியக் கட்டிட்டு தான், இதைக் கழற்ற முடியும். அதையும் மீறிக் கழற்றினா, அம்மனோட சாபத்துக்கு ஆளாகி, இந்த ஊரே சுடுகாடாப் போயிடும்.
உங்க விளையாட்டுத் தனத்துக்கு, என்னோட ஊரைப் பணயம் வைக்க முடியாது. ஏதோ நடந்தது நடந்து போச்சு, ரெண்டு பேரும் ஆசைப் பட்டுட்டாங்க… பொண்ணு, பையனை ஆசீர்வாதம் பண்ணிட்டுப் போங்க." ஊர் பெரியவராய் ஊரின் நன்மை கருதி பேச்சினை முடித்து வைத்தார் அவர்.
"என்னய்யா! பெரிய மனுஷன் நல்லதா ஒரு முடிவு சொல்லுவீங்கன்னு பார்த்தா, ஆசீர்வாதம் பண்ணச் சொல்றீங்க… இதுக்கா இவ்ளோ தூரம் வந்தோம்? மரியாதையா பொண்ணை எங்க கூடவே அனுப்பி வைக்கிற வழியப் பாருங்க... இல்லன்னா விளைவு விபரீதமாப் போகும்." எகிறிக்கொண்டு வந்தவனை ஊர் மக்கள் சுற்றி வளைக்க, பயத்தில் பின் வாங்கிக் கொண்டவன், ஆதவனையும், கமலியையும் முறைத்தவாறே,
"இன்னும் இங்க என்ன வேலை? வாங்கடா போகலாம்." எனத் திரும்பியவன், மீண்டும் ஆதவனை தீர்க்கமாய் ஓர் பார்வை பார்த்து விட்டே அவ்விடம் விட்டகன்றான்.
ஊர் மக்களும் நடந்த குழப்பங்களைக் கண்டு, தமக்குள் பேசியபடி கலைந்து செல்ல,
"அப்புறம் என்ன விஜயா! திருவிழான்னு வந்த இடத்தில, கண்ணுக்குக் குளிர்ச்சியா ஒரு பையனோட கல்யாணத்தைப் பார்த்தாச்சே! இன்னும் என்ன வேடிக்கை? நீயும் கிளம்பு... இந்தச் சந்தோஷத்தோடயே ஊரு போயிச் சேரலாம்.." ஆதங்கம் என்றாலும் விரக்தியாய் விழுந்தது சுந்தராஜனின் வார்த்தைகள்.
"இருங்க நின்னு எல்லாரோடயும் போகலாம்..." தயக்கமாகவே விஜயா கூற.
"எல்லாரையும்னு யாரைச் சொல்ற? இதைப் பாரு! எப்போ இத்தனை பேரு முன்னாடி, இப்படி ஒரு காரியத்தை இவன் பண்ணானோ, அப்ப இருந்து இவன் யாரோ, நம்ம யாரோ. அந்த வீட்டில இவன் பாதம் படக்கூடாது.
இந்த நிமிஷத்தில இருந்து எனக்கும் உனக்கும் ஒரே பையன் தான். அது மாதவன் தான். இதை உன் மனசிலயும் பதிய வைச்சுக்கோ… சும்மா பேச்சு வாக்கில கூட இவன் பேரு என் காதில கேக்கக் கூடாது." என்றார் உறுதியாக.
"டேய்... என்ன தான் இருந்தாலும் அவன் எங்க வீட்டுப் புள்ளடா! ஏதோ போதாத காலம்… புள்ள சங்கடத்தில எதைச் செய்யிறதுன்னு தெரியாமல் செய்திட்டுது. எதுவா இருந்தாலும், வீட்டுக்குப் போயி நிதானமாய் பேசித் தீர்த்துப்போம். அப்பா கோபத்துல பேசுறாரு, நீ வா ராசா போகலாம்." என ஆதவனை அழைத்தார் அலமேலு.
"அப்போ சரி! நீங்க புறப்படுங்க... நாங்க வேற எங்கயாச்சும் வீடு பார்த்துக்கிறோம்."
"வேற எங்கேயாச்சுமா? ஏன் நம்ம வீடு இருக்கிறப்போ நீ ஏன் வீடு பார்க்கணும்?"
"இல்லம்மா... அது உன் வீடு! உன் வீட்டுக்கு யாரு வரணும் யாரு வரக்கூடாதுன்னு முடிவு பண்ண வேண்டியது நீ தான்.
அதே போல என் குடும்பம் எங்க தங்கணும்னு முடிவெடுக்கிற உரிமை எனக்கும் இருக்கு."
"சுந்தரா நீ கோபத்தில பேசுறடா! நாளைக்கு இந்தக் கோபத்துக்கு அர்த்தமே இல்லன்னு ஆகுறப்போ வேதனை தான் அதிகமாகும்."
"இல்லம்மா... இதுக்குப் பேரு கோபமில்ல, ஆதங்கம்... இவனோட இடத்தில நானிருந்தா நீயும் இதை தான் செய்திருப்ப... இவனைக் காட்டிலும் அவன்மேல தாம்மா அவ்ளோ நம்பிக்கை வச்சிருந்தேன். ஆனா அவனே...!" அவரையும் மீறி கண்கள் ஈரமாக, சட்டென அதை உள்ளே இழுத்துக் கொண்டவர்,
"என்னோட வலி உனக்குப் புரியாது. அதை அனுபவிச்சா தான் தெரியும். இவனை இன்னைக்கு நான் மன்னிச்சேன்னா, நாளைக்கு அவனும் அதே தப்பைப் பண்ணிட்டு வந்து நிப்பான். அப்புறம் அப்பான்னு நான் ஏன் இருக்கேன். இது சரி வராது. நீங்க கிளம்புங்க." என்று வழிவிட்டு ஒதுங்கி நின்ற மகனைக் காண்கையில் பெரியவர்கள் இருவருக்கும் கஷ்டமாகிப் போனது.
அதே சமயம் பேரனையும் மகனின் பிடிவாதத்திற்காக அப்படியே விட முடியாதே! செய்வதறியாது தடுமாறி நின்றவர்கள் அருகே வந்து, அவர்கள் கைகளை பற்றிக் கொண்ட ஆதவன்.
"தப்பெல்லாம் என்னோடது தான் பாட்டி! அதுக்கான தண்டனைய நான் ஏற்கிறது தான் முறை!" என்றவன் விழிகள் சுந்தர் ராஜனிடம் திரும்ப, அவன் விழிகள் தன்னிடம் தான் இடம் மாறுகிறது என்பதை முன் கூட்டியே உணர்ந்தவராய், முகத்தைத் திருப்பிக் கொண்டார் அவர்.
பாவம் இவர்களுக்கு இடையில் தவித்துப் போனது கமலியும், விஜயலட்சுமியும் தான்.
பாவமாய் அவனைக் கண்ட அன்னையைக் கண்டவன், "எங்க இருந்தாலும் நான் நல்லா தான் இருப்பேன் பாட்டி! அதனால என்னைப் பத்திக் கவலைப் படாம போயிட்டு வாங்க." என்று பேத்தியிடம் கூறுவது போல், அன்னைக்கு ஆறுதல் கூறியவன் கையினை இம்முறை பற்றிய சங்கரன்,
"ஏன் ராசா அவசரப்பட்ட...? அந்தப் பொண்ணைப் பிடிச்சிருக்குன்னு ஒரு வார்த்தை என்கிட்டச் சொல்லிருந்தா, நானே முன்ன நின்னு உன் கல்யாணத்தை நடத்திருப்பேனே! இப்பிடி ஊருக்கு வேடிக்கையான கல்யாணம் தேவையா?"
"தாத்தா..." ஏதோ கூற வந்தவன், அதை அப்படியே இடை நிறுத்தி, "சொல்லிருப்பேன் தான் தாத்தா... ஆனா அதுக்கான சூழல் தான் அமையல.... அதுக்குள்ள அந்த துர்கேஷ் வந்து குழப்பத்தை ஏற்படுத்திட்டான். அதான் என்ன செய்யிறதுன்னு தெரியாம..."
"என்ன சொன்னாலும் நீ செய்தது தப்பு ராசா... நீ தான் சொல்லல... அந்தப் பொண்ணாவது ஒரு வார்த்தை சொல்லிருக்கலாம்... அவளை மாற்றான் வீட்டு மகளைப் போலவா நடத்தினோம்? ரெண்டு பேருமா சேர்ந்து ஏதேதோ கதை சொல்லி, எல்லாரையும் ஏமாத்திட்டிங்களே!" கவலையாய் அவர் கூறிட,
"அவமேல தப்பில்ல தாத்தா... நான் தான் சொல்ல வேண்டாம்னேன். அதனால தான் மீராகிட்டக் கூட நாங்க ஒருத்தருக்கொருத்தர் விரும்புற விஷயத்தை அவ சொல்லல..." என்றான்.
நடப்பவற்றிற்குக் காரணமே இன்றி காரணமாகிப் போனதில் குறுகிப்போய் நின்றவளுக்கு, இவனது இவ்வாறான பேச்சு, அவன் மேல் இன்னும் எரிச்சலை ஏற்படுத்தியது.
'இப்போ இவன் என்ன சொல்ல வரான்.? நானும் இவனும் யாருக்கும் தெரியாம திருட்டுத் தனமா லவ் பண்ணோம் என்கிறானா? ஏற்கனவே என்மேல கோபத்தில இருக்கிறவங்க கோபத்துக்கு இன்னமும் தூபம் போடுற மாதிரிப் பேசிட்டிருக்கான். என்னைப் பத்தி என்ன நினைப்பாங்க?
அவங்க என்ன நினைக்கிறது? மீராவே என்னைச் சந்தேகப் படப்போறாளே!' என நினைத்தவாறு பார்வையை அவள் புறம் திருப்பியவள் நம்பிக்கையைப் பொய்யாக்காது அவளது பார்வையும், அவளைத்தான் சந்தேகமாக மேய்ந்தது.